சிங்கப்பூர் கிளிஷே – 5

Posted: மார்ச் 6, 2011 in கவிதை, பத்தி

ஒரு அனுபவம் அது முடிந்த பிறகு
சாதாரணமாகிவிடுகிறது
அது நிகழும் நேரத்தில் பிரவாகமாக
சுழற்றி அடிக்கிறது அதை எதிர்கொள்ள
அறிவு எவ்வகையிலும் உதவுவதில்லை
ஒரு தெரு நாய் முறைத்துப்பார்த்தால் கூட
அறிவும் தர்க்கமும் கண நேரத்தில் ஓடி மறைந்து விடுகின்றன

–  ஜெயமோகன்

சென்ற மாதம் எனக்கு வேலை ‘பனால்’ ஆன விசயத்தைச் சொல்கிறேன் என்று முடித்திருந்தேன். அந்தக் காரியத்தை செய்த நண்பரின் நண்பர் என்னைத் தொலைபேசியில் அழைத்து, எதுவரை நான் விவரிக்கப் போகிறேன் என்று மிகவும் கரிசனமாக விசாரித்தார். எனக்குள் பல்ப் எரிந்து விட்டது. அந்த மனிதர் ‘தங்கமீன்’ படிக்கிறார், அதிலும் தன் செயல் வெளி உலகுக்குத் தெரியக்கூடாது என்று நினைக்கிறார். சரி, போகட்டும் விட்டு விடுகிறேன்.

நான் மீண்டும் ‘Classified” Job.com’ என்று அலசிக் கொண்டிருந்தேன். நாட்கள் செல்லச் செல்ல, ஏதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்ற நிலைவந்து விட்டது ஒருநாள் MRT-யில் ‘டோபி காட்’ ஸ்டேஷனில் ஏறி, எந்த ஸ்டேஷனில் இறங்கலாம் என்ற இலக்கில்லாமல் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தேன். Kathip MRT நிலையத்தில் இருந்து Yio Chu Kang MRT நிலையத்திற்கு இடையில் உள்ள தூரம் துள்ளியமாக 4.84 கிலோமீட்டர். ஆக,  அதிக தூரம். டோபிகாட்டிலிருந்து Brash Basha MRT ஸ்டேஷசனுக்கு 552 மீட்டர் தூரம்தான். இது மிகக் குறைந்ததூரம்.  காத்திப்பிலிருந்து இயோச்சுகாங்கிற்கு செல்லும் தூரத்தில் ஒரு முறைதான் கதவு திறக்கிறது.  ஆனால் இந்தத் தூரத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள சர்க்கிள் லைன் MRT பாதை வழியாகக் பயணம் செய்தால், 6 ஸ்டேஷசன்கள் வந்து போகும். ஆறு முறைகள் கதவு திறந்து மூடும். இதுவே வாழ்வின் சந்தர்ப்பங்கள் என்று நாம் எடுத்துக்கொண்டால் சிலருக்கு குறைந்த இடைவெளியில் அதிக வாய்ப்புகளும், சிலருக்கு வாய்ப்புக்கு அதிக தூரத்திலும் கதவுகள் திறக்கும். எனக்கு அப்படி ஒரு கதவு திறந்தது.

கிளீனிங் கம்பெனியில் என்னுடன் வேலை செய்த நண்பர், கிளார்க்கீயில் (Clarke Quay) உணவகம் திறந்திருந்தார்.  இரவு வேலை. வெளியில் நின்று ஆர்டர் மட்டும் எடுத்துக் கொடுத்தால் போதுமானது.

கிளார்க்கீ சிங்கப்பூர் ஆற்றில் அமைந்துள்ள உல்லாசத்தளம். ‘மெரினா பே’யிலிருந்து ஆற்றில், படகு சவாரி மிகவும் பிரசித்தம். 5 வெள்ளியிலிருந்து 500 வெள்ளிவரை, ஒரே நாளில், உங்கள் பர்ஸின் கனத்தைப் பொறுத்துச் செலவழிக்கலாம். கிளார்க்கீ, இரவு 9-மணிக்கு மேல் வெளிநாட்டுக்காரர்களின் தனி உலகமாக மாறிவிடும். நான் வேலைக்குச் சேர்ந்த உணவகத்தில், பராட்டோவோடு மாமிசம் கலந்து தயாரிக்கப்படும் ‘முர்த்தபாக்’ ஸ்பெஷல். ஒரு முர்த்தபாக் 10-வெள்ளி. ஒரு முர்த்தபாக் ஆர்டர் எடுத்தால், சம்பளத்துடன் ஒரு வெள்ளி கூடுதலாக கிடைக்கும். ஒரே நேரத்தில் அதிக வாடிக்கையாளர்களைத் தன்பக்கம் இழுக்க, ஒவ்வொரு கடைக்காரரும் போட்டி போட்டுக்கொண்டு இருப்பார்கள். அதே நேரத்தில் சுகாதார பராமரிப்பு நிர்வாகம், வாடிக்கையாளர்களை வற்புறுத்தித் தங்கள் கடைக்குள் இழுக்கும் கடை உரிமையாளர்களுக்குத் தண்டனை கொடுத்து விடுவார்கள்.

