அன்னமும் அறமும்

Posted: ஏப்ரல் 15, 2011 in பத்தி

இன்னும் குளிர்கிறது அம்மா ஊட்டிய பழஞ்சோறு என்ற கவிதையைப் படித்தவுடன் அந்திமக் காலம் வரை நெஞ்சில் நிற்கும் அன்னையின் கைகள் நினைவுக்கு வந்தன. அத்துடன் சில நேரங்களில் ‘‘அன்னமுகம்மதுவை’’ கீழே சிந்தாமல் சாப்பிடு என்று அந்தக் கைகள் அடித்ததும் நினைவுக்கு வந்தது. உணவை அன்ன கோசம் என்றும் சொல்கிறார்கள். உணவு உண்டு விட்டு எழுந்திருக்கும்போது ‘பருக்கைகள்’ சிந்தாமல் இருக்கிறதா என்று பார்க்கும் பழக்கம் சிலருக்கு அனிச்சைச் செயல். ஆனால் உலகில் மூன்றில் ஒரு பங்கு உணவுப் பொருட்கள் உண்ணப்படாமலேயே வீணாகின்றன என்கிறது புள்ளிவிபரங்கள்.

6.7 பில்லியன் மக்கள் தொகை 2050ல் 9 பில்லியனாக மாறும்போது 21-ஆம் நூற்றாண்டின் மிகச் சிக்கலான பிரச்சினையாக உணவுப் பங்கீடு ஆகப் போகிறது என்று எச்சரிக்கிறார்கள். கொஞ்ச காலமாகக் குறைந்துவரும் குழந்தைப் பிறப்பு விகிதம் 2050 க்கு பிறகு இன்னும் குறைய ஆரம்பிக்குமாம். அது ஓரளவு உணவுப் பங்கீட்டு முறையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்று எடுத்துக் கொண்டாலும் 2.5 பில்லியன் மக்கள் உணவுப் பஞ்சம் தலை விரித்தாடும் நாடுகளில் பிறப்பார்கள் என்றும் அதனால் இது மேலும் சிக்கலாவதற்கு வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

2005-ல் அனைவருக்கும் உணவு என்ற திட்டத்தை 1996-களில் அறிவித்த உலக உணவு நிறுவனம் அதை இதுவரை நிறைவேற்ற முடியவில்லை என்பதுதான் இன்றைய நிலை. வளர்ந்த நாடுகள் தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டிற்கும், வணிக வாய்ப்புகளுக்கும் மற்ற நாடுகளில் தங்களுடைய மிதமிஞ்சிய உற்பத்திப் பொருட்களைத் திணிப்பதற்கும் பயன்படுத்துகின்றன. இந்த சூழ்நிலையில் தட்டில் மிச்சம் வைத்துவிட்டுச் செல்வதைக் கௌரவமாக நினைக்கும் மனிதர்கள் அதிகரித்திருப்பதாகப் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இங்கிலாந்தில் தினந்தோறும் 4.4 மில்லியன் ஆப்பிள்களைத் தூக்கி எறிகிறார்கள். 40 சதவீதம் காய்கறிகள் சமைக்கப்படாமல் குப்பைத் தொட்டிக்குப் போகின்றன. ஒவ்வொரு நாடும் தோராயமாக இதே மாதிரி புள்ளிவிபரங்களைக் கொண்டுள்ளன. சிங்கப்பூரில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் தினமும் 400 கிலோ மிஞ்சிய உணவுப் பொருட்களும் அங்காடி உணவுக் கடைகளில் 500 கிலோவும் குப்பைத் தொட்டியில் விழுகின்றன. சராசரியாக ஒரு நபர் 860 கிராம் குப்பையைப் போடுகிறார். அது வருடத்தில் சுமார் 300 கிலோ குப்பையாக உருவெடுக்கிறது. NEA புள்ளி விபரங்களின்படி 58 சதவீதக் குப்பைகள் மறுபயனீடு செய்யப்படுகின்றன. 2030க்குள் இது 70 சதவீதமாக உயர்த்த திட்டங்கள் வைத்திருக்கிறார்கள்.

