ஜாலி ஜமாலியன்ஸ்

Posted: மே 12, 2011 in பத்தி
குறிச்சொற்கள்:

இரண்டு காரணங்களுக்காக ஒவ்வொருவரும் கல்லூரிப் பருவத்தை அசை போடுகிறோம். ஒன்று அந்த வயது நினைவுகள் வழங்கிய மகிழ்ச்சிக்காக, இன்னொன்று அந்த வயதுக்குரிய மனத்தை அப்படியே தக்க வைத்துக் கொள்ள முடியவில்லையே என்கிற ஏக்கத்துக்காக, சட்டைப் பையில் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வெளியில் போவதற்கு துவைத்துப் போட்ட சட்டை இருந்தாலும் இல்லாவிட்டாலும் சர்வ சாதாரணமாக அறை நண்பர்களின் சட்டையில் கை வைத்து எப்போதும் ஆனந்தமாக நம்மால் இருக்க முடிந்தது எப்படி. அந்தப் பருவத்தில் நிரம்பி வழிந்த கள்ளமின்மைதான் காரணம். அப்போது இல்லாத எல்லாமே இன்று நம்மிடையே இருக்கிறது. ஆனால் இந்த ஆனந்தம் என்ற ஒன்று மட்டும் நம்மை விட்டு ஓடி ஒளிந்து கொண்டது. இது எந்தப் புள்ளியில் நிகழ்ந்தது என்றுதான் தெரியவில்லை. திருச்சி ஜமாலில் பட்டப்படிப்பு படிக்கும்போது அறை நண்பர்கள் மொத்தம் நான்கு பேர். ஒவ்வொருவருக்கும் ஒரு டேஸ்ட். அதில் அன்சாரி டோல்கேட்டில் ஆட்டோ எடுத்துத்தான் மெயின்கார்டு கேட் செல்வார். அந்த ஆட்டோ எப்போதும் தெப்பக்குளம் போஸ்ட் ஆபீஸில்தான் போய் நிற்கும், அரை மணி நேரம் ஒரு சிகரெட்டை ஊதிவிட்டு சிந்தாமணியில் சுடச் சுட வெஜிடபிள் சமோசாவுடன் ஒரு காபி குடித்துவிட்டு மலைக்கோட்டை படிகளில் கொஞ்சம் உட்கார்ந்து எழுந்திருப்பார். இன்னொரு நண்பருக்கு குளத்தூர் பிரியாணி, கற்கண்டு பால் சாராதாஸில் எதுவும் துணி வாங்காமல் வெறுமனே உள்ளே போய் வரவேண்டும்.

நண்பர் ராஜாமுஹம்மது (பெரம்பலூர்) விடுதியில் சேர்ந்த முதல் நாளே சிங்காரத் தோப்புக்குப் போகலாமே என்று சொன்னவுடன் நான் ஏதோ மாந்தோப்பு புளியந்தோப்பு சவுக்குத் தோப்பு பச்சை பசேல் என்றிருக்கும் என்று நினைத்துச் சென்றால் கலர் கலராக ஃபிகர்கள். அவருக்கு சங்கிலியாண்டிபுரம், பொன்மலைப்பட்டியில் பழைய படங்களைப் பார்ப்பதென்றால் கொள்ளைப்பிரியம். ஆனால் விடுதிக் காவலாளி ‘‘கோனார்” மீசையுடன் கேட்டுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து தூங்காமல் இருப்பதுதான் மிக எரிச்சலான விஷயம். ரூமில் யார் அதிக ‘‘பெல்பாட்டம்” வைத்து பேண்ட் போடுகிறோமோ அவர்தான் முற்போக்குவாதி, சிங்காரத் தோப்பு டைலர் பெயரை மறந்துவிட்டேன். அவரிடம் போய் அளவு கொடுக்கும்போது பெல்ஸ் எத்தனை ‘‘இன்ச்” வைக்கவேண்டும் என்று சொல்வது அவ்வளவு இன்பமான ஒரு விஷயம்.

மறக்கக்கூடிய விஷயங்களா அவை.

ஹோட்டல் ராதாஸ், பாலக்கரை தியேட்டர்………….

