/////எழுதியவர்: அ.ப.சாகுல் ஹமீது
மின்மடல்: amushahul@gmail.com
உரல் : http://amushahul.webs.com/
யாரிது:http://ws.arin.net/cgi-bin/whois.pl?queryinput=117.206.113.111
மறுமொழி
நத்தத்தில் பிறந்து சிந்தனைச் சித்திரமாய்,
சிங்கப்பூர்ச் சீமையில் ரீங்காரமிடும் தேனியாய்,
மணக்கும் மாமலராய்,இனிக்கும் பலாவாய்
திகழும் அன்பு அண்ணனுக்கு இந்த நத்தத்து தம்பி
சாகுல் ஹமீதின் இனிய சலாம்!!
உங்கள் வலைப்பூக்களை முகர்ந்து பார்த்தேன்.
அதில் கடந்த கால நினைவுகளின் சாரல் என்னை
நனைத்தது.நம் பிறந்த மண்ணுக்கே உரிய சாதிக்க
வேண்டும் என்ற உத்வேகத்தில் சிப்பிக்குள் இருந்த
நீங்கள் இன்று முத்தாகப் பிரகாசிக்கிறீர்கள்!
வாழ்க! பல்லாண்டு! வளர்க! உங்கள் எழுத்துப் பணி!
என்றும் அன்புடன்
அ.ப.சாகுல் ஹமீது
த/பெ. உதுமான் கனி////
அன்புத் தம்பி சாகுல் கமீது
உன்னுடைய வலைத்தளம் மற்றும் நத்தம் நண்பர்கள் வட்டம் என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. விக்டர் ஹ்யூகோவின் “லா மிஸரபிள்” என்ற நாவலில் “ஜின் வால் ஜின்” என்ற திருடனுக்கு பாதிரியார் அடைக்கலம் கொடுப்பார், ஆனால் இரவில் தூங்கி எழுந்தவுடன் அவன் அங்கிருந்த குத்துவிளக்கையும் திருடிக் கொண்டு சென்றுவிடுவான். காவலர்கள் அவனைக் கைது செய்து திருடிய குத்துவிளக்குடன் அவனை பாதிரியாரிடம் கூட்டி வருவார்கள். பாதிரியார் அவனைப் பார்த்து எந்த சலனமுமில்லாமல் ஏன் நான் கொடுத்த இன்னொரு குத்துவிளக்கை எடுக்க மறந்து சென்று விட்டாய்? என்று கேட்பார் – இதன் மூலம் நேசித்தால் திருடனும் மனிதனாகலாம் என்பார் விக்டர் ஹ்யூகோ.
ஜெயகாந்தனுக்கும் இதே போன்று ஒரு அனுபவம், நீண்ட நாட்கள் தன் கொல்லைப் புறத் தோட்டத்தில் இளநீர்க் குலைகள் காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்ததை இன்று பறிக்கலாம், நாளை பறிக்கலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தவர். ஒருநாள் இரவு யாரோ தென்னங்குலைகளை பறித்து கீழே போட்டு மூட்டையில் கட்டுவதைக் கண்டு திடுக்கிட்டு எழுந்தார். இரண்டு திருடர்களும் வந்த வேளையில் மும்மரமாக ஈடுபட்டிருந்தார்கள். ஜேக்கே அமைதியாக ஏனப்பா! நான் எவ்வளவு நாட்கள் காத்திருப்பது இப்போதுதான் வந்து பறிக்க நேரம் கிடைத்ததா என்று சொல்லி அவர்களை தண்டிக்காமல் கூலியும் கொடுத்து அனுப்பினாராம்.
நான் சொல்ல வருவது உன் அப்பா அ.பா அவர்களும் தன் வாழ்வில் இதே அனுபவத்தை பெற்றவர்கள். ஒரு நாள் உங்கள் வீட்டுக் கொல்லையில் ஆசாரி அப்புக்கு கணக்கு செட்டில் செய்து அனுப்பி விட்டு மடக்கு சேரில் முருங்கை மரக் காற்றுக்கு படுக்கப் போனார்கள். அவர்கள் எப்போதுமே இறைவனை “யாரப்பு” என்று கூறிக் கொண்டே வேலையை துவங்குவார்கள், முடிப்பார்கள். உங்கள் வீட்டுக் கொல்லைப்புறத்தில் அப்போதெல்லாம் நிறைய முருங்கை மரங்கள் அடர்த்தியாக வளர்ந்திருக்குமாம். அன்றும் உன் அப்பா அ.பா “யாரப்பு” என்று வழக்கமாக இறைவனை அழைத்திருக்கிறார்கள், அதே நேரம் முருங்கைக்காய் திருடுவதற்கு மரத்தில் ஏறி நின்ற ஆசாரி அப்பு தன்னை எப்படியோ கண்டுபிடித்துவிட்டார் என்று நான்தானப்பு ஆசாரி அப்பு தெரியாமல் செய்துவிட்டேன் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று முன்னால் வந்து நின்றாராம்.
என் நினைவுகளில் எப்போதும் சட்டையில்லாமலும் முண்டாப் பனியனுடன் காட்சிதரும் உன் அப்பா அ.பா அந்த “அப்புவை” மன்னித்து தொடர்ந்து, அவருக்கு “உருப்படிகள்” செய்ய ஆர்டர் கொடுத்த கதை எனக்கு என் அத்தம்மா சொல்லியது. இது கதையல்ல நிசம்! என் அத்தம்மா தேர்ந்த ‘கதை சொல்லி’ நத்தத்தில் அவர்கள் காலத்தில் நடந்த விசயங்களை என்னுள் பதிவுசெய்திருக்கிறார்கள். அவைகள் நெடுங்கதை, குறுநாவல், நாவல் அளவிற்கு என் மனதில் நீண்டு கொண்டேயிருக்கின்றன.
நான் நத்தம் நினைவுகளை தொடர்ந்து பதிவு செய்கிறேன். என் பால்ய நண்பர்களின் தற்போதுள்ள முகவரி கிடைத்தால் மிகவும் மகிழ்வேன்.
1. முதல் ரேங்கிற்கு முதல் வகுப்பு முதல் SSLC வரை என்னுடன் போட்டியிட்ட தியாகராஜன் (பாஸ்கரன் தம்பி)
2. நளிர் (யூசுப் மாமா)
3. முருகன் (பாஸ்கரன் தம்பி)
4. குத்புதீன்
5. அச்சங்குளம் 1977 SSLC நண்பர்கள்
நத்தம் நண்பர்கள் குழு மென் மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்.