Private JC Auton 2/19 Infantry Battalion 20 Jan 1942 – Age 27
“His duty fearlessly and nobly don ever remembered”
”நர்ஸ் ரூபி மார்க்கெரட் புருக்ஸ் கேம்பிரிட்ஜ் வயது 23 பிரிட்டிஷ் செஞ்சிலுவை சங்கத்தின் உறுப்பினர்”
கிராஞ்சியிலுள்ள இந்த கல்லறைகளை கடந்து நடக்கும் போது கல்லறைகளின் அடியில் இருப்புக் கொள்ளாமல் சவப்பெட்டியில் முடங்கியிருக்கும் ஆவிகள் பல கதைகளை தன்னுள் வைத்துக் கொண்டு முடிவில்லாமல் சவப்பெட்டியில் கதவைத் தட்டிக் கொண்டு தன் கதைகளை எழுதுவதற்கும் கதையில் கதாபாத்திரங்களாக உருமாறித் தன் நினைவுகளை மீள் உருச் செய்து கொள்ள பூமியின் நிலப்பரப்பில் பறக்கும் காகிதங்களைத் தேடி தஞ்சம் அடைவதற்கு எத்தனிக்கின்றனவோ என்று எண்ணத் தூண்டும்.
சிங்கப்பூரில் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி யாராவது என்னிடம் கேட்கும்போது பறவைப் பூங்காவையும், கிராஞ்சி கல்லறைத் தோட்டத்தையும் சொல்வேன். இங்குள்ள சுமார் 4500 கல்லறைகள் காமன் வெல்த் கல்லறை அமைப்பின் கண்காணிப்பில் அமைக்கப்பட்டது. சாங்கி மற்றும் சிங்கப்பூரின் பல பகுதிகளிலிருந்தும் அடக்கம் செய்யப்பட்ட உடல்கள் மீட்டெடுக்கப்பட்டு இங்கு மறு அடக்கம்
செய்துள்ளார்கள். முறையான இடம் விட்டு அமைக்கப்பட்டுள்ள கல்லறைகளின் நடுவே அவர்களுடைய ரெஜிமெண்ட் குறிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சுமார் 850 கல்லறைகள் அடையாளம் காணப்படாதவை என்று குறித்துள்ளார்கள்.
நிலப்பற்றாக்குறையும் மக்கள் வாழ்விடங்களை அமைக்க வேண்டியும் 1985ல் சுமார் 20 வருடங்களுக்கு முந்தைய 21 கல்லறைகளிலுள்ள 120,000 அடக்கம் செய்யப்பட்ட உடல்களைத் தோண்டி எடுத்து முஸ்லிம்கள் யூதர்கள் தவிர மற்ற இனத்தவர்களின் உடல் மிச்சங்கள் எரியூட்டப்பட்டன. 1820 ஆம் ஆண்டு முதலே இதுமாதிரியான மறு அடக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
110 வருடங்களுக்கு முன்பு ஒருலட்சம் சீனக் கல்லறைகள் பீஷான் பகுதியில் இருந்தன. இவைகள் 1870-களில் பிரிட்ஷாரிடமிருந்து சீனர்களால் மொத்தமாகக் குத்தகைக்கு வாங்கப்பட்டு கல்லறைகளுக்குப் பயன்படுத்தப்பட்டன. புதிய நகர் நிர்மாணப் பணிகளுக்கு கல்லறைகள் தோண்டப்பட்டு மிச்சங்கள் எரியூட்டப்பட்டன. இப்போது சுமார் 5.2 ஹெக்டர் நிலப்பரப்பில் பீஷான் பூங்கா சிங்கப்பூரின் ஆகப் பெரிய பூங்காவாகத் திகழ்கிறது.
இதேபோல கிறிஸ்துவ கல்லறைகள் மறு அடக்கம் செய்யப்பட்ட இடம்தான் ஃபோர்ட் கேனிங் பார்க். பிடாரி, தானா மேரா, புலாவ் தெக்கோவ் பகுதிகளில் எடுக்கப்பட்ட முஸ்லிம்களின் உடல்கள் தற்போது சுவாசூகாங்கிலுள்ள புஸாரா அபாடி முஸ்லிம் அடக்க ஸ்தலங்களில் மறு அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
மிஸ்டர். நூருல் அமீன் என் கடைக்கு வரும் வாடிக்கையாளர். இவருடைய பெற்றோர்கள் பாகிஸ்தானிலிருந்து வந்து குடியேறியவர்கள். கையில் எப்போதும் சிறு கற்கள் மற்றும் நிலவரைபடக் கருவிகள் வைத்திருப்பார். ரெனவேசன் கம்பெனி வைத்திருப்பார் என்று நினைத்தேன். ஒருநாள் நேரிடையாகவே என்ன தொழில் செய்கிறீர்கள் என்று கேட்டேன். கல்லறை பராமரிப்பு பணி செய்யும் சொந்த கம்பெனி வைத்திருப்பதாக கூறினார். அரபி மொழியில் டிப்ளமோ பெற்றவர். நான் கல்லூரியில் பட்டப்படிப்பில் இரண்டாவது மொழியாக அரபி எடுத்து ஓரளவு எழுதப் படிக்கத் தெரியும். அரபி சொற்களை அர்த்தப்படுத்தி பல தகவல்களை வைத்திருந்தார். அவரிடம் பேசுவதற்கு எனக்கு நிறைய விசயங்களிருந்தன.
