ஏப்ரல், 2011 க்கான தொகுப்பு

 

விமான நிலையம் புறப்பட ஆயத்தமாகும்போது இனிமேல் இந்தியப் பணம் தேவையிருக்காது என்று மீதமிருக்கும் நோட்டுக்களை நண்பர்களிடம் கொடுத்துவிட்டு வருவது என்னுடைய பழக்கம். இந்த முறை நண்பன் விஜயன் ‘ஒரு 500 ரூபாய்தான், எதற்கும் வைத்துக்கொள். உள்ளே சென்றவுடன் உனக்குத் தேவைப்படும்’ என்றான்.

கஸ்டம்ஸில்…

‘‘அட்டைப்பெட்டியில் என்ன இருக்கிறது?’’

‘‘இடியாப்பமாவு’’ என்றேன்.

“இதெல்லாம் சிங்கப்பூரில் கிடைக்காதா?” கேள்வி மேலிருந்து கீழாகப் பார்த்துவிட்டு, ‘‘ஏதாவது இருந்தால் கொடுத்துவிட்டுப் போங்கள்.’’ சட்டம் கை நீட்டியது.

 

சட்டத்திற்குப் புறம்பான காரியங்களை மட்டும் செய்ய லஞ்சம் கொடுப்பது தற்போது நிலைமை. மாறாக சட்டப்படியும் லஞ்சம் வாங்கலாம் என்று லஞ்சத்தின் உருவமே இப்போது மாறிவிட்டது.

சிங்கப்பூரில் குறிப்பிட்ட வேக அளவுக்கு மேல் கார் ஓட்டியதற்காக வழி பறித்த போக்குவரத்து போலீஸிடம் “வெள்ளிதானே கொடுக்கக்கூடாது. மலேசியாவுக்கு வாருங்கள், வேண்டிய உதவிகளைச் செய்கிறேன். இப்போது நான் அவசரமாகப் போக வேண்டும்” என்று சொன்ன மலேசியத் தொழில் அதிபர் லஞ்சம் வாங்க அதிகாரியைத் லஞ்சம் வாங்கத் தூண்டினார் என்று தண்டனை விதிக்கப்பட்டு கம்பி எண்ணினார்.

ஒன்வேயில் சைக்கிள் ஒட்டியதற்காகப் பிடிபட்ட கருப்பசாமி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு “ஸார், 20 வெள்ளி வைத்துக்கொள்ளுங்கள்” என்று போலீஸ்காரர் சட்டைப் பையில் வைத்தார். மேலும் இரண்டு பிரிவுகளில் சேர்த்து வழக்குப் போட்டு உள்ளே தள்ளிவிட்டார்கள். இந்தியாவில் இதுமாதிரி சட்டத்தைக் கடுமையாக்கி தண்டனைகள் கொடுக்க முடியாதா என்று பேசிக் கொண்டிருந்தபோது ஒரு அறிவுஜீவி நண்பர் சொன்னார். ‘இந்தியா என்ன 5 மில்லியன் மக்கள் தொகையுள்ள சின்ன நாடா?’

‘அமெரிக்கா, இந்தோனேஷியா, பிரேசில், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஜப்பான் இந்த ஆறு நாடுகளின் மக்கள் தொகை மொத்தம் 1.21 பில்லியன்.

2011 சென்சஸ்படி இந்தியாவின் மக்கள் தொகை 1.21 பில்லியன். நீங்கள் சொல்வதெல்லாம் நடக்கிற காரியமா?’ என்றார். அப்பெடியெனில் சென்னையை சிங்கப்பூர் ஆக்குவேன், விருத்தாசலத்தை சிங்கப்பூர் ஆக்குவேன் என்று ஏன் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள் என்றவுடன் நண்பர் அர்த்தத்துடன் சிரித்தார்.

ஒவ்வெரு வருடமும் உலகின் ஊழல் மலிவு சுட்டெண் (1000uption porception index) ஜெர்மனியைத் தளமாகக் கொண்ட நிறுவனம் சர்வே செய்து வெளியிடுகிறது. உலக வங்கியின் சர்வேக்கு கிட்டத்தட்ட நிகரானது.

2010ல் சிங்கப்பூர் 1.07 பெற்று உலகில் ஊழல் ஒழிப்பில் முதலிடம்

ஹாங்காங் & 1.89

ஆஸ்திரேலியா & 2.40

அமெரிக்கா & 2.89

ஜப்பான் & 3.99

தென்கொரியா & 4.64

மக்காவ் & 5.84

சைனா & 6.16

தைவான் & 6.47

மலேசியா & 6.70

பிலிப்பைன்ஸ் & 7.00

வியட்நாம் & 7.11

இந்தியா & 7.21

இந்தோனேஷியா & 8.31

சிங்கப்பூரில் ஊழல் ஒழிப்பு திடீரென்று வந்துவிடவில்லை. சுகந்திரம் பெற்று 1959 லிருந்து 1990 வரை திரு.லீகுவான்யூ பிரதமராக இருந்தார். சுமார் அரை நூற்றாண்டுகளாக மக்கள் செயல் கட்சியே ஆட்சியிலிருக்கிறது. தன்னுடைய முதல் கொள்கையாக ஊழல் ஒழிப்பை முனைந்து 1970 லிருந்தே லீ செயல்படுத்த துவங்கினார். அந்தக் கால கட்டத்தில் ஊழல் ஒழிப்பின் அங்கமாக அரசாங்க ஊழியர்கள் சம்பளம் அவ்வளவாக உயர்த்தப்படவில்லை. அடித்தளம் அமைத்த பின்பு 1980களில் அரசாங்க ஊழியர்கள், பிரதமர், அமைச்சர்கள் சம்பளம் அதிக அளவு உயர்த்தப்பட்டது. அரசு ஊழியர் சட்டங்கள் காமன்வெல்த் நாடுகளில் இந்தியாவைப் போலவே சிங்கப்பூரில் இருந்தாலும் Public service™ இந்த அளவுக்கு ஊழல் ஒழிப்பு வியத்தகு நடவடிக்கை என்கிறார். சென்ற வாரம் The Histiry of singapore public service புத்தகத்தை வெளியிட வந்திருந்த Dr.N.C.Sexana (INDAN NATIONAL ADVISONY COVNCIL)

 

1992ல் சிங்கப்பூர் வந்த சீன அதிபர் Mr. Den Xiaping ஊழல் ஒழிப்பு போன்ற விஷயங்களில் சிங்கப்பூரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் என்றார். சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு

Exellent educated wook force open Trade routes Rule of law Low Tax

என்ற நான்கு காரணங்களுடன் ஊழல் ஒழிப்பும் மிக முக்கியமான காரணங்கள்.

அமெரிக்க அதிபரின் ஒபாமா சம்பளத்தை விட அதிக சம்பளம் சிங்கப்பூர் அமைச்சர்கள் பெறுகிறார்கள் என்ற கேள்வியை தேசிய பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து சிங்கப்பூர் பிரதமர் எதிர்நோக்கினார். அதற்கான தேவைகளும், சூழ்நிலையும் அவர் விளக்கியபோது எதிர்க் கேள்விகளுக்கு இடமில்லாமல் போயிற்று.

