ஜெட் லாக் அனுபவங்கள்

Posted: திசெம்பர் 14, 2010 in உயிர்மை, பத்தி, uyirmmai.com

நண்பர் ஜலால் அடிக்கடி விமானப் பயணம் செய்பவர். இருந்தாலும் அவர் அமெரிக்கா போகிறேன் என்று சொன்னவுடன் அவர் பயணத் திட்டத்தைப் பற்றி அறிந்துகொள்ளும் திரில்லான ஆர்வம் எனக்குத் தொற்றிக்கொண்டது. நாள் நெருங்க நெருங்க அவர் மறந்திருந்தாலும் பயண ஏற்பாடுகளைப் பற்றிக் கேட்டுக் கொண்டேயிருந்தேன். தொடர்ந்து 18 மணிநேரம் பயணம். சிங்கப்பூரிலிருந்து ஜப்பானுக்குச் சென்று டிரான்ஸிட் பிளைட் எடுத்து லாஸ் ஏன்ஜெல்ஸ், பிறகு லாஸ் வேகாஸ்க்கு உள்நாட்டு விமானத்தைப் பிடிக்கவேண்டும். அதனால் அவருக்கு ஜெட்லாக் (Jet lag) ஜெட் தளர்ச்சி வந்துவிடுமோ என்று பயம். அவர் ஒரு பிராக்டிகலான ஆசாமி. இரண்டுநாட்கள் உடம்பை அதற்கேற்றவாறு தயார் செய்ய ஆரம்பித்தார். மஸாஜ், பிசியோதெரபி என்று புகுந்துவிட்டார்.

இந்த ஜெட்லாக் என்பது ஒரு கால மண்டலத்திலிருந்து இன்னொன்றுக்குச் செல்லும்போது ஏற்படும் உயிரியல் ஒருங்கமைப்பு விசயம். இரவு, பகல் சுழற்சிக்கேற்ப இசைவடையாமல் உடம்பு எதிர்கொள்ளும் காலதாமதத்தால் ஏற்படும் சோர்வு என்கிறார்கள். அத்துடன் தற்போது விமான நிலையப் பாதுகாப்பு சோதனைகளைக் கடப்பதற்கு டிராவல் எக்ஸ்பர்ட் கன்ஸல்டன்ஸ் வந்துவிட்டார்கள். சிக்காகோ சென்று கொண்டிருந்த விமானத்தில் நைஜீரியர் உள்ளாடைக்குள் வெடிமருந்து வைத்த நிகழ்விற்குப் பிறகு பயணிகளிடம் உள்ளாடைக்குள்ளும் நுழைந்து சோதனை செய்வதற்குப் பாதுகாப்பு விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளனவாம். நீங்கள் கைபடாமல் பாதுகாப்பு சோதனையிலிருந்து வெளியேற சட்டையில் உலோகத்திலான பித்தான்கள், பெண்கள் உள்ளாடைகளின் ஓரத்தில் வயர் இல்லாமலும் உடை அணிந்து கொள்வது உத்தமம்.

விமானப் பயணிகள் திரில்லிங்காகவும் குதூகலமாகவும் இருந்த காலங்கள் மலையேறிவிட்டன. சிங்கப்பூரிலிருந்து ஊருக்கு வருபவர்களை மாதக்கணக்காக பயணம் எப்போது வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கும் பழக்கம் பழசாகிவிட்டது. அதேபோல் விமானப் பயணங்களுக்கென்று பிரத்யேக உடைகள் அணிவதும் குறைந்துகொண்டே வருகிறது. சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் பாதிக்கு மேல் இப்போது பெர்முடாஸில் விமானம் ஏறுகிறார்கள். சென்னையில் ரியல் எஸ்டேட் செய்துகொண்டிருக்கும் சிங்கப்பூர் நண்பர் ஏர்போர்ட்டில் இறங்கியவுடன் ஜாக்கிங் செல்ல ஏதுவாக ஜாக்கிங் கேன்வாசுடன் இங்கிருந்து விமானம் ஏறுவதாகச் சொன்னார். ஜெட்லாக்கை சமாளிக்க சிலர் மெலமைன் மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறார்கள். அதற்கு மாற்றாக இது light தெரபி என்றார் (நிறைய பயண அனுபவமுள்ளவர். சரியாகத்தான் இருக்குமோ).

1963ல் ‘VIP’ என்று ஒரு ஹாலிவுட் படத்தில் ரிச்சர்ட் பர்ட்டனும், எலிசபெத் டெய்லரும் லண்டன் ஏர்போர்ட்டில் விமானம் கோளாறாகிக் காத்திருக்கும் கதையே அந்தக் காலத்தில் பெரிய ஹிட் கொடுத்ததாம்.

