நவம்பர், 2012 க்கான தொகுப்பு

நீ சிரித்தால் (சிறுகதை)..11.11.2012 தமிழ் முரசில் பிரசுரமானது

Posted: நவம்பர் 11, 2012 in வகைப்படுத்தப்படாதது

எங்கு வேலை நடக்கிறதோ இல்லையோ கணக்குதணிக்கை வேலை கம்பெனியில் வேலை செய்தால் எப்போதும் வேலை இருந்துகொண்டேயிருக்கும்.கம்பெனி திறப்பதிலிருந்து திடீரென்று மூடிவிடுவது வரைஇங்கு தானே வரவேண்டும் அதனால் வருடம் முழுவதும் வேலைதான்.நான் இப்படி சலித்து கொள்வதற்கு காரணம் இருக்கிறது.தீபாவளிக்கு ஊருக்குச் செல்லவேண்டும் என்று ஒரு மாதத்திற்குச் முன்பே சொல்லிவிட்டேன்.ஆனால் நேற்றுவரை இழுத்தடித்து இப்போது முடியாது என்று கம்பெனி பாஸ் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.
“குடும்பம் ஊருக்குச் சென்றிருக்கிறார்கள்.தீபாவளி கொண்டாடிவிட்டு அப்படியே கூட்டிவந்து விடலாம்” என்று சராசரிக்கும் குறைவான தொனியிலேயே சொன்னேன்.
“உங்க சுமையெல்லாம் ஏன் என் மேல் சுமத்துகிறீர்கள்” என்று உச்ச ஸ்தாயில் கம்பெனி பாஸ் கத்துகிறார்.
எப்போதும் என்னிடம் இப்படி பேசியது கிடையாது.பத்து வருடங்களாக வேலை செய்கிறேன் வேலை அனுமதி சீட்டு,நிரந்தரவாசம்,வீடு வாங்கியது என்று என் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருந்தவர் அவருக்குள்ள சுமையின் கணம் தெரியாமல் கேட்டுவிட்டோமோ…என்று நானும் அமைதியாகிவிட்டேன்.காலை 6 மணியைத் தொடவில்லை ஊரில் தீபாவளி கொண்டாடப்போகிறோம் என்ற நினைப்பை துண்டித்துக்கொண்டு எழுந்துவிட்டேன்.
எனக்கென்னவோ “லோ ப்ளோரில்” வீடு வாங்கியது இயற்கையோடு இயைந்து இருப்பது போல் ரம்மியமாக இருக்கிறது.பால்கனியிலிருந்து தெருவைப் பார்த்தேன்.வரிசை அறுபடாமல் வாகனங்கள் ஒன்றையொன்று வால்பிடித்துக்கொண்டு சென்று கொண்டிருந்தன.வாகனங்களின் இரைச்சலையும் மீறி பறைவைகளின் “கிரீச்,கிரீச்” சத்தம் தூரத்திலிருக்கும் பள்ளிவாசலின் பாங்கு சத்தமும் பெருவிரைவு ரயிலின் “தடக்,தடக்” சத்தத்துடன் விட்டு விட்டு கேட்டுக்கொண்டிருந்தது.
புளோக்கிற்கு கீழே மேஜைகளை சீன செஸ் விளையாடுவதற்கு சீனப் பெருசுகள் தயார் செய்துகொண்டிருந்தார்கள்.சிலர் சூரிய உதயத்தைப் பார்த்து “தைக்கி” பண்ணிக்கொள்கிறார்கள்.சிலர் காலை மெதுநடையை வெயில் ஏறுவதற்கு முன்பே முடித்துவிட அவசர அவசரமாக வேக நடை போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.கோப்பிக்கடை சத்தம் ‘கோபி,தே’ என்று பெருங்குரலெடுத்து ஒய்ந்து மீண்டும் சில நிமிடங்களில் எழுந்து அடங்குகிறது.வயதானப் பெண்கள் அங்காடி கடைகளை நோக்கி கூட்டம் கூட்டமாக போய்க்கொண்டிருக்கிறார்கள்.சீக்கிரம் சென்றால் பிரஷ்ஷாக வாங்கலாம் என்ற வேகம் அவர்கள் நடையை வேகமெடுக்க வைக்கிறது.
