மே, 2011 க்கான தொகுப்பு

பாலிவுட் வெஜ்ஜி

Posted: மே 20, 2011 in பத்தி
குறிச்சொற்கள்:

 நாம் உண்ணும் உணவை நம்மால் தீர்மானிக்க முடியுமா? அது கிட்டத்தட்ட இயலாத காரியம். நம் உணவைத் தீர்மானிப்பவர்களை இப்படி வேண்டுமானால் வரிசைப் படுத்தலாம்.

விவசாயிகள், உணவு பொருள் விற்பனையாளர், மருத்துவர்கள், சமையல்காரர் நம்முடைய தேர்வின் விருப்பம் மிகக்குறைந்த சதவீதமாகத்தான் இருக்கமுடியும்.

அனைவரும் விரும்பக்கூடிய உணவுப் பொருட்கள் கடந்துவரும் பாதைகள் நம் ஆரோக்கியத்தை பாதிக்கும் அபாயம் நிறைந்தவைகளாக இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் தற்காலத்தில் உயிர்ப்புள்ள (Organic foods) உணவுகளை உண்ணவேண்டும் என்ற இயக்கம் உலகில் வெகு வேகமாகப் பரவிவருகின்றது Organic food  என்ற வார்த்தையை Lord North burne எழுதிய Look to the land என்ற நாவலில் பிரபலமடைந்தது. உயிர்ப்பு உணவுகளை உற்பத்தி செய்பவர்களுக்கு 1990-ல் ஐரோப்பிய நாடுகள் கூடி Organic Food Product Act (OFPA) கொண்டு வந்தன. முறையான Organic Food உற்பத்தியாளர்கள் அதற்குரிய சான்றிதழ் பெறவேண்டும்.

கோழிகளிடமிருந்து உயிர்ப்புள்ள முட்டையை பெறவேண்டுமெனில் அவைகளுக்கு உயிர்ப்புள்ள தீவணத்தைக் கொடுக்கவேண்டும். கூண்டில் அடைத்து மின்சார சாதனத்தின் வழி முட்டையை எடுக்காமல் சுதந்திரமாக உலவவிட்டு வைட்டமின் A, omaga 3 அதிகமுள்ள முட்டைகளை பெற முயலவேண்டும்.

  

ஆண்டி பயாடிக், ஹார்மோன்கள் செலுத்தி பாலைக் கறந்தால் அந்தப் பாலைக் குடிக்கும் பெண்குழந்தைகள் ஏழு வயதிலேயே ‘ருது’வாவதற்கு வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன. கால்நடைகளை புல் தின்ன வைத்து பாலைக் கறந்தால் அது சுவை கொஞ்சம் குறைவாக இருந்தாலும் ஒமேகா – 3 யும், தொற்று நோய் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றலுள்ள ஊட்டச்சத்தும் கிடைக்கும். செயற்கை உரங்களையும், பூச்சிக் கொல்லிகளையும் பயன்படுத்தி விளைவிக்கப்படும் பழங்களும் காய்கறிகளும் நமக்கும் சுற்றுச் சூழலுக்கும் நன்மை தரும் விஷயங்களல்ல.

சிங்கப்பூரில் NTUC பேரங்காடி, கேர்ஃபோர் கோல்டு ஸ்டோரேஜ், விவோசிட்டி ஆகிய விற்பனை நிலையங்களில் Organic உணவுகள் வசதிபடைத்த ஊழியரணியைக் குறிவைத்து விற்பனை செய்யப்படுகின்றன.

உடல் பருமன் பிரச்னையை Organic Food  வகைகளால் கட்டுப்படுத்தமுடியும் என ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் உடல்பருமன் சதவீதம் 27  ஐ நெருங்கிவிட்டது. அமெரிக்கர்கள் மட்டுமே ஆண்டுக்கு சராசரியாக 36 மில்லியன் கிலோ இறைச்சி சாப்பிடுகிறார்கள். ஆசியாவில் எல்லா நாடுகளுக்கும் சேர்த்து 103 மில்லியன் கிலோ இறைச்சி தேவைப்படுகிறது. இதனால் இறைச்சிக்காக கொல்லப்படும் விலங்குகள் துரித கதியில் வளர்க்கப்படுவதும், கொல்லப்படுவதும் தொடர்ந்து கூடிக் கொண்டே போகிறது.

விலங்குகளுக்கு முன்னால் கத்தியைக் கொண்டு செல்வதற்கு முன்பு அவைகளை நாம் வாழ அனுமதித்த காலத்தில் அவைகள் சரிவர பராமரிக்கப்பட்டனவா என்று ஒவ்வொருவரும் தன் மனசாட்சியை எழுப்பி கேள்வி கேட்டுக் கொள்ளவேண்டும் என்று ஒரு சுற்று சூழல் ஆர்வலர் கூறுகிறார்.

