கடற்கரை இப்போது அவ்வளவு சுத்தமாக இருக்கிறது. தூரத்தில் ஒன்றிரண்டு கப்பல்கள் எங்கோ போய்க் கொண்டிருக்கின்றன. அலை அடித்து ஒதுங்கும் கடல்பாசிகள் அங்குமிங்கும் சிதறிக் கிடக்கின்றன. 30 வருடங்களுக்கு முன்னால் ஒப்பிலான் கிராமத்து மக்கள் சந்தோசப்படும்போது கடல் கூடவே ஆர்ப்பரித்தது, ஆத்திரம் வரும்போது கூடவே கரைந்தது, வருந்தும் மனம் சாந்தியடையும்போது தன் எழுச்சி மிக்க அலைகளால் ஆசிர்வாதம் செய்தது.
என் ஞாபகப் படுக்கையைப் புரட்டிப்போட்டது சிங்கப்பூரில் 15.08.2010 – ல் நடைபெற்ற வாசகர்வட்டம் வண்ணநிலவனின் ”கடல்புரத்தில்” நாவலும் தி.ஜானகிராமனின் ”அம்மா வந்தாள்” நாவலும் “வாசிப்போம் நேசிப்போம்“ நிகழ்விற்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தது. இரண்டு நாவல்களையுமே அனைவரும் படித்து வந்தது கலந்துரையாடலைக் கலகலப்பாக்கியது.
திரு.கே.ஜே.ரமேஷ் தன் உரையில் வண்ணநிலவனின் ‘ரெய்னிஷ் ஐயர் தெரு‘ படித்தவுடன் அந்தத் தெருவைப் போய் பார்க்க வேண்டும் என்ற உந்துதலில் சென்று ஐயர் தெருவைப் பார்த்தேன், அதுபோல மணப்பாடு ஊரையும் பார்க்கத் தோன்றுகிறது! அவ்வளவு எதார்த்தமாக அந்த ஊரை நம் கண்முன்னே நிறுத்திவிடுகிறார். உறவுகளிடையே கோபம், மனவருத்தம், பகைமை, பொறுமை, நம்பகமின்மை, இன்ன பிற உணர்ச்சிகள் இருந்தாலும் கதை முழுவதும் அடிநாதமாக அன்பு இழையோடிக் கொண்டிருப்பதை உணரமுடிகிறது“ என்று சொன்னார்.
முகவை ராம் மற்றும் திருச்செல்வன் உரைகளும் கடல்புரத்து நாவலைப் படிப்பவர்களின் மனதில் பலகாலத்துக்கு அழுத்தமாக நிற்கக் கூடிய நாவலாகச் சுட்டிக் காட்டினர். “நாளை பிறந்து இன்று வந்தவள் மாதங்கி கதாபாத்திரங்கள் தன்னுடைய சுயத்தை இழந்து வெவ்வேறு நிலைப்பாடுகள் எடுத்திருந்தால் நாவலின் போக்கே திசைமாறியிருக்கும்“ என்று முத்தாய்ப்பு வைத்தார்கள். சித்ரா ரமேஸ் நிகழ்ச்சியை வழிநடத்தினார்.
தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவலை முழுமையாக மறுவாசிப்பு செய்து ஒரு நீண்ட கட்டுரையுடன் வந்தவர் ஜெயந்தி சங்கர். தன்னுடைய மூக்குக் கண்ணாடியை மறந்துவிட்டு வந்ததால் பாண்டித்துரை அந்தக் கட்டுரையை வாசிக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டார். அவருடைய குரல் அந்தக் கட்டுரையின் உணர்வுகளை முனை மழுங்காமல் கூட்டத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தது.
