சாட்சி -சிறுகதை

Posted: ஒக்ரோபர் 24, 2012 in வகைப்படுத்தப்படாதது

குட் மார்னிங்
வணக்கம்
தெரிமாகாஸி
ஸியே ஸியே
நன்றி.எப்படி இருக்கீங்க
இப்படி அடுத்தடுத்து முகமன்களை வாங்கி திரும்பி பதில் சொல்வதற்கு முன்பே நாளிதழ்களை எடுத்துக் கொண்டு ஸில்லிங்கை மேஜையில் போட்டுவிட்டு போய்க்கொண்டிருப்பார்கள்.காலையில் இப்படி பலபேரின் முகமன்களோடு ஆரம்பிக்கும் கொடுப்பினையான நாளிதழ் விற்கும் வேலையை கடந்த பத்து ஆண்டுகளாக செய்து வருகிறேன்.அதிகாலை 5 மணிக்குள் வந்துவிடுவேன்.அப்போதுதான் விடிந்ததும் பிரிய மனமில்லாமல் நிலவு தவித்துக் கொண்டிருக்கும்.அங்கொன்றும் இங்கொன்றுமாக மனிதர்கள் முளைத்துக் கொண்டு பேருந்து நிறுத்தத்தை நோக்கி போய்க்கொண்டிருப்பார்கள்.புளோக்குகள் வாரியாக நான் நாளிதழ்களை பிரித்து அடுக்கவும் பேப்பர் பையன் வந்து எடுத்துக் கொண்டு செல்லவும் சரியாக மணி ஆறு ஆகிவிடும்.மேஜை மீது எடுத்து வைப்பதற்க்குள் அருகிலிருக்கும் தென்னை மரத்திலிருந்து வழக்கமாக வரும் அணில் குடுகுடுவென்று ஓடி வந்து புரண்டு எழுந்து ஓடி விடும்.அது இங்கு வருவதற்கு எந்தக் காரணமும் இல்லாமிலிருந்தும் நான் அடுக்கி பிடித்தவுடன் வந்து புரண்டு ஓடினால்தான் அதற்கு திருப்தி போலும்.சனிக்கிழமைகளின் நாளிதழ்களை பிரித்து அடுக்க கொஞ்சம் நேரம் எடுக்கும்.அந்நாள் மட்டும் தென்னை மரத்திலிருந்து ஏறுவதும் இறங்குவதுமாக புரள நேரம் பார்த்துக்கொண்டிருக்கும்.இந்த அணில் மட்டுமல்ல இந்தப்பகுதிகளில் இருக்கும் பெரும்பாலான மனிதர்கள் எனக்கு பரிச்சியமானவர்கள்.
அதிகாலையில் எனக்கு பின்னாலேயே வரும் பங்களாதேஷ் கிளினர் ஸலாம் அலைக்கும் என்பார்.நான் கிறிஸ்துவர் என்று தெரியாமல் தொடந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்.அதனாலென்ன அகமது பாயிடம் பதில் அதற்கு எப்படி சொல்லவேண்டும் என்று தெரிந்துகொண்டு “அலைக்கும் அஸ்ஸலாம்” சொல்லிக்கொள்வேன்.
பையாவின் தொழில் நேர்த்தி அவ்வளவு அற்புதமாக இருக்கும். அவர் தன் துண்டுகளைக் கழற்றிவிட்டு யூனிபார்முக்கு மாறும்போது எல்லாவற்றையும் ஒரே இடத்தில் வைப்பதில்லை செருப்பை தென்னை மரத்துக்கு பின்பக்கம் செடிக்கு அடியில் கூட்டுமாறையும் வைத்து நேரே போய் ஒரு கோப்பி குடிப்பார். அதன் பிறகு வந்து கொஞ்ச நேரத்தில் மனிதர்கள் மேல் படாமல் நாசூக்காக கூட்டிச் சுத்தம் செய்யும் அழகு நேர்த்தியாக இருக்கும்.என்றைக்கும் தன் துணிகளுடன் செருப்பை இதை அங்கேயோ அதை இங்கேயோ வைத்து நான் பார்த்ததில்லை.
