அயல் பசி

Posted: ஜனவரி 3, 2021 in வகைப்படுத்தப்படாதது

சிப்பி உணவுகள் சாப்பிடவேண்டுமெனில் கடை தெரிந்தால் மட்டும் போதாது. அதை ஏற்கனவே ருசி பார்த்த, அதன் வகைகள் அறிந்த நண்பர் வேண்டும். இருவோட்டுடலிகள் சிப்பி மட்டி இவைகளை சிங்கப்பூரில் எனக்கு அறிமுகப்படுத்தியவர் நண்பர் ஹாஜாமுகைன். அவர் ஆர்டர் செய்துவிட்டால் தைரியமாக நாம் காரியத்தில் இறங்கலாம். சிப்பியை முள் கரண்டியால் திறக்கும்போது இலகுவாகத் திறந்து வழிவிடவேண்டும். கதவை அடைத்துக் கொண்டு திறக்கமாட்டேன் என்று அடம்பிடித்தால் அது ஏற்கனவே கெட்டுப்போனது. சிப்பிகளை சமைப்பதற்கு முன்பே உப்பு நீரில் நன்றாக அலசி எடுத்து வினிகர் அல்லது எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரில் முக்கி எடுப்பார்கள். அப்போது உயிரோடிருக்கும் சிப்பி கதவைத் திறந்துகொண்டு எட்டிப்பார்க்கும், ஏற்கனவே இறந்து விட்டது திறக்காது. உடனே அதை Discard பண்ணிவிடுவார்கள். சிப்பி மட்டுமல்ல ஊடான், நண்டு இவைகளிலும் ஹாஜா எக்ஸ்பர்ட்.


ஊடான் வாங்கும்போது அது தன் தகுதிக்கு மீறி பளபளவென்று மினுங்கினால் அதில் STPP (Sodium Tripoly Phosphate) கலந்திருக்கிறது என்பார். அதோடு சமையல் செய்தால் உப்பு தூக்கலாக இருக்கும். அதேபோல் அதன் தலையும், உடலும் இணைக்கும் பகுதியில் மஞ்சளாக இருந்தால் அது கெட்டுவிட்டது என்பார். தென்கடற்கரையோரங்களிலிருந்து சென்னை மற்றும் அயல் நாடுகளுக்குச் செல்லும் இறால் மீன்கள் மீது கார்ப்பெட் கிளீன் செய்யும் ரசாயனம் மற்றும் Caustic Soda கலந்த கலவையைத் தூவி விடுவார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். நண்டு வாங்க வேண்டுமெனில் ஆண் நண்டுக்கு காலிலும், பெண் நண்டுக்கு தலையிலும் சதைப்பற்று இருக்கிறதா என்று புரட்டி எடுத்துவிடுவார்.


என் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் ஒரு கவிதை சொல்லிக் கூட்டத்தினரை அசத்திய ஹாஜாவைக் கையோடு கூட்டிக் கொண்டு மனுஷ்ய புத்திரனுடன் கடற்கரைக்கு வந்துவிட்டோம். கடல் உணவுகளை ஹாஜாவே ஆர்டர் செய்தார்.
Sea Bassலிருந்து தொடங்கினோம். Sea Bassஇல் 100 வகையான இனங்கள் உள்ளன. கோழி இறைச்சி வகைகளை வகைக்கு ஒன்றாகப் பெயர் சொல்லி அழைப்பதில்லை. ஆனால் மீனில் அத்தனை வகை களும் உணவகங்களில் மெனுகார்டில் உள்ளன. சிப்பி உணவு Oysterஐ கையோடு எடுத்துவந்தார். ஆனால் மனுஷ் சிப்பியைத் தொடவில்லை. அவருடைய தம்பி அபு கொஞ்சம் டேஸ்ட் பண்ணி னார். Ôஎப்படி இருக்கிறதுÕ என்றேன். ‘சூப்பர்’ என்றார் அபு. ஆனால் சிப்பி இரண்டு மூன்று சாப்பிட்டால் சுவை மட்டுப்படாது. அதை ஒரு மூன்று டஜன்களாவது உள்ளே தள்ளவேண்டும். அதற்குத்தான் அது Gross (144) கணக்கில் ஆர்டர் செய்யப்படுகிறது.


Oyster – மட்டிகள் இந்தியாவில் ஒரு உணவாக சாப்பிடப்படுகிறதா என்று தெரியவில்லை. ஆனால் மேலைநாடுகளில் ஒரு முழு சரிவிகித உணவாகச் சில நாடுகளில் சாப்பிடுகிறார்கள். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் தன்னுடைய இலியானோஸ் வீட்டில் கொடுக்கும் அனைத்து விருந்துகளிலுமே வெறும் ளிஹ்stமீக்ஷீ மற்றும் மட்டிகள் கலந்த உணவுகள் இருக்குமாம். Oyster ‘R’ எழுத்து உள்ள மாதங்களில் மட்டுமே சாப்பிடவேண்டும் என்ற விதி ஏற்படுத்தியிருந் தார்கள். மற்ற மாதங்களில் அவை வெப்பத்தால் சீக்கிரம் இறந்துவிடு மாம். இது குளிர்சாதனப்பெட்டி கண்டுபிடிக்கும்வரை நீடித்தது.


