
இந்தோனேசிய நட்சித்திர விடுதி ஒன்றில் என் நண்பர் மேலாளராக இருக்கிறார். சிங்கப்பூர் வரும்போதெல்லாம், விடுதியில் நடக்கும் சுவாரஸ்யங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார். ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு ஓய்வெடுக்க வந்த பணக்கார வாடிக்கையாளர் பற்றி நண்பர் ஒரு நாள் சொன்னார். அந்தப் பணக்காரரும் பெண்ணும் அறையில் இருந்தபோது, விடுதிக்கு இன்னொரு பெண் வந்தாராம். அந்த பணக்காரர் பெயரைக் குறிப்பிட்டு, தன்னை அவரது மனைவி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, அறை எண் விவரம் கேட்டிருக் கிறார். என் நண்பர் மனதில் ஏதோ அலாரம் அடித்திருக்கிறது. உடனே உஷாராகி, பணக்காரரை இன்டர்காமில் அழைத்து விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று பணக்காரர் என் நண்பரிடம் கேட்க, அறைக்குள் இருக்கும் பெண்ணை சைலண்ட்டாக வெளியேற்றவும் தடயங்களை மறைக்கவும் நண்பர் அவசரமாக இரண்டு பணியாளர்களை அனுப்பியிருக்கிறார். அறையை மின்னல் வேகத்தில் ஒழுங்குபடுத்தி பணக்காரரை அவருடைய மனைவியிடமிருந்து காப்பாற்றியதில் என் நண்பருக்கு பரம திருப்தி. காலத்தால் மறக்க முடியாத இந்த உதவிக்காக காலையில் பணக்கார வாடிக்கையாளரிடமிருந்து தக்க வெகுமதி கிடைக்குமென்று எதிர்பார்த் திருந்த நண்பருக்கு நடந்தது வேறு. அந்த வாடிக்கையாளர் நண்பரை வறுத்தெடுத்துவிட்டாராம். நண்பர் அனுப்பி வைத்த பணியாளர்கள் தடயங்களை வெளியே வீசும் அவசரத்தில், பணக்காரர் ஆசை ஆசையாக ஐவரி கோஸ்டிலிருந்து வாங்கி வந்த ரபூஸ்த்தா (Ivory Coast )காபிக்கொட்டை டின்னையும் வெளியே வீசி விட்டாராம் ,ஆசை மனைவி கோபத்தை விட ரபூஸ்த்தா கோப்பிக் கொட்டை மேல் பிரியம் அப்படி !

‘இசை மேதை பீத்தோவன் தினமும் காலையில் 60 ஐவரி கோஸ்ட் காப்பிக்கொட்டைகளை எண்ணி எடுத்து, அவற்றை நாள் முழுதும் வடிகட்டிக் குடிக்கும் பழக்கம் உடையவர்.தத்துவ ஞானிகளுக்கும், சூஃபிகளுக்கும் போதை தரும் ஒரு வஸ்துவாக காபி எத்தியோப்பியாவிலிருந்து அறிமுகமானது. ஒயின் மாதிரி சாறை வடித்து அருந்திக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் அதை வறுத்துப் பொடியாக்கி உபயோகித்தால் கூடுதல் சுவை தருவதைக் கண்டுபிடித்தார். சூஃபிகளுக்கு மதுவகைகள் விலக்கப்பட்ட பானங்களாக இருந்ததால், காபி அந்த இடத்தை நிரப்பியது. நடுநிசி தியானத்திற்கு எழுந்தவுடன் உடம்பைத் தயார்படுத்தும் காபியின் இடத்தை வேறு எதனாலும் நிரப்ப இயலவில்லை. அரபு மொழியில் Qahwa என்றால் ஒயின், Qawi என்றால் பலம்.பெர்ஷியா, எகிப்து, துருக்கி, ஆப்ரிக்க நாடுகளில் மெக்கா புனித யாத்ரீகர்களிடம் பரவிய காப்பிக்கொட்டை 1511ல் மெக்கா நகர ஆளுனரால் முதன் முதலில் தடைசெய்யப்பட்டது.

