மார்ச், 2010 க்கான தொகுப்பு

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நடிக்க வந்த முஹம்மது யூசுப் கானை முஸ்லிம் பெயரில் இந்திய ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்றெண்ணி திலீப்குமார் என்ற இந்து பெயரை சினிமாவுக்காக தேர்ந்தெடுத்தவர் அதன் டைரக்டர்.

  தன்னுடைய இந்துப் பெற்றோர்களால் திலீப்குமார் என்ற பெயரிடப்பட்ட அல்லா ரஹ் ரஹ்மான் இன்று உலகமெங்கும் இசைக் கலாச்சாரத்திற்கு இந்தியாவின் அடையாளமாகியிருக்கிறார்.

  கடந்த எம்பத்தியொரு ஆண்டுகளில் வழங்கப்பட்ட ஆஸ்கார் விருதுகளில் இந்திய படைப்பாளிகளில் சத்யஜித்ரே மற்றும் பானு அத்தல்லாவுக்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

  ஆஸ்கார் கமிட்டி நடுவர்கள் இன்றைய பொருளாதார நெருக்கடிஇ பம்பாயில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் இவற்றின் தாக்கத்தை தங்களுடைய முடிவுகளில் சீலிட்டு அறிவித்துவிட்டார்கள் என்ற எண்ணம் பரவலாக உள்ளது. தேர்ந்த ரசிகர்கள் “ஸ்லம் டாக் மில்லினர்” படத்தை பார்த்துவிட்டு இந்த எண்ணங்களுக்கு உடன்படத் தயாராக இல்லை.

  படம் தயாரிக்கப்பட்ட செலவில் சுமார் பத்துமடங்கு பரிசாக 230மில்லியன் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. ஏஆர் ரஹ்மான் மற்றும் அதில் நடித்த கலைஞர்களுக்கு இந்தியாவில் மேலும் பரிகள் காத்திருக்கின்றன. இவ்வாறாக தெரிந்த செய்திகள் பல இருந்தாலும் ஆஸ்கார் இந்தியாவில் ஏற்படுத்திய அலைகள் ஏராளாம்.

  பரிசுபெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சசூல் பூக்குட்டி தென்னிந்தியாவிலிருந்து பாலிவுட்டில் தடம் பதித்தவர்கள். மேற்கத்திய நாடுகள் இந்தியாவிற்கு வழங்காத அங்கீகாரத்தை இவர்கள் பெற்றுத் தந்திருக்கிறார்கள்.

  பல காயங்களையும் மௌனத்தையும் தன்னுள்ளே கொண்டிருக்கும் இந்தியர்கள் இந்த அங்கீகாரத்தை பெறுவதற்கு நீண்ட தூரம் பயணித்து வந்திருக்கிறார்கள்.

  தென்கிழக்காசிய செய்தியாளர்கள் ரவிவெல்லூர் சொல்கிறார் 1927ல் அநேகமாக முதல் ஆஸ்கார் வழங்கப்பட்ட ஆண்டுகளில் அமெரிக்க எழுத்தாளர் காதரினா மேயோ மதர் இந்தியா என்ற புத்தகத்தை வெளியிட்டிருந்தார். இந்தியர்களின்  பால்ய விவாகத்தையும் விதவைகள் நிலைமையும் கடுமையாக சாடிய புத்தகம் அது.

  அந்த காதரினா மேயோ தான் ஆசிய இனத்தவர் அமெரிக்காவில் குடியேறுவதற்கு தடைவிதிக்கும் சட்டத்திற்கு மிகவும் ஆதரவாக இருந்தவர் மகாத்மா இவருடைய புத்தகத்தை சாக்கடை இன்ஸ்பெக்டர் என்று வர்ணித்தார். ஆசியஇனத்தவருக்கு அமெரிக்காவில் உள்ள இன்றைய இடம் இன்று தெளிவாக்கப்பட்டிருக்கிறது.

