நன்றி: உயிரோசை.காம் 100 -வது இதழ்
உயிரோசை ஆசிரியர் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
கால்பந்து திருவிழா முடிந்துவிட்டது, ஆனாலும் எனக்கு சில சந்தேகங்கள் மனதை அரித்துக் கொண்டிருக்கின்றன. யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று நண்பர் இந்திரஜித்திடம் கேட்டால் எதற்கும் நீங்கள் ஆர்.அபிலாஷிற்கு ஒரு மெயில் தட்டி விடுங்கள் என்றார்.
என் சந்தேகங்களை அடக்கி வைக்க முடியாமல் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
1. சிறுவர்– சிறுமியர்களை விளையாட்டு வீரர்கள் திடலுக்குள் நுழையும்போது கைபிடித்து அழைத்து வருகிறார்கள், ஒரு போர்க் களத்திற்கு சிறுவர் சிறுமிகளை கூட்டி வருவது சரியா?
2. வீரர்கள் அம்பயருடன் அடிக்கடி வாக்குவாதம் செய்கிறார்கள், என்றாவது அம்பயரின் முடிவை மாற்றியிருக்கிறார்களா?
3. பெண்கள் கால்பந்தில் ஜெர்சியை மாற்றிக்கொள்ள தடை உள்ளதா?
4. அணிகளுக்கிடையே ஜெர்சி கலர் வித்தியாசமாக இல்லாவிட்டால், மாற்று அணியினருக்கு அடையாளம் தெரியாமல் பந்தைக் கடத்தி வீடவிவார்கள் தானே?
5. வீரர்கள் அடிக்கடி புல் தடுக்கிக் கீழே விழுகிறார்கள், அல்லது எதிரணி வீரர்கள் காலை வாரி விடுகிறார்கள், இத்தனை முறை கீழே விழுந்தவர்கள் என்ற புள்ளிவிபரம் எடுப்பதில்லை. ஏன்?
6. கால்பந்துக்கு உதைபந்து என்று இன்னொரு பெயர் உள்ளது, சமயம் கிடைக்கும்போதெல்லாம் வீரர்கள் உதைத்துக் கொள்கிறார்கள்! அவர்களுக்கு இன்னொரு பெயர் என்ன?
7. கை தவறிப் பந்தை தவறவிட்ட கோல்கீப்பரின் மேல் அவர் நாட்டு மக்களுக்கு இவ்வளவு வெறுப்பு ஏன்?
8. ஆட்டம் முடியுமுன்பே ஜெர்சியைக் கழற்றுவது அடிக்கடி நடக்கிறது, இதில் சில அம்பயர்களுக்கு ஆட்டம் முடிந்துவிட்டதோ என்று குழப்பம் ஏற்படுவதாகச் சொல்கிறார்கள் உண்மையா?
9. கோல் போட்டவுடன் கொஞ்சநேரம் வீரர்கள் சுதாரித்து நின்று கொள்கிறார்கள் மேலே வந்து விழும் சக ஆட்டக்காரர்களின் உடல் எடை அவர்களுக்குத் தெரிந்திருப்பதால் தான் அவ்வாறு சொல்கிறார்களா?
10. இந்த உலகக் கோப்பையில் ஜப்பானிய வர்ணனையாளர் ‘ரூனி’யை ‘லூணி’ என்று குறிப்பிட்டார். ஆனால் ‘ரொனோல்டா’க்களை எப்படி உச்சரிப்பார்கள்?
11. விளையாட்டை ரசித்துக் கொண்டிருக்கும்போது ரசிகர்கள் உணர்ச்சி வசப்பட்டு பின்னால் ஓங்கித் தட்டிக் கொள்கிறார்கள் பின்னால் தட்டுவதற்கு விசாரணையோ அல்லது தண்டனையோ எதுவுமில்லை ஏன்?
12. இரண்டு கைகளையும் அம்பயரிடம் தூக்கிக் காண்பித்தால் ‘நான் எதுவும் செய்யவில்லை’ என்று அர்த்தமா? இது உலக சைகை மொழி எதிலும் இடம்பெறவில்லை ஏன்?
13. உலகக் கோப்பை நடக்கும்போது உலகம் இரண்டாகப் பிரிகிறது. ஒன்று கால்பந்து உலகம், இன்னொன்று, கால்பந்தில் தகுதி பெறாத உலகம். கால்பந்து உலகத்தில் நாடுகளின் தலைவிதியை ”பால் ஆக்டோபஸ்” கணித்துச் சொல்லி அதன் உயிருக்கு மிரட்டலைக் கேட்டு வாங்கிக் கொள்கிறது, கால்பந்தில் தகுதி பெறாத நாடுகள் வேடிக்கை பார்கின்றன ஏன்?
14. ஜெர்சியை வேண்டா வெறுப்புடன் பெற்றுக்கொண்ட தோற்ற அணி வீரர் ‘இவ்வளவு கெட்டவாசனை’ பிடித்தவன் என்று மற்றவர்களிடம் காண்பிக்க, ஜெர்சியை லாண்டரிக்குப் போடாமல் வைத்திருக்க தகுந்த ஆதாரங்கள் உண்டு என்று சொல்கிறார்களே உண்மையோ?
15. சிங்கப்பூர் மணிக்கிளியின் இறுதியாட்ட முடிவு தோல்வியடைந்ததற்காக மணிக்கிளியின் முதலாளி வருந்தியிருப்பாரா? ஆக்டோபஸ்–உடன் போட்டியிட்டு மணிக்கிளி உலகப்புகழ் அடைந்ததற்கு மகிழ்ந்திருப்பாரா?
16. கடைசியாக நான் ஆதரிக்கும் அணி எப்போதும் தோற்கிறது அல்லது டிரா செய்கிறது. என்ன காரணம்?