Travels in The Orient 1582 என்ற புத்தகம் வெளிவந்த பிறகுதான் காபியின் மகிமையைப் பற்றி ஐரோப்பியர் களுக்கு தெரியவந்தது. ஒயின்ஸ் கலாச்சாரத்தில் கொடி கட்டிப் பறந்துகொண்டிருந்த பிரான்ஸ் காபி அருந்தினால் மலட்டுத்தன்மையும், வாதமும் ஏற்படும் என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது புகழ்பெற்ற பிரான்ஸ் மருத்துவர் ஒருவர் காபி சிறுநீரகக் கல்லையும், ஸ்கார்வி நோயையும் குணப்படுத்துவதாக அறிவித்தார். காபி கிளப்கள் குறைந்த நேரத்தில் அதிக நேரம் பேசிக்கொண்டிருக்கும் கலாச்சாரம் இங்கிலாந்திலிருந்து தொடங்கியது. பீர், ஒயின், விஸ்கி வகைகளைக் குடித்துவிட்டு மட்டையாகிவிடும் விருந்தினர்களுக்கு காபி குடிக்கும் கலாச்சாரம் ஒரு மாற்றுத் தீர்வாக அமைந்தது. காபி தன்னை நிலைநிறுத்த பல தடைகளைக் கடந்து வந்திருக்கிறது. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்வீடன் அரசன் இரண்டாம் Adolf Gustav காபி குடிப்ப தால் உடம்பில் விஷமேறி வரும் என்பதை அறிவியல்ரீதியாக நிரூபிக்க முயன்றார். ஒரு மருத்துவக் குழு அமைத்து, அவர்கள் மூலம் இரண்டு ஜெயில் கைதிகளை ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார்.கைதிகள் காபியைத் தினமும் அதிக அளவில் குடிக்கவைக்கப் பட்டார்கள். கடைசியில் அரசனும், அந்த மருத்துவக் குழுவினரும் இறந்த பிறகும், கைதிகள் உயிர் வாழ்ந்தார்களாம்.பல விதமான தடைகளை அனுபவித்த காப்பிக்கு 1930களில் ஒலிம்பிக் விளையாட்டில் தடை விதிக்கப்பட்டது. 1960களில் ஊக்க மருந்து சோதனையை அறிமுகப்படுத்திய ஒலிம்பிக் கமிட்டி காபியையும் ஊக்க மருந்து லிஸ்ட்டில் சேர்த்தது. ஆனால் காமன்வெல்த் போட்டிகளில் ‘காபி குடிப்பதற்கான ஒரு பானம். ஊக்க மருந்தல்ல’ என்று தடை நீக்கப் பட்டது.
காபிக்கும் கருவுறுதலுக்கும் உள்ள தொடர்புகளை எலிகளை வைத்து ஆராய்ச்சி செய்ததில், கருமுட்டைகளை எடுத்துச்செல்லும் குழாய்களின் தசைஇயக்கத்தை காபி கட்டுப்படுத்துகிறது என்று கண்டுபிடித்தார்கள்.
காஃபின் பற்றிய இரண்டு முக்கியமான புத்தகங்கள் எழுதிய Jack James காபிக்கு அடிமையான சுமார் 12,000 கர்ப்பிணிப் பெண்களின் குழந்தைகள் எந்தக் குறையுமில்லாமல் பிறந்ததை ஆய்வு மூலம் பதிவு செய்தார் .ஜெர்மானியர்கள் அதிகமான பீர்விரும்பிகள் என்று சொல்வார்கள் ஆனால் உண்மையில் அவர்கள் காஃபி பிரியர்களாகவும் விளங்கினார்கள்.இது பீர் பருகலையே புறந்தள்ளியது. பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே இந்த ‘துருக்கிய பானம்’ பற்றிய செய்திகள் வெனிஸ் நகர வணிகர்கள் மூலம் ஐரோப்பாவை எட்டியிருந்தன. பதினேழாம் நூற்றாண்டில் – ஃபிரான்ஸிலும் இங்கிலாந்திலும் காஃபி விற்பனை நிலையங்கள் காஃபி வட்டங்களாகி அரண்மனை மற்றும் மேட்டுக்குடி மக்களிடம் இருந்து நகரங்களில் இருந்த பணக்கார நடுத்தர மக்களுக்கும் பரவியது. ஜெர்மனி ஒரு நாடாக உருவெடுப்பதற்கு முன்னர், தனக்கென அதற்குக் காலனிகள் ஏதும் இல்லை. எனவே காஃபிக் கொட்டைகளை அதிக விலகொடுத்து இறக்குமதி செய்ய நேரிட்டதாக ஜெர்மனி வரலாற்றாளர்கள் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள் .
