வெறுப்பின் அடையாளங்கள்

Posted: ஏப்ரல் 19, 2011 in பத்தி

சென்னையில் ஒரு வில்லி யேக்கைப் பார்த்தேன். கோயம்பேடு ஏரியாவில் அரசியல் கட்சிகள் தங்கள் கொள்கைப் பிடிப்பின் மீது ஏறி நின்று தங்களுக்குக் கிடைக்கப் போகும் இடங்களைப் பற்றிய எண்ணிக்கை தெரியாமல் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கத்தில் கொடும்பாவி எரிக்கப்பட்ட சாம்பலில் சிலர் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார்கள். நான் பார்த்த வில்லி ஜேக் அந்தக் கூட்டத்தில் சாப்பிட்டுவிட்டு எறிந்த பொட்டலங்களையும் சிகரெட் துண்டுகளையும் சேகரித்து குப்பைத் தொட்டியில் அள்ளிக் கொண்டு வந்து போட்டுக் கொண்டிருந்தார். குப்பைத் தொட்டியைச் சுற்றிலும் நின்று கொண்டு புகைபிடிக்கவும் சிறுநீர் கழிக்கவும் கூட்டம் அலை மோதியது. குப்பைத் தொட்டியின் அடிப்பாகம் காணாமல் போயிருந்தது. Mr.வில்லி ஜேக் மேலாடை எதுவுமில்லாமல் காற்சட்டையும் அரை குறையாக அணிந்திருந்தார். குப்பைகள் சேர சேர அவற்றை அள்ளிக் கொண்டு ஒரு இடத்தில் குவிப்பதில் குறியாக இருந்தார். தேர்தலைத் திருவிழா மாதிரி கொண்டாடுவார்கள் என்று ஒரு கலாச்சாரம் பேசப்படுகின்றது. சிங்கப்பூரிலிருந்து வந்து அந்தக் கலாச்சாரத்தை வேடிக்கை பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது. அது சரி, அந்த ‘வில்லி ஜேக்’ யார் என்று கேட்கிறீர்கள். அவர் ஸ்காட்லாந்தின் நகர மண்டபத்தில் கழிவறைப் பராமரிப்பாளர். தன் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகுதான் இந்த உலகத்தில் இதுவரை எதுவும் சாதிக்கவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தவருக்கு நகரத்தின் கழிவறை பராமரிப்பாளர் வேலை கொடுக்கப்பட்டது. இதில் ஏதாவது சாதிக்கவேண்டுமே என்று மன உந்துதலில் கழிவறையைத் தன் பிள்ளையைப் போல் கவனிக்க ஆரம்பித்தார்.

கழிவறைக்குத் தோரணங்கள் கட்டினார். தான் எழுதிய கவிதைகளை அதில் ஒட்டி வைத்தார். மணம் பரப்பும் ஊதுவத்திகளை எரிய விட்டு எந்நேரமும் கழிவறையை சுகந்த மணத்துடன் வைத்திருந்தார். அவருக்கு நகராட்சி பல விருதுகளைக் கொடுத்தது. பத்திரிகைகள் போட்டி போட்டுக் கொண்டு அவர் பேட்டியை வெளியிட்டன. சுற்றுலாப் பயணிகள் அவருடன் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்கள். அவர் வாழ்வில் அனுபவத்தில் அறியாத புது உலகத்தை அந்தக் கழிவறை பராமரிப்பில் கண்டார். இந்த மாதிரி ஏதோ ஒரு கனவுடன்தான் சென்னை வில்லி ஜேக் குப்பைகளை அள்ளிப் போட்டுக் கொண்டிருந்திருப்பார் என்று நினைக்கிறேன். ஆனால் அவருக்கு யாராவது ஒரு தேநீர் வாங்கிக் கொடுத்திருப்பார்களா என்பது சந்தேகம்.

சாப்பிடுவது, தூங்குவது, அடுத்தபடியாக கழிவறைக்குச் செல்வது. அதை சுத்தமாக வைத்திருப்பது என்று தனிமனித ஒழுக்கத்தின் குறியீடு மட்டுமல்ல, அது ஒரு சமூகத்தின் கலாச்சாரக் குறியீடாக மற்ற நாடுகளில் மதிப்பிடுகிறார்கள்.

2001 நவம்பரில் ஆரம்பிக்கப்பட்ட உலக் கழிவறைச் சங்கம் தற்போது 53 நாடுகளில் இயங்குகிறது. 2008ல் அதன் தலைவர் Mr.Simக்கு ‘டைம்’ பத்திரிகை Hero of Environment” விருது வழங்கிச் சிறப்பித்தது.

