நட்சத்திர விடுதிகளில் தங்கும் வெள்ளைக்காரர்கள் மலிவான, அதே நேரம் ருசியில் குறை வைக்காத உணவுகளைத் தேடிவரும் இடம் அங்காடிக் கடைகள். நாடு ,இனம், மொழி வாரியாக அடையாளம் கண்டுகொள்வதற்கு சில டிப்ஸ் என்னிடம் இருக்கிறது. இதை நான் பரீட்சித்துப் பார்த்து, கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றிருக்கிறேன்.என் கடைக்குப் பக்கத்தில் நட்சத்திர விடுதி உள்ளது. பகல் நேரங்களில் டல்லான சட்டையும் ஜீன்ஸும் மாலையானவுடன் கலர் கலராக பளபள சட்டையும் ஆண்-ஆண் அல்லது ஆண்- பெண் நண்பர்களாக சாப்பிட வந்தால் அவர் அமெரிக்கர். இதில் முதியவர்கள் ஜோடியாகக் கையில் சிங்கப்பூரின் வரைபடத்துடன் கேமராவோடு வருவார்கள். ஏதோ பிரச்சினை இருப்பது மாதிரி தங்களுக்குள் எந்நேரமும் பேசிக்கொண்டு ஒயின் ஒரு பாட்டில் முடிந்தவுடன் அடுத்தவரை பற்றிக் கவலைப்படாமல் கத்தி சிரிக்க ஆரம்பித்து விட்டால் அவர் ஐரோப்பியர். ரொம்ப சாதுவாக பெரிய மூட்டையை முதுகில் சுமந்துகொண்டு, தான் வார்த்தைகளை உச்சரிக்கும் விதம் சரிதானா என்று சுயபரிசோதனையுடன் கவனமாகப் பேசுபவர்கள் கனடியர்கள். இஸ்ரேலியர்கள் விடுதிக்கு வரும்போது பெரிய மூட்டையுடன் வருவார்கள். ஆனால் இப்போதுதான் ராணுவத்திலிருந்து வந்தவர்கள் மாதிரி பெல்ட், தொப்பி சகிதம் காட்சியளிப்பார்கள். சுலபமாக அடையாளம் கண்டுகொள்ளலாம். Kebab shop எங்கிருக்கிறது என்று கேட்டால் நிச்சயமாக இத்தாலியர்கள்தான் இவர்கள் மூன்று அல்லது நான்கு பேராக ஜோடியாக வந்தாலும் தனியாக வந்தாலும் சேர்ந்தே தங்குவார்கள். அத்துடன் பீர் பாட்டிலுடன் அறைக்குள் இருக்காமல் பால்கனியில் உட்கார்ந்திருந்தால் அவர்கள் பிரிட்டிஷ் ஆஸ்திரேலியர்கள் தரும் அடையாளக் குறிப்புகள் ரொம்ப சுலபமானவை. காலை 8 மணிக்கு பீர் ஓபன் பண்ணி விட்டால் அவர் ஆஸி என்று அடித்துச் சொல்லிவிடலாம். இவர்களுக்கும் நியூசிலாந்துக்காரர்களுக்கும் கொஞ்சம் வித்தியாசம்தான். நியூசிலாந்துக்காரர்களின் உச்சரிப்பும், மீசை வைத்திருக்கும் விதமும் எளிதில் காட்டிக் கொடுத்துவிடும். அத்துடன் பிரிட்டிஷார் மாதிரி fried அயிட்டம் கேட்கும்போது Fish and chips விரும்பிச் சாப்பிடுவார்கள்.
