நவம்பர், 2011 க்கான தொகுப்பு

எஸ்.வேணுகோபாலன் புஷ்பா தங்கதுரை; ராமச்சந்திரன் வண்ண நிலவன்; எஸ்.டி.பாஸ்கரன் சவீதா; சி.எஸ்.லட்சுமி அம்பை; சோமசுந்தரம் கலாப்ரியா; டி.ஆர்.ராஜகோபாலன் ஸிந்துஜா; நம்பிராஜன் விக்கிரமாதித்தன்; எஸ்.அப்துல் ஹமீது மனுஷ்ய புத்திரன் ………

புனைபெயர்களுக்கு உரியவர்களின் இயற் பெயர்களைப் பற்றிய அரட்டை இன்று ஞாயிறு கோப்பிக் கடையில் களை கட்டியது. 1962ல் இடது ஓரத்தில் என்ற சிறுகதையைக் குமுதத்தில் எழுதி விட்டு, இரண்டு ரங்கராஜன்கள் குழப்பமாகி விடும் என்ற நிலையில் ஒரு ரங்கராஜன் தன் பெயரை சுஜாதா என்று மாற்றிக் கொண்டதில் ஆரம்பித்த உரையாடல், சோ.விருத்தாசலம், புதுமைப்பித்தனாக மாறியதைத் தொட்டது. இறுதியில் புனைபெயர் வைத்துக் கொள்ளலாம்; ஆனால் புனைசுருட்டுத்தான் கூடாது என்று ஒரு வழியாகக் கூட்டம் முடிவுக்கு வந்தது. புலம் பெயர்ந்தவர்களின் முதல் பிரச்சினை தன் பெயரை, அந்நாட்டில் உள்ளவர்களின் போக்குக்கு ஏற்ப மாற்றுவதில்தான் ஆரம்பிக்கிறது. அதிகமான பெயர்கள் சுருக்கமாக அழைக்கப்பட்டு, அவையே நிலைத்த பெயராக மாறி விடுகின்றன.

சிங்கப்பூரில் சீனர்களுடைய பெயர்கள் மூன்று எழுத்துக்கள் கொண்டவையாக நறுக்கென்று இருக்க வேண்டும். ஆனால் அவர்களை நாம் அழைக்கும்போது உச்சரிப்பு மற்றும் மரியாதை ஆகியவற்றில் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களின் பெயர்களை ஞாபகம் வைத்துக் கூப்பிட ஆரம்பிப்பதே வியாபாரத்தின் முதல் வெற்றி. வழக்கமாக வாடிக்கையாளர்களின் பெயர்களை முழுவதுமாகக் குறிப்பேட்டில் எழுதிக் கொண்டு அதில் இலகுவான உச்சரிப்புக்கு ஏற்ற சொல்லாக நான் தேர்ந்தெடுத்துக் கொள்ளுவேன்.

வழக்கமாக சாப்பாடு ஆர்டர் பண்ணும் மியான்மர் நாட்டவர் ஒருவரின் முதல் பெயரை எழுதிக் கொடுக்குமாறு கேட்டு வாங்கிக் கொண்டேன். “U kin muang myint”என்ற அவரது பெயர் உச்சரிப்பதற்குச் சிரமமான பெயராக இருந்தது. அவரை மிஸ்டர் யூ என்று கூப்பிடுவது எனக்குச் சுலபமாக இருந்தது. சில நாட்கள் சென்றிருக்கும். கம்பெனி முதலாளியான சீனர் காசோலை கொடுப்பதற்காகக் கடைக்கு வந்திருந்தார்.

நேரில் வர வேண்டியதில்லையே! மிஸ்டர் யூவிடம் கொடுத்திருக்கலாமே? என்றேன்.

அவர் பெயர் என்ன சொன்னீர்கள்? என்று திரும்பத் திரும்பக் கேட்டார்.

எனக்குப் புரிந்து விட்ட்து. தவறான உச்சரிப்பில் அவரை அழைத்து வந்திருக்கிறேன் என்று!

U kin muang myint என்ற பெயரில் முற்பகுதியில் இருக்கும் U’ மரியாதை நிமித்தம் உள்ள சொல். அதாவது மிஸ்டர் என்ற அர்த்தத்தைக் கொண்டிருக்கும் சொல் அது. அதைத் தனது பெயருடனேயே அவர் ஒட்ட வைத்துக் கொண்டிருந்திருக்கிறார். பெரும்பாலான பெயர்கள் U’ வில்தான் ஆரம்பம் ஆகின்றன. இது வரை அவரை இரண்டு மிஸ்டர் போட்டு அழைத்து வந்திருக்கிறேன்! ‘U’ என்பது ஆண்களுக்கும் Daw’ என்பது பெண்களுக்கும் பெயருக்கு முன்னால் வரும் அடைமொழிகள். மியான்மரில் வயதில் மூத்தவர்கள், இளையவர்களை ‘U’ மற்றும் ‘Daw’ என்று அழைக்க வேண்டியதில்லை. அவர்களில் ஆண்களை Ko’ என்றும் பெண்களை ‘Ma’ என்றும் அழைக்கலாம்.

மிஸ்டர் போடுவது மலாயில் Encik என்று சொல்லப்படுகிறது. அது கொஞ்சம் மருவி இப்போது Inche’ என்றாகிவிட்டது. காலித் ஹம்சா என்ற பெயருள்ளவரை Inche ஹம்சா என்றழைப்பது தவறு. அது அவருடைய தகப்பனார் பெயர். இப்போது காலித் பின் ஹம்சா என்று பெயர் வைத்து விடுவதால் அதாவது ஹம்சாவின் பிள்ளை காலித் என்பதால் கூப்பிடுவது கொஞ்சம் சுலபம். அதே போல Binte’ என்பது இன்னாருடைய மகன் என்ற அர்த்தத்தைக் கொடுக்கும். ஃபாத்திமாவை Cik Fathima’ என்று உச்சரிக்கும்போது Che’ என்று மட்டும் ஒலித்தால் போதுமானது.

இவர் காலித் ஹம்சாவைத் திருமணம் செய்து கொண்டால் Puan Fathima” என்றாகி விடுவார். Puan Chalid என்று அழைப்பது தவறு. மெக்கா புனித யாத்திரை சென்று வந்தவர்கள் Haji ….. Haja…. என்று அழைக்கப்படுவார்கள்.

Inche ஹாஜி அப்துல்லா என்று அழைப்பதை விட துவான் ஹாஜி அப்துல்லா என்று அழைப்பதுதான் சரி. காலித் ஹம்சாவுக்கு டத்தோ பட்டம் அளிக்கப்பட்டால் டத்தோ காலித் ஆகிவிடுவார். அதே போல் அவர் மனைவி ஆட்டோமேட்டிக்காக TANSRI அல்லது PUANSRI ஆகி விடுவார். இந்த டத்தோ பட்டம் காலித் ஹம்சாவுக்குக் கொடுக்கப்படாமல ஃபாத்திமாவுக்கு அவருடைய சேவைக்காக சுல்தானால் அளிக்கப்பட்டிருந்தால் அளித்திருந்தால், அவரை டத்தோ ஃபாத்திமா என்றுதான் அழைக்க வேண்டும்.