Organic இறைச்சிக்கு உலகத்தை மாற்றிவிடலாம் என்று நினைத்தால் அது இப்போதைக்கு நடக்காத காரியம். மொத்தமே Organic உணவுகள் உற்பத்தி 3 சதவீதம் மட்டுமே. அதனால் மீன் சாப்பிடுங்கள் என்பது இக்காலத்திற்கு பொருத்தமான அறிவுரையாக இருக்கும். ஆனால் மீன் குஞ்சுகளைக் கூட விட்டு வைக்காமல் வலையில் போட்டு காசு பார்க்கும் நாடுகள் கூடிக் கொண்டு போகின்றன.

 

இது ஒருபுறமிருக்க துரித உணவுகள் Organic Food க்கு வில்லனாக பயமுறுத்துகிறது. உப்பும் Fructose corn Syrypம் சேர்க்கப்படாவிட்டால் துரித உணவுகள் வெறும் சக்கை என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் Organic Food தேவைகளை அறிவுறுத்துவதில் முதலிடம் வகிக்கும் அமெரிக்கா சோளம்  உற்பத்திக்கு அதிக சலுகைகள் வழங்குவதோடு சுற்றுச் சூழலை பாழ்படுத்தும், மில்லியன் டன் உரத்தை சோள உற்பத்திக்கு நிலத்தில் கொட்டுகிறது. அதேபோல் சீனா தன் பங்கிற்கு ஒட்டு மொத்த விவசாயத்திற்கு 47 மில்லியன் டன் உரங்கள் உபயோகிக்கிறது.

ரசாயன உரங்கள் பயன்பாட்டை எதிர்த்து புனர் ஜென்ம வேளாண்மை (Rebirth Agriculture) இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரில் கலாநிதி அனில் குப்தாவின் ‘‘நம் வழி வேளாண்மை” என்ற கோஷத்துடன் ஆரம்பிக்கப்பட்டு இதன் கிளைகள் தமிழ்நாட்டின் மதுரை, ஓரிஸ்ஸாவின் புவணேஸ்வர், கேரளாவில் கோட்டயம், பூட்டானில் திம்பு – உத்தரபிரதேசத்தின் சஹான்பூர் – கிரனூரில் நம்மாழ்வார் நடத்தும் லெய்சா (Leisa), உடுமலைப் பேட்டையில் C.R.ராமநாதனின், விவசாயக் காட்டியல் (Agro farm), Mr. VR. சுவாமிநாதன் நடத்தும் சில பண்ணைகள்  இந்தியாவின் இயற்கை வேளாண் முறைகளை முன்னெடுப்போருக்கு வழிகாட்டும் பண்ணைகளாக விளங்குகின்றன.

கோவையிலிருந்து நண்பர் திரு.சேகரன் சிங்கப்பூர் வந்திருந்தார். ஒரு வாரம் பார்க்க வேண்டிய இடங்களை பார்த்து முடித்துவிட்டு என்னுடன் ஒரு சனிக்கிழமை வெளியில் செல்ல கிளம்பி வந்தார்.

ரூமிலிருந்து புறப்படுவதற்கு முன்பு ‘‘ஷாநவாஸ் நாம் எங்கே போகிறோம்’’ என்றார்.

“பாலிவுட் வெஜ்ஜி” என்றேன்.

டிப்டாப்பான சூட்டில் டாக்ஸியிலிருந்து இறங்கினார்.

 

பாலிவுட் வெஜ்ஜி என்றவுடன் அவருக்கு கரினாகபூர், மல்லிகா செராவாத் நினைப்பு வந்தது. அவர்கள் பெயரிலுள்ள  ‘‘கரவோக்கே”  இடத்திற்கு அழைத்துச் செல்வதாக நினைத்துக்கொண்டார். அல்ஜினைட் எம்.ஆர்.டியில் ஏறி கிரான்ஜியில் இறங்கி பஸ்ஸில் பாலிவுட் வெஜ்ஜி (சிங்கப்பூர் இயற்கை வேளாண்மை பண்மைக்கு) அழைத்துச் சென்றேன்.

10 ஏக்கர் பரப்பளவில் வாழையும், பப்பாளி மரங்களும் பூத்துக் குலுங்கும் பாலிவுட் வெஜ்ஜியை திருமதி ஐவி சிங்லிம் (56 வயது) நடத்தி வருகிறார். அவருடைய கணவர் NTUC  CEO வாக இருந்து ஓய்வு பெற்ற ‘‘லொம் ஹோ செங்” உதவியுடன் பண்ணையும், Poison – Ivy என்ற இயற்கை உணவு உணவகமும் நடத்தி வருகிறார்.

நண்பர் சேகரன் கோவையில் விவசாயப் பண்ணையில் இருப்பது போல் உணர்வதாகச் சொன்னார்.

