ஷாநவாஸின் “ஒரு முட்டை பரோட்டாவும் ஒரு சாதா பரோட்டாவும்” புத்தகம் பற்றி திரு.மனுஷ்யபுத்திரன் அவர்களின் மதிப்புரை.
இந்தப் பயணம் ஓராண்டுக்கும் மேற்பட்ட கனவு.
ஷா நவாஸ் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பல.
5 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது தடவையாக இங்கே வருகிறேன்.
எனது பல எண்ணங்கள் இப்போது மாறிவிட்டன. அப்போது எனக்கு முன்னால் இங்கு வந்து சென்ற எழுத்தாளர்கள் சிங்கப்பூர் இலக்கியம் பற்றி மனதில் உருவாக்கிய பிம்பமே ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், சிங்கப்பூர் மலேஷிய இலக்கியம் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கிக்கொண்டு வருவதைப் பார்க்கிறேன்.
தமிழகத்தில் பெரிய இலக்கிய மறுமலர்ச்சிகள் எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. எழுதப்படும், பிரசுரிக்கப்படும் பல்லாயிரக்கணக்கான பிரதிகளில் எத்தனை இலக்கியப் பிரக்ஞை கொண்டவை என்று யோசித்தால் பெரும் சோர்வே மிஞ்சும். அந்த வகையில் ஏதோ தமிழ்நாட்டில் இலக்கியம் கொழிகிறது என்று நம்ப வேணிடியதில்லை. இவ்வளவு பேர் இயங்கும் ஒரு சூழலில் ஒவ்வொரு பத்தாண்டிலும் ஒரு பத்துப் பேர் தனித்த அடையாளத்துடன் உருவாகி வந்தால் அது மிகப் பெரிய சாதனை. அ.முத்துலிங்கத்திடம் புலம் பெயர்ந்த எழுத்தாளன் என்ற அடையாளம் பற்றிக் கேட்டபோது செவ்வாய் கிரகத்தில் இருந்து நான் யாரையாவது சந்தித்தால் பூமி எழுத்தாளன் என்று சொல்லிக்கொள்வேன் என்று குறிப்பிடுகிறார். ஆம்! உண்மையிலேயே இது பூமி எழுத்தாளர்களின் காலம்தான்.
கடந்த பத்தாண்டுகளில் அச்சு ஊடகங்களின் அதிகாரம் படிப்படியாகத் தகர்க்கப்பட்டு இன்று இல்லாமலேயே ஆகிவிட்டது. சைபர்வெளியில் பூமி எழுத்தாளன் பிறந்துவிட்டான். வெளிப்பாடு சார்ந்த அத்தனை தடைகளும் தகர்ந்துவிட்டன.
தமிழக வெகுசன ஊடகங்கள் வெகுசனப் பத்திரிக்கைகள், தொலைக்காட்சி, சினிமா அனைத்துமே தமிழகத்துக்கு வெளியே உள்ள சமூகங்கள்மீது தமது பண்பாட்டுச் சீரழிவைத் தொடர்ந்து திணித்து வந்திருக்கின்றன. தமிழகத்துக்கு வெளியே உள்ள மக்கள் தங்கள் ரசனை சார்ந்த அடையாளங்களாகத் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் இந்தக் குப்பைகளை வரித்துக்கொள்வது மிகப் பெரிய அவலம். இந்த வெகுசன ஊடகங்களுக்கு மாற்றாகப் பிறந்த மாற்று ஊடகங்களோ தம்மைக் குறிப்பிட்ட கருத்தியல் அடையாளங்களுக்குள் நிலைநிறுத்திக்கொண்டது மட்டுமல்ல அவற்றினால் ஒரு சிறிய வாசகப் பரப்பைக்கூடச் சென்று சேர முடியவில்லை.