  “ஸ்லம் டாக் மில்லினர்” படத்தை நீங்கள் பார்த்திருந்தால் ரஹ்மான் பாடலும் ஆலிச் சேர்ப்பும் தேடிப் பிடித்தால்தான் காணக் கிடைக்கும் படத்தின் ஜீவனோடு தன்னுடைய இசையை இழைய விட்டிருக்கிறார். 1992ல் பம்பாயில் நடந்த கலவரத்தைக் கூட படம் தொட்டுக் காட்டியிருக்கிறது ஆனால் காயங்களுக்கு மருந்தளிக்கும் தன்மையாகத்தான் இந்தப் படத்தில் அவைகள் கையாளப்பட்டுள்ளது.

எழுத்தாளார் ஜெயமோகன் கூறுவார் இப்படி “சிங்கம் காட்டுக்கு ராஜாவாக தானாகவா முடிசூட்டிக் கொண்டது” என்று மெட்ராஸ் மொசார்ட் என்று வர்ணிக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்து மதத்திலிருந்து மதம் மாறி இப்போது தான் ஏற்றுக்கொண்ட மதத்தில் தீவிரப் பற்றாளர். ஏதிரெதிர் அணிகளில் வசைபாடிக்கொண்டிருந்த அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் வாழ்த்து ஊடகங்களில் வெளிவராமல் இருட்டடிப்பு செய்யப்பட்டு விடுமோ என்று தங்கள் வாழ்த்து செய்திகளை இரண்டு தவணைகளாக அனுப்பிக் கொண்டிருந்ததாக செய்திகள் வந்தன.

  இந்தியாவில் வாழும் 140 மில்லியன் இஸ்லாமிய மக்களுக்கு ஆஸ்கார் விருது நல்ல செய்தியோ இல்லையோ இந்திய கலைஞர்களுக்கு வாசல் திறந்திருக்கிறது என்ற உலக நாயகன் கமலும் மற்ற கலைஞர்களும்  சிங்கப்பூரின் 96.8 ஒலி அலையில் ஒரே சுருதியில் பேட்டி கொடுத்து வருகின்றனர்.

  “ஸ்லம்டாக் மில்லினர்” படத்தில் வரும் சிறுவர்களை பிச்சை எடுக்க வைக்கக் கண்ணைத் தோண்டிக் கோரப்படுத்தும் காட்சிகள் வெறும் சினிமாத்தனம் அல்ல உண்மையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் யதார்த்தம்.

  ஏ.ஆர்.ரஹ்மான் அதிகம் பேசமாட்டார்இ நடிகர் பார்த்திபன் ஏன் அப்படி? என்று கேட்டாராம் பேசிவிட்டால் இவ்வளவுதான் இவரிடம் சரக்கு என்று நினைத்து விடுவார்கள் என்று சொன்னாராம்.

  ஆஸ்கார் விருது பேசாத விடியல்களையும் பேசவைக்கும் என்று நம்புவோம் இவ்வருட ஆஸ்காருக்கு நாமும் ஜெய் ஹோ போடுவோம்.

நன்றி: நாம் காலாண்டிதழ்

துண்டு துண்டாக தனித் தனியே நிற்கும் மனிதர்கள், ஒன்றை ஒன்று அறியாத வீடுகள், அடுத்த வீட்டு மனிதர்களை அறியாத அவர்களின் சுக துக்கங்கங்களில் பங்கு கொள்ளாத வீடுகள், அவசர கதி, இயந்திர கதி, மனிதப் பரவல், புதியவர்கள் பரவல் இவற்றை சேர்த்து வடம் பிடித்து இழுத்து ஒன்றினைக்கும் முயற்சிகள் சிங்கப்பூரில் குடியிருப்பாளர் குழக்கள் கூலம் தீவு தோறும் நடைபெற்று வருகின்றன. அதிகம் நான் குடியிருக்கும் பகுதியின் குடியிருப்பாளர் குழு தலைவர் மிஸ்டர்.மேக் (சீனர்) ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி 80 வயது இளைஞர். சிலர் அவரை கூப்பிடும் விதத்திலேயே அவர் புளங்காகிதம் அடைவார் மலாய் பெயரில் MAC YOUSUF என்றும் தம்மை அடையாளப்படுத்திக்கொள்வார். மாதந்தோறும் நடக்கும் குடியிருப்பாளர் குழு கூட்டங்களில் புதிதாக குடியேற்றம் பெற்ற குடும்ப உறுப்பினர்கள் அதிலும் இந்தியர்கள் கலந்து கொள்வது அரிதாகவே இருக்கிறது. நானும் தாமதமாக குடியிருப்பாளர் குழவில் இணைந்தேன் அதில் பேசப்படும் விசயங்கள் அரசாங்கத்திற்கு கொண்டு செல்லப்படும் விதம் பயனுள்ளவையாக இருக்கும்.

