ஜன்னலும்
கதவும் இருந்தும்
கத்திக் கத்தி ஓய்ந்த குருவிக்கு
கடைசி வரை
சொல்லப்படவே இல்லை
நேற்றுவரை அந்த வீட்டில்
குடியிருந்த குழந்தைகளின்
வீட்டு முகவரி……………
சிங்கப்பூரில் வக்கீல், வங்கியாளர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெற்ற விமான பைலட் முதலானோர் எழுத்தாளர்களாகிக் கலக்கி வருகிறார்கள். 26 வயது வங்கியாளர் மாதவ் மாத்தூர் 2004-ல் எழுத ஆரம்பித்த கதை பாலிவுட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. வக்கீலாக இருந்து எழுத்தாளரான ‘ஷாமினி பிளின்ட்’ 2005&ல் எழுதி வெளியிட்ட கிரைம் நாவல் ‘இன்ஸ்பெக்டர் கிங்’ ஒரு லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த ‘‘எல்மோ ஜெயவர்த்தன ஓய்வு பெற்ற பைலட் சிங்கப்பூரில் வசிக்கிறார். அவர் இதுவரை மூன்று நாவல்கள் எழுதியிருக்கிறார். அவருடைய samsstory இலங்கை அரசின் விருது பெற்றுள்ளது. ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி சென்ற வருடம் சிங்கப்பூரில் குடியேறி ஆக்ஷன் திரில்லர் நாவலை எழுதி வெளியிட்டுள்ளார். 12 வருடங்களாக இங்கு வசிக்கும் இங்கிலாந்து எழுத்தாளர் ‘மார்க்பவல்’ சோமாலியாவுக்கு பயணம் செய்து அந்நாட்டுக் கொள்ளையர்களைப் பற்றி நாவல் எழுத ஆரம்பித்திருக்கிறார். இதெல்லாம் சிங்கப்பூர் கிளிஷேயில் ஏன் சொல்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கக்கூடும். சிங்கப்பூரில் எழுதுவதற்கும் எழுதியதைப் படிப்பதற்கும் உகந்த சூழல் உள்ளதா என்று என்னிடம் ஒரு நண்பர் ஆவேசமாகக் கேட்டார். அதனால்தான் நானும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். சரி நம் விஷயத்திற்கு வருவோம். வேலையில்லாமல் இருக்கலாம். ஆனால் நண்பர்கள் இல்லாமல் இருக்கமுடியுமா? நான் வாங்கிய செல்போன் எப்படி ‘‘லா’’ ஓகேவா, ரிங்டோன் எப்படி அசத்தலா இருக்கா?என்று மட்டும் கேட்டு செல்போனை மாற்றுவது மாதிரி நண்பர்களை மாற்றிக் கொண்டிருக்கும் நபர்கள் என்னிடம் அவ்வளவாக ஒட்டுவதில்லை. உலகத்தில் என்ன நடக்கிறது என்று கொஞ்சம் என்னைச் சிந்திக்க வைக்கும் நண்பர்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறார்கள்.
தாமன் ஜீரோங்கில் ‘‘தமிழ் சினிமா’’ ஓடும் தியேட்டர் ஒன்று இருந்தது. அப்போது செல்போன்கள் அவ்வளவு உபயோகத்திற்கு வரவில்லை. ஆனால் கைக்கடிகாரத்தில் ‘‘அலாரம்’’ பீப் பீப் என்று அடிக்கும். எங்கு பார்த்தாலும் அலாரம் உள்ள கடிகாரத்தைக் கட்டிக் கொண்டு திரிவார்கள். ‘நினைத்ததை முடிப்பவன்’ என்று நினைக்கிறேன். எனக்கு டின் ஏஜ் பருவம் பக்கத்தில் படம் பார்த்துக் கொண்டிருந்த ஆசாமி அரைமணி நேரத்திற்கு ஒரு தரம் முள்ளைத் திருப்பி திருப்பி வைத்து அலாரம் அடித்து ‘டார்ச்சர்’ பண்ணிக் கொண்டிருந்தார். என் நண்பர் H மிகவும் வேடிக்கையாகப் பேசக் கூடியவர். அவர் அந்த ‘வாட்ச்’ ஆசாமியிடம் வாட்ச் என்ன விலைக்கு வாங்கினீர்கள் என்றார். அவர் ‘‘அன்னம் புலு’’ என்று மிடுக்காகச் சொன்னார், கொஞ்சம் வாட்சைக் கழற்றுங்கள் என்று அதை வாங்கிப் பார்த்துவிட்டு ‘‘அட சாயாங் பிரதர் யாரோ உங்களை நன்றாக ஏமாற்றிவிட்டார்கள். இதன் விலை ‘‘தீகா புலு’’ அதாவது இந்த பிராண்டில் வாட்ச் வாங்கினால் இன்னொரு வாட்ச் ஃப்ரி அல் லாமா! என்ன லா’ இப்படி ஏமாந்துட்டிங்க’ என்று அள்ளிவிட்டார் அந்த ஆசாமி. இது உண்மையா, ஏமாந்து விட்டோமா என்ற குழப்பத்திலேயே அலாரம் வைக்காமல் எங்களை நிம்மதியாய்ப் படம் பார்க்கவிட்டார்.