சமீபத்தில் ஜப்பான் சென்றவர்களுக்குத் தெரியும் ‘நாரித்தா’ விமான நிலையத்தில் கழிவறையைக் காண கண் கோடி வேண்டும். அவை Air drying Machanism ,இல் இயங்குகின்றன. Bowlல் நாம் உட்கார்ந்தவுடன் சிறுநீரின் ‘சர்க்கரை’ அளவைக் கூட தெரிந்து கொள்ளலாம். ‘டாய்லெட்’ என்ற வாசகத்திற்குப் பதிலாக ‘வாஷ்லெட்ஸ்’ என்ற வாசகத்தை உபயோகிக்கிறார்கள். ஒரு கழிவறைப் பகுதியில் 38 வகையான பட்டன்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

டாய்லெட் Bowl எப்போதும் வெதுவெதுப்பாக சூடாக இருக்கும். வெளியில் குளிராக இருப்பதால் கொஞ்சநேரம் அதில் உட்கார்ந்திருக்க மாட்டோமா என்று தோன்றும். சுத்தம்செய்வதற்கும் ‘‘தானியங்கிமுறைதான்.’’ நாம் குறிப்பிட்ட இடத்தை மட்டும் லாவகமாக காட்டி சரியான வேகம், தண்ணீர் சூடு இவற்றிற்கான பட்டன்களை அழுத்தினால் போதுமானது. நம்மை சில நிமிடங்களில் சுத்தம் செய்துவிடும். அடுத்து ஒரு பட்டனை அழுத்தினால் உலர்ந்த காற்று ஈரத்தை உறிஞ்சிவிடும். எவ்வளாவு சுகமான அனுபவம்! பிரபலமான ஜப்பானிய எழுத்தாளர் TANIZAKI’ கூறியதாக ஒரு செய்தி படித்தேன். ‘என் கற்பனைக் குதிரை ஜப்பான் கழிவறைகளில் நாலுகால் பாய்ச்சலில் வேகமெடுக்கிறது’ என்கிறார்.

ஆலன் சூன்’ என்ற சிக்காக்கோ பல்கலைப் பேராசிரியர் கழிவறைகளைப் பற்றி ஒரு ஆய்வு வெளியிட்டிருக்கிறார். பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா மூன்று நாடுகளிலும் டாய்லெட்டை ஃபிளஷ் பண்ணுவது ஒரே மாதிரியாக இருக்கிறது. அவர்களுடைய அரசியலைப் போல என்கிறார். 1960களில் மேற்கத்திய நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பத்தை வழக்கம் போல ஜப்பானியர்கள் மேன்மைப்படுத்தி மிகத் தொழில்நுட்பம் வாய்ந்த கழிவறைச் சாதனங்களை அந்த நாடுகளுக்கே திரும்பவும் விற்று வருகிறார்கள்.

மேற்கு நாடுகளுக்கு அவ்வளவாக நான் பயணம் சென்றதில்லை. அமெரிக்காவில் urilift என்ற கழிவறையைப் பற்றி நண்பர்கள் கூறியிருக்கிறார்கள். முக்கியமான போக்குவரத்து சந்திப்புக்களில் பகல் நேரத்தில் கழிவறைகள் பூமிக்குள் சென்றுவிடும். இரவு நேரங்களில் முளைத்து வந்தது மாதிரி வெளியே வந்துவிடும். ஒரே நேரத்தில் மூன்று பேர் உபயோகப்படுத்தலாம். 2002 ல் ஜப்பானும் கொரியாவும் உலகக் கிண்ண கால்பந்து போட்டியை இணைந்து நடத்தியபோது சியோல் நகர மேயருக்கு ஒரு ஜடியா வந்து பல இடங்களில் ‘‘காற்பந்து மாதிரி’’ கழிவறைகளைக் கட்டி வைத்திருக்கிறார். தற்போது அவை சுற்றுலாதளங்கள்.

உலகின் மிகப்பெரிய கழிவறைக் கட்டிடம் சீனாவிலுள்ள Chonging என்ற நகரில் உள்ளது. இதில் 30 ஆயிரம் சதுர அடி பரப்பில் சுமார் 1000 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. தாய்லாந்திலிருந்து மாணவர் பரிமாற்றத் திட்டத்தில் என் மகன் தாய்லாந்து சென்று திரும்பிய பிறகு தாய்லாந்திலிருந்து ஒரு மாணவர் என் வீட்டிற்று வந்திருந்தார். அவர்கள் கழிவறையை ‘Hongnam” என்று சொல்கிறார்கள். அதாவது தண்ணீர் அறை என்று சொல்கிறார்கள். கழிவறை சென்று வருவதைப் பயபக்தியுடன் செய்யும் ஒரு நாடு தாய்லாந்து.

என் வீட்டில் தங்கியிருந்த பையனுக்கு ‘கழிவறை’ விஷயத்தில் குறைவந்துவிடக் கூடாதே என்று அவன் திரும்பிச் செல்லும்வரை பயந்து கொண்டிருந்தேன்.