IVY – SING LIM ‘‘நான் பாதி இந்தியா, மீதி சீனா” என்று அடிக்கடி தன்னைக் குறிப்பிட்டுக் கொள்வார். அவருடைய தந்தை ஒரு இந்தியர்.

“மனிதர்கள் பணத்தை சாப்பிடமுடியாது என்பதை உணர்வதற்குள் அவர்களுக்கு வயதாகி விடுகிறது” என்கிறார். இந்த லாப நோக்கமற்ற பண்ணையை நடத்திவரும் IVY.SING-LIM

சிங்கப்பூர் வரும்போது தவறாமல் Bolly wood veggie சென்று பாருங்கள்.

2050ல் உருவாகக் கூடிய மக்கள் தொகை பெருக்கத்திற்கு Organic Food இயக்கமும் எந்த விதத்திலும் தீர்வாக இருக்கமுடியாது என்கிற வாதமும் – American journal of Clinical nutrition 2007ல் சாதாரண உணவுப் பொருட்களுக்கும் Organic Foodக்கும் பெரிய அளவில் வித்தியாசங்கள் தெரியவில்லை என்று வெளியிட்ட திடுக்கிடும் செய்தியும் ஆரோக்கியமான சத்துள்ள உணவுகள் தயாரிக்கக்கூடிய தொழில் அமைப்புக்களை அடையாளம் கண்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு விலை குறைத்து வாங்கி கூடவே ஆரோக்கியத்தையும் கொஞ்சம் பெற்றுக் கொள்ளலாம் என்பது சிலரது வாதமாக உள்ளது.

மரபணு மாற்ற உணவுகள் பற்றி நான் சில புத்தகங்களை படித்துக் கொண்டிருந்தபோது Mr.Manny Haward எழுதிய “My empire of dirt” என்ற புத்தகத்தில் இந்த மாதிரி Organic உணவு இயக்கங்கள் பலமான உணவு தொழிலுக்கு உலகை இட்டுச் செல்லும் என்று சொல்கிறார்.

 

ஜாலி ஜமாலியன்ஸ்

Posted: மே 12, 2011 in பத்தி
குறிச்சொற்கள்:

இரண்டு காரணங்களுக்காக ஒவ்வொருவரும் கல்லூரிப் பருவத்தை அசை போடுகிறோம். ஒன்று அந்த வயது நினைவுகள் வழங்கிய மகிழ்ச்சிக்காக, இன்னொன்று அந்த வயதுக்குரிய மனத்தை அப்படியே தக்க வைத்துக் கொள்ள முடியவில்லையே என்கிற ஏக்கத்துக்காக, சட்டைப் பையில் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வெளியில் போவதற்கு துவைத்துப் போட்ட சட்டை இருந்தாலும் இல்லாவிட்டாலும் சர்வ சாதாரணமாக அறை நண்பர்களின் சட்டையில் கை வைத்து எப்போதும் ஆனந்தமாக நம்மால் இருக்க முடிந்தது எப்படி. அந்தப் பருவத்தில் நிரம்பி வழிந்த கள்ளமின்மைதான் காரணம். அப்போது இல்லாத எல்லாமே இன்று நம்மிடையே இருக்கிறது. ஆனால் இந்த ஆனந்தம் என்ற ஒன்று மட்டும் நம்மை விட்டு ஓடி ஒளிந்து கொண்டது. இது எந்தப் புள்ளியில் நிகழ்ந்தது என்றுதான் தெரியவில்லை. திருச்சி ஜமாலில் பட்டப்படிப்பு படிக்கும்போது அறை நண்பர்கள் மொத்தம் நான்கு பேர். ஒவ்வொருவருக்கும் ஒரு டேஸ்ட். அதில் அன்சாரி டோல்கேட்டில் ஆட்டோ எடுத்துத்தான் மெயின்கார்டு கேட் செல்வார். அந்த ஆட்டோ எப்போதும் தெப்பக்குளம் போஸ்ட் ஆபீஸில்தான் போய் நிற்கும், அரை மணி நேரம் ஒரு சிகரெட்டை ஊதிவிட்டு சிந்தாமணியில் சுடச் சுட வெஜிடபிள் சமோசாவுடன் ஒரு காபி குடித்துவிட்டு மலைக்கோட்டை படிகளில் கொஞ்சம் உட்கார்ந்து எழுந்திருப்பார். இன்னொரு நண்பருக்கு குளத்தூர் பிரியாணி, கற்கண்டு பால் சாராதாஸில் எதுவும் துணி வாங்காமல் வெறுமனே உள்ளே போய் வரவேண்டும்.

