பா.சிங்காரமும் டுரியானும்

Posted: ஜனவரி 13, 2021 in வகைப்படுத்தப்படாதது

ஜகர்த்தாவுக்கும், சுரபயாவுக்கும் அடுத்து இந்தோனேஷியாவின் பெரிய நகரம் மேதான். டச்சுக்காரர்களின் அழகான ரசனையால் உருவான நகரம். எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென்று பூங்காக்கள். நான் இரண்டு தடவை சென்றிருக்கிறேன். இனிப்பான ஜாவானிஸ் கறியுடன் பாடாங்கின் காரம், இந்திய மசாலா கலவையுடன் கலந்த புதுவிதமான சுவை உணவுகள் கிடைக்குமிடம். சாப்பாட்டு மேஜையில் மெனுகார்டை ஓரங்கட்டிவிட்டு அத்தனை முக்கியமான அயிட்டங்களையும் பரப்பிவிடுவார்கள். வேண்டியதைச் சாப்பிட்டுவிட்டு எழுந்து போகும்போது மீதமுள்ளவைகளைக்கணக்கிட்டு பில் கொடுப்பார்கள். இந்தோனேஷியாவே 1900க்குப் பிறகுதான் அந்தப் பெயரில் அழைக்கப்படுகின்றது. மலேனேஷியா, மைக்ரோனே ஷியா, பாலினேஷியா என்று பலவாறு எழுதி வந்ததை அடோல்ஃப் பாஸ்டியன் என்ற ஜெர்மானியர் தன்னுடைய புத்தகத்தில் ‘இந்தோனேஷியா’என்ற பெயரைப் பயன்படுத்த, அதுவே நிலைபெற்றுவிட்டது.மேதான் நகரம் 16ஆவது நூற்றாண்டில் சவூதி அரேபியாவின் மதினா நகரத்தின் பெயரால் மேதான் என்று பெயர் சூட்டப்பட்டது. புயலிலே ஒரு தோணி நாவலில் ப.சிங்காரம் ‘மைதான்’என்ற உருதுமொழிச்சொல் இங்கு பெயராகிவிட்டது என்கிறார்.


சிங்கப்பூரில் லைச்சி மாதிரி salud என்ற பழச்சாறு அனைத்துக் கடைகளிலும் கிடைக்கிறது. சிங்கப்பூரில் சூப் கம்பிங் பிரபலமானது மாதிரி இங்கு சூப் ஆயாம் மீகோரிங்கில் கோழி கலந்து சாப்பிடுவது, எந்த உணவு கேட்டாலும் அதில் நிலக்கடலை தூவித் தருவது எனக்கு மிகவும் வித்தியாசமாகப்பட்டது. அதோடு மேஜை ஓரத்தில் ‘தேபோத்தல்’ ((Tea Bottle) ஓர்டர் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் வந்து உட்கார்ந்துவிடும்.சிங்காரம் 1946இல் இந்தியா திரும்பாமல் மேதானிலேயே தங்கி நாவலை எழுதியிருந்தால் சிறப்பான நாவல் நமக்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இரண்டாம் உலகப் போர் முடியும் தறுவாயில் இடதுசாரிகளின் ஹிட்லிஸ்ட்டில் முதலிடம் பிடித்தவர்கள் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள். பின்பு சுதந்திரம் கிடைத்தபிறகு ஆட்சிக்கு வந்தவர்களும் எழுத்தாளர்களைச் சிறைக்கு அனுப்புவதை தங்களுடைய முதல் கோட்பாடாக வைத்திருந்தனர். இதில் தப்பிப் பிழைத்து Pramoedya Ananta Toer என்பவர்தான் 1995இல் மகஸேஸே விருதுபெற்ற இந்தோனேஷியாவின் ஒரே எழுத்தாளர்தான் .. பா.சிங்காரம் வியாபாரத்