சிங்கப்பூர் கிளிஷே – 3

Posted: திசெம்பர் 10, 2010 in பத்தி
குறிச்சொற்கள்:

“வாழ்க்கை என்பது
ஏராளமான நிகழ்வுகள்
அலுப்புணர்வுகளால்
பின்னப்பட்ட ஒன்றாகும்.
நினைவில் அலுப்புணர்வு
மறந்துபோய் நிகழ்வுகள் மட்டும்
நிலைத்திருக்கின்றன’
 
– கவிஞர் டாம் மொரைஸ்

நாங்கள் செய்த நாணய மாற்று வியாபாரம், கம்பிகளுக்குள் உட்கார்ந்து ‘வெள்ளி’ எண்ணிக் கொடுப்பதல்ல. காலையில் கடை திறந்ததும், கரன்சிக்களின் அன்றைய விலைக் குறியீட்டு மதிப்பை ஆர்கேடுக்கு ஃபோன் செய்து வாங்கி வைத்துக் கொள்வோம் (அப்போது எல்லாக் கடைகளிலும் இண்டெர்நெட் வசதி கிடையாது). வாடிக்கையாளர்கள் கரன்சி விலை விசாரித்து ஃபோன் அடிப்பார்கள். 12 மணிக்குள் பேரத்தை வித்துக் கொண்டு தேவைப்படும் கரன்சிகள் வாங்க ஆர்கேட் போவேன். நான்தான் கேரியர், டெலிவரிமேன், கேங்கர் எல்லாம். இரண்டு சட்டை பாக்கெட், நான்கு பேண்ட் பாக்கெட்களையும் சேர்த்து ஆறு பாக்கெட்டுகளிலும் கரன்சிகள். தனித்தனியே பில்போட்டு எடுத்துக் கொள்வேன். சிலநேரங்களில் கப்பலில் இருந்து ஆர்டர் வரும். ஆறு மணிக்கெல்லாம் டெலிவரி நடந்து விடும்.