அகமதுபாய் பற்றி சொல்லிவிடுகிறேன்.நான் நாளிதழ் விற்கும் புளோக்கில்தான் குடியிருக்கிறார்.அங்காடி கடையில் வேலை,என்ன அப்போதெல்லாம் மேஜைத் தகராறு வரும் அப்படிப்பட்ட நேரங்களில் இவர்தான் தீர்த்து வைக்கும் முக்கியபுள்ளி மாதிரி.ஆனால் இப்போது தகராறு எதுவும் வருவதில்லை.ஒப்பந்தமாகி அது அது தான்பாட்டுக்கு நடந்து கொண்டிருக்கிறது என்பார்.அவர் மனைவி அட்டை பெட்டி செய்யும் தொழில் சாலையில் வேலை செய்கிறார்.இதற்கு முன்பு ஸ்பேர் பார்ட்ஸ் கம்பெனியில் வேலை.கண்பார்வை மங்கி விரலில் பிடிமானம் இல்லாமல் போனபின்பு மைக்ரோ ஸ்கேனிங்கில் பிடிக்க இயலாமல் வேலையை விட்டு விட்டு அட்டைபெட்டி வேலைக்கு செல்கிறார்.அவருக்கு இரண்டு மகள்கள் அதில் ஒரு மகள் மரியம் ஒரு தமிழரைத் திருமணம் செய்து கொண்டது.
தீபாவளி,ஹரிராயா இரண்டு நாட்களிலும் பேரப்பிள்ளைகளுடன் மரியம் அகமது வீட்டிற்கு வந்துவிடும்.அந்த நாட்களில் அகமது பாயை வெளியில் பார்க்க இயலாது.சில நேரங்களில் தன் மனைவி செய்த “குவே”யைக் கொண்டுவந்து அன்பளிப்பாக கொடுப்பார்.வேலை இல்லாத நேரங்களில் காலையில் வெளியில் வந்து தனதிருப்பை வெற்றிடத்துக்கு ஒப்படைத்துவிட்டு வேலையில் கரைந்து நிற்கும் மனிதர் அவர்.
இன்னொருவர் ஜோஸப்.ஒரு இரண்டு மாடி அரை வட்டத்தில் ஓர் அறை எனக் கட்டப்பட்டிருக்கும் மோஸோனெட்டில் குடியிருக்கிறார்.மகள் விமானப் பணிப்பெண்ணாக இருந்து இப்போது டிராவல் ஏஜென்ட் தொழில் செய்கிறார்.ஜோஸப்பும் ரிட்டயர்டு பைலட்தான்.அவர் மனைவி பெயர் மரியா.”ஆன்ட்டி மரியா” என்றுதான் குழந்தைகள் கூப்பிடும்.ஜோஸப்பே என்னிடம் வந்து நாளிதழ் வாங்கும்போது “ஆன்ட்டி மரியா” வந்து பேப்பர் வாங்கிச் சென்றதா என்பார்.
இன்னொருவர் சுந்தரம்.என்னிடம் நாளிதழ் வாங்கியபிறகுதான் மற்ற வேலைகளைத் தொடங்குவர்.அவருக்குஹொக்கீன், தியோச்சோச், காண்டனிஷ் தெரியும்.மகள் மேற்கு ஆஸ்திரேலியா பெர்த்திலிருக்கிறார்.
4 மணிநேர விமானப்பயணம்தான்.மாதம் தவறாமல் ஒரு ஞாயிற்றுக்கிழமை அப்பாவைப் பார்க்க வந்துவிடுவார்.இவ்வளவு விலாவாரியாக நான் சொல்வதற்க்குக் காரணம் மூன்று பேருக்குமே என்னென்ன நாளிதழ்கள் என்று பிரித்து தனியாக கட்டிவைத்துவிடுவேன்.நான் வீட்டிற்கு கிளம்புவதற்கு முன்பு வந்து எப்படியும் வாங்கிக் கொள்வார்கள்.