பேராசிரியர்களுக்குப் பெயர் வைப்பதிலும், அவர்களுடைய உடல் மொழிகளை நக்கல் செய்வதற்கென்றே ஒரு கும்பல் அலைந்துகொண்டிருக்கும். அந்தக் கும்பலில் துண்டு ஜோக்குகளையும், கவிதைகளையும் எழுதிக் கொண்டிருந்த என்னிடம் ஒரு நண்பர் திருச்சி ஆல் இந்திய ரேடியோவில் ஒரு நிகழ்ச்சி செய்ய வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்றார். சொன்னபடியே செய்தார். அந்த நிகழ்ச்சி ‘‘சிரிப்பு வருது, சிரிப்பு வருது”. ஸ்கிரிப்ட் எழுதி ஒரு நாலுபேரைக் கிண்டல் கும்பலில் தேர்ந்தெடுத்து வானொலி நிகழ்ச்சியில் களமிறக்கினேன். வெளியில் ஜோக்குகளாக அடித்துத் தான் கிளப்பும் ரபிக் ஸ்டூடியோவில் மைக் ஆன் பண்ணியதும் டைமிங் காலை வாரியதால் சொதப்பினார்.

ஒரு புதன்கிழமை இரவு 8.30க்கு நிகழ்ச்சி ஒலிபரப்பினார்கள். அதை ஆர்வமாகக் கேட்ட நண்பர்கள் ‘‘ஏதோ கும்பல் அரட்டை அடிப்பது மாதிரி சத்தம் கேட்கிறது” என்று சொன்னார்கள்.அவர்கள் ஒன்றை க்கவனிக்க மறந்துவிட்டார்கள். நான் மதன் ஜோக்கை வெட்டி ஒட்டி அந்த நிகழ்ச்சியைத் தயாரித்திருந்தேன். ஆடிக்கொருதரம் ‘ஆனந்த விகடன்’ படிக்கும் நண்பர்களுக்குக் கூட ‘‘இது எங்கோ படித்த ஜோக்” என்பது நினைவில் வரவில்லை. ஆனால் அதில் ஒரு ஜோக் விரசமாக இருக்கிறது என்று வானொலி இயக்குநர் வெட்டிவிட்டார். அந்த ஜோக்.

“தெருவில் ஒண்ணுக்குப் போகாதே.

போலீஸ் பிடிக்கும்”

“பிடிச்சா பிடிக்கட்டுமே வேஸ்டாதானே போகுது!’’

அந்த ரஃபி சிங்கப்பூரில்தான் இத்தனை வருடம் இருந்திருக்கிறார். ஆனால் எனக்குத் தெரியாது. ஜமால் முஹம்மது கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட நண்பர்கள் முதல் கூட்டத்தில் ஜலால் ‘‘யாரென்று தெரிகிறதா?’’ என்று கூட்டி வந்து நிறுத்தினார். உணர்வுபூர்வமான சந்திப்புப் பழைய நாட்கள், பழைய நண்பர்கள், பழைய நினைவுகள் மேல் நமக்கிருக்கும் அக்கறை ஆர்வம் முன்னாள் மாணவர்கள் சங்கங்களை பல்கலைக்கழகங்களில் துவங்குவதற்கு உந்துதலாக இருக்கிறது. முதன் முதலில் 1872களில் அமெரிக்காவின் இலியானோஸ் பல்கலையில் 20 முன்னாள் மாணவர்களுடன் துவங்கப்பட்ட இலியானோஸ் அலும்னி. தற்போது சுமார் 6 லட்சம் உறுப்பினர்களுடன் அலும்னிகளின் முன் மாதிரியாக விளங்குகிறது.