ஈழத்து நவீன இலக்கியத்தின் முகத்தை இன்று எப்படி அ.முத்துலிங்கம், சேரன், ஷோபாசக்தி, பொ.கருணாகரமூர்த்தி போன்ற சில எழுத்தாளர்கள் உருவாக்கி இருக்கிறார்களோ அதே போல இன்று சிங்கப்பூர் இலக்கியத்தின் முகத்தை இந்திரஜித், ஷாநவாஸ் போன்ற எழுத்தாளர்கள் உருவாக்கி வருகிறார்கள்.
உயிரோசை இணைய இதழை உருவாக்கியபோது இந்திரஜித் ஒரு கட்டுரை அனுப்பியிருந்தார். அதற்கு முன்பு அவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதற்கு முன்பே அவர் பல முக்கியமான கதைகளையும் கவிதைகளையும் எழுதிய எழுத்தாளர் என்றபோதும் நமக்கு இடையிலான இடைவெளிகள், கற்பிதங்கள் காரணமாக அவரை நான் தெரிந்துகொள்ளவில்லை. ஆனால் அந்த ஒரு சிறிய கட்டுரை போதுமானதாக இருந்தது அவர் யார் என்று தெரிந்துகொள்ள,
ஒரு பத்திரிக்கையாளன் என்பவன் ஒரு வேட்டை நாய். எவ்வளவு தூரத்தில் தனது இரை இருந்தாலும் அதை அவனால் பிந்தொடர்ந்து செல்ல முடியும். பாரதிமணி – எஸ்.வி.ராமகிருஷ்ணன் – ஆகியோரைக் கண்டுபிடித்த விதம் அப்படித்தான் நிகழ்ந்தது.இந்திரஜித்தைத் தொடர்ந்து எழுதுமாறு வற்புறுத்திக்கொண்டே இருப்பேன். அவர் எழுதுவது தொடர்பாக மிகவும் மனச் சோர்வு அடையக்கூடியவர். நமது துரதிர்ஷ்டம் யார் சோர்வடைய வேண்டுமோ அவர்கள் சோர்வடையாமல் எழுதிக்கொண்டே இருப்பார்கள். யார் எழுத வேண்டுமோ அவர்கள் நாம் எதற்கு எழுத வேண்டும் என்று அடிக்கடி யோசிக்கத் தொடங்கிவிடுவார்கள்.
ஷா நவாஸையும் அப்படித்தான் கண்டுபிடித்தேன். அவரைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. மின்னஞ்சலில் வந்த ஒரு கட்டுரை இந்தப் புத்தகத்துக்குக் காரணமாக அமைந்த ஒரு கட்டுரை. அதைப் படித்ததும் உடனே அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன் -. உயிரோசையில் ஒரு பத்தி எழுதுங்கள் என்று. பல்வேறு அதிகாரங்களைக் கூடிய பலரது படைப்புக்களை நான் நிர்தாட்சண்யமாக நிராகரித்திருக்கிறேன். ஒரு காவல்துறை அதிகாரி உதாரணம். அதே போல எனது பல நெருங்கிய நண்பர்களை – குறிப்பாகப் பெண் தோழிகளை – உயிர்மையில் அவர்களது பிரசுர வாய்ப்புகளை மறுத்ததாலேயே இழந்திருக்கிறேன். ஆனால் இதற்கு முன்பு நான் பெயர்கூடக் கேள்விப்பட்டிருக்காத ஓர் எழுத்தாளனின் முதல் கட்டுரையைப் படித்து அவரை ஒரு தொடர் எழுத அழைகிறேன். ஓர் எழுத்தாளன் பல்லாயிரம் பக்கங்கள் எழுதி, தான் ஓர் எழுத்தாளன் என