ரோஜாக் சிங்கப்பூர்
சம்பாதிப்பதற்காகத் தன்னுடைய குடும்பத்தைப் பிரிந்து பொருள்தேடப் போவது நம் பண்டைய மரபு. இலக்கியம் சொல்லும் பாலைத்திணை மரபு மனைவியை இல்லத்திலேயே இருத்திவிட்டுக் கடல்தாண்டிப் பொருள்தேடுவதற்காக கணவன் போகலாம், போக வேண்டும் என்பது தொல்காப்பியக் குறிப்பு. அவ்வாறு மனைவியைப் பிரிந்து சென்ற கணவன் திரும்பவந்து முதல் மனைவியுடன் வாழாமல் அவளை அப்படியே விட்டுவிட்டு வாழ்ந்ததைப் பெரியபுராணம் பதிவு செய்துள்ளது. அயல்நாடுகளுக்குச் செல்லும் கணவனைப் பிரிந்திருக்கும் மனைவி தன் முகத்தையே குரங்கு முகமாக மாற்றிக்கொண்ட காதலை சிலப்பதிகாரம் சொல்கிறது. அயல்நாடு சென்ற ஆண்கள் தங்கள் மனையாளைத் தன்னுடன் கூட்டிச்செல்லும் போக்கு அக்காலத்தில் குறைவாக இருந்தாலும் தனது மண்வாசனை கமழும் உணவுகளிலும் இயன்றவர்கள் கைதேர்ந்த சமையல்காரர்களையும் தன்னுடன் கூட்டிச் சென்றிருக்கிறார்கள் என்பதற்கு அடையாளமாக அந்தந்த நாட்டின் சுவையும், நிறமும் மாறாமல் புலம்பெயர்ந்த நாடுகளில் கமகமத்துக் கொண்டிருக்கின்றன. தென்னிந்தியச் சமையல், சீனச் சமையல், மலாய் தீபகற்பச் சமையல் மூன்றும் கலந்தவைதான் சிங்கப்பூர் உணவுகள். மற்ற நாடுகளில் தயாரிக்கப்படும் உணவுகளைவிட தரத்திலும் ருசியிலும் அபரிமிதமான உணவு வகைகள் என்று பட்டியலிட்டு சுமார் 101 வகை உணவுக்குறிப்புகளை கடந்த மூன்று மாதங்களாக சேகரித்து தலைமை சமையல் நிபுணராக இருந்து இன்று வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் என் தந்தையின் நண்பர் திரு.இபுராகிம் முஹம்மது அவர்களிடம் கொண்டு சென்றேன்.
ஏதாவது Finding Dining Concept செய்தால் தொகுப்பை நல்லவிலைக்கு விற்றுவிடலாம் ஆனால் பிரதிபலன் எதிர்பாராத இந்தப் பதிவுகள் முதல் முயற்சி என்று பாராட்டினார்.
மலாய் தீபகற்பத்தில் சீன உணவுகள் அதிரடியாக நுழைந்த இடம் மலாக்கா. மலாக்கா சுல்தான் Heng Li Po என்ற சீன இளவரசியை மணம் செய்தபிறகு பெரிய வர்த்தகங்கள் நடந்தன. அத்துடன் சீனாவிலிருந்து இளவரசியின் விருப்பத்திற்கேற்ப சமையல்காரர்கள் பெருமளவில் மலாக்காவில் புலம் பெயர்ந்தனர் என்று சொல்கிறார்கள். 18,19 -ஆம் நூற்றாண்டுகளில் டச்சுக்காரர்கள் இந்தோனேஷியாவையும் பிரிட்டிஷார் மலேயா தீபகற்பத்தையும் காலனித்துவ ஆட்சிக்குட்படுத்தி உணவுக்கலாச்சாரங்களை மாற்றி அமைக்க பிரயத்தனப்பட்டாலும அதற்கு முன்னர் ஆண்ட போர்த்துக்கீசியர்களின் உணவுப் பழக்கங்களே நிலைத்துவிட்டன. வினிகர், பீக்கின்ஸ், புளி, எலுமிச்சை போன்ற புளிப்புப் பொருட்களைப் பெருமளவில் மலேசியர் சமையலில் இடம்பிடித்ததற்கு அவர்களே முழுமுதற் காரணம். இந்தோனேஷியாவிலும் மலேசியாவிலும் அஸ்ஸனம் என்றால் புளி. புளிமார்கள் வரலாறு பதிவு செய்யப்படுவதற்கு முன்பே இந்தியாவில் பெருமளவில் இருந்ததாக வரலாற்றுப் பெரியவர்கள் கூறுகிறார்கள்.