தீபாவளிக்கு முதல் நாள் ஊரில் நடக்கும் என் பால்யநினைவுகளை இந்தச் சூழ்நிலையில் எண்ணும்போது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காலமான என் அப்பாவின் நினைவுகளுடன் பின்னிப்பிணைந்து அது மனதில் பந்தாக உருள்கிறது.அது ஒரு நீர்ப்பூவைப் போல் அலம்பி அலம்பி என் கண் முன் வந்து செல்கிறது.தையல்காரர்கள் தீபாவளிக்கு முன்பு என்றுமில்லாமல் பிசியாகிவிடுவார்கள்.அப்பா இதற்காகவே ஜாக்கிரதையாக ஒரு வாரத்திற்குமுன்பே என்னை கூட்டி போய்விடுவார்.தையற்காரர் எங்களை பார்த்தவுடன் மெஷினை கட கடவென நிற்காமல் ஓடவிட்டுக்கொண்டே “என்ன கடைசி நேரத்தில் வர்றீங்க” என்பார்.ஒரு மாதத்திற்கு முன்பே போனாலும் இதையேதான் அவர் சொல்வார்.
“வளர்கிற பிள்ளை கொஞ்சம் பெரிசா தைத்தால்தான் நல்லது” இது அப்பா.
ஏறக்குறைய முழங்கால் அளவிற்கு கால்சட்டை நிற்கப் போகிறது என்று எனக்கு அப்போதே தெரிந்துவிடும்.
“வயத்தை எக்காதே,சும்மாவிடு” இது தையற்காரர்.அதன்பிறகு
கடைத்தெருவுக்கு கூட்டிவந்து சகோதரிகளுக்கு பூப்போட்ட சட்டை ,தாவணி,பூவாணம்,முக்கோண வெடி,சரவெடிஎன்று லிஸ்ட் போட்டு வாங்கி தருவார் முதல்நாள் இரவு உனக்கு எனக்குஎன்று எங்களுக்குள் பாகப்பிரிவினை நடந்துவிடும்.நிசப்தமான இரவில் முதல் வெடிசத்தம் கேட்டதுமே தீபாவளி குதூகலம் ஆரம்பித்துவிடும்.என்னைக் கூட்டிக் கொண்டு அப்பா கிணற்றடி நோக்கி அரைகுறை தூக்கத்தில் தள்ளிக்கொண்டே செல்வார்.சடாரென்று குளிர்ந்தநீரை தலையில் ஊற்றும்போது அன்றுதான் முதன்முதலில் குளிப்பதுபோல் ஒரு உணர்வு, வீடுவரை குளிரோடு சேர்த்து என்னை அப்பா கடிந்துகொண்டே வந்தாலும் காலையில் தீபாவளி என்ற நினைப்பே அத்தனையையும் மறக்கடித்துவிடும்.
விடிவதற்கு முன்பே வெடித்துச் சிதறிய பட்டாசு சிதறல்கள் நடுவே குஷியாக நடப்பது,அம்மாவின் கைருசியுடன் கோழிக்கறி,தியேட்டரில் மேட்னி ஷோ,அம்மாச்சியுடன் பட்டுப்பாவாடை கட்டிவரும் தேவி என பால்ய நினைவுகள் கணத்தன.மொபைல் சிணுங்கியது.ஊர் நம்பர்..மனைவியிடம் நான் ஊருக்கு வரமுடியாது பற்றி நேற்றே பேசிவிட்டதால் தீபாவளியன்று என்ன பிளான் என்று கேட்பதோடு நிறுத்திக் கொண்டாள்…அம்மாதான் நான் போனை வைத்துவிடுவேனோ என்று நான் இல்லாத தீபாவளி பற்றியே பேசிக்கொண்டிருந்தார்.என் இரண்டு வயதுப் பயன் என்னைத் தேடுவதாகச் சொல்லிகொண்டிருந்தார்.”.
போனை வைத்து விட்டாலும் அம்மாவின் கரிசனம் மறுபடியும்என்னை ஊர் நினைவுக்கே இழுத்துச் சென்றது….
