செப்ரெம்பர், 2010 க்கான தொகுப்பு

நாட்குறிப்பு எழுதுவது அந்தரங்கமானது ஆனால் ஆபத்தானதும் கூட ஏனெனில் அதை யாராவது படித்துவிட்டால்… என்ற பயம் இருந்து கொண்டேயிருக்கும் எனக்கு ஒரு வித்தியாசமான பழக்கம் சிறுவயதிலிருந்தே தொத்திக் கொண்டது நாட்குறிப்பு எழுதுவதோடு அதில் முக்கியமான நிகழ்வுகள் அனுபவங்களை சிவப்பு மையால் அடிக்கோடிட்டு “ஹைலைட்” பண்ணுவது அத்தோடு இன்னொரு 10 வருடங்களுக்கு பிறகு அந்த நிகழ்வுகளில் ஏற்படப் போகும் மாற்றங்களை கற்பனையாக கிறுக்கி வைப்பது இந்தப் பழக்கம் என் பள்ளி சரித்திர ஆசிரியர் ஆரம்பித்து வைத்தது இன்னும் தொடர்கிறது…

நாமெல்லாம் காலம் என்ற நதியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம், இறந்த காலம் பின்னால் இருக்கிறது எதிர் காலம் முன்னால் நிற்கிறது இறந்தகாலத்தை முன்னே ஓட்டிவிட்டு பின்னர் வரும் எதிர்காலத்தை இப்போதே கணித்து கற்பனை செய்யும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று அடிக்கடி சொல்வார்.  கால வெள்ளத்தை அவ்வப்போது பத்திகளாக்கிய என் நாட்குறிப்புக்களை எடுத்துப் பார்த்ததில் புத்தகங்கள் மூன்று கரையுள்ள ஆறு என்று தேவதச்சன் சொல்வாரே அதைவிட நாட்குறிப்புக்களில் எத்தனை கரைகள் இருந்திருக்கின்றன கற்பனையையும் தாண்டி என்னவெல்லாம் நடந்து முடிந்திருக்கின்றன.  1980 களுக்குப் பிறகு நாட்குறிப்புக்களுக்கு மவுசு குறைந்துவிட்டது பேஸ்புக்கும் இ-டைரியும் காப்பி பேஸ்ட் பண்ணி உண்மையான பதிவு உணர்வுகளை மறக்கடித்துவிட்டது.  1980க்கு முன்னால் என்                நாட்குறிப்பில் பதிவாகிய சிலவற்றையும் 2009ல் அவைகள் தந்த அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

04-10-1978
என் சரித்திர ஆசிரியர் திரு.பாலகுருசாமியும் அப்போதைய புத்தாக்க இயக்குநர் மகேந்திரனும் நண்பர்கள் ஸ்டுடன்ஸ் இன்று அவரவர் டைரிகளில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் இந்த பாலகுருசாமி இன்னும் 10 வருடங்களில் டைரக்டர் மகேந்திரனுடன் இணைந்து சினிமா உலகில் பேசப்படும் நபராக இருப்பான்  சிவப்பு மையில் தேதி போட்டு குறித்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார்.

1985 கடந்துவிட்டது அப்படி எதுவும் நடந்து விடவில்லை ஆனால் அவர் ஆசிரியர் வேலையிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.  நான் கல்லூரியில் சேர்ந்தவுடன் விடுதி கலை விழாவுக்கு இயக்குநர் மகேந்திரன் சிறப்பு விருந்தினராக அழைத்து வருவதற்கு ஓர் அறிமுகக் கடிதம் கொடுத்தார்.  நானும் நண்பர் அன்வர் மரைக்காயரும் சென்னையில் இயக்குநர் மகேந்திரன் வீட்டை கண்டுபிடித்து கதவைத் தட்டினோம் ஆனாhல் அவர் வெளியூர் சென்றிருப்பதாகச் சொன்னார்கள் பக்கத்தில் நடிகை லட்சுமி வீடு அவர் வீட்டில் இருந்தார் மகேந்திரன் வருவதற்கு இன்னும் ஒரு மாதம் ஆகும் என்று சொன்னார் எங்களுக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா பள்ளிமுடித்து வீட்டிற்குள் நுழைந்து ‘சூ’-வைக் கழற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாய் தூக்கி எறிந்தார் அதுவரை என் குறிப்புக்கள் துல்லியமாக இருந்தன.