நண்பர் ராஜாமுஹம்மது (பெரம்பலூர்) விடுதியில் சேர்ந்த முதல் நாளே சிங்காரத் தோப்புக்குப் போகலாமே என்று சொன்னவுடன் நான் ஏதோ மாந்தோப்பு புளியந்தோப்பு சவுக்குத் தோப்பு பச்சை பசேல் என்றிருக்கும் என்று நினைத்துச் சென்றால் கலர் கலராக ஃபிகர்கள். அவருக்கு சங்கிலியாண்டிபுரம், பொன்மலைப்பட்டியில் பழைய படங்களைப் பார்ப்பதென்றால் கொள்ளைப்பிரியம். ஆனால் விடுதிக் காவலாளி ‘‘கோனார்” மீசையுடன் கேட்டுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து தூங்காமல் இருப்பதுதான் மிக எரிச்சலான விஷயம். ரூமில் யார் அதிக ‘‘பெல்பாட்டம்” வைத்து பேண்ட் போடுகிறோமோ அவர்தான் முற்போக்குவாதி, சிங்காரத் தோப்பு டைலர் பெயரை மறந்துவிட்டேன். அவரிடம் போய் அளவு கொடுக்கும்போது பெல்ஸ் எத்தனை ‘‘இன்ச்” வைக்கவேண்டும் என்று சொல்வது அவ்வளவு இன்பமான ஒரு விஷயம்.

மறக்கக்கூடிய விஷயங்களா அவை.

ஹோட்டல் ராதாஸ், பாலக்கரை தியேட்டர்………….

பேராசிரியர்களுக்குப் பெயர் வைப்பதிலும், அவர்களுடைய உடல் மொழிகளை நக்கல் செய்வதற்கென்றே ஒரு கும்பல் அலைந்துகொண்டிருக்கும். அந்தக் கும்பலில் துண்டு ஜோக்குகளையும், கவிதைகளையும் எழுதிக் கொண்டிருந்த என்னிடம் ஒரு நண்பர் திருச்சி ஆல் இந்திய ரேடியோவில் ஒரு நிகழ்ச்சி செய்ய வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்றார். சொன்னபடியே செய்தார். அந்த நிகழ்ச்சி ‘‘சிரிப்பு வருது, சிரிப்பு வருது”. ஸ்கிரிப்ட் எழுதி ஒரு நாலுபேரைக் கிண்டல் கும்பலில் தேர்ந்தெடுத்து வானொலி நிகழ்ச்சியில் களமிறக்கினேன். வெளியில் ஜோக்குகளாக அடித்துத் தான் கிளப்பும் ரபிக் ஸ்டூடியோவில் மைக் ஆன் பண்ணியதும் டைமிங் காலை வாரியதால் சொதப்பினார்.

ஒரு புதன்கிழமை இரவு 8.30க்கு நிகழ்ச்சி ஒலிபரப்பினார்கள். அதை ஆர்வமாகக் கேட்ட நண்பர்கள் ‘‘ஏதோ கும்பல் அரட்டை அடிப்பது மாதிரி சத்தம் கேட்கிறது” என்று சொன்னார்கள்.அவர்கள் ஒன்றை க்கவனிக்க மறந்துவிட்டார்கள். நான் மதன் ஜோக்கை வெட்டி ஒட்டி அந்த நிகழ்ச்சியைத் தயாரித்திருந்தேன். ஆடிக்கொருதரம் ‘ஆனந்த விகடன்’ படிக்கும் நண்பர்களுக்குக் கூட ‘‘இது எங்கோ படித்த ஜோக்” என்பது நினைவில் வரவில்லை. ஆனால் அதில் ஒரு ஜோக் விரசமாக இருக்கிறது என்று வானொலி இயக்குநர் வெட்டிவிட்டார். அந்த ஜோக்.

“தெருவில் ஒண்ணுக்குப் போகாதே.

போலீஸ் பிடிக்கும்”

“பிடிச்சா பிடிக்கட்டுமே வேஸ்டாதானே போகுது!’’

அந்த ரஃபி சிங்கப்பூரில்தான் இத்தனை வருடம் இருந்திருக்கிறார். ஆனால் எனக்குத் தெரியாது. ஜமால் முஹம்மது கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நண்பர்கள் முதல் கூட்டத்தில் ஜலால் ‘‘யாரென்று தெரிகிறதா?’’ என்று கூட்டி வந்து நிறுத்தினார். உணர்வுபூர்வமான சந்திப்புப் பழைய நாட்கள், பழைய நண்பர்கள், பழைய நினைவுகள் மேல் நமக்கிருக்கும் அக்கறை ஆர்வம் முன்னாள் மாணவர்கள் சங்கங்களை பல்கலைக்கழகங்களில் துவங்குவதற்கு உந்துதலாக இருக்கிறது. முதன் முதலில் 1872களில் அமெரிக்காவின் இலியானோஸ் பல்கலையில் 20 முன்னாள் மாணவர்களுடன் துவங்கப்பட்ட இலியானோஸ் அலும்னி. தற்போது சுமார் 6 லட்சம் உறுப்பினர்களுடன் அலும்னிகளின் முன் மாதிரியாக விளங்குகிறது.