1970களில் ‘ஏர்போர்ட்’, ‘ஏர்போர்ட் 75’, ‘ஏர்போர்ட் 77’, ‘கன்கார்டு 79’ என்று வரிசையாக வந்து திரில்லிங் கொடுத்தன. 2005ல் ‘தி டெர்மினேட்டர்’ மற்றும் கொரியப்படம் ‘ரெட் ஐ’, ‘ஸ்நேக்ஸ் ஆன் தி பிளேன்’ படங்களோடு விமானக் கடத்தல் மற்றும் அனுபவங்களை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் குறைந்துவிட்டன.விதவிதமான கதைகளைச் சொல்லி தீவிரவாதிகளுக்கு இவர்கள்தான் கதைத் தீனி போடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

நடிகர் சுருளிராஜன் 1980ல் அவர் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால் நடிகர் விஜயனுடன் தாமன்ஜீராங்கில் உள்ள என் தந்தையார் கடைக்கு வந்தபோது சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் கொடுத்த டாடி பெர்ப்யூம் மற்றும் விஸ்கி சாப்பாடு பற்றி சென்னை திரும்பும்வரை சிலாகித்துப் பேசிக்கொண்டே இருந்தாராம்.அப்படிக் கொடுப்பதெல்லாம் முடிவுக்கு வந்துவிட்டன. பட்ஜெட் ஏர்லைன்ஸ்களில் வெறும் ஆம்லெட்டை மட்டும் வைத்து மதிய உணவு கொடுக்கிறார்கள். சமீபத்தில் ஓர் ஆய்வில் ஜெட் இன்ஜின் சப்தம் சுவை நரம்புகளை மழுங்கடிக்கச் செய்வதால் பறந்து கொண்டிருக்கும்போது நாக்கின் ருசி பற்றி வாயைத் திறக்காதீர்கள் என்கிறார்கள்.

 தாய்லாந்து புக்கெட் தீவுகளுக்குச் சென்றுவிட்டு சில்க் ஏர் விமானத்தில் சிங்கப்பூர் திரும்பும்போது குளிர்தாங்காமல் என் நண்பர் K ஓவர் கோட் போட்டுக்கொண்டு வந்தார். செக்யூரிட்டி செக்கில் நிறுத்தி கோட்டைக் கழற்றச் சொன்னார்கள். அப்படியெல்லாம் கழற்ற முடியாது என்கிற மாதிரி நின்று கொண்டிருந்தவரை ரூமுக்குள் நெட்டித் தள்ளிக் கொண்டு சென்று திரும்ப கொண்டுவந்துவிட்டார்கள். கோட்டைக் கழற்ற வேண்டியதுதானே என்று கேட்டோம். உள்ளே ஸ்லீவ்லெஸ் மினிகோட் அணிவதற்குப் பதில் முண்டா பணியனைப் போட்டுக்கொண்டு வந்திருக்கிறார்.

மோசமான வானிலை, என்ஜின் கோளாறு என்ற காரணங்கள் 9/11 க்குப் பிறகு பெரிய மாற்றம் கண்டுவிட்டது. கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் லேமனிலிருந்து அனுப்பப்பட்ட Fedex பார்சல் வெடிகுண்டு நிலைமையை இன்னும் மோசமாக்கிவிட்டது. ஓர்லேண்டோ ப்ளோரிடா விமான நிலையத்தில் TSA (Trasnport securtity administration officer) 8 வயது சிறுவனை சட்டையைக் கழற்றி சோதனை செய்திருக்கிறார்கள். விமானத்தில் ஏறுவதற்கு அழகாக டிரஸ் பண்ணிக்கொண்டு வந்திருந்த சிறுவனின் பெற்றோர் அதிர்ந்து விட்டார்களாம். பிள்ளைகளைத் தொட்டு விளையாடுவதற்கு அப்பா அம்மாவுக்கு அடுத்தபடி TSAக்கும் உரிமை உண்டு என்று முக்கிய பாடமாகச் சொல்லி வைக்கலாம். ஆனாலும் சில நேரங்களில் இந்த மாதிரி பாடங்களைத் தீவிரவாதிகள், முன்னாலேயே படித்துத் தேர்ந்துவிடுகிறார்கள்.

சென்ற வருடம் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வந்து திரும்பும்போது நண்பன் சம்சுவும் நானும் பழங்கள் வாங்கி ஆளுக்கு இரண்டு கூடை பேக்செய்தோம். என் கூடைகளில் நெல்லிக்காய், நாவல்பழம், சீத்தாப்பழம் இருந்தன. சம்சு காய்கறிகளை மட்டும் இரண்டு கூடைகளில் பேக் செய்துவிட்டார். சிங்கப்பூர் ஏர்போர்ட்டில் கன்வேயர் பெல்ட்டில் ஒரு கூடை மட்டும் சுற்றிக்கொண்டிருந்தது. எனக்கும் முன்னதாக நண்பர் சென்றுவிட்டார். பயணிகள் வெளியேறும் வரை காத்திருந்து ஏர்போர்ட் லக்கேஜ் டேக்கை கொடுத்துக் கூடை காணாமல்போன விபரங்களைச் சொன்னேன். அப்படி எந்தக் கூடையும் இல்லை என்றார்கள். அடுத்தநாள் வந்தால் கேமரா பார்த்துவிட்டுச் சொல்வதாகச் சொன்னார்கள். அங்கு அதிகமாக மறந்து விட்டுப்போன சமாச்சாரங்களில் லேப்டாப், செல்போன், மூக்குக் கண்ணாடி இவற்றுடன் பல் செட்டுகளும் இருந்தன.