ST Forum பகுதியில் ஒரு வாசகர் அப்படி ஒன்றும் மக்கள் பணத்தை சம்பளமாகக் கொடுத்துவிடவில்லை என்பதை இவ்வாறு பட்டியலிட்டார்.

சிங்கப்பூரரின் வருமானத்தில் ஒரு டாலரின் 20 சென்ட்ஸ் GST மற்றும் வரிகள் மூலம் அரசு எடுத்துக் கொள்கிறது. ஒட்டி நோக்க அமெரிக்கா, 40% பிரிட்டன் மதிப்புச் சட்டப்பட்ட VAT வரி சேர்த்து 56% மற்ற நாடுகள் 40 லிருந்து & 60% வரை மக்கள் பணத்தை எடுத்துக் கொண்டு பற்றாக்குறை பட்ஜெட் போடுகிறார்கள்.

ஊழல் ஒழிப்பின் காரணமாக தற்போதைய GDP 43000 டாலர்கள் 2020ல் 55,000 தொடும் என்கிறார்கள். அது சாத்தியமானால் உலகின் 10 பணக்கார நாடுகளில் சிங்கப்பூர் ஒன்றாகிவிடும்.

என்ன இருந்தும் ஜனநாயகம், சுதந்திரம் கூடுதலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இங்கு இருக்கிறதா? என்ற கேள்விக்கு விடையாக இவைகளை வைத்துக் கொண்டுள்ள நாடுகள் மக்களின் அடிப்படை வசதிகளுக்காக அல்லாடுவதைச் சொல்லலாம்.

இவ்வருடம் அநேகமாக மே, ஜூன் மாதங்களில் தேர்தல் நடக்கவிருக்கிறது, வாக்களிப்பது சிங்கப்பூரில் கட்டாயம் தகுந்த காரணங்கள் இல்லாமல் வாக்களிக்காமல் இருப்பது குற்றம். அப்படியும் 2006 தேர்தலில் 72,000 பேர் வாக்களிக்கவில்லை. 60,000 பேர் தகுந்த காரணங்கள் சொல்லி இந்தத் தேர்தலில் 1965க்குப் பிறந்த Post-65 இளந்தலைமுறை வாக்களிக்கவிருக்கிறார்கள். புதிய தலைமுறை வாக்காளர்களுக்காகப் புதிய தலைமுறை வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் அறிவித்து வருகின்றன.

மக்கள் செயல்கட்சி இதுவரை 12 புதிய வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. சென்ற தேர்தலை விட பட்டதாரி வாக்காளர்கள் இரண்டு மடங்காகி இருக்கிறார்கள்.

2006ல் 84க்கு 82ல் வெற்றி பெற்ற மக்கள் கட்சி ஊழல் ஒழிப்பில் குறிப்பிடத்தக்க நகரமாக்கிய இரண்டு லீக்களை விட்டால் அடுத்து யார் என்ற கேள்விக்கு எதிர்க்கட்சிகளிடமிருந்து கூட பதில் இல்லை, ஒரு சமயம் லீ குவான்யூ சொன்னார். ஒரு தடவை இலவசங்கள் கொடுத்துவிட்டால் அதை நாமே நினைத்தாலும் நிறுத்தமுடியாது, அதை விட நாட்டிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் எதுவுமில்லை என்றார்.

அண்டை நாடுகள் ஊழல் ஒழிப்பில் பின்தங்கியிருப்பது சிங்கப்பூரை அவ்வப்போது அசைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

இந்திய ஆயுதத் தொழிற்சாலை இயக்குநர் Sudipto gosh மீதான ஊழல் புகார்களை சி.பி.ஜ விசாரிக்க ஆரம்பித்தபோது அதில் முக்கிய பங்கு வகித்ததாக சிங்கப்பூர் நிறுவனங்கள், சிங்கப்பூர் டெக்னாலஜி மற்றும் மீடியா ஆர்க்கிடெக்ஸ் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டன.

ஒரு நிகழ்ச்சிக்காக டைரக்டர் – நடிகர் சேரன் சிங்கப்பூர் வந்திருந்தார், இவ்வளவு சுத்தமாக, அழகாக, ஊழலற்ற சிங்கப்பூரிலிருந்து விட்டு ஊருக்கு வந்தவுடன் பழக்கத்தை மாற்றிக் கொள்கிறீர்கள் ஏன் அப்படி? என்று கேட்டு கைதட்டல் வாங்கினார். அவருக்கு உற்சாகம் தொற்றிக் கொண்டது. சட்டத்தினரைப் பார்த்து கேள்வி கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம் என்றார்.

நண்பர் சசிகுமார் எழுந்து ‘‘இங்கிருப்பவர்களிடம் நல்ல பெயர் எடுப்பதற்கும் கைதட்டல் வாங்குவதற்கும் நம் நாட்டைப் பற்றி தரக் குறைவாகப் பேசும் பல பேச்சாளர்கள் மாதிரி நீங்களும் பேசுகிறீர்கள். நம் நாட்டில் பெருமை கொள்ளும் விஷயங்கள் எதுவும் இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். சேரன் ‘‘நான் என்ன சீனர்களிடமும் மலாய்க்காரர்களிடமா போய் சொல்கிறேன். தமிழர்களிடம்தான் சொல்கிறேன் என்றார். அதுவரை OK. ஆனால் கூட்டம் முடியும் தருவாயில் சேரன், சசிகுமாரை வம்புக்கிழுத்தார். தள்ளுமுள்ளு ஏற்படும் நிலை உருவானது. கூட்டம் ஏற்பாடு செய்தவர்களுக்குத் தர்மசங்கடமான நிலைமை

 இப்படி சத்தம் போட்டுக் கொண்டிருந்தால் சிங்கப்பூரில் போலீஸ் வந்துவிடும் என்று சொல்லிக் கூட்டத்தைக் கலைத்தோம்

thanks: http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=4188

திரு துரைசிங்கம் ஷி.சாமுவேல் முன்னாள் உயர்நிலை பள்ளிக் கல்விக் கழக இயக்குநர், பல ஆண்டுகளாக சிங்கப்பூர் வரலாற்று சங்கத்தின் தலைவராக இருந்தவர். அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு 1991ல் எழுதி வெளியிட்ட சிங்கப்பூர் ஹெரிடேஜ்என்ற சிங்கப்பூர் வரலாற்றுப் புத்தகம் சென்ற மாதம் இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டது. சிங்கப்பூரின் வரலாற்றுப் புகழ் மிக்க 160 இடங்களை 1800களிலிருந்து ஆரம்பித்து விவரித்துள்ளார்.

சென்ற மாதம் வெளியீட்டு நிகழ்வின்போது நான் சென்னையிலிருந்தேன். பல மாதங்களாக என்னிடம் நினைவுபடுத்திக் கொண்டிருந்த நிகழ்வுக்கு நான் செல்லவில்லை என்பதில் அவருக்கு என் மேல் பிரியமான வருத்தம். இரண்டாம் பதிப்பு புதிய புத்தகத்தைக் கொண்டு வந்துவிட்டு செல்லமாகக் கடிந்து கொண்டார். அவருடைய மாணவர்கள் அரசில் உயர் அதிகாரிகளாகவும், அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள். அவருடைய மாணவர் திரு ஆலன்டான் பழைய பதிப்பில் இருந்த கறுப்பு & வெள்ளைப் படங்களை மீண்டும் கலர் படங்களாக எடுத்துக் கொடுத்து புத்தகத்திற்குப் புதுப்பொலிவு சேர்த்திருக்கிறார்.