“தி.ஜானகிராமனின் பெண்பாத்திரங்கள் எல்லோருக்குமே காதருகே கேசம் சற்றே அதிகமாக இறங்கியிருக்கும், சருமம் இழுத்துக் கட்டிய மாதிரியும் திகுதிகுவென்று இருக்கும் முக்கிய பெண்பாத்திரங்கள் யாருமே சராசரி தோற்றத்துடன் வருவதில்லை” என்றார். பிறகு ஒரு பாத்திரத்தை உயர்த்தி இன்னொன்றை இறக்குவதால் மாத்திரம் வேறுபாட்டை ஏற்படுத்தி அவர் நினைக்கும் பாத்திர வேறுபாட்டை ஏற்படுத்தி அவர் நினைக்கும் பாத்திர மேன்மையை மேலும் தூக்கிப் பிடிக்கும் உத்தியை ‘செம்பருத்தி’யிலும், ‘மோகமுள்’ளிலும் தி.ஜா. கடைபிடித்திருப்பதாக விளக்கினார்.
‘‘அவர் காலத்தில் புரட்சியாகவும் அதிர்ச்சியாகவும் இருந்திருக்கும் அலங்காரத்தம்மாள் பாத்திரம் இக்காலத்தில் அதேபோன்ற தாக்கத்தைக் கொணருமா என்றால் சந்தேகம்தான்” என்று சொல்லி, மிகமுக்கியமாக ஜெயந்தி சங்கர் இந்நாவலில் தற்காலத்துக்கு பொருந்தாத மதிப்பீடுகளாகத் தோன்றும் திருமணம், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு, மறுமணம் போன்றவற்றைக் குறித்து இன்றைக்கு இருக்கும் கருத்தோட்டங்களைச் சுட்டிக்காட்டி ‘அம்மா வந்தா’ளை புரட்டிப்போட்டார்.
இந்துவுக்கு அப்புவைப் பிடிக்கிறதா?
“திருமணம் செய்துகொள்ளட்டுமே, திருமணம் வேண்டும் என்றால் வேண்டும். சரி, வேண்டாம் எனில் வேண்டாம். அதற்கேன் பவானி அம்மாளுக்கு இத்தனை குழப்பங்கள், அதேபோல் அலங்காரம் பேசாமல் தண்டபாணியை விவாகரத்து செய்துவிடலாமே? எதற்கு அவளுக்கு இந்த இரட்டை வாழ்க்கை. இதென்ன பெரியவிசயமா எனக்கேட்டு நகர்ந்துவிடும் புதிய சமுதாயத்தில் நாம் இருக்கிறோம்” என்பதைச் சொல்லி அவையை சிறப்பான விவாதத்திற்கு இட்டுச்சென்றார்.
நிகழ்வை வழிநடத்திய சித்ரா ரமேஷ், வண்ணநிலவன், ‘கடல்புரத்தில்’ பிரியமானவர்களுக்கு எழுதப்பட்ட பிரிவுக்கதை என்றார்.
மனதில் அன்பிருந்தால் பேசுகிற சொற்கள் மந்திரம் போலாகும். பாஷை தேவபாஷையாகத்தான் தோன்றும், கொலை செய்தார்கள். ஸ்நேகிதனையே வஞ்சித்தார்கள், மனைவி புருசனுக்குத் துரோகம் நினைத்தாள். ஆனால் எல்லோரிடமும் பிரியமாக இருக்கவும் தெரிந்திருக்கிறது. கதைக்களம். கதை சொல்லப்பட்ட மொழி, கதையின் எளிமை, “மரபுகளை மீறிய கதையின் முடிவு“ இவற்றைச் சுட்டிக் காட்டினார்.
என் பால்ய நினைவுகளில் ஒன்றிப்போன கடற்கரையும் வண்ணநிலவனின் அந்த பாஷையையும் குறிப்பிட்டுப் பேசினேன். கரைவலையில் பாடுவைப்பது தண்டோரா போடுவதை ”சத்தம்போடுவது” என்று சொல்வது, பறவர் வழக்கில் இஸ்லாமியர்கள் தண்டல்காரரை ”சம்மாட்டிகள்” என்றழைப்பது எல்லோருக்கும் பொதுவான ”பண்டியல்கள்.“
உயிரோசை.com
வாசகர் வட்டம் (சிங்கப்பூர்)