எங்கள் இருவருக்கும் எதுவுமே தெரியாது
என்றாலும் நான் பரவாயில்லை
அவன் தெரியாமல் தெரிந்ததாகச் சொல்கிறான்
நான் தெரியாமல் தெரியவில்லை என்று சொல்கிறேன்
‘சாக்ரடிஸ்’
என்ற வாசகம் பிரேம் போட்டு மேசையில் வைக்கப்பட்டிருந்தது. பக்கத்தில் சோமர்செட் மாம் சிறுகதைத் தொகுப்பு. கம்பேனி பாஸ் இலக்கிய ஆர்வலராகத்தான் இருப்பார் என்பதை இந்த அடையாளங்கள் சொல்லாமல் சொல்லின.
சிறிது நேரம் கழித்து முண்டா பனியனுடன் பெர்முடாஸ் போட்டுக் கொண்டு சீன பாஸ் வந்து உட்கார்ந்தார். வேலை, சம்பளம் என்று அவருக்குத் தெரிந்த தமிழ் வார்த்தைகள் அத்தனையும் சொன்னார். ஆனால், அவர் பேசிய ‘சிங்கிலிஷ்’ என்னைப் பாடாய்ப் படுத்தி விட்டது. ‘சார், சார்’ என்று அத்தனை ‘சார்’ போட வேண்டியதில்லை. ‘ I am Mr.Tan, Call me ‘Mr.Tan’ என்று சொல்லிவிட்டு, can (or) not? என்றார்.
எஸ் ஆர் நோ என்று சொல்லக் கிட்டத்தட்ட சந்தர்ப்பங்கள் அமைந்தாலும், கேன் ஆர் நாட் என்றுதான் அவர் அடிக்கடி சொன்னார். தவணையில் பொருட்கள் வாங்கிப் பணம் திருப்பிக் கட்டாதவர்களை லிஸ்ட் எடுத்துத் தினமும் ஃபோன் அடிக்க வேண்டும். ( வீட்டுக்கு சாயம் அடிப்பது, ஜே.பிக்குச் சென்று எண்ணெய் அடிப்பது மாதிரி). பெரும்பாலும் மலாய்க்காரர்களிடம் பேச வேண்டியிருந்தது. என்னுடைய ‘சிலாங்’ வாடிக்கையாளர்களைப் பாடாய்ப்படுத்துகிறது என்பதை மிஸ்டர் டானுக்கு அடிக்கடி வரும் தொலைபேசி அழைப்புகள் காட்டிக் கொடுத்தன.
மிஸ்டர் டான் அறைக்குக் கூப்பிட்டு, ‘ Hey, don’t use big big words. Can use small words or not?’ என்றார். நம்மால் இவரிடம் தாக்குப் பிடிக்க முடியாது என்று முடிவு செய்து, நண்பர் ஹாகாலைப் பார்க்கச் சென்றேன். அவர்தான் இந்த வேலைக்கு ஏற்பாடு செய்தவர். அவர் ரொம்ப பிராக்டிகல் ஆசாமி. ‘ இரண்டு புக்ஸ் வாங்கித் தருகிறேன். ஒருவாரம் உட்கார்ந்து படித்துவிட்டு அப்புறம் வேலைக்குச் செல்’ என்றார்.
அந்த இரண்டு புத்தகங்கள், ‘சில்வியா பெக் சூ’ Eh Goondu(1982) எழுதிய இன்னொன்று Lagi Goondu (1986). இவர்தான் ‘சிங்கிலிஷ்’ற்கு ‘punctuation mark’ இலக்கண, இலக்கியமெல்லாம் வரையறுத்தவர்.
Three-க்கு tree
Birth Certificate-க்கு birff certificate
Next-க்கு Ness
இப்படிப் பல.