இரண்டாம் பதிப்பில்Euro Asian Association Community hall, சிங்களர்களின் சிரி லங்கராமயா புத்தர் கோவில், பிரணக்கான் சீனர்கள் மங்கள புத்தர் கோவில் மற்றும் செங் தெக்வே சீனக் கோவில் சிங்கப்பூர் இந்தியர் சங்கம் இவற்றைப் புதிதாக இணைத்துள்ளார். திரு wong kan seng துணைப்பிரதமர் அவருடைய மாணவர். புத்தகத்திற்கு அணிந்துரை வழங்கியுள்ளார்.

புக்கிட லாரங்கான்என்றழைக்கப்பட்ட தற்போதுள்ள போர்ட் கேனிங் பார்க்கில் ஆரம்பித்து பிலிப்ஸ் ரோட்டிலுள்ள Yue Ha Qing Mian கோவில் காவல் காக்கும் கடல் தெய்வக் கோவிலுடன் முடித்துள்ளார்.

முக்கியமான வரலாற்று இடமான ஹாவ்பார்வில்லாடைகர் பாம் கார்டன் அவருடைய இரண்டு தொகுப்புகளிலும் இடம்பெறவில்லை. அதைப்பற்றிக் கேட்டேன். இன்னும் சில இடங்களைச் சொல்லி அதைப்பற்றி விரிவாகச் சொல்வதாகச் சொல்லியிருக்கிறார். 1970 களில் சிங்கப்பூர் வந்து திரும்பியவர்கள் தவறாமல் பார்க்கும் இடம் டைகர் பாம் கார்டன் உலகம் சுற்றும் வாலிபனில் சிரித்து வாழ வேண்டும்…. சிக்கு மங்கு செச்சப்பாப்பாஎன்ற பாடல் வந்த புதிதில் திரும்பத் திரும்ப டைகர் பாம் கார்டன் சென்று பார்த்தவர்கள் ஏராளம்.

பாஸிர் பான்ஞ்சாங் ரோட்டிலுள்ள Haw par villa வை நிர்மாணித்தவர்கள் ஆபூன் ஹாவ் மற்றும் அவருடைய சகோதரர் ஆ பூன் பார். 1900களில் ரங்கூனில் (மியான்மர்) பிறந்தவர்கள். அவர்களுடைய தந்தை ஒரு மூலிகை மருந்து வியாபாரி ஆ சூன் கின் என்று அவர் விற்ற பாம்புத் தைலம் அந்தக் காலத்தில் மிகவும் பிரபலம், அவருடைய மகன்கள் இருவரும் தென்கிழக்காசியாவில் அந்தத் தைலத்தை மறு உருவாக்கம் செய்து தலைவலியைப் போக்கும் நிவாரணியாக விற்றுப் பெரும் பணக்காரர்கள் ஆனார்கள்.

1920களில் சிங்கப்பூரில் குடியேறியவர்கள் கடற்கரை ஓரம் அமைந்துள்ள இடத்தை விலைக்கு வாங்கி 1930களில் டைகர் பாம் கார்டனை உருவாக்க முனைந்தார்கள். ஐரோப்பாவிலிருந்து மரச் சாமான்கள் வரவழைக்கப்பட்டன. அதில் நிறுவப்பட்ட பல கோபுரங்களில் ஆரம்பத்தில் தங்கக் கோடுகளால் அலங்கரிக்கப்பட்டதாகக் கூறுவார்கள்.

கன்பூசியஸ் தத்துவக் கோட்பாட்டில் அமைந்து உருவச் சிலைகள் சுமார் 1000 நிறுவப்பட்டன. சிங்கப்பூரில் பழம் பெருமை மிக்க பூங்கா 1937களில் தென்கிழக்காசியாவில் போர் மேகம் சூழ ஆரம்பித்த சமயத்தில் வேலைகள் தலைப்பட்டு நின்றது.

ஆபூன் ஹாங் ஹாங்காக்கிற்கும், ஆபூன் பார் ரங்கூனுக்கும் தப்பி ஓடினார்கள். அதன் பிறகு திரும்பி வந்த ஆபூன் ஹாவ் அளன் விரும்பியபடி பூங்காவை அழகூட்டினார்கள். 1970 களில் மக்கள் திலகம் எம்.ஜிஆர். சிரித்து வாழ வேண்டும் என்ற பாடலை இங்குள்ள சிரிக்கும் புத்தர் சிலையைமையமாக வைத்து எடுத்தார். ஆனால் அப்போது அவர் உலகம் சுற்றும் வாலிபனில் செல்வி ஜெயலலிதா நடிக்க வேண்டும் என்ற நெருக்கத்தால் கொடுத்தாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உரசலும் அவரைச் சிரிக்க முடியாமல் நோகடித்தன என்று சொல்வார்கள்.

அத்துடன் டைகர் பாம் கார்டனில் சிரிக்கும் புத்தர் அவ்வளவு பிரசித்தம் அல்ல. அங்குள்ள 60 மீட்டர் நீளமுள்ள டிராகனும், Ten Courts of hall என்ற பகுதியும் அங்கு முக்கியமானவை.

நம்ம ஊர் எமனைப் போல்”Yama” என்ற கடவுள் Tew courts of hell ல் தப்பு செய்தவர்களுக்கு தண்டனை கொடுக்கும் மாதிரி சிற்பங்கள் பார்க்க மிகவும் பயங்கரமாக இருக்கும்.

வருடத்திற்கு ஒரு மில்லியனாக இருந்த சுற்றுலா பயணிகள் வருகை குறைய ஆரம்பித்தவுடன் 1985ல் சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் 80 மில்லியன் செலவில் இதைப் புதுப்பித்து நுழைவுக் கட்டணம் வசூலித்தது. ஆனால் அதில் சதவீதமாக வருகையாளர்கள் குறைந்ததால் இலவசமாக காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை தற்போது பழைய டைகர் பாம் கார்டன் என்ற பெயரிலேயே செயல்படுகிறது.

Mr Teo Veoh Seng (வயது 76) 1948ல் தனது 13 வது வயதில் இங்கு ஆரம்பித்த சிலைகளைப் பராமரிக்கும் வேலையை விடாமல் வார நாட்களில் தினமும் இன்னும் தொடர்ந்து பார்த்து வருகிறார். பூங்கா கட்ட ஆரம்பிக்கும்போது சிலைகளுக்கு அஸ்திவாரம் போட்ட விஷயங்களை இன்னும் நினைவு கூர்கிறார். இங்குள்ள 2 மீட்டர் உயரமுள்ள சில சிலைகளை 5 பேர் சேர்ந்து மாதக் கணக்கில் செய்து இடிப்பார்களாம். தன்னுடைய குடும்பத்திற்கு வேலையும் புகலிடமும் கொடுத்த ஆபூன் ஹாங் இறக்கும் வரை வருடந்தோறும் இங்கு வந்து இங்குள்ள குடும்பங்களுக்கு அங்பாங் கொடுத்துவிட்டுச் செல்வாராம்.