தென்னாட்டில் புளியைக் கண்ட அராபியர்கள் இந்தியாவின் பேரிட்சை என்ற அர்த்தத்தில் ”இந்த் பர்ஹிந்த” என்று அராபியில் சொன்னது ஆங்கிலத்தில் ”டே மரிண்ட்” ஆயிற்று என்று சொன்னார். அவர் இந்த தொழில் ”அலஹம்து லில்லாஹ்” மிகவும் திருத்தி அடைவதாகச் சொன்னார். பழங்காலத்தில் ஈமச் சடங்கு சார்ந்த நினைவு மண்டபங்களில் மரணத்திற்கு பிந்தைய வாழ்வுக்குத் தேவையான பயனுள்ள பொருட்கள் வைக்கப்பட்டன. ஜப்பானில் டியுமுலஸ் காலத்தில் 3-6 நூற்றாண்டுகளில் சமாதி மேடுகள் முக்கியத்துவம் அடைந்திருந்தன. திறந்த வெளியில் காட்சி தரும் இத்தகைய நினைவுச் சின்னங்களில் சாவித் துவாரம் கூட இருக்குமாம். தற்கால நிலவறைக் கல்லறைகள் அலக்கார சமாதிகள் மூலம் சிறிதளவு நினைவு கூறப்படுவதை தவிர மறு மலர்ச்சி காலத்தில் சமாதியை வீடாகக் கருதும் எண்ணம் மேற்கத்திய நாடுகளில் மறைந்தது.
நூருல் அமீன் கல்லறை கற்கள் அடையாளம் மட்டுமல்ல அர்ப்பணிப்பு, கொண்டாட்டம், அனுசரிப்பு இவற்றின் அடையாளங்களாக நாம் கருதிக் கொள்ள வேண்டும் என்றார். பழைய கிரேக்கக் கல்லறைகக் கல்வெட்டுக்கள் பெரும்பாலும் இலக்கியத் தரம் வாய்ந்தவை என்று படித்திருக்கிறேன். அரபியில் தாங்கள் எழுதும் வார்த்தைகளை இறந்தவர்களின் உறவினர்கள் எழுதச் சொன்னவையா என்றேன்.இலக்கியத் தன்மையுடன் கல்லறை வார்த்தைகளை எழுதச் சொல்பவர்கள் குறைவு என்றார். 20 வருடங்களாக இத்தொழிலைச் செய்துவரும் இவரிடம் தொடர்ந்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் பேசிக் கொண்டிருப்பேன்.
தற்போது சுவாசூகாங்கில் முஸ்லிம்களின் உடல் அடக்கத்திற்கு 15 வருடங்களில் தோண்டி எடுப்பதற்கு ஏதுவாக செவ்வக வடிவ சிமெண்ட் காண்கிரிட் பலகைகள் உபயோகப் படுத்தப்படுகின்றன. இதன் நான்கு பக்கங்களிலும் சுற்றிலும் மறைகள் (Crypt) ஏற்படுத்தப்பட்டுள்ளன.
2.89 மீட்டர் நீளமும் 1.52 மீட்டர் அகலம் மற்றும் 1.8 மீட்டர் உயரம் அளவுள்ள சுமார் 12,100 கான்கிரீட் பலகைகள் முன்கூட்டியே செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. சவூதி அரேபியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் பின்பற்றப்படும் நடைமுறைகளில் இங்கு அடக்கம் நடைபெறுகிறது. இரு அடக்க ஸ்தலங்களுக்குள்ள இடைவெளி சுமார் 45 செ.மீட்டரிலிருந்து 15 செ.மீட்டர் ஆக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பிலுள்ள சிமெண்ட் கான்கிரீட் பலகைகள் இன்னும் ஏழு வருடங்களுக்கு போதுமானவை. 2046 வாக்கில் நிலப்பகுதி முற்றும் பெற்றவுடன் மறைகள் (Crypt) மூலம் சுலபமாக உடல்களை வெளியில் எடுக்க முடியும் கான்கிரிட்கள் மீண்டும் பயன்படுத்துவதற்கு சுமார் 3 வருடங்கள் இடைவெளி கொடுக்கப்படுகிறது.
உறவினர்களும் நண்பர்களும் பெருநாள் தொழுகை முடிந்து அடக்க ஸ்தலத்திற்கு செல்வது இங்கு வழக்கம். பிளாக் எண்களுடன் வரிசை எண்கள் கொடுக்கப்பட்டு அடக்க ஸ்தலத்தை அடைவது மிகவும் சுலபமாக்கப்பட்டுள்ளது.