இப்போது வியாழன் தோறும் மாலையில் “சிரிப்பில் சிரிப்போம்” வாருங்கள் என்று குடியிருப்பாளர்களுக்கு நிகழ்ச்சி ஆரம்பித்திருக்கிறார்கள். Laughter, your way to health. யோகா, நீச்சல், தள விளையாட்டுக்களை முந்திக் கொண்டு சிரிப்பில் சிரிக்க உறுப்பினர்கள் சேர்ந்த வண்ணம் உள்ளனர்.

உணவு முறையாலும் அன்றாட வாழ்க்கை முறையிலும் வேறுபட்ட சிந்தனைகளாலும் ஒரு மனிதனிடம் உருவாகும் சீரற்ற போக்கே உடல் நலத்தை கெடுக்கிறது. உணவைக் கடந்து மனிதர்கள் ஆரோக்கியத்திற்கு தேவையான இன்னொரு சுவை – நகைச்சுவை …

 

மதியம் அறுசுவை உணவுடன் நகைச்சுவையும் சேர்த்துக் கொண்டால் இரத்தத்தில் சக்கரையின் அளவு குறையும் என்று கண்டறிந்திருக்கிறது ஜப்பான் பல்கலைகழகத்தின் சமீபத்திய ஆய்வு…

இறுக்கமாக இருக்கும் மன ஓட்டத்தை அப்படியே மாற்றிடும் சக்தி படைத்தது நகைச்சுவை. ஓரு மனிதன் மனம் விட்டு சிரிக்கும்போது அவன் மூளையில் எண்டார்ஃபின் (Endoorphine) என்ற ரசாயனம் உற்பத்தியாகிறது. அது மனிதனின் சிடு சிடுவிலிருந்து மீட்டு நல்ல மூடுக்கு கொண்டு வருகிறது.

புன்னகை உறவுக்கான முதல் தூது எத்தனைபேர் எவ்வளவு விரைவாக தூது அனுப்புகிறார்கள் என்பதை பொருத்து இப்பூவுலகில் அமைதியும் மகிழ்ச்சியும் ததும்பியிருக்கும்.

மிக்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர் Ernest Abel பேஸ்பால் விளையாட்டு வீரர்களின் 230 புகைப்படங்களை (1950 ஆண்டிலிருந்து எடுக்கப்பட்டவை) ஆராய்ச்சி செய்திருக்கிறார். அந்தப் புகைப்படங்களில் உள்ள விளையாட்டு வீரர்களின் புன்னகையை தரம் வாரியாகப் பிரித்திருக்கிறார்.

சுத்த உம்மணாஞ்சி
கொஞ்சம் பரவாயில்லை
தெய்வீகச் சிரிப்பு

இவற்றோடு அவர்களின் பிறந்த தேதி, உடல் எடை, திருமண பந்தம், வேலை நிலைமை போன்ற விபரங்களையும் கவனத்தில் கொண்டு ஆராய்ச்சியை செய்து முடித்திருக்கிறார்.

கடைசி விளையாட்டு வீரர் கடந்த ஜீன் மாதம் இறக்கும் வரை காத்திருந்து தன் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டிருக்கிறார்.

புகைப்படத்தில் இருந்த சுத்த உம்மணாமூஞ்சி விளையாட்டு வீரர்கள் சராசரியாக 72.9 வருடமும், கொஞ்சம் பரவாயில்லை ரசகம் 75 வயது வரைக்கும், தெய்வீக சிரிப்புச் சிரித்தவர்கள் 79.9 வயது வரையும் வாழ்ந்திருக்கிறார்கள்.

இது ஒரு சிரிப்பான புள்ளி விபரம் என்று நாம் புறந்தள்ளிவிட முடியாத அளவிற்கு சிறப்பாக இருப்பதாக ஆயராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

கொஞ்சம் ஸ்மைல் பிளீஸ் என்று புகைப்படம் எடுப்பவர் சொல்வது ஏன் என்று இப்போதுதான் புரிகிறது.