 

இன்றைய நவீன உலகம் வரலாற்றை அறிவதில் அவ்வளவு ஆர்வமாக இல்லை என்று தன்னைப் பேட்டி கண்ட டிவி நிருபரிடம் முறைபட்டுக் கொண்டார். டைகர் பாம் கார்டனைமூடிவிட்டால், அத்துடன் தன் வேலைக்கும் முடிவு வந்துவிடும் என்கிறார்.

 

 

 

சென்னையில் ஒரு வில்லி யேக்கைப் பார்த்தேன். கோயம்பேடு ஏரியாவில் அரசியல் கட்சிகள் தங்கள் கொள்கைப் பிடிப்பின் மீது ஏறி நின்று தங்களுக்குக் கிடைக்கப் போகும் இடங்களைப் பற்றிய எண்ணிக்கை தெரியாமல் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கத்தில் கொடும்பாவி எரிக்கப்பட்ட சாம்பலில் சிலர் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார்கள். நான் பார்த்த வில்லி ஜேக் அந்தக் கூட்டத்தில் சாப்பிட்டுவிட்டு எறிந்த பொட்டலங்களையும் சிகரெட் துண்டுகளையும் சேகரித்து குப்பைத் தொட்டியில் அள்ளிக் கொண்டு வந்து போட்டுக் கொண்டிருந்தார். குப்பைத் தொட்டியைச் சுற்றிலும் நின்று கொண்டு புகைபிடிக்கவும் சிறுநீர் கழிக்கவும் கூட்டம் அலை மோதியது. குப்பைத் தொட்டியின் அடிப்பாகம் காணாமல் போயிருந்தது. Mr.வில்லி ஜேக் மேலாடை எதுவுமில்லாமல் காற்சட்டையும் அரை குறையாக அணிந்திருந்தார். குப்பைகள் சேர சேர அவற்றை அள்ளிக் கொண்டு ஒரு இடத்தில் குவிப்பதில் குறியாக இருந்தார். தேர்தலைத் திருவிழா மாதிரி கொண்டாடுவார்கள் என்று ஒரு கலாச்சாரம் பேசப்படுகின்றது. சிங்கப்பூரிலிருந்து வந்து அந்தக் கலாச்சாரத்தை வேடிக்கை பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது. அது சரி, அந்த ‘வில்லி ஜேக்’ யார் என்று கேட்கிறீர்கள். அவர் ஸ்காட்லாந்தின் நகர மண்டபத்தில் கழிவறைப் பராமரிப்பாளர். தன் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகுதான் இந்த உலகத்தில் இதுவரை எதுவும் சாதிக்கவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தவருக்கு நகரத்தின் கழிவறை பராமரிப்பாளர் வேலை கொடுக்கப்பட்டது. இதில் ஏதாவது சாதிக்கவேண்டுமே என்று மன உந்துதலில் கழிவறையைத் தன் பிள்ளையைப் போல் கவனிக்க ஆரம்பித்தார்.

கழிவறைக்குத் தோரணங்கள் கட்டினார். தான் எழுதிய கவிதைகளை அதில் ஒட்டி வைத்தார். மணம் பரப்பும் ஊதுவத்திகளை எரிய விட்டு எந்நேரமும் கழிவறையை சுகந்த மணத்துடன் வைத்திருந்தார். அவருக்கு நகராட்சி பல விருதுகளைக் கொடுத்தது. பத்திரிகைகள் போட்டி போட்டுக் கொண்டு அவர் பேட்டியை வெளியிட்டன. சுற்றுலாப் பயணிகள் அவருடன் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள். அவர் வாழ்வில் அனுபவத்தில் அறியாத புது உலகத்தை அந்தக் கழிவறை பராமரிப்பில் கண்டார். இந்த மாதிரி ஏதோ ஒரு கனவுடன்தான் சென்னை வில்லி ஜேக் குப்பைகளை அள்ளிப் போட்டுக் கொண்டிருந்திருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால் அவருக்கு யாராவது ஒரு தேநீர் வாங்கிக் கொடுத்திருப்பார்களா என்பது சந்தேகம்.

சாப்பிடுவது, தூங்குவது, அடுத்தபடியாக கழிவறைக்குச் செல்வது. அதை சுத்தமாக வைத்திருப்பது என்று தனிமனித ஒழுக்கத்தின் குறியீடு மட்டுமல்ல, அது ஒரு சமூகத்தின் கலாச்சாரக் குறியீடாக மற்ற நாடுகளில் மதிப்பிடுகிறார்கள்.

2001 நவம்பரில் ஆரம்பிக்கப்பட்ட உலக் கழிவறைச் சங்கம் தற்போது 53 நாடுகளில் இயங்குகிறது. 2008ல் அதன் தலைவர் Mr.Simக்கு ‘டைம்’ பத்திரிகை Hero of Environment” விருது வழங்கிச் சிறப்பித்தது.

சமீபத்தில் ஜப்பான் சென்றவர்களுக்குத் தெரியும் ‘நாரித்தா’ விமான நிலையத்தில் கழிவறையைக் காண கண் கோடி வேண்டும். அவை Air drying Machanism ,இல் இயங்குகின்றன. Bowlல் நாம் உட்கார்ந்தவுடன் சிறுநீரின் ‘சர்க்கரை’ அளவைக் கூட தெரிந்து கொள்ளலாம். ‘டாய்லெட்’ என்ற வாசகத்திற்குப் பதிலாக ‘வாஷ்லெட்ஸ்’ என்ற வாசகத்தை உபயோகிக்கிறார்கள். ஒரு கழிவறைப் பகுதியில் 38 வகையான பட்டன்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

டாய்லெட் Bowl எப்போதும் வெதுவெதுப்பாக சூடாக இருக்கும். வெளியில் குளிராக இருப்பதால் கொஞ்சநேரம் அதில் உட்கார்ந்திருக்க மாட்டோமா என்று தோன்றும். சுத்தம்செய்வதற்கும் ‘‘தானியங்கிமுறைதான்.’’ நாம் குறிப்பிட்ட இடத்தை மட்டும் லாவகமாக காட்டி சரியான வேகம், தண்ணீர் சூடு இவற்றிற்கான பட்டன்களை அழுத்தினால் போதுமானது. நம்மை சில நிமிடங்களில் சுத்தம் செய்துவிடும். அடுத்து ஒரு பட்டனை அழுத்தினால் உலர்ந்த காற்று ஈரத்தை உறிஞ்சிவிடும். எவ்வளாவு சுகமான அனுபவம்! பிரபலமான ஜப்பானிய எழுத்தாளர் TANIZAKI’ கூறியதாக ஒரு செய்தி படித்தேன். ‘என் கற்பனைக் குதிரை ஜப்பான் கழிவறைகளில் நாலுகால் பாய்ச்சலில் வேகமெடுக்கிறது’ என்கிறார்.

ஆலன் சூன்’ என்ற சிக்காக்கோ பல்கலைப் பேராசிரியர் கழிவறைகளைப் பற்றி ஒரு ஆய்வு வெளியிட்டிருக்கிறார். பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா மூன்று நாடுகளிலும் டாய்லெட்டை ஃபிளஷ் பண்ணுவது ஒரே மாதிரியாக இருக்கிறது. அவர்களுடைய அரசியலைப் போல என்கிறார். 1960களில் மேற்கத்திய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பத்தை வழக்கம் போல ஜப்பானியர்கள் மேன்மைப்படுத்தி மிகத் தொழில்நுட்பம் வாய்ந்த கழிவறைச் சாதனங்களை அந்த நாடுகளுக்கே திரும்பவும் விற்று வருகிறார்கள்.