மாங்காய், புளியம்பூ, தயிர்மோர் என்று தமிழர்களுக்கு ஆதியிலிருந்தே அதீத மோகம் உண்டு. புளித்தமோரும், புளித்த கள்ளும் தமிழர்களுக்குப் போதுமானது என்ற ஆஆன் முலாங் கிழார் என்ற புலவர் ஔவையாருக்கே கூலுக்குப் பாடி என்று பட்டப்பெயர் இருந்ததாம்.
இப்படியெல்லாம் கலக்கலாக சிங்கப்பூர் கிளாசிக்கல் உணவுகள் மொத்தம் 101 வகைகள் எழுதி திரு.மனுஷ்ய புத்திரன் அவர்களிடம் காண்பித்தேன்.
அவர் வாரம் ஐந்து வீதம் 20 வாரங்களுக்கு எழுதுங்கள். அப்போதுதான் திகட்டாமல் இருக்கும் என்றார்.
ரோஜாக் என்றால் மலாய்மொழியில் கலவை என்று பொருள். இந்தக் கலவை உங்கள் நாவிற்குச் சுவையாக இருக்கும் என்று நம்புகிறேன். அத்துடன் மாதமே டூரிஸ்ட்விசாவில் வரும் நபர்கள் வெறுமனே அங்காடிக்கடைகளின் உணவு அணிவகுப்பைப் பார்த்துவிட்டு எதை சாப்பிடுவது, எப்படி ஆர்டர் பண்ணுவது என்று தெரியாமல், சாப்பிடாமல் திரும்பிச் செல்லும் நிலையை மாற்றும் பதிவாக அமையும் இந்தத் தொகுப்பு.
நாசிபடாங்
படாங் என்பது மேற்கு சுமத்திராவில் உள்ள ஒரு இடத்தின் பெயர். ஆனால் எல்லா கடைகளுக்கும் படாங் அரிசி வருகிறது என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். கடைக்காரர்களைப் பொறுத்தவரை நாசிபடாங் என்பது மலாய் முஸ்லிம்களின் பொதுவான உணவு. இது விற்பனை செய்யப்படும் கடைகளில் ஸைட் டிஷ்தான் மிக முக்கியம். பீஃப்ரெண்டாங் சிக்கன்கறி, சிக்கன் வறுவல், இறால் வகைகள் தவ்வுதெலூர் மற்றும் வறுத்த கடல் உணவுகள் இந்த உணவு மற்றவர்களுடன் பகிர்ந்து உண்ணப்படுவது. கடைக்காரர்களிடம் தனித்தனி பிளேட்களில் ஆர்டர் செய்து வாங்கிச் சாப்பிடலாம்.
(எக்கானமிக் ரைஸ், நாசிகோரிங் மற்றும் நாசிலெமாக் உணவுகள் சீனா, மலேசியா, இந்தோனேஷியாவில் வகைவகையாகச் செய்வார்கள்)சார்குவே திபோ (Charkwey Teo)
இந்தக் கலவையில் கடைசியாக ஒரு முட்டையை உடைத்துக் கலக்கிவிடுவார்கள் அதன்பின்னர் சோயா சாஸ் சேர்த்துச் சூடாகப் பரிமாறுவார்கள்.
ஒரு சின்ன எலுமிச்சையை ஓரத்தில் ஒருவெட்டுவெட்டி பிழியக் கொடுப்பார்கள் (மலேசியாவில் கறுப்பு சோயா சாஸ் கலந்து வாத்து முட்டை ஆம்லெட்டுடன் பரிமாறுவார்கள்).