அலும்னி (Alumni) என்ற இலத்தீன் சொல்லுக்கு முன்னாட்களில் பயின்ற பட்டதாரி மாணவ மாணவியர்களைக் குறிக்கிறது. இந்த அலும்னி பாத்திரங்கள் ஜமால் முஹம்மது கல்லூரி பொன்விழா ஆண்டிற்காக சென்ற 2.5.2011 அன்று ஒன்று கூடினோம். சில அலும்னி பாத்திரங்கள் பழசாக இருந்தாலும் பளபளப்பாக இருந்தன. ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டபோது சிங்கப்பூரில் குறிப்பிடத்தக்க நிறுவனங்களில் தங்களுடைய முத்திரை பதித்தவர்களையும் 1990க்குப் பிறகு சிங்கப்பூரில் குடியேறி தங்களுக்கும் தாங்கள் சார்ந்த சமுதாயத்திற்கும் பல வகைகளில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களையும் காணமுடிந்தது. கடந்தகால மற்றும் நிகழ்காலத்திற்கான ஒரு பரிணாம இணைப்பு, தங்கள் அனுபவம் மற்றும் அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு மேடையை அமைப்பதற்கான முயற்சி.

பொன்விழா கொண்டாடும் நிகழ்வில் அன்று நான் சந்தித்த ஒவ்வொருவரும் மாற்றமடைந்திருக்கும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டோம். நான் படித்தபோது பட்டப்படிப்பு முடிந்த கையோடு ரசாயனப் பிரிவில் முதுநிலை 1980களில் ஏற்படுத்தப்படவில்லையாதலால் வேறு கல்லூரி செல்ல வேண்டிய நிலை. ஆனால் இப்போது 19 பட்டப்படிப்புக்களுடன் முதுநிலைப் படிப்புகளும் M.phil, 12 ph.d பாடங்களும் வந்துவிட்டன. 9625 மாணவர் எண்ணிக்கையை தொட்டிருக்கிறது. இதில் 2879 பெண்கள். தனியாக ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, வெகுவிரைவில் பொறியியல் கல்லூரி ஆரம்பிக்க இருக்கிறார்கள். சமீபத்தில் K.ஜமால் அவர்கள் எழுதிய ‘முப்பெரும் வள்ளல்கள்’ என்ற புத்தகத்தைப் படித்தேன். மத ஒற்றுமைக்காகத் தனது இரண்டு பேத்திகளுக்கு கல்லூரியின் ஸ்பாதகர் ஜமால் முஹம்மது சீதா காதர் பீவி, ராதா தமீமா என்று பெயர் சூட்டியது. காந்தி 1931ல் வட்டமேஜை மாநாட்டிற்கு லண்டன் சென்றபோது அதன் குழுவில் ஒரு உறுப்பினராக திரு ஜமால் முஹம்மது அவர்கள் இடம் பெற்றது.

ஒரு கட்டத்தில் காந்தி திரு.ஆகா கானிடம் ‘‘நீங்களும் ஜமால் முஹம்மதும் என்ன முடிவு செய்தாலும் சரி , நான் வெற்றுக் காகிதத்தில் கையெழுத்திட்டுத் தர தயாராக இருக்கிறேன்” என்றது. திரு. ராஜாஜி அவர்களிடம் சுதந்திரப் போராட்ட நிதியாக ‘நிரப்பப்படாத காசோலையைக் கொடுத்தது போன்ற செய்திகள் நாங்கள் கல்லூரியில் படித்தபோது கேள்விப்படாத விஷயங்கள். JMC, Alumni சென்னை, பெங்களூர், கோழிக்கோடு, பஹ்ரைன், துபாய், ஜித்தா, குவைத், மலேசியா, இப்போது சிங்கப்பூரில் தொடங்கப்பட்டிருக்கிறது. அன்று நடந்த நிகழ்வில் எழுத்தாளர் கவிஞர் நாகூர் ரூமி அவர்கள் இயற்றிய பாடல் உணர்வுபூர்வமாக அரங்கை அதிரவைத்தது. பக்கத்திலிருந்த நண்பர், நாகூர் சரி! அது என்ன ரூமி என்றார்.

