எப்படி பயணம் செய்தாலும் செங்காங்கில் குடியிருந்தால் மத்திய சிங்கப்பூரைத் தொட அரைமணி நேரம் ஆகும் ,ஆனாலும் செங்காங்கில் குடியேறிய இந்த 10 ஆண்டுகளில் மரங்களும் பூத்துக் குலுங்கும் மலர்களும் நகர நெருக்கடியை மறக்கடித்து பயணக் களைப்பெயெல்லாம் ஓரங்கட்டி விட்டது ,உண்மையில் செங்காங்காங்கை செதுக்கியிருக்கிறார்கள் .முகிழும் முகத்துவாரம் என்று பெயர் வைத்ததில் ஆரம்பித்து , பாபிலோன் தொங்கும் தோட்ட தொன்மத்தை மீள் நினைவு கொள்ளவைக்கும் மிதக்கும் தாவர மேடை பச்சைக் கம்பளத்தில் விரித்த 21 ஹெக்டேர் பூங்காவின் மணி பல்லவம் காலை நேரத்தின் என் பொழுதுகளை தினமும் திறந்து வைக்கிறது . நடையோடு நகரும் ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் அமைக்கப்பட்ட பாண்டான் இலைக் கூட்டம் வீசும் சுகந்த மணம் பொழுதெல்லாம் என் கூட வருகிறது . மரக் கூட்டத்தின் ஊடே குலை குலையாய் நுங்கு தொங்கும் பனைக்கூட்டங்கள் சிங்கப்பூரில் எங்கும் காணாத அற்புதம் காட்சி.
சிங்கப்பூரில் ஆகப் பெரிதான தீயனைக்கும் நிலையம் ,1400படுக்கைகள் கொண்ட மருத்துவமனை வசதி , டால்பின்கள் முக்குழிக்கும் கற்சிலைப் பூங்கா . இத்தனையும் இருந்தாலும் சிறிய அரைவட்டச் சிறகு ,சாம்பல் பழுப்பு நிறத்தில் கறுப்பு வண்ண கூரான அலகுகளுடன் சுற்றும் வால் கதிர் குருவியும் ,பெரியகண் தட்டானும் பூங்காவின் ஹை லைட் ,கோனி ஐலண்ட் பார்க்கில் ஆரம்பித்து ஜூரோங் லேக் கார்டன் வரை 35 கிலோ மீட்டர் தூரத்தில் ஓடி நிற்கும் வட்டப்பாதை ,காலை நேர நடையில் நம்மோடு சில நேரங்களில் கூடவே வரும் வண்ணத்துப் பூச்சிகள் மனங் கவர் மலர்களைப் பார்த்தவுடன் நம்மைப் பிரிந்து சென்று விடும் இதில் உயரமாக பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள், தாழ்வாக பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள், நெடுநேரம் அமராமல் பறந்துக்கொண்டிருக்கும் அதில் மஞ்சள் புல்வெளியாள் வண்ணத்துப்பூச்சி (Common Grass Yellow) உயரமாகப் பறப்பதில்லை. விரைவாகப் பறக்கும் வண்ணத்துப்பூச்சி வகைகளில் ஒன்று. அது அமர்வதைப் பார்ப்பதே கொள்ளை அழகு ,பறந்துக் கொண்டிருக்கும்போது அதன் மேற்புற இறக்கையின் விளிம்பு கறுப்பு நிறத்தில் இருக்கும். அமரும்பொழுது இறக்கையை மடித்து வைக்கிறது.
செங்காங் பூங்கா நடையோரத்தில் பேரரளிப்பூவும் ,நந்தியா வட்டையும் காகிதப் பூவுக்கு இணையாக போட்டி போட்டு கொண்டு பூத்துக் கிடக்கின்றன .என் காலை நடை பெரும்பாலும் ஜாலான் காயூ தூங்கா நகர வீதியின் ஒரு பரோட்டாக் கடையில்தான் பெரும்பாலும் முடிவடைகிறது , ஜாலான் காயு 1930 களில் சிலேட்டர் சாலை அமைக்க காரணமாக இருந்த ராயல் ஏர் போர்ஸ் தலைமை பொறியாளர் மிஸ்டர் உட்டின் மலாய் மொழியாக்க பெயரில்தான் அமைந்தது நான் 90 களில் ஜாலான் காயுவில் உணவகம் நடத்தியபோது அடர்ந்த மரங்களும் ஒத்தையடிப் பாதையில் போக்குவரத்தும் கொண்ட இந்த பகுதி சட் சட்டென்று பரோட்டா தட்டும் ஒலியிலும் காட்டுப்பகுதி சூழலில் தேடி வந்து சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் வருகையிலும் எப்போதுமே உயிர்ப்புடன் இருக்கும் ,இதுவரை கேள்விப்படாத பெய்ர்களை தாங்கி நிற்கும் ஜாலான் காயு தெரு க்களின் பெயர்கள் செங்காங்கின் இன்னொரு சிறப்பு மேற்கு சுமத்ராவின் நடன அசைவுகளான Tari Piring – கோப்பை நடனம் Tari Lilin -உருகும் மெழுகுவர்த்தியின் ஆட்டம் Tari Dulang – Tari Zapin –Tari Serimpi என்று இருப்பிட சூழலையும் ,கலாச்சாரத்தையும் கவனத்தில் கொண்டு பெயர் சூட்டியிருக்கிறது நிலப் போக்குவரத்துஆணையம் .ஆங்கர்வெல் ,காம்பஸ் வெல் , ரிவர் வெல் என்று தொடரும் தெரு பெயர்கள் கடலோடிகளை கவனப் படுத்தும் சொற்கள் .1998 ல் சிங்கப்பூரில் Light Rail Transit கட்ட ஆரம்பித்தபோது,ஏதோ வேண்டாத வேலை இவ்வளவு உயரத்தில் இன்னொரு ரயிலா ? என்ற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டது.ஆனால் புற நகர் பகுதிகளில் புதிய விடுகளில் மக்கள் குடியேறியபோது
LRT பயணத்திலும் அலை மோதும் கூட்டம் .
உயரத்தில் பறக்கும் தொடர் வண்டியிலிருந்து
ஆற்றோரமும் அழகிய பூங்காவும் சூழ செங்க்காங்கை பாருங்கள் அழகு …