அன்பு நண்பர் பாலுமணிமாறன் அவர்களுக்கு …
” நாலுவார்த்தை” மீண்டும் புத்துயிர் பெற்றிருப்பதில் தங்கள் முதல் வாசகன் என்ற முறையில் மகிழ்ச்சி. மீண்டும் ”அப்பாவிச் சோழனாக” மாற வேண்டிய சூழல் தற்போது சிங்கப்பூர் இலக்கிய உலகில் உருப்பெற்று வருகிறது.
நல்ல விமர்சனம், மாற்றுக் கருத்துக்களுக்கான தளம் இங்கு உருவாக வேண்டும் என்று நாம் பலமுறை பேசியுள்ளோம்.
தொல்காப்பியர் 10-வகையான எழுத்துக்கள் குறையுள்ள தன்மையுடையவை என்று சொல்கிறார்.
1. கூறியது கூறல்
2. குறை கூறல்
3. மாறு கொள்ளக் கூறல்
4. மிகை படக் கூறல்
5. பொருள் சில மொழிதல்
6. மயக்கக் கூறல்
7. கேட்போருக்கு இன்னா யாப்பிற்று ஆதல்
8. என்னவகையிலும் மனக் கோள் இன்மை
9. தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல்
10. பழித்த மொழியான் இழுக்கக் கூறல்
இதில் திருமதி லெட்சுமி அவர்களின் விமர்சன எழுத்துக்கள் 10 வகையிலும் குறையுடையதாக இருக்கிறது.
நம் கவிதை வரலாறு 2000 ஆண்டுக்கால நீட்சி கொண்டது. இந்த நீண்ட கால பரப்பில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் உள்ளார்ந்த மனம் மாற்றம் அடையவில்லை. அன்பு, பாசம், காதல் குடும்ப உறவுகள், நட்பு, பிரிவு, மரணம் சார்ந்த, அடிப்படை நிலம் சார்ந்த வாழ்க்கை இவற்றில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை.
கவிதைகள் காலப் பிண்ணனி கொண்டதாக இருக்க முடியுமே தவிர, அது நாம் வாழும் இடத்தின் தன்மைக்கு ஏற்றவாறு மாறுவதில்லை. திருமதி.லெட்சுமி அவர்கள் உண்மையிலேயே கவிதைகளை விமர்சிக்க விரும்பவில்லை என்பதே அனைவரது கருத்தாகவும் உள்ளது. அத்துடன் 21ஆம் நூற்றாண்டின் அடிப்படை ஆவணம் பிறப்புச் சான்றிதலிருந்து தற்போது பாஸ்போர்ட்க்கு மாறிவிட்டது. இந்தச் சூழலில் “குடியேறிகள்” போன்ற சொற்கள் பயன்படுத்துவது நாம் இப்போது என்ன உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பிரமிக்க வைக்கிறது.
மாதம்தோறும் கவிமாலை கவிச்சோலையில் பரிசுகள் வழங்குவது பற்றிய விமர்சனம் மிகவும் பழைமையானது. நான் 30 வெள்ளி பரிசை வாங்குவதற்கு சனி ஞாயிற்றுக்கிழமைகளில் 60 வெள்ளி சம்பளத்தில் ஒரு ஊழியரை என் கடையில் அமர்த்திவிட்டு செல்கிறேன். எனக்கு கிடைத்த 30வெள்ளி பரிசுகள் என்னைப் பொறுத்தவரை விலை மதிக்க முடியாதவை (உங்களிடமிருந்து கூட ஒரு பேக் (bag) பரிசு வாங்கியிருக்கிறேன்) கவிமாலை, கவிச்சோலைக்கு வரும் நண்பர்களுக்கு ஒவ்வொரு வகையிலும் அவைகள் விலைமதிப்பில்லாதவைதான். அத்துடன் பரிசைப் பற்றி விமர்சிப்பது அதை மனமுவந்து மாதம்தோறும் கொடுக்கும் பரிசளிப்பவர்களின் நோக்கத்தை கீழறுக்கும் செயல்.
வளர்ந்து வரும் பாண்டித்துரையின் கவிதைகள், கவிதையைப் படித்து முடித்தவுடன் கனமான நினைவுகளை எழுப்பிக் கொண்டிருப்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.
நாதஸ்வரத் சப்தத்தோடு
கலைஞரின் வாழ்த்துச்செய்தியை
ஏந்தி வந்த கூட்டத்தை
திரும்பிப் பார்த்தவர்கள்
கவனிக்கத் தவறியிருக்கக்கூடும்
வாய்பொத்தி சிரித்து வந்த
சிறுமி ஒருத்தியையும்
அவளை ஒத்த சிறுவனாக மாற
வாய்பொத்தி சிரித்த என்னையும்
(பாண்டித்துரை – உயிரோசை –e.magazine)
ஒரு பழம் பாடலும் என் நினைவுக்கு வருகிறது.
குட்டுதற்கோ பிள்ளைப் பாண்டியன் இங்கில்லை குறும்பி அளவாய் காதைக் குடைந்து தோண்டி எட்டினமட்டும் அறுப்பதற்கோ வில்லி இல்லை இரண்டொன்றாய் முடிந்து தலை இறங்க போட்டு வெட்டுதற்கோ கவி ஒட்டக் கூத்தன் இல்லை விளையாட்டாய் கவிதைகளை விரைந்து பாடித் தெட்டுதற்கோ அறிவில்லாத் துரைகள் உண்டு தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே!
எனவே முக்கியமாக படைப்புகள் குறித்து குறைந்த பட்ச விமர்சனம்ப் பார்வைகள் சிங்கப்பூரில் உருவாக வேண்டும் அவைகள் நல்ல படைப்புகளின் உருவாக்கத்திற்கு மிகவும் பயனளிக்கும்.
நம் சிந்தனைக் கடலோரத்தை தினம் அரித்துக்கொண்டிருக்கும் மொக்கையான விமர்சனங்களின் பின்விளைவுகள், நல்ல விமர்சனக் காற்றை வீசட்டும்.
உங்கள் கவிதைகள் மீண்டும் பிறக்கட்டும்.
பாலுவின் பதிவை படிக்க விமர்சனமா…விகாரமா….- சிங்கப்பூர் இலக்கிய விமர்…
அப்துல்காதர் ஷாநவாஸ்