நண்பர் திரு. முகைதீன் ஸதக்கத்துல்லா வசந்தம் தொலைக்காட்சியின் ‘எதிரொலி’ நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஆவார். வலைப் பதிவுகள் சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றிய கருத்துக் களத்தில் பேச என்னை அழைத்திருந்தார். பல்கலைக்கழக மாணவியரும் புகழ் பெற்ற வழக்கறிஞரும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி இது. என்னைத் தயார்ப் படுத்திக் கொள்ள இணையம் பற்றிய குறிப்புக்களைத் தொகுத்துக் கொண்டேன்.
அமெரிக்காவின் எட்ஜ் ஃபவுண்டேஷன் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒவ்வோர் ஆண்டும் அறிஞர்களிடையே முக்கியமான கேள்விகளை எழுப்பி, அவர்களின் கருத்துக்களை வெளியிடுகின்றது. இந்த ஆண்டு 172 பேரிடம் இணையம் பற்றிக் கேட்கப்பட்டது. அதில் கிடைத்த சில சுவையான தகவல்கள் இவை :
மாஸாச்சுசெட்ஸ் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (Massachusetts Institute of Technology – MIT) குவாண்டம் விஞ்ஞானி சேத் லாயிட், “விக்கி பீடியாவில் வெளியிடப்பட்டுள்ள விஞ்ஞான மேற்கோள்களில் 99.44 சதவீதம் சரியாகவே உள்ளன. மீதம் உள்ள முக்கியமான 0.56 சதவீதத்தைத்தான் தேடிப் பார்க்க வேண்டும். இதற்கு ஒரே வழி நூலகங்களில் குவிந்துள்ள புத்தகங்களில் இருந்து அதிகார பூர்வமானவற்றைத் தேடி எடுப்பதுதான்” என்று தெரிவிக்கிறார்.
நமது பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவை புத்தக வெளியீட்டு நிறுவனங்களில், நுட்பமாகப் பிழையின்றித் தகவல்களைச் சரிபார்க்கும் எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களைக் கொண்டு சோதித்த பிறகு விக்கி பீடியாவில் தகவல்களை வெளியிட்டு இருக்க வேண்டும். இதற்கு மாறாக இண்டர்நெட்டில் வெளியிடப்பட்டுள்ளவை எல்லாம் மிகக் குறைந்த அளவிலேயே சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளன. இண்டர்நெட்டில் வருடா வருடம் கிடைக்கும் இடங்கள் பல மடங்காக அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தப் போக்கு இருக்கும் வரையில், இது மாதிரியான சரிபார்க்கப்படாத தகவல்கள் குறைந்து, இடப் பற்றாக் குறை ஏற்படும் போதுதான், தகவல்கள் சரிபார்க்கப்பட்டுத் தேவையில்லாத விஷயங்கள் நீக்கப்படும் என்று சேத் லாயிட் கருதுகிறார்.
அது வரை இண்டர்நெட், தகவல்களால் நிரப்பப்படுவது தவிர்க்க முடியாதது என்று மாஸாச்சுசெட்ஸ் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியைச் சேர்ந்த ஆர்கிடெக்ட் நீரி ஓக்ஸ்மேனும் கருதுகிறார்.
இண்டர்நெட்டில் பல்வேறு விஷயங்கள் குறித்து வெளிப்படையான அளவுக்கு அதிகமாகத் தகவல்கள் வெளியிடப் படுகின்றன. இது தகவல் களஞ்சியம் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரத்தில் இது ஒரு விஷயத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து முடிவுக்கு வரும் அறிவுபூர்வமான சிந்தனைகளுக்குத் தடை ஏற்படுத்தும் ஆபத்தாகவும் இருக்கிறது. எனவே தற்போதைய இண்டர்நெட் வடிவம் சிந்தனையைத் தடுத்து, ஆக்க ரீதியான கருத்துக்களின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று நீரி ஓக்ஸ்மேன் தெரிவித்துள்ளார்.
ஹாவர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தத்துவ இயல் அறிஞர் ஜோஷுவா கிரீன், இண்டர்நெட் எந்த வகையிலும் நம்மைப் புத்திசாலிகள் ஆக்காது என்பதை ஏற்றுக் கொள்ளுகிறார். 20ஆம் நூற்றாண்டில், அறிவுத் திறன் அளவெண் (IQ) அதிக அளவு உயர்ந்திருப்பது கண்கூடாக நிரூபணமாகியுள்ளது. இது நமது சிந்தனையை வளர்த்துள்ளது. ஆனால் இண்டர்நெட் எந்த வகையிலும் புதிய தேவைகளின் அடிப்படையை நிறைவேற்றப் போவதில்லை என்று கூறுகிறர்.
