ஒப்பிலான் – நெய்தல் வரம்

Posted: ஜனவரி 9, 2021 in வகைப்படுத்தப்படாதது

ஒப்பிலான் “அட ஊர் பெயர் புதுமையாக இருக்கிறதே என்று சிலர் சொல்வதை சில நேரங்களில் எண்ணிப் பெருமிதங்கொள்ளும் தருணங்களில் வழக்குப் பெயர்களாக பல கிராமங்களுக்கு ஒரே பெயர் இடப் பட்டு குழம்பும் நிலையில் தமிழ் நாட்டில் வேறு கிராமங்கள் எதுவும் இந்தப் பெயரில் இல்லை என்பது ஆச்சரியமளிக்கிறது அத்துடன் பெயர் சூட்டியவன் ஒரு புலவனாக இருக்கவேண்டும் என்ற சிந்தனையும் கூடவே எழுகிறது .

தனித் தமிழ் பெயர்களை நாடுதோறும் விதைத்த மொழிச் சலைவையாளர் மறைமலை அடிகளாரின் காலம் (சூலை 15, 1876 – செப்டம்பர் 15, 1950) புகழ் பெற்ற பெயர்ச் சொற்கள்
அனிச்சம், ஆதிரை, இன்பா, ஈழச்செல்வி, எழிலி, ஒண்டொடி, ஓவியா என்பன போன்று பெண்பாற் பிள்ளை களுக்கும், அன்பன், ஆதவன், இனியன், ஈழவன், என்னவன், ஏரழகன், உறங்காப்புலி, ஊரன், ஐயன், ஒப்பிலான், ஓவியன் என்பன போன்று ஆண்பாற் பிள்ளைகளுக்கும் பெயர்சூட்டிய அந்த தனித் தமிழ் புலவர் மன்னார் வளைகுடாகடற்கரைக் கிராமங்களில் கால் பதித்திருப்பாரோ என்ற ஆர்வத்தில்
ஊரில் பழுப்பு நிற காகிதத்தின் சுவடுகளைத் தேடி அலைந்திருக்கிறேன் ,பத்திரப் பதிவுகளில் 1902 வரை ஒப்பிலான் கிராமம் என்றே குறிக்கப்பட்ட பதிவுகளுக்கு முன்னால் எதுவும் இல்லை ,கிளையால் ,நிலத்தால் ,குழுவால் ,காலத்தால் ,பருவத்தால் ,மரபால் பெயர் பெற்ற ஊர்களின் பெயருக்கு மத்தியில் இது ஒரு வினையால் பெயர் கொண்ட ஊராக இருப்பதால் ஆராய்ச்சிக்கு உரியதாகிறது .

பக்கத்து கிராமங்கள் ஒத்தப்பனை ,ஒத்தவீடு என்று எதுகை மோனையில் வரிசைபிடிப்பதும் இது ஒரு புலவரின் கைங்கரியத்தால் பெயர் சூட்டப் பட்டிருக்குமோ என்ற எண்ணத்தை மேலோங்க செய்கிறது .ஊரில் புலவன் புறத்தார் என்ற வகையறாவும் எண்ணிக்கையில் அதிகம் இருப்பதும் இது ஒரு புகழ் மிக்க புலவரின் கிராமமாக இருப்பதற்கு சாத்தியக் கூறுகளை அதிகப் படுத்துகிறது ..வாழ்ந்து மறைந்த கவிஞர் சிங்கப்பூர் இளம்பரிதி ,உதுமான்கனி யிலிருந்து ஆரம்பித்து இன்றுள்ள கவிஞன் சீனி ஷா வரை நூலெடுத்து கவிதைகளின் நுனி காண விழைகிறது மனம் .. ,..இராம நாதபுரத்திற்கு மேற்கே 44 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிறு நிலப்பரப்பே உடைய ஒப்பிலான் கிராமத்தின் தெற்கே பரந்து விரிந்திருக்கும் காடுகளும் கால் புதைக்கும் மணற் பரப்பும் சீறி எழும் மன்னார் வளைகுடா கடல் அலையும் ஒரு பெரும் நிலப்பரப்பில் ஓடி விளையாடிய எங்கள் பால்யத்தின் நினைவுகளாய் என்றும் மிஞ்சி நிற்கின்றன .வெண் கன்னக்குக்குருவான் காலை வேலையில் சீரான இடைவெளியில் “குக்கு” “குக்கு” என்று குரல் எழுப்பும் என்றாவது ஒரு நாள் அந்தப் பறவையை பார்த்து விடலாம் என்று பல முறை முயற்சி செய்துள்ளேன் ம்ஹூம் ..அது ஒரு சிறிய பறவை ,அரிதாகத்தான் பார்க்க இயலும் ஆனால் என் மைத்துனன் ஷாஜகான் அதைப் பல தடவை பார்த்த அதிர்ஷ்டக் காரன் ,காலையில் எழுந்து முதல் வேலையாக காட்டை ரசிக்கும் “காட்டு ஜீவி “ ஷாஜகான் வைத்திருக்கும் கவுதாரிக் கூடு அடிக்கடி அலங்காரம் மாறும் ,கறையானையும் ,சிறு தானியங்களையும் தவிட்டு நிறமும் அழகான கறுப்பு நிற கோடு வயிற்றுப் பகுதியும் கொண்ட கவுதாரிகளுக்கு ஷாஜகான் கொடுக்கும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் .