பக்குத் தே ( Bakut The)
சாப்ஸ்டிக்கைக் கொண்டு போர்க்கப்களை பதம்பார்க்கும் வாய்ப்பைக் கொடுக்கும் உணவு.
பூண்டு, பட்டை, சீரகம், பெருஞ்சீரகம் போன்றவற்றைக் கலந்து உருவாக்கப்பட்டது. சிங்கப்பூரில் இரண்டு வகையான பக்குத் தே உள்ளன. ஹொக்கின்வகை. மற்றது டியோச்சு வகை. ஹொக்கின் வகையில் வெள்ளைமிளகு கலந்திருப்பதால் மிகவும் காரமாக இருக்கும். இது அரிசிசாதத்துடன் பரிமாறப்படும் இதற்குத் தொட்டுக்கொள்ள சோயாசாஸ் கலந்த காய்கறிகளைப் பயன்படுத்துகிறார்கள். சிவப்புமிளகாய் துண்டுகளுடன் கறுப்பு சோயாவில் இறைச்சியை சேர்த்தால் எப்படி இருக்கும் என்று பொருள். தே என்று உங்களுக்குத் தெரிந்ததுதான். சில வகைகளில் சீனத்தேனீர் இதற்குச் சேர்த்து போனசாகக் கொடுப்பார்கள்.
இதைச்சாப்பிட சில சீனர்கள் ஆவலாய் பறப்பாத (Tai Hau Chai) என்பார்கள்.
சார் சியோ ரைஸ் (Charsew Rice)
இளம்பன்றி இறைச்சித்துண்டுகள் சரியான முறையில் சமைத்து வறுக்கப்பட்டு சாதத்துடன் அடர்த்தியான இனிப்பு கிரேவி கலந்து பரிமாறப்படுகிறது. பன்றி இறைச்சி கொழுப்பாக இருப்பதால் இது வறுக்கப்படும்போது இனிப்பு சேர்கிறது. வெள்ளரிக்காய் துண்டுகளுடன் அடுக்கடுக்காக இது பரிமாறப்படுகிறது.
இது கிட்டத்தட்ட ஒரு சிக்கன்ரைஸ் மாதிரிதான். தனியாக சாதத்தைக் கேட்டு வாங்கி வாத்துப் பொரியலுடன் சேர்த்து சாப்பிடுவது அல்லது வான்டன் ருப் அல்லது இறால் சூப் இதற்கு சைட் டிஷ்.
சார் சியோ என்றால் பொரித்த பன்றித்துண்டுகள் என்று அர்த்தம்.
சின்சோ:
சின்சோ என்பது புதினா வகையைச் சேர்ந்த சீனமூலிகை இலையான சீனசோ என்ற இலையை வேகவைப்பதன் மூலம் தயாரிக்கப்படும் கறுப்பு ஜெல்லி. இதில் சிராப் மற்றும் தண்ணீர் சேர்க்கப்பட்டு பருகப் பானமாக ஆக்கப்படுகிறது. இதனை லைச்சி மற்றும் லொங்கானுடன் கோப்பையில் வைத்துக் கொடுப்பார்கள். இது உயரமான கிளாஸ் அல்லது கோப்பையில் பரிமாறப்படும் பானம். கிளாஸில் கேட்டுவாங்கினால் சின்போ துண்டுகளை ஸ்ட்ரா மூலம் உறிஞ்சி சுவைக்கலாம். கோப்பையில் வாங்கினால் பெரிய அளவில் ஸ்பாகெட்டி போன்ற சின்சோர் துண்டுகள் இருக்கும். இதனை சாப்பிடப் பயன்படுத்தும் ஸ்பூனைக் கொண்டு சாப்பிடலாம்.