கைப்பேசி சிணுங்கியது.ஜாபர் என் பால்ய நண்பன் எனக்கு முன்பே சிங்கப்பூரில் செட்டில் ஆனவன் ஊரில் அடுத்தடுத்த வீட்டில் நாங்கள் பல தீபாவளிகளையும் ஹரிராயாவையும் சேர்ந்து கொண்டாடிய நண்பர்கள்.”ஹலோ ஜாபர் ஊருக்கு போவது கேன்சல்” யெஸ் வீட்டில்தான் இருக்கிறேன்மனைவியிடம் விஷயத்தை சொல்லிவிட்டேன்அம்மாதான் திரும்ப திரும்ப போன் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் பத்து மணிக்குள் நேரே தேக்கா வந்துவிடு தீபாவளி முதல் நாளை கொண்டாடிவிட்டு அப்படியே திரும்பி வரும்போது என் வீட்டிற்கு வந்து ஸ்கைப் ஓப்பன் பண்ணி அம்மாவிடம் பேசலாம்.
இன்னும் ஒரு மணி நேரத்தில் ரெடியானால் ஜாபர் தேக்கா வருவதற்கு சரியாக இருக்கும்.ரெடியாகி கீழே இறங்கினேன்.ஆன்ட்டி கேத்தரின் பின்னாடி வந்து ‘குட் மார்னிங்’ சொல்லிக்கொண்டே கையில் ஒரு மோதிரத்தை வைத்துக்கொண்டு ‘கேன் யூ பை’ என்றார்.இது நான் இங்கு குடியேறிய நாளிலிருந்து நடக்கும் விசயம்தான்.ஏதாவது கையில் கிடைத்த பொருளை வைத்து கொண்டு கேன் யூ பை…கேன் யூ பை …என்று அவர் சொல்வதும் ‘தமோ,தமோ’ என்று ஆட்கள் நகருவதும், நான் அடிக்கடி பார்க்கும் காட்சிதான் ஆனால் ஒரு தடவைகூடயாரும் அவரிடம் பொருளை வாங்கி வெள்ளி கொடுத்து பார்த்ததில்லை.வழக்கம் போல் நானும் தமோ என்று சொல்லிவிட்டு டாக்ஸியில் ஏறினேன்
பச்சை தந்த அனுமதியுடன் சிராங்கூன் ரோட்டில் வாகனங்கள் சீறிப்பாய்ந்த வண்ணமிருந்தன.அங்கொன்றும் இங்கொன்றுமாக கடைகளில் கூட்டமிருந்தது.தேக்கா சென்டரில் எந்தப்பக்கம் நிற்கிறேன் என்று சொல்வதற்கு சலாம்பாய் கடை என்று சொல்லிவிட்டால் பாய்ந்து வந்துவிடுவான்.அவன் புத்தக பிரியன்
தீபாவளி கலைகட்டி விட்டது.மல்லிகையும்,அகர்பத்தியும்,பட்டுப்புடவையும் இளம் காலையும்,விபூதியும் கலந்து தேக்காவே ஒரு வித வாசனை அடித்துக்கொண்டிருந்தது.ஒரு இளம் பொண்ணும்,பையனும் ஒரே மாதிரி ஜீன்ஸில் பைக்கிலிருந்து இறங்காமலேயே பேசிக்கொண்டிருந்தார்கள்.ஒரு பெண் மல்லிகை உதிர உதிர மாமியாரை இன்னும் காணவில்லை என்று தன் கணவரிடம் கைப்பேசியில் பேசிக்கொண்டே அங்குமிங்கும் நடந்துகொண்டே பேசிக்கொண்டிருந்தார்.
ஜாபர் வந்துவிட்டான்.”வா புத்தகக்கடைக்கு..உன் அப்பா எவ்வளவு ஆசையாக நீ கவிஞன் ஆவாய் என்று நகுலன் என்று உனக்கு பெயர் வைத்திருக்கிறார்.நீ ஒரு நாளும் புத்தகங்கள் வாங்கி நான் பார்த்ததில்லை ” என்றான்.அவன் புத்தகங்கள் வாங்கும் வரை காத்திருந்து பெரிய கடைக்குள் நுழைந்தோம்.
“எதுக்கு எப்ப பார்த்தாலும் கட்டம் போட்ட சட்டையே எடுக்கிறீங்க.இளவயதுன்னு நினைப்பா…தொப்பையை குறைக்க வழி பாருங்க”..-இது ஒரு ஆண்ட்டி.
இன்னொருபக்கம் ஒரு இல்லாள் “ஏங்க போன தீபாவளிக்கு சொன்னேனே.அதே பிராண்ட் மைக்ரோ அவன்ங்க…”
“டேய் ரகு கிரடிட் கார்டை ரொம்ப தேய்க்காதே..இந்த மாதம் பில் கட்டியாச்சா”.இது ஒரு அக்கறையுள்ள நண்பன்..