காலையில் பலரின் பொழுதுகளின் தொடக்கத்தில் முக்கிய சாட்சியாக இருக்கும் நான் ஒரு நாள் ஒரு சீனக்கிழவியின் வாழ்வின் முடிவைப் பார்க்கும் சந்தர்ப்பத்தை என்னவென்று சொல்வது.அன்று ஞாயிற்றுக்கிழமை காலை தாமதமாகவே எல்லோருக்கும் விடியும்.ஒரு நெளிந்த தாறுமாறான வட்டத்தில் சுற்றி வந்து கொண்டிருந்த மூன்று வண்ணத்துப்பூச்சிகளை நெடு நேரமாகப் பார்த்துக்கொண்டிருந்தேன்.நான் கடை விரித்திருக்கும் இடம் முட்டுச் சந்து.ஒரு லோரி உள்ளே நுழைந்தால் வட்டமடித்து திரும்பமுடியாது.பின்னகர்ந்து அதிக தூரம் சென்ற பிறகுதான் திரும்பமுடியும்.
கோப்பிக்கடை வாசலில் சாமான்களை இறக்கி வைத்துவிட்டு டிரைவர் லோரியை பின்னுக்கு சராலென நகர்த்தினார்.நான் டிரைவரையும் லோரியின் பின் அசைவையும் சத்தம் பெரிதாக இருந்தால் நிமிர்ந்து பார்த்தேன்.யோசிக்காமல் எதிரே பார்த்தபடி சரேல் என்று ஒரு சீனக்கிழவி கடக்க முற்பட்டாள்.பின்னோக்கி லோரியை நகர்த்திக் கொண்டிருந்த டிரைவருக்கு பிரேக் போடா சந்தர்ப்பமே கிடைக்கவில்லை.சீனக்கிழவியின் அலறல் கீச்சிட்டு நின்று போனது.நான் கிழவியை பார்க்கவில்லை.அல்லம்மா எ லேடி ,எ லேடி என்று டிரைவரை நோக்கிக் கத்திக்கொண்டே லோரியை நிறுத்த சைகை செய்தேன்.என் வயிற்றில் ஒரு பந்து உண்டானது போல் இருந்தது.பரபரவென்று கூட்டம் கூடிவிட்டது.கிழவி மேல் பின்பக்க சக்கரங்கள் ஏறி இறங்கி விட்டன.தலைப்பக்கம் பார்த்தேன்.ஒருக்களித்துப் படுத்தவாறு கிடந்த கிழவியின் காதிலிருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.உடல் உதறல் எடுத்தபடி ஆடிக்கொண்டிருந்தது.கிழவியை தொட்டு பார்க்கக்கூட யாரும் நெருங்கவில்லை.சில நிமிடங்கள்,திகைப்பிலும் அதிர்ச்சியிலும் எல்லோரும் உறைந்து போய்விட்டார்கள்.
ஓர் இளம் சீனப் பெண் தன் கைக்குட்டையை தூர எறிந்துவிட்டு ஓடிவந்து கிழவியின் தலையை மடியில் வைத்துக்கொண்டு கையில் கிடைத்த அட்டையை எடுத்து விசிற ஆரம்பித்தாள்.அவள் பேத்தியாக இருக்கவேண்டும்.இதுவரை இருவரையுமே நான் பார்த்ததில்லை.கிழவியை பார்த்தேனா என்று ஞாபகப்படுத்திப்பார்தேன்.நினைவுக்கு வரவில்லை.நெற்றியில் வழிந்த ரத்தத்தை துடைத்து விட்டுக்கொண்டே அங்குமிங்கும் கண்களை அலைபாய விட்டுக்கொண்டிருந்தாள் அந்த இளம்பெண்.ஆம்புலன்ஸ் வரும் வரை விசிறிக்கொண்டேயிருந்தாள்.கிழவியின் உடலில் எந்த அசைவும் தெரியவில்லை.போலிஸ்,பிரஸ் என்று கூட்டம் கூடிவிட்டது.ஆம்புலன்ஸில் ஏற்றிவிடப்பட்ட கிழவியுடன் அந்த இளம்பெண் செல்லவில்லை மற்றும் உடைமைகளை எடுத்துக் கொண்டு போக நின்றுவிட்டளா? என்று தெரியவில்லை.டிரைவர்தான் சாலா அவர் வண்டியை நகர்த்துவதை அந்தக்கணத்தில் நான் பார்த்தேன்.பின்னால் ஆள் அரவமற்ற தெரு அவருக்காக காலியாக இருப்பது போல் வேகமாக வண்டியை பின்னுக்கு இழுத்துவிட்டார்.போலிஸ் ஒவ்வொருவராக விசாரித்துக் கொண்டு வந்தார்கள்.கூட்டத்தில் யாரோ ஒருவர் என்னைத் தேர்ந்தெடுத்து எதோ என்னை காண்பித்துச் சொல்ல போலிஸ் என்னிடம் எப்படி நடந்தது என்று விசாரித்துக்கொண்டே ஐ.சி கேட்டார்கள்,அப்போது பார்த்து எப்படித்தான் ஒரு பாதுகாப்பு உணர்வு வந்ததோ தெரியவில்லை.அடிபட்டு சில நேரம் கழித்துதான் அவ்விடத்தை பார்த்ததாகப் பொய் சொன்னேன்.திரும்ப திரும்ப விசாரிக்க ஆரம்பித்தார்கள்.நான் காதில் வாங்காமல் ஞாயிற்றுக்கிழமை விற்காமல் தேங்கிப் போன நாளிதழ்களை அடுக்க ஆரம்பித்தேன்.அந்த இளம் இன்னும் நின்றுகொண்டு என்னையும் போலிஸையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே நடந்து சென்றாள்.