நிரூபிக்கத் தேவையில்லை. பல நேரங்களில் பல எழுத்தாளர்கள் தாங்கள் எழுத்தாளர்கள் இல்லை என்பதைப் பல்லாயிரம் முறை நிரூபிப்பதற்காகவே பல்லாயிரம் பக்கங்கள் எழுதுகிறார்கள். எழுத்தாளனுக்குத் தன்னை அறிவித்துக்கொள்ள ஒரே ஒரு பக்கம் என்ன…. ஒரு பாரா கூடப் போதும். லேனா தமிழ்வாணன் எனது ஒரு வாசகர் கடிதத்தைப் படித்துவிட்டு என்னை எழுத்தாளன் என்று அறிந்துகொண்டு என்னை 16 வயதில் தேடி வந்து எனது புத்தகத்தைப் பதிப்பித்தார். சுஜாதாவுக்கு என்னைத் தெரிந்துகொண்டு இந்த உலகத்திற்குச் சொல்ல, ’கால்களின் ஆல்பம்’ என்ற ஒரு கவிதை போதுமானதாக இருந்தது. எனக்கும் பாரதிமணியை, எஸ்.வி.ராமகிருஷ்ணனை, ஷாஜியை, இந்திரஜித்தை, ஷாநவாஸைத் தெரிந்துகொள்ள ஒரே ஒரு பக்கம் போதுமானதாக இருந்தது. வாழ்நாளெல்லாம் உங்களோடு சேர்ந்திருக்கப் போகிறவரை முதல் பார்வையிலேயே எப்படி அறிந்துகொள்கிறீர்களோ அப்படிப்பட்டதுதான் அது.
ஷாநவாஸின் இந்தப் புத்தகம் ஒரு சமையல் புத்தகம் அல்ல. அல்லது ஓர் உணவு விடுதி நடத்துகிறவரின் அன்றாட அனுபக் குறிப்புகளும் அல்ல. எந்த ஒரு சிறந்த புத்தகமுமே ஒரு மேலோட்டமான வாசிப்பில் எதைப் பற்றியதாக இருக்கிறதோ அதைப் பற்றியதே அல்ல அது. ஓர் எழுத்தாளன் எந்தக் கண்களால் இந்த உலகைப் பார்க்கிறானோ அதுதான் அந்தப் புத்தகம்.
ஷாநவாஸ் இந்தப் புத்தகம் முழுக்க மனித இயல்பின் விசித்திரங்களை எழுதிச் செல்கிறார். அவை நம்மை ஆழமாகச் சீண்டுபவை. குற்ற உணர்வு கொள்ளச் செய்பவை.
சில்லறை கொண்டு வரும் பெண்ணைப் பற்றிய சித்திரத்தை மூன்றாவது கை என்ற கதையில் படித்தபோது சட்டென்று மனம் உடைந்துவிடுகிறது.
தங்கள் பிள்ளைகளுக்காக வாழ்நாளெல்லாம் காசு சேர்க்கும் முதியவர்கள்….
இந்தப் புத்தகம் முழுக்க நூற்றுக்கணக்கான சிறுகதைகள் சிதறி இருக்கின்றன. ஷாநவாஸ் அவற்றை மிகத் துல்லியமான குறிப்புகளாக இங்கே விட்டுச் செல்கிறார். உணர்ச்சிப் பாங்கோ மிகையோ இல்லாத மொழி அது. எல்லாவற்றையும்விட மனிதர்கள்மேல் போலி மனிதாபிமானத்தையோ பச்சாதாபத்தையோ அவர் உருவாக்கிக்கொள்வது இல்லை. இந்தப் போலி மனிதாபிமானம் இல்லாத ஒரு மொழியை ஒரு தமிழ் எழுத்தாளன் உருவாக்கிக்கொள்வது மிகவும் கடினமானது. அவர் மனிதர்களை அவர்களது இயல்பில் வைத்து எழுதுகிறார். தன் மதீப்பிடுகளை அவர்கள்மேல் அவர் சுமத்துவதே இல்லை.