இன்னொரு நண்பர் S எதையும் வித்தியாசமாக சிந்திப்பவர். புதிதாகக் கார் வாங்கினால் என்னை உட்கார வைத்து சிங்கப்பூரை ஒரு வலம் வருவார். அப்படி ஒரு நட்பு. எனக்குத் தமிழ் மேல் உள்ள காதல் அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று. அவருடைய தமிழ் ஆர்வத்திற்கு நானும் அவ்வப்போது புராணங்களில் ஆரம்பித்து இன்றைய காலகட்டம் வரை வலை போட்டு அலசிப் பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருப்போம். ஒருநாள் வந்து படகு ஒன்று புதிதாக வாங்கியிருக்கிறேன். 2 நாட்கள் புரோக்ராம் போடுங்கள் என்றார். நான் பக்கத்தில் 5. 6 கிலோமீட்டர் தூரத்திலுள்ள Kusu தீவுக்குப் போகலாம் என்றேன். Kusu என்றால் சீன மொழியில் ஆமை என்று அர்த்தம். நண்பர் S மிதக்கும் மீன் பண்ணைக்குச் செல்லலாம். அங்கு ஒரு சீன நண்பர் பழக்கம் என்றார். புத்தம் புது பைபர் கிளாஸ் dassboat 6 பேர் பயணம் செய்யலாம். நான் ஏதாவது டிரைவர் கூட்டிவருவார் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவரே ஓட்டுகிறேன் என்றார். எனக்குப் படகில் ஏறுவதற்கு முன்னாலேயே தூக்கிவாரிப்போட்டது. படகுப் பயணம் செய்யச் சிங்கப்பூரில் 4 முனையங்கள் உள்ளன. ஹார்பர் பிரன்ட், தானாமேரா, சாங்கி F.T, சாங்கி பாயிண்ட் F.T, இவை தவிர மீன் பிடிக்கவும், உல்லாச சவாரி செய்யவும் தனியார் படகுகளுக்கும் அனுமதி உண்டு. நண்பர் S வாங்கிய படகில் 24 மணி நேரத்தில் சுமார் 100 கடல் மைல் தொலைவு செல்லலாம். அதாவது 185 கி.மீ.
ஜிம்மி கார்னல்ஸ்’ கடல் பயணங்களில் மேற்கொள்ளவேண்டிய விதிகள் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அது பொதுவாக எல்லா மாலுமிகளும் வைத்திருக்கக்கூடிய புத்தகம் அதை நாங்கள் படகுக்குள் ஏறும்போது S கையில் வைத்துப் படித்துக் கொண்டிருந்தார்.
9 மீட்டர் நீளமுள்ள படகு அது. கார் ஓட்டுவது மாதிரி வளைத்துத் திருப்பினார். கடல் ஆழத்தைக் காட்டும் கருவியை மட்டும் அடிக்கடி பார்த்துக் கொண்டார். எனக்கு மனதுக்குள் ‘திக் திக்’ என்றிருந்தது. நான் நண்பர்களுடன் காரில் ஜொகூர் வரை சென்று திரும்புகிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டு வந்தேன். மற்ற நண்பர்களும் ‘திருதிரு’வென்று விழிப்பதைப் பார்த்தால் அவர்களும் அப்படித்தான் சொல்லிவிட்டு வந்திருக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அப்போது உடனடி அவசர உதவி கேட்டு குரல் எழுப்ப இப்போது இருப்பது மாதிரி gmdss சிஸ்டம் இல்லை. 1990&க்குப் பிறகுதான் VHF digital calling உபயோகத்தில் வந்தது. பக்கத்தில் பெரிய கப்பல்கள் இடைமறிக்கும்போது அலை உயர்ந்து நாங்கள் சென்ற படகு உயரக் குதித்து தண்ணீருக்குள் விழுந்து எழுந்தது. அவசர உதவிக்கு ‘‘ Mayadaya call” பண்ண வேண்டிய அவசியம் வந்து விடுமோ என்று மூச்சை விட்டுப் பிடித்துக் கொண்டிருந்தோம். ஒரு வழியாக மிதக்கும் மீன் பண்ணைகள் இருந்த இடத்தை (floating fish form) அடைந்து விட்டோம். நான் முதன் முதலாக அன்றுதான் அப்படி ஒரு மீன் பண்ணை சிங்கப்பூர் கடல் எல்லையில் இருப்பதைப் பார்க்கிறேன். அந்தப் பண்ணை உரிமையாளருடன் கழிந்த ஒருநாள் பொழுது இன்னும் எங்கள் நினைவுகளில் பசுமையாக உள்ளது.