கொரியாவில் பல இடங்களில் வரவேற்பறையே கழிவறையாக இருக்கிறது. ‘Toilets are not always private”என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கிறார்கள். டிசம்பர் மாதத்தில் கொரியாவில் வெப்பநிலை 10 டிகிரிக்கும் குறைவாக இருக்கும் கழிவறைகள் எப்போதும் சூடாக இருப்பதால் உள்ளே போய்விட்டுத் திரும்ப மனம் வராது.

சிங்கப்பூரில் சுமார் 30 ஆயிரம் கழிவறைகள் உள்ளன. அதில் சுமார் 1200 கோப்பிக் கடைகளில் இருக்கின்றன.

ஒவ்வொரு வருடமும் ‘‘Loo carnival.”

உணவுக் கடை சங்கத்தின் சார்பாக நடத்துகிறார்கள். ஒன்று, இரண்டு விரல்கள் சிக்னலுக்கு பயன்படுத்திவிட்டு சிங்கப்பூரில் குடியேறியவுடன் இங்குள்ளவர்கள் அடிக்கடி ‘Loo” போகவேண்டும். என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள்.

அப்படி என்றால் என்ன என்ற சந்தேகம் எனக்கு ரொம்ப நாளாக இருந்தது. அது வேறொன்றுமில்லை.

‘‘Let us observe ourselves”

இந்த வருடம் தெம்பனிஸ் கோப்பிக் கடை 21 சிறந்த கழிவறைக்கான 5 நட்சத்திர விருது பெற்று 10,000 வெள்ளி பரிசாகப் பெற்றிருக்கிறது.

ஜப்பானில் இருப்பது மாதிரி 38 பட்டன்கள் கழிவறை உபகரணம் வாங்கி உட்காரப் பலமுறை உட்கார்ந்து யோசிக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் கழிவறைக் கலாச்சாரம் பற்றி நினைக்கவே அறுவெறுப்பாக இருக்கிறது. சென்னையில் உணவு சாப்பிட்டதில் வயிற்று உபாதை ஏற்பட்டுவிட்டது. நான்கு நாட்களாக கழிவறை பயத்தில் கெஸ்ட் ஹவுஸிலிருந்து வெளியே வராமல் பட்ட அவஸ்தையை பற்றி மனுஷ்ய புத்திரனிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

அவர் ‘‘பொதுக் கழிவறைகள் மட்டுமல்ல மக்கள் குடியிருக்கும் வீடுகளிலும் கூட கழிவறைகள் முறையாக இருக்கிறதா என்ன? தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்திருக்கிறேன். கழிவறையை மக்கள் ஒரு பொருட்டாக நினைக்காமல் அசுத்தம் செய்வது சக மனிதர்களிடையே காட்டும் வெறுப்பின் அடையாளம் என்றுதான் சொல்லவேண்டும்” என்றார். கவிஞனின் அந்த வார்த்தையின் பாரம் தாங்காமல் வெளியில் காயத்ரியிடம் என் புத்தக வெளியீட்டைப் பற்றி என்ன பேசினேன் என்று கூட ஞாபகமில்லை. அறைக்கு வந்து இதை எழுதியிருந்த பிறகுதான் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருந்தது.

thanks: http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=4137

Advertisements
பின்னூட்டங்கள்
 1. pandiammalsivamyam சொல்கிறார்:

  இந்தியச் சுதந்திரம் இதுதான்.. “Liberty is not Liberty When It Takes Others Liberty” என்றார்
  அந்நாளைய அமைச்சர் மினோ மசானி. வில்லி ஜேக் யைப் போல குப்பைகளை
  அள்ளவந்தவர்கள் ஏராளமன பேர். அத்தனை பேரையும் குப்பைகளாக தள்ளிப்போட்டது இந்தியச் சுதந்திரம். சரிசெய்து காட்டுகிறேன் என்று சத்தியம்
  செய்து வந்தவர்களெல்லாம் சரியில்லாமல் போனார்கள். வெள்ளைக்காரன் ஆட்சி
  பரவாயில்லை என்றுபேசும் அளவிற்கு சுதந்திரநாட்டில் அடிப்படைஉரிமை
  பேச்சுரிமை -அரசியல் நிர்ணய சட்டத்தில்.மக்களை வழி நடத்திசெல்லவேண்டிய
  படித்த அறிஞர்கள் தவறான பாதையை காட்டிவிட்டார்கள்–காட்டுகிறார்கள்.
  விடியும்போது விடியட்டும் என சங்கைஊதி வைக்கிறார்கள் சிலர்
  ‘Let Us Observe Ourselves—-INDIA(Indian Non Democrcy In All)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s