மேற்கு நாடுகளுக்கு அவ்வளவாக நான் பயணம் சென்றதில்லை. அமெரிக்காவில் urilift என்ற கழிவறையைப் பற்றி நண்பர்கள் கூறியிருக்கிறார்கள். முக்கியமான போக்குவரத்து சந்திப்புக்களில் பகல் நேரத்தில் கழிவறைகள் பூமிக்குள் சென்றுவிடும். இரவு நேரங்களில் முளைத்து வந்தது மாதிரி வெளியே வந்துவிடும். ஒரே நேரத்தில் மூன்று பேர் உபயோகப்படுத்தலாம். 2002 ல் ஜப்பானும் கொரியாவும் உலகக் கிண்ண கால்பந்து போட்டியை இணைந்து நடத்தியபோது சியோல் நகர மேயருக்கு ஒரு ஜடியா வந்து பல இடங்களில் ‘‘காற்பந்து மாதிரி’’ கழிவறைகளைக் கட்டி வைத்திருக்கிறார். தற்போது அவை சுற்றுலாதளங்கள்.

உலகின் மிகப்பெரிய கழிவறைக் கட்டிடம் சீனாவிலுள்ள Chonging என்ற நகரில் உள்ளது. இதில் 30 ஆயிரம் சதுர அடி பரப்பில் சுமார் 1000 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. தாய்லாந்திலிருந்து மாணவர் பரிமாற்றத் திட்டத்தில் என் மகன் தாய்லாந்து சென்று திரும்பிய பிறகு தாய்லாந்திலிருந்து ஒரு மாணவர் என் வீட்டிற்று வந்திருந்தார். அவர்கள் கழிவறையை ‘Hongnam” என்று சொல்கிறார்கள். அதாவது தண்ணீர் அறை என்று சொல்கிறார்கள். கழிவறை சென்று வருவதைப் பயபக்தியுடன் செய்யும் ஒரு நாடு தாய்லாந்து.

என் வீட்டில் தங்கியிருந்த பையனுக்கு ‘கழிவறை’ விஷயத்தில் குறைவந்துவிடக் கூடாதே என்று அவன் திரும்பிச் செல்லும்வரை பயந்து கொண்டிருந்தேன்.

கொரியாவில் பல இடங்களில் வரவேற்பறையே கழிவறையாக இருக்கிறது. ‘Toilets are not always private”என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கிறார்கள். டிசம்பர் மாதத்தில் கொரியாவில் வெப்பநிலை 10 டிகிரிக்கும் குறைவாக இருக்கும் கழிவறைகள் எப்போதும் சூடாக இருப்பதால் உள்ளே போய்விட்டுத் திரும்ப மனம் வராது.

சிங்கப்பூரில் சுமார் 30 ஆயிரம் கழிவறைகள் உள்ளன. அதில் சுமார் 1200 கோப்பிக் கடைகளில் இருக்கின்றன.

ஒவ்வொரு வருடமும் ‘‘Loo carnival.”

உணவுக் கடை சங்கத்தின் சார்பாக நடத்துகிறார்கள். ஒன்று, இரண்டு விரல்கள் சிக்னலுக்கு பயன்படுத்திவிட்டு சிங்கப்பூரில் குடியேறியவுடன் இங்குள்ளவர்கள் அடிக்கடி ‘Loo” போகவேண்டும். என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள்.

அப்படி என்றால் என்ன என்ற சந்தேகம் எனக்கு ரொம்ப நாளாக இருந்தது. அது வேறொன்றுமில்லை.

‘‘Let us observe ourselves”

இந்த வருடம் தெம்பனிஸ் கோப்பிக் கடை 21 சிறந்த கழிவறைக்கான 5 நட்சத்திர விருது பெற்று 10,000 வெள்ளி பரிசாகப் பெற்றிருக்கிறது.

ஜப்பானில் இருப்பது மாதிரி 38 பட்டன்கள் கழிவறை உபகரணம் வாங்கி உட்காரப் பலமுறை உட்கார்ந்து யோசிக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் கழிவறைக் கலாச்சாரம் பற்றி நினைக்கவே அறுவெறுப்பாக இருக்கிறது. சென்னையில் உணவு சாப்பிட்டதில் வயிற்று உபாதை ஏற்பட்டுவிட்டது. நான்கு நாட்களாக கழிவறை பயத்தில் கெஸ்ட் ஹவுஸிலிருந்து வெளியே வராமல் பட்ட அவஸ்தையை பற்றி மனுஷ்ய புத்திரனிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

அவர் ‘‘பொதுக் கழிவறைகள் மட்டுமல்ல மக்கள் குடியிருக்கும் வீடுகளிலும் கூட கழிவறைகள் முறையாக இருக்கிறதா என்ன? தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்திருக்கிறேன். கழிவறையை மக்கள் ஒரு பொருட்டாக நினைக்காமல் அசுத்தம் செய்வது சக மனிதர்களிடையே காட்டும் வெறுப்பின் அடையாளம் என்றுதான் சொல்லவேண்டும்” என்றார். கவிஞனின் அந்த வார்த்தையின் பாரம் தாங்காமல் வெளியில் காயத்ரியிடம் என் புத்தக வெளியீட்டைப் பற்றி என்ன பேசினேன் என்று கூட ஞாபகமில்லை. அறைக்கு வந்து இதை எழுதியிருந்த பிறகுதான் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருந்தது.

thanks: http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=4137

அன்னமும் அறமும்

Posted: ஏப்ரல் 15, 2011 in பத்தி

இன்னும் குளிர்கிறது அம்மா ஊட்டிய பழஞ்சோறு என்ற கவிதையைப் படித்தவுடன் அந்திமக் காலம் வரை நெஞ்சில் நிற்கும் அன்னையின் கைகள் நினைவுக்கு வந்தன. அத்துடன் சில நேரங்களில் ‘‘அன்னமுகம்மதுவை’’ கீழே சிந்தாமல் சாப்பிடு என்று அந்தக் கைகள் அடித்ததும் நினைவுக்கு வந்தது. உணவை அன்ன கோசம் என்றும் சொல்கிறார்கள். உணவு உண்டு விட்டு எழுந்திருக்கும்போது ‘பருக்கைகள்’ சிந்தாமல் இருக்கிறதா என்று பார்க்கும் பழக்கம் சிலருக்கு அனிச்சைச் செயல். ஆனால் உலகில் மூன்றில் ஒரு பங்கு உணவுப் பொருட்கள் உண்ணப்படாமலேயே வீணாகின்றன என்கிறது புள்ளிவிபரங்கள்.