 சமீபத்தில் சிங்கப்பூரில் புகழ்பெற்ற வக்கீல் தீபாவளிக்கு ஸ்வீட் எடுத்து வந்திருக்கிறார், அட்டைப்பெட்டி காணாமல்போய்விட்டது. பெட்டியை அன்றே கண்டுபிடித்துக் கொடுத்துவிட்டார்கள். ஆனால் அதற்குள்ளிருந்த ஸ்வீட்டை யாரோ காலிபண்ணிவிட்டார்கள். விசயம் கோர்ட் படியேறி வெளியே ஒரு தொகை கொடுத்து விமான நிறுவனம் செட்டில் பண்ணியது. வக்கீல் அந்த ஸ்வீட்டான தொகையை சிண்டாவுக்கு (இந்தியர் நலச் சங்கம்) நன்கொடையாகக் கொடுத்துவிட்டார்.

என் பழக்கூடையைப் பத்திரமாக சம்சு எடுத்துப்போய்விட்டான். “அல்லாம்மா, வண்டி வந்துவிட்டது. உன்னை காணோம்லா. உன் கூடையை நான் எடுத்துவந்துவிட்டேன். நெல்லிக்காய் சரியான புளிப்பு” என்றான், நான் சொன்னேன், “தண்ணீர் குடி இனிக்கும்” என்று (எரிச்சலுடன்). சமீபத்தில் ஒரு செய்தி, ஹாங்ஹாங்கில் விமானத்தில் ஏறிய வயதான வெள்ளைக்காரர் வான்கோவரில் இறங்கும்போது சீன இளைஞராக மாறிவிட்டிருந்தாராம் (ஆள் மாறாட்டம்). சிங்கப்பூரர் ஒருவர் தன்னுடைய மகன் கடவுச் சீட்டில் தவறாகப் பயணம் செய்து ஹாங்ஹாங்கில் இறங்கும் போதுதான் கவனித்தாராம், தன்னுடைய பாஸ்போர்ட் வீட்டில் பத்திரமாக இருப்பதை. மேய்ப்பர்கள் இருந்தும் ஏமாற்றிச் செல்லும் ஆடுகள்.

 பட்ஜெட் ஏர்லைனில் பயணம் கொஞ்ச மிஞ்சமிருந்த திரில்லிங்கையும் குறைத்துவிட்டது. Ryan air நின்றுகொண்டே பயணம் செய்யும் வகையில் விமானங்களை அறிமுகப்படுத்தவிருக்கிறது (குறுகிய தூரங்களுக்கு). கை லக்கேஜ் எங்கே வைத்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. Air Newziland லாஸ் ஏன்ஜெல்ஸ் மற்றும் லண்டன் விமானங்களில் ஜோடிகள் தங்களுடைய இருக்கைகளைப் படுக்கை வசத்தில் மாற்றிக் கொள்ளும் விதமாக (Sky couches ) வரும் ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதில் காலியாக இருக்கும் இருக்கைகளை நிரப்புவதாக நினைத்துக்கொண்டு ஜோடிகளை மாற்றிப் படுக்கவைத்துவிட்டால் விமானப் பயணங்கள் ரொம்ப சுவாரஸ்யமாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன (சும்மா ஒரு கற்பனை). அதுவரை நீங்கள் சீட் பெல்டைக் கட்டிக்கொண்டு இருக்கையில் அமர்ந்து கழிவறைக்கு யாராவது அதுவும் காலைச் சொறிந்து விட்டுச் செல்கிறார்களா என்பதைக் கவனித்துக் கொண்டு பயணம் செய்தால் போதுமானது.

     

thanks:http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3732 

Advertisements
பின்னூட்டங்கள்
  1. haniff சொல்கிறார்:

    Alhamdhulillah seen old memories

  2. pandiammalsivamyam சொல்கிறார்:

    அல்லம்மா! விமானபயணத்தில் இவ்வளவு மர்மங்களா? நெல்லிக்காய் சாப்பிட்டு
    தண்ணீர் குடித்தேன் இனிப்பாக இருந்தது. நானும் ஒரு ஹாண்ட் லக்கேஜ்ஜை தொலைத்துவிட்டு சாங்கி நிலையத்திற்கு சென்றிருக்கிறேன். அதிஷ்டம் என்பக்கம் பையை வீடு தேடிவந்து கொடுத்துப் போனார்கள். வாங்கும் வரையில் திகில் திகில்திக்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s