ரூமி என்றால் ரோம் நகரத்துக் கவிஞர் ஜலாலுதீன் தன் பெயரை ஜலாலுதீன் ரூமி என்று வைத்திருந்ததால் அவர் ஜமால் முஹம்மது கல்லூரி விடுதி ரூமில் எந்நேரமும் உட்கார்ந்து கவிதை எழுதியதால் தன் பெயருக்குப் பின்னால் ரூமி என்றும் சேர்த்துக் கொண்டிருக்கலாம் என்றேன். பல தளங்களில் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அறிஞர்கள் பலர் முன்பு கல்லூரி முதல்வர் திரு ஷேக் முஹம்மது அவர்களின் அறிவுபூர்வமான உரை அனைவரையும் அசத்திவிட்டது. Alumniயின் தலைவரும் ஒரு கவிஞர் நாகூர்தீன். இந்த அலும்னிகளை இணைத்து வழி நடத்தும் டாக்டர் ஹிமானா சையீத் 1964ல் ‘மறுமலர்ச்சி’ வார இதழில் தொடங்கி சுமார் 565 சிறுகதைகள், 9 நாவல்கள், 100 கவிதைகள், 1000 கட்டுரைகள் என்று இலக்கிய உலகிற்கு நன்கு அறிமுகமானவர். இருவருமே கவிஞர்கள். அதனால் கவிதையோடு இந்தக் கட்டுரையை முடிக்கலாம்.

மழைவிட்ட பின்னும் விழுந்த

இலைவிட்டுப் பிரிய மனமில்லாமல்

அதன் நுனிபற்றித் தொங்கும் நீர்த்துளிபோல்

கால மழை ஓய்ந்த பின்னும்

இதயம் விட்டுப் பிரிய மனமில்லாமல்

அதன் சுவர் பற்றித் தொங்கும் ஞாபகத்தூண்கள்

இது எண்ணத் தேவையா

இல்லை நினைவின் பாரமா!

 

thanks: http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=4281

Advertisements
பின்னூட்டங்கள்
 1. Ma. Anbalagan சொல்கிறார்:

  Good brother! These experiance not only for you, but for everybody. Onethink after reading your article the readers would start to think their college life, like my “INNUM KETKIRA SATHTHAM’ sweet remebarance. Nice flow writting. I appriciate you that you are not hide anythink, everythink what happened at the teen age everythink you vamit.
  Thank you to think about my KHADAR MOHAIDEEN COLLEGE, GOVT ARTS COLLEGE, KUMBAKONAM & MADARAS MEDICAL COLLEGE ( anti Hindi agitation 1965)
  – Ma. Anbalagan

  • ஷாநவாஸ் சொல்கிறார்:

   திரு மா.அன்பழகன்
   நன்றி ஐயா!

   தங்கமீனில் தாங்கள் எழுதும் அனுபவத் தொடர் இதுவரையிலும் தாங்கள் எழுதிய பல நூல்களுக்கு சிகரமாக விளங்குகிறது. அப்படியே கொஞ்சம் முன்னோக்கி சென்று கல்லூரியிலிருந்து ஒரு தொடர் ஆரம்பியுங்களேன்.
   கல்லூரியில் அடித்த லூட்டியோடு வெளியில் வந்து யதார்த்த வாழ்வை புரிந்து கொள்ளாமல் பாம்பின் வாயில் முடிந்துபோன தவளைப்பாட்டு மாதிரி அடங்கிப்போனவர்களையும் தூரல் மழையில் நனைந்தும் சாயம் போகாத குடைமாதிரி உலகின் யதார்த்தத்தை எதிர்கொண்டு உயர்ந்தவர்களையும் பார்த்திருக்கிறேன்.
   உங்களிடம் இப்படியே பல இருக்கும். அது உங்கள் எழுத்தோடு வரும்போது இன்னும் சுவாரஸ்யம். கூட்டும்தானே

   அன்புடன்
   ஷாநவாஸ்

 2. க.மதிவாணன் சொல்கிறார்:

  தோழர் அவர்களுக்கு, நினைத்தது கிட்டும் இந்த காலத்தை விட, கையில் காசில்லாத அந்த நாட்களில் நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுவது எவ்வளவு மகிழ்ச்சியான நிகழ்வுகள்! இந்த கட்டுரை படித்ததும் நினைவுகள் என்னையும் எனது இளமைக்காலங்களுக்கு இட்டுச்சென்றது!. மகிழ்ச்சி!

