மறுவாசிப்பு…

Posted: ஏப்ரல் 2, 2010 in கவிதை, பத்தி
குறிச்சொற்கள்:,

 உலக வாழ்க்கை ஏராளமான அடுக்குகளையும் சூழல்களையும் ரகசியங்களையும் இருள் முடிச்சுக்களையும் கொண்டதாக இருக்கிறது அதனால் தனி மனிதர் தன் வாழ்வில் முழுதும் கற்று அறிய முடியாதது

அதை இலக்கியம் கற்றுக் கொடுக்கும் விதவிதமான மனோபாவங்களைப் படைக்கும் கவிஞர்கள் படைப்பாளிகள் வெறும் கதைக்காரர்கள் அல்ல… புத்தகங்கள் வெறும் பொழுது போக்கு அம்சங்கள் அல்ல

அதிலும் நாம் படிக்கும் புத்தகங்கள் மண்டை ஓட்டை இடித்து நம்மை விழிக்கச் செய்யாத பட்சத்தில் நாம் ஏன் அதை வாசிக்க வேண்டும் (மேலும் வாசிப்பில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் குறைவு என்றால் அது தன்னளவில் எதையும் தந்துவிடுவதில்லை)

“என்னுடைய அருமையான நண்பர்கள் யார் என்றால் படிக்காத புத்தகம் ஒன்றை கொண்டு வருபவரே என்றார்”- ஆப்ரஹாம் லிங்கன்

நான் வாசித்த சிங்கப்பூர் எழுத்தாளர்கள் புத்தகங்களில் ஆசியான் கவிஞர் க.து.மு இக்பால் அவர்களின் இரண்டு புத்தகங்களை மறுவாசிப்பு செய்தேன். மனிதக் கணக்கில் வாழ்வு பெரிது காலக் கணக்கில் வாழ்வு சிறிது திரும்பிப் பார்த்தால் மனிதர் வாழ்க்கை எறும்பின் கால் நுனி அளவில் சிறிது என்பார் கவியரசு வைரமுத்து

“வானவர்கள் மண்ணில் இருக்கிறார்கள்” மற்றும் “காகித வாசம்” இரண்டு நூல்களிலும் இழையோடி நிற்கின்ற தத்துவங்கள் மரணம் குறித்த நிலைப்பாடுகள் நம் சிந்தனைகள் இன்னோரு இடத்திற்கு எடுத்துச் செல்கின்றன

    வயது
நம் மரணப் படிக்கட்டு
புதிய உலகுவரை
துணையாக வந்து
வழிகாட்டி அணைந்துவிடும் விளக்கு

——————————————————

பிறப்பு இறப்பு என்ற முரணால் அமைந்ததுதான்  வாழ்க்கை

கவிஞர் பா.விஜய்

“பொய்களால் நெய்யப்பட்ட

இந்த மனிதன்

தன் உடம்பிற்கு மெய்” என்று

பெயர் வைத்திருப்பதாக சொல்கிறார்

——————————————————–

“முதுமை கிழிசல்கள் அல்ல

தையல்

வாலிபம் கிழிந்த

வாழ்க்கை துணியைத்

தள்ளாடும் முதுமைதான்

தைத்துக் கொடுக்கிறது”

இப்போதெல்லாம் எதையும் சொல்லாது விடுவதை அல்லது சொல்ல வந்ததை சொல்லாமல் விடுவதை சொல்வதற்கு எதுவுமில்லாமல் குறைப் பிரசவத்தில் பிறந்த கவிதைகள் புதுக்கவிதைகளாக உலவி வருவின்றன விதிவிலக்காக

ஆசியான் கவிஞருக்கு யாப்பு மொழியும் தெரிந்திருப்பதால் யாப்பை தன் தேவைக்கு நெகிழ்த்தி அமைத்துக் கொண்டுள்ளாரா?

