28.10.2012 ஞாயிறு வாசகர் வட்டம்(சிங்கப்பூர்) நிகழ்வுக்கு 22 பேர் வந்திருந்தார்கள்.மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் குறித்து அனைவரும் ஒரு குறிப்புடன் வந்த்திருந்தது இங்கு குறிப்பிடப்படவேண்டிய ஒன்று.”மொழிபெயர்ப்புக்கு மூலமொழி அறிவு மாத்திரமே ஒரு தகுதியாகி விடுமா?கதையை உள்வாங்கி அதன் ஜீவனைக் கொண்டுவருவது முக்கியம்தானே? என்ற சென்ற கூட்டத்தின் கேள்விகளுக்கு சித்ரா தனக்கே உரிய பாணியில் பதில் அளித்து கூடடத்தை துவக்கினார்.
கடலும் கிழவனும் நாவலை அழகுநிலா உணர்வுபூர்வமாக விவரித்தார்.அஸ்ஸாமிய எழுத்தாளர் இந்திரா கோஸ்வாமியின் தென் காமரூபக் கதைகளை ஆனந்த் விவரித்து A.மாரியப்பனின் அந்த மொழிபெயர்ப்பு மூலம் கோஸ்வாமியின் அனுபவக் குறிப்புகளைசொல்லி அண்மையில் அவர் காலமான செய்தியையும் பகிர்ந்துகொண்டார்.புதுமைத்தேனீ அன்பழகன் அவர்கள் புதிய படைப்புகளை தேடிப்புறப்பட்ட வேட்கையுடன் வந்து கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை மொழிபெயர்ப்பு செய்த உமர் கய்யாம் கவிதைகள் பற்றி பகிர்ந்துகொண்டார்.
மோகன்ராஜ் மொழிபெயர்ப்பு ரசனை சார்ந்து அல்லது விஞ்ஞான பூர்வமாக மொழி பெயர்க்கும் விதத்தை யுவன் சந்திரசேகர் உரையை மேற்கோள் காட்டி வரிக்கு வரிசெய்யும் மொழிபெயர்ப்புதான் சில கலைச்சொற்களை உருவாக்ககூடிய சாத்தியங்களைஉருவாக்கும் என்பதை சுட்டிக்காட்டினார்.திருமதி.பாரதி மூர்த்தியப்பன் தன் மகளையும் வாசகர் வட்ட நிகழ்வுக்கு அழைத்து வந்திருந்தார்.தோழர் பழனிச்சாமி மொழிபெயர்ப்பு செய்த மாய யதார்த்தவாத நாவல் பற்றி விவரித்தார்.வைக்கம் பஷீரின் எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது( _ன்றுப்பாப்பாக்கு ஒரானேயு ண்டார்ந்நு)_ கெ.சி.சங்கர நாராயணன் மொழிபெயர்ப்பை குறிப்பிட்டு தந்தை வழிப்பேரன்கள்,தாய் வழிப்பேரன்கள் அழைக்கும் முறையில் உள்ள வேறுபாடுகளை தெளிவாக குறிப்பிடவில்லை என்றார்.எம் கே குமார் இலகுவான மூலத்தை உள் வாங்கி செய்யப்படும் படைப்புக்கள் நிலைத்து நிற்பதை கட்டினார்
நான் வைக்கம் பஷீரின் சிறுகதைகளை மொழியாக்கம் செய்த குளச்சல் யூசுப்பின் இருமொழி திறமை,மலையாள-தமிழ் இலக்கிய உறவுகளும் வைக்கம் பஷீரின் மூலக்கதைகளை குறைவில்லாமல் பெறமுடிந்ததை ‘சிங்கிடிசமுங்கன்’ சிறுகதையை விவரித்து விளக்கினேன்.ஆசியான் கவிஞர் க.து.மு இக்பால் தன கவிதைகளையே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நோபெல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் பற்றி விளக்கினார்.சாந்தி டால்ஸ்டாயின் கதைகளை விவரித்து பள்ளிப்பருவ நினைவுகளை கிளறினார்.மூத்த எழுத்தாளர் திரு.A.P ராமன் சாந்த தத்தாவின் தெலுங்கானா கதைகளை விளக்கி 1940-களுக்கு முன்பே தெலுங்கானா போராட்டம் குறித்து விவரித்தார்.
தமிழில் அறிவியல்,தத்துவ நூல்கள் மிகக்குறைவாகவே மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.கிரேக்க தத்துவம்,மேலை நவீன தத்துவம் போன்ற துறைகளில் மொழியாக்கம் செய்த வெ.சாமிநாத சர்மா மூலத்தின் அழகுகளை,நெளிவுகளை,சுளிவுகளை உள்வாங்கி தமிழ் உலகில் நடந்த கதைகள் போல மொழியாக்கம் செய்த க.நா.சு பற்றி கணேஷ் பாபு விவரித்து அவரது மொழிபெயர்ப்பான “தேவ மலர்” நாவலைப் பற்றிய விரிவான விமர்சனத்தை முன்வைத்தார்.செல்மா லாகர்லெவின் குறுநாவல் இத்துணை/இத்தனை வருடங்கள் கழித்தும் கீயிங்கே வானமும்,ஹான்ஸ் பாதிரியாரின் பாத்திரமும் கவித்துவமான படிவங்களும் தமிழ் நாவலைப் படிப்பது போன்ற சிந்தனை லெகுவாக மொழியாக்கம் செய்த க.நா.சு வைப் பற்றியும் 20 நிமிடங்கள் தன் எண்ணங்களை கோர்வையாக்கி சிறந்த விமர்சனத்துக்கு முதல் பரிசை தட்டிச் சென்றார்.இரண்டாவது பரிசு அழகு நிலாவிற்கும்,மூன்றாவது பரிசு சாந்திக்கும் வழங்கப்பட்டது.
மூத்த எழுத்தாளர் திரு.கண்ணபிரான் வழக்கமாக தான் தயார் செய்து வரும் கட்டுரையை அன்று புதியவர்களுக்கு வழிவிட்டு வாசிக்காமல் கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டிருந்தார்.கூட்டம் நிறைவுக்கு வந்தபோது திரு.கண்ணபிரான் ஒன்றைக் குறிப்பிட்டார்.இந்த கூட்டம் திரு.ரமேஷ் சுப்பிரமணியன் வாசகர் வட்டத்தை தொடங்கிய காலத்தை நினைவு படுத்துவதாகச் சொன்னார்.ஒவ்வொருவரும் தன் சுயவிமர்சனக் கருதுகோல்களுடன் உடன்பட்டும்/முரண்பட்டும் விவாதித்த நிகழ்வை வெகுவாக பாராட்டினார்.