அப்துல்காதர் ஷாநவாஸ்

சுவைக்கத் தெரிந்த மனமே

Posted: மார்ச் 29, 2010 in பத்தி
குறிச்சொற்கள்:

தாங்கள் சுவைக்கக் கனி கிடைக்காதா என்று கணக்கிடாமல் மரக்கன்றுகளை நடத் தயாராக இருக்கும் உள்ளங்களாகவே புதியவர்களையும், இளைஞர்களையும் ஊக்குவிக்கும் திரு மா.அன்பழகன் கவிஞர் க.து.மு.இக்பால் இவர்களை காண்கிறேன்.

நான் விடாமல் நச்சரித்ததும் ஒருநாள் இருவரும் எனது ரொட்டி கடைக்கு வந்திருந்தார்கள். அதிகம் பேசாவிட்டாலும் அர்த்தத்தோடு பேசும் அவர்களின் வார்த்தைகளை ரசித்துக் கொண்டிருந்தேன்.

சரி சாப்பிடலாமா என்றேன்…

திரு மா.அன்பழகன் சாப்பிடலாம் ஆனால் நான் Poor Eated என்றார். சுவைக்க மனம் துடிக்கிறது ஆனால் உடல் மறுக்கிறது என்றார்.

நண்பர்கள் பெற்று வாழ்வதே தலை சிறந்த வாழ்க்கை தனி மரமாக இருப்பவர் ஆயுள் கூட குறைந்த காலமே…

எல்லாச் சுவைகளிலும் உணவுகள் கிடைப்பதைப் போல நண்பர்களும் கிடைத்து விட்டால் நாம் கொடுத்து வைத்தவர்கள் தான்.

உணவுச் சுவைகளில் துவர்ப்பு ஆற்றலையும், கார்ப்புச் சுவை வீறினையும் இனிப்புச் சுவை வளத்தினையும், உவர்ப்புச் சுவை தெளிவினையும், புளிப்பு இனிமையும், கசப்புச் சுவை மென்மையையும் தரும் என்று உணவு மருத்துவம் கூறுகிறது.

உண்ணும் உணவில் ஆறு தாதுக்களுக்கும் பயன் இருக்கிறது. இரத்தத்தை உண்டாக்க துவர்ப்பும், எலும்பை வளர்க்க உப்பும், தசையை வளர்க்க இனிப்பும், கொழுப்பைத் தர புளிப்பும், நரம்பைப் பலப்படுத்த கசப்பும், உமிழ் நீரைச் சுரக்க காரமும் என உணவில் ஒன்று சேர்த்திருந்தால் ஏழாவது தாதுவான மூளைக்கு வேறு சக்தி தேவையில்லை என்று சொல்கிறார்கள்.

ஆனால் மேலை நாடுகளில் சுவைகள் இந்த மட்டும் தான் உள்ளன. அவர்கள் துவர்ப்புச் சுவையை விட்டு விட்டார்கள். ஆனால் ஜப்பானியர்கள் மட்டும் ‘யுமாமி’ என்ற சுவையைக் குறிப்பிடுகிறார்கள். இந்தச் சுவை மாமிசம் சாப்பிடும்போது அனுபவிக்கும் சுவை என்பது அவர்களது விளக்கம்.

ஆங்கிலேயர்கள் (Savory) சேவரி என்ற புது சுவையினை சேர்த்துக் கொண்டார்கள். அது திருமதி ஜெயந்தி சங்கர் தனித் தலைப்பில் எழுதிய ஏழாவது சுவை அகினோ மோட்டாதான்.

உண்மையில் நம் நாக்கு 25 விதமான சுவைகளை அறியக் கூடியது அத்தனைக்கும் தமிழில் பெயர்கள் இல்லை.