இந்த வியாபாரத்தில் பல வாடிக்கையாளர்கள் இருந்தாலும், இரண்டு முக்கியமான வாடிக்கையாளர்களைப் பற்றி உங்களிடம் சொல்ல வேண்டும். ஒருவர் மிஸ்டர் ஹொசிமோட்டோ. PSA பில்டிங்கில் தோஷிபா கம்பனியில் வேலை பார்த்தவர். சிங்கப்பூரில் குடியேறியவர். ஜப்பானிய ‘யென்’னில் சம்பளம் வாங்குபவர். அவரிடம் ஒரு யென்னுக்கு 2 காசு கமிஷன் வைப்பதற்குள், ‘போதும், போதும்’ என்றாகிவிடும். அத்தோடு நான் அவருக்கு யென் கொண்டுபோய்க் கொடுக்கும் போதெல்லாம், அவரைப் பார்த்தவுடன், 1942 ஜப்பான் kempeitai போலீஸிடம் அகப்பட்ட மிஸ்டர் யூ கியான் சாங் நினைவு வந்து விடும். அவருடைய பேட்டியை எல்லோரும் படித்திருப்போம். அப்போது அவருக்கு 20 வயது. ஒன்பது பேரைப் பிடித்துக் கொண்ட ஜப்பானியர்கள், அவர்களை வரிசையாக நிற்க வைத்து ‘பாராங்’ கத்தியால் வெட்டினார்கள். கடைசியில் நின்ற இவர் கழுத்தில் வெட்டு ஆழமாக விழாமல் தப்பித்து, இன்று 4 பேரக் குழந்தைகளுடன் (வயது 92) ஆரோக்கியமாக இருக்கிறார். மிஸ்டர் ஹொஷிமோட்டோ அதில் சம்பந்தமில்லாதவர். ஆனாலும் அந்த நினைவு வந்துவிடும். அத்தோடு எனக்கு அவரிடம் பிடிக்காத ஒரு குணம், ‘யென்’ எண்ணிக் கொடுத்துவிட்டு, சிங்கப்பூர் வெள்ளியை வாங்கும்போது, ‘நிஹான் சிபான்’ என்று சொல்லுவார். கட்டை விரலை வேறு தம் பிடித்துக் காண்பிப்பார். ஆர்தர் என்று ஒரு சீன நண்பர் கீழே உள்ள பேங்கில் வேலை பார்த்தார். அவரிடம் ஹொஷிமோட்டோ சொன்ன வார்த்தையைச் சொல்லி அர்த்தம் கேட்டேன். அவர் சொன்னார், ‘ஜப்பான் இஸ் த பெஸ்ட்’ என்று அர்த்தம். நீங்கள் அவரிடம், சிங்கப்பூர் இச்சிபாங் என்று சீன மொழியில் சொல்லுங்கள். அத்தோடு ‘யென்’ மதிப்புக் குறையும்போது அப்படிச் சொல்கிறாரா என்று கவனித்துக் கொள்ளுங்கள். அப்படிச் சொல்லாவிட்டால், ‘யென்’தான் ஜப்பான் என்று நினைத்துக் கொள்கிறார். அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.’ என்றார். ஆர்தர் சொன்னது மாதிரித்தான் நடந்தது. நான் ‘சிங்கப்பூர் இச்சிபாங்’ என்று மனப்பாடம் செய்து வைத்திருந்தேன். அதைச் சொல்லச் சந்தர்ப்பம் அமையவில்லை. மிஸ்டர் ஹொஷிமோட்டோவைப் பற்றிய என் நினைவுகள் இத்தோடு முடியவில்லை. மேடம் வசந்தி, கிம்மோ பள்ளித் தமிழாசிரியை. என் பிள்ளைகள் அவரிடம்தான் தமிழ் படித்தார்கள். பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்குச் சிங்கப்பூரில் எத்தனையோ இடங்கள் இருக்கும்போது, தன் பிள்ளைகளின் பிறந்தநாளை முதியோர் இல்லத்தில்தான் கொண்டாடுவார். நாணய மாற்று வியாபாரத்தை விட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு தெலுக் பிளாங்கா முதியோர் இல்லத்தில் மேடம் வசந்தியின் மகன் பிறந்தநாளுக்குச் சென்றிருந்தேன். ஒரு பெரியவர், ‘உங்கள் பிரியாணி நன்றாக இருக்கிறது’ என்று சொல்லி என் கையை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தார். திடீரென்று, ‘மணிச்சேஞ்சர், மணிச்சேஞ்சர்’ என்று குரல் கேட்டுத் திரும்பினேன். மிஸ்டர் ஹொஷிமோட்டோ, ஓர் இந்திய முதியவரைப் படிக்கட்டுகளின் வழியாகக் கையைப் பிடித்துக் கூட்டி வந்து கொண்டிருந்தார். சடாரென்று எனக்குள்ளிருந்த ‘திரை’ விலகி, ஹொஷிமோட்டோ பளிச்சென்று காட்சியளித்தார். நான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையைப் பற்றி விசாரித்தார். மாதம் ஒருமுறை முதியோர் இல்லம் வந்து விடுவாராம்.எனக்கு இப்போது அவரிடம் பேசிக் கொண்டிருப்பது மிகவும் பிடித்தது. நான் அவரிடமிருந்து விடைபெறும்போது, ‘நிஷான் சிபான்’ என்றேன். அவர் சிரித்துக் கொண்டே, ‘ யென் விலை இப்போது ஏற்றமாக இருக்கிறதா..’ என்றார்.

