நீர் வந்துவிடும்
இதன் ஊடே ஊர்ந்து நடந்து
ஓடிச் செல்லும் வண்டித் தடங்களை
இனி காணமுடியாது
இன்று புல்லைத் தின்று கொண்டிருக்கும்
ஆடு நாளை அந்த இடத்தை
வெறுமையுடன் சந்திக்கும்
மேலே பறக்கும் கழுகின் நிழல்
கீழே கட்டாந்தரையில்
பறப்பதை நாளை பார்க்கமுடியாது
இந்தக் குளத்தில் நாளை
நீர் வந்துவிடும்………………
& கலாப்ரியா&
ஒவ்வொரு கணத்திற்குப் பிறகும் நமக்கு பல அனுபவங்கள் வந்து சேர்ந்து கொண்டிருக்கின்றன. அடுத்த பிறந்த நாள், முதல் பிறந்தநாளை அர்த்தமற்றதாக்கி விடுகிறது. நம் நினைவுகளில் நம் எத்தனை பிறந்த நாட்கள் ஞாபகம் வைத்திருக்கிறோம்? சிலருக்கு ஒரு பத்து ஞாபகமிருப்பது மிகப் பெரிய விஷயம். ஆனால் அந்த வருடத்தில் நடந்த ஏதாவது சில விஷயங்களை நாம் நினைவில் இருத்திக் கொண்டால் ‘‘நச்” என்று ஞாபகம் வந்துவிடும். இந்த விஷயத்தில் பிப்ரவரி 29 பிறந்தவர்கள் பாடுதான் கொஞ்சம் திண்டாட்டம். அந்த மாதமே ஒரு பரிதாபத்துக்குரியதுதான். இரண்டு முரட்டு மாதங்கள் ஜனூஸ் என்ற ரோமானியக் கடவுள், மார்ஸ் என்ற எப்போதும் மல்லுக்கு நிற்கும் கடவுள். இவற்றிற்கிடையே மாட்டிக்கொண்டு பிப்ரவரி விதியின் விளையாட்டால் சுருங்கிவிட்டது.
முதன்முதலில் வெளியிடப்பட்ட ரோமானியக் காலண்டரில் 10 மாதங்கள்தான் இருந்தன. பிப்ரவரி அதில் இடம்பெறவில்லை. முதல் மாதம் மார்ச்சில் ஆரம்பித்து டிசம்பரில் முடிந்தது. கி.மு 700 ல் ஜனவரி, பிப்ரவரி சேர்த்துக்கொள்ளப்பட்டன. ரோமானியப் பேரரசர் Numopompilsus 12 மாதங்களும் ஒற்றைப்பட எண்கள் வருவது மாதிரி மாற்றி அமைத்தார். (29 அல்லது 31) இரட்டைப்படை எண்கள் ரோமானியர்களுக்கு அப்போதே ஒத்துக்கொள்ளவில்லை.
நான் கல்லூரியில் படிக்கும்போது இந்தக் காலண்டர் விவாதம் நடந்தது. அதில் என் அறை நண்பர் ஒருவர் ஜனவரியிலிருந்தும் மார்ச்சிலிருந்தும் 31ந்தேதியை எடுத்து பிப்ரவரியில் போட்டு 30 ஆக்கிவிட்டால் வருடம் பிறந்து 4 மாதங்கள் 30 என்ற அளவிலேயே புதுவருடம் கரடுமுரடில்லாமல் போகும் என்றார். ஜனவரி, டிசம்பரில் 31ல் பிறந்தவர்கள் 365ல் 0.5 சதவீதம்தான் கணக்கு வரும். அவர்கள் முன் கூட்டியே 30ல் பிறந்தநாளைக் கொண்டாடிக் கொள்ளலாம் என்றார். இன்னொரு நண்பர் “Maths Major”அவர் Sexaqesima) விதிப்படி 11 மாதத்திற்கு 30 (11X30) வருவது மாதிரிக் கணக்கிட்டு டிசம்பரை மட்டும் சூப்பர் ஜம்போ 35 அல்லது 36 நாட்கள் கொடுத்து டிசம்பர் மாத விடுமுறை நாட்களை அதிகமாக்கிக் கொள்ளலாம் என்றார். இவர் இப்போது ஊரில் அரசியல்வாதியாக இருக்கிறார்.