நாம் பள்ளிக் கூடங்களில் படிக்கும் போது நாக்கைப் படம் போட்டு இந்தந்த இடத்தில் இன்ன சுவை நரம்புகள் உள்ளன என்று அறிவியல் டீச்சர் படம் போட்டு காண்பிப்பார். நான் இனிப்பு சுவை உணரும் பகுதி எந்தப் பகுதியில் உள்ளது என்று ஆவலாக அவர் படம் போடும் போது பார்ப்பேன். அப்படி நாக்கில் சுவை மொட்டுக்களுக்கென மேப் எதுவுமில்லை என்று சார்லஸ் சூக்கர் (1995 Professor of Biology university of California) கண்டு பிடித்திருக்கிறார்.

நாக்கில் எல்லாப் பகுதிகளுமே சுவையை உணரத் தக்கவாறு அமைந்துள்ளதாக சொல்கிறார்.

இன்னும் நாக்கில் 25 சுவைகளுக்கு மேலும் உணர்ந்து கொள்ள ஏற்பாடுகள் இருப்பதாக கூறுகிறார். தேன், திராட்சை, மாம்பழம், பலா, சப்போட்டா இவைகள் இனித்தாலும் அவற்றுக்கு ஒன்றுக் கொன்று வித்தியாசங்கள் இருக்கிறது அல்லவா.

சுவை மொட்டுக்களை ஆராய்ந்தபோது அதில் இரண்டு அறைகள் இருப்பதாக கூறுகிறார். ஒரு அறை உப்பு, கரிப்பு, கசப்பு சுவைகள் அமர்வதற்காகவும் இன்னொரு அறை அந்தச் சுவை உணர்வை பலமாகத் தூண்டிவிடும் இன்னொரு பொருளுக்காக காத்துக் கொண்டிருப்பதாகவும் கூறுகிறார்.

அக்னோமோட்டோ தன்னளவில் சுவையற்றதாக இருந்து மாமிச உணவில் கலந்துத் அந்த மாமிசத்தின் சுவை பன் மடங்கு கூடுவது இதனால் தானோ…?

மேலும் கொஞ்சம் ஆராய்ந்தால் சுவை ஏற்பிகளின் இரண்டாம் அறை சர்க்கரை சுவை போன்றவற்றை பல மடங்கு நாமே அதிகரித்து கொள்வதற்கும் கசப்புச் சுவை வீச்சை இன்னும் தணிப்பதற்கும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்று சொல்கிறார்.

அதிஷ்டமும் அது இஷ்டமும்

Posted: மார்ச் 27, 2010 in பத்தி
குறிச்சொற்கள்:,

 சிங்கப்பூரில் நாலு நம்பர் லாட்டரி 5 வருடங்களில் 200 மில்லினர்களை உருவாக்கியிருக்கிறது.

3.95 பில்லியன் வெள்ளி சுமார் 1000 நபர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது, சென்ற வார குலுக்கல் வரை

பெரும்பாலும் பெரிய தொகையை அதிஷ்டக் குலுக்கலில் வென்றவர்கள் வெகு விரைவில் திவாலாகி விடுவதாக சிங்கப்பூர் பூல்ஸ் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

பென்சில்வேனியாவில் 1988ல் 16.2 பில்லியன் தொகையை வென்ற மிஸ்டர்.வில்லியம் போன் 6 மாதங்களில் தன்னுடைய காதலி லாட்டரி பணத்தில் பங்கு கேட்டு நீதிமன்றத்தை அனுகியபோது தனக்கு ஏன் இந்த ‘அதிஷ்டம்’ என்று மனம் நொந்து விட்டாராம். கேஸில் காதலி வெற்றிபெற, மீதிபணத்தை காப்பாற்றுவதற்கு பாடாத பாடு பட்டாராம்.

நேரம்பார்த்து அவருடைய சகோதரர் ஒருவர் அடியாட்களை வைத்து அவரைக் கொல்ல திட்டமிட்டப்போது கைதானார். மற்ற சகோதரர்கள் உருப்படாத வியாபாரங்களில் அவரை ஈடுபடுத்தி கடனாளி ஆக்கிவிட்டார்களாம்.

4D குலுக்கலில் அதிஷ்டம் உங்கள் கதவுகளை தட்டிவிட்டதாக கற்பனை செய்து பாருங்கள்?