மேலும் பங்கேற்றவர்கள்,
சுரேஷ் கண்ணன்,
முத்துக்குமார்,
அகிலாண்டேஸ்வரி,
சிவசேகரி,
மதுமதி,
முத்து குமார்,
பிரசாந்தினி
தேவ மலர்– செல்மா லாகர்லெவ் (தமிழில்: க.நா.சு) தொகுப்பு -திரு.கணேஷ் பாபு
அண்மையில், க.நா.சு பிறந்து நூறாண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, அவரை கௌரவப்படுத்தும் விதமாகவும், க.நா.சுவைப் பற்றி இளைய தலைமுறை வாசகர்கள் அறிந்து கொள்ளும் விதமாகவும், சொல்வனம் என்ற இலக்கிய இணைய இதழ், க.நா.சு நூற்றாண்டு மலரை வெளியிட்டது. அதற்கு இணையான முயற்சியாக, அழியாச்சுடர்கள் என்ற இணையதளம் க.நா.சுவைப் பற்றி அவரோடு பழகிய மூத்த இலக்கியவாதிகளும் பிற நண்பர்களும் எழுதிய கட்டுரைகளை வெளியிட்டது. அவற்றுள் மிகச் சிறந்த கட்டுரைகளாக இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன், கவிஞர் சுகுமாரன், எழுத்தாளர் ஜெயமோகன், மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி ஆகியோர் எழுதியுள்ள கட்டுரைகள் க.நா.சுவைப் பற்றிய மிகச் சிறந்த அறிமுகக் கட்டுரைகளாக அமைந்திருந்தன. அந்தக் கட்டுரைகளின் வரிசையில், அழியாச்சுடர்கள் இணையதளம், க.நா.சு மொழிபெயர்த்த “தேவ மலர்” என்ற குறு நாவலையும் வலையேற்றியிருந்தது.
தேவமலர் என்கின்ற இந்தக் குறுநாவலை எழுதியவர் “செல்மா லாகர்லெவ்” (Selma Lagerlöf) என்ற ஸ்வீடீஷ் நாட்டு எழுத்தாளர். இலக்கியத்திற்கான நோபல்பரிசு பெற்ற முதல் பெண்மணி (ஆண்டு :1909). இவரது “மதகுரு” என்ற நாவல் இன்றளவும் ஸ்வீடிஷ் இலக்கியத்தின் சிகரமாகக் கருதப்படுகிறது. க.நா.சு தான் இந்த நாவலையும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
தேவ மலர் என்ற இந்த நெகிழ்வூட்டும் கதை எழுதப்பட்டு நூறாண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனாலும், இந்தக் கதை ஏதோ நேற்றுத்தான் எழுதப் பட்டது போலபுதுமை வாசம் மாறாமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக நான் நினைப்பது, இந்தக் கதை என்றுமுள்ள மானுடத்தின் மனசாட்சியைநோக்கிப் பேசுவது. மானுடத்தின் மனசாட்சியை உலுக்கக்கூடிய எந்த ஒரு படைப்பும் கால தேச வர்த்தமானங்களை எளிதாகக் கடந்து விடுகிறது. அத்தகைய படைப்பு வாசகனை மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது. அவன் ஆழ்மனதில் நுரைத்துப் பொங்கும் கடல் அலைகளைப் போல மீண்டும் மீண்டும் தீராத கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கிறது.வாசகனின் கற்பனையின் வழியே நுழைந்து கொண்டு, அவனது சிந்தனை மையத்தை சிதறடித்து அவன் இதுவரை திரட்டி வைத்திருந்த அடிப்படைகளை உடைத்துப் போட்டு மீட்டுருவாக்கம் செய்கிறது. மானுட அறம் என்பது எத்தனை வலிமையானது என்பதை மீண்டும் மீண்டும் உணர்த்திக் கொண்டே இருக்கிறது. கண்ணாடி முன்பு நின்று தலைசீவ உதவும் சீப்பு போல என்றுமுள்ள மானுட அறத்தின் முன்பு “தேவ மலர்” போன்ற கதைகள்தான் ஒரு வாசகனின் மனதைச் சீவி அழகு படுத்திக் கொண்டே இருக்கின்றன.
இந்த ஒப்பற்ற கதையை, கடந்த நூறு ஆண்டுகளாக, உலகம் முழுக்க எத்தனை இலக்கிய வாசகர்கள் படித்திருப்பார்கள். இந்தக் கதையின் கடைசி பத்திகளைப் படித்து எத்தனைக் கண்கள் தூய கண்ணீர்த் துளிகளைச் சொரிந்திருக்கும். அந்த வரிசையில் என்னையும் இணைத்த க.நா.சு விற்கு எப்படி நன்றி சொல்வது? தன்னிடம் உள்ள நன்றி உணர்ச்சியை எப்படி வெளிப் படுத்துவது என்று தெரியாமல் தவிப்பதுதான் ஒரு மனிதனின் ஆகப்பெரிய தர்ம சங்கடம் அல்லவா?
கீயிங்கே என்ற வனமும், கீயிங்கே வனத் திருடனின் மனைவியும்,அப்பட் ஹான்ஸ் என்ற துறவியும்தான் இந்தக் கதையைப் படித்து முடித்த பல மாதங்களுக்குப் பிறகும் வாசகனின் மனதில் தொடர்ந்து தோன்றிகொண்டே இருக்கும் கதாப்பாத்திரங்கள்.
கதையின் சுருக்கமான வடிவம் இதுதான்: கொடூரமான பல குற்றங்களைச் செய்து மாட்டிக்கொண்ட ஒரு மூர்க்கமான திருடன் கீயிங்கே என்ற பெருவனத்தில் தன் மனைவியுடனும் ஐந்து குழந்தைகளுடனும் தலைமறைவாக வசித்து வருகிறான். கீயிங்கே காட்டை விட்டு அவனால் வெளி வர முடியாது. நகரத்துக்குள் அவன் தலை தென்பட்டால், அதிகாரிகள் அவனைக் கைது செய்து சிறையிலடைத்து வாட்டி விடுவார்கள்.காட்டுப் பிரதேசத்தில் யாராவது அந்நியர்கள் வழி தெரியாமல் மாட்டிக் கொண்டால் அவர்களை மிரட்டி அவர்களிடம் இருக்கும் பொருளைப் பிடுங்கிக் கொள்வான்.இதனால், காட்டுக்குள் அந்நியர்கள் வருவது நாளடைவில் மிகவும் அரிதாகிக் கொண்டே வந்தது. பசி தாங்க முடியாமல், ஒருநாள் அவன் தன் மனைவியையும் தன் குழந்தைகளையும் பிச்சை எடுக்க நகருக்குள் அனுப்பி வைக்கிறான்.
திருடனின் மனைவி தைரியமாக நகருக்குள் பிச்சையெடுக்க வருகிறாள். அவளுக்கு பயமேதும்இல்லை. அவளுக்குத் தெரியும், திருடனின் மனைவிக்கு ஊரிலுள்ளவர்கள் நிச்சயம் பிச்சையளிப்பார்கள் என்று. இல்லையென்றால், பயங்கர சித்தம் படைத்த திருடன் அவர்களை வஞ்சம் தீர்த்துக் கொள்வானே. அவள் நினைத்தபடியே, அவளைக் கண்டதும் அஞ்சிய ஊரார் அவளுக்கும் அவளது குழந்தைகளுக்கும் பிச்சையளிக்கிறார்கள்.