  • ஷாநவாஸ் சொல்கிறார்:

   நன்றி மதிவாணன்

   தங்கள் வலைப்பக்கத்தில் வெளியான பாண்டியனின் சிறுகதை வெகு அருமை. தன்னுள் நிறைய விஷயங்களை ஒளித்து வைத்துக்கொண்டு தோழர்களுக்கு கொடுக்க மனமில்லாமல் இருக்கிறார். ‘‘ஆஹா” என்ன அருமையான Content சிறுகதை அனுபவத்தின் உச்சம்.
   எவ்வளவு படித்தும் நானும் கற்றுக் கொடுக்கும் அனுபவங்களை எழுத்தில் கொண்டு வருவதென்பது ஒரு நெகிழ்ச்சியான விஷயம். அனுபவத்தில் நேரடி பரிச்சயம் இல்லாமல் அதில் உக்கிரமாக வாழ்வதோ, அதன் ஆழ்ந்த அடியோட்டங்களை அர்த்தங்களை வெளிக்கொணர்வதோ இயலாத காரியம். தங்கள் வலைப்பதிவின் பல பதிவுகள் உயிரோட்டமானவை.
   “வாழ்வை பொருள் பொதிந்தல் ஆக்கும்
   ஒரு முயற்சிதானே எழுத்து”
   அன்புடன்
   ஷாநவாஸ்

 3. pirabuwin சொல்கிறார்:

  எல்லோருடைய வாழ்விலும் மறக்க முடியாத அனுபவங்கள் இவை. நினைத்தால் மனதுக்கு வேதனையாகவும் இருக்கும்.

 4. கோ.கண்ணன் சொல்கிறார்:

  ஷாநவாஸ்,

  இளமைக்கால நினைவுகள் எப்போதும் ‘ தண்ணீரில் விழுந்த நிழல் நனையாமல் இருப்பது போல’ , மனதுக்குள் அப்படியே அமிழ்ந்துக் கொண்டு , எதோவொரு சந்தர்ப்பத்தில் மிதக்கத் தொடங்கி… அப்பவெல்லாம் நாங்க”…ன்னு வழியத்தொடங்கி விடுகிறது.

  உங்களின் ‘ ஜாலி ஜமாலியன்ஸ்’ படித்துக்கொண்டிருக்கையிலேயே என் எண்ண ஓட்டம் பின்னோக்கிப் பயணிக்க ஆரம்பித்துவிட்டது.

  தொடர்ந்து எழுதுங்கள். வாசிக்கக் காத்திருக்கும் உங்கள் வாசகன் – கண்ணன்.

 5. Sermuga Pandian சொல்கிறார்:

  அன்பு காதர்
  கட்டுரையில் முத்தய்ப்பை சொன்ன கவிதை மிக அருமை. வீரியமான வார்த்தைகள் . நம் வயது ஒத்தவர்கள் பழைய நினைவுகளை அசைபோடும்போது ஏற்படும் உணர்வுகளை அற்புதமாக கவிதையில் கொண்டு வந்துவிட்டீர்கள் . படித்ததில் பிடித்தவை என்ற என் டைரி குறிப்புகளில் உங்கள் கவிதையும் இடம் பெற்றுவிட்டது

 6. pandiammalsivamyam சொல்கிறார்:

  1964-ல் சீன- இந்திய போருக்குப்பின் வெளியான திரைப்படம் இரத்த திலகம் .கவியரசு கண்ணதாசனின் பாடல் பசுமைநிறைந்த நினைவுகளே
  பாடித்திரிந்த பறவைகளே
  ப்றந்து செல்கின்றோம்

 7. pandiammalsivamyam சொல்கிறார்:

  1964-ல் சீன -இந்திய போருக்குப் பின் வந்த திரைப்படம் இரத்த திலகம். கவியரசு கண்ணதாசன் பாடல் பசுமை நிறைந்த நினைவுகளே
  பாடித்திரிந்த பறவைகளே
  பற்ந்து செல்கின்றோம் -உறவை
  பிரிந்து செல்கின்றோம் APSAC ல் 1970ல் பிரிவு உபசாரவிழாவில் அனைவரும் அழுதுகொண்டே பாடியது நினைவுக்கு வருகிறது. நானும் நண்பர்களை தேடிக்கொண்டே இருக்கிறேன் 64வயதிலும்.!கள்ளமின்மை ஒழிந்துபோய் அப்போது இல்லாததெல்லாம் இப்பொழுது நம்மிடம் இருக்கிறது.சத்திய வாசகம்!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s