டேய் மாப்ள நகுலன் “தீபாவளிக்கு ஊருக்கு போவதா சொன்ன…இப்பதான் பர்சேஸ் வந்தியா.லீவு கிடைக்கிலடா. என்றான்.நீ என்ன வாங்கினே…என்று கேட்டேன்
“அப்பாவுக்கு ஒரு சட்டை,அம்மாவுக்கு ஒரு சேலை, சித்தப்பாவுக்கு செல் பவுச்..கவர்மெண்ட் டிவிக்கு ஒரு கவர்..
ஜாபார் யாரையோ கூட்டி வந்து தெரிகிறதா என்றான்..எனக்கு கொஞ்சம் நேரம் எடுத்தது..கூட்டத்தில் சந்தித்த முகங்களும்,சந்திக்காத முகங்களும் ஆளுக்கொரு தடவை ஹேப்பி தீபாவளி சொல்லிக்கொள் வதும்.ஒரே.கலகலவென்றிருந்தது.பெருங்கூட்டத்தில் ஆட்களை கூப்பிட ஊர்ப்பெயர்தான் வெகு சுலபம் என்றான் ஜாபர்..
தஞ்சாவூரா…ராம்நாடா,,கோயம்புத்தூரா..சென்னையா…நெல்லையா..என்று சட்டைக்கு விலை ஸ்டிக்கர் மாதிரி நெற்றியில் ஒவ்வொருவரும் ஒட்டிக் கொண்டு வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..ஆனால் எல்லாருடைய பாதத்திலும் கடைசி வரை ஊரின் மண் ஒட்டிக்கொண்டுதானிருக்கிறது…
ஜாபர் சொன்னான்..தீபாவளி எல்லா இனத்தினரும் சேர்ந்து கொண்டாடும் திருவிழா மாதிரி இருக்கிறது நகுலன்.
எல்லாப் பண்டிகைகளுமே நீண்ட பழங்காலத்துடன் அறியமுடியாத தொன்மத்துடன் இணைத்திருக்கின்றன.நாம் முன்னோர் வாழ்ந்ததை நாம் வாழ்கிறோம் என்ற பேருணர்வுதான் இப்பண்டிகைகளின் சாரம் என்றான் அவன் பேசும் கனமான விஷயங்களை புரிந்து கொள்ள அவன் மாதிரி நிறைய படிக்கவேண்டும்
அவனுக்கும் ஒரு பிள்ளை இருக்கிறான் நான் அவனுக்கு ஒரு டிரஸ் எடுத்தேன்.எங்கள் ஊர் ஆட்களை தேடித் தேடி தீபாவளி வாழ்த்து சொல்லிக் கொன்டிருந்தான்
எனக்கு ஊரில் கரண்ட் வந்துவிட்டு உடனே போய்விடுமா-ஸ்கைப்பில் எல்லோரையும் பார்க்கும் வரைக்குமாவது கரண்ட் நிக்குமா என்ற கவலையே ஓங்கியிருந்தது.தினமும் பேசினாலும் தீபாவளி சமயங்களில் பேசுவது மாதிரி வருமா ஜாபரை கூட்டிகொண்டு கிளம்பி விட்டேன்
இருவரும் டாக்ஸியிலிருந்து இறங்கி வீட்டுக்கு செல்ல லிப்டில் காத்திருக்கும்போது ஆன்ட்டி கேத்தரின் மோதிரத்தை அரக்கை அளவில் நீட்டிக்கொண்டு “கேன் யு லைக் திஸ் ,டௌன்ட்டி டாலர் “என்றார்ஜாபருக்கு ஆன்ட்டி கேத்தரின் வரலாற்றை முன்பே சொல்லியிருக்கிறேன்.
“நகுலன் மோதிரம் பித்தளைதான்.ஆனால் சூப்பர் செய்நேர்த்தி.வாங்குடா” என்றான்.நான் அவனை இழுத்துக்கொண்டு வீட்டிற்கு விரைந்தேன்.
கரண்ட் வந்துவிட்டது…ஸ்கைப் வேலை செய்தது.கொஞ்ச நேரம் என் மனைவி.அதன் பிறகு என் பையன் கார்த்தி..தீபாவளிச் சட்டையை அணிவித்து என் அம்மாவின் கைகள் அவனை தொட்டுக்கொண்டிருந்தன.