வெயில் உச்சிக்கு வந்த பிறகும் கூட்டம் விசாரித்த வண்ணம் இருந்தது.லோரி நம்பரை நோட் பண்ணிணீங்களா என்ற விசாரிப்புகள்தான் அதிகம் இருந்தன.அன்றைய 4-D -யில் அதிர்ஷ்டத்தை இந்த துரதிருஷ்டம் கொண்டுவரும் கொண்டுவரும் என்று நான் முழுமையாக நம்பி நான் வீட்டுக்கு கிளம்பி போகும் வரை விசாரிப்புகள் தொடர்ந்த வண்ணமிருந்தன.கிழவி கொஞ்ச நாளைக்கு முன்புதான் இங்கு குடிவந்திருக்க வேண்டும் என்று சிலர் சொன்னார்கள்
நான் போன் செய்தவுடன் அடுத்த நொடியில் அட்டென்ட் பண்ணும் நண்பர் சேகரை தொடர்பு கொண்டேன்.சேகர்…சீனக்கிழவி…அல்லம்மா பக்கத்தில் நடந்தது..அனேகமாக இறந்திருக்கவேண்டும் என்றேன்.
மறுமுனையில் சேகர் போலிஸ் விசாரிச்சாங்களா…
நல்லவேளை நீ ஐ.சி கொடுக்கவில்லை.நான் ஒரு கேசில் ஐ.சி கொடுத்து தெரிந்ததைச் சொல்ல போதும் போதுமென்றாகிவிட்டது..
முக்கியமான வேலையை இருப்போம்…அப்போ பார்த்து ஐ.ஒ போன் அடிப்பான்.ஓலை வரும்.டிரைவர் வக்கீல் வெச்சுட்டா வாய்தாதான்..மாற்றி மாற்றி கேள்வி கேட்பார்கள்…எதோ அந்த விடத்துக்கு நீதான் காரணம் என்று குறுக்கு கேள்வி கேட்டு விட்டு வக்கீல் கண்ணில் விரலை விட்டு ஆட்டிவிடுவான்.இதெல்லாம் உனக்கு தேவையா? என்று நல்லவிதமாகப் பேசினான்.
நான் நாளிதழ்களை சுருட்டி எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டுவிட்டேன்.கிழவி கிடந்த இடத்தில சாக்பீஸால் கோடு போட்டுக்கொண்டிருந்தார்கள்.எனக்கு மனதில் உறுத்தல் அதிகமாகிக் கொண்டே இருந்தது.சாட்சி சொன்னால் அந்தப் பேத்திக்கு கூடுதல் பணம் கிடைக்க வாய்ப்புள்ளது என்று மனம் உள்ளுக்குள் கிடந்தது அலறியது.