ஓட விரட்டினால் பறக்காமல் குடு குடுவென ஓடும் கவுதாரிகளை ஷாஜகான்
லாவகமாகப் பிடிப்பதில் கை தேர்ந்தவர் ,அபிராமம் -நத்தம் என் தகப்பனார் பிறந்த ஊர் என் தாயாரின் பிறந்த ஊர் ஒப்பிலான் பள்ளி விடுமுறைக்கு உன் ஊருக்கு வந்தால்
என்னைக் கடற்கரைக்கு கூட்டிட்டு போறியா என்று என் மனைவி சிறுமியாக இருந்தபோது கேட்பேன், கடற்கரை பக்கத்தில் இருந்தாலும் அடர்ந்த உடை மரக் காட்டுப் பகுதி ஒற்றை அடிப்பாதையெல்லாம் என் மனைவிக்கு அத்துபடி , தமிழகத்தில் மிக நீண்ட கடற்கரை கொண்ட மன்னார் வளைகுடா பகுதி ஒப்பிலான் நடை தூரத்தில் உள்ள மாரியூரில் பிறந்தவர் என் மனைவி ..மாரியூரிலிருந்து கடற்கரை வழியாகவேநரிப்பையூர் செல்லும் தூரம் 21 கிலோமீட்டர் ,சர்வசாதாரணமாக நரிப்பையூர் உறவினர் வீட்டுக்கு கடற்கரை வழியாக நடந்து போய் வருவதை என்னிடம் சொல்வார் ,எனக்கு ஆச்சரியத்தைவிட ஆஹா நாமும் நடந்து சென்றால் எப்படி இருக்கும் என்று ஆர்வமாக இருக்கும்.


குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு சங்க இலக்கியங்களில்குறிப்பிடப்படும் தலை விரித்தாடும் தாழையின் பச்சை மடல்கள் பரவி விரிந்துள்ள நீண்ட சுத்தமான இந்தக் கடற்கரைதான் சங்க இலக்கியம் கூறும்
நெய்தலின் நிலமாக இருந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்
பகாசுர பன்னாட்டு நிறுவனங்கள் தீண்டாத வெண்மணல் பரப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு வத்தைகளையும் தோணிகளையும் கொண்டு இன்னும் தன் நிலத்திலிருந்து புலம்பெயரா மீனவர்கள் மாரியூர் வாலி நோக்கம் ,முந்தல் , மூக்கையூர் பகுதிகளில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் . மே மாதம் முதல் அக்டோபர் வரை தீவுகள் சூழ்ந்திருக்கும் இந்தப் பாற்கடலின் அலை வீச்சு கச்சான் காற்றால் அதிரடியாக இருக்கும்,இதனால் வாடைக் காலம் தொழில் போக கச்சான் காலத்தில் தொழில் இருக்காது ,வளைந்து கொஞ்சம் மேவி நிற்கும் மூக்கையூர் பகுதியில் கச்சான் காற்றுக் காலத்திலும் மீன்பாடு செய்ய விசைப் படகுகளுடன் நாட்டுப் படகுகள் நிறுத்தும் வகையிலும், மீன் ஏலக் கூடம், மீன்களை காய வைப்பதற்கான தளம், வலை பின்னும் கூடம், மீனவர்கள் ஓய்வறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மீன்பிடி துறைமுகம் கட்டப்பட்டு முழுமையடைய இருக்கிறது .