முக்கியமாக ‘அல்லாம்மா’ என்பது ஒரு போர்ச்சுக்கீசிய வார்த்தை. அது இதில் எப்படிப் புகுந்தது என்று தெரியவில்லை. அந்தவாரம் நான் படித்து அறிந்ததை விட டி.வி நிகழ்ச்சிகளும் நன்றாக சிங்கிலிஷ் கற்றுக் கொடுத்தன. Phua Chu Kang-ல் யூஸ் யுவர் பிளைன் என்று கேட்டுக் கேட்டு, அது என்ன வார்த்தை என்று குழம்பிக் போயிருந்தேன். கடைசியில்தான் தெரிந்தது, அது – யூஸ் யுவர் பிரைன்!
‘குட் மார்னிங் சார்’ என்றொரு நாடகம். அதில்தான் ‘அய்யோ’ என்ற வார்த்தை சீனர்களிடையே பரவியது என்பது உங்களுக்குத் தெரியுமா? ‘அது என்ன Eh Goondu? ‘ என்று பலபேரைக் கேட்டேன். Goondu என்றால், தமிழில் ‘இடியட்’ என்று யாரோ தவறாக அர்த்தம் சொன்னதால் வந்த தலைப்பு அது.
அரசாங்கம் ‘சிங்கிலிஷ்’ஐ கவனமாகக் கண்காணித்து வருவதற்கு ஒரு உதாரணம், சமீபத்தில் Talking Cock என்ற படத்திற்கு NC-17 ரேட்டிங் சான்றிதழ் கொடுத்தது. இது வன்முறைக் காட்சிக்கோ, ஆபாசத்திற்கோ கொடுக்கப்பட்டதல்ல. அதிகமாகச் சிங்கிலிஷ் வார்த்தைகள் இருந்ததால் கொடுத்தது!
SGEM இன்னும் தீவிரமடைந்திருக்கிறது. ‘சிங்கிலிஷ்’ ‘சிங்கைத் தமிழ்’ மாதிரி மொழிப் பிறழ்வுகள் பல நாடுகளில் நடந்திருக்கின்றன. ஒரு மக்கள் குழுவில் பேசப்படும் மொழியின் வகை அதே மொழியின் பிறவகைகளில் இருந்து சொல்லமைப்பு, இலக்கணம் மற்றும் உச்சரிப்பு ஆகியவற்றில் மாறுபட்டதாக அமைந்திருக்கும். இது பொதுவாக இட அடிப்படையிலும், ஒரே மொழி பேசும் மக்களின் குடிமக்களுக்கிடையே சமூக அரசியல் அல்லது பொருளாதாரத் தாக்கங்களின் காரணமாகவும் இவை உருவாகின்றன. வட்டார வழக்குகள் அல்லது பேச்சு வழக்குகள் ஒன்றுக்கொன்று புரிந்து கொள்ள முடியாத நிலைக்குப் போகும்போது, அவை தமது நிலையின் தனிப்பட்ட மொழியாகின்றன. லத்தீன் மொழியின் பல்வேறு வட்டார வழக்குகளே மாறுபட்ட ரோமானிய மொழிகளாக உருவாகின என்று சொல்வார்கள். எனக்குத் தெரிய வந்தது இது.
மிஸ்டர் டானிடம் பார்த்த வேலை எப்படி ‘பணால்’ ஆனது என்று சொல்லி விடுகிறேன். ‘சிங்கிலிஷ்’ முறையாகப் படித்து, ஒருவாரம் வாடிக்கையாளர்களிடம் நன்றாகப் பேசிக் கொண்டிருந்தேன். திடீரென்று ஒருநாள் மிஸ்டர் டான் தனது அறைக்குக் கூப்பிட்டார். அங்கே இரண்டு மலாய்க்காரப் பெண்கள் அழுது கொண்டிருந்தார்கள்.