ஒரு தொழில் என்பது ஒரு தொழில் மட்டுமல்ல. அதற்குள் ஒரு மிகப் பெரிய வாழ்க்கை முறை இயங்கிக்கொண்டிருக்கிரது. திட்டவட்டமான முறைமைகள்கொண்ட ஓர் அரசாங்கம் இயங்கிக்கொண்டிருக்கிறது. பாலகுமாரன் லாரித் தொழிலைப் பின்புலமாகக்கொண்டு இரும்புக் குதிரைகள் என்ற அவரது மிகச் சிறந்த படைப்பை உருவாக்கினார். உணவகம் என்பது எவ்வாறு பல்வேறு உணர்ச்சிகளின் சங்கமமாக இருக்கிறது என்பதை இந்தப் புத்தகம் எழுதிச் செல்கிறது.
பரோட்டா என்பது தமிழர்களின் தேசிய உணவாக மாறிவிட்டது. பரோட்டா என்பது உழைக்கும் மக்களின் உணவு மட்டுமல்ல. அது இன்று நட்சத்திர விடுதிகளில் வித விதமான உருமாற்றங்களுடன் வழங்கப்படும் ஓர் உணவாகவும் உள்ளது.
உணவே கலாச்சாரம். உணவைப் பற்றி எழுதுவது கலாச்சாரத்தைப் பற்றி எழுதுவதே. உணவு, காமம் இரண்டிலும்தான் கலாச்சார வேறுபாடுகள் மிக ஆழமான தளத்தில் எழுதப்படுகின்றன. உணவு முறைமைகள் வாயிலாகவே பல்வேறு கலாச்சார அடையாளங்களைச் சமூகங்கள் பேணுகின்றன. அதேபோலப் பண்பாட்டுக் கலப்பு அல்லது அடையாளமிழப்பு என்பதும் உணவு முறைமைகள் மாறுவதுடனேயே துவங்குகின்றன. தமிழகச் சமூகத்தில் உணவு நேரடியாகச் சாதியத்தோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. புலால் உண்பவர்களுக்கு வீடு கொடுக்க மறுக்கப்படுவது மட்டுமல்ல, எனக்குத் தெரிந்த ஒரு ரெஸ்டாரண்ட் உரிமையாளர் தனது கடைகளில் அசைவ உணவு விற்கப்படாததற்குக் காரணம் அந்தக் கட்டிடத்தின் உரிமையாளர் ஒரு பிராமின் என்பதுதான் என்றார்.
அ.முத்துலிங்கமும் நாஞ்சில்நாடனும் எங்கள் பரோட்டாக் கடையில் இரண்டு நாட்கள் வேலை செயதால் ஒரு நாவல் எழுதுமளவிற்கு விஷயம் கிடைக்கும் என்கிறார் ஷாநவாஸ். இதன் மூலம் இன்று தமிழில் எழுதுபவர்களில் பண்பாடு சார்ந்த விஷயங்களை மிகக் கூர்மையாக எழுதும் எழுத்தாளர்கள் இவர்களே என்பதை அடையாளப்படுத்துகிறார்.
சமையல்காரருக்கு மட்டுமல்ல ஒரு மனைவிக்கும் கிடைக்ககூடிய மிகப் பெரிய தண்டனை நாக்கு ருசி இல்லாதவன் கணவனாகக் கிடைப்பதுதான் என்கிறார் ஷாநவாஸ். இலக்கிய ரசனை இல்லாத வாசகனைக்கொண்ட ஓர் எழுத்தாளனின் நிலைக்குச் சமமானதுதான் இது.
திருடர்களுக்கு ஒரு சமூகம் அளிக்கும் மிகப் பெரிய தண்டனை அவரது தவறு சார்ந்து அவருடைய பெயரோடு ஒட்டிக்கொள்ளும் பட்டப்பெயர்தான் என்று ஒரு கட்டுரையில் சொல்கிறார் (முந்திரி திருடும் பெரியவர்).
உணவு என்பது ஆண் குடும்ப உறவுகளில் ஒரு கலாச்சார அதிகாரம். நிறையக் கலப்பு மணங்கள் முறிந்ததில் இதற்கு முக்கியப் பாத்திரம் உண்டு.