அலும்னி (Alumni) என்ற இலத்தீன் சொல்லுக்கு முன்னாட்களில் பயின்ற பட்டதாரி மாணவ மாணவியர்களைக் குறிக்கிறது. இந்த அலும்னி பாத்திரங்கள் ஜமால் முஹம்மது கல்லூரி பொன்விழா ஆண்டிற்காக சென்ற 2.5.2011 அன்று ஒன்று கூடினோம். சில அலும்னி பாத்திரங்கள் பழசாக இருந்தாலும் பளபளப்பாக இருந்தன. ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டபோது சிங்கப்பூரில் குறிப்பிடத்தக்க நிறுவனங்களில் தங்களுடைய முத்திரை பதித்தவர்களையும் 1990க்குப் பிறகு சிங்கப்பூரில் குடியேறி தங்களுக்கும் தாங்கள் சார்ந்த சமுதாயத்திற்கும் பல வகைகளில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களையும் காணமுடிந்தது. கடந்தகால மற்றும் நிகழ்காலத்திற்கான ஒரு பரிணாம இணைப்பு, தங்கள் அனுபவம் மற்றும் அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு மேடையை அமைப்பதற்கான முயற்சி.

பொன்விழா கொண்டாடும் நிகழ்வில் அன்று நான் சந்தித்த ஒவ்வொருவரும் மாற்றமடைந்திருக்கும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டோம். நான் படித்தபோது பட்டப்படிப்பு முடிந்த கையோடு ரசாயனப் பிரிவில் முதுநிலை 1980களில் ஏற்படுத்தப்படவில்லையாதலால் வேறு கல்லூரி செல்ல வேண்டிய நிலை. ஆனால் இப்போது 19 பட்டப்படிப்புக்களுடன் முதுநிலைப் படிப்புகளும் M.phil, 12 ph.d பாடங்களும் வந்துவிட்டன. 9625 மாணவர் எண்ணிக்கையை தொட்டிருக்கிறது. இதில் 2879 பெண்கள். தனியாக ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, வெகுவிரைவில் பொறியியல் கல்லூரி ஆரம்பிக்க இருக்கிறார்கள். சமீபத்தில் K.ஜமால் அவர்கள் எழுதிய ‘முப்பெரும் வள்ளல்கள்’ என்ற புத்தகத்தைப் படித்தேன். மத ஒற்றுமைக்காகத் தனது இரண்டு பேத்திகளுக்கு கல்லூரியின் ஸ்பாதகர் ஜமால் முஹம்மது சீதா காதர் பீவி, ராதா தமீமா என்று பெயர் சூட்டியது. காந்தி 1931ல் வட்டமேஜை மாநாட்டிற்கு லண்டன் சென்றபோது அதன் குழுவில் ஒரு உறுப்பினராக திரு ஜமால் முஹம்மது அவர்கள் இடம் பெற்றது.

ஒரு கட்டத்தில் காந்தி திரு.ஆகா கானிடம் ‘‘நீங்களும் ஜமால் முஹம்மதும் என்ன முடிவு செய்தாலும் சரி , நான் வெற்றுக் காகிதத்தில் கையெழுத்திட்டுத் தர தயாராக இருக்கிறேன்” என்றது. திரு. ராஜாஜி அவர்களிடம் சுதந்திரப் போராட்ட நிதியாக ‘நிரப்பப்படாத காசோலையைக் கொடுத்தது போன்ற செய்திகள் நாங்கள் கல்லூரியில் படித்தபோது கேள்விப்படாத விஷயங்கள். JMC, Alumni சென்னை, பெங்களூர், கோழிக்கோடு, பஹ்ரைன், துபாய், ஜித்தா, குவைத், மலேசியா, இப்போது சிங்கப்பூரில் தொடங்கப்பட்டிருக்கிறது. அன்று நடந்த நிகழ்வில் எழுத்தாளர் கவிஞர் நாகூர் ரூமி அவர்கள் இயற்றிய பாடல் உணர்வுபூர்வமாக அரங்கை அதிரவைத்தது. பக்கத்திலிருந்த நண்பர், நாகூர் சரி! அது என்ன ரூமி என்றார்.