ஆனாலும் இந்த ‘‘கிரே கொரிலின்’’ நாட்காட்டி அப்படியே நிலைத்துவிட்டது. “Bazing Gou” என்று சீனத்தில் 80 களுக்குப் பிறகு பிறந்த இளைஞர்களைக் குறிப்பிடுகிறார்கள். இவர்கள் அபரிதமான புத்தாக்க சிந்தனைகளுடன் தம்மைப் பற்றி மட்டுமே அதிகம் கவலைப்படும் சந்ததி, வரும் காலத்தில் இந்த காலண்டரை தூக்கிப் போட்டுவிட்டு வேறு ஒரு நாட்காட்டியை கொண்டு வர முனையலாம் என்கிறார்கள்.
சென்ற மாதம் பல விஷயங்களில் சிங்கப்பூர் சாதனை படைத்திருக்கிறது. இளையர்களை அறிவியல் தொழில்நுட்பத்தில் ஈடுபட வைக்கும் நோக்கில் சென்ற மே 6ந்தேதி இந்திய விண்வெளித் துறையில் ஏவப்பட்ட சிங்கப்பூர் X sat மைக்ரோ சேட்டிலைட் அதற்கு அடுத்த நாளே துவாஸில் உள்ள நிலையத்திற்கு சிவப்பும், பச்சையும் கலந்த பல புகைப்படங்களை அனுப்பத் துவங்கியிருக்கிறது. 800 கிலோமீட்டர் உயரத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மிகவும் துல்லியமாக (சிவப்பு நிறம் பசுமை பூக்காங்களையும் பச்சை நிறம் நீர் பிடிப்பு பகுதிகள்) எடுத்து அனுப்பியிருக்கிறது. மற்ற நாடுகளைப் போல் பாதுகாப்பு அம்சத்திற்காக அல்லாமல் நிலப்பகுதிகளின் தன்மையை ஆராய்வதற்கு X sat சேட்டிலைட் ஒரு நாளுக்கு 14 தடவைகள் சிங்கப்பூருக்கு மேல் பறப்பதற்கு ஏதுவாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு சிறிய நாடு அறிவியல் தொழில் நுட்ப ஆராய்ச்சிகளுக்கு 16 பில்லியன் ஒதுங்கியிருப்பதை உலக நாடுகள் வியப்புடன் வரவேற்றிருக்கின்றன. அதன் முதல் பலன் சிங்கப்பூருக்கு விரைவில் கிடைக்கவிருக்கிறது.
புற்றுநோய்க்கு மாத்திரை தயாரிப்பதில் phase (1) ல் சிங்கப்பூரின் அறிவியல்துறை வெற்றி அடைந்திருக்கிறது.
100 வருடங்களில் பெறக்கூடிய வளர்ச்சியை 25 வருடங்களில் பெற இளையர்களை ஆராய்ச்சிகளுக்கு தேர்ந்தெடுப்பதில் 28 வயதிலிருந்து 32 வரை படிப்பு 32ல் தனிப்பொறுப் பு, 35ல் ஒரு குழுவை நிர்வகிக்கும் பொறுப்பு என்று கணக்காக அரசு செயல்படுகிறது. இன்னொரு குறிப்பிடத்தக்க மே மாத நிகழ்வு சிங்கப்பூர் பொதுத்தேர்தல். நாங்கள் குடியிருக்கும் Tanjong Pagar ஏரியாவில் ‘வாக் ஓவர்’ தேர்தல் முடிவை அறிவித்த அதிகாரி நெட்டில் மிகவும் பிரபலமடைந்துவிட்டார். முன்னாள் மந்திரிகள் ஒன்பது பேருடன் இரண்டு முன்னாள் பிரதமர்களும் அமைச்சரவையிலிருந்து ஓய்வு பெற்றார்கள். அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் மந்திரிகளின் சராசரி வயது 59 லிருந்து 53 ஆக குறைந்திருக்கிறது. உங்களுக்கு 35 லிருந்து 50 ஆகியிருந்தால் அத்துடன் நடுத்தரவயது முடிந்துவிடுகிறது என்று இருந்ததை தற்போது 58 வரை நடுத்தரவயது என்று வளர்ந்த நாடுகளில் அறிவித்துள்ளார்கள்.
வயது போய்க்கொண்டிருந்தாலும் சில இளமைக் கால நினைவுகள் மறக்குமா என்ன? 1974ல் தொடங்கப்பட்ட கேபிள் காரில் முதன்முதலில் பயணம் செய்த நினைவுகள் அந்த வருடம் எனக்கு தம்பி பிறந்ததால் வருடம் ‘நச்’ என்று நினைவுக்கு வருகிறது. அந்த கேபிள் கார் 1983ல் எண்ணெய் துரப்பன கப்பலுடன் மோதி 7 பேர் இறந்துபோனது, கேபிள் கார் வருவதற்குமுன்பே ஜீரோங் பறவைகள் (1971) விலங்குப் பண்ணை (1973) ஆரம்பிக்கப்பட்டது, அந்த இடங்களை யார் யாருடன் முதலில் பார்க்கச் சென்றோம் என்ற நினைவுகள் அப்படியே பசுமை மாறாமல் இருக்கின்றன. சென்ற மாதம் ஒஸாமா கொல்லப்பட்டதும் செய்தி வாசித்துக் கொண்டிருக்கும்போதே BBC நிருபர் அதே தேதியில் 66 வருடங்களுக்கு முன்னால் ஹிட்லர் கொல்லப்பட்டதை நச்சென்று ஒரு அடி அடித்தார். (அவரும் நினைவாற்றலுக்கு ஏதோ பார்முலா வைத்திருப்பார் போலும்!)