“நேரம் முடிந்த பிறகு

நீயும் நானும் எப்படி

காலம் ஆகிறோம்

காலம் ஆவதற்குள்

நானும் காலம் ஆகவேண்டும்”

“மரணம் உயிரைத் துறப்பதல்ல

கவலையைத் துறப்பது

இறப்புக்குமுன் எங்களை இறக்கச் சொன்னது

ஏனென்று இப்போது புரிகிறது”

காலா! உன்னை சிறு புல்லென மதிக்கிறேன் என்றன் காலருகே வாடா! சற்றே உன்னை மிதிக்கிறேன் என்கிறான் பாரதி

மரணத்தை எதிர்கொள்வது தவிர்க்க முடியாத வாழ்க்கையின் யதார்த்தம் கவிக்கோ அப்துல் ரஹ்மான் தன்னுடைய கவிதையில்

“மயான வாசலில்

பழுதாகி நின்றது

ஈனில் ஊர்தி” – என்கிறார்

 

“ஆயிரம் கிளைகளுடன்

கால்கள் வருந்த

ஆயுள் முழுவதும் தேடினாலும்

கிடைக்காமல் போகிறது  வாழ்க்கை

பலருக்கு

வாழ்க்கை ஒற்றைப் 

பூவிலிருந்து

உதிர்கிறது”

சொற்களில் இறக்கைகளை கொண்டு வாசகனால் பெற முடியாதென்று எதுவுமில்லை சொல்லாதவைகளையும் பொருள்படுத்தும் வியப்பான திறமை கொண்டவை சொற்கள் குறியீடுகளாலும் படிமங்களாலும் கவிஞருடைய கவிதைகளில் வாழ்கின்றன பின்பு சொற்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு இறக்கின்றன

வாசிப்பில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் குறைவு என்றால் அது தன்னளவில் எதையும் தந்துவிடுவதில்லை

கற்புக்கரசி என்றபடத்தில் தங்கவேலு ஒரு பாட்டுப் பாடுவார்

 தத்தக்கா புத்தக்கா நாலுகாலு

தானா நடந்தால் இரண்டுகாலு

உச்சி வெளுத்தா மூணுகாலு

உருக்கு போகையிலே பத்து காலு – என்பார்

————————————————

“என் பாதங்களே

இன்னும் எத்தனை ஆண்டுகள்

இந்தப் பயணம்

சுமை தாங்காமல்

என்னை எங்கே இறக்கி

வைக்கப் போகிறீர்கள்

ஒருநாள் உங்களை தோளில்

சுமந்து என் நன்றியைச் சொல்ல

என் தோழார்கள் வருவார்கள் “

(பாதயாத்திரை) கவிஞர் க.து.மு இக்பால்

கவிதை வெற்று ரசனைக்குரிய ஒரு விசயமாகக் குறுகிவிட்டதோ என்று கவலைப்பட வேண்டியிருக்கிறது கவிதைக்கு வேறு எந்த எதிர் நோக்கும் காரியங்கள் இல்லையா?

நம் நினைப்பில் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன ஆசியான் கவிஞரின் கவிதைகள்

மரணத்தை எதிர் கொள்வது கடினமானது அதைவிட கடினமானது ஒரு சக கலைஞன் மரணத்தை எழுதுவது. ஏனெனில் மரணம் அவனது இருப்பை சாஸ்வதப்படுத்துகிறது மரணத்தை கடந்து செல்லும் கனவு அந்த கனத்தில் உறுதிசெய்யப்படுகிறது.

“உலகெங்கும் கணந்தோறும் இழப்பின் துக்கங்களில் ஒரு கோடிக் கண்கள் கலங்குகின்றன” என்ற பசுவய்யாவின் கவிதைக்கு நம் கண்முன் நிழலாடினாலும் தம் தோளோடு நின்ற சக பண்பாளர்களின் மரணத்தை கவிஞன் பாடும்போது காலத்தை கடந்து ரத்தமும் சதையுமான வாழ்வை உணரச் செய்யும் பதிவுகளாக அது ஆகிவிடுகிறது

“மரணம் உன்னை

இளமையாய் பதிவு செய்திருக்கிறது

வாழ்வில் இறக்காமல்

உன்னைப் போல்

மரணத்தில் வாழ விரும்புகிறேன்”