ரூமி என்றால் ரோம் நகரத்துக் கவிஞர் ஜலாலுதீன் தன் பெயரை ஜலாலுதீன் ரூமி என்று வைத்திருந்ததால் அவர் ஜமால் முஹம்மது கல்லூரி விடுதி ரூமில் எந்நேரமும் உட்கார்ந்து கவிதை எழுதியதால் தன் பெயருக்குப் பின்னால் ரூமி என்றும் சேர்த்துக் கொண்டிருக்கலாம் என்றேன். பல தளங்களில் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அறிஞர்கள் பலர் முன்பு கல்லூரி முதல்வர் திரு ஷேக் முஹம்மது அவர்களின் அறிவுபூர்வமான உரை அனைவரையும் அசத்திவிட்டது. Alumniயின் தலைவரும் ஒரு கவிஞர் நாகூர்தீன். இந்த அலும்னிகளை இணைத்து வழி நடத்தும் டாக்டர் ஹிமானா சையீத் 1964ல் ‘மறுமலர்ச்சி’ வார இதழில் தொடங்கி சுமார் 565 சிறுகதைகள், 9 நாவல்கள், 100 கவிதைகள், 1000 கட்டுரைகள் என்று இலக்கிய உலகிற்கு நன்கு அறிமுகமானவர். இருவருமே கவிஞர்கள். அதனால் கவிதையோடு இந்தக் கட்டுரையை முடிக்கலாம்.

மழைவிட்ட பின்னும் விழுந்த

இலைவிட்டுப் பிரிய மனமில்லாமல்

அதன் நுனிபற்றித் தொங்கும் நீர்த்துளிபோல்

கால மழை ஓய்ந்த பின்னும்

இதயம் விட்டுப் பிரிய மனமில்லாமல்

அதன் சுவர் பற்றித் தொங்கும் ஞாபகத்தூண்கள்

இது எண்ணத் தேவையா

இல்லை நினைவின் பாரமா!

 

thanks: http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=4281

நேஹா குட்டியோடு
அக்கா வீட்டுக்கு வருகிறாள்
என்று தெரிந்தும்
புத்தகங்களைக் கிழித்து விடுவாளென்று
உயரத்தில்
பாதுகாப்பாக வைத்தேன்
வீட்டுக்குள் நுழைந்ததும்
எப்போ வந்தீங்க என்று கேட்டதற்கு
‘’நாளைக்கு வந்தோம்’’  என்று
அவள் சொன்னதும்
பாதுகாப்பாக வைத்திருந்த
நன்னூல் புத்தகம் கிழிந்துபோனது
 
இந்தக் கவிதைக்கு ‘‘மழலை இலக்கணம்’’  என்று கவிஞர் தலைப்பிட்டிருக்கிறார்.

நாம் ஒவ்வொருவரும் நம் சிந்தனைக்கேற்ப பெயர் வைத்து மகிழக் கூடிய கவிதை. சில பேர் தங்கள்கவிதைக்கு பெயர் வைப்பார்கள். அந்தப் பெயரே நீ என்னை வாசித்துத்தான் ஆகவேண்டும் என்றுவற்புறுத்தும். சிலர் பெயர் வைத்ததின் நியாயத்தை வாசகனுக்குத் தரவேண்டிய நிர்ப்பந்தத்துக்குஉள்ளாகி வேண்டுமென்றே பெயரை வம்புக்கிழுப்பார்கள். சிலபேர் பெயர் வைத்துவிட்டு நான்உன்னுக்குள் ஒளிந்திருக்கிறேன் என்னைத் தேடிப் போ என்று விட்டு விடுவார்கள்.சிலபேர் பெயரேவைக்காமல் நான் இதைப்பற்றி எழுதியுள்ளேன் என்று தம்பட்டம் அடிக்காமல் ஒதுங்கி விடுவார்கள்.

சரி விஷயத்திற்கு வருகிறேன்.

‘‘சிங்கப்பூர் கிளிஷே’’  என்று நான் வைத்த பெயர் காரணம் கேட்டு பலதங்கமீன் வாசகர்கள் மின் மடல் அனுப்பியிருந்தார்கள். நான் இந்த வார்த்தையை மறைந்த எழுத்தாளர்திரு.சுஜாதா அவர்களின் ‘‘கற்றதும் பெற்றதும்’’  கட்டுரைத் தொகுப்பிலிருந்து எடுத்தேன். கிளிஷே (அந்தஇடத்திற்கு பிரத்யோகமான’ உரிய என்று அர்த்தம்)ஆனால் பாருங்கள் ரோஜாவுக்கு ‘ரோஜா’ என்று யார் பெயர் வைத்திருப்பார்கள். சிங்கத்திற்கு தன் பெயர்சிங்கம் என்று தெரியுமா’ என்பதைப் பற்றி சில நேரங்களில் எனக்கு தீவிர சிந்தனை வருகிறது. (பலபேருக்கு வந்திருக்கலாம்)

உலகில் ஐரோப்பியர்கள் இப்படி சிந்தித்து தங்கள் நாட்டின் தெருக்களுக்கு பெயர் வைப்பதில் கில்லாடிகள்என்று சொல்வார்கள். அமெரிக்கர்கள் ரொம்பவும் அலட்டிக் கொள்ளாமல் ஒரே தெரு பெயரில் ஒன்று,இரண்டு, மூன்று என்று போட்டு விடுவார்கள். சீனர்கள் தெருக்களைப் பொதுவான பெயரில் வைத்து விட்டுக் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்று அடைமொழி கொடுத்து விடுவார்கள்.ஆசியாவில் ஜப்பான், கொரியா, தாய்லாந்து, இந்தோனேஷியாவில் சில முக்கியமான சாலைகளைத்தவிர்த்து கிளைச் சாலைகளுக்குப் பெயரே இருக்காது. சிங்கப்பூர் இந்த விஷயத்தில் பல நாடுகளுக்குமுன் உதாரணமாகத் தெருக்களுக்கு பெயர்கள் வைத்துள்ளது.