அடுத்தவர் மிஸ்டர் ரகுநாதன். மெக்கானிக்கல் எஞ்சினியர். மோட்டார் பாகங்களில் வெளியாகும் ஈயக் கழிவுகள் ஆராய்ச்சி பிரிவில் வேலை பார்த்தார். அவருக்குப் பச்சையில் சம்பளம் (யு.எஸ் டாலர்). அதிகம் பேசமாட்டார். அவருக்கு டோர் டெலிவரி செய்ய வேண்டும். ஹவ்காங்கில் குடியிருந்தார். அலெக்ஸாண்டிரா ரோட்டிலிருந்து வியர்க்க விறுவிறுக்க, வெள்ளி கொண்டு வந்து கொடுத்தால், மெயின் கேட்டைத் திறக்காமல், கதவைப் பாதி திறந்து கொண்டு வாங்குவார். வெள்ளியை எண்ணி வாங்கிக்கொண்டு படாரென்று கதவை மூடி விடுவார். ஒருநாள் அவர் கதவை அப்படி மூடுவதற்குள், ‘ மிஸ்டர் ரகுநாதன், நீங்கள் south paw-வா..’ என்று கேட்டேன். கொஞ்சம் தயங்கிக் கதவை முழுவதும் திறந்து கொண்டு என்னிடம், ‘எப்படிக் கண்டு பிடித்தீர்கள்..; என்றார். ‘வெள்ளியை யாரும் இடது கையால் வாங்க மாட்டார்கள் உங்களுக்கு இடது கைதான்முதலில் நீள்கிறது. நம் பிரதமர், கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர், பில்கேட்ஸ் கூட இடது கை பழக்கம் உள்ளவர்கள்தான்’ என்றேன். என் பேச்சில் கொஞ்சம் விஷயம் இருப்பதாக நினைத்துக் கொண்டார். கடைக்குப் போன் அடிக்கும் போது, ஷானவாஸைக் கூப்பிடுங்கள் என்று சொல்ல ஆரம்பித்தார். அடிக்கடி அவர் ‘ஐ வாண்ட் டு பர்சேஸ்’ என்று சொல்வார். ‘நீங்கள் இப்படிப் பெரிய வார்த்தைகளைப் போட்டால் நான் லாரியில்தான் கொண்டு வந்து தரவேண்டும்’ என்பேன். பர்சேஸுக்கு அதுதானே அர்த்தம்! ஒருநாள் இரவு எட்டு மணி இருக்கும் எனக்குப் போன் அடித்தார். ‘ஷானவாஸ், ஒரு ஹெல்ப். உடனே என் வீட்டுற்கு வரமுடியுமா’ என்றார். அவர் குரலில் ஏகப் பதற்றம். விஷயம் ஒன்றுமில்லை. புளோக் கீழே விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்திருக்கிறார். யாருடனும் பழகாததால், இவரை அந்த ஏரியாவில் யாருக்கும் தெரியவில்லை. அதானால் அந்த பிள்ளைகளின் தந்தை போலீஸுக்குப் போன் அடித்து விட்டார். நான் போனபோது பிரச்சனை ஓய்ந்து விட்டிருந்தது. அவரை ஆர்.சி சேர்மேனிடம் அறிமுகம் செய்து வைத்தேன்.

மணிசேஞ்ச் கவுண்டருடன் பிஸ்கேட், சிகரெட், புத்தகங்கள், சாப்ட் டிரிங்க்ஸ் விற்பனையும் உண்டு. அவ்வப்போது பகுதிநேரமாகப் பள்ளிவிடுமுறை காலத்தில் மாணவர்களை வேலைக்குச் சேர்த்துக் கொள்வோம். அப்படி வந்து சேர்ந்த பையன் ரனீத்தீன் கொஞ்ச நாட்களே வேலை பார்த்தான். ஏரியாவைக் கலக்கி விட்டான். வாரம் ஒருமுறை வரும் 8 Days பத்திரிக்கையை வாங்க வரிசை பிடித்து நிற்பார்கள். பெண் வாடிக்கையாளர்களை ஓடி ஓடிக் கவனிப்பான். 1996-ல் பேஜர்தான் லேட்டஸ்ட்! PSA -யில் வேலை பார்க்கும் பெண் அடிக்கடி அவனுக்கு பேஜ் செய்ய ஆரம்பித்தது. கடை போனில்தான் பேசுவான். என்னை ஓரக்கண்ணால் அடிக்கடி பார்த்துக் கொள்வான். ஒருநாள் போன் பேசும்போது, No France, Itally, Itally என்றான். எதற்கு பிரான்ஸ் இட்டாலி என்கிறாய் என்றேன். அந்தப் பெண் எக்சேஞ்ச் ரேட் கேட்பதாகச் சொன்னான். எனக்கு சந்தேகம் வந்து விட்டது. இதையே பலநாட்கள் போனில் பேசிக் கொண்டிருந்தான். பிரான்ஸ், இத்தாலி என்று கரண்ஸிகள் இல்லை. பிரான்ஸ் கரன்சியை ‘பிரான்க்’ என்பார்கள். இத்தாலி கரன்சியை ‘லிரா’ என்பார்கள். இவன் விலை சொல்லவில்லை என்று தெரிந்து ஒருநாள் இருக்குப்பிடி போட்டவுடன், சொன்னான். இதுதான் அந்த அர்த்தம் FRANCE – Friendship Remains And Never Can End ITALY – I Trust And Love You எப்படியெல்லாம் ரூட் கண்டுபிடிக்கிறார்கள்.