இது பல நாள் தேங்கி நின்ற கோரிக்கை ,தென் கடல் வாழ்வின்
நம்பிக்கை … கோதுகின்ற சிறகில் பட்டுத் தெரிக்கும் கடல் அலைத் துளிகளை சட்டை செய்யாமல் நேர் செங்குத்தாய் பாயும் நாரைகளையும் நீல நிற கடல் பரப்பு தொட்டுக் கொண்டிருக்கும் வானத்தையும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் .இராமநாதபுரத்திலிருந்து தூத்துக்குடிக்கு Thiruppullani, Keelakkarai, Erwadi, Sikkal, Valinokkam, Oppilan Road, Kadaladi, Sayalgudi, Vembar, Soorangudi, Vaipar and Kulathoor வழியாக ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1910ல் மிகப்பெரிய ரயில்வே பாதைத்திட்டத்துடன் சர்வே பணிகள் செய்யப்பட்டது ..100 ஆண்டுகள் சென்ற பின்பும் ஒரு திட்ட வரையறை கூட இல்லை ..ஆனால் பாராளுமன்றத்தில் ஒவ்வொரு கேள்வி நேரத்திலும் துணைக் கேள்வி கேட்பார்கள் ,பல ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் பேசிவரும் ஒரு தொன்மையான கதை இது ..ஆனால் 1795 ல் ஆங்கிலேயர்கள் முத்துராமலிங்க சேதுபதியை வீழ்த்தி இராம நாதபுர அதிகாரத்தைக் கைப்பற்றினர் 1801 ல் மங்களேஷ்வரி நாச்சியார் சிவகங்கை ஜமீன் ஆக்கப்பட்டார்.ராணி வேலுநாச்சியாருக்குப்பின் மருது சகோதரர்கள் முறையாக வரி செலுத்திஅதிகாரத்தில் இருந்தனர் .1803 துரோகத்தின் வழி பெரிய உடையத் தேவர் சிவகங்கை ஜமீன் ஆகியதும் திப்பு சுல்தானை வீழித்திய கையோடு ஜமீன் முறையை பிரிட்டிஷார் ஒழித்ததும் நாம் வரலாற்றுப் பாடங்களில் தெரிந்து கொண்ட விஷயம்தான் அதன் பிறகு 1910 ல் திரு நெல்வெலியை உள்ளடக்கிய இராமனாத புரமாவட்டத்தின் வாலி நோக்கம் மாரியூர் ஒப்பிலான் ,வேம்பார் .நரிப்பையூர் மன்னார் வளைகுடா கிராமங்கள் இன்றளவும் ஆடசியாளர்களால் முறையான அடிப்படை வசதி செய்து தரப்படாமல் துரோகங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.


ஆராரோ, ஆரிரரோ
மலட்டாறு பெருகிவர,
மாதுளையும் பூச்சொரிய,
புரட்டாசி மாதம்
பிறந்த புனக் கிளியோ
அஞ்சு தலம் ரோடாம்!
அரிய தலம் குத்தாலம்!
சித்திரத் தேர் ஓடுதில்ல !
சிவ சங்கரனார் கோயிலுல!
காடெல்லாம் பிச்சி!
கரையெல்லாம் செண்பகப்பூ
நாடெல்லாம் மணக்குதில்ல!
நல்ல மகன் போற பாதை…