‘’டோபி காட்’’ பெயர் எல்லோருக்கும் தெரியும். சலவைத் தொழிலாளர்கள் Bras Basah ரோட்டிலிருந்துஸ்டாம்போர்டு கால்வாய் வழியாக வழிந்தோடும் தண்ணீரைப் பயன்படுத்தி துணிகளைத்துவைப்பார்களாம். சீனர்கள் அதற்கு ‘‘லாவ்நீய் கொய்’’ (தண்ணீர் வழிந்தோடும் தெரு) என்று பெயர் வைத்திருக்கிறார் கள். இதில் என்ன ‘முன் உதாரணம்’ என்றால், குழப்பமில்லாமல் தெளிவாக கூப்பிடுவதற்கு அங்கு ஏற்கனவே நடந்த தொழில் பெயரையே அந்தத் தெருவுக்கு வைத்துவிடுவது,இன்னும் சில தெருக்கள் Butcher Street, Tanners street, Fisherman’s street, Jewellers street என்று இருந்தால் நாம்கூப்பிடுவதற்கு வசதியாக இருக்கும்.

சிலர் இன்னும் ஒரிஜினல் பெயரை விட்டு விட்டு சிக்கன் மார்க்கெட், மட்டன் மார்க்கெட், காய்கறிமார்க்கெட் என்று கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சில பேரைக் கூப்பிடுவதற்கு ஊர்ப்பெயர், தன்பெயர், தந்தை பெயர், தேவைப்பட்டால் தாத்தாவின் பெயர் பயன்படுத்துவார்கள். இதைத்தான் ‘விலாசம்’என்று சொல்வார்கள். ஆரம்பத்தில் பஸ்ஸில் ஏறும்போது சவுத் பிரிட்ஜ் ரோடு, நார்த் பிரிட்ஜ் ரோடு குழப்பம் வந்து விடும். ஆற்றுக்கு வடக்கே நார்த், தெற்கே சவுத், புதிதாக கட்டப்பட்ட பாலம் ‘நியூ பிரிட்ஜ்’ரோடு என்று மனப்பாடம் செய்து கொண்டதால் இப்போது வெகு சுலபம்.

டாக்ஸி டிரைவரிடம் எக்கச்சக்கமாக தெலூக் பிளாங்கா என்று மொட்டையாக சொல்லி மாட்டிக்கொண்ட அனுபவங்கள் பலருக்கு இருக்கும். தெலூக் பிளாங்கா, டிரைவ், கிரெசன்ட், ஹைட்ஸ் இப்படிவிலாவாரியாக சொன்னால்தான் சேர வேண்டிய இடம் தலை சுற்றாமல் வரும்.

எம்.ஆர்டியில் Down town லைனில் கிழக்குப் பகுதியில் அமையவிருக்கும் நிலையங்கள் பதின் மூன்றுக்குபெயர்கள் வைக்கச் சொல்லி அறிவிப்பு வந்தவுடன் சில வருடங்களுக்கு முன்பு கிரேத்த ஆயர், கண்டாங்கெர்பாவ் என்று பெரு வாரியாக பெயர் சிபாரிசு செய்யப்பட்ட நிலையங்கள். ஏற்கனவே அங்கிருந்த அடையாளப் பெயர்கள் சைனா டவுன், லிட்டில் இந்தியா என்றே பெயர் சூட்டப்பட்ட ஞாபகம் வந்தது.

தெம்பனீஷ் வெஸ்ட், தெம்பனீஷ் ஈஸ்ட் நிலையங்கள், மற்றும் ரிவர் வேலி, பென்கூலன், சுங்காய் ரோடு, உபி, காக்கி புக்கிட் மற்றும் அப்பர் சாங்கி நிலையங்களுக்கு பெயர் வைக்க வேண்டியுள்ளது.நானும் சில பெயர்களை எழுதிப் போட்டேன். ஏதாவது ஒரு தமிழ் பெயர் வரும் என்று ஜீன் மாதம் முடிவுதெரியும்.