சிங்கப்பூரில் கோபி-ஒ(பால் கலக்காமல்) அதிலும் சர்க்கரை போடாமல் குடிப்பது தனிசுகம். தேநீர் கசந்தால் குடிக்கமுடியாது.கோபி கசந்தால் அடிநாக்கில் ஒரு சுவை மேலெழும்பும் அந்த தேவாமிர்த சுவைக்காகத்தான் மிக அதிகமான சீனர்கள் பால் கலக்காமல் காபி குடிக்கிறார்கள்.Neolithic காலத்திலிருந்து பால் பொருட்களை சீனர்கள் தவிர்த்து வந்திருக்கிறார்கள். பன்றி வளர்ப்பு அவர்களின் வாழ்வாதாரத் தொழிலாக இருந்தும் ஏன் அவர்கள் பன்றியில் பால் கறக்கவில்லை என்பது ஒரு புதிரான விஷயம். பன்றியின் மடு அதிக அளவில் பாலைச் சேமிக்கும் வசதியை இயற்கையாகவே கொண்டிருக்கவில்லை என்று காரணம் சொன்னாலும், எப்படி அதை விட்டு வைத்தார்கள் என்பதற்கான காரணம் தெரியவில்லை. பால் பொருட்களைக் குறைவான அளவில் உபயோக்கும் பழக்கமே, இதற்கான தேவையையும் குறைத்திருக்கலாம் என்று சொல்கிறார்கள்.கால்சியம் அதிகமுள்ள சோயா பீன் மற்றும் பாலில் உள்ள லாக்டோஸ் சீனர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடியது. மலேசியர் களுக்கும், இந்தோனேசியர்களுக்கும் கூட பால் பொருட்கள் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடியது. மலேசிய, இந்தோனேசியா நாடுகளில் தேங்காய்ப் பாலும், இக்கான் பிளிஸ் மீன் உணவும் பாலிலிருந்து கிடைக்க வேண்டிய கால்சியம் சத்தை ஈடு செய்து விடுகின்றன .பிரெஞ்சு தத்துவ ஞானி Voltaire ‘கோபி-ஒ’(பாலில்லாத காபி) ஒரு நாளைக்கு 50 குவளைகள் அருந்துவாராம். அவர் கோபி ஒ-வைப் பற்றி ‘Black as Devil, hot as gell, pure as an angel, sweet as love’’ என்றார்.
எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ் ‘வடிகால் வாரியம்’ என்ற சிறு கதையில் காபியைப் பற்றி ஒரு குறிப்பில் ‘ஆனந்தமான கசப்பு’ என்கிறார். அது ‘கோபி-ஒ’ வா, ‘கோபி போ’(பால் கலந்தது) வா என்பது தெரியவில்லை .கத்திரி வெயிலில்கூட, வீட்டுக்கு வரும் விருந்தினர்களை ‘காபி சாப்பிடுகிறீர்களா?’ என்று சொல்லும் நம் கலாச்சாரம் இன்னும் மறைந்து விடவில்லை. உணவகத்தில் பயன்படுத்தப்படும் காபி பவுடர் அராபிக் காவா, ரோபாஸ்டாவா? எந்த நாட்டு காபி கொட்டை? சிக்ரி கலந்ததா, கலக்காததா? (சிக்ரி என்பது அதன் வேரை அரைத்துப் பொடியாக்குவது) என்ற விஷயங்களிலெல்லாம் நான் கவனம் எடுத்துக்கொள்வேன்.என் நண்பர் ஒருவர் பிரேக்பாஸ்ட், லஞ்ச், டின்னர் என்று துல்லியமாக உணவு வகைகளை ருசிபார்ப்பவர். Tea Time என்று சொல்வதற்கும் Coffee Break என்று சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்பார். Tea break என்பது பார்ட்டி மனோபாவத்தில் வேலை முடிந்தது என்று எடுத்து கொள்வது Coffee Break அடுத்த வேலை தொடங்குகிறது என்ற உள்அர்த்தமும் உள்ளது’ என்பார். சரிதானோ