கல்லூரியில் எண்ணியல் (Arithemetic) வகுப்புதான் நான் அதிகமாக கட் அடித்தது. ஜமால்முகம்மது கல்லூரி பேராசிரியர் ஜியாவுதின் வகுப்பில் நுழைந்தவுடன் போர்டில் கை வைத்துவிட்டால் விடை எழுதிவிட்டுத்தான் திரும்பிப்பார்ப்பார். சிக்கலான கணக்குகளை அவர் தோற்கடித்து வென்றதுபோல சாக்பீஸ்களை இரண்டிரண்டாக உடைத்து கீழே போட்டுக் கொண்டிருப்பார். அவர் போர்டில் செய்முறை செய்யச் சொல்வதுதான் எனக்கு பெரிய சவாலாக இருக்கும். எப்போதாவது சில நேரங்களில் கொஞ்சமாக சிரிப்பார்.
ஒருநாள் வகுப்பிலுள்ள அனைவரையும் 10 வரையுள்ள எண்களை ஒன்றை நினைத்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு ஒவ்வொரு எண்ணாக குறிப்பிட்டு கையைத் தூக்கச் சொல்லி சரிபார்த்தார்.
01, 03, 04, என்று எண்களை யாரும் நினைவில் கொள்ளவில்லை, ஆக அதிகமாக நம்பர் 7 ஐ அதிகம் பேர் நினைத்திருந்தார்கள். ஒரே ஒரு மாணவன் 0 வை நினைத்திருந்தான். பேராசிரியர் அன்று சிரித்தபடி வகுப்பில் எண்களின் வரலாற்றையும் அதன் பண்புகளையும் பற்றிக் கொடுத்த லெக்சர் அவரை நினைவு கொள்ள வைக்கின்றன. விடை சரிதானா என்று ப்ளாக்போர்டின் முன்பு நாம் தடுமாறி நிற்கும்போது ஒரே ஒரு குளு கொடுப்பார். அது ஒரு Fibonacci நம்பர் என்று சொல்லிவிடுவார். 0,1,2,3,5,8,13 இந்த Fibonacc நம்பரை வைத்து கட்டிடக்கலை நுட்பங்கள் பல தோன்றிவிட்டன. ஆனால் என்னிடம் யாராவது மைல் கணக்கை கிலோமீட்டரில் கேட்டால் மட்டும் ஒரு நொடியில் சொல்லி எனக்கு Fibonacc சூத்திரம் தெரியும் என்று காட்டிக்கொள்வேன். பலநூறு ஆண்டுகளாக தீர்க்கப்படாத கொள்கை என்று ஒன்றிருந்தால் அது எண் கொள்கையாகத்தான் இருக்க முடியும் என்று சொல்வார்.
ஒரு 10 பேரிடம் நீங்கள் ஒரு நம்பர் சொல்ல கேளுங்கள், அதிகம் பேர் 7 ஐக் குறிப்பிடுவார்கள். 7 ஒரு அதிசயமான எண். அதனால்தான் ஏழு அதிசயங்கள், ஏழு நிறங்கள், கண்ணுக்குத் தெரியக்கூடிய ஏழு கண்டங்கள், ஏழு தலைமுறைகள், ஏழு ஸ்வரங்கள் எஸ்ரா கூட குழந்தைகள் புத்தகத்திற்கு ஏழு தலை நகரம் என்றுதான் பெயர் வைத்திருக்கிறார்.
Mr.ஞானசேகர் பக்கத்து புளோக்கில் குடியிருக்கிறார், அவரை Mr.சேகா என்றுதான் கூப்பிடுவார்கள். ஞானம், ர் சீனர்கள் வாயில் நுழையாததால் அவருடைய பெயர் அப்படி சுருங்கிவிட்டது. நீண்ட காலமாக டாக்ஸி ஓட்டுகிறார், சிங்கப்பூரில் அவருக்குத் தெரியாத இடங்களில்லை. அநேக நாட்களில் காலையில் வீட்டிலிருந்து கடைக்கு அவர்தான் கூட்டிச்செல்வார். ஹெண்டர்சனிலிருந்து CTE யில் புகுந்து அப்பர் சிராங்கூனில் வெளியேறி 20 நிமிடங்களில் கொண்டு சேர்த்துவிடுவார், அவர் ஒரு கணக்குப்புலி. பயணிகள் டாக்ஸியில் ஏறும்போது இடத்தைச் சொன்னவுடன் தூரத்தைக் கணக்கிட்டு ஹைவேயில் சென்றால் என்ன தொகை வரும் சிட்டிக்குள் புகுந்து Jam இல்லாமல் பயணித்தால் என்ன தொகைவரும் என்று துல்லியமாக சொல்லிவிடுவார். கிட்ட தட்ட அந்த தொகைக்குவந்து நிற்கும்போது என்ன ok வா என்று அவர் கணக்குத் திறமையை அவரோ அங்கீகரித்துக்கொள்வார். வாழ்வின் அனைத்து சம்பவங்களும் எண்களோடு தொடர்பு உள்ளன என்று அழுத்தமாக நம்புவார், அவ்வவ்போது பயணிகளுக்கு நியூமரலாஜி டிப்ஸ் கொடுத்துக் கொள்வார் பெரும்பாலும் அது 4D (அதிஷ்டக்குலுக்கல்) எடுப்பதில் போய் முடியும்.
அவரைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அசோகமித்ரன் எண்கள் சிறுகதை நினைவுக்கு வந்துவிடும். காலையில் 7 மணிக்கு எழுந்து பக்கத்துகடையில் தினசரிகள் படிக்க முயன்று ஒவ்வொரு தடவையும் யாராவது படித்துக் கொண்டிருப்பார்கள். 8 குடித்தனங்கள் உள்ள வீட்டில் காலைக் கடன்களை முடித்து வேலைக்குப் போவதற்கு முன்பு மற்ற காரியங்கள் சரிந்து விழும் அபாயத்தில் தினசரிகளை படிப்பதையே விட்டுவிடும் கதாநாயகன் போல Mr..செகாவும் 7 மணிக்கு படுக்கையிலிருந்து எழ நேரமாகிவிட்டால் டாக்ஸி ஓட்டமாட்டார். அடுத்தடுத்த வேலைகளை கணக்கிட்டு எந்த வேலையும் செய்யாமல் விட்டிலிருந்து விடுவார் மனைவி கூட இருந்தால்தான் அவரிடம் சுறுசுறுப்பை பார்க்கமுடிகிறது என்பேன். மற்ற வீடுகளைப்போல் நினைக்காதீர்கள் என் வீட்டில் நான்தான் நம்பர் சத்து, மனைவி வெறும் கோஸம் தான் என்பார். ஆனால் அந்த கோஸம் (0) இருந்தால் இயல் எண் ஒன்று முழு எண் பத்தாக ஆகும் என்று புளோக்கில் அனைவருக்கும் தெரியும்.
புதிய இடங்களுக்கு வற்புறுத்திக் கூப்பிடுவார். மரினா ஸ்கைபார்க் திறந்த அன்று என்னையும் கூட்டிச் சென்று கார் நிறுத்த Lot கிடைக்காமல் மனிதர் அல்லாடி விட்டார். உலகின் தலைசிறந்த நினைவுச் சின்னங்களும் கட்டிடங்களும் சென்ற நூற்றாண்டுகளில் மதத்தை பரப்பவும், ஆள்பவர்களின் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கும் உருவாக்கப்பட்டன. தற்போது நவீன யுகத்தில் கலாச்சாரத்தைப் பரப்புவதற்கும் வர்த்தக வளர்ச்சிக்கும் எழுப்பப்படுகின்றன. நவீன கட்டிடக் கலையின் வளர்ச்சியை ஒரு சமூகவியல் நிகழ்வாக கருதுகின்றனர். பிற அழகியல் துறைகளை ஓவியம் சிற்பம் போன்றவற்றுடன் கட்டிடக் கலை நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தபோதும் மனிதர்கள் உள்ளேயும் சென்று பயன்படுத்தும் தன்மையை தனித்துவமாகக் கொண்டுள்ளன. உலகில் ஆக அதிக உஉயரமுள்ள கட்டிடமாக 1999ல் துபாயின் Barj-al-arab சுமார் 821 மீட்டர். .
தைபேயின் தைபோ 101 சுமார் 501 மீட்டர் உயரமுள்ளது. தெற்காசியாவில் மலேசியாவின் இரட்டைக் கோபுரங்கள் தவிர அதிக உயரமான கட்டிடங்கள் எதுவுமில்லை. குறிப்பாக இந்தியாவில் மும்பையிலும், கல்கத்தாவிலும் சில உயரமான கட்டிடங்கள் தவிர வேறு மாநிலங்களில் பெயர் சொல்லும் உயர்ந்த கட்டிடங்கள் இல்லை.
சிங்கப்பூரில் சமீபத்தில் கட்டப்பட்டுள்ள ஸ்கைபார்க் கட்டிடம் ஒரு பொறியியல் அதிசயம் என்று சொல்லலாம். சுமார் 200மீட்டர் உயரத்தில் ஈபில் டவரை படுக்கைவசத்தில் வைத்ததுபோல நீளத்தில் சுமார் 4 1/2 மடங்கு A 380 ஜெட் விமானத்திற்கு ஈடானது. சுமார் 124000 சதுர மீட்டர் பரப்பளவில் ஒரே நேரத்தில் 3900 உள்ளே செல்லமுடியும். மின்னலைத் தாங்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள Cantilever உலகில் ஆக நீளமானது என்று சொல்கிறார்கள். Mr.சேகா அண்ணாந்து பார்த்துக் கொண்டே இந்த 200 மீட்டர் உயர் கணக்குக்கு கீழே உள்ள தண்ணீரின் ஆழத்தையும் சேர்த்து கணக்கிட்டதா என்றார். அவர் மாதிரியே எனக்கு இன்னம் பல விசயங்களில் சந்தேகங்கள் இருக்கின்றன.