கப்பற்படையிலும், வணிகக் கப்பல்களிலும் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை கழித்த தமிழக எழுத்தாளர் ‘‘நரசய்யாவின்’ சிறுகதைகளை நான் சொல்ல ஆரம்பித்தவுடன் சீன மீன் பண்ணை உரிமையாளருக்கு கம்யூனிகேஷன் பிரச்னை வந்துவிட்டது.
அதனால் பெரும்பாலும் அவரையே பேசவிட்டோம்.
அவர் சுற்று சூழல் ஆர்வமுள்ள மீன் வளர்ப்பாளர், இரால்களுக்காக வைக்கப்பட்டுள்ள வலையில் சில சமயம் ஆமைகள் சிக்கிவிடுமாம். கொஞ்சம் கொஞ்சமாக அதைச் சேர்த்து கொண்டுபோய் Kusu தீவில் விட்டு விடுவாராம். அங்கு சென்றால் நிறைய ‘‘Buaya” (முதலைக்கு மலாய் வார்த்தை) நீங்கள் பார்க்கலாம் என்றார்.
வலையில் வாருதல் என்ற புதிய மீன்பிடி யுக்தி அப்போது இருந்தது. கப்பலுடன் பெரிய வலைகளைக் கட்டி அதில் பெரிய கல் அல்லது இரும்பைக் கட்டி கடலில் சுமார் 400 மீட்டரிலிருந்து 1500 மீட்டர் ஆழத்தில் போட்டு விடுவார்களாம். (trawling) திறந்த வாயுடன் இருக்கும் பெரிய வலை கப்பலுக்கு இணையாகக் கடலுக்கடியில் ஓடும்போது வழியில் எதிர்ப்படும் எல்லா உயிரினங்களும் மாட்டிக் கொள்ளும். வேண்டியவற்றை எடுத்துக் கொண்டு மற்றவற்றை வீணாக எறிந்து விடுவது கடலில் இருக்கும் சூழல் மண்டலமே பாதிக்கப்படும் என்றார்.
பொதுவாக இம்மாதிரி மிதக்கும் மீன் பண்ணைகள் 20 அடி நீளம் 20 அடி அகலத்தில் சுற்றி வளையால் பாதுகாக்கப்பட்டு அமைக்கப்படுகிறது.
1988-ல் சுமார் 70 பண்ணைகள் 37 ஹெக்டேர் பரப்பளவில் இருந்தன. இப்போது bulou ubin, Pasir ris, lazarus,bulau semaku பகுதிகளில் அதிகம் அமைக்கப்பட்டிருக்கின்றன. சுமார் 500 கிலோ மீன்கள் தினமும் NTUC வாங்கிச் சென்றுவிடுவார்கள்.
இவருடைய பண்ணையில் கொடுவா, செவ்விளை மீன், சிங்கி இறால் வளர்க்கிறார்.
கடலுக்குள் போய்விட்டால் திசைகள் தெரியாது. ஜேடி குருஷ் ‘‘ஆழி சூல் உலகு’’ நாவலில் திசைகளை நேர் வெலங்க, சோழ வெலங்க வாட வெலங்க
கடற்காற்றுகளை
கச்சான், கரைக்காற்று, திரப்பு, பொழி, மடை, விரளம் என்பார்.
அதில் ஆமைகளைப் பற்றி அதிகம் கவலைப்பட்டுப் பேசினார்.
டைனோசர்கள் அழிந்தபோது கூட டிமிக்கு கொடுத்துவிட்டுத் தப்பி ஓடிய உயிரினம் ஆமை. 10 கோடிகளாக வாழ்ந்து வரும் இனம் இப்போது அழியும் நிலைக்கு வந்துவிட்டது என்றார்
அவர் பெரிய மீன்களுக்கு டின் மீன் இரைகள் எதுவும் வாங்கி வைத்திருக்கவில்லை. பிடிபடும் சிறிய மீன்களை வெட்டிப் பெரிய மீன்களுக்குப் போட்டார். மாலையில் நாங்கள் புறப்படும் முன்பாக அந்தப் பெரிய மீன்களை வெட்டிச் சுட்டுச் சாப்பிட்டோம்.
மீண்டும் பல வருடங்கள் கழித்து அந்தப் பகுதிக்கு மீன் வியாபாரிகளைப் பார்க்க நான் மட்டும் சென்று வந்திருக்கிறேன். அந்தப் பண்ணை நகர்ந்து வேறொரு இடம் போய்விட்டிருந்தது.
இப்போதெல்லாம் கடலுக்குள் போய் மீன் வாங்க வேண்டியதில்லை. சாங்கி மீன் விற்பனை நிலையத்தில் போய் வாங்கிக் கொள்ளலாம். நிறைய விஷயங்கள் மாறிவிட்டன. கடலுக்குள் சென்று ஜாலி அரட்டை அடித்து திரும்பிய நினைவுகள் மட்டும் மாறாமல் இருக்கின்றன.
thanks:http://www.thangameen.com/ContentDetails.aspx?tid=249