பிச்சையெடுத்துக் கொண்டே அவர்கள் “ஊவிட்” என்ற மதகுருமார்கள் தங்கியிருக்கும் மடத்தினை வந்தடைகிறார்கள். மடத்தின் வெளிக்கதவு மணியை அசைத்து விட்டுத் திருடனின் மனைவி பிச்சை கேட்டதும், வாயிற்காப்போன் திட்டி வாசலைத் திறந்து, அவளுக்கும் அவளது ஐந்து குழந்தைகளுக்கும் சேர்த்து ஆறு ரொட்டித் துண்டுகளை அவளிடம் அளிக்கிறான். அவள் ரொட்டித் துண்டுகளைத் தனது பைக்குள் பத்திரப் படுத்தி விட்டுத் திரும்ப யத்தனிக்கும் சமயம் அவளுடைய கடைசிக் குழந்தை அவளது மேலங்கியைப் பிடித்து இழுத்து, அந்த மடத்தின் மற்றொரு மூலையில் இருந்த ஒரு கதவைக் காட்டுகிறது.
உடனே, அவள் தன் ஐந்து குழந்தைகளையும் இழுத்துக் கொண்டு திறந்திருந்த அந்தக் கதவு வழியே நுழைகிறாள். அங்கே அவள் கண்ட காட்சி அவளை பிரமிக்க வைக்கிறது. அது ஒரு சிறிய தோட்டம். அங்கே விதவிதமான அரிய செடிகளும், மூலிகைகளும், வண்ண வண்ண மலர்களும் அவளது கண்ணைப் பறிக்கின்றன.அந்த தோட்டம், மடத்தின் தலைவர் ‘அப்பட்ஹான்ஸ்’ என்பவரால் நிர்மாணிக்கப் பட்டது. திருடனின் மனைவி,தன்னையே மறந்து போய் ஒவ்வொரு செடிகளாகப் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், அந்த தோட்டத்தின் மற்றொரு பகுதியில் களை பிடுங்கிக் கொண்டிருந்த மடத்தின் சீடன் ஒருவன் அவளை கவனித்து விடுகிறான்.ஓடோடி வந்த அவன் அவளையும் அவளது குழந்தைகளையும் கோபமாகக் கத்திக் கொண்டே துரத்தப் பார்க்கிறான். ஆனால் திருடனின் மனைவியோ எவ்வித பயமும் இன்றி, தான் கீயிங்கே வனத் திருடனின் மனைவி என்று சொல்லி விட்டு மேற்கொண்டு தோட்டத்தின் அழகைக் காண்பதற்காக நடக்கத் துவங்குகிறாள்.ஆனால் அந்த சீடனோ அவளைச் சமாளிக்க மேலும் இரு துறவியரை அழைத்து வந்து அவளை மூர்க்கமாக வெளியேற்ற முனைகிறான். திருடனின் மனைவியும் அவர்களுக்குச் சரிசமமாக நின்று கூச்சலிட்டுக் கொண்டே அவர்கள் மேல் பாய்ந்து சண்டையிடுகிறாள்.அவளுடைய ஐந்து குழந்தைகளும் சந்தோஷ ஆரவாரத்துடன் வீரப்போர் புரிய வந்து தயாராகக் கலந்து கொண்டன. மதகுருமார் இருவரும், சிஷ்யன் ஒருவனும் அதி சீக்கிரமே தோல்வியை ஒப்புக் கொண்டு புது ஆள் பலம் கொண்டு வரப் பின்னிட்டனர்.
இவ்வேளையில், மடத்தின் தலைமைத் துறவியான அப்பட் ஹான்ஸ், தோட்டத்திலிருந்து எழுந்த கூச்சல் கேட்டு, என்ன நடந்தது என்று பார்ப்பதற்காகதோட்டத்திற்கு விரைந்து வருகிறார். அவருடைய சிஷ்யர்கள் அவரிடம் கீயிங்கே வனத் திருடனின் மனைவி இந்த தோட்டத்திற்குள் நுழைந்து கொண்டு வெளியேற மறுக்கிறாள் என்று தகவல் சொல்கிறார்கள்.
தன்னுடைய சீடர்களை அமைதியாக இருக்கும்படிச் சொல்லிவிட்டு, அப்பட்ஹான்ஸ் திருடனின் மனைவியைக் கவனிக்கிறார். அவளோ யாரைப் பற்றியும் கவலைப்படாமல், துளி பயமுமின்றி ஒவ்வொரு செடியையும் பாத்தியையும் நுணுக்கமாக ஆராய்ந்து கொண்டே செல்கிறாள்.அவள் தன்னுடைய தோட்டத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்ததைப் பார்த்த அப்பட்ஹான்ஸ் உள்ளூர பெருமையும் சிறிது கர்வமும் அடைகிறார். அந்த நாட்டிலேயே சிறந்த தோட்டம் அவரது தோட்டம். அவர் எவ்வளவோ சிரமப்பட்டுத் தேடிப்பிடித்துத் தன் கையாலேயே நட்டு வைத்து, தண்ணீர் ஊத்தி வளர்த்த செடிகள் பல இருந்தன அந்தத் தோட்டத்தில்.தன் தோட்டத்தின் அழகைக் காண்பதற்காக அவள் மூன்று பேருடன் தனியாகப் போராடி ஜெயித்தாள் என்று எண்ணும் போது அப்பட்ஹான்ஸுக்குத் தன் தோட்டத்தைப் பற்றிச் சற்றுப் பெருமையாகவே இருந்தது. அவர் திருடனின் மனைவியை அணுகிக் கேட்கிறார்.’இந்தத் தோட்டம் உனக்குப் பிடித்திருக்கிறதா’ என்று.
திருடனின் மனைவி, தனக்கு எதிரே மெலிந்து போய் தலை முழுதும் வெண்முடியுடன் நின்று கொண்டிருக்கும் அப்பட்ஹான்ஸைப் பார்த்து, இந்தத் தோட்டம் அழகியதுதான்.ஆனால், இதைவிட அழகான தோட்டம் ஒன்றை கீயிங்கே வனத்தில் நான் பார்த்திருக்கிறேன்.அதனுடன் இதை ஒப்பிடவே முடியாது என்றாள்.