ஆகா ….. எப்படியிருக்கும்

ஆனால் மனோரீதியாக லாட்டரி அடித்ததால் முதலில் ஏற்படும் அதிர்ச்சி இதயத்திற்கு கெடுதியாம் அத்தோடு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களிடம் பழகும் விதமே மாறிப் போய்விடுமாம்.

சிலருக்கு யாருடைய காசோ நமக்குக் கிடைத்து விட்டதே என்ற பயத்தில் என்று அல்லது இரண்டு வருடத்தில் இந்த பணத்தை செலவழிக்கவே மனம் வராதாம். மிக முக்கியமாக புகைபிடிக்கவும் மது அருந்துவதும் அதிகப்படியாகி உடல் நலம் பாதிக்கப்படுமாம்… இது தேவையா…

என்னவாக இருக்கும்?

Posted: மார்ச் 23, 2010 in பத்தி
குறிச்சொற்கள்:

மாணவப் பருவத்தில் ஆசிரியர்கள் ஒரு வேலையை கொடுத்துவிட்டால் அதை சிரமேற்கொண்டு ஓடியாடி செய்து முடிப்பது கடமையுணர்வு கொப்பளிக்கும் ஒரு அனுபவம். அதிலும் “நீதான் பொறுப்பு” என்று கல்லூரி விடுதிக் காப்பாளர் புலவர் நெயினார் முகம்மது என் பெயரைக் குறிப்பிட்டுச் சொன்னவுடன் இன்னமும் கூடுதல் டென்ஷன் தொற்றிக் கொண்டது.

விடுதிநாள் விழாவிற்கு கவியரசர் கண்ணதாசனைக் கூட்டிவர முடியுமா? ஏன்ற சவாலுடன் சென்னைக்கு வந்து கவி க.மு.ஷரிப் இயக்குனர் கோபாலக்கிருஷ்ணன் இருவரிடமும் அறிமுகக் கடிதங்கள் வாங்கிக்கொண்டு கவிதா ஹோட்டலில் இரண்டு நாட்கள் தங்கி கவிஞரை என் நண்பர் அன்வர் மரைக்காயருடன் சென்று சந்தித்தேன்.

எங்கள் பேண்ட் பெல் பாட்டம் அளவைப் பார்த்துவிட்டுக் கவிஞர் சிரித்தார்.

“மாணவர்களுக்கு பேண்ட் வேட்டியாக மாறிக் கொண்டு வருகிறது” என்றார்.

அப்போது அவர் அரசவைக் கவிஞராக இருந்தார். யேசு காவியத்தை முடிக்கும் தருவாயில் திருச்சியில் உள்ள பேராயர்களைச் சந்திக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் 25.02.1980 எங்கள் கல்லூரி விடுதி நாளில் கலந்து கொள்ள சம்மததித்தார். கவிஞர் கல்லூரி விடுதிக்குள் நுழைந்தவுடன் மாணவர்களிடையே பரபரப்புத் தொற்றிக் கொண்டது. அகலமான பெல் பாட்டத்துடன் மாணவர்கள் சூழ்ந்து கொண்டு வரவேற்க “அத்திக்காய்”… தேன் தேன்.. பாடல்கள் பாடி அசத்திவிட்டனர்.

விழா எற்பாடுகளில் கவனம் இருந்தததால் அவர் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுக்க எனக்குத் தோன்றவில்லை கடைசி ஓரத்தில் திரும்பிப் பார்த்துக் கொண்டிருப்பது நான்தான்…

 

கவிஞர் சொல்லாமல் விட்ட நாலாம் பக்கம்……

காதலுக்கு நான்கு பக்கம்

        கால்களுக்கு நாலு நடை

மாதருக்கு நாலு குணம்

      மை விழிக்கு நாலு மொழி

கண்களினால் எழுதுவது முதல் பக்கம்

     கலந்து கொஞ்சும் இதயங்கள் இரண்டாம் பக்கம்

என்னுவதை சொல்லுவதே மூன்றாம் பக்கம்

கவியரசு கண்ணதாசன் குரல்கள் ஜமால் முகமது கல்லூரி விடுதியின் சுவர்களில் இன்னும் எதிரொலிக்கின்றன.

அவர் பாடாமல் விட்ட நாலாவது பக்கம் என்னவாக இருக்கும்?

அப்துல் காதர் ஷாநவாஸ்