அமெரிக்க கவிஞர் M.F.K.Fisherä ‘‘Poet of the Appetite” என்று சொல்வார்கள். Oyster உணவைப் புகழ்ந்து பல கவிதைகள் எழுதியிருக் கிறார். Oyster அதிக துத்தநாக சத்து, ஒரு டஜன் சிப்பியில் 110 கலோரிகள், A,B,B2,C,D, கால்சியம், அயோடின், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மேக்னீசியம், சல்பர், ஒமேகா-3 என்று கலக்கலாக சத்துக்கள் நிறைந்துள்ள உணவு. ஊரில் எப்படிப் புழக்கத்திற்கு வராமல் போனது என்று தெரியவில்லை.
திடீரென்று ஹாஜாவைக் காணவில்லை. போனில் பிடித்தேன். ‘அப்லோன்’ வாங்க அலைந்துகொண்டிருப்பதாகச் சொன்னார். நாங்கள் சென்ற நேரத்தில் ‘அப்லோன்’ கடை மூடிவிட்டார்கள். நான் ஹாஜாவிடம் ‘‘சிப்பி உணவையே யாரும் சாப்பிடவில்லை. ரிஸ்க் எடுக்கவேண்டாம்Ó என்று டேபிளுக்கு அவரை வரவழைத்து விட்டேன். அப்லோனைப் பச்சையாகச் சாப்பிட்டால்தான் ருசி. அது மனிதக் காது மாதிரியான உருவில் இருக்கும். அது கடலின் ஆழத்தில் ஊர்ந்துகொண்டிருக்கும்போது மேலிருந்து பார்த்தால் ஏதோ குட்டிப் பாறை ஊர்ந்து செல்வதைப் போல் இருக்கும். அப்லோன் கிடைக்காமல் ஆஸ்திரேலியாவிலிருந்து சீனர்கள் இறக்குமதி செய்கிறார்கள். நாங்கள் பதம் பார்த்த பல வகையான மீன் வகைகளைப்பற்றி மனுஷ்ய புத்திரனிடம் பேசிக்கொண்டிருந்தோம். பல வருடங் களுக்கு முன்பு ஒரு உல்லாசப் படகு வாங்கி நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த பகுதிக்கு வந்து ஒரு ரவுண்டு அடித்து இந்தோனேஷியா செல்வதைப் பற்றியும் மனுஷிடம் சொன்னோம். ‘அடடா, நான் சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்பே விற்றுவிட்டீர்களே’ என்று சொன்னார்.
என் நண்பர்களின் படகுப் பயணத்தில் வகைவகையான மீன் களையும் அதுவரை நான் சாப்பிடாத லாப்ஸ்டர் வகைகளையும் ருசி பார்த்துவிட்டுத் திரும்புவோம். சில சமயங்களில் மூன்று நாட்கள்கூட ஆகிவிடும். தாய்லாந்து எல்லையைத் தொட்டுத் திரும்பும்போது ஒரிஜினல் குருப்பர் இன மீன்களை வாங்கி வருவோம். பெரும்பாலும் BASA இன மீன்களே குருப்பர் என்று சிங்கப்பூரில் சில இடங்களில் விற்கிறார்கள்.
சிங்கப்பூரில் ‘எலுமிச்சை சட்ட விதி’ என்ற ஒரு சட்டத்தை அமலாக்கி இருக்கிறார்கள். ஒரு பொருளை Retailer இடம் வாங்கி அது பழுதாக இருந்தால் சட்டப்படி புதுப்பொருள் அல்லது அதற்கேற்ற நஷ்ட ஈட்டுத்தொகை கொடுக்கவேண்டும். தவறினால் வழக்குத் தொடரலாம். ஆனால் உணவுப்பொருட்கள் மற்றும் சேவைத் துறைகளுக்கு மட்டும் இது பொருந்தாது. என் நண்பர் நட்சத்திரவிடுதி சமையல்காரர். சனி, ஞாயிறு தவிர மற்ற நாட்களில் இரவு உணவுக்கு கடைக்கு வந்துவிடுவார். அவருக்கு சீனர்கள் இப்படி அருகிவரும் உணவுகளைச் சாப்பிடுவது பற்றி அங்கலாய்ப்பாக இருக்கும். உண்மையில் கடல் உணவுகளின் எதிர்காலம் சீனர்கள் கைகளில்தான் இருக்கிறது. அவர்கள் உலகில் மூன்றில் இரண்டு பங்கு மீன்களை சாப்பிடு கிறார்கள். அதற்கு முக்கிய காரணம், 400 மில்லியன் சீனர்கள் கடற்கரையோரம் வாழ்கிறார்கள். இது ஜப்பானின் ஜனத்தொகையைவிட நான்கு மடங்கு அதிகம். Yangtze ஆற்றிலிருந்து நீர் மின்சாரம் எடுத்தது போக மீதி வெளியாகும் பாஸ்பரஸ், நைட்ரஜன் கலந்த தண்ணீர் ஜப்பான் கடல் நீரில் கலந்து ஜெல்லி மீன்களை உருவாக்குகின்றன. அவைகளின் படையெடுப்பால் மற்ற கடல் உணவுகள் பாதிக்கப்படுகின்றன என்று ஜப்பான் சீனாவிடம் முறையிட்டது. உடனே சீனா அப்படி உற்பத்தியாகும் ஜெல்லி மீன்கள் அனைத்தையும் கொள்முதல் செய்து சாப்பிடத்தக்க உணவாக ஜெல்லிகளையும் உணவு லிஸ்ட்டில் சேர்த்துவிட்டது. ஜெல்லி மீன்களில் ருசி இருக்காது. ஆனால் ஏதாவது ஒரு பொருளுடன் சேர்க்கும்போது அதன் ருசி அபரிதமாகிவிடும். வேக வைத்தவுடன் ரப்பர் மாதிரி ஆகிவிடும். சொயபீனில் சர்க்கரை கலந்து இதைத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவார்கள்.