இந்த நாட்டுப்புற பாடல் மிகவும் பிரசித்தம் வாய்ந்தது ,என் நினைவுக்கு எட்டியவரை பெரும் புயல் காலங்கள் தவிர மலட்டாறு பெருகி ஓடியதே இல்லை ..தண்ணீர் தண்ணீர் சினிமா சொல்லும் கதையில் அப்படியே கடற்கரை சீனை பேக் கிரவுண்ட் டில் வைத்தால் ஒப்பிலான் மாரியூர் ஒரிஜினல் கதையாகிவிடும் . நான் ஊர் சென்ற போது தண்ணீர் லாரிகள் வரிசையாக ஊரைச் சுற்றி சுற்றி வந்து சிண்டெக் டேங்கை நிரப்பி க் கொண்டிருந்தன.. ஊர் கூடி ஊருணிக்கு பாத்தி அமைக்கலாம் ஆனால் ..
இப்போது நாலாம் தலைமுறை இளையர்கள் கலர் துண்டுகளுடன் அரசியலில் களம் காணதுடிப்புடன்இருக்கிறார்கள் ..காத்திருக்கிறார்கள் கிராம மக்கள் .எல்லையற்று பரவியிருக்கும் உடைமரங்கள், மனதோடு ஒட்டிக்கொள்ளும் கடல் காற்றின் உப்பு மன்னார் வளைகுடாவின் கடற்கரை ஓரக் கிராமங்களின் ரேகைகள் அனைத்தும் கடலும்,கடல் சார்ந்த நிலமும் என்று நெய்தலின் தொன்மைக்கு அழைத்துச் செல்லாமல் வறட்சியும், வறட்சியின் அழகியலும் என்று புதுவித நிலத்திணைக்குள் அடங்கி விட்டன ஒப்பிலான் , மாரியூர் ,முந்தல் ,வாலி நோக்கம் கிராமங்கள் அவைகளின் உயிர்ப்பாக கரை வலை இழுக்கும் மீன் பிடிதொழிலாளர்களும் ,பனை மரத் தொழிலாளர்களும் , பிழைப்புக்காக புலம்பெயர்ந்து சென்று ஆண்டுகள் இடைவெளியில் வந்து போகும் சபுராளிகளும் கலந்த கலவையான கிராமச் சூழல் ,50 களில் கரமடி வலை இழுத்த முன்னோடிகளில் சிலரே இப்போது மிஞ்சியுள்ளனர் , நான் சிறுவனாக இருந்தபோது வீட்டுக்கு ஒரு மால் முடிக்கும் கம்பு தாழ்வாரத்தில் சொறுகப்பட்டிருக்கும் ,வாரம் ஒரு முறை கடலாடியிலிருந்து நூல் கொண்டு வரும் ஆட்கள் பின்னிய வலைகளை திரும்ப எடுத்து தோளில் சுமந்து செல்வார்கள் ,கால்களில் இடுக்கிக் கொண்டு சரட் சரட் ஓசையுடன் அனாயசமாக என் ,அம்மம்மா மால் முடிக்கும் வேகமும் நூல் வரும் கிழமைக்காக அடுத்து காத்திருப்பதும் ,அப்போது ஊர் கூடி இழுத்த கரமடி வல்லங்களும் இன்று காட்சிப்பொருட்களாகிவிட்டன ,மடி ஏறிய மீன் கனமாகப் பட்டால் ஊரேசெழித்த காட்சிகளும் ,கடலை வென்றவர்கள் செல்வந்தர்களாக அம்பலக் காரார்களாக இருந்ததும் ..உடை முள் சுமந்த தலை பாரத்தில் தேய்ந்த தாய்மார்களின் பாதச் சுவடுகளையும் இன்றைய இளையர்கள் அறிவார்களா?

பின்னூட்டங்கள்
  1. SARIBU JABEER சொல்கிறார்:

    ஒப்பிலான் பேரை கேட்டாலே மிக மிக சந்தோசம்தான்..என் தந்தையும் ஒப்பிலான்தான்..சம்மாட்டி,,நாகூர்கனி,,,சுல்தான்,,ஆகியோர்களின் மூத்த சகோதர்ர்..

  2. நிஹால் முஹம்மது சொல்கிறார்:

    மிகவும் அழகிய பதிவு, இவ்வூரில் உள்ள எனது பள்ளிப் பருவ நட்புகளை நினைவூட்டுகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s