ஒரு நாள் துலாங் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது பல்லில் குத்தி விட்டது. பல் வலி வந்தால்தான் பல் டாக்டர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தேடச் சொல்கிறது. ஒரு வழியாக முன்பதிவு செய்து டாக்டரை பார்த்தால் அவர் ஆண்டி பயாடிக்ஸ் 7 நாட்களுக்கு எடுத்துக் கொள்ளுங்கள் சரியாகிவிடும் என்றார் அது ஏன் 6 நாட்கள் 8, 9 நாட்கள் என்று டாக்டர்கள் கூறுவதில்லை. இந்த 7 நாட்கள் கிருமிகளுக்கு தவணை கொடுக்கிறார்களா அல்லது ஒரு கிருமியை கொல்ல 7 நாட்கள் என்று ஏதாவது கால அட்டவணை உள்ளதா?
கிமு 321ல் ரோமானிய அரசர் கான்ஸ்டாண்டின் (Constantic) ஒருவாரத்தை 8 நாளிலிருந்து 7 நாட்கள் போதும் என்று உலக காலண்டரை மாற்றி அமைத்தார். அப்படியெனில் அவருக்கும் இப்போதுள்ள 7 நாட்கள் கணக்கு தெரிந்திருக்குமோ? சமீபத்திய ஒரு மருத்துவ ஆய்வு சாதாரண வலி காய்சலுக்கு 7 நாட்கள் மருந்து எடுத்துக்கொள்ளச் சொல்வது மருத்துவ ஆராய்ச்சிகளின் படி நிருப்பிக்கப்படாத ஒன்று என்று தெரிவித்திருக்கிறார்கள். அப்படியானால் ஒருநாள் கூடுதலாக சாப்பிடும் லட்சக்கணக்கான மக்களுக்கு உடலின் எதிர்ப்புசக்தி சூப்பர்பக்கை எதிர் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படாதா? இன்னொன்று நோயாளிகளின் நிலைமையை 24 மணி நேரம் கழித்துதான் சொல்லமுடியும் என்று சொல்கிறார்கள். அது பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக் கொள்வதற்கான நேரமா, இல்லை நோயாளிகள் மருந்துக்கு தாக்குப்பிடிக்கக் கூடிய நேர அளவா?
பங்கு சந்தைகளில் முதலீடு செய்தவர்களுக்கு முதல்நாள் குறியீடு எண் 9.99 இருந்தால் அநேகமாக 10.01 க்கோ அல்லது அதற்குமேலோ ஏறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால் பெரும்பாலும் 10.03க்கு முதல்நாள் குறியீடு இருந்தால் அது அதற்கு மேல் ஏறுவதற்கு பகீரதப் பிரயத்னம் செய்ய வேண்டியிருக்கும். செருப்புக் கடைகளில் 19.95 வெள்ளி செருப்பு விலை சும்மா 0.05 சில்லிங் குறைத்துப் போட்டு விளையாட்டுக் காண்ப்பிக்கிறார்கள் என்று தெரியும். இருந்தாலும் 20.50க்கு செருப்பை நாம் வாங்குவதை விட 19.95 செருப்பைத்தான் வாங்குகிறோம். முக்கியமான இன்னொன்று யாரையாவது சந்திக்க நேரம் கொடுக்கும் போது 9.30க்கு சந்திக்கிறேன் 10.30க்கு சந்திக்கிறேன் என்று சொல்கிறோம். 9.32க்கு சந்திக்கிறேன் 10.26க்கு சந்திக்கிறேன் என்று சொன்னதுண்டா? இவைகளைல்லாம்தான் எண்களின் சித்து விளையாட்டாக இருக்குமோ?
Mr.சேகாவிடம் இந்தவாரம் உங்களைப்பற்றிதான் எழுதப்போகிறேன் என்று சொன்னேன் வயதைமட்டும் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அத்தோடு ஸ்பெக்ட்ரம் முறைகேடுகளில் எத்தனையோ ஆயிரம் கோடி என்று சொன்னீர்களே அதை மில்லியனில் சொல்லுங்கள் என்றார். எதற்கு கேட்கிறீர்கள் என்றேன் கோஸமெல்லாம் போக நாலு நம்பர் வருமில்லையா! இன்று ஞாயிற்றுக்கிழமை சின்னது 10 வெள்ளி, பெரியது 10வெள்ளி வைத்து அழுத்தலாம் என்றிருக்கிறேன். பரிசு விழுந்தால் ஊரில் ஒருலட்சம் கடன் இருக்கிறது அடைத்துவிடலாம் என்றார்.
thanks: உயிரோசை.Com ஏழாம் பொருத்தம்
http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3753
©அப்துல்காதர் ஷாநவாஸ்
shaaanavas@gmail.com