சிங்கப்பூரில் உள்ள நம்மவர்களின் கடவுச் சொற்களில் பெயர்கள் சுருக்கமாக இருந்து நான் பார்த்ததில்லை. பெரும்பாலும் கடைசியாகக் குறிப்பிட்டுள்ள தகப்பனார் பெயரையே அழைப்பார்கள். கரடு முரடான உச்சரிப்புக்களைக் கடந்து பெயர் வெளி வருவது வேடிக்கையான நிகழ்வாக இருக்கும். “நேசமணி பொன்னையா என்பதை நாசமா நீ போனியா என்று சொன்னதாக ஒரு ஜோக் பரவலாக வலம் வந்தது.

சீனர்களுக்கும் இந்தப் பிரச்சினை உண்டு. சிங்கப்பூரில் லீ டான் வோங் என்ற பெயர்கள் அதிகமாகக் காணப்படும் பெயர்கள். வேலை ஏற்பாடு செய்யும் நிறுவனம் ஒன்றில் “Shen Tiew Lee” என்பவர் வேலை வாய்ப்பு நேர்காணலுக்கு வந்திருக்கிறார். வரவேற்பாளர் Mr.Lee” என்று முதல் குரல் கொடுத்திருக்கிறார். அறையில் இருந்தவர்களில் பாதிக்கு மேல் எழுந்து கவுன்டரை நோக்கிச் சென்றிருக்கிறார்கள்.

நோ! ஷான் லீ என்று கூப்பிட்டிருக்கிறார்.

“Shen Tiew Lee” என்ற பெயரில் அழைத்தால்தான் எழுந்து போக வேண்டும் என்று பிடிவாதமாக உட்கார்ந்து விட்டார்.

எல்லோரும் காரியம் முடிந்து அறையை விட்டு வெளியேறிய பிறகு, கடைசி ஆளாகக் கவுன்டரில் Shen Tiew Lee” என்று அழைத்த பிறகுதான் அவரை அழைக்கிறார்கள் எனறு நம்பிக்கை வந்திருக்கிறது.

சீனர்களுக்கு மூன்று பெயர்கள் இருக்கும். முதலில் குடும்பப் பெயர். நடுவில் பரம்பரைப் பெயர், கடைசியாகச் சொந்தப் பெயர். குடும்பப் பெயர் Tan அல்லது Ganல் முடிந்தால், அவர்கள் ஹாக்கீன் அல்லது தியோசோங் இனத்தவர்.Chan அல்லது Wong என்று முடிந்தால் அவர்கள் காண்டனீஷ்.

Gan peck Lee (மூன்று சகோதரர்கள்)

 

Gan peck Har

Gan peck Gook

அவர்களின் இரண்டு சகோதரர்கள்

Gan Chen Lee

Gan Cheng Meng

திருமணம் ஆகாத பெண் Miss Lim Swee Ai அவருக்கு Shen Tiew Le உடன்திருமணம்ஆகிவிட்டால் MrsShew தான். மேடம் Lim Swee அல்ல. தைவானிலும் சீனாவிலும் டாக்டர் மற்றும் ஆசிரியர் ஆகியோரைப் பெயரைக் குறிப்பிட்டு அழைப்பதில்லை. அவர்களை அழைக்க, பட்டப் பெயர்களையே பயன்படுத்துகின்றனர். சிங்கப்பூர் பல்கலைக் கழகங்களில் உயர் பதவிகளை வகிப்பவர்களைக்கூட மிஸ்டர் என்று விளிப்பது சீன மாணவர்களை ஆச்சரியப்பட வைக்கிறது. அவர்கள் சீனாவில் கம்பெனி மேலாளர்களைக்கூட “LISHI” என்றும் இயக்குநர்களை “ZHUSIஎன்றும்அடைமொழியுடனேயேஅழைத்துப்பழக்கப்பட்டவர்கள்.

நான்ஹாங்காங்சென்றிந்த நண்பரின்மனைவியைபோதுசீனநணபர்ஒருவர்தனதுஎனக்குஅறிமுகப்படுத்தினார். இவர்Mr. Wong Tai Tai(மனைவி) என்று சொன்னார். சிங்கப்பூரிலும் ஹாங்காங்கிலும் பெயர்களை அழைப்பது அவ்வளவு வித்தியாசமில்லை. ஆனாலும் அவர் tai tai என்பதை அழுத்தமாகச் சொல்லிப் புரிய வைத்தார்.

இந்தோனேஷியர்கள் இரண்டு மூன்று பெயர்களைத் தவிர்த்து ஒற்றைப் பெயரிலேயே திருப்தி அடைந்து விடுகிறார்கள். ‘SUMA MORO’ என்ற இந்தோனேஷியர் மேற்படிப்பிற்காக ஆஸ்திரேலியா சென்ற போது இவரின் ஒற்றைப் பெயர் அங்கு பல பேருக்குச் சங்கடமாகி விட்டதாம். உடனே தனது பெயரை S.SUMA MORO என்று மாற்றிக் கொண்டாராம். S என்பது குடும்பப் பெயரா என்று கேட்பவர்களுக்கு ஆமாம் என்று தலையாட்டி விடுவாராம். தன் பெயரையே ‘SUMA MORO SUMA MORO’ என்று இரட்டையாக்கி சமாளித்தது பெரிய விஷயம் என்கிறார். இவ்விஷயத்தை அமெரிக்கா படிக்கச் செல்லும் தன் நண்பன் MOESTONOவிடம் சொல்லி, இரண்டு பெயராக இப்போதே மாற்றிக் கொள் என்று யோசனை அளித்திருக்கிறார். அவர் உடனே MOESTONO SAYA (அதாவது நான்தான் MOESTONO) என்று மாற்றிக் கொண்டாராம். ஆனால் அமெரிக்காவில் SAYA என்ற கடைசி வார்த்தை மிகவும் பிடித்துப் போய், “மிஸ்டர் SAYA என்றே அழைக்க ஆரம்பித்து விட்டார்களாம்.

இந்தோனேஷியர்களின் மலாய் கொஞ்சம் வேறுபட்டது. முதியவர்களை BEPOK (தந்தையே) என்ற அடைமொழியுடனும் பெண்களை IBU என்ற அடைமொழியுடன் கொஞ்சம் சுருக்கி BU FATHIMA என்ற தொனியில் அழைப்பார்கள். வயதில் இளையவர்களை சகோதரர் என்ற அர்த்தத்தில் BANG என்றும் பெண்களை “NONA” என்றும் அழைப்பார்கள். ஆனால் மற்ற நாடுகளைப் போலவே பட்டங்கள் குறைவில்லாமல் இருக்கும்.