புள்ளிவிபரங்களைத் தருவது இருக்கட்டும், களத்தில் இறங்கி சில செய்திகளின் பின்னணியை BBC ஆராய்ந்த பல விஷயங்களில் குப்பைத் தொட்டிக்குச் செல்லும் உணவுப் பொருட்கள் உயிர்ப்புள்ள சாப்பிடத் தகுந்த உணவுகள்தான் என்று நிரூபிக்க the great british waste menu என்று பெயரிட்ட நிகழ்ச்சியை சென்ற மாதம் ஏற்பாடு செய்தது. அதில் மிகச் சிறந்த 4 சமையல் நிபுணர்கள் பங்கேற்றனர். லண்டன் கவுன்சிலில் தூக்கி எறியப்பட்ட உணவுப் பொருட்கள், இரண்டு நாட்கள் காலாவதியானவை என்று தூக்கி எறியப்பட்ட காய்கறிகள், சூப்பர் மார்க்கெட்டில் பயன்படுத்த முடியாதவை என்று தூக்கிப் போடப்பட்ட உணவுப் பொருட்கள் இவைகளைத் தரம் வாரியாகப் பிரித்தெடுத்து உணவு சுகாதார பராமரிப்பு நிலையத்துக்குக் கொண்டு சென்று பரிசோதித்து 100 சதவீத கிருமிகள் தொற்று தாக்காத உணவுப் பொருட்கள் என்று முத்திரை இடப்பட்டவுடன் உணவைத் தயாரித்தார்கள். இதில் மீன் வகைகளும் அடக்கம்.உணவு மிகவும் சுவையாக இருந்ததாக, உணவுப் பொருட்கள் எங்கிருந்து வந்தன என்ற விபரங்கள் தெரியாதவர்கள், தெரிந்தவர்கள் அனைவரும் புகழ்ந்தனர். இப்படி வருடத்திற்கு 2 பில்லியன் உணவுப் பொருட்கள் குப்பைக்குப் போவதைத் தடுத்து ஆப்பிரிக்க தேசங்களுக்கு அனுப்பி வைத்தால் அங்கு பஞ்சம் என்ற வார்த்தையே அழிந்துவரும் என்று முத்தாய்ப்பாக முடித்தார்கள்.

உலகிலேயே அமெரிக்கா மிகப் பெரிய உணவுக் கொடையாளி. ஆனால் அதில் சில அறங்கள் இருக்கின்றன. தன்னிடமுள்ள மிதமிஞ்சிய உணவுகளை ஏழை நாடுகளுக்குத் தருகிறது. 2002 ல் ஜாம்பியா, மரபணு மாற்றப்பட்ட கொடையாகக் கொடுக்கப்பட்ட உணவை மறுத்து திருப்பி அனுப்பியது. அமெரிக்க அதிகாரி சொன்னார், ‘‘பிச்சைக்காரர்களுக்குத் தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை’’ என்று. 2007 க்கு முன்பு 10 லிருந்து 20 சதவீகிதமே தங்கள் வருமானத்தில் உணவுக்காகச் செலவிடப்பட்ட மேலை நாட்டவர் தற்போது கூடுதலாகச் செலவழிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். ஆனால் ஏழை நாடுகளில் வருமானத்தில் உணவுக்காக 80 சதவீதம் செலவழிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

எக்கானமிஸ்ட்’ தலையங்கத்தில் ‘‘மலிவான உணவுக் காலங்கள் திரும்ப வருவது இனி சாத்தியமில்லை’’ என்று தலையங்கம் எழுதுகிறது. கோதுமை, மைதா, அரிசி விலைகள் வரலாறு காணாத அளவில் உயர்ந்த பின்பு உணவுக்கான போராட்டங்கள் பல ரூபங்களில் கம்போடியா, கேமரூன், எத்தியோப்பியா, ஹோண்டுராஸ், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் பரவ ஆரம்பித்துவிட்டன. எகிப்தின் போராட்டமே கூட ‘‘நாங்கள் பட்டினி’’ என்ற வாசகத்துடன் மூர்க்கமாக நடந்து முடிந்தது.

ஐ.நா. சபையின் கணக்குப்படி தினந்தோறும் உணவுப் பற்றாக்குறையால் 25,000 பேர் மடிகிறார்கள். 854 மில்லியன் மக்கள் அது தொடர்பான குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது. ஆனால் அதே நேரத்தில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் அஜீரணக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்கிறது. பெட்ரோல் போடும்போது ‘‘ஷாப்பிங்’’ பண்ணுவதற்கு ஏற்ற கடைகள் சிங்கப்பூரில் வந்துவிட்டன. 1980களில் பிரிட்டனில் தாட்சர் ஆட்சிக் காலத்தில் வேகமெடுத்த சூப்பர் மார்க்கெட் கலாச்சாரம், மின்சார சாதனங்கள், துணிகள், பெட்ரோல் என விற்றுக் கொண்டிருந்துவிட்டு இப்போது டிரைகிளீனிங், கண்சோதனை, காரை இன்சூரன்ஸ் பண்ணுவது, வளர்ப்புப் பிராணிகளுக்கு இன்சூரன்ஸ் இப்போது உங்கள் உயிலைக் கூட ‘ஷாப்பிங் மாலில்’’ எழுதிக் கொள்ளலாம். அத்துடன் ‘‘அங்காடி உணவுகள்’’ பக்காவாக மடிக்கப்பட்டு விற்பனைக்கு உள்ளன. சாண்ட்விச், சுட்ட தூனா மீன்கள், பொரித்த கிழங்கு வகைகள், கடல் உணவு, காக்டெய்ல் என்று அடுக்கி வைத்திருக்கிறார்கள். நிச்சயமாக ஒரு நாளில் இவை போனியாகாது. நான் அங்குள்ள மேலாளரிடம். “நாளை மிச்சமிருந்தால் ‘‘ என்ன செய்வீர்கள்’’ என்று கேட்டேன். தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பி விடுவதாகச் சொன்னார். சில கடைகள்தான் தொண்டு நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளன.