(உதுமான் கனி மறைவுக்கு எழுதிய கவிதை)

 மனிதனின் வாழ்க்கை முடிவுறாது தொடரவேண்டும் என்கிற ஆவல் மிகுந்த ஈடுபாட்டுடன் நம்மை ஆன்மா மறுபிறவி சொர்க்கம் நரகம் என்பவற்றை விடாது பற்றிக் கொள்ள வைக்கிறது. இது சில சமயங்களில் சமூக ஒழுக்கங்களையும் கட்டுப்பாடுகளையும் பேணுவதற்கு உறுதுணையாக இருக்கின்றன.

 

“எனக்கு அஞ்சலிக் கூட்டம் நடத்த வேண்டாம்

ஏனெனில் என்னால் வரமுடியாது” என்று சொல்கிறார் – கவிஞர் நகுலன்

—————————————————-

“அன்பு கடந்து

என்னை புதைக்கும்போது

கூடவே என் குற்றங்களையும் புதைத்து விடுங்கள்

ஏன் பிரிவு தாளாமல் வெளியேறும்

உங்கள் கண்ணீருடன் தயவு செய்து

என் நினைவுகளையும் வெளியேற்றி விடுங்கள்” (அந்தநாளில்)

–  கவிஞர் க.து.மு இக்பால்

ஏதாவது ஒரு அடையாளத்திற்காக வரும் அவலக்கவிதைகள் பெரும் வீழ்ச்சியை தற்போது சந்தித்துக் கொண்டிருக்கின்றன. மிக எளிய சொல்லாடல் படிமம் பின் நவீனத்துவம் டமாரமடித்துக் கொண்டிருக்கும் பன்முகப் பாசாங்குகள் இல்லாமல் தன் சுய அனுபவத்திலிருந்து கவிதைகள் பிறக்கவேண்டும்.

 

“ஒருவர் நினைவை

ஒருவர் கொளுத்திக் கொண்டு

இருவரும் எரிவோம்

மெதுவாக

நான் மெழுகுவர்த்தியாக

நீ ஊதுபத்தியாக” என்கிறார் கவிக்கோ

“நீ நெருப்பில்

மணம் அவிழும் மலர்

உன் கோபம் வாசனையாய்ப்

பரவுகிறது…

——————————————————-

ஊதுபத்திகள் எங்களிலும் உண்டு

எரிந்தபடி சிலர்

எரியாமலே பலர்…..”

கிளைகள் என்பது வானத்தை தொடமுயலும் மரத்தின் வேர்கள் என்கிறார் தாகூர்

“எதிரும் ஒவ்வொரு சருகும்
பூவும் எங்கள் கைகளுக்குத் திரும்பிவிடும்
மீண்டும் கிளைகளில் சிறகுவிரிக்க”  (வேர்கள்)

தரமான படைப்புக்களின் மிக முக்கியமான குணம் என்றும் காலத்தை தாண்ட வேண்டும் மேலான படைப்புக்கள் தன் மீது பழமையை படிய விடமால் உதறிக் காலத்தின் முன் புத்துணர்வு பெறுகின்றன. புதிய தலைமுறையைச் சார்ந்த வாசகர்கள் புதிய பார்வையோடுதான் வருவார்கள். அவர்களுடன் உறவு கொண்டு படைப்பாக்கத்தை தக்க வைத்துக் கொள்கின்றன

இவை என்றுமே காலத்தின் மீதான பயணத்தை சாத்தியப்படுத்துகின்றன.

எ.பி.க என்று மறைந்த சுஜாதா அவர்கள் வருடந்தோறும் எனக்கு பிடித்த கவிதை என  வரிசைப்படுத்துவார்.