ஒவ்வொரு தேசத்துக்கும் என தனித்தனி பண்பாடு, ரசனை, அடையாளங்கள் இருக்கின்றன. தனது சொந்த அடையாளங்களைத் தொலைத்துவிட்ட ஒரு நாட்டின் பிரஜையின் மனநிலை எப்படி இருக்கும்? மிஸ்டர் Akelloவைச் சந்தித்தபோது அதை உணர்ந்தேன்.தென்ஆப்ரிக்காவின் ஜோஹன்ன்ஸ்பர்க் Gauteng பகுதியைச்சேர்ந்த ஆப்ரிக்கர் Akello.. இவருக்குக் கலாச்சாரத் துறையில் வேலை. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உலகம் பூராவும் சென்று திரும்பு வதற்கு வாய்ப்பு கிடைக்குமாம் ,சிங்கப்பூர் வரும்போதெல்லாம் என் கடைக்கு வந்து விடுவார் ,ஆசிய நாடுகளின் உணவுக் கலாச்சாரங்கள் அவருக்கு அத்துபடி,ஜப்பானியர்கள் சோபா நூடுல்ஸ் சூப்பை சத்தம் போட்டு உறிஞ்சிக் குடிக்கும் பண்பாட்டைப் பற்றி சிலாகித்துப் பேசினார். சூப்பைக் குடித்து முடித்த பிறகு, ool shi neh (நாம் தேவாமிர்தம் என்று பாராட்டுவதுபோல) என்று ஜப்பானியர்கள் மனதார சொல்வார்களாம். இதைப் பற்றி விவரிக்கும்போது அவர் முகத்திலும் சூப் குடித்த ஜப்பானியர் போல ஒரு திருப்தி.
Akello இந்தியாவில் சுற்றிப் பார்த்த பல இடங்களைப் பற்றிச் சிறப்பாகச் சொன்னாலும் அவர் பேச்சில் இந்தியாவில் கழிப்பறைகள்தான் அதிகம் இடம்பெற்றிருந்தன. சீனர்களும் இந்தியர்களும் நகம் வளர்ப்பதைப் போல இந்தோனேசியர்களும் நகம் வளர்க்கிறார்கள் என்றார். ஷாங்காய் நகரில் பழங்கால உணவுக்கலாச்சாரமும், பொருட்களும் தன்னைக் கவர்ந்தாலும் சில இடங்களில் சர்வ சாதாரணமாக எச்சில் பறந்து வருவதையும், ஜப்பான் உணவகங்களிலும், இந்தியக் கோவில்களிலும் செருப்பை வெளியில் கழற்றிவைத்துவிட்டு வரக் கட்டாயப்படுத்தப்பட்டதையும் குறிப்பிட்டார். அவரது நாட்டின் உணவுக்கலாச்சாரம் பற்றிக் கேட்டேன். அவர் உற்சாகம் இழந்தது விட்டார்.. தென் ஆப்ரிக்கர்களுக்கென்று இருந்த பிரத்யேகமான உணவு வகைகள், அவர்களின் தேசம் 16ஆம் நூற்றாண்டில் காலனிப்படுத்தப்பட்ட பிறகு மறைந்துவிட்டதாக ஆதங்கத்தோடு சொன்னார்.போர்ச்சுக்கீசியர்கள்தான் கேப் டவுனில் முதலில் காலடி எடுத்துவைத்தவர்கள். ஆனால் அவர்கள் தென் ஆப்ரிக்காவைக் காலனிப்படுத்தவில்லை. நறுமணப் பொருட்களுக்காக இந்தோனேசியா, ஜாவா செல்லும் தங்கள் கப்பல்களின் ஊழியர்களுக்காக கேப் டவுனில் மோட்டல் மாதிரி உணவகங்களையும் தோட்டங்களையும் டச்சுக் கிழக்கிந்திய கம்பெனி ஏற்படுத்தியது.
இதையே நோக்கமாகக் கொண்டு தென் ஆப்ரிக்காவுக்கு வந்து அதை வெற்றிகரமாகச் செய்து முடித்தவர் “வேன் “தென்ஆப்ரிக்காவில் டச்சுக்காரர்களின் அதிக்கத்தை நிறுவியவர் இவர்தான். அந்தக் காலகட்டத்தில் கேப் டவுனில் Van Reibeeck அமைத்த காய்கறித் தோட்டம் இன்றும் அங்கே உள்ளதாம் .