சிவப்பு மையில் நடிகையின் மகள் நடிகையாவாரா? என்பதை “ஹைலைட்“ பண்ணியிருந்தேன் அது பலித்தது.

கல்லூரியில் நடிகர் நடிகைகளை அழைத்து நிகழ்ச்சி நடத்துவதைவிட புதிய இயக்குநர்கள், கவிஞர்களை அழைத்து வருவதற்கு வரவேற்பு ஆரம்பித்த காலம் அது.  நாங்கள் இயக்குநரை முயற்சித்து இயலவில்லை கவிஞர் கண்ணதாசனை கல்லூரிக்கு அழைத்து வர முடிவு செய்தோம்.

கண்ணதாசனை கூட்டி வருவதற்கு நேரே சென்றுவிடாதீர்கள் எனது நண்பர் கவி கா.மு.ஷரிப்பை சந்தித்து அவரிடம் ஒரு அறிமுகக் கடிதம் வாங்கிச் செல்லுங்கள் என்றார் எங்கள் விடுதிக் காப்பாளரும் தமிழ்துறைத் தலைவர் புலவர் நெயினார் முஹம்மது.

கவிஞர் கா.மு. ஷரிப் வீட்டைத் தேடிப்பிடித்து உள்ளே நுழைந்தோம் முன் வராண்டாவில் கை பம்பில் தண்ணீர் அடித்துக் குடத்தில் நிரம்பியவுடன் குளியலறைக்கு உள்ளே செல்வதும் வருவதுமாக குளித்துக் கொண்டிருந்தார் கவி ரத்னம், கவிச் செல்வம் கவிக்குரிசில், கவிராயர் கவி நாயகம், கவிதை ஞானி செந்தமிழ்ச் செல்வர் என்ற பட்டங்களை பெற்றவர் வாழ் நாட்களில் பாரதி, பாரதிதாசன் மரபில் உலவி தமிழ் மரபு இஸ்லாமிய மரபு இரண்டையும் சிறப்பித்தக் கவிஞன் வெகு இயல்பாக கொஞ்சம் எனக்காக காத்திருங்கள் என்றார்.  (அவருடைய பட்டங்கள் திரு.ஜெ.எம். சாலி எழுத்துக் குறிப்புக்களிலிருந்து என் நாட்குறிப்பில் மறு பயனீடு செய்யப்பட்டவை).

“சினிமா நடிகர், நடிகைகளைத்தானே கல்லூரி விழாவுக்கு அழைப்பீர்கள் வித்தியாசமாக கவிஞரை அழைக்க வந்திருக்கிறீர்கள்?’’   ‘’எனக்கு. கவிதைகளில் விருப்பம் அதிகம்’’ என்று நான்தான் வாய் திறந்தேன் நண்பர் அன்வர் மரைக்காயர் அன்றைய தினம் ரிலிஸான சினிமாவை பார்க்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தார் எங்கே ஒரு மரபுக் கவிதை சொல்லுங்கள் பார்க்கலாம் என்றார். “ எழுதிய கவிதைகளில் யாப்பு தளை எல்லாம் பிரித்துச் சொல்ல முடியும் ஆனால் தானாக இன்னும் எழுதவரவில்லை என்றேன்.  நல்ல வேளை அத்தோடு என்னுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார் ஒரு நீண்ட அறிமுகக் கடிதம் எழுதி கண்ணதாசன் உதவியாளரிடம் கொடுக்கச் சொன்னார். சிவப்பு மையில் ஒரு செய்யுள் எழுதி கவி.கா.மு.விடம் பாராட்டுப் பெற வேண்டும் என்பது என் அன்றைய பதிவு.மரபுக் கவிதைக்கும் புதுக் கவிதைக்கும் பொது நிகழ்ச்சிகளில் உரசலாக இருந்த 1980 காலகட்டம் மு. மேத்தா செல்லும் இடங்களிலெல்லாம் மாணவர்களின் உள்ளங்களில் பவனிவர ஆரம்பித்த காலம்.