சமையல் முறைகளில் உலகம் முழுவதும் அவித்தல், இடித்தல், கலத்தல், காய்ச்சல், கிண்டல், கிளறல், சுடுதல், திரித்தல், துகைத்தல், பொறித்தல், மரித்தல், வடித்தல், வறுத்தல், வதக்கல், வாட்டல், வார்த்தல் முறைகள் புழக்கத்தில் இருக்கின்றன. ஆனால் மலாய்த் தீபகற்பத்தில் 5 வகையான பொருட்களைச் சேர்ப்பதால் ஒரு புதுவிதமான ருசி கிடைக்கிறது. அதை அடுத்த வாரத்தில் தொடர்கிறேன்.
(சீன வகைக் குறிப்புகள் என் கடைக்குப் பக்கத்தில் எக்கானமிக் பீகூன் கடைநண்பர் திரு.ஆர்தர்).
சிற்றிதழ் அறிமுகம்
‘வளரி’
பெங்களூரைச் சேர்ந்த கடம் இசைக் கலைஞர் கிரிதர் உத்தப்பா. உலகப் புகழ்பெற்ற ஜாஸ் இசைக்கலைஞர்களுடன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்தியபோது தன்னுடைய இசை வாழ்வில் மானாமதுரை கடம் ஒரு முக்கிய பங்காற்றுவதாகப் பேட்டியளித்தார்.தேவனகளி கடம் சென்னை கடம் இவைகளில் தன் கைகளுக்கு இசைவான கடமாக மானாமதுரை கடத்தைப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். நான் வாழ்ந்த இடங்களின் நினைவுகள் சாரலென வந்துபோயின.
2010ல் ‘உயிர்மை-சுஜாதா’ அறக்கட்டளை இணைந்து நடத்திய போட்டியில் சிறந்த வலைத்தளம் பிரிவில் வெற்றிபெற்ற யாழிசை தளத்தின் மீராவின் நினைவுக் கவிதைப்போட்டி அறிவிப்பில் வளரி என்ற சிற்றிதழ் நடத்திவரும் திரு.அருணா சுந்தரராஜன், மானாமதுரை என்ற முகவரியிட்டு வெளியாகியிருந்தது.
அட! மானாமதுரை இன்னொரு மின்னல்.
வளரி பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய ஒருவகை ÔவளைதடிÕ .ஆஸ்திரேலியாவின் ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட பூமராங் வகை ஆயுத அமைப்பு உடையது. பூமராங் எறிந்தவருக்குத் திரும்பவந்துவிடும். இதற்கு ஒத்த ஆயுதங்கள் வளைத்தடி, பாறாவளை, சூழல் படை, படை வட்டம் என்று சொல்கிறார்கள்.
தமிழகத்தில் கள்ளர் நாடு சிவகங்கை மற்றும் தற்போதைய பட்டுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் வளரி எறிதல் போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன.
சிவகங்கை ஆட்சியிலிருந்து மருது சகோதரர்கள் மற்றும் அவரது படைத்தளபதி வைத்தியலிங்க தொண்டைமான் ஆகியோர் வளரியை ஆயுதமாக பாவித்து ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டதாக வரலாறு. இப்படி சிறப்பான பெயருடன் 2009லிருந்து தொடர்ந்து வளரியை திரு.அருணா நடத்தி வருகிறார்.
2009 உலகப் பெண்கள் தினத்தை முன்னிட்டு மதுரையைச் சேர்ந்த கல்லூரி குடும்ப கவிதைப் போட்டியில் 74 மாணவர்களும், 33 இல்லத்தரசிகளும் கலந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பல புதிய கவிஞர்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.
நல்ல கவிதை பேசுவோம்.
களத்தினில் வீழ்த்திடும் எதிரியை வளரி எழுத்தினில் உயர்த்திடும்.
கவிதையை என்ற முழக்கத்தோடு
தொடர்ந்து சினிமா டி.வி. போன்ற கேளிக்கை துறையின் உற்பத்திப்பொருட்களுடன் போட்டியிடும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வளரி இதழ் நல்ல முயற்சி.
முகவரி
வளரி,
அஞ்சல் பெட்டி எண்: 05
மானாமதுரை – 630 606.
Valari2009@gmail.com