மிஸ்டர் டான் என்னைப் பார்த்து, ‘ Boh Liah lah you!’ என்றார். எனக்குப் புரியவில்லை. நடந்தது இதுதான். நான் ஒவ்வொரு வாடிக்கையாளரையும் ஃபோனில் கூப்பிடும்போது, அவர்களுடைய விவரங்களை லெட்ஜரில் பார்த்து தவணைத் தொகையை என்று கட்ட வேண்டுமென்று சரி பார்த்துக் கொள்வேன். ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் பக்கத்தில், ‘Jangan Husband’ ‘Jangan wife’ என்று ஹைலைட் செய்யப்பட்ட வார்த்தைகள் இருந்தன. மலாய் அப்போது தெரியாததால், கண்டு கொள்ளாமல் ஃபோன் செய்து விட்டேன். அதாவது, கணவருக்குத் தெரியாமல் மனைவி பொருள் வாங்கி இருக்கிறார்- Jagan Husband (கணவரிடம் பேசக் கூடாது) மனைவிக்குத் தெரியாமல் பொருள் வாங்கிய கணவர் -Jangan wife (மனைவியிடம் பேசக்கூடாது). மிஸ்டர் டான் கோபத்தை அடக்கிக் கொண்டு அவர்களிடம் jangan மாரா கேட்டார். ஒரு வாரச் சம்பளத்தைக் கொடுத்து என்னை வீட்டுக்கு அனுப்பி விட்டார். அதன் பிறகு சில வருடங்களில் அவர் எனக்கு உற்ற நண்பராகி விட்டார்.
நான் நாணய மாற்று வியாபாரம் செய்தபோது, மிஸ்டர் டானுக்கு என் உதவிகள் தேவைப்பட்டன. அத்துடன் முக்கியமாக, அவர், impressionism, verticism, futurism, cubism, surrealism இவற்றில் இந்தியக் கலாச்சாரம் பற்றி விரிவாகப் பேசுவார். நான் அறிந்த கறாரான மிஸ்டர் டான், புத்தகங்களைப் பற்றி பேசும்போது, ஆளே வித்தியாசகமாகத் தெரிவார்.
ஒருநாள் நான் அவரிடம், ‘Peter Pan Syndrome என்றால் என்ன தெரியுமா..’ என்று கேட்டேன். ‘அது என்ன, புத்தகமா..’ என்றார். இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம், வரலாறு, கலை, இலக்கியம் பற்றியெல்லாம் படித்துவிட்டு, இந்தியன் என்ற கம்பீரத்துடன் வெளிநாடுகளில் குடியேறி, அங்குள்ள கலாச்சாரங்களை உயர்த்திப் பிடிப்பவர்கள் மிகவும் குறைவு. அவர்களைத்தான் Peter Pan Syndrome பாதித்தவர்கள் என்கிறார்கள்’ என்றேன்.
மிஸ்டர் டான் கையிலிருந்த மார்ல்ப்ரோ சிகரெட்டைக் காண்பித்து, ‘ஞாபகமிருக்கிறதா..’ என்றார். எனக்கு ஞாபகம் இருந்தது. அவரிடம் வேலை செய்யும்போது, செவன் லெவனில், hood pack வாங்கி வரச் சொன்னார். நான் விவரம் தெரியாமல், soft pack வாங்கி வந்து கொடுத்து விட்டேன்.
அவருடைய மகன் இந்த வருடம் தேசிய சேவைக்குச் செல்கிறார். அன்று அந்த நாளில் அவர் கூட வர வேண்டுமென்று கூப்பிட்டார்.
காயல் என்பது நதி கடலில் கலக்கும் இடத்துக்கு இடப்பட்ட பெயர். நதியும், கடலும் சேர்ந்தால் காயல் பிறப்பெடுக்கிறது. தனித்துவத் தாவரங்கள், தனித்துவ உயிரினங்களைக் காயல் பெற்றெடுக்கிறது. ஆற்றின் நன்நீரும், கடலின் உப்பு நீரும் சேருவதால் நிகழும் மாயங்கள் இவை.
மிஸ்டர் டான் மலேசியாவில் பிறந்து இங்கு குடியேறியவர். நிறையப் பொதுச் சேவைகள் செய்கிறார். குடியேறிகள் பலருக்கும் வேலை வாய்ப்புக் கொடுக்கிறார். சிறந்த சிங்கப்பூரருக்கு அவரை உதாரணமாகச் சொல்வேன். நதியின் சித்து விளையாட்டில் கொற்கை நன்முத்துகள் பிறக்கின்றன – மிஸ்டர் டான் போல!