இப்படியே எல்லாவற்றையும் சாப்பிட்டுக்கொண்டே போனால் இயற்கை அதைத் தானாக சமன் செய்துவிடும் என்று தாமஸ் Huxley என்ற தத்துவ விஞ்ஞானியின் கூற்று சென்ற நூற்றாண்டில் காலாவதியாகிவிட்டது. ஐரோப்பியக் கண்டத்தில் மூன்றில் இரண்டு மடங்கு மீன்கள் பிடிக்கப்பட்டுவிட்டன. ஆழ்கடலில் மீன்பிடிக்க ஏதுவான தொழில்நுட்பமும் எரிபொருளுக்குத்தான் கேடாக அமைந் தது. 1988லிருந்து ஒவ்வொரு வருடமும் அரை மில்லியன் டன் மீன் பிடிப்பு உலகளவில் குறைந்துகொண்டே வருகிறது. ஓஸோனில் விழுந்த ஓட்டையைக் குற்றம் சொல்ல என்ன இருக்கிறது. மீன்கள் அழிவிற்கு அவைகளை அதிகம் வேட்டையாடி உண்பதுதான் காரணம் என்கிறார்கள். என் நட்சத்திர விடுதி நண்பர் உலக மாநாட்டு நிகழ்ச்சிகளில் சமைக்கப்படும் மீன் வகைகளைப் பட்டியலிட்டார்.


ஸ்காட்லாண்ட் சால்மன்
கோவாவின் வாவல் மீன்
இந்தியக் கடலில் பிடிபடும் Bourgeois Snapper
இந்தோனேஷியாவின் கிளி மீன்
ஜமைக்காவின் Tikpia என்ற வளர்ப்புமீன்


எப்போதாவது ஸ்பெஷல் ஆர்டரில் Nepoleon Wrasseசமைப்பார் களாம். சாதாரணமாக 6 அடி 400 பவுண்டு எடை வரை வளரக்கூடிய மீன் இனம் முக்குளிப்பாளர்களுடன் நெருங்கிப் பழகி சில சமயங்களில் வளர்ப்பு நாயைப் போல் பின்தொடர்ந்து வருமாம். இதன் உதடுகள் சீன உணவகங்களில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
மீனைப்பற்றி விரிவாகப் பேச அந்த நட்சத்திர விடுதி நண்பர் இன்னொரு சீன நண்பரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர் என்னிடம் பேச்சை ஆரம்பிக்கும் முன்பாக மிஸ்டர் Why are Fish so thin?’’ என்று கேள்வி கேட்டார்.


நான் யோசிப்பது போல் பாவனை செய்ததைக் கண்டுகொள்ளாமல் அவரே Because They Eat Fish என்றார். அடுத்து ஒரு கேள்வி என்றார். எனக்கு எக்கச்சக்கமாக மாட்டிக்கொண்ட Feeling வந்துவிட்டது.‘Fisherman OK, ஏன் Fisher Woman இல்லை’என்றார். இப்படியே அவர் கேள்விகளாக கேட்டாலும் என்னுடைய கேள்விகளுக்குப் பல சுவாரஸ்யமான பதில்கள் அவரிடமிருந்தன.

இந்நூலை கிண்டிலில் வாசிக்க

https://www.amazon.in/dp/B08PZDGB66/ref=cm_sw_r_wa_awdo_t1_Hiy8FbMK9M1WT

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s