 இலக்கணம் செங்கோல்
 யாப்பு சிம்மாசனம்
 எதுகைப் பல்லாக்கு
 தனி மொழிச் சேனை
 பண்டித பவனி
 இவை எதுவுமில்லாத
 கருத்துக்கள் தம்மைத் தாமே
 ஆளக் கற்றுக் கொண்ட புதிய
 மக்களாட்சி முறையே புதுக் கவிதை.

என்ற பழக்கத்தில் அன்றைய வயதும் இளமையும் மயங்கிக் கிடந்தது நான் கவி.கா.மு.ஷரிப் அவர்களை சந்தித்தபோது அவர்கள் வள்ளல் சீதக்காதி வரலாற்று நூலை எழுதிக் கொண்டிருந்தார்கள்.

என் மரபுக் கவிதை முயற்சிகளெல்லாம் வெற்றிபெறவில்லை 1994 ல் கவிஞர்  காலமாகிவிட்டார்கள்.

Oct 1978
மாணவர்கள் அந்தந்த காலக் கட்டங்களில் உயரிய மனிதர்களிடம் முன்னுரிமை பெறத் தவறுவதில்லை, எங்களுக்கு முன்னால் பார்க்கக் காத்துக் கிடந்தவர்களை அமரச் சொல்லிவிட்டு எங்களை வந்து பார்த்தார் கவியரசு தோளோடு தோள் என்னை அனைத்துக் கொண்டார் எப்போதுமே அவர் பாடல்களை முணுமுணுத்த வண்ணமிருந்தார், அப்போது  அவர் அரசவைக் கவிஞராக இருந்தார் வீனாக செலவு வேண்டாம் அரசுக் காரிலேயே திருச்சி வருவதாகச் சொல்லிவிட்டார் உங்கள் கல்லூரியின் ஸ்தாபகர் பற்றி நான் ஒரு கவிதை பாடியிருக்கிறேன் தெரியுமா? என்றார். கண்ணப்பா “இன்னும்போ“ ‘இன்னும்போ” என்று குறிப்புப் புத்தகத்தை புரட்டச் சொல்லிக் கொண்டிருந்தவர் அந்தப் பாடலைப் பார்த்தவுடன் தானே ஒருமுறை படித்துவிட்டு எங்களிடம் தந்தார்கள் அதை நான் என் நாட்குறிப்பேட்டில் விறு விறுவென்று எழுதினேன்.

“சேர்த்துக் காத்து செலவு செய்கின்றதோர்
         ஆக்க வழியை அறிந்தவர் வள்ளல்
 ஜமால் முஹம்மது தழிழ் மக்களின்
        கல்விப் பசிக்கு கனிகள் கொடுத்தவர்
 ஊரணிபோல் உலகம் முழுவதும்
        உண்ணக் கிடைப்பது உயர்ந்தோர் செல்வம்”