RADAN EMAS

(தந்தை மகன்)

EYANG PUTERI

(தலை மகன்)

பங்களா தேஷ், பாகிஸ்தான் நண்பர்களைப் பற்றிக் கவலை இல்லை. மிஸ்டர் அப்துல்லா மனைவி மிஸஸ் அப்துல்லாதான். என்ன, நம் ஊரில் உள்ள பழக்கம் மாதிரி விஸ்வேஸ்வரைய்யாகாரு, மாதவ ராவ் சிந்தியா, பொட்டி சிவராமுலுகாரு, சுபாஷ் பாபு என்பதைப் போலக் கொஞ்சம் மரியாதை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆரிஃப் சாகேப், பேகம் சாகிபென்றும், இளையவர்களை Bhai”, பெண்களை Apa (சகோதரி) என்றும் அழைத்துக் கொள்ளலாம். சிலர் கூடுதல் மரியாதையாக ஓட்டுநரைக் கூட ட்ரைவர் சாகேப் என்பார்கள்.

பல நாடுகளின் கலாச்சாரங்களை அவர்களுடன் பழகியும், கேட்டும், படித்தும் இருக்கிறேன். ஆனால் தல, தளபதி, புரட்சித் தலைவி, கேப்டன் என்பதெல்லாம் நம் ஊரில் ரொம்ப ஓவர்!

அனுமானம்

Posted: நவம்பர் 20, 2011 in சிறுகதை


”நாளையிலிருந்து கடைக்குப் போக வேண்டாம். வீட்டிலேயே இருங்கள். செலவுக்கு வெள்ளி வாங்கிக் கொள்ளுங்கள்”

எப்படி இப்படிச் சில வார்த்தைகளில் சொல்லி விட்டான் என் மகன்! “செலவுக்கு வேண்டுமானால் வெள்ளி வாங்கிக் கொள்ளுங்கள்” அதாவது வேளா வேளைக்குச் சாப்பிட்டு விட்டு வெறுமனே வீட்டில் உட்கார்ந்திருங்கள்” என்கிறான்.

உடலில் வயிற்றைத் தவிர வேறு உறுப்புக்கள் இல்லையா? தினமும் எனக்கு என்ன ‘படி’ காசா கொடுக்கப் போகிறான்? 1950களில் சிங்கப்பூருக்கு வந்து, கையில் ஒரு காசில்லாமல், கூலி வேலை பார்த்து, ஓட்டுக் கடை வைத்து, இன்று “அகுன் மினிமார்ட்” என்று வளர்ந்து நிற்கும் இந்தக் கடைக்கு உன்னை உயர்த்திய என்னைப் பார்த்து, ”கடைக்கு வர வேண்டாம்” என்கிறான். நான் எதுவுமே பேசவில்லை. அவனுக்குத் தெரியும். நான் மௌனமாக இருந்தால் சம்மதிக்கவில்லை என்று.

“ஏன் இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ளுகிறீர்கள்? உங்கள் உடல் நலத்திலுள்ள அக்கறையில்தான் சொல்கிறேன். தேவைப்படும் போது சொல்கிறேன். அப்போது கடைக்கு வந்தால் போதும்” என்றான் மறுபடியும்.

நான் “காளிதாசனுக்குப் போனைப் போடு” என்றேன். காளிதாசன் எனது பால்ய நண்பன். அவன் எனக்கு ஒரு மீடியம் எழுத்தாளன். பேசித் தீர்க்க முடியாத விஷயங்களில், அவன் என்னுடன் இருந்தால் எனக்கு இலகுவாகப் பேச முடியும்.

கடந்த ஒரு மாத காலமாகவே இந்த வீட்டில் அந்தப் பேச்சு நடந்து வருகின்றது. கடையில் ஒரு காரியத்தை நான் திரும்பத் திரும்ப செய்வதாகவும், ஆர்டர் “சாலாவாக” எடுத்துக் குழப்புவதாகவும், மகனும் மருமகளும்  என் காதில் விழுவது மாதிரி பேசிக் கொள்ளுகிறார்கள். என் மருமகள் கௌசல்யா யாருக்கோ போன் போட்டு. அல்ஜைமர் மற்றும் டெமென்ஷியா என்பதற்கு விளக்கம் வேறு கேட்கிறாள்.

யாருக்கு அல்ஜைமர் எனக்கா…..

எல்லோரும் சேர்ந்து என்னைக் கரப்பான் பூச்சி மதிரி நசுக்கித் தோம்பில் போடுவது என்ரு தீர்மானித்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். மகன் அருண் கடைக்குப் போய் விட்டான். காளிதாசன் வீட்டுக்கு வந்து விட்டான். மகனிடம் விசாரித்திருப்பான் என்று எனக்குத் தெரிந்து விட்டது. எடுத்த எடுப்பில், “ஏன் இப்படி சீரியஸாக எடுத்துக் கொள்ளுகிறாய்? உன் உடல் நலத்தின் மேல் உள்ள அக்கறையினால்தானே உன்னைக் கடைக்கு வர வேண்டாம் என்று அருண் சொல்கிறான்” என்றான்.

“உனக்கு அல்ஜைமர் என்றால் தெரியுமா?”

“அப்படி யாரும் உன்னைச் சொன்னார்களா?”

”நான் கேட்தற்கு பதில் சொல். அறுபதைத் தாண்டிய எல்லோருக்கும் அல்ஜைமர் வந்து விடுமா?”

பேசாமல்  என்னையே காளிதாசன் பார்த்துக் கொண்டிருந்தான்.

”அல்ஜைமர் என்றால் என்ன? டெமென்ஷியா என்றால் என்ன? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?”

“ஏதாவது அனுமானத்தில் சொல்லியிருப்பார்கள். அதை விடு” என்றான்.

”சரி! அனுமானம் என்றால் என்ன சொல்லு?”

“கொஞ்சம் டென்ஷனைக் குறை” என்றான்.

“இல்லை. அனுமானம் என்றால் என்ன? அதைச் சொல்லு”

”அனுமானம் (inference) அறிந்தவற்றிலிருந்து அறியாதவை பற்றிச் செய்யப்படும் ஊகம்.”

”அதாவது அல்ஜைமர் மற்றும் டெமென்ஷியா பற்றித் தெரியாதவர்கள்  அது எனக்கு வந்திருக்கிறது என்று எப்படி ஊகம் செய்யலாம்?”

நான் சில விஷயங்களைச் சரியான பிடிமானம் இல்லாமல் பேசமாட்டேன் என்று காளிதாசனுக்குத்தெரியும்.

”1955ல் தமிழ் முரசில் ஒரு புதிர்ப் போட்டி வைத்திருந்தார்களே உனக்கு ஞாபகம் இருக்கிறதா? அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்திய கொரியர் உயிரோடு இருப்பது தெரியாமல் மனைவி  மறுமணம் செய்து கொண்டது, அவர் திரும்பி வந்த பின் அந்தக் குடும்பத்தில் நடந்த குழப்பங்கள் நினைவிருக்கிறதா?”

“ இதெல்லாம் நன்றாக ஞாபகம் இருக்கிறது” என்றான் காளிதாசன்.