6.7 பில்லியன் மக்கள் தொகை 2050ல் 9 பில்லியனாக மாறும்போது 21-ஆம் நூற்றாண்டின் மிகச் சிக்கலான பிரச்சினையாக உணவுப் பங்கீடு ஆகப் போகிறது என்று எச்சரிக்கிறார்கள். கொஞ்ச காலமாகக் குறைந்துவரும் குழந்தைப் பிறப்பு விகிதம் 2050 க்கு பிறகு இன்னும் குறைய ஆரம்பிக்குமாம். அது ஓரளவு உணவுப் பங்கீட்டு முறையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று எடுத்துக் கொண்டாலும் 2.5 பில்லியன் மக்கள் உணவுப் பஞ்சம் தலை விரித்தாடும் நாடுகளில் பிறப்பார்கள் என்றும் அதனால் இது மேலும் சிக்கலாவதற்கு வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

2005-ல் அனைவருக்கும் உணவு என்ற திட்டத்தை 1996-களில் அறிவித்த உலக உணவு நிறுவனம் அதை இதுவரை நிறைவேற்ற முடியவில்லை என்பதுதான் இன்றைய நிலை. வளர்ந்த நாடுகள் தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டிற்கும், வணிக வாய்ப்புகளுக்கும் மற்ற நாடுகளில் தங்களுடைய மிதமிஞ்சிய உற்பத்திப் பொருட்களைத் திணிப்பதற்கும் பயன்படுத்துகின்றன. இந்த சூழ்நிலையில் தட்டில் மிச்சம் வைத்துவிட்டுச் செல்வதைக் கௌரவமாக நினைக்கும் மனிதர்கள் அதிகரித்திருப்பதாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இங்கிலாந்தில் தினந்தோறும் 4.4 மில்லியன் ஆப்பிள்களைத் தூக்கி எறிகிறார்கள். 40 சதவீதம் காய்கறிகள் சமைக்கப்படாமல் குப்பைத் தொட்டிக்குப் போகின்றன. ஒவ்வொரு நாடும் தோராயமாக இதே மாதிரி புள்ளிவிபரங்களைக் கொண்டுள்ளன. சிங்கப்பூரில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் தினமும் 400 கிலோ மிஞ்சிய உணவுப் பொருட்களும் அங்காடி உணவுக் கடைகளில் 500 கிலோவும் குப்பைத் தொட்டியில் விழுகின்றன. சராசரியாக ஒரு நபர் 860 கிராம் குப்பையைப் போடுகிறார். அது வருடத்தில் சுமார் 300 கிலோ குப்பையாக உருவெடுக்கிறது. NEA புள்ளி விபரங்களின்படி 58 சதவீதக் குப்பைகள் மறுபயனீடு செய்யப்படுகின்றன. 2030க்குள் இது 70 சதவீதமாக உயர்த்த திட்டங்கள் வைத்திருக்கிறார்கள்.

புள்ளிவிபரங்களைத் தருவது இருக்கட்டும், களத்தில் இறங்கி சில செய்திகளின் பின்னணியை BBC ஆராய்ந்த பல விஷயங்களில் குப்பைத் தொட்டிக்குச் செல்லும் உணவுப் பொருட்கள் உயிர்ப்புள்ள சாப்பிடத் தகுந்த உணவுகள்தான் என்று நிரூபிக்க the great british waste menu என்று பெயரிட்ட நிகழ்ச்சியை சென்ற மாதம் ஏற்பாடு செய்தது. அதில் மிகச் சிறந்த 4 சமையல் நிபுணர்கள் பங்கேற்றனர். லண்டன் கவுன்சிலில் தூக்கி எறியப்பட்ட உணவுப் பொருட்கள், இரண்டு நாட்கள் காலாவதியானவை என்று தூக்கி எறியப்பட்ட காய்கறிகள், சூப்பர் மார்க்கெட்டில் பயன்படுத்த முடியாதவை என்று தூக்கிப் போடப்பட்ட உணவுப் பொருட்கள் இவைகளைத் தரம் வாரியாகப் பிரித்தெடுத்து உணவு சுகாதார பராமரிப்பு நிலையத்துக்குக் கொண்டு சென்று பரிசோதித்து 100 சதவீத கிருமிகள் தொற்று தாக்காத உணவுப் பொருட்கள் என்று முத்திரை இடப்பட்டவுடன் உணவைத் தயாரித்தார்கள். இதில் மீன் வகைகளும் அடக்கம்.உணவு மிகவும் சுவையாக இருந்ததாக, உணவுப் பொருட்கள் எங்கிருந்து வந்தன என்ற விபரங்கள் தெரியாதவர்கள், தெரிந்தவர்கள் அனைவரும் புகழ்ந்தனர். இப்படி வருடத்திற்கு 2 பில்லியன் உணவுப் பொருட்கள் குப்பைக்குப் போவதைத் தடுத்து ஆப்பிரிக்க தேசங்களுக்கு அனுப்பி வைத்தால் அங்கு பஞ்சம் என்ற வார்த்தையே அழிந்துவரும் என்று முத்தாய்ப்பாக முடித்தார்கள்.

உலகிலேயே அமெரிக்கா மிகப் பெரிய உணவுக் கொடையாளி. ஆனால் அதில் சில அறங்கள் இருக்கின்றன. தன்னிடமுள்ள மிதமிஞ்சிய உணவுகளை ஏழை நாடுகளுக்குத் தருகிறது. 2002 ல் ஜாம்பியா, மரபணு மாற்றப்பட்ட கொடையாகக் கொடுக்கப்பட்ட உணவை மறுத்து திருப்பி அனுப்பியது. அமெரிக்க அதிகாரி சொன்னார், ‘‘பிச்சைக்காரர்களுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை’’ என்று. 2007 க்கு முன்பு 10 லிருந்து 20 சதவீகிதமே தங்கள் வருமானத்தில் உணவுக்காகச் செலவிடப்பட்ட மேலை நாட்டவர் தற்போது கூடுதலாகச் செலவழிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். ஆனால் ஏழை நாடுகளில் வருமானத்தில் உணவுக்காக 80 சதவீதம் செலவழிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

எக்கானமிஸ்ட்’ தலையங்கத்தில் ‘‘மலிவான உணவுக் காலங்கள் திரும்ப வருவது இனி சாத்தியமில்லை’’ என்று தலையங்கம் எழுதுகிறது. கோதுமை, மைதா, அரிசி விலைகள் வரலாறு காணாத அளவில் உயர்ந்த பின்பு உணவுக்கான போராட்டங்கள் பல ரூபங்களில் கம்போடியா, கேமரூன், எத்தியோப்பியா, ஹோண்டுராஸ், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் பரவ ஆரம்பித்துவிட்டன. எகிப்தின் போராட்டமே கூட ‘‘நாங்கள் பட்டினி’’ என்ற வாசகத்துடன் மூர்க்கமாக நடந்து முடிந்தது.