டச்சுக்காலனியாக இருந்த தென் ஆப்ரிக்கா வில் 1658இல் மலேசியாவிலிருந்து அடிமைத் தொழிலாளர்கள் குடியேறிய பிறகு கேப்-டச்சு உணவுக் கலாச்சாரம் வளர்ந்தது. அவர்களுக்குப் பிறகு அந்த நாட்டை காலனிப்படுத்திய ஜெர்மானியர் களும், பிரிட்டிஷாரும் பெரிய அளவில் மேலைநாட்டுக் கலாச்சாரம் அங்கு பரவுவதற்குக் காரணமாக இருந்தார்கள். டச்சுக்காரர்களின் நினைவாக Sausage மட்டும்தான் தென் ஆப்ரிக்க உணவுக்கலாச்சாரத்தில் உள்ளது. பிரான்சில் மதத் தண்டனைகளுக்கு பயந்து தென் ஆப்ரிக்காவில் குடியேறியவர்கள்தான் முதல்நாள் மிஞ்சிய உணவுகளைக் காலையில் சாப்பிடும் பழக்கத்தை ஒழித்து Pudding கலாச்சாரத்தை தென் ஆப்ரிக்காவில் தொடங்கி வைத்தார்கள். மலேசியா அடிமைத் தொழிலாளர்கள் குடியேறிய 200 வருடங்களுக்குப் பிறகுதான் இந்திய அடிமைத் தொழிலாளர்கள் 10 வருட ஒப்பந்தத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். ஆனால் அதற்குப் பிறகும் கள்ளக் குடியேறிகளாகித் தங்கி தென்ஆப்ரிக்காவில் அரிசி உணவுகள் பிரபலமாக இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்களே
காரணமாயிருந்தார்கள் என்றார் .மனம் விட்டுப் பேசும் ஒரு தென் ஆப்ரிக்கர் மண்டேலா பற்றிப் பேசாமல் இருப்பாரா? Akelloவும் பேசினார். மண்டேலாவின் உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்தும் எங்கள் பேச்சு நகர்ந்தது. Pollsmoor ஜெயிலில் மண்டேலா இருந்தபோது அவர் தன் குடும்பத்தாருக்கு தணிக்கையாளர்களின் கவனத்துக்குப் புலப்படாத வகையில் எழுதிய கடிதங்கள் ‘So Foody’ என்கிறார். Hunger for Freedom புத்தகத்தை எழுதிய Anna Trapido. அதில் மண்டேலா தனக்கு டிகிரி காபி தயார் செய்து கொடுத்த ஜெயில் ஊழியர் தியாகி பிள்ளை, கோழிக்கறி சமைத்துக் கொடுத்த பரீத் உமர் இவர்களை நினைவு கூர்ந்துள்ளார். அவருக்குப் பன்றித் தலைக்கறியும், நண்டும் சாப்பிட ஆசையிருந்தாலும் 27 வருடங்களும் காலையில் சோளக் கஞ்சி, மாலையில் சூப்பும் கஞ்சியும், மதியம் வேக வைத்த சோளம் இவைகளைத்தான் ஜெயிலில் கொடுத்திருக்கிறார்கள்.
மண்டேலா தீவு ஜெயிலில் இருந்தபோது சிறைவாசிகள் கடற்கரையில் மீன் சேகரித்து உணவில் சேர்த்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டார்களாம்.
மண்டேலா உணவுகளை ரசித்துச் சாப்பிடுபவராக இருந்தாலும் உணவையே ஆயுதமாக்கிப் பட்டினி கிடந்து கைதிகளுக்குப் பல சலுகைகளைப் பெற்றுத் தந்திருக்கிறார். மண்டேலா விடுதலை யாகி 1994இல் நாட்டின் ஜனாதிபதி ஆனபோது, பிரியாணி சமைப்ப தில் தேர்ந்த ஒருவரை ஜனாதிபதி மாளிகையில் வேலைக்கு அமர்த்த உத்தரவிட்டார். தனது பால்ய உணவான Umpho kogo (பீன்ஸ், பட்டர், ஆனியன், உருளைக்கிழங்கு, சில்லி மற்றும் லெமன் கலந்த மக்காச்சோளக்கூழ்)தான் தனக்குப் பிடித்தமான உணவு என்பாராம். கால்நடைகளுக்குத் தேவைப்படும் மக்காச்சோளத்தை வளர்ப்பதற் காகவே இப்போது ஆப்ரிக்க விளைநிலங்களை இந்தியப் பன்னாட்டு கம்பெனிகள் அபகரித்துப் புதிய முறை காலனியாதிக்கத்தைச் செயல் படுத்தி வருகின்றன. முன்னரே அங்கு பங்களாதேஷ் பல நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து பட்டா போட்டு விட்டதாகவும் சொல்கிறார்கள்.
Akello ஆட்டுவால் கறி தென்ஆப்ரிக்காவில் தனக்கு மிகவும் விருப்பமான உணவு என்றார். சிங்கப்பூரில் உங்களுக்குப் பிடித்தமான உணவை எங்கு சாப்பிட்டீர்கள்? என்றேன்.உங்க கடை பரோட்டாதான் என்றார்