“எத்தனை பேர் அந்தப் புதிர்ப் போட்டியில் கலந்து கொண்டார்கள் என்ற விபரம்கூட என்னால் சொல்ல முடியும். போயும் போயும் எனக்கு அல்ஜைமர் என்கிறார்கள் நீயும் சப்பைக் கட்டுக் கட்டுகிறாயே?”

”இப்படியே எதற்கும் பதில் சொல்லாமல் பேசாமல் இரு” என்று சொல்லிக் கொஞ்சம் வெளியில் சென்று வரலாம் என்று என்னைக் கூட்டிக் கொண்டு கீழே இறங்க்னினான்.

இரண்டு பேருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான். அவனுக்குக் தொப்பை சரிந்து கண்ணுக்குக் கீழே கனமான தொங்கல். கண்கள் நீர் கோர்த்து விட்டன. கன்னங்கள் உப்பி விட்டன. தாடை, தவளைத் தாடையாகி விட்டது. நான் இன்னமும் அந்த அளவுக்குப் போக வில்லை. அவன் வெள்ளை முடிகளை அப்படியே விட்டு விட்டான். நான் கொஞ்சம் மை போட்டுக் கொள்ளுவேன்.

நாங்கள் இருவரும் ஒன்றாக  புளோக்குக் கீழே உட்கார்ந்திருந்தால் “லாரல் ஹார்டி” என்று நடுவயதுக் காரர்கள் கிண்டலடித்துக் கொண்டு செல்வார்கள். அவனும் தடியாகத்தான் இருப்பான். ஆனாலும் என்கூட உட்கார்ந்திருக்கும் போது கொஞ்சம் ஒல்லி மாதிரி தெரிவான். இருவரும் பேச ஆரம்பித்து விட்டால் பேசிப் பேசி சாயங்காலத்துக்குள் அலுத்து விடுவோம்.

“சாரங்கா! ஏன் இப்படிக் கோப்ப் படுகிறாய்? நம்ம இரண்டு பேருக்கும் வயது என்ன ஆகிறது? எழுபது ஆயிற்றல்லவா?  பிள்ளைகள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு போக வேண்டியதுதான்” என்றான்.

என்னைப் பற்றி அவனுக்கு நன்கு தெரியும். அவனும் அதை மறைத்துக் கொண்டு உப்புச் சப்பில்லாமல் பேசினான். அன்றிலிருந்து நான் கடைக்குப் போகவில்லை.  ஒரு வாரம் ஓடி விட்டது. பகல் நேரங்களில் சினிமாவுக்குச் செல்ல்லாம் என்று நினைத்தால் அந்த நினைப்பு வந்ததுமே மனம் எதிர்த்து விட்டது. மனதில் ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும் நினைவுகள் மீண்டும் மீண்டும் வந்து உட்கார்ந்து கொண்டு அலைக்கழித்தன.

’எனக்குக் கட்டாய ஓய்வு கொடுக்க இவர்கள் யார்?’…..

வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் என்னைப் பக்கத்து வீட்டுக்காரர்கள் பார்க்கும் பச்சாதாபப் பார்வை, மகனின் அலட்சியம் எல்லாம் சேர்ந்து என்னைக் குழப்பமான மன நிலைக்குத் தள்ளி விட்டன.

என் மனைவி இறந்து 10 வருடங்களில் கடைக்குப் போகாமல் இத்தனை நாட்கள் இருந்ததில்லை. என் அறையில் உள்ள புகைப்படத்தில் கெட்டிக் கரை போட்ட பட்டுப் புடவை,  கழுத்தில் வகை வகையான சங்கிலிகள், கட்டை விரல் தவிர மீதி எல்லா விரல்களிலும் மோதிரங்கள், நெற்றியில் கல் வைத்த சுட்டி, மூக்குத்தி புல்லாக்கு, காதில் வளையம், இடுப்பில் ஒட்டியாணம் இவை அணிந்து, அலங்காரமாக உயரமான ஸ்டூலின் மீது சாய்ந்தபடி நின்று கொண்டிருந்தாள். திருமணமான புதிதில் எடுத்த புகைப்படம். கீழே இருந்த தேதி கூட மங்கலாகி விட்டது.  ஆனால் அந்தப் புகைப்படத்தை எடுத்த புகைப்படக்காரன் கனகாம்பரம் இன்னும் நினைவில் நிற்கிறார். அந்தி சாயும் நேரத்தில் புகைப்படம் எடுத்தால்தான் திருப்தியாக வரும் என்று நினைப்பவர்அவர். இவ்வளவு கச்சிதமாக நினைவுகளை வைத்திருக்கும் எனக்கு   டெமென்ஷியாவா?  இந்த வயதில் எல்லோருக்கும் முதுகில் கண் திறந்து கொள்ளும் போல!  என் அருகே வந்து செல்பவர்கள் முகத்தில் விரிந்த ஏளனச் சிரிப்பு, திரும்பத் திரும்ப என்னைப் பார்த்த பின்பு ஒருவர் கண்களை மற்றவர் பார்த்துக் கொள்ளுவது, உதடு அசைய, ஓசையில்லாமல் பேசி வாயைப் பொத்திக் கொள்ளுவது எல்லாம் எனக்குத் தெரிந்தது.

நான் தீர்மானமாக ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்.

என் மனைவியின் அக்கா பிள்ளைகள் ஊரில் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பல வகைகளிலும் நான் உதவிகளைச் செய்திருக்கிறேன். என்னைத் தங்களது தகப்பனாரை விட மேலாக மதிப்பவர்கள்.  அவர்களிடம் போய்விட வேண்டும். காளிதாசனிடம்கூட இந்தத் திட்டத்தைச் சொல்லக் கூடாது.

பாஸ்போர்ட், டிக்கட் என்று எல்லாக் காரியங்களையும் கச்சிதமாக முடித்து விட்டேன்.

ஊருக்குப் புறப்படும் நாளுக்காக்க் காத்திருந்ததில் நாட்கள் விறுவிறு என்று ஓடி விட்டன.

அருண் மட்டும் 5 மணிக்கெல்லாம் எழுந்து விடுவான். பணிப் பெண் சில சமயங்களில் கொஞ்சம் முன்னதாகவே வேலை ஆரம்பித்து விடுவாள். காலையில் வீட்டில் இருந்து கிளம்பினால் இரண்டு பேரில் யாராவது ஒருவர் பார்த்துவிட வாய்ப்பிருக்கிறது. நடுநிசியில் புறப்பட்டுவிட வேண்டும் என்ற திட்டமே எனக்கு உசிதமாகப் பட்டது. வீட்டில் கடைசியாகத் தூங்கச் செல்லுவது என் பேரன் விமல்தான்.

“தாத்தா இன்னம் தூங்கலையா?”

“லேட்டர்”

ஐ போன் 4S டெமான்ஸ்ட்ரேஷன் காட்டினான்.