ஐ.நா. சபையின் கணக்குப்படி தினந்தோறும் உணவுப் பற்றாக்குறையால் 25,000 பேர் மடிகிறார்கள். 854 மில்லியன் மக்கள் அது தொடர்பான குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது. ஆனால் அதே நேரத்தில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் அஜீரணக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்கிறது. பெட்ரோல் போடும்போது ‘‘ஷாப்பிங்’’ பண்ணுவதற்கு ஏற்ற கடைகள் சிங்கப்பூரில் வந்துவிட்டன. 1980களில் பிரிட்டனில் தாட்சர் ஆட்சிக் காலத்தில் வேகமெடுத்த சூப்பர் மார்க்கெட் கலாச்சாரம், மின்சார சாதனங்கள், துணிகள், பெட்ரோல் என விற்றுக் கொண்டிருந்துவிட்டு இப்போது டிரைகிளீனிங், கண்சோதனை, காரை இன்சூரன்ஸ் பண்ணுவது, வளர்ப்புப் பிராணிகளுக்கு இன்சூரன்ஸ் இப்போது உங்கள் உயிலைக் கூட ‘ஷாப்பிங் மாலில்’’ எழுதிக் கொள்ளலாம். அத்துடன் ‘‘அங்காடி உணவுகள்’’ பக்காவாக மடிக்கப்பட்டு விற்பனைக்கு உள்ளன. சாண்ட்விச், சுட்ட தூனா மீன்கள், பொரித்த கிழங்கு வகைகள், கடல் உணவு, காக்டெய்ல் என்று அடுக்கி வைத்திருக்கிறார்கள். நிச்சயமாக ஒரு நாளில் இவை போனியாகாது. நான் அங்குள்ள மேலாளரிடம். “நாளை மிச்சமிருந்தால் ‘‘ என்ன செய்வீர்கள்’’ என்று கேட்டேன். தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பி விடுவதாகச் சொன்னார். சில கடைகள்தான் தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளன.

என் கடையில் வேலை செய்யும் பெரியவர் சாப்பிட்டு தட்டையை சுத்தமாகக் காலி செய்துவிட்டு ஐந்து விரல்களையும் வாயில் வைத்து சூப்பி எடுப்பது பார்ப்பதற்குக் கொஞ்சம் அசௌகரியமாக இருக்கும். ஆனால் உணவை வீணாக்கக் கூடாது என்பதில் அவருக்குள்ள அறச் சிந்தனை மிகவும் போற்றுதற்குரியது.

இரவு 10 மணிக்கு மேல் போடும் பரோட்டா சில சமயங்களில் மிஞ்சி விடும். அடுத்த நாள் வைத்திருக்கக் கூடாது என்பது என்னுடைய அறம். பெரியவர் வீட்டில் பெரிய குடும்பம். நான் அவரிடம் பரோட்டா மிஞ்சிப் போன ஒரு நாளில் “பரோட்டா மிஞ்சிவிட்டது. பிள்ளைகளுக்கு எடுத்துச் செல்லுங்கள்” என்றேன். அவர் சொன்னார். “தப்லே அபாங் இன்றைக்கு நான் எடுத்துப் போய்விடுவேன். நாளை அத்தா மீந்துபோன பரோட்டா நிச்சயம் கொண்டு வருவார்கள் என்று அவர்கள் எண்ண இடம் கொடுக்கக்கூடாது. அத்துடன் உங்கள் கடையில் வேலைபார்க்கும் என் மனதில் ‘இன்று பரோட்டா மிஞ்ச வேண்டும். பிள்ளைகளுக்கு எடுத்துப் போகலாம்’ என்ற எண்ணம் வர ஆரம்பித்துவிடும். தோம்பில் போட்டு விடுங்கள். சுக்குர் செய்யுங்கள் ’’ என்றார்.

அவருடைய அறம் என்னைத் திகைப்பில் ஆழ்த்தியது.

thanks: http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=4078

சிங்கப்பூர் கிளிஷே – 7

Posted: ஏப்ரல் 6, 2011 in பத்தி
குறிச்சொற்கள்:

நேற்று மாலை
வீடு திரும்பும் போது
எல்லாப் பூக்களும் உதிர்ந்து
பனியில் நடுங்கிக் கொண்டிருந்த
ஒரு பூச்செடி
காலையில் வேறோரு பூவோடு
வெயிலில் சிரித்துக் கொண்டிருந்தது
இரண்டு நாட்களுக்கு முன்பு
ஒரு விபத்தினால் காயமுற்றிருந்த
சாலை மரமொன்று
ஊன்று கோல் துணையோடு
வாழ்க்கை தொடங்கியிருக்கிறது
அடைமழை பெய்த இரவில்
இறுக்கமாகிக் கிடந்த இந்த வானம்தான்
வெயிலாய் மலர்கிறது.

                                                                                                                                                               விஸ்வநாதன்

ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பமும் சுனாமியும் அந்நாட்டு மக்களை இன்னொரு சோதனைக்கு ஆளாக்கியிருக்கிறது, அவர்கள் மீண்டு வருவார்கள் இதை அவர்கள் பலமுறை நிறுவித்துக் காட்டியிருக்கிறார்கள்.

ஜப்பானின் அவர் பகுதியில் 1703ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிப் பேரழிவு சுமார் ஒரு லட்சம் மக்கள் மாண்டு போகக் காரணமாக அமைந்தது அதன்பிறகு ஏற்பட்ட பல சிறு இயற்கைப் பேரிடாகளுக்குப் பிறகு சென்ற வெள்ளிக் கிழமை(10.03.2011) ஏற்படுத்திய பாதிப்புகள் மீண்டும் அவர்களை அனைத்துப் பார்த்திருக்கிறேன்.

1883இல் இந்தோனேஷியாவில் கடலுக்கடியில் ஏற்பட்ட பிரமாண்ட எரிமலை வெடிப்புக்கள் கிராக…… தீவை சுவடில்லாமல் அழிக்கக் காரணமாக அமைந்தது.

பக்கத்து நாடான இந்தோனேஷியாவில் பல முறை நில நடுக்கம் ஏற்பட்டாலும் சிங்கப்பூரின் கடல் ஆழமும் நில அமைப்பும் தீவின் பாதுகாப்பிற்குப் பல சாதகமான அம்சங்களை வழங்கியிருக்கின்றது.

சிங்கப்பூரில் சுனாமி ஏற்படக் கூடிய பகுதிகள் 1000 கி.மீட்டர் தூரத்திலுள்ள அந்தமான் தீவுப் பகுதியிலும், 600 கி.மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மேற்கு பிலிப்பைனைச் சுற்றியுள்ள தீவுப் பகுதியிலும் இருக்கின்றன. மணிலா Trench-இல் 9 ரிக்டர் அளவுள்ள பூமி அதிர்வு ஏற்பட்டால்கூட, சிங்கப்பூரில் சுனாமி வருவதற்கு 2மணி நேரம் பிடிக்கும் அதுவும் கூட சுமார் 0.6 மீட்டர் உயரமுள்ள அலைகளைத்தான் உருவாக்கும் என்கிறார் Dr.Povel Toalich (Physical Oceanography Research Lab NUS).

2004 வரை சுமத்ராவில் இதுவரை ஏற்பட்டுள்ள பூகம்பங்கள் சுமார் 7.9 ரிக்டர் அளவில்தான் இருந்திருக்கின்றன. 9.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தால் ஏற்பட்ட சுனாமி பேரலை 2,25,000 மக்களைப் பலி கொண்டது.

சிங்கப்பூரில் இதுவரை கடல் அலைகள் உயர்ந்திருக்கிறதா என்றால் 1974இல் ஒருமுறை சாதாராண அலைகளை விட இரண்டு மடங்கு (சுமார் 3.9 மீட்டர்) உயரத்தில் கரையைத் தாக்கியுள்ளது.