இதற்கிடையே சென்ற மாதம் இறுதித் தீர்ப்பு நாள் Judgement day வந்துவிட்டது. உலகம் இன்னும் 24 மணி நேரத்தில் அழியப்போகிறது என்று ஒருவர் அறிவித்தார். நேரம் கடந்த்து.. மக்கள் எப்போதும் போல் நியூயார்க் சதுக்கத்தில் நடந்துகொண்டிருந்தார்கள். சொன்னவர் எங்கோ ஓடி ஒளிந்துகொண்டார். உலகில் ஒரு பக்கம் நம்பிக்கைகள் பொய்த்துப் போவதும் இன்னொரு பக்கம் நம்பிக்கை ஒளி சுடர்விடுவதுமாக அர்ப்பணிப்புகள், அக்கறைகள், தியாகங்கள் நடந்தபடியாகத்தான் இருக்கின்றன. அதில் உலகம் உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.
அன்றாட வேலையின் வேலிகளையும் தன் வயதையும் கடந்து ஏதாவது ஒரு நம்பிக்கையில் வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் பலரை பார்த்திருக்கிறேன். அப்படியே ஒருவரை பற்றிச் சொல்லி இந்தப் பத்தியை முடிக்கலாம்.
மிஸ்டர் ‘ஆலன்’ வயது 70 தாண்டியிருக்கும். அவரை ‘அப்பே’ என்றுதான் கூப்பிடுவோம். பைசைக்கிளில் எந்நேரமும் சுற்றிக்கொண்டிருப்பதால் அவர் பெயர் ‘‘பை சைக்கிள் அப்பே” என்றாகிவிட்டது. தேபான் கார்டனில் குடியிருந்தார்.
கடந்த 2007ல் ஜீரோங் வெஸ்ட் தெரு 42ல் ஒரு மரம் குரங்கு வடிவில் இருப்பதாக புரளி கிளம்பியது. உடனே ஒரு சீனர் ‘‘Kwan yin” அருள் கொடுக்கும் தெய்வம் என்று போர்டை மரத்தில் தொங்கவிட்டுவிட்டார். அந்த இடம்வரை ‘‘பை சைக்கிள் அப்பே” சைக்கிளில் சென்று வந்துவிடுவார். இந்த வயதில் இப்படி உடம்பை வைத்திருக்கிறாரே என்று ஆச்சரியப்படுவோம். சனி ஞாயிறுகளில் தவறாமல் அங்கு சென்று எங்களுக்கு 4D குலுக்கலுக்கு ‘டிப்ஸ்’ கொடுப்பார் (அதனால்தான் இதைப்பற்றி விரிவாக எனக்குத் தெரிந்திருக்கிறது)
கொஞ்ச நாளாக ஆளைக் காணோம். எனக்கு சந்தேகம் வந்தது. அவர் வயதை நினைத்து அல்ல’ Bicycle ஓட்டும் வேகத்தில் என்ன ஆனாரோ என்ற நினைப்பில்தான். சென்றமாதம் ஆள் தட்டுப்பட்டார், அதே சைக்கிளுடன்.
‘‘அப்பே! லாங் டைம் ரெடி, நெவர் சீ யூ நோ கிவ் 4D டிப்ஸ் வொய்?’ என்றேன்.
அந்தக் குரங்கு வடிவ மரத்தில் ஒரு லாரி மோதிவிட்டதாம். உடனே அங்கிருந்த குரங்கு கடவுள் வெளியேறிவிட்டதால், ‘‘நோ மோர் டிப்ஸ்’’ என்றார்.
இப்போதைக்கு அந்த மரத்தில் மோதிவிட்டுப் போன லாரியைத் தேடிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.
அந்த லாரி நம்பர் மட்டும் கிடைக்கட்டும். if Khanna! பை சைக்கிளை த்ரோ பண்ணிவிட்டு காடி வாங்கிடுவேன் லா” என்றார்.
thanks: http://thangameen.com/ContentDetails.aspx?tid=352