இதே கருத்தை ஹாவர்ட் பலகலைக் கழகத்தைச் சேர்ந்த மற்றொரு விஞ்ஞானி ஸ்டீவன் பிங்கர் என்பவரும் தெரிவித்துள்ளார். இவர் மேலும் கூறுகையில், இண்டெர்நெட்டைப் பயன்படுத்துவது எந்த வகையிலும் தகவல்களைத் திரட்டுவதற்காக, நமது இயற்கையான நரம்பு மண்டலத்தின் செயல்களை மாற்றப் போவதில்லை. நமது சிந்திக்கும் திறனை இண்டர்நெட் எந்த வகையிலும் மாற்றப் போவதில்லை என்கிறார்.
அறிவுக்கூறு பற்றிய உளவியல் ஆராய்ச்சிகளில் இருந்து இண்டர்நெட்டில் தகவல்களைத் திரட்டுபவர்கள், கருத்துக்களை எழுதுபவர்கள், ஒரே நேரத்தில் பல விதமான புதிய தகவல்களைத் திரட்டி, அவற்றை ஆய்வு செய்யும் திறமையைப் பெற்று இருக்கவில்லை என்று தெரிய வருகின்றது.
இண்டர்நெட், தனித் திறன் பெற்றவர் என்பதன் பொருளை மாற்றி விட்டதாக இசை வல்லுநர் ப்ரைன் ஈனோ கருதுகிறார். தற்போது, குறிப்பிட்ட மதிப்பு வாய்ந்த தகவல்களைத் திரட்டும் ஆற்றல் பெற்றவர்கள் மட்டும் தனித் திறன் பெற்றவர்களகக் கருதப்படுகின்றனர் என்கிறார். தற்போது எல்லா விதத் தகவல்களும் எல்லோரும் பெறுவற்தற்கான வசதி உள்ளது. இவற்றில் இருந்து குறிப்பிட்ட தகவல்களை மிக நுட்பமாகத் தேடிக் கண்டு பிடிக்கும் ஆற்றல் பெற்றவர்களே தனித் திறன் உள்ளவர்களாக இருக்கின்றனர் என்று பிரைன் ஈனோ கூறுகிறார்.
தற்போது ஒவ்வொருவரும் எல்லா நேரங்களிலும் எல்லா நாட்களிலும் அதிக அளவு படிக்கின்றோம். தகவல்களைக் கேட்கின்றோம். பார்க்கின்றோம். ஈ மெயிலகள் வந்து குவிந்து கொண்டே இருக்கின்றன. உடனடியாகப் பதில் கூறுமாறு வற்புறுத்துகின்றன. இவற்றால் நமது சிந்தனை மழுங்கடிக்கப்படுகின்றது என்று கூறுகிறார் மாஸாச்சுசெட்ஸ் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி சேர்ந்த பிரபஞ்ச இயல் ஆய்வாளர் மேக்ஸ் டெக்மார்க்.
இவற்றையெல்லாம் விக்கிலீக்ஸ் இணைய தளத்தை இணைந்து உருவாக்கியவரான லாரி சாங்கர் மறுக்கிறார். அவர் கூறும் போது, நாம் எதைத் தேர்ந்தெடுக்க வெண்டும், எப்போது செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளலாம். நாம் இண்டர்நெட்டைப் பயனுள்ளதாக உபயோகிக்கும்போது, பலர் ஒன்றிணைந்து பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம். உதாரணமாக விக்கிலீக்ஸ் மற்றும் பிளாக்குகளைப் பயன்படுத்திப் பல்வேறு இடங்களில் உள்ள கணிதவியலாளர்கள், சமீபத்தில் ஹேல்ஸ், ஜீவெட் குறித்துப் புதிதாக நேர்த்தியான சூத்திரத்தை 37 நாட்களில் உருவாக்கியுள்ளனர். இதைத் தனித் தனியாகச் செய்திருந்தால் பல வருடங்கள் ஆகியிருக்கும் என்று கூறியுள்ளார்.