அப்போது அவர் அரசவைக் கவிஞராக இருந்தார் கல்லூரியின் விடுதி விழாவிற்கு வர சம்மதித்தது எங்களுக்கு மகிழ்ச்சியாகவும் இன்னொரு பக்கம் எனக்கு ஆச்சரியமாகவும் இருந்தது அதற்கான அடையாளம் நான் அவரைக் கவிதா ஓட்டலில் தங்கவைத்து விட்டுத் திரும்பும்போது தெரிந்து கொண்டேன். அவர் அப்போது யேசு காவியம் எழுதி முடிக்கும் தருவாயில் இருந்தார்.  அடுத்து திருகுர்ஆனை மொழியாக்கம் செய்யும் எண்ணத்தில் முஸ்லிம் அறிஞர்களிடையே கருத்துக்களை கேட்டுக் கொண்டிருந்தார் அதற்கான வாய்ப்பாக அந்த விழாவை பயன்படுத்திக் கொண்டார், அவரை சந்தித்து உரையாடி மகிழ்ந்த நாட்கள் அனைத்தும் என் நாட்குறிப்பில் சிவப்பு மை கோடிடப்பட்டு இன்னும் மறையாமல் இருக்கின்றன.  கவிஞரும் தன்னுடைய நாட்குறிப்பில் யேசு காவியத்துக்கு பிறகு திருக்குர்ஆன் வசனங்களை மொழியாக்கம் செய்வதென்று ஹைலைட் செய்து கொண்டு விடாப்பிடியாக இருந்தார் என்பது அந்த நாட்களில் அவர் திருச்சியில் சந்தித்த முக்கிய பிரமுகர்கள் மூலம் தெரிந்து கொண்டேன், அவர் ஆரம்பித்து தொடர முடியாமல் விட்டு போன செய்திகளை சாயபு மரைக்காயர் அவரைப்பற்றித் தொகுத்த குறிப்புக்களிலிருந்து என் நாட்குறிப்பில் பதிய வைத்தேன்.

திருக்குர்ஆனின் முதல் அத்தியாயம்

‘அல்பாத்திஹா’ அல்லது தோற்றுவால் என்றழைக்கப்படும் இறைவனின் அருமை பெருமைகளை எடுத்துரைக்கும் இந்த அத்தியாயம் அரபு மொழியில் ஏழு வசனங்களைக் கொண்டதாக இருக்கிறது.

 அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமின்
 அர்ரஹ்மான் நிர் ரஹிம்
 மாலிக்கி யவ்மித்தீன்
 இல்யாக்க நஹ்மது வ இல்லாக்க நஸ்தகீன்
 இஹ்தி நஸ் ஸிராத்துல் முஸ்தகீம்
 ஸிராத்தல்லதீன அன் அம்த அலைஹிம் ஹைரில்
 மஹ் லீது அலைஹீம் வலன் ஸல்லின்

 25 அரபி சொற்களில் அமைந்துள்ள இந்த ஏழு வசனங்களையும் மனனம் செய்யாத முஸ்லிம்களே உலகில் இல்லை.

 அல்பாத்திஹா எனப்படும் இதன் அரபி மூலத்தை தமிழாக்கமாக்கி கவியரசர் கண்ணதாசன் ‘திறப்பு’ என்ற தலைப்பில் மொழியாக்கமாக தந்துள்ளார்.

திறப்பு-
 எல்லையில்லா அருளாளன்
  இணையில்லா அன்புடையோன்
 அல்லாவைத் துணை கொண்டு
  ஆரம்பம் செய்கின்றேன்

 உலகமெல்லாம் காக்கின்ற
  உயர் தலைவன் அல்லாவே
 தோன்று புகழ் அனைத்திற்கும்
  சொந்தமென நிற்பவனாம்
 
 அவன் அருளாளன்
  அன்புடையோன்
 நீதித் திருநாளின்
  நிலையான பெருந்தலைவன்’’

மொழியாக்கத்திலுள்ள இனிமையும், எளிமையும் முஸ்லிம் அறிஞர்களிடையே வரவேற்பை பெற்றாலும் அவர் தனி மனித ஒழுக்கத்தில் குடிக்கு அடிமையாக இருந்ததால் எதிர்ப்புக் கிளம்பியது அதன்பிறகு மேலும் அவர் தொடராமல் சென்றுவிட்டார்-

Sep- 1979
 தி.மு.க மாணவர் சேர்ப்புத் திட்டத்தில் கலந்து கொள்ள நானும் என் நண்பர் ராகாமுஹம்மதுவும் சென்றிருந்தோம் கலைஞரும், பேராசிரியரும் உள்ளே நுழைந்தவுடன் கல்லூரி வாரியாக கணக்கெடுத்தார்கள்.