அப்புறம் இன்னொரு கேரக்டர். மீடியாவில் வேலை பார்த்து, கட்டாய ஓய்வில் வெளியில் வந்து கே என்பவர் செக்கியூரிட்டியாக வேலை பார்த்தார். அவருடைய வேலை நேரம் எங்கள் கடையில்தான் கழியும். தினமும் பச்சை விலை விசாரிப்பார். ஆனால், ஒருநாள் கூட அவர் பச்சையை மாற்றியதே இல்லை. கரன்சி வரலாற்றைக் கரைத்துக் குடித்தவர். ஏசுநாதர் நாணய வியாபாரிகளினால் சர்ச்சை விட்டு வெளியேற்றியதிலிருந்து ஜூலியஸ் சீசரைக் கொல்லச் சதி செய்தவர்கள் நாணய வியாபாரிகள் என்பதுவரை எங்களுக்கு இதைப் பற்றிய செய்திகள் ஏதாவது எங்களுக்குத் தெரிகிறாதா என்று ஆழம் பார்ப்பார். அதன்பிறகு நான் அவரைப் பார்த்தவுடன் முந்திக் கொண்டு, ‘Economy boom and bust, recession, depression, business cycle’ என்று பேச ஆரம்பித்தவுடன் கொஞ்சம் அடங்கிப் போனார். பணம் எண்ணிக் கொண்டிருக்கும்போது ஒருநாள் சொன்னார், ‘பணம் சந்தோஷம் தராது, சந்தோஷம் பணம் தராது’ என்று மார்க்ஸ் சொல்லியிருக்கிறார் என்றார். நான் கரன்சியைக் காண்பித்து, ‘பணம், பணம் தரும்’ என்றேன்! என்றாவது ஒருநாள் பர்ஸைத் திறந்து பச்சையை மாற்றுவார் என்று எதிர்பார்த்தேன். அந்த நிகழ்வு நடக்கவேயில்லை. இதெல்லாம் கதையா அல்லது நடந்தவையா என்று யோசிக்காதீர்கள்.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் அனுபவங்கள் மிகக் குறைவாக இருந்தாலும், இலக்கியமும், வாசிப்பும், ஒரு வாழ்க்கையைப் பற்பல வாழ்க்கையாக வாழும் வாய்ப்பை அளிக்கிறது. வாழ்க்கையின் நல்ல நிகழ்வுகளை அசை போடுவதன் மூலம் இன்னும் விரிவாக நிகழ்த்திக் கொள்ள வழி செய்கிறது.

thanks: http://www.thangameen.com/ContentDetails.aspx?tid=122

பின்னூட்டங்கள்
 1. துளசி கோபால் சொல்கிறார்:

  இன்னிக்குத்தான் தற்செயலா உங்க பதிவு பார்த்தேன்.

  அருமை. எப்படி இவ்வளவு நாட்கள் பார்க்காமல் இருந்தேன்னு தெரியலை:(

  இருங்க மற்ற இடுகைகளை எல்லாம் படிச்சுட்டு வர்றேன்.

 2. pandiammalsivamyam சொல்கிறார்:

  துளசிகோபால் எனக்கு முந்திகொண்டுவிட்டார் (11-09-2010)”அவர் இருங்க மற்ற இடுகைகளை எல்லாம் படித்துவிட்டு வருகிறேன்” என்று வரு உறுதி (பயம் காட்டுதல்) சொல்லிச் சென்றுள்ளார். “ஆசை அன்பு இழைகளினாலே ,நேசம் என்ற
  தறியினில் நெசவு நெய்தது வாழ்கை” சினிமாப்பாடல். மறுபிறவி எடுத்த சீனர் யூ -கியான் சாங், முதியோர் இல்லத்தில் தம் பிறந்த நாளைக் கொண்டாடும் மேடம்-வசந்தி, கிம்மோ, ஹொசிமோட்டோ,south paw-ரகுநாதன்,மிஸ்டர் K,சொன்ன மார்க்ஸ்
  தத்துவம்”பணம் சந்தோஷம் தராது,சந்தோஷம் பணம் தராது”என்பதும்,நீங்கள்-சொன்ன “பணம் பணம் தரும்” என்பதும் சிந்திக்கவைப்பவை.
  Business cycle has given you such a vast and great experience
  ITALY ! ITALY ! நிஹான் ஷிங்கபோரு!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s