வருடத்தில் அதிகபட்சம் 12 குற்றப்புள்ளிகள்தான் வாங்க முடியும். ஏற்கனவே நான் வேலைக்குச் சேர்ந்த கடைக்கு 6 குற்றப்புள்ளிகள் கொடுத்திருந்தார்கள். அதனால் வாடிக்கையாளர்களையும் இழுக்க வேண்டும், ஆனால் நாசூக்காகக் கூப்பிடவேண்டும்.

அதனால் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று கவனித்து, சிங்கப்பூர் பற்றிய வித்தியாசமான  செய்திகளைச் சொல்லி, அடுத்த கடைக்குள் அவரின் கவனம் செல்லாமல் பேச்சுக் கொடுப்பேன். ஏதாவது ஒரு பாயிண்டில் “Oh!  Is it” என்று ஆச்சர்யக் குறி அவர்கள் காட்டிவிட்டால், ஒரு முர்த்தபாக் ஆர்டர் வாங்கிவிடலாம் என்று அப்படியே தொடர்ந்து காரியத்தை முடித்துவிடுவேன்.

அப்படியான விசயங்கள் என் நினைவில் இன்னும் மாறாமல் இருக்கின்றன

எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான். அதைக் கொஞ்சம் பில்ட்-அப் கொடுத்து சொல்லும்போது, பார்ட்டி வலையில் சிக்கிவிடும்.ஒரு அமெரிக்கரைப் பார்த்துவிட்டால்,  ” ஹலோ, குட் ஈவினிங்! உலகின் மிகச் சிறிய 20 நாடுகளில் எங்கள் சிங்கப்பூர் பளிச்சிடும் ஒரு புள்ளி. அது உங்கள் அமெரிக்காவை விட, 15000 மடங்கு சிறியது. ஆனால், எங்கள் கடையின் ‘முர்த்தபாக்’ உங்கள் நாக்கைச் சப்புக் கொட்டி வைத்துவிடும்.” என்று Singlish பாதி English பாதியாக அள்ளிவிடுவேன்

ஒரு நாள், ஒரு வெள்ளைக்காரர், “அது என்ன வாக்கியத்தின் இறுதியில் ‘லா’ சேர்த்து பேசுகிறீர்கள் ? அது என்ன மொழி?” என்றார். நான் அவரிடம், “அந்த வார்த்தை ஆக்ஸ்போர்ட்டு அகராதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. if you have a time check. Lah, Sinshe  என்ற வார்த்தைகள் அகராதியில் உள்ளது.” என்றேன்.

கிளார்க்கீயில் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும். ஒரு முறை ‘Tea Artist’ கஸ்டமர்களின் டேபிளுக்கு 5 அடி தூரத்தில் நின்று கொண்டு, டேபிளில் உள்ள கப்பில் சரியாக தேநீரை ஊற்றி அசத்துவார்கள். இதில் Kung Fu Tea artist  சிலர் இருக்கிறார்கள் அவர்கள் கவாத்தெல்லாம் எடுத்து, தேநீரை ஊற்றி அசத்துவார்கள். அன்று ஒரு வெள்ளைக்காரரிடம் முர்த்தபாக் ஆர்டர் எடுத்துவிட்டு, ” தண்ணி தேதாரிக் வேண்டுமா? ” என்றேன். அவர், “அது தேயா, அல்லது சாயாவா?” என்று கேட்டார்.

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்த தேயிலையில் தேநீர் தயாரித்தால், அது – தே!  சீனாவிலிருந்து இறக்குமதி செய்த தேயிலை என்றால், அது – சாயா! அந்த வார்த்தை,  சீன மொழி Chai-யிலிருந்து வந்தது என்று கொஞ்சம் எடுத்து விட்டேன். “ஜீரொங் நீரூற்று பார்த்துவிட்டீர்களா? அது 30 மீட்டர் உயரம். உலகிலேயே ஆக அதிக உயரமுள்ள நீரூற்று.” என்று சொன்னேன்..

புத்தகங்கள் படித்துக்கொண்டிருக்கும் வெளிநாட்டுப் பயணிகளிடம், “சிங்கப்பூரின் பேய்க்கதை மன்னன் ரஸ்ஸல் லீ புத்தகம் படித்திருக்கிறீர்களா? மொத்தம் 11 வால்யூம்கள் வந்திருக்கின்றன. இதுவரை ஆறு லட்சம் பிரதிகள் விற்பனை ஆகியிருக்கின்றன.” என்று பல விசயங்களைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சிலர் நழுவி விடுவார்கள். சிலர் நின்று நிதானிப்பார்கள்.

