நான் இப்போதெல்லாம் நண்பர்களுடன் விருந்துண்ணவெளியில் செல்லும் போதும் என் உணவகத்திற்கு வரும்வாடிக்கையாளர்களிடமும் உணவின் சுவை பற்றி பேசுவதுகுறைந்து அதன் நிறம், மணம், தயாரிப்பு பூர்விகம் பற்றிபேசுவதாக நண்பர்கள் குறைபட்டுக் கொள்கிறார்கள். எனக்கே அப்படித்தான் தோன்றுகிறது. ஆனால் நுகர்வுப்பண்பாட்டில் புதிய அசைவியக்கமாக மாறிவரும் உணவுப்பயன்பாடு மற்றும் கலாச்சாரம் பற்றி நான் தேடி தேடி அலைந்து சேகரித்தசெய்திகளை
பகிர்ந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் விட்டுக் கொடுப்பதில்லை, அதன் பூர்வீகத்தையும் வந்து சேர்ந்த காரணங்களையும் பற்றி பேசித் தீர்க்கிறேன். சமூகத்தின்விருப்பங்கள் மதிப்பீடுகள், உணவு உண்ணுதலின் வழி பெரும் மாறுதல்களை சந்தித்துக்கொண்டிருப்பதை நான் சந்தித்த பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை சூழலிலிருந்து அறிந்துகொள்ளும்போது உணவின் பாதை தான் பயணித்த தடங்களில் எத்தனை விதமான சுவடுகளை கால இடைவெளியற்று சென்று திரும்பும் இடங்களின் தொன்மங்களையும் சேர்த்து மீண்டு வந்திருக்கிறது என்பதை நான் விவரித்து சொல்லும்போதெல்லாம் தட்டில் இருக்கும் உணவோடு என் நண்பர்களும் சேர்ந்து பயணிப்பதை கண்டு உணர்ந்திருக்கிறேன்.
கடந்துபோன வாழ்க்கையில் இரண்டு விஷயங்களுக்காக ஏக்கப்பெருமூச்சு எப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறது.கவலைகளற்ற குழந்தைப் பருவம் மற்றொன்று என்றும் வாசம்வீசும் நம் குடும்பச் சமையல் இவைகள் நாம் எங்கு புலம்பெயர்ந்து சென்றாலும் கூடவே வருகின்றன. அவைகள் நமதுமரபின் வேர்களில் நின்று நம் பண்பாடுகளில் ஆலமரமாய்துளிர்த்து நிற்கின்றன,அற்றுப் போகத் தொடங்கியுள்ள பலபண்பாட்டுக் காரணிகள் எங்காவது ஒட்டிக் கொண்டிருக்கும்உணவுக் கலாச்சாரத்தில் மீண்டும் முளைக்க ஆரம்பிப்பதைபல சமயங்களில் உணர்கிறேன், என் வீட்டிற்கு வரும் சீனநன்பணுக்கு மீன் பிரியாணி என்றால் கொள்ளை ஆசை Tenggiri மீன்தான் அதற்குப் பொருத்தமானது பச்சைமிளகாயும் கொத்தமல்லியும் சேர்த்து மசாலா கலவையில்செய்து கொடுத்த அந்த பிரியாணியின் பூர்விகம் மொகலாயர்களின் வழியாகஉலகமெல்லாம் சுற்றித்திரிகிறது, அதன் வாசம் சீனநண்பன் என்னை நினைக்கும் போதெல்லாம் திரும்ப திரும்பவருவதாகச் சொல்கிறான், மலாய்க்கார நண்பர்கள் வீட்டிற்குச்செல்லும் போதெல்லாம் “அஸ்ஸாம் படாஸ் அஸ்ஸாம்படாஸ் என்று எனக்கு அவர்கள் பரிமாறும்போது கேரளாவின் செம்மீன்சோறு வாசனை அவர்களின் விருந்தோம்பலுடன் கலந்து அங்கு வியாபித்திருப்பதை உணர்ந்திருக்கிறேன் .சீனத் தந்தைக்கும் ஜப்பானிய அம்மாவுக்கும் பிறந்த நண்பன் Sueching Hassimotto, தம்பதிகள் வீட்டிற்கு விருந்துண்ணச் சென்றபோது அவர்கள் சூசி ரைஸில்செய்து தந்த ஸ்ப்ரிங் ரோல் மலேசிய ஜப்பான் கலப்பால்உருவான குழந்தை என்று நான் சொன்னபோது “அப்படியா இது எங்கள் பெற்றோர்கள் கற்றுக்கொடுத்த குடும்ப உணவு என்றார்கள் .முப்பது ஆண்டுகளாக சிங்கப்பூரிலிருக்கும் நான்