வீட்டில் நடந்த விஷயத்தைச் சொல்லிக்கொண்டிருந்தேன்.ஐயோ பாவம் கிழவிக்கு விதி முடிந்து விட்டது என்றார்கள்.என் பேத்தி நான் சொன்னதை கேட்டுக்கொண்டிருந்தாள் போல.ஐந்து வயது கூட ஆகவில்லை.. தாத்தா “குருவியெல்லாம் செத்துப்போகுமா” என்றாள்.நான் அவளின் கவனத்தை திருப்ப அதெல்லாம் பறப்பதால் அவரவர் வீட்டில் பத்திரமாக இருக்கும் என்றேன்.செத்துபோவதாக இருந்தால் பேத்தி விடாமல் இல்லை,தாத்தா அவங்கவங்க வீட்டில் போய்தான் செத்துபோகும்.அங்குதான் சொந்தக்காரங்களெல்லாம் அதை எடுத்துப்போய் கடலில் போட்டுவிடுவார்கள்.அதனால்தான் அந்த செத்துப் போன குருவியையும் வெளியில் பார்க்க முடியவில்லை என்றாள்.
எனக்கு சுரிரென்று வலித்தது.வீட்டில் திரும்பவும் நான் வெளியே கிளம்புவதைப் பார்த்து இந்நேரம் எங்கே போகிறீர்கள்? என்றார்கள்.நான் நேரே நாளிதழ் விற்கும் இடத்திற்கு வந்துவிட்டேன்.அகமதுபாய் தனக்குள்ள பேப்பரை அப்போதுதான் வந்து கடைக்காரரிடம் எடுத்துக்கொண்டிருந்தார்.என்ன ஆல்பர்ட் விபத்தாமே?கிழவியை நானும் பார்த்ததில்லை என்றார்.
சாக்பீஸ் கோடு போட்ட இடத்தை லேசான தூறல் அழித்திருந்தது.கால் பார் விட்னஸ் போக்குவரத்து போலிஸ் நம்பரை தொடர்புகொள்ளச் சொல்லி மூன்று கால்களில் ஒரு போர்டு வைக்கப்பட்டிருந்தது.காலையில் நாளிதழில் புரண்டு எழுந்திருக்கும் அணில் தென்னை மரத்திலிருந்து சர சரவென்று தலைகீழாக இறங்கி வந்து தரைக்கு ஒரு சாண் உயரத்தில் நின்றுகொண்டு தீவிரமாக பார்த்தது.புதிய அந்த முக்காலி போர்டில் ஒரு முறை ஓடிப்போய் உருண்டுவிட்டு எழுந்து ஓடியது.
என்னை நோக்கி அந்த சீன இளம்பெண் வேக வேகமாக நடந்து வந்தாள்.நான் போலீசிடம் நழுவியதைக் கேட்கப்போகிறாள் என்று பதிலை மனதிற்குள் உருப்போட்டுக்கொண்டிருந்தேன்.
அங்கிள் அந்தப் பாட்டி இறந்து விட்டாரா?என்றாள்.அதிர்ச்சியை காட்டிக்கொள்ளாமல் சுதாரித்து நீ அந்தக் கிழவியின் பேத்தியில்லையா? என்றேன்.இல்லை அங்கிள் நான் சீனாவிலிருந்து வேலை பார்க்க வந்திருக்கிறேன்.அந்த புளொக்கில் வாடகைக்கு இருக்கிறேன்.ஐயோ! காலையில் நடந்த விபத்து…பாவம் அந்தக் கிழவி என்றாள்.
உங்களுக்கு கிழவி இறந்துவிட்டதா,இல்லையா? என்று தெரியாதா..ஜி.ஹெச் போனால் பார்க்கலாம் என்கிறார்கள்.நான் அங்கு போகிறேன் என்று சொல்லிக்கொண்டே விறு விறுவென நடந்தாள்.ஐ ஆல்ஸோ கம் ,ஐ ஆல்ஸோ என்று அவள் பின்னாலே நானும் நடக்க ஆரம்பித்தேன்..

பின்னூட்டங்கள்
  1. pandiammalsivamyam சொல்கிறார்:

    பாப்பா சொன்னது ” குருவி செத்தால் உறவுகள் கடலில் தூக்கிப்போடும் ” நல்லமனங்கள் சாட்சியாக செய்துகாட்டி தூரலை மழையாக மாற்றும் சக்தி கொண்டவை .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s