இன்னும் 30 வருடங்களில் சுனாமி வரக்கூடிய சாத்தியங்களை ஒரு குழு ஆராய்ந்து, 8.8 ரிக்டர் அளவுள்ள நில நடுக்கம் மேற்கு சுமத்ராவிலுள்ள மெண்டாவி தீவுகளை தாக்குவதற்கு வாய்ப்புள்ளது என்று கூறியது. ஆனாலும் சுமத்ராவை சுற்றியுள்ள தீவுக் கூட்டங்கள் சிங்கப்பூருக்கு கேடயமாக இருக்கும் என்கிறார்கள்.

இந்தப் புள்ளி விவரங்கள் ஒருபுறம் இருக்க, நாட்டின் பூகோள அமைப்பை கால நிலைக்கேற்ப சீர்படுத்திச் சாதனை புரிந்துள்ளது சிங்கப்பூர் அரசு.

கடந்த மூன்று வருடங்களில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி வெப்ப நிலை, கடல் மட்ட அளவு மழை அளவு மூன்றும் அடத்த 2099இல் மாற்றத்துக்குள்ளாகும் அதன் விளைவாக வெப்ப அளவு 2.7 செல்ஸியிலிருந்து 4.4 செல்சிஸ் வரை உயரக் கூடும் என்கிறார்கள். அதனால் கடல் மட்டம் சுமார்59 சென்டிமீட்டர்கள்உயரும். 1991லிருந்து நில மீட்பு செய்யப்பட்ட இடங்கள் மற்றும் தாழ்வான பகுதிகள் சுமார் 66 சென்டிமீட்டர் கடல் மட்டத்திலிருந்து உயரமாக அமைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே விமான நிலையப் பகுதிகள் கடல் மட்டத்திலிருந்து சுமார்2 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இயற்கையுடன், சொற்கரிய செயல் திறன்களும் சேர்ந்த கலவையாக சிங்கப்பூரைச் சொல்லலாம்

இந்த நீண்ட காலப் பரப்பில் உலகில் எத்தனையோ மாற்றங்கள் ஆனாலும், மனித மனங்களில் அன்பு, பாசம் காதல், குடும்ப உறவுகள், நட்பு, பிரிவு மரணம் சார்ந்த அடிப்படையான மாற்றங்கள் எதுவும் நிகழ்ந்து விடவில்லை சென்ற மாதம் Marina Bay Sands-ல் நான் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்த மிஸஸ் பெங்கின் கதையைச் சொன்னால், நான் இப்படிச் சொல்வதின் காரணம் புரியும்

Marina Bay Sands-ல் ஒரு தண்ணீர் சிற்பத்தால் அமைக்கப்பட்டுள்ள விருப்பக் கிணற்றை பல பேர் பார்த்திருக்கிறீர்கள். அதன் பெயர் Rain Oculus. இது ஒரு அமெரிக்க சிற்பக் கலைஞரின் கலைப் படைப்பு, அன்று நான் சென்றிருந்தபோது தெற்கு ஆசிய மக்கள் கூட்டத்தோடு, சில ஆங்கிலேயர்களும் அந்தக் கிணற்றில்“சில்லரை வெள்ளிகள்”  தூக்கி எறிந்து கொண்டிருந்தார்கள்.

உண்டியல் காசு இதுவரை 22,000 வெள்ளி சேர்ந்திருக்கிறது. உண்டியல் போடும் கலாச்சாரம் அங்கெங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கிறது, ஒரு சீன மூதாட்டி 5 ஒரு வெள்ளிக் காசுகளை ஒவ்வொன்றாக உள்ளே எறிந்து கொண்டிருந்தார் அவரை எங்கேயோ சந்தித்த மாதிரி இருந்தது.

Rain Oculus ஒரு சுற்று சுற்றிவிட்டு லிப்டில் ஏறும்போது அதே மூதாட்டி. இப்போது அவர் என்னைப் பக்கத்தில் பார்த்து விட்டு “ஹை அஸார் ஃபாதர் என்று கேட்டார், எனக்கு சுருள் சுருளாக பழைய ஞாபகங்கள் வர ஆரம்பித்தன. அவர் நான் குடியிருந்த தேபான் கார்டன் வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர் மிஸஸ் பெங். அவர் ஒரு செயின் ஸ்மோக்கர். முன் வரிசைப் பற்கள் அனைத்தையும் இழந்திருந்தார். அதனால்தான் அவரை என்னால் அடையாளம் காண இயலவில்லை. அவர் கணவர் ஒரு பெயிண்டர் என்று மிஸஸ் பெங்தான் என்னிடம் ஒருமுறை சொன்னார்.

அந்தக் கணவர் வேலைக்குச் சென்று ஒருநாள் கூட நான் பார்த்ததில்லை. யாருடனும் பேசமாட்டார். சரியான ‘உம்மனாமுஞ்சி”, நான் அவருக்கு ‘மொசுறு’ என்று பெயர் வைத்திருந்தேன். அவர் பிள்ளைகளில் ஒருவர் உடல் ஊனமுற்ற சிறுவன். மிஸஸ் பெங்தான் வேலைக்குச் செல்வார். அந்த சிறுவனைத் தினமும் காப்பகத்துக்குக் கொண்டு சென்று பராமரிக்க வேன் வரும். அவனை அனுப்பி விட்டு இவர் வேலைக்குச் செல்வார். மிஸ்டர் பெங்குக்கு நான்‘மொசுறு’ என்று பெயர் வைத்திருந்தாலும் அதன் அர்த்தம் சமீபத்தில்தான் எனக்குத் தெரிந்தது எறும்பு வகைகளில் கடி எறும்பு, கட்டெறும்பு, கடுத்துவாய், அதற்கடுத்தபடி ‘மொசுறு’.  அவர் எப்படியிருக்கிறார் என்றேன்“ஹி இஸ் பாஸ் அவே” என்றார் அவர் தேபானில் வெள்ளி 16500-க்கு வாங்கிய வீடு இன்று அவர் பிள்ளைகள் வளர்த்து ஆளாக்க உதவியிருக்கிறது.

1960இல் வெள்ளி400 ஆக இருந்த GDP 100  மடங்கு உயர்ந்து, இன்று 40,000  டாலர்களாக வளர்ந்து நிற்கிறது. இப்படிப்பட்ட காரணிகள் தான் மிஸஸ் பெங் போன்ற ஆதரவற்றவர் களை வாழ வைக்கிறது. நான் அவரைச் சந்தித்த நிகழ்வை சொல்ல வந்தது, அந்த தேபான் கார்டன்16புளோக்கில் இருக்கும்போது தான் சுமத்ராவில் ஏற்பட்ட பூகம்பம், சிங்கப்பூரில் இருந்த எங்கள் புளோக்கை லேசாக ஆட்டம் காண வைத்தது.தலை கிறுகிறுவென்று சுற்றியது. மற்றபடி பொருட்கள் கீழே விழவில்லை. சில வீடுகளில் கீழே விழுந்ததாகச் சொன்னார்கள். புளோக்கில் குடியிருந்த அனைவரும் கீழே இறங்கிக் கட்டிடத்தையே பார்த்துக் கொண்டிருந்தோம்

சுற்றுச்சூழல், நாடாள்வோர், மீடியா இந்த சு.நா.மி நமக்கு அமைந்துவிட்டால் நம்ம பில்டிங் ரொம்ப ஸ்ட்ராங் எந்த சுனாமியும் அசைக்க முடியாது.!

thanks: http://thangameen.com/ContentDetails.aspx?tid=280