சீன நண்பர்களின் இனக் குழுக்களை அடையாளம்கண்டு கொள்ள வெகு நாட்கள் ஆனது. இளையர்களிடம் எந்த அடையாளமும் கண்ணுக்குத் தெரியாது , ஆனால் வயது 50 க்கு மேல் உள்ள சீனர்களிடம் குறைந்தபட்சம் அவர்கள் உணவில் எதிர்பார்க்கும்சில அடிப்படைகளை வைத்தே எனக்குஉங்களைத் தெரியும் என்று அவர்களிடம் பெருமிதமாகச் சொல்லி அவர்களைத் திகைக்க வைப்பேன்.தியோச்சா இனத்தவருக்குபச்சைக் காய்கறிகளும் லைட் சோயாசாஸும்மிகவும் பிடித்தமான உணவுகள் ஆவியில் வேக வைப்பதுஅவர்கள் குடும்ப வழி வந்த வழக்கம் ஹக்காவுக்கு கறி அடர்த்தியாக இருக்க வேண்டும், யாராவது நண்பர்கள் அங்காடிக்கடைக்கு “தே “சாப்பிடக் கூப்பிட்டால் YangTaufoo தேடிதேடி எடுத்துத் தட்டில் வைக்கும்அவர்களின் லாவகத்தில் லயித்து நீங்கள் ஹக்காவா என்று கேட்டு அதிரவைத்திருக்கிறேன் சிக்கன் ரைஸ் என்றால் ஹென்னஸிதான். அங்காடிக் கடைகளில் அவர்களின் லாவகமான கோழி வெட்டையும் தேங்காய் சோற்றின் மேல் அவைகளை செதில் செதிலாக அடுக்குவதை பார்த்துக்கொண்டேயிருக்கலாம் ,இவர்கள் அனைவருமே விரும்பும் சில உணவு வகைகள் இருந்தாலும் பரோட்டாவுக்கு தால்ச்சாதான் பெஸ்ட் என்று அவர்கள் சொல்வதைக் கேட்டுத் திகைத்துப்போயிருக்கிறேன் .சிங்கப்பூரில் எந்த பரோட்டாக் கடையில் கறி அடர்த்தியாக இருக்கும் என்பதை சிலர் விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள் .
வெகுசன மக்களின் கூட்டு மன நனவிலியிலிருந்து மரபார்ந்தஉணவுகள் மறைந்து வரும் வேளையில் வட்டாரஉணவுகளின் வரலாற்றை நாம் அவ்வப்போது பேசித்தான்ஆக வேண்டும் ஆனால் அது உலகமெல்லாம் சுற்றி வந்து வாழைக்காய் பஜ்ஜி ,ஜப்பானில் மீன் உள்ளேவைத்த தம்புராவாகவும் சிங்கப்பூரில் ஊடான் வைத்தரோஜாக்காவும் இந்தோ மலாய் ஜப்பானியக் கலப்பாக நம்மை வியக்க வைக்கிறது .
ஹரிராயாவுக்கு பிரியாணி விருந்து கொடுத்தஎனக்கு ஹலால் நண்டு எங்கு கிடைக்கும் என்று தேடித் தேடிகூட்டிச் சென்று விருந்து கொடுக்கும் சீன நண்பர்கள் அன்று மட்டும் எனக்காக மதுபாட்டில்களை ஒதுக்கி வைத்து விட்டுதக்காளி சாறு மிளகாய்ச் சாறு, எலுமிச்சை சாறு மற்றும்முட்டை கொண்டு தயாரிக்கப்பட்ட செஞ்சிவப்பு நிறஓட்டுக்குள் மறைந்திருக்கும் சிங்கப்பூரின் தேசிய உணவுசில்லிக் கிராப்பை அரிசிச் சாதத்துடன் எனக்குவிருந்தாக்கும்போது தன் கவிதையால் நுகர் வின்பத்தை தீவிரமாக காதலித்த மிங் வம்சத்தின் ஜாங் டாங் என்பவரின் கவிதை வரிகள் என் நினைவுக்கு வருகின்றன.
“ஆற்று நண்டுகளைச் சுவைக்க ஒன்று கூடும் நண்பர்களே !!சாப்பாட்டுத் தட்டு அளவுக்குப்பெரிதாக மேல் நோக்கி வளைந்து இளஞ்சிவப்புவண்ண விரல் நகங்கள் மடக்கிய நண்டுகள் உள்ளங்கையை ஒத்திருக்கின்றன . .
கால்களுக்கு உள்ளிருந்து வெளிப்படும் சதை மண்புழுவைப்போல வழவழப்பாகத் தென்படும் ஓட்டுக்குள் பிசுபிசுப்பானசதை பச்சைக் கால்களுடன் சதைத்துண்டுடன் ஒட்டித்தென்படுகின்றன உப்பிட்டுக் கொத்திய வாத்துக்கறி பாலில்சமைத்த ஆரஞ்சு வண்ண முத்துக்களைப் போலஒயினில் மிதக்கும் ரத்தச் சிவப்பு சாரில் ஆக்கியமுட்டைக்கோஸ்தான் இந்த நண்டுக்க் கறிக்கு சாலப் பொருத்தம், “
உருப்படியாக படிமமும் யதார்த்தமும் ஒத்துப் போகும்
கவிதை .
