
(புகைப்படத்தில் நானும் பாவ்லா நண்பர் ஹாஜாவும்)
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் புதுமுக வகுப்பு விடுதி அறை எண் 124, நான் கொண்டு சென்ற ரேடியோ முதல் நாளே பாட மறுத்தது. நான் அறை நண்பர் ராஜாமுஹம்மதிடம் ரேடியோவை ‘ஒக்குட’ டோல்கேட் கொண்டு செல்வோம் வருகிறீர்களா என்றேன்.
அவர் நான் சொல்வதைக் கேட்டுவிட்டு என்னவோ ஏதோ என்று திருதிருவென முழித்தார், நான் திரும்பவும் ஒக்குட என்றேன்.
கொஞ்சநேரம் கழித்து ஓ சரி பண்ணவா? என்றார்.
இராமநாதபுரம் நாட்டார் வழக்குச் சொல் ‘ஒக்குட’ பெரம்பலூர்க்காரருக்கு தெரியவில்லை
இங்கிருந்துதான் எனது வழக்குச் சொல் அர்த்தம் தேடும் படலம் ஆரம்பித்தது.
பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து (பந்திக்கு முந்தும் படைக்கு பிந்தும் வலது கை)
பலா மரம் கண்ட தச்சன் ஒரு மரத்தையும் வெட்டான் (பலா மரம் கண்ட தச்சன் வேறு ஒரு மரத்தையும் வெட்டமாட்டான் ஏனெனில் பலா மரமே எல்லா தச்சு வேலைகளுக்கும் போதுமானது)
மொங்கான் போடுதல் (பள்ளத்தை நிரப்புதல்)
சகட்டு மேனிக்கு (சக்கரம் மேடு பள்ளம் அறியாது)
கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு (பெரிய தேங்காயை எடுத்து பிள்ளையாருக்கு கடை – பெரிய )
இந்தத் தகவல்களையெல்லாம் நான் குறித்து வைத்துக் கொண்டு திரு.மாசிலா அன்பழகன் கவிமாலை காப்பாளர் பெப்ரவரி கவிமாலையை என்னிடம் வழி நடத்தச் சொன்னவுடன் வரிசையாக ஒப்புவித்தேன்.
விக்டர் ஹ்யூகோவிலிருந்து ஜெயகாந்தனை தொட்டு ஒரு கதை சொன்னேன். திரு. கோவிந்தராஜ் தான் வடித்த கவிதையில் கவிமாலைக் கவிஞர்கள் ஒவ்வொருவரையும் தொட்டு கவிபாடினார். என்னை விட்டு விட்டார். என்ன கோவிந்தராஜ் என் பெயரை விட்டுவிட்டீர்கள் நாம் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் மறந்து விட்டீர்களா? என்று சுவைக்காக கூறினேன், அப்படியே கடலாடி உங்கள் ஊர் அதன் அர்த்தம் என்ன என்றேன்…
கடலுக்குப் பக்கத்தில் உள்ளதால் கடலாடி என்றார், அதுவல்ல நண்பா அது ஒரு நெருஞ்சிச் செடி என்றேன் எம்ஜியாரும் எம் ஆர் ராதாவும் நேருக்கு நேர் சுட்டுக் கொண்டும் இருவர் உயிருக்கும் ஆபத்தில்லை ஏன் என்ற கேள்வியுடன் நான் சம்பவங்களை இணைத்ததும் சபா இராஜேந்திரன் பலே பலே என்றார்.
கலகலப்புடன் நிகழ்ச்சி களைகட்டியது சிறப்பு சொற்பொழிவாளர் திரு.சுவாமிநாதன் தேசிய பல்கலைக் கழகம் உரையில்தான் மனிதர் உருக்கிவிட்டார்.
இப்படிப்பட்ட பேச்சுக்களை கேட்க வேண்டும் என்று மாதக் கடைசி சனிக்கிழமையை கவிமாலைக்கு ஒதுக்கி வைத்தால் அன்று ஏதாவதொரு வேலை வந்து நிற்கிறது.
வரலாறு முழுவதும் பார்த்தால் வேலையின் கூறுகள் பிரிப்பதிலேயே மனிதன் காலத்தை செலவிட்டிருக்கிறான் என்பது தெரியவரும். வேலை என்பது பல கூறுகளைக் கொண்டது.
நாள்தோறும் செய்ய வேண்டிய பணிகளும் ஓய்வும் அடுத்து முன்னேற்றமும் உள்ளக் களிப்பும் இதில் பணி, ஓய்வு, முன்னேற்றம் இருந்தும் உள்ளக் களிப்பு இல்லாதவர்கள் அநேகம்பேர், எல்லாத் தொழில்களிலும் உண்டு. இந்த நான்காவது உள்ளக் களிப்பு எனக்கு இலக்கிய நண்பர்களை சந்திக்கும் போதுதான் ஏற்படுகிறது. அப்படி உள்ளக் களிப்பையும் சேர்த்துக் கொண்டாடும் பலரில் என் பால்ய நண்பர் ஹாஜாவும் ஒருவர். இதை தொடர்ந்து செய்பதற்கு பாவ்லா பண்ணவேண்டும். பாவ்லா என்றால் BAWALA (balance of work and life association)
ஒவ்வொரு மாதமும் சந்திக்கக் கூடிய உள்ளக்களிப்பு நபர்களுக்கு நேரம் ஒதுக்கி கட்டாயப் பழக்கத்தை கொண்டு வருவதுதான் BAWALA
ஒரு நாள் அவர் கேட்டார் நீங்கள் Impressionism, cubism, verticism, futurism, expressionsm, surealism அனைத்தும் பேசுகிறீர்கள் நான் ஒரு கேள்வி கேட்கிறேன்
தோட்டத்து பூவினில் இல்லாததது எந்த பாட்டிலும் ஏட்டிலும் சொல்லாலது
அது எது? அது எது! எது அது என்றார் நான் சொன்ன பதில் இன்னும் அவருக்கு திருப்தி தரவில்லை
சரியான பதில் உங்களுக்குத் தெரியுமா?…