அப்பட்ஹான்ஸ் திகைத்துப் போகிறார். தன்னுடைய தோட்டத்தை விடவும் அழகான தோட்டம் இந்த சுற்றுப்புறத்தில் இருக்கிறதா என்ன? அவர் அருகே இருந்த சீடனுக்குஇதைக் கேட்டதும் கோபம் வருகிறது. இவள் வேண்டுமென்றே பொய் சொல்கிறாள் என்கிறான். ஆனால், திருடனின் மனைவியோ அமைதியாகச் சொல்கிறாள். நான் சொல்வது முற்றிலும் உண்மை. “பிரதி வருஷமும் கிறிஸ்துமஸுக்கு முந்திய இரவு வஸந்தகாலம் போல கீயீங்கே வனம் பூத்துக் குலுங்குகிறது என்று நீங்கள் கேள்விப்பட்டதில்லையா, பார்த்ததும் இல்லையா? நடு மாரிக்காலத்தில் நமது கிறிஸ்துவின் பிறப்பின் ஞாபகார்த்தமாக, கிறிஸ்து அர்ப்பணமாக வஸந்தகாலம் தோன்றி மரமும் செடியும் கொடியும் பூத்துக் குலுங்கும் என்று நீங்கள் அறிந்ததில்லையா? காட்டில் வசிக்கும் நாங்கள் பிரதி வருஷமும் இந்தக் காட்சியைக் கண்டிருக்கிறோம். என்ன அற்புதமான புஷ்பங்கள். என்ன அழகான வர்ணங்கள். எவ்வளவு இன்பகரமான வர்ண விஸ்தாரங்கள். அடடா. நாவால் சொல்லி மாளாது. கைநீட்டி அந்தப் புஷ்பங்களில் ஒன்றைப் பறிக்கவும் மனசு வராதே. அவ்வளவு அழகு” என்கிறாள்.
அவளது இந்த வர்ணனைகளால் ஈர்க்கப்பட்ட அப்பட்ஹான்ஸ், தானும் அந்தக் காட்சியைப் பார்க்க விரும்புவதாகவும், தன்னை அந்த கீயிங்கே வனத்திற்கு அழைத்துச் செல்ல முடியுமா என்றும் திருடனின் மனைவியிடம் பணிவாக வேண்டுகிறார். திருடனின் மனைவி முதலில் தயங்குகிறாள். அப்பட்ஹான்ஸ் தன்னுடைய கணவனைக்காட்டிக்கொடுத்துவிடுவாரோ என்று யோசிக்கிறாள். அதனால், சில நிபந்தனைகளுடன் அப்பட்ஹான்ஸைக் காட்டுக்குள் கூட்டிக் கொண்டு போக சம்மதிக்கிறாள். அதன்படி,அப்பட்ஹான்ஸ் தன்னுடன் ஒருவரை மட்டுமே அழைத்து வர வேண்டும் என்றும், தன் கணவனை அதிகாரிகளிடம் காட்டிக் கொடுக்கக் கூடாது என்றும் சத்தியம் செய்யச் சொல்கிறாள். அப்பட்ஹான்ஸ் அப்படியே சத்தியம் செய்து கொடுக்கிறார். அதனால், அந்த வருட கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய தினம், திருடனின் மனைவி, தன் குழந்தைகளில் ஒருவனை மடாலயத்திற்கு அனுப்புவதாகவும் அவன் அவர்களுக்கு வழிகாட்டுவான் என்றும் சொல்லி விடைபெறுகிறாள்.
அப்பட்ஹான்ஸ் அந்த வருட கிறிஸ்துமஸ் தினத்திற்காக ஏங்கத் துவங்கி விடுகிறார். அதே சமயம், தாங்கள் இப்படிக் கிறிஸ்துமஸ் தினத்துக்கு கீயிங்கே வனத்திற்கு செல்வதற்கு ஏற்பாடு செய்திருப்பதை ஒருவரிடமும் சொல்லக்கூடாது என்று தன் சிஷ்யனுக்குக் கட்டளையிடுகிறார்.
ஒருநாள் ‘ஊவிட்’ மடத்திற்கு வருகை தரும் ஆர்ச் பிஷப் “அப்ஸலன்” அந்த மடத்தில் ஒரு இரவு தங்க நேருகிறது. அவருக்கு அப்பட்ஹான்ஸ் தன்னுடைய தோட்டத்தைச் சுற்றிக் காட்டுகிறார். அப்பட்ஹான்ஸ் மெல்ல கீயிங்கே வனத்திருடனைப் பற்றிப் பேச்செடுக்கிறார். அந்தத் திருடனை நகருக்குள் அனுமதித்து அவனுக்குப் பொது மன்னிப்பு வழங்க வேண்டுமென்றும் அவன் திருந்தி வாழ நாம் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டுமென்றும் கோருகிறார். ஆனால், ஆர்ச்பிஷப் அப்ஸலனோ, அயோக்கியனை மீண்டும் யோக்கியர்களிடையே நடமாட விடுவது தவறு என்று அந்த வேண்டுகோளை நிராகரித்து விடுகிறார். அப்பட்ஹான்ஸ் மனம் தளராமல், அந்த திருடனுக்காக தொடர்ந்துவாதாடுகிறார். அந்த திருடனும் அவனது குடும்பமும், பிரதி வருஷமும் கிறிஸ்துமஸுக்கு முந்தைய இரவு, கிறிஸ்து பிறந்ததைக் கொண்டாடும் விதமாக, கீயிங்கே வனம்மலரும் காட்சியைக் காண்கிறார்கள். திருடன் என்று நம்மால் ஒதுக்கப் பட்டவனுக்கு கடவுளின் இந்த விந்தைகள் புலப்படுகின்றன என்றால், கடவுள் அவனை ஒதுக்கவில்லை என்றுதானே அர்த்தமாகிறது என்கிறார். ஆர்ச்பிஷப் அப்ஸலனுக்கு இந்த வாதத்தில் நம்பிக்கையில்லை. உண்மையிலேயே, கீயிங்கே வனம் கிறிஸ்துமஸுக்கு முந்தைய இரவு வசந்த வனமாக மாறுகிறது என்றால், அந்த மலரில் ஒன்றைக் கொண்டு வந்து தன்னிடம் காட்டினால், அன்றே அந்தத் திருடனையும், அவன் குடும்பத்தையும் மன்னித்து திரும்பவும் சமூகத்தில் ஏற்றுக் கொள்ளச் செய்வதாக வாக்களிக்கிறார். இந்த உரையாடலை அப்பட்ஹான்ஸின் சீடனும் கேட்கிறான்.