”சூப்பர் தாத்தா. அப்பா பிராமிஸ் பண்ணியிருக்கார். ஐ காட் இட்”

என் மேல் பிரியமான பேரன். அந்த இரவுதான் அவனை நான் பார்ப்பது கடைசியாக இருக்க்க் கூடும். அவனை மார்போடு அணைத்து எதுவும் பேசாமல் முத்தமிட்டேன். அவன் அதை என்றைக்குமான தாத்தாவின் அணைப்பு என்று நினைத்திருப்பான்.

எல்லோரும் தூங்கியாகி விட்டது. எங்கோ சமையல்கட்டிலிருந்து பாத்திரங்கள் இடைவெளியில்லாது கழுவப்பட்டுக் கொண்டிருக்கும்  சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.  புளோக்குக்குக் கீழ் கார்கள் வந்து நிற்பதும் கிளம்புவதுமாக இருந்தன.

தேவைப்படும் சாமான்களை ஒரே பெட்டியில் அடைத்து எடுத்து வைத்துக் கொண்டேன். வசந்தாவின் போட்டோ, கொக்கி ஆணி அடித்து உள்நோக்கி மாட்டப்பட்டிருந்தது.  இவ்வளவு நாட்களாக இது எனக்குத் தெரியவில்லை.  சட்டத்தை நெம்பி எடுத்ததில் மேல் பகுதி பிய்த்துக் கொண்ட்து. எல்லாவற்றையும் சரி பார்த்துக் கொண்டு மெதுவாக ஹாலுக்கு வந்து ஒரு முறை பார்த்து விட்டு, பெட்டியைத் தூக்கிக் கொண்டு சத்தம் கேட்காமல் கதவுகளைப் பூட்டி விட்டு லிஃப்டில் ஏறினேன். எனக்காகக் காத்திருந்த மாதிரி கீழ்த் தளத்தில் பச்சை விள்க்குடன் டாக்ஸி ஒன்று நின்று கொண்டிருந்தது.  தேபான் கார்டனில் இருந்து உடனே டாக்ஸி கிடைப்பது மிகவும் அரிதான ஒன்று.

9 மணி விமானத்துக்கு, விமான நிலையத்தில் 7 மணிக்கு இருந்தால் போதுமானது. ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் மீதி உள்ள நேரத்தைக் கழித்து விட்டு மறுபடியும் டாக்ஸி எடுத்துக் கொண்டு விமான நிலையம் செல்ல வேண்டும் என்ற என்ற எனது படுகச்சிதமான திட்டத்தை நினைத்து நானே சபாஷ் போட்டுக் கொண்டேன்.

அபாவ் மானா பிக்கி ஏர்போர்ட்.

தமோ லகூன் சரங்கர் சென்டர்….

என் மன வேகத்துக்கு இணையாக சாலையில் டாக்சி விரைந்து கொண்டிருந்தது. நாளை விழித்துக் கொள்ளுவதற்காக நகரம் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தது. காஸினோ மட்டும் பகல் போல வெளிச்சம் போட்டுக் கொண்டு விழித்திருந்தது. டாக்ஸி டிரைவர் வழியெங்கும் பேசிக் கொண்டே வந்தார். இடையிடையே பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஈஸ்ட் கோஸ்ட் பார்க் போவதைப் பட்டும் படாமலும் விசாரித்துக் கொண்டார். அவரிடம் விரிவாக ஏதாவது பேசினால் உளறி விடுவேனோ என்ற பயத்தில் ‘ஆமாம்’, ’இல்லை’ என்பதற்கு மேல் பேச ஒன்றுமில்லை என்பதைப் போல உட்கார்ந்திருந்தேன். கடற்கரை முழுவதுமே நில மீட்பு செய்யப்பட்ட இடத்தில் அமைந்துள்ள ஈஸ்ட் கோஸ்ட் பார்க் அங்காடி உணவுக் கடைகளில் சாப்பிட்டு எத்தனையோ வருடங்கள் ஓடி விட்டன.

லேசாக மழைத் துளி விழ ஆரம்பித்து விட்டது.  டாக்சியிலிருந்து இறங்கி பீச் மணலில் சந்தடி இல்லாத இடம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.  சில இளைஞர்கள் பெட்டியையும் என்னையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே கடந்து போனார்கள்.

அலைகளைப் பார்க்கும் விதமாக மணலில் உட்கார்ந்து கொண்டேன். பெட்டியை பார்பிக் பிட்டில் வைத்து விட்டேன். கடற்கரை மணல் இன்னும் சூடு தணியாமல் இருந்தது.

கிழக்குப் பகுதியில் மின்னி மின்னி மறைந்து கொண்டிருக்கும் நட்சத்திரங்களினூடே அணைந்து எரியும் விளக்குகளுடன் விமானங்கள் அடிக்கொரு தரம் மேலெழும்பிக் கொண்டிருந்தன. இனி இந்த மண்ணை மிதிப்பதற்கு வாய்ப்பென்பது அநேகமாக இல்லை. அந்த உண்மைக்கு மேலே எனது நினைவுகளை அள்ளி அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தேன். ஒரு சீனர் அந்த நேரத்தில் ஜாக்கிங் போய்க் கொண்டிருந்தார். முப்பது வயது மதிக்கத் தக்க ஒரு ஆள் அங்குமிங்கும் பார்த்துக்க் கொண்டே என்னை நோக்கி வந்தான்.  பார்பிக்யூ பிட்டில் எதையோ தேடுவதைப் போலப் பாவனை செய்தான். பெட்டியையும் என்னையும் இணைத்து ஒரு பார்வை பார்த்தான். அவன் அங்கு எதையோ தேடுவதை விட – இல்லை – தேடுவது மாதிரி நடிப்பதை விட –  என்னைப் பார்ப்பதில்தான் அவனது முழுக் கவனமும் இருந்த்து. எனக்கா அனுமானிக்கத் தெரியாது? கொஞ்சம் வெறுப்பும் பயமும் கலந்த அந்தச் சூழலில் என் குரல் தானாகவே உயர்ந்தது.

“என்னப்பா தேடுறே?”

ஒன்றும் பேசாமல் பக்கத்தில் வந்து விட்டான்.

”ஓர் உதவி பண்ண முடியுமா?” என்று கேட்டான்.

“என்ன விஷயம்?”

”பிடோக் செல்வதற்காக வந்தேன். இருட்டில் ஸ்டாப் தெரியாமல் இங்கு இறங்கி விட்டேன். இனிமேல் பஸ் கிடையாது.  டாக்ஸி மிட் நைட் சார்ஜ் …” கொஞ்சம் இழுத்து, “ ஒரு பத்து வெள்ளி இருக்குமா?” என்றான்.

“இந்த நேரத்தில் நம்ம ஆளு யாராவது கண்ணுல படுவார்களா என்று பார்த்தியா?  ஏன் இப்படி … வேலைக்குப் போறியா இல்லையா? இப்படி பீச்சில் சுற்றிக் கொண்டு திரிகிறாயே! குடும்பம் இருக்கா இல்லை தனிக் கட்டையா? இங்கே என்ன தேடுறே? போலீஸைக் கூப்பிடவா?” என்று சொல்லிக் கொண்டே கை பேசியை எடுப்பது மாதிரி சட்டைப் பையைத் தொட்டேன்.