உணவகங்கள் எண்ணற்ற மனிதர்கள் மனப்பூர்வமாக இளைப்பாறும் ஓர் இடம். அது ஒரு மனிதன் வீட்டுக்கு வெளியே ஆசுவாசம் கொள்வதற்கான இடம் மட்டுமல்ல. வீடற்றவர்களும், வீட்டில் ஆசுவாசம் அற்றவர்களும் இளைப்பாறும் இடம். நகரத்திரற்கு மனம்போன போக்கில் இடம் தேடி வருபவர்களும் வீட்டை விட்டு ஓடி வரும் சிறுவர்களும் வேலை தேடி வரும் முதல் இடம் உணவகங்கள்தான். ஒவ்வொரு வாடிக்கையாளனுக்கும் உள்ள விசேஷமான தேர்வுகளையும் விருப்பங்களையும் தெரிந்து வைத்திருப்பவனே இந்தத் தொழிலில் வெற்றிகரமானவனாக மாறுகிறான். அது ஒரு வர்த்தக உறவு மட்டுமல்ல. ஒரு மனிதனோடு இன்னொரு மனிதனை ஆழமாகப் பிணைப்பதே உணவுதான். இந்தப் பிணைப்பை ஷாநவாஸ் அழகாகப் பல இடங்களில் பதிவு செய்கிறார்.
பல சமயங்களில் ஓர் ஊரின் சிறப்பாக – அதன் கலாச்சார அடையாளமாக – உணவகங்கள் மாறுவது உண்டு.
வெவ்வேறு இன, மொழி, கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களுடன் தொடர்ந்து உறவாடுவதன் புதிய அனுபவங்களை ஷாநவாஸ் இந்த நூலில் வெளிப்படுத்துகிறார்.
சிங்கப்பூர்க்காரர்கள் கண்ணில் பசி எடுத்தவர்கள் என்று ஒரு வழக்கு இருக்கிறது.
ரஹமத்துல்லா என்பவர் கற்பழிப்பு வழக்கில் சிக்கி நீதிமன்ற தண்டனையை ஏற்கப்போகும் நாளில் டிஷ்யூ பேப்பர் விற்கும் ஒருவரை கார் விபத்தில் இருந்து காப்பாற்றுதல் (ஓர் அயல்நாட்டுப் பெண்ணை விபச்சாரத்திற்கு அழைத்துச் சென்ற வழக்கு – 16 வருடங்கள் தண்டனை)
சிங்கப்பூர் உணவுக் கலாச்சாரத்திற்கு அரிய கொடை இந்த நூல். தமிழில் இது போன்ற பல நூல்கள் எழுதப்பட வேண்டும் என்பதற்கு உதாரணம் இந்த நூல்.
சமையல் கலை பதிவு செய்யப்படாமல் விடப்பட்டதுதான் நமது இந்தியச் சமையல் கலை பற்றிய போதுமான தகவல்கள் நமக்கு இல்லாததற்குக் காரணம் என்கிறார். ஆயிரம் ஆண்டுகள் பழமை இருந்தும், சீன – பிரான்ஸ் நாட்டுச் சமையல் போன்று நமது சமையல் புகழ் பெறாததற்குக் காரணம் கற்ற கலையை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் இயல்பு நம்மிடம் இல்லாமல் போனதுதான் என்கிறார். மருத்துவம், அறிவியல் போன்ற பல துறைகளுக்கும் இது பொருந்தும்.
சிங்கப்பூரில் 50 பேருக்கு இலவச உணவு கொடுப்பது எவ்வளவு சிக்கலானது என்பதை ஒரு கட்டுரையில் சொல்கிறார்.
500 பரோட்டா தினமும் ஆர்டர் கொடுத்த நபர் முறையானன அனுமதி இன்றி வெளியே விற்க ஏற்பாடு. எழுத்தாளன்தானே ஏமாற்றிவிடலாம் என பரோட்டா மாஸ்டர் விமர்சனம். மிகவும் குறிப்பிடத் தக்க – சிந்திக்க வைக்கும் ஒன்று.
நன்றி.
_____________