தான் கொடுத்த வாக்கை மறக்காமல்,திருடனின் மனைவி, கிறிஸ்துமஸுக்கு முந்தைய நாள், தன்னுடைய குழந்தைகளில் ஒருவனை ஊவிட் மடத்திற்கு அனுப்பி வைக்கிறாள். அவன் வழிகாட்டிக் கொண்டே வர, அப்பட்ஹான்ஸும் அவரது சீடனும் கீயிங்கே வனத்தில் உள்ள திருடனின் குடிசைக்கு வருகிறார்கள். அந்த இரவில்காட்டிற்குள் பனி பொழிந்து கொண்டிருக்கிறது.அவர்களால் குளிரைத் தாங்க முடியவில்லை. திருடனின் மனைவி அவர்களை வரவேற்று, குடிசையின் நடுவில்இருந்த கணப்பின் அருகே அவர்களை அமரச் செய்கிறாள். திருடனோ அவர்களைச் சந்தேகமாகப் பார்க்கிறான். தன்னைக் காட்டிக் கொடுக்கத்தான் அவர்கள் இருவரும் நகரத்திலிருந்து இந்த வனத்திற்குள் வந்திருப்பதாக நம்பினான். அப்பட்ஹான்ஸ் அவனிடம் தான் அவனுக்காக ஆர்ச் பிஷப்பிடம் பேசி விட்டதாகவும் ஆர்ச் பிஷப் அவனை மன்னித்து விடுவார் என்றும் சொல்கிறார். திருடனோ அவரை நம்பாமல், ஆர்ச் பிஷப் தன்னை உண்மையிலேயே மன்னிப்பதாக இருந்தால்,தான் திருந்தி விடுவதாகவும், ஒரு வாத்துக் குஞ்சைக் கூட திருட மாட்டேன் என்றும் சொல்கிறான். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே திருடனின் மனைவி,அவர்களை குடிசைக்கு வெளியே அழைத்துச் செல்கிறாள். கீயிங்கே வனம் தேவ வனமாக மாறும் தருணம் வந்துவிட்டது என்கிறாள்.
அப்பட்ஹான்ஸுக்கும் அவரது சீடனுக்கும் ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. வனத்தைச் சூழ்ந்திருக்கும் கும்மிருட்டில் அவர்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. ஒரு மரத்திலும் இலை என்பது பெயருக்குக் கூட இல்லை.தரையெங்கும் பனிப்போர்வை போர்த்திருக்கிறது. இந்த வனம் எப்படி தேவ வனமாக மாறும் என்று குழப்பத்துடன் அவர்கள் நின்றிருக்கும் போது, மெல்ல அவர்கள் காதுக்குள் ஒருவிதமான மணியோசை ஒலிக்கத் துவங்குகிறது. அதே சமயம் வனத்திலே மங்கலானதோர் வெளிச்சம் தோன்றத் தொடங்கியது. அவர்கள் கண்ணெதிரே வனம் சட சடவென்று விழித்துக் கொள்ளத் துவங்கியிருந்தது. ஒரு வினாடியில், மணிகளின் ஒலியும், வெளிச்சமும், காடு பூராவும் பரவின. அப்பட் ஹான்ஸினுடைய கண் முன்னர் பூமியின்மேல் பச்சைப் போர்வை படர்ந்தது. புல்லும், பூண்டும் அடர்ந்து ஒரு நொடியில் வளர்ந்து தலை தூக்கின. எதிரே தெரிந்த குன்றுகளின் சரிவெல்லாம் திடுமென்று பச்சைப்பசேலென்றாகி விட்டது. வித விதமான பூச்செடிகள் முளைத்துத்தலைதூக்கிப் பூத்துக் குலுங்கின. அந்த வர்ண விஸ்தாரமே அபூர்வமானதாக, அற்புதமானதாக இருந்தது. வேறு என்ன சொல்வது? தெய்வீகமானதோர் வர்ண விசித்திரம் அது.கீயிங்கே காடு விழித்தெழுந்து விட்டது என்று கண்ட அப்பட் ஹான்ஸுக்கு ஆச்சரியமாக இருந்தது. மொட்டை மரங்கள் துளிர்த்தன. தூரத்தில் ஒரு நீர்வீழ்ச்சியின் சப்தமும்,ஆறுகளின் சலசலப்பும் கேட்டது. பனியெல்லாம் விலகி, மனோகரமான மணத்துடன், தென்றல் வீசத் துவங்கியது. பறவைகளின் சப்தங்கள் கேட்டன. எங்கேயோ வெகு தொலைவிலிருந்து இடைச்சிகள் தங்கள் பசுக்களிடம் கொஞ்சிக் கொஞ்சிப் பேசிக்கொண்டே பால் கறந்து கொண்டிருக்கும் சப்தம் வந்தது. ஆட்டு மந்தைகளின் மணிகள் ஒலித்தன. மரங்களெல்லாம் சிவப்பும், நீலமும், மஞ்சளும், ஊதாவுமாகப் பூத்துக் கொண்டிருந்தன. பச்சையாகக் காய்த்திருந்த காய்கள் அப்பட்ஹான்ஸுடைய கண் எதிரே கனிந்து நிறம் மாறிப் பழுத்தன. பூக்கள் தரையெங்கும் விழுந்து பரவி விதவிதமான வர்ணம் காட்டின. ஏதோ மாயமான ரத்ன கம்பளம் விரித்தது போல் இருந்தது.
திருடனும் அவனது குழந்தைகளும் மரங்களில் கனிந்திருந்த பழங்களைத் தின்று பசியாறுகிறார்கள். குள்ள நரி ஒன்று திருடனின் மனைவியருகில் வருகிறது.திருடனின் மனைவி குனிந்து நரியின் காதில் ஏதோ சொன்னாள். நரி அவள் சொன்னதைக் கேட்டு ஆனந்தப்படுவது போல் இருந்தது. திருடனின் குழந்தைகள் குறுக்கும் நெடுக்கும் ஓடிக் கொண்டிருந்த முயல் குட்டிகளுடனும், நரிக்குட்டிகளுடனும் விளையாடத் தொடங்கினார்கள். தெய்வீகமான ஒளி எங்கும் பரவி நின்றது. வஸந்தத்தின் மகரந்தப்பொடி காற்றிலே நிறைந்திருந்தது. உலகத்திலுள்ள அழகான மலர்ச் செடிகள் எல்லாம் கிறிஸ்து பிறந்ததன் ஞாபகார்த்தமாய் பூத்து கீயிங்கே வனத்தை தெய்வீகமான அழகு கொண்டதாகச் செய்தன. சில மலர்கள் பொடிப்பொடியாக நவரத்தினங்கள் போல் ஜொலித்தன. ரோஜாக் கொடியொன்று மலையடிவாரத்தில் முளைத்து மலையுச்சிவரையில் ஒரே நொடியில் படர்ந்தது நெடுகிலும் கண்ணைப் பறிக்கும் வண்ணமலர்கள் பூத்துக் குலுங்கின. இதற்குப் போட்டியாகப் படர்ந்தது கருப்புப் பூவுடைய ஒரு கொடி அதன் பூக்களைப்போல அப்பட்ஹான்ஸ் எங்கேயும் கண்டதில்லை.இது தேவவனம்தான் சந்தேகமில்லை. திருடனின் மனைவி அன்று சொன்னது போலவே இது அப்பட் ஹான்ஸினுடைய மடத்துத் தோட்டத்தைவிட அற்புதமானதுதான். அழகானது தான். சந்தேகத்துக்கிடமேயில்லை. கோடி சூரியப்பிரகாசத்துடன், வசந்தத்தின் காற்றும், மணமும், ஒலியும் அப்பட் ஹான்ஸைச் சூழ்ந்திருந்தன. கண்ணீர் மல்க அப்பட் ஹான்ஸ் அந்த தேவ வனத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்பட் ஹான்ஸ் கையைக் கட்டிக் கொண்டு மண்டியிட்டு தலையைக் குனிந்து வணங்கினார். வணங்கியபடியே இருந்தார். அவர் முகத்திலே ஆனந்த பரவசம் படர்ந்தது.இனிமையான யாழை மீட்டிக் கொண்டே தேவர்கள் கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடியபடி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களைச் சுற்றிலும் அற்புதமான ஒளி வீசிக் கொண்டிருந்தது.