உடனே அடுத்த பிட்டுக்குத் தாவி விட்டான்.

“இல்லேங்க… இந்த இடத்தில்தான் என் கைபோன் தவறி விட்டது அதுதான் ….” என்று இழுத்தான். கொஞ்ச நேரம் தேடுவது மாதிரி பாசாங்கு செய்து விட்டு விடுவிடென்று செல்லட் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.  இவனை மாதிரி எத்தனை பேரைப் பார்த்திருக்கிறேன்.

சீனர் மறு சுற்று ஆரம்பித்து விட்டார். இப்போது கொஞ்ச நேரம் ஓட்டம், கொஞ்ச நேரம் நடை என்று மாறி மாறி ஓடிக் கொண்டிருந்தவர் பார்பிக் பிட்டில் நான் பெட்டி வைத்திருக்கும் மரப் பலகையில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து ஓய்வெடுத்து விட்டு மீண்டும் ஓட்டத்தைத் தொடர்ந்தார்.

நானும் எத்தனையோ முறை ஜாக்கிங் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். இதுவரை எனக்கு அது கைகூடியதே இல்லை.  காளிதாசன் இதைப் பற்றி நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டான். அவனிடம் என் திட்டத்தைப் பற்றிச் சொல்லாமல் புறப்பட்டு விட்டது கொஞ்சம் மனதில் உறுத்திக் கொண்டேயிருந்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் கடைக்கு வந்து அந்த வாரத்து இதழ்களை எல்லாம் ஒரு புரட்டுப் புரட்டி விட்டால்தான் அவனுக்குத் திருப்தி. இனி அவனுக்கு அந்த வாய்ப்புக் கிடைக்காது.

கடல் அலைகளில் காலை நனைத்து விட்டு பார்பிக் பிட்டில் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தேன். எங்கிருந்தோ ரிங் டோன் கேட்ட மாதிரி இருந்த்து. கொஞ்சம் கொஞ்சமாக வெகமெடுத்து அடங்கியது. மறுபடியும் கேட்க ஆரம்பித்தது.  மரப் பலகையின் கீழே தேடினேன்.  விளிம்பில் செருகிக் கொண்டு ஒரு கைபோன் கிடந்தது.

‘அடச்சே! என் அனுமானம் தவறி விட்டதே!” என்று நினைத்துக் கொண்டு, அந்த ஆள் போன திசையில் சென்றேன். பெட்டியை மறந்து விட்டு அவன் சென்ற திசை நோக்கி விரைந்தேன். அவனைத் தேடிக் கொண்டே சாலையின் விளிம்புக்கு வந்து விட்டேன். தூரத்தில் இருந்து என்னை அவன் பார்த்து விட்டான்.  அவனை நோக்கி நடக்க ஆரம்பித்தவுடன் வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

“ஹலோ பிரதர்! இந்தாங்க உங்க போன்”

தயங்கியபடியே என் பக்கத்தில் வந்தான்.

“சாரி. தப்பா நினைச்சுட்டேன் தம்பி. இந்தாங்க உங்க போன். 20 வெள்ளி வைத்துக் கொள்ளுங்கள். வீட்டுக்கு டாக்ஸியில் போய் விடுங்கள்.”

அவசரமாக வாங்கிக் கொண்டு என்னை விட்டுப் போனால் போதும் என்பது போல வேகமாக நடையைக் கட்டினான். திரும்பி பார்பிக் பிட்டை நோக்கி நடந்தேன். அந்த ஜாக்கிங் சீனர் என் பெட்டிக்கு அருகில் நின்று கொண்டு எதையோ தேடிக் கொண்டிருந்தார்.

நான் பக்கத்தில் நெருங்கியவுடன்,

“ஸாரி. ஐ மிஸ் மை போன் .. ஹியர்” என்றார்.

யாரோ என் முதுகுக்குப் பின்னால் நின்று வாயைப் பொத்திக் கொண்டு சிரிப்பது மாதிரி இருந்தது.

அந்தச் சீனர் அங்கும் இங்கும் தேடிக் கொண்டே தான் ஓடிய பாதையெங்கும் நடந்து கொண்டிருந்தார். நான் பெட்டியைத் தூக்கிக் கொண்டு சாலைக்கு வந்து டாக்சியில் ஏறிவிட்டேன்.

“வேர் யூ வாண்ட் டு கோ? ஏர் போர்ட்?” என்று கேட்டார் ட்ரைவர்.

“நோ! நோ! தேபான் கார்டன்!” என்றேன்.

“ஐ திங் யூ கோ டு ஏர்போர்ட்” என்றார் ட்ரைவர்.

அவர் நினைத்த்து சரியா தவறா என்பதைப் பற்றி வீடு வந்து சேரும் வரை அவரிடம் நான் எதுவும் பேசிக் கொள்ள வில்லை.

***********

 எச்சரிக்கை :
”இந்தக் கட்டுரைக்கும் அண்ணா நூலகக் கட்டிட இடமாற்றப்
பிரச்சினைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.”

.இந்த இரண்டாவது அலாரம் எதற்காக என்று எடுத்துப் பார்த்தால் காலையில் வேலைக்குச் செல்லுவதை நினைவூட்ட ஓர் அலாரம், குளித்து முடித்தவுடன் ஓர் அலாரம் என இரண்டு முறை ஐ ஃபோன் ஒருவாரமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது, “Bus No. 63 : On the way” என்ற எழுத்துக்கள் ஒளிர்கின்றன. வீட்டு வாசலில் பஸ் வந்து நிற்கும்போது மேற்சொன்ன ஐஃபோன் நினைவூட்டலைத் தொடர்ந்து, தினமும் ஓடிப் போய் ஏறிக் கொள்ளுகிறான் என்னுடைய இரண்டாவது மகன். முதல் பிள்ளை கார் வைத்திருக்கிறான். ’இரவில் ஏன் லேட்டாக வருகிறாய்?’ என்றால் எங்கு சென்றாலும் பார்க்கிங் பிரச்சினை என்கிறான்.