என் கடையில் வேலை செய்யும் பெரியவர் சாப்பிட்டு தட்டையை சுத்தமாகக் காலி செய்துவிட்டு ஐந்து விரல்களையும் வாயில் வைத்து சூப்பி எடுப்பது பார்ப்பதற்குக் கொஞ்சம் அசௌகரியமாக இருக்கும். ஆனால் உணவை வீணாக்கக் கூடாது என்பதில் அவருக்குள்ள அறச் சிந்தனை மிகவும் போற்றுதற்குரியது.

இரவு 10 மணிக்கு மேல் போடும் பரோட்டா சில சமயங்களில் மிஞ்சி விடும். அடுத்த நாள் வைத்திருக்கக் கூடாது என்பது என்னுடைய அறம். பெரியவர் வீட்டில் பெரிய குடும்பம். நான் அவரிடம் பரோட்டா மிஞ்சிப் போன ஒரு நாளில் “பரோட்டா மிஞ்சிவிட்டது. பிள்ளைகளுக்கு எடுத்துச் செல்லுங்கள்” என்றேன். அவர் சொன்னார். “தப்லே அபாங் இன்றைக்கு நான் எடுத்துப் போய்விடுவேன். நாளை அத்தா மீந்துபோன பரோட்டா நிச்சயம் கொண்டு வருவார்கள் என்று அவர்கள் எண்ண இடம் கொடுக்கக்கூடாது. அத்துடன் உங்கள் கடையில் வேலைபார்க்கும் என் மனதில் ‘இன்று பரோட்டா மிஞ்ச வேண்டும். பிள்ளைகளுக்கு எடுத்துப் போகலாம்’ என்ற எண்ணம் வர ஆரம்பித்துவிடும். தோம்பில் போட்டு விடுங்கள். சுக்குர் செய்யுங்கள் ’’ என்றார்.

அவருடைய அறம் என்னைத் திகைப்பில் ஆழ்த்தியது.

thanks: http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=4078

Advertisements
பின்னூட்டங்கள்
 1. pandiammalsivamyam சொல்கிறார்:

  பிச்சைக்காரர் என்பதற்காக சாப்பிடக்கூடாத உணவை கொடுக்கக்கூடாது.அது அ(ஹ) றம்.
  1957*-ல் இந்தியாவில் உணவுப்பஞ்சம் தலைவிரித்தாடிய நேரம் ஜவஹர்லால் நேரு பிரதமர் .ஜான் எப் கென்னடி அமெரிக்கா ஜனாதிபதி இலவசமாக கொடுத்த கோதுமை,
  பால்பவுடரை கப்பல் செலவு செய்துகூட கொண்டுவந்து தரமுடியாத பணநெருக்கடி.
  ஒய்.ப்பி. சவாண் கையில் ஒரு பாத்திரம் வைத்திருப்பதுபோல போட்டு ஹிந்துவில்
  கார்ட்டூன்வந்தது நினைவு. எப்பாடுபட்டாகிலும் தீர்த்தேவிடுவது என மத்திய உணவு அமைச்சர் சி.சுப்பிரமணியம் முடிவு செய்து யூரியா உரத்தை அனுமதிப்பது என
  உத்தரவு போட்டார்.பல விஞ்ஞானிகள் நிலம் விரைவில் மலடாகிப்போகும் என்பதையும் கேளாமல்.இன்றுஇந்தியா அதை எதிர்கொள்கிறது.நீங்கள் கூட –
  பாலிவுட்வெஜ்ஜில் இதை குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் இந்தியாவில் இன்னும் பட்டினிச்சாவு இருக்கிறது. மார்க்கமிருக்கிறது–மனமில்லை.வழி இருக்கிறது-கண் தெரியவில்லை.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s