ஜாபரும் தானும் இருப்பதாக குரல் கொடுத்து அம்மாவை பார்க்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தான்..அம்மா வேண்டுமென்றே முகத்தை காட்டாமல் இருப்பது போல் எனக்கு தோன்றியது.அப்பா இறந்து 2 ஆண்டுகள் சென்று அம்மாவை இன்றுதான் ஜாபர் பார்க்க போகிறான் .ஜாபர் அம்மா..அம்மா என்று குரல் கொடுத்தான்.அவர்கள் கைகள் என் குழந்தை காலிலிருந்து ஆரம்பித்து மெதுவாக முன்னகர்ந்து இடுப்புப்பகுதி வந்தவுடன் இரண்டு விரல்கள் மட்டும் தாவித் தாவி நெஞ்சைத் தொடுவதற்குள் குழந்தை இடைவிடாமல் கிச்சு மூட்டாமலேயே சிரிக்க ஆரம்பித்தான்.ஜாபர் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்தான்.எனக்குத்தான் புரியும் அந்த செய்கை அப்பா என்னிடம் குழந்தை பருவத்தில் செய்யும் “கிச்சு மூட்டு” .அப்பாவின் செய்கையை நினைவுபடுத்தி என்னைப் போல் சிரிக்கிறான்,என்னைப் போல் சிரிக்கிறான் என்றார்கள்.
அம்மாவின் கைகள் மட்டுமே எனக்குத் தெரிந்தன.மறுபடியும் கரண்ட் கட்.. ஸ்கைப் அணைந்து விட்டது..அம்மாவின் கைகள் மட்டும் அணையாமல் மீண்டும் மீண்டும் வந்து கொண்டேயிருந்தது..சமைத்து சாப்பாடு ஊட்டிய கைகள்.கிணற்றுத் தண்ணீரை இறைத்து இறைத்து என்னை குளிக்க வைத்து வைத்து காப்பு ஏறிய கைகள்..உடல் நலம் சரியில்லாமல் போகும்போது நெற்றியைத் தொட்டு தொட்டு இழைந்த கைகள்..இன்று வெறுமையால் மோதிரம் வளையல் எதுவுமில்லாமல்..
ஜாபர் தீபாவளிக்கு போகாவிட்டல் என்ன அடுத்து திருக்கார்த்திகை இப்போதே உன்பாஸிடம். சொல்லி வைத்துவிடு தீபாவளி காலையில் வீட்டுக்கு வந்து விடு என் பையன் உனக்காக காத்திருப்பான் என்று சொல்லிவிட்டு புறப்பட்டான் லிப்ட் வரை சென்றேன்.ஆன்ட்டி கேத்தரின் அங்கேயே உட்காந்திருந்தார்.ஜாபர் தீபாவளி காலையில் வீட்டுக்கு வந்துவிடு என்று மீண்டும் நினைவுபடுத்திவிட்டு “ஹேப்பி தீபாவளி” என்றான்.ஆன்ட்டிக்கும் சேர்த்து ஒரு ஹேப்பி தீபாவளி சொன்னான்.நான் அவனை அனுப்பி விட்டு திரும்பும்போது ஆன்ட்டி கேத்தரின் மோதிரத்தை நீட்டி “கேன் யூ பை பார் மீ” என்றார்.நான் அவருக்குத் கொடுப்பதாக இருந்த அங்பாவ் கவரை வெளியிலெடுத்து “எஸ் ஐ வான்ட் டு பை” என்று மோதிரத்தை வாங்க கையை நீட்டினேன்.எதிர்பாராத ஆச்சரியத்துடன் மோதிரத்தை சின்னதாக நீட்டினார்
நான் வாங்கிக்கொண்டு அங்பாவ் கவரை கொடுத்தேன்.”தேங்க் யூ ,தேங்க் யூ'” என்று சொன்னாள்.லிப்டில் ஏறும்போது திரும்பிப் பார்த்தேன்.ஆன்ட்டி கேத்தரின் கவரிலிருந்து இரண்டு பத்து வெள்ளித்தாள்களுடன் மோதிரமும் இருந்ததைப் பார்த்துவிட்டு என்னைப் பார்த்து இதுவரை நான் சந்தித்திராத ஒரு சிரிப்புடன் “ஹேப்பி தீபாவளி” என்றார்