கூடிய சீக்கிரம் சிங்கப்பூரில் இன்னொரு பே ஃபோன் பயன்பாடு வரவிருக்கிறது. பார்க்கிங் லாட் ஏற்கனவே முன்பதிவு செய்திருப்பவர்கள், ‘கொஞ்ச நேரத்துக்கு வண்டியை நிறுத்த மாட்டேன். யாராவது அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்று ஐஃபோனில் செய்தி ஒன்றைத் தட்டி விட்டால், தேவைப்படும் பயனாளிகள் அந்தப் பார்க்கிங் லாட்டைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

லண்டன், ம்யூனிச் நகரங்களில் இநத நடைமுறை ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கிறது. என்னுடைய ஐஃபோனில், “இன்றே கடைசி! நூலகத்தில் எடுத்த புத்தகங்களைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள். ஏன் வீணாக அபராதம் செலுத்த வேண்டும்?” என்ற குறுஞ்செய்திதான் அடிக்கடி வரும். நகரில் மொத்தம் உள்ள 39 அரசாங்க நூலகங்களில் Book dropல் எங்கு வேண்டுமானாலும் புத்தகங்களைத் திருப்பிக் கொடுத்து விடலாம். மூன்றில் இரண்டு நூலகங்கள் MRT பேரங்காடிகளில் அமைக்கப்பட்டுள்ளன.  இருந்தாலும் வாரத்துக்கு 10 வெள்ளி அபராதம் கட்டுவது எனக்கு வாடிக்கையாகி விட்டது. என் கடையில் இருந்து அல்ஜூனைட் நூலகம் மூன்று பஸ் நிறுத்தங்கள் தள்ளி இருக்கிறது. சென்ற ஜனவரி முதல் சிராங்கூன் பேரங்காடியில் புதிய நூலகம் Roof topல் திறந்திருக்கிறார்கள். இப்போது புத்தகம் எடுப்பது மிகவும்   எளிமையாகி விட்டது.

பெரும்பாலான நூலகங்களுக்கும் நான் சென்று வந்திருக்கிறேன். ஒவ்வொரு நூலகத்துக்கும் ஒரு தனி முகம் இருக்கிறது. கை கால்கள் கூட இருக்கின்றன. அவைகளுடன் ஒன்றிப் பழகும் போதுதான் இது எனக்குத் தெரிய வந்தது.

தேசிய நூலகம் (Victoria street) எல்லா நூலகங்களுக்கும் தலைமையானது. அதில் ஒன்பதாவது மாடிக்குச் சென்று விட்டால் இரவா பகலா என்பது மறந்து விடும். புத்தகங்களைப் புரட்டும் ஒலியைத் தவிர வேறு எந்த ஓசையும் கேட்காமல் நிசப்த வெளியில் ஆகாயத்தில் உட்கார்ந்திருப்பதைப் போன்று தோன்றும். ஏனெனில் சுற்றிலும் கண்ணாடிச் சுவர்கள். நகரத்தின் நடுவே நாம் தனிமையில் மிதக்கும் உணர்வு உண்டாகும். வெயில் உக்கிரமானால் ஜன்னலகள் தானியங்கி முறையில் திரையை அவிழ்த்து, அறையில் இருளைப் பரவச் செய்யும். அறையில் நிலவும் வெளிச்சத்துக்கு ஏற்றவாறு விளக்குகள் மெல்ல ஒளிர்வதும் அடங்குவதும் –  எவ்வளவு நாட்களானாலும் சலிக்காத விளையாட்டு. 1953ல் டாக்டர் லீகோங் சியான் கொடுத்த 3,75,000 சிங்கப்பூர் வெள்ளியில் அமைக்கப்பட்ட சிங்கப்பூர் நூலக வாரியத்தில் 14,000 சதுர மீட்டர் பரப்பில் வருடத்துக்கு சுமார் 28.63 மில்லியன் புத்தகங்கள் இரவல் பெறப்படுகின்றன.

ஜீரோங், தெம்பனீஸ், உட்லேண்ட்ஸ் நூலகங்கள் தரும் அனுபவங்கள் வேறு மாதிரியானவை. உள்ளே நுழைந்தவுடன் புதிய வரவுகள் பகுதி, அங்கேயே உட்கார்ந்து படிக்கத் தூண்டும் படியாக இருக்கும். ஆங்மோகியோ நூலகத்தில் அதிகத் தமிழ்ப் புத்தகங்கள், பிடோக்கில் அதிக மலாய் புத்தகங்கள், தெம்பனீஸில் அதிக சீனப் புத்தகங்கள் என்று பலவகைக் கலாச்சாரத்தையும் சேர்ந்த வாசகர்களை ஈர்க்கும் வகையில் புத்தகங்கள் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தன.

நூலின் தலைப்பு அல்லது ஆசிரியரின் பெயரை வைத்துக் கணினியில் எந்தக் கிளையில் எந்த வரிசையில் குறிப்பிட்ட புத்தகம் இருக்கிறது எனபதைத் தமிழில் தேடிக் கண்டுபிடிக்க முடியும். எல்லாப் பிரதிகளும் இரவல் பெறப்பட்டிருந்தால் மிகக் குறைந்த கட்டணத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

2008ல் எஸ்.ரா. ‘Read Singapore’ நிகழ்வுக்கு வந்திருந்தபோது, மலேசியாவிலிருந்து  வந்திருந்த நண்பர் பாலமுருகன் நூலகத்தின் செயல்பாடுகளைப் பார்த்து வியந்து விட்டார். அவருக்கு அன்று முழுவதுமே எங்கும் செல்ல மனம் வரவில்லை. சிங்கப்பூர் வரும் நண்பர்களை நான் முதலில் கேட்கும் கேள்வி, ‘புகிஸ் நூலகம் சென்று விட்டீர்களா?’ என்பதுதான். நண்பர் திரு.லதானந்த் மணற்கேணி 2010 போட்டியில் அறிவியல் பிரிவில் பரிசு பெற்று சிங்கப் பூர் வந்திருந்தார். ஏற்கனவே திட்டமிட்ட  பயண நிரலில் இது இடம் பெறாததால் அவரால் பார்க்க இயலவில்லை.  நூலகங்களைப் பற்றிப் பின்னர் அவரிடம் நான் சொன்னபோது பார்க்காமல் தவறவிட்டு விட்டதற்காக மிகவும் வருந்தினார்.

1812ல் வில்லியம் மர்சலென் உருவாக்கிய ஆங்கில – மலாய் அகராதி, தேசிய நூலகத்தில் பார்க்க வேண்டிய ஒன்று.  ஐரோப்பிய நூல்கள், தமிழ் நூல்கள், பதிப்பிக்கப்படாத ஆவணங்கள், ஓலைச் சுவடிகள் போன்றவையும் தமிழகத்தில் கூடக் கிடைக்காத 19 ஆம் நூற்றாண்டு ஆவணங்களும், ஓலைச் சுவடிகளும் பிரிட்டிஷ் நூலகம், லண்டன் பொடிலின் நூலகம், ஆக்ஸஃபோர்டு ப்ராங்கே நிறுவன நூலகம் இவற்றில் செம்மையாகப் பாதுகாக்கப்பட்டு வருவதாகச் சொல்லுகிறார்கள்.