இவர் இந்த தொழிலுக்கு எப்படி வந்தார் என்று அறிந்தபோது இன்னும் பல வியப்பான செய்திகளை கூறினார். 1985ல் காத்தோங் ஐடியில் படித்துவிட்டு ஒருவருடம் படிப்பா, தொழிலா என்ற குழப்பத்திலிருந்தவரை குழி வெட்டுவதற்கு வலிமையுடைய ஆட்கள், முன் அனுபவம் தேவையில்லை, ஒரு நாளுக்கு 75 வெள்ளி சம்பளம், முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற ஒரு தனியார் கம்பெனி விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டு இந்த வேலைக்குச் சென்றுள்ளார். சுமார் 6 மாதகாலம் பிடாரி, புலாவ் தெக்கோவ், தானாமேரா பகுதிகளிலும் குழி வெட்டி உடலின் மிச்சங்கள் அள்ளும் வேலை செய்திருக்கிறார். தானா மேரா பகுதியுலுள்ள மையத்துவாடிகள் சுலபமாக இருந்திருக்கின்றன. புலாவ் தெக்கோவ் கடினமான தரை.
ஒரு நாளுக்கு 4 குழிகள் தோண்ட வேண்டுமாம். 1.8 மீட்டர் ஆழம் 0.9மீட்டர் அகலமும் கொண்ட குழிகளைத் தோண்ட சில நாட்களில் சுலபமாகக் கற்றக் கொண்டாராம். 3 அடி தோண்டியவுடன் சிவப்பு மண் எட்டி பார்த்தவுடன் சவல் (spade) கொண்டு மண்ணை அள்ளி மேலே போட்டுவிட்டு உடல் பாகங்கள் தெரிய ஆரம்பிக்கும்வரை மெதுவாகத் தோண்டுவார்களாம். பெரும்பாலும் உடல்கள் கிப்லாவை நோக்கி அடக்கம் செய்யப்பட்டிருப்பதால் தலைபகுதி தொடங்கி நீளவாட்டில் வெட்டிக் கொண்டே வந்து சிதிலமான மரச் சட்டங்களை அப்புறப்படுத்திவிட்டால் வலது பக்கமாக சாய்ந்து அடக்கப்பட்ட உடல்களை எடுப்பதற்கு சுலபமாக இருக்குமாம். பெரும்பாலும் மண்ணே உடல்பாகங்களை தன்னுடையதாக்கி கொண்டிருக்குமாம். இரண்டு பிளவுள்ள கம்பை எலும்பில் சொருகி வெளியில் எடுத்து கூடையில் போடுவார்களாம். எப்போதுமே தலை உடலைவிட்டு தள்ளிப் போய்தான் கிடக்குமாம். சில நேரங்களில் இரண்டு தலைகள் ஒரே குழியில் கிடைக்கும். இவைகள் இரண்டு காரணங்களால் நிகழ்ந்திருக்கும் என்றார். ஒன்று ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இன்னொருமுறை அடக்கம் செய்துவிடுவது. மற்றொன்று மண் சரிவு ஏற்பட்டு இரண்டு உடல்கள் சேர்ந்து விடுவது. உடல்களில் ஆண்கள் பெண்கள் வித்தியாசம் காண முடியாவிட்டாலும் பெண்களின் உடல்கள் முறைப்படி நான்கு பக்கமும் துணியால் மறைக்கப்பட்டு தோண்டப்படுமாம்.
குழந்தைகள் அடக்கஸ்தலத்தில வேலை 15 நிமிடங்களில் முடிந்துவிடும். ஏனெனில் எதுவுமே இருக்காது என்றார். தரையோடு தரையாக ஒட்டிப் போயிருக்கும் உடல் பாகங்களை எடுக்க சிரமப்படும்போது கம்பெனியிலிருந்து “Pakala” வரைவழைக்கப்டுவார். அவர் பாத்திஹா ஓதி பன்னீர் தெளித்து முடித்தபிறகு சுலபத்தில் எடுக்க முடிந்தது என்றார.
இன்னும் பல பத்திகள் எழுதுவதற்கான விசயத்தை சொல்லி அரசாங்கம் முறையான அறிவிப்பு செய்து உறவினர்களின் முன்னிலையில் சுமார் 8.5 மில்லியன் வெள்ளி செலவு செய்து உலக நாடுகளுக்கு முன்னுதாரமானதை சுட்டிக் காட்டினார்.
சில வருடங்களுக்கு முன்பு காலமான சிங்கப்பூர் கவிஞரின் கல்லறை வாசகம் இப்படி பொறிக்கப்பட்டிருக்கிறது.
“நாளை நிச்சயமில்லை என்பதால்
இன்றைய நாளை வாழ விரும்புகிறேன்”
அப்துல்காதர் ஷாநவாஸ்
thanks: http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=3798