ஆனால்,அப்பட்ஹான்ஸுக்கு அருகில் நின்றிருந்த சீடனுக்கோ, இது ஏதோ கண்கட்டு வித்தையாகவும், ஏமாற்று வேலையாகவும் தெரிகிறது. சைத்தான் ஏதோ மாயம் செய்கிறான். இலலையெனில், எப்படி சாதாரண இந்த வனம் நொடிப்பொழுதில் அசாதாரணமாகத் தோற்றம் கொள்ள இயலும்?என்று அவனுக்குத் தோன்றுகிறது.
அவன் அவநம்பிக்கையுடன் அந்தக் காட்சிகளைக் கண்டு கொண்டிருந்தான். அப்பட்ஹான்ஸை நெருங்கி அவர் தோளின் மேல் அமர்ந்த பறவைகள் அவரது சீடனை நெருங்கவேயில்லை. எந்த மிருகமும் அவன் பக்கமே வரவில்லை.தப்பித்தவறி, ஒரு புறா அவன் பக்கம் பறந்து அவனது தோளில் அமர்ந்தது. உடனே, அவன் சைத்தான்தான்தன் மேல் அமர்ந்து விட்டது என்றெண்ணி அந்தப் புறாவை விரட்டி, “நரகத்திலிருந்து வந்தவனே, சைத்தானே! ஓடிப் போ என்று காடு முழுவதும் எதிரொலிக்கும் படியாகக் கூவினான்.
அந்த நொடியில், அவர்களைச் சுற்றியிருந்த காற்றும் வெளிச்சமும் இல்லாமல் ஆகியது.தேவகானம் பாடிக் கொண்டு வந்த தேவர்கள் தயங்கி ஒரு வினாடி நின்று மௌனமாகத் திரும்பிச் செல்லத் தொடங்கினார்கள். எவ்வளவு அதிசயமாக எல்லாம் நிகழ்ந்ததோ அவ்வளவு அதிசயமாக ஒரே வினாடியில் எல்லாம் மறைந்து விட்டது.பறவைகளின் சப்தம் நின்றது. வசந்த காலம் மறைந்து பனி மீண்டும் கொட்டத் துவங்கியது. பார்த்துக் கொண்டிருக்கும் போதே, செடி கொடிகளெல்லாம் உயிரிழந்து,அந்த தேவ வனம் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தது.அப்பட்ஹான்ஸின் இதயத்தில் துக்கம் சூழ்ந்தது.கண்ணீர் வெள்ளமாக கொட்டத் துவங்கியது. அந்தக் கணத்திலும் திருடனைக் காப்பாற்றுவதற்காக தான் பறித்து வருவதாகச் சொல்லியிருந்த தேவ மலரைப் பறிப்பதற்காக மறைந்து கொண்டிருந்த தேவ வனத்துக்குள் ஓடிப்போய் கடைசி நிமிஷத்தில் அப்பட்ஹான்ஸ் கீழே விழுந்து தன் கையில் அகப்பட்ட புஷ்பத்தை பறிக்க முயன்றார்.ஆனால் அவரது கையில் ஏதோ கிழங்கு போலஒன்றுதான் அகப்பட்டது. அதை எடுத்துக் கொண்டு நடக்க முயன்றார். எழுந்திருக்க முடியவில்லை. நெடுஞ்சாண்கிடையாகக் கீழே விழுந்து இறந்து போனார்.அப்பட்ஹான்ஸுடைய சீடனுக்கு அப்போதுதான் தான் தவறு செய்தது புரிந்தது. தன்னால்தான் தன்னுடைய குரு இறந்து விட்டார் என்று உணர்ந்து அவன் அடித்துக் கொண்டு அழுதான்.
அப்பட்ஹான்ஸினுடைய சடலத்தை ஊவிட் மடத்துக்குத் தூக்கிச் சென்றார்கள். உடலைக் கழுவிக் கிடத்த முயலும் போது அவர் வலது கை மூடியிருப்பதை சிஷ்யர்கள் கண்டார்கள். சாகும் சமயத்தில் அவர் கையில் எதையோ பற்றிக் கொண்டிருந்தார் போலும். கையைப் பிரித்துப் பார்த்தபோது கைக்குள் இரண்டு கிழங்குகள் இருப்பது தெரிந்தது. சிறு கிழங்குகள், எந்த மாதிரியான செடியின் கிழங்குகள் அவை என்பது யாருக்கும் தெரியவில்லை.
கீயிங்கே காட்டுக்குள் அப்பட் ஹான்ஸுடன் போய் வந்த சீடன் அந்தக் கிழங்குகளைக் கொண்டு போய் அவருடைய தோட்டத்தில் ஊன்றி வைத்தான். தன் கையாலேயே தண்ணீர் விட்டு தினம் தினம் கவனித்து வந்தான். பூக்குமா, பூக்காதா என்று கூடத் தெரியவில்லை. அது வளமாகக் கூட வளரவில்லை. வஸந்தம் வந்து போயிற்று. கோடை வந்து போயிற்று. அடுத்த மாரிக்காலமும் வந்தது. அப்பட் ஹான்ஸினுடைய தோட்டத்திலிருந்த செடி கொடிகளெல்லாம் அழிந்து விட்டன. அழுகி விட்டன. சிஷ்யன் கூட இப்பொழுதெல்லாம் தோட்டத்திற்குள் போவதில்லை.
சரியாக ஒரு வருடம் கழிந்து விட்டது.மறுநாள் விடிந்தால் கிறிஸ்துமஸ். அப்பட்ஹான்ஸின் நினைவிலேயே வாழ்ந்து வந்த அந்த சீடன் தன் குருவைப் பற்றிய ஞாபகங்களைத் தனிமையில் அவருடைய தோட்டத்தில் அனுபவிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் அவன் தோட்டத்திற்குள் சென்றான். அங்கு ஓர் அபூர்வமான விஷயம் அவன் கவனத்தைத் கவர்ந்தது. அப்பட்ஹான்ஸ் கையில் இருந்த கிழங்குகளை நட்டிருந்த இடத்தில் ஏதோ ஒரு செடி முளைத்திருந்ததைக் கண்டான். பச்சைப்பசேலென்ற இலைகளுடன் அது வளர்ந்திருந்தது. தேவ வனத்திலிருந்து வந்த அந்த கிழங்கு கிறிஸ்து பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக இப்பொழுது முளைத்து இலைகள் விட்டிருக்கிறது. அற்புதமாகப் பூத்தாலும் பூக்கும் என்று எண்ணும் போது சிஷ்யனின் மெய்சிலிர்த்தது. அதே வினாடி அந்தச் செடியிலே அழகான புஷ்பங்கள், வெள்ளியும் தங்கமுமாக மலர்ந்து கண்ணை மயக்கின. உடனே, அந்த மலர்களில் ஒன்றைப் பறித்துக் கொண்டு அந்த சீடன் ஆர்ச் பிஷப் அப்சலனிடம் ஓடுகிறான். ஆர்ச் பிஷப்புக்கும், அப்பட் ஹான்ஸுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் அவனுக்குத் தெரியும்.