1886ல் Straits settlement ஏற்பட்ட பிறகு, ‘Registration of Book Ordinance’ என்ற ஒப்பந்தம் போடப்பட்டு, அதன்படி சிங்கப்பூரில் வெளியிடப்படும் புத்தகங்களின் ஒரு பிரதி, பிரிட்டிஷ் மியூசியத்திற்கு அனுப்பப்பட வேண்டும். அநேகமாகப் பல மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ள புத்தகங்கள் பிரிட்டிஷ் நூலகத்தில் மட்டுமே கிடைக்கும். இந்த ஏற்பாட்டை ஐரோப்பிய நாடுகளின் காலனி ஆதிக்க வரலாற்று நிகழ்வுகளோடு நாம் புரிந்து கொள்ளலாம். ஆங்மோகியோ நூலகத்தில் ஓர் உரையாடலில் ’அரசியலில் உச்சத்தில் இருக்கும் தலைவர்கள் புத்தகங்களைப் படிப்பார்களா’ என்று விவாதம் நண்பர்களுக்கிடையில் காரசாரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் ஒரு செய்தி: கனடா எழுத்தாளர் யான் மரொடெல் 15 நாட்களுக்கு ஒரு முறை, பிரதமருக்குத் தன்னுடைய புத்தகங்களை அனுப்பி விடுவாராம். அப்படி அனுப்பும்போது  அதை அனுப்பிய காரணத்தையும் குறித்து அனுப்புவாராம். ஆனால் இதுவரை ’புத்தகம் கிடைத்தது’ என்று கூட பதில் வந்ததில்லையாம். இருந்தாலும் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருக்கிறார்.

அதற்கு அவர் புத்தகங்களைப் படித்துத்தான் நல்ல தலைவர் ஆக வேண்டும் என்பதில்லை. ஆனால் ஒரு நல்ல தலைவர் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்பாராம்.

“Life of O Pi together” என்ற புத்தகத்தை அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அனுப்பி வைத்தாராம். அதிசயப் படத்தக்க  வகையில் அவரிடமிருந்து ‘excellent power of story telling’ என்று பதில் வந்ததாம்.

சிங்கப்பூரில் பொது நூலகங்கள். கல்விசார் நூலகங்கள், பல்கலைக் கழக நூலகங்கள், பள்ளி நூலகங்கள், சிறுவர் நூலகங்கள், அருங்காட்சி நூலகங்கள், சிறப்பு நூலகங்கள் என்று எங்கு சென்றாலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அணிவகுத்து நிற்கும் காட்சியைப் பார்க்கலாம். அவர்கள் கைகளில் அன்று இரவல் பெற்ற புத்தகங்கள் இருக்கும்.

பிஷான் நூலகம் எனது மனதுக்குப் பிடித்த நூலகம் ஆகும். கடைத் தொகுதிகளுடன் உயிரோவியமாகக் காட்சி அளிக்கும். படித்துக் கொண்டிருக்கும்போது கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு கீழே வந்தால் கூட்டம் அலைமோதும் அங்காடிக் கடைகளைப் பார்க்கலாம். இரண்டாவது மாடியில் எப்போதும் எப்படி உட்கார இடமில்லாமல் போகிறது என்று ஆச்சரியமாக இருக்கும்.

”மனித நூலகம்”

2000ஆம் ஆண்டு, டென்மார்க்கில் நடைபெற்ற ரோஸ்கில்ட் திருவிழாவின்போது உதித்த வித்தியாசமான சிந்தனையின் தாக்கத்தால், இளைஞர் குழு ஒன்று சிங்கப்பூரின் முதல் மனித நூலகத்தை நிறுவியிருக்கிறது.
மனிதர்களின் இயல்புகள் பொருந்திய ஒரு நூலகத்தைக் கற்பனை செய்து பாருங்கள். அங்கே ‘புத்தகங்கள்’ மனித வடிவில் இருக்கும். ஒருவரோடு ஒருவர் உரையாடும் பொருட்டு நீங்கள் அவர்களை இரவலாகப் பெற முடியும். மாற்று முறையில் குணமாக்கும் மருத்துவர், சிங்கப்பூரில் வசிக்கும் சம கால இளம் கலைஞர்கள், சிங்கப்பூர் காது கேளாதோர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர், கவிஞர் ஒருவர், பார்க்கர் விளையாட்டு ஆர்வலர்கள், கிராமப்புற மேம்பாட்டு சமூக சேவையாளர் போன்றவர்கள் பிஷான் பொது நூலகத்தின் தளம் 2ல் ஆகஸ்டு மாதம் நடைபெற்ற நிகழ்வில் ‘புத்தகங்களாக’ இருந்தார்கள்.

ப்ளாட்டோவின்  குகை (Plato’s Cave) என்ற சமூக மக்கள் பிரிவுகளை ஆய்வு செய்யும் சமூக தளம் ஒன்றின் மூலம்  கோகிலா அண்ணாமலை இந்தத் திட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அவர் இந்த வித்தியாசமான அனுபவம் பற்றி, “சொல்வதற்கு என்று எந்த விதமான முக்கியச் செய்தியும் என்னிடம் இல்ல்லாமல், என்னுடன் உரையாட வந்தவர்களிடமே நான் விஷயத்தைப் பெற்று, என்னால் முடிந்த அளவு செய்திகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவது வித்தியாசமான அனுபவம்” என்றார். உரையாடலை மேம்படுத்துவது, பாரபட்சங்களைக் குறைப்பது மற்றும் புரிந்துணர்வை ஊக்குவிப்பது போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ள ஒவ்வொரு “புத்தகத்தையும்” இருபது நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம்.

படிக்கவும் எழுதவும் இயலுகின்றபோது எதற்காக ஒரு புத்தகத்திடம் பேச வேண்டும்? என்ற கேள்விக்கு, “இந்தியக் கிராமப்புறங்களில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் புத்தகமாக எழுத நினைத்தேன். ஆனால் அதில் போதுமான அளவு சரளமாகக் கருத்துக்களைத் தெரிவிக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. மனிதப் புத்தகம் என்னும் இந்த எண்ணம் அந்தப் பிரச்சினையைத் தீர்த்து விட்டது. கை தேர்ந்த எழுத்தாளர்களாக இல்லாதவர்கள்கூட மற்றவர்களிடம் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள இந்த நடைமுறை அனுமதிக்கிறது. எழுதுவதை விடப் பேசுவதே எனக்குக் கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது. பிறர் என்னை இரவலாகப் பெற்று என்னிடம் கேள்வி கேட்கும்போது அவர்களுடைய பிரத்யேகமான ஆர்வங்கள் மற்றும் உயிர்த் துடிப்புள்ள எங்கள் உரையாடல் ஆகியவற்றின் அடிப்படையில் அதை நான் இணைத்துக் கொள்ளுவேன். பேச்சாற்றல், கட்டமைப்பு, கோர்வையான எண்ணங்கள் போன்ற எவற்றாலும் நான் அச்சமடைய வேண்டியதில்லை. ஏனெனில் எவ்விதத் திட்டமிடுதலும் இன்றி வருவது அது” என்றார்.

இது பற்றி நூலக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது பின்லாந்தில் உள்ள “leppavaraa’ பகுதியில் இருக்கும் ஸெல்லோ நூலகத்தில் இந்த முறையில் அங்குள்ள நூலக அலுவலர்களை 45 நிமிடத்திற்கு மனிதப் புத்தகங்களாக இரவல் பெற்றுக் கொள்ள முடியும் என்ற தகவல் கிடைத்தது.
கோபன் ஹேகனிலும் இதே முறையில் தொழில் வல்லுநர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களை இரவல் பெற முடியும் என்று நண்பர் ஒருவர் சொன்னார்.