அதில் ஒரு செல் புராணம்

“கல்லாரும் கற்றவரும்
நல்லாரும் பொல்லாரும்
எல்லோரும் செல்லுடனே
சுற்றுகிறார் தொல்லுகில்
பல்லின்றி வாழ்ந்தாலும் வாழ்வோர்கள்
மாந்தரிலே செல்லின்றி வாழ்வதில்லை காண்”

————————————————————————–

“தூரங்களைச் சுருக்கி
உன் தோற்றம்
முன்பு தனிமையில்
எப்போதோ
பேசிக்கொண்டே நடப்பேன்
இப்போது அதை அடிக்கடி
செய்கிறேன் உன்னால்”

படைப்புகளின் விமர்சனங்கள் படைப்பைக் குறித்த பார்வையை கருவாக உதவுவன. தட்டிக் கொடுக்கவும் சம்பிரதாயமான புகழுரைகளும் மலிந்துள்ளன இன்றைய சூழலில் எதிர்வினைகளும் விமர்சனங்களும் எழுத்தாளர்களை ஏன் வாசகர்களுக்கும் கூட பலவிதங்களில் பயனுள்ளதாக இருக்கும்.

சில விமர்சனங்கள்
அன்பினால் வரும்
நடுநிலை பலவேலைகளில்
நம் தற்காப்பு ஆயுதங்களே
அணிந்துரைகள் பெரும்பாலும்
முகவுரையாகிவிட்டன
எழுதுவதற்கு ஆட்கள் எப்போதும்
இருக்கிறார்கள்
கீழே இறங்கப் பயந்துகொண்டு
எப்போதுமே இருக்கும் மதில்மேல்
சில பூனைகள்

நவீனப் போக்கு காலத்தின் மேல் காதல் கொண்டதாக ஆகிவிட்டது. நல்ல கவிதைகள் இவற்றுக்கு கட்டுப்படாத கவிஞர்களின் கையில் இருக்கிறது. அப்படிப்பட்ட கவிதைகள் காலம் கழித்து சலித்து சல்லடையில் இட்டு பொருக்கித் தரும்.

“புலியைபோல் பயமுறுத்துகிறது முதுமை
விரோதியைப் போல் உடல் தாக்குகிறது வியாதி
உடைந்த பானையிலிருந்து வழியும்
நீரைப்போல்
ஓடுகின்றது ஆயுள்
இருந்தும் மனிதன் நற்செயல்கள்
செய்யத் தயங்குவது ஆச்சர்யமாக உள்ளது”
(சுகுமாரன் கவிதை)

“சும்மா இருத்தல்
வாழ்வும் சாவும் ஒன்றாய் எண்ணி
வாழ்வது ஞான நிலை
வாழ்வைத் தேர்ந்த பின்னே
சும்மா வாழ் என்பது பித்தர் நிலை”

பூ பூக்க வேண்டும் யார் தலையிலாவது வைக்கப் படவேண்டும் அடையாளம் தெரியாத இந்தப் பயணம் முடிந்தும் வளர்ந்து கொண்டே இருப்பவை செப்புத் தகடு மாதிரி மரம் முழுதும் துளிர் விடுகிற அரசிலைகளின் இறுதி நோக்கம் என்ன

உதிர்வதுதானே? இறுதி அறிந்தால் ஒரு படைப்பை தொடங்கவே இயலாது போல் கூடலாம்

நிறைய எழுதவும் நிறைய சிந்திக்கவும் முடிந்தவர்கள் பாக்கியசாலிகள்

ஆசியான் கவிஞர் அதில் ஒருவகை.

அப்துல்காதர் ஷாநவாஸ்

 

நன்றி: நாம் காலாண்டிதழ்

Advertisements
பின்னூட்டங்கள்
  1. pandiammalsivamyam சொல்கிறார்:

    வித்வான் வெ லெட்ச்மண்ன் சொல்வார் நாம் ஆயுளை கழித்துக்கொண்டே வயதைகூடிக்கொண்டு போகிறோம்.அதுபோல தர்மத்தை கூட்டி கர்மவினைகளை குறைக்கவேண்டும். கவிகள் அனைவரும் எத்தனை விதமாக நிலையாமையினை படம்பிடிக்கிறார்கள் அனைவரும் கவிசித்தர்களே.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s