 கலைஞர் கூட்டத்தை ஒருமுறை நோட்டமிட்டார் எல்லோரும் குறிப்பேடு பேனா கொண்டு வந்திருக்கிறீர்;களா? என்றார்இ பாதிப் பேருக்கு மேல் குறிப்பேடு கொண்டு வரவில்லை, பேனா மீதிப்பேரிடம் இல்லை.  “இது நாடகமோ, கலைக் காட்சியோ, சினிமாவோ அல்ல பணி மாணவர் பயிற்சிப்பட்டறை குறிப்பேடு இல்லாதவர்கள் வெளியில் சென்று வாங்கி வாருங்கள் என்றார்.

 கறாராக சொல்லி விட்டார், பேராசிரியர் அவரை அமைதிப்படுத்திவிட்டுக் கூட்டத்தை தொடர்ந்தார்.  சிவப்பு மையில் 10 வருடங்களில் பேராசிரியர் தனிக்கட்சி அல்லது கட்சி மாறுவார் என்று எழுதியிருந்தேன்.

 அப்படி எதுவும் நடக்கவில்லை இருவரும் தோழமையுடன் இன்றும் தொடர்கிறார்கள்.

Aug-2009
அனுபவங்களின் சுவைகள் எல்லையற்றவை வாழ்க்கை மாறும் தோறும் வண்ணங்கள் மாறுகின்றன. பள்ளிப் பருவத்தில் நம் முன்னே காட்சியளித்த பாவாடை தாவணி இப்போது அரைக் கிழவியாக நிற்கும்போது அனுபவத்தின் விசித்திரம்தான் என்ன!

காகிதத்தின் மீது நான் பதிவு செய்தவை வயதாகிவிட்டதே ஒழிய அந்தந்த காலங்களில் எப்படியெல்லாம் கிளர்ச்சியுறச் செய்தன என்ற நினைப்பு, எட்டுப் புறமும் எல்லைகள் கடந்து ஓடுவது எல்லோருக்கும் என்றும் ஏற்படும் அனுபவம்தான்.

போதுமான வாழ்க்கை அனுபவங்களும் பொதுவான உலக ஞானமும் பிரித்து அறிவதற்கு வாய்ப்புத் தரும் கல்வியுமுள்ள பொறுப்புணர்வு கொண்ட ஒரு தலைமுறை இப்போது உருவாகி வருகிறது. அந்தத் தலைமுறையின் “ஸ்டெர்ய்ட் டைம்ஸில் “ ஒரு கட்டுரை படித்தேன் சிங்கப்பூர் தேசிய தினத்தில் 10-08-2059-ல் என்னென்ன சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கும் என்ற கற்பனை இது கிட்டத்தட்ட என்னுடைய சிவப்புமை நாட்குறிப்பு போன்றே சுவாரஸ்யமாக இருந்தது.

1. நிலவுக்குச் செல்லும் முதல் சலுகை விமானக் 
  கட்டணம் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
  அறிவித்திருக்கும்.
2. ஒரு ‘A” ஸ்டார் விஞ்ஞானி சுற்றுச் சூழலில் முதல் நோபல் பரிசை வென்றிருப்பார்.
3. 6 அந்நிய மொழிகளில் முதுநிலைப்பட்டத்தை அறிமுகப்படுத்தி சிங்கப்பூர் பல்கலைக்கழகம் கின்னஸ் சாதனை புரிந்திருக்கும்.
4. குளோனிங் மூலம் பிறந்த ஆமெங் III மனிதக் குரங்கு பொதுவான மொழியில் ஐந்து நிமிடங்கள் ஐரோப்பியருடன் உரையாடல் நிகழ்த்தியிருக்கும்.