சமைத்தல் உன்ணுதல், சைவம் / அசைவம், சாதாரன உணவு / பெரு விருந்து உணவு /விருப்பம் விலக்கம் புனிதமானது புனிதமற்றதுஎன்று எண்ணற்றக் கூறுகளின் தொகுப்பை சிங்கப்பூர் உள்வாங்கி அதை மறு உருவமாக்கி தன்அடையாளத்துடன் வாழை இலை போட்டு மீ கோரிங் பரிமாறுவதில் பார்க்கிறேன் .
மண்பாண்டத்தில்செய்யப்படும் கிளேபாட்ரைஸ் சாப்பிட்டிருக்கிறீர்களா அரிசிமுழுதும் வெந்த பிறகு கோழி, சீனக்காளான்கள்லோட்கியாஸ் எனப்படும் சீனக் கொத்துக்கறி சோயாசாஸ்நல்லெண்ணெய் கலந்த கூட்டுக்குக் கலவையில் கறுப்பும் வெளுப்பும் கலந்த கிளேபாட் ரைஸ் ஸ்பெயின் நாட்டவரின் பெயல்லா உணவுகளை சாப்பிட்டவர்களுக்கு ஒன்று போல தெரியும் .
கோழிஇறைச்சியை அரைத்து அத்துடன் அரிசிச்சாதம் பாதாம்மற்றும் சர்க்கரை சேர்த்துச் செய்யப்படும் சிரியாவின் உணவுமூன்று நிறத்தில் இருந்ததாக உணவு வரலாற்றுஆய்வாளர்கள் கூறுகிறார்கள் பச்சை நிறத்துக்குகொத்தமல்லித் தழையும் மஞ்சளுக்கு குங்குமப்பூவும், அரைத்த பாதாமுக்கு வெள்ளை நிறமும் என்று கலந்து கட்டிவண்ணம்’ சேர்த்திருகிறார்கள், கோழி ஈரல் பழுப்பு வண்ணத்திற்கும் முட்டையின் மஞ்சள் கரு தங்கநிறத்திற்கும் குங்குமப்பூ பொன்நிறத்திற்கும் என்று வண்ணச் சேர்க்கை நிகழ்ந்திருக்கிறது .
சிலுவைப் போராளிகளிடையே பிரபலமான தங்க நிற உணவுகள் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவைநோய்களைத் தடுக்கும் என்ற ரசவாதத்தில் ஆர்வம் காட்டியநபர்களின் அந்த ஆர்வம் இப்போது சைனாடவுன் முழுதும் செக்கச் சிவப்பாய்,மலாய்க்காரர்களின் பச்சை நீலம் கலந்த குவேக்காளாய் இந்திய முஸ்லிம் கடைகளில் ரோஜாக்காய் சிங்கப்பூரில் கண்ணில் பசிஎடுத்தவர்களின் விருப்பத் தேர்வாய் மிளிர்கிறது .
சர்க்கரை பதனிக் கொழுக்கட்டை எருக்களம்கொழுக்கட்டை இடியாப்ப பக்குவத்தில் பிழிந்த மாவின்நடுவே பாசிப்பயறு வறுத்து அவித்து தேங்காய் சேர்த்துமறைத்து அவிக்கும் மோதகம் போன்ற சங்க கால உணவுகள் சிங்கப்பூர் அங்காடிக்கடையில் அரிசி மாவில் இறால் மற்றும் கருப்புக் காளான்களை உள்ளேவைத்து அவித்து எடுத்த அரை வட்ட கரி பஃப் சூன் கூவேவின் உருவில் உலா வருகின்றன.
புளி மண்டி, புளிக்கரைசலின் என் பால்ய ருசி கோழித்துண்டுடன்இஞ்சி, பூண்டு, மல்லி சீரகம், லெமன் கிராஸ் கலவையில் தேங்காய்ப்பால் சேர்த்து செய்த இந்தோனேஷிய சோத்தோஆயம் சாப்பிடும்போது மீண்டு எழுகிறது .
உணவு வரலாற்று ஆசிரியர் பென் ரோஜர்ஸ்
மொழியைப் போலவே உணவுப் பயணமும் சேரும் இடங்களில் சேர்ந்து ஒன்று இன்னொன்றாக ஆவதும் இல்லாமல் போவதுமாக இயங்கிக் கொண்டேயிருக்கிறது என்கிறார் .என்னுடைய உணவுத் தேடலில் பல நாடுகளில் ருசி பார்த்திருக்கிறேன் ,சிங்கப்பூரில் வந்து கலந்த உணவுகள் ஆயிரம் அவற்றின் தனி தன்மை மாறாமல் இன்னும் இருப்பவை புறப்பட்ட இடத்தில் இப்போது இருப்பதைவிட இன்னும் சிறப்பாக இருக்கிறது என்று சொல்வேன் .துல்லியமான உணவுப் பிரியர்கள் சிங்கப்பூர் தீவெங்கும் நிறைந்திருக்கிறார்கள் அவர்களின் சுவை நாக்குகள் ருசி அறியும் அன்னப் பறவை.
அன்னம் (சோறு)