இப்படி அறிவு பூர்வமாக நான் ஆர்டர் எடுத்துக்கொண்டிருக்க, என்னுடன் ஆர்டர் எடுத்துக் கொடுக்கும் பெரியவர் ஆபுதீன், ஒரு நாளில் குறைந்தது 15 முர்த்தபாக் ஆர்டர் எடுத்து அசத்திக் கொண்டிருந்தார். என்னுடைய ஸ்கோர் 5ல் நின்றது. நான் எங்கு தவறு செய்கிறேன் அவர் எதில் ஸ்கோர் பண்ணுகிறார் என்று கவனித்தேன். அவர் கஸ்டமரைப் பார்த்தவுடன், “ஹலோ ஜான், ஹலோ பீட்டர், ஹலோ ஆல்பர்ட்” என்று தென்கிழக்கு ஆசியாவை சேர்ந்தவர்களையும், சீனர்களைப் பார்த்தால், “ஹலோ மிஸ்டர் லீ, ஹலோ மிஸ்டர் லிம், ஹலோ மிஸ்டர் டான்” என்று பெயர் தெரிந்தது மாதிரி அவர்களுடைய கலாச்சாரத்தில் அதிகம் வைக்கப்படும் பெயர்களைக் குறிப்பிட்டு கஸ்டமர்களை சிக்க வைத்துவிடுகிறார். அத்தோடு கடையில் வேலைபார்க்கும் ஆக அதிக வயதானவர் என்ற காரணமும் சேர்ந்து கொண்டு, அவருக்கு அதிக மார்க்குகளைக் கொடுத்துவிட்டது.

ஒரு நாள் ஆபுதீன் நானாவை முந்துவதற்குப் பலத்த யோசனையில் இருந்தேன். எதிரில் நின்றுகொண்டிருந்த அவர், “என்ன ரொம்ப தூரம் யோசனை செய்கிறாய்?” என்றார். நான் அவரை மடக்கும் விதமாக, “அது என்ன குறைந்த தூரம் யோசனை? ரொம்பதூரம் யோசனை? யோசனையில் அப்படி இருக்கிறதா?” என்றேன். அவர் சொன்னார்,  “ஒரு விரல்-  3/8 இன்ச்,  6-விரல் – ஒரு சான், 2 சான் – ஒரு முழம்,  2 முழம் – ஒரு கோல், 4-கோல்- ஒரு தண்டம்,  500 தண்டம் – ஒரு கூப்பிடு, 4 கூப்பிடு – ஒரு காதம், 4 காதம் – ஒரு யோசனை.” என்றார். அடேங்கப்பா பெரிசு பெரிசுதான். ஆனாலும் என் யோசனையைத் தொடர்ந்து கொண்டிருந்தேன்.

வேலையைத் தக்க வைக்கப் பல கரணங்கள் போட்டுக் கொண்டிருந்தேன். கஸ்டமர்களை வலிய இழுப்பது மனதிற்கு மிகவும் சங்கடமாகயிருந்தது.

ஒரு நாள்  “Domim Topple”  விளையாட்டு நடந்தது. அதில் 2003ல் சிங்கப்பூரில் 24 வயது சீனப் பெண்மணி நிகழ்த்திய சாதனையை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. அது வேறொன்றும் இல்லை அபூர்வ சகோதரர்கள் படத்தில் டில்லி கணேசனைக் கொல்லக் குட்டை கமல்ஹாசன் பொருட்களைத் தட்டிவிடுவாரே அதுதான்.

அந்த விளையாட்டு நடந்த இரண்டு வாரங்களில் முர்த்தபாக் விற்பனையை இரண்டு மடங்காக்கிச் சாதனை புரிந்தேன் எப்படியென்றால் முர்த்தபாக்கை கோணவடிவில் வெட்டி ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி ஒவ்வொரு அடுக்கிலும் டொமோட்டாசாஸை வட்டமாக ஊற்றி, Domino  முர்த்தபாக் என்று ஆர்டர் எடுக்க ஆரம்பித்தேன்

அப்படிச் சாதனை புரிந்தும் வேலை பனால் ஆகிவிட்டது. கிளர்க்கியீ புதுப்பிப்பு பணிகளுக்கு 3 மாதம் மூடியதால் அந்த வேலை முடிவுக்கு வந்தது. அடுத்தவேலை நான் தொழிலில் கால் ஊன்றுவதற்கு ஒரு கதவைத் திறந்தது.

thanks: http://thangameen.com/Archieves/ContentDetails.aspx?tid=192&iid=33

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s