 இப்படியே புனைவாக சாதனைகள்    தொடர்கின்றன எனக்கு இவைகள்         அ-புனைவாகத் தோன்றுகின்றன- ஆழமான வேர்களைக் கொண்டிருப்பதால்தான் சிங்கப்பூர் விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.  இவையெல்லாம் சாத்தியமானவைகள்தான் எட்டக்கூடிய கனிகள்தான் எழுதும் பழக்கத்தையே கிட்டத்தட்ட கைவிட்டு விட்ட இளைய தலைமுறை சிங்கப்பூரின் அடுத்த 50 ஆண்டுகால தொடக்கத்தை ஓட ஆரம்பிக்கும் முன்பாக கடந்த 50 ஆண்டுகளின் பாதைகளில் பயணித்து வந்தவர்களின் அனுபவங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அநேகமாக அவர்களிடம் சிவப்பு கோடிட்ட பக்கங்கள் கொண்ட நாட்குறிப்புக்கள் இருக்குமென்றே நம்புகிறேன்.

நன்றி: நாம் காலண்டிதழ்

ஓவியம்: உமாபதி

முரட்டுமனக் குதிரையை எளிதில் கொன்றுவிடலாம்
ஆனால் அதைக் கட்டுக்குள் கொண்டுவந்து
காரியம் நிகழ்த்துவதற்கு
இந்த விழித்திருப்பவரின் இரவுதான்
பயிற்சி கொடுக்கிறது…
நடு நிலையை அசைத்துப் பார்க்கும்
மயக்கும் தேவைகள்
மண்டியிட வைக்கும் இச்சைகள்
உள்ளத்தை குலைக்கும் உணர்வுகள்
இவைகள் பசியால் பாடம் படித்து
பச்சிளம் குழந்தையாய் பண்பாடு காக்கின்றன
பலவீனமான சுயத்திற்கு
இங்குதான் பரிட்சை வைக்கப்படுகின்றது
அதி ருசிகளை பழகிய நாவு அடக்கி ஆளப்படுகின்றது
தாகத்தின் சுவையும் பசியின் புரிதலும்
நாவுகளுக்கு இங்குதான் அறிமுகமாகின்றன
பசியின் ஆழ்கடல்  அரன்சூடி நிற்கிறது
பட்டினி ஆயுதத்தால் பாவங்கள் அழிக்கப்படுகின்றன
இந்த உணவு மேஜையில் அச்சம் கோபம் பொறாமை என்று
வெந்து முடிந்த பதார்த்தங்களும்
கருகிப்போன ஆசைகளுக்கும்
நீராவியாகவிட்ட நம்பிக்கைகளுக்கும்
இடமில்லாமல் போகிறது
அறிவுக்கும் ஆன்மாவுக்கும்
வேகைவைத்த கூட்டு வறுத்த
சகிப்புத் தன்மைகள் சரிபாதியாய் பரிமாறப்படுகின்றன
நன்மைகள் அதிநன்மைகள் அடைகின்றன
தீமைகள் சம்மமட்டி அடி அடிக்கப்பட்டு
தட்டி நிமிர்த்த்து நன்மை பக்கமாய் நகர்த்தி வைக்கப்படுகின்றது
ஓங்கிக் சாத்தப்பட்ட நகரத்தின் கதவுகள்
ஆள் அரவமற்று அநாதையாய் நிற்கின்றன
உடைந்த பானையிலிருந்து ஒழுகிக் கொண்டிருக்கும்
இந்த ஆயுளை அர்த்தமாக்கிக்கொள்ள
இந்த பூக்காத மலர் சுரக்கும் தேனுக்காக
நெரிசலில் காத்திருக்கும் மனிதக்கூட்டம்
இன்னும் நீண்டு கொண்டேயிருக்கிறது

ஈத் முபாரக்….

நன்றி: ஒலி 96.8