போனிக்ஸ், பெட்டிட், பெண்டிங், லாயார், கன்கார், மக்காவ், கடலூர், கோரல் edge, ஹைரிங்

முதல் மூன்று புக்கிட் பாஞ்சாங் எல் ஆர் டி
இரண்டாவது மூன்று செங்காங்
மூன்றாவது பொங்கோல்

இதில் கடலூர் ஸ்டேஷன் சில சமயம் நம் காதுகளில் காதலூர் என்று கவிதையாய் விழுவது காதில்தேன் வந்து பாய்வது மாதிரி இருக்கிறது.

எனக்கு ‘‘சூய்வெய்’’  என்று ஒரு சீன நண்பர் இருக்கிறார். தன் அடையாள அட்டையின் பெயரை அடிக்கடிமாற்றிக் கொள்வார். பெயர் ராசி பார்ப்பது நீக்கமற எல்லா இனங்களிலும் உள்ளது.

பெயரைப் பார்த்து அதிர்ஷ்டம் தானாக வரும் என்பதற்காக மாற்றவில்லை.

ஜஸ்ட்  Funny  என்று சொல்வார். மற்றவர்களுக்கு பெயர் மாற்ற ஆலோசனைகளையும் அவ்வப்போதுவாரி வழங்குவார்.

Keith என்ற ஸ்காட்லாந்து
Tony என்ற பிரிட்டிஷார்
Charles  என்ற ஜெர்மானிய பெயர்கள் அவரிடம் எப்போதும் கைவசம் இருக்கும். அவர்களுடைய சீனப்பெயர்களை விட்டுவிட்டு இந்த மேலைநாட்டு பெயர்கள் நமக்குக் கூப்பிட வசதியாக இருப்பது ஏன் என்றுதெரியவில்லை.

சமீபத்தில் இணையத்தில் ஒரு செய்தி படித்தேன். சிங்கப்பூரில் தன் அடையாள அட்டை பெயரை பேட்மேன் பின் சூப்பர்மேன் என்று ஒருவர் மாற்றி வைத்துக் கொண்டிருக்கிறார்.

புதிய தலைமுறைகளிடம் பெயர்க் காரணமெல்லாம் கேட்டால் விடை கிடைப்பது மிகவும் சிரமம்.

அது ஜஸ்ட் Funny

பஸ்ஸில் இரண்டு டீன் ஏஜ்கள் பேசிக் கொண்டு வந்தார்கள்.

அல்லாம்மா! நெக்ஸ்ட் மன்த் கேத்தே தியேட்டரில் டிக்கெட் விலை 28 வெள்ளி உனக்குத் தெரியுமாலா?

ஒரு மீல்ஸ், தண்ணி கொடுக்கிறார்கள் என்று ஜப்பானியர்களிடம் சரணடைந்த கிளர்ச்சியாளர்கள் என்று கருதப்பட்ட ஐந்து சீனர்களின் தலைகள் கேத்தே தியேட்டர் முன்னும் வெட்டப்பட்டது சரித்திர நிகழ்வு.சரணடைந்த இடம் 1991ல்தான் ஒரு சினிமா அரங்காக மாற்றம் கண்டது. திரைப்படங்கள் வாழ்க்கைக்கு மிக அருகில் இருப்பதன் காரணம் அதனுள் ஒரு காலம் இயங்குகிறது என்று சொல்வார்கள்.

என்வாழ்விலும் ஒரு சுவையான அனுபவம் நடந்தது. ஜாலான் சுல்தான் தியேட்டரில் சினிமா பார்க்கநுழைந்த எனக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்த என் தந்தையைப் பார்த்ததும் திக்கென்றிருந்தது.

அவர் என்னைப் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு தலையை சீட்டோடு சீட்டாகமறைத்துக் கொண்டேன். சினிமா ஆரம்பித்து ஓடிக் கொண்டிருக்கும்போது யாரோ என் பின்னாலிருந்துதகப்பனார் மீது ‘‘பேர்ப்பர் ஆரோ’’  விட்டுக் கொண்டிருந்தான். அவர் தன் மேல் விழும் அரோவை தட்டிவிடுவதும் திரும்பிப் பார்ப்பதுமாய் அல்லாடிக் கொண்டிருந்தார். நான் அவருக்குத் தெரியாமல் படத்துக்கு வந்திருந்ததால் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

படம் இடைவேளைவரை இது தொடர்ந்து கொண்டிருந்தது. விளக்கு வெளிச்சம் போட்டவுடன் தலையைசீட்டுக்குள் வைத்துக் கொண்டே ஓரக் கண்ணால் பார்த்தேன் என் மகன்தான் அது’’  எனக்குத் தெரியாமல் அவன் சினிமாவுக்கு வந்திருக்கிறான்.

ஜாலான் சுல்தான் தியேட்டர் இப்போது இல்லை ஆனாலும் அதன் நினைவுகள் என் தந்தைமறைந்துவிட்ட பிறகும் இன்னும் தொடர்கிறது.

அந்தப் படம் என்னவென்று நீங்கள் கேட்கவில்லையே ‘‘மூன்று முகம்