யேல் பலகலைக் கழகத்தைச் சேர்ந்த உளவியல் நிபுணர் பால் ப்ளூம் கூறுகையில் விக்கிபீடியா, அமேஸான், ட்ரிப் அட்வைசர் போன்ற இணைய தளங்களில் எவ்வித ஊதியம் இல்லாமல், அடையாளம் தெரியாத பலர் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர். இவர்கள் மற்றவர்களின் நலனுக்காகத் தெரிவிக்கும் கருத்துக்கள், மற்ற யாருக்காவது பயன்படலாம். இது சிறப்பாக இருக்கின்றது என்று பாராட்டுகின்றார்.
ஹார்வார்ட் மருத்துவரும் சமூகவியல் நிபுணருமான நிகோலஸ் கிரிஸ்டகிஸ், இண்டர்நெட்டைப் பயன்படுத்தித் தொடர்புகளை விரிவடையச் செய்ய வேண்டும் என்று நினைப்பதால், அறிவு விசாலப்படுகின்றது. இருப்பினும், குறிப்பிட்டுள்ள அளவுதான் மனிதனால் நினைவில் வைத்துக் கொள்ள முடியும். ரோமானியப் படையின் ஒரு பிரிவில் 120 முதல் 130 பேர் வரைதான் இருப்பார்கள். இதே மாதிரி தற்போது ராணுவ வீரர்கள் அடங்கிய பிரிவு, கம்பெனி என்று அழைக்கப்படுகின்றது.
இதே போலத்தான் சமூகத் தொடர்புகளும் குறிப்பிட்ட அளவிலேயே இருக்கும். இதை இண்டர்நெட்டால் மாற்றி விட முடியாது. நாம் எவை எல்லாம் உண்மை என்று அறிவோம். இண்டர்நெட் வாயிலாகக் கிடைக்கும் எல்லா நண்பர்களும் உண்மையான நண்பர்கள் அல்ல என்றும் அவர் கருதுகிறார்.
அதே நேரத்தில் நாம் இண்டர்நெட்டைப் பயன்படுத்துவதால், அதற்கு உரிய விலை கொடுக்க வேண்டியதிருக்கும் என்கின்றார் மாஸாச்சுசெட்ஸ் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியைச் சேர்ந்த சமூகவியல் அறிஞர் ஷெர்ரி டர்கில். இன்றைய இளம் தலைமுறையினர், தங்களைப் பற்றிய சொந்தத் தகவல்கள் என்றாவது ஒரு நாள் விதிகளுக்குப் புறம்பாக மற்றவர்களால் பயன்படுத்தப்படும் என்பதை அறிந்தே இண்டர்நெட்டைப் பயன்படுத்துவதால், சிறிது இழப்பு ஏற்படும் என்பதை உணர்ந்தே உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்வளவு விஷயங்களையும் தேடிப் படித்து மீட்டிங்கிற்குச் சரியான நேரத்துக்குச் சென்று விட்டேன். இதில் இரண்டு விஷயங்களைத்தான் என்னால் அங்கு பேச முடிந்தது. பல்கலைக் கழக மானவிகள் தெளிவாகவும் எதிர்பார்க்காத கோணங்களிலும் விஷயங்களை முன் வைத்தார்கள். இண்டர்நெட்டில் தங்களைப் பற்றிய சொந்தத் தகவல்கள் என்றாவது ஒரு நாள் விதிகளுக்குப் புறம்பாக மற்றவர்களால் பயன்படுத்தப்படும் என்பதை மாணவிகள் ஒத்துக் கொண்டனர்.
இந்த இளம் தலைமுறையினர் மற்றவர்களிடம் உண்மையிலேயே அந்தரங்கமாகப் பேச வேண்டும் எனில் பொதுத் தொலைபேசியை நாடுகின்றனர்.
“நாம் இண்டர்நெட்டைப் பயன்படுத்தும் சமயத்தில் நமது சொந்த வாழ்க்கையைப் பாதிக்காத அளவு உபயோகமான வழியில் இண்டர்நெட்டை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிந்து கொள்ள வேண்டியது முக்கியமில்லையா? என்ற கேள்வியுடன் எனது பேச்சை முடித்தேன்.
நண்பர் ஸதக்கத்துல்லாவின் தமிழ் உச்சரிப்பு மிகவும் ரம்மியமாக இருக்கும். அந்நிகழ்வில் அவர்தான் கேள்விகளைத் தொடுப்பார் என்று நினைத்திருந்தேன். அவர் பின்னால் நின்று இயக்கிக் கொண்டிருந்தார்.
நிகழ்ச்சி திங்கள் கிழமை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பானது . மறுஒளிபரப்பு வியாழன் 15-12-2011 இரவு 11 மணிக்கு இடம்பெறும்.