தேவ மலரை ஆச்சர்யத்துடன் வெகு நேரம் பார்த்துக் கொண்டிருந்த ஆர்ச் பிஷப், அப்பட்ஹான்ஸ் தன்னுடைய வாக்கை நிறைவேற்றி விட்டார். நானும் அவருக்களித்தவாக்கை நிறைவேற்றுகிறேன் என்று சொல்லி ,கீயிங்கே வனத் திருடனுக்கு பொது மன்னிப்பு அளிக்கிறார்.திருடன் செய்திருந்த குற்றங்களையெல்லாம் மன்னித்து, மீண்டும் அவன் மனிதர்களிடையே மனிதனாக நடமாடலாம் என்ற மன்னிப்புக் கடிதத்தை சீடனிடம் கொடுத்தனுப்புகிறார். சீடன் அன்றிரவே புறப்பட்டு, கீயிங்கே வனத்தை கிறிஸ்துமஸ் அன்று அதிகாலையில் அடைகிறான். திருடனையும் அவனது மனைவியையும் சந்தித்து ஆர்ச் பிஷப் அவர்களை மன்னித்து விட்ட தகவலைச் சொல்லி மன்னிப்புக் கடிதத்தையும் காட்டுகிறான். அப்போதுதான் அவனுக்குத் தெரிகிறது. எப்போதும் போல கிறிஸ்துமஸுக்கு முந்திய இரவு கீயிங்கே வனம் தேவ வனமாக மாறவில்லை என்பது.
திருடனின் மனைவி, அப்பட்ஹான்ஸ் தன்னுடைய வார்த்தையைக் காப்பாற்றி விட்டார். என் கணவனும் தன் வார்த்தையைக் காப்பாற்றுவான். அவன் இனித் திருடமாட்டான். மனிதர்களிடையே யோக்கியனாக வாழுவான் என்றாள்.திருடனும், திருடனுடைய மனைவியும், குழந்தைகளும் அக்கணமே குடிசையை விட்டு நகருக்குப் புறப்பட்டனர். அவர்கள் போன பின் அப்பட் ஹான்ஸினுடைய சிஷ்யன் அங்கே நடுக்காட்டில் குகையில் குடியேறினான். தான் செய்த பாபத்துக்கெல்லாம் பிராயச்சித்தம் செய்ய விரும்பினான் அவன். தன் காலத்தை சிந்தனையிலும், பிரார்த்தனையிலும் கழித்தான்.
ஆனால், அதன்பிறகு வந்த எந்தக் கிறிஸ்துமஸுக்கும் கீயிங்கே வனம் தேவ வனமாக மாறவேயில்லை.அத்தேவவனத்தின் ஞாபகார்த்தமாக இப்போது இருப்பதெல்லாம் ஊவிட் மடத்திலே அப்பட் ஹான்ஸினுடைய தோட்டத்திலே உள்ள அந்த ஒரு செடிதான். அந்தச் செடிக்கு கிறிஸ்துமஸ் ரோஜாச்செடி என்றும், அதில் பூக்கும் பூக்களை தேவமலர்கள் என்றும் ஜனங்கள் கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு வருஷமும், அச்செடி கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்திய இரவு பூக்கிறது. நடுமாரிக்காலத்திலே உலகத்தில் மற்றெல்லாச் செடிகளும் இலைகள்கூட இல்லாமல் அழிந்துபோய் நிற்கும் சமயத்திலே அந்த ஒரு செடி மட்டும் பசேலென்று இலை துளிர்த்து பொன்நிறத்தில் பூக்கிறது. உண்மையிலே அது தேவமலர் தான், என்பதாக கதை முடிகிறது.
நூறு வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட இந்தக் கதை , இன்றைய பின்-நவீனத்துவ, மாய யதார்த்தக் கூறுகளையெல்லாம் தன்னுள் செறிவாகக் கொண்டிருப்பதுதான்வியப்பளிக்கிறது. அந்த வகையில் லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான கப்ரியேல் கார்சியா மார்க்வெஸ், நம்முடைய கோணங்கி போன்றவர்களுகெல்லாம் முன்னோடியாக நான் செல்மா லாகர்லெவ்வைக் கருதுகிறேன்.
இந்தக் கதைக்கு இருக்கும் சிறப்பே தூய ஆன்மீகத்துடன் இலக்கியத்தை மோத விடுவதுதான். இந்தக் கதையின் உச்சத்தில் அந்த மோதல் நிகழ்கிறது. அந்த மோதலின் விளைவாக கதை தனக்கே உரிய அபாரமான பாய்ச்சலால் தனியானதொரு தளத்தில் சென்றமர்ந்து ஒளிர்கிறது. ஆன்மீகமும் கவித்துவமும் மோதி முகங்கும் இத்தகைய அரிய தருணம் வாசகனின் மனதிலும் நிகழ்ந்தேறிவிடுகிறது. இந்த அரிய தருணத்திற்குப் பிறகு தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட, வார்த்தைகளால் இன்னதென்று விவரிக்க இயலாத ஒரு புள்ளிக்குள் கதை ஒளிந்து கொள்கிறது. அத்தகைய ஒரு புள்ளியில், இந்தப் படைப்பு யாவருக்குமான பொதுவான படைப்பு என்பதைத் தாண்டி,அந்தக் கதையைப் படிக்கும் வாசகனுக்கு மட்டுமேயான படைப்பாக மாற்றம் கொள்கிறது. காதல் போல ஒரு அந்தரங்க உணர்ச்சியாகி விடுகிறது. அதற்குமேல், இந்தப் படைப்பைப் பற்றி விவாதிப்பதே தேவையற்றதாகிவிடுகிறது. அவரவர் படித்து உணர்ந்து கொள்ள வேண்டியதுதான். அத்தகைய ஒரு புள்ளியை, காடு மலர்வது தொடங்கி திருடன் மன்னிக்கப் படுவது வரை எந்தக் கட்டத்திலும் ஒரு வாசகனால் கண்டு கொள்ள முடியும். ஸ்காண்டிநேவிய இலக்கியங்கள் பெரும்பாலும் இத்தகைய இலக்கியமும் ஆன்மீகமும் கலக்கும் புள்ளிகளால் ஆனதுதான். ஸ்வீடிஷ் இலக்கியத்திலேயே இன்னொரு உதாரணமாக நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் பேர்லாகர்குவிஸ்ட் எழுதிய “அன்பு வழி” (Barabbas) என்ற நாவல். க.நா.சு தான் இந்த நாவலையும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். வண்ணதாசன், வண்ணநிலவன் போன்ற எழுத்தாளர்களுக்கெல்லாம் இன்றும் பெரும் ஆதர்சமாக இருக்கும் நாவலைச் சொல்லலாம். தமிழ் சிறுகதையிலும் இத்தகைய சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது. சிறந்த உதாரணம்:ஜெயமோகனின் “லங்கா தகனம்”. அனுமன் வேஷமிட்டுக் கதகளி கூத்தாடும் ஒரு கலைஞன் ஒரு தருணத்தில் அந்த ஆன்மீக ஆளுமையை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்டு , அந்த அனுமனே தானாக ஆகிறான். கவித்துவமும் ஆன்மீகமும் மீண்டும் மீண்டும் மோதி விலகும் பல புள்ளிகளால் நிறைந்தது “லங்கா தகனம்”.
“தேவ மலரின்” உச்சமாக நான் நினைப்பது கீயிங்கே வனம் தேவ வனமாக மாறும் தருணம்தான். ஒரு ஓவியத்தைப் போல மிக நுணுக்கமாக இந்தக் காட்சிசித்தரிக்கப் பட்டிருக்கிறது. கவித்துவமான இந்தக் காட்சியைப் படிக்கும்போதுதான் வாசகன் மனம் அவனை அறியாமலே திறந்து கொள்கிறது. அந்த இரவில்,அந்த தேவ வனத்தில், அப்பட் ஹான்ஸுக்கு அருகில் வாசகனும்தான் நிற்கிறான். பிரமாண்டமான அந்த வனத்தைத் தன் புலன்கள் அனைத்தாலும் அனுபவிக்கிறான்.இடையிடையே இருக்கும் மௌனங்களையும் இடைவெளிகளையும் தன் கற்பனையால் நிரப்பிக் கொள்கிறான். செல்மா லாகர்லெவ் இந்தக் காட்சியில் சொல்வது குறைவு. ஆனால், வாசகன் மனதில் இந்தக் காட்சி “நிகழ” ஆரம்பித்ததும் அவனே தன் கற்பனையால் இந்தக் காட்சியை நிறைவு செய்து கொள்கிறான்.
இந்தக் காட்சியை விடவும், கதையின் முடிவுதான் கதையின் ஆன்மாவையே தாங்கி நிற்பதாகச் சொல்லலாம். இந்தக் கதையின் முடிவில், யாவரும் நல்லவர்களாக காட்டப் படுகிறார்கள். தேவ வனம் நிரந்தரமாக மறைவதற்குக் காரணமாய் இருந்த சீடன் மனம் மாறி திருடனுக்கு மன்னிப்பு அளிக்க வேண்டி தேவ மலருடன் பிஷப்பிடம் ஓடுகிறான். முதலில், திருடனுக்கு எதிராகப் பேசிய ஆர்ச் பிஷப் அவனுக்கு மன்னிப்பு அளிக்கிறார். இந்தத் துறவிகளை அறவே நம்பாமல் இருந்த திருடன் கூட முடிவில் மனம் திருந்தி திருட்டுத் தொழிலை கைவிடுகிறான். இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் நேரடிக் காரணமாய், தேவமலர் அமைந்தாலும் மறைமுகக் காரணமாய் அப்பட் ஹான்ஸின் மரணமும், அவரது தூய நல்லெண்ணமும் அமைந்து விடுகின்றன. எண்ணிப் பாருங்கள், இதில் யாராவது ஒருவர் நன்மையின் பக்கம் இல்லாவிட்டால் என்ன நடந்திருக்கும். சீடன் அந்த தேவ மலரைப் பறிக்காமல் இருந்திருந்தாலோ, பிஷப் அந்த மலரை அங்கீகரிக்காமல் போயிருந்தாலோ, திருடனுக்கு மன்னிப்பு கிடைத்திருக்காது. அப்பட்ஹான்ஸின் மரணம் தான் இவர்களின் இதயத்துள் இருக்கும் நல்லெண்ணத்தை தூண்டி விட்டு திருடனுக்கு மன்னிப்பளிக்க வைக்கிறது.தேவ மலர் என்பது ஒரு குறியீடுதான். உண்மையில், அந்த தேவ மலர் மனிதர்களாகிய நம் எல்லோரின் இதயத்திலும் இருக்கிறது. அந்த மலரை நாம் மானுடத்தின் மீட்சிக்காக பயன்படுத்த வேண்டும் என்பதுதான் இந்தக் கதை உணர்த்தும் மையமாக எனக்குத் தோன்றுகிறது. இந்தக் கதையைப் படித்த வாசகனுக்குள் ஒவ்வொரு கிறிஸ்துமஸுக்குமுந்தைய இரவிலும் இந்த “தேவ மலர்” என்ற கதை மலர்ந்து மணக்கும் என்பது நிச்சயமான உண்மை.
இன்னொரு கோணத்தில், கீயிங்கே வனத்தையும் மனிதனின் இதயத்தோடு ஒப்பிடலாம். தன்னைச் சுற்றியுள்ள உலகத்தையும், மனிதர்களையும், நம்புவதன் மூலமும்,அவர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து அவர்களுக்கு மறு வாய்ப்பு அளிப்பதன் மூலமும் நாம் நம் மனதிற்குள்ளேயே ஒரு தேவ வனத்தைச் சிருஸ்டித்துக்கொள்ளலாம். அதேசமயம் தன்னைச் சுற்றியுள்ளவர்களை எப்போதும் நம்பாமல், அவநம்பிக்கையுடன் இருந்தாலோ, ஒளி மிகுந்த தேவ வனம் கூட சட்டென்று இருளடைந்து விடும்.
நம்பிக்கையுடனும், நல்லெண்ணத்துடனும் இருந்தால் ஒரு சிறிய கிழங்கு கூட ஒளி மிகுந்த தேவ மலராக மாறிவிடுகிறது. அவநம்பிக்கையுடனும், அசூயையுடனும் இருந்தால் பிரமாண்டமான, ஒளி மிகுந்த தேவ வனம் கூட இருளடைந்து விடும் என்பதுதான் இந்தக் கதை உணர்த்தும் மறைமுகச் செய்தியாக எனக்குத் தோன்றுகிறது.
கருணை என்பது கிழங்கின் பெயராகவே மிஞ்சி விட்டது என்றார் புதுமைப்பித்தன். இந்தக் உலகில் கருணை என்பது ஒரு கிழங்கின் பெயராகவாவது மிஞ்சி இருக்கிறதேஎன்று பெருமைப்பட்டுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. ஒரு கிழங்குதானே, இந்தக் கதையில் வரும் திருடன் கருணையுடன் மன்னிக்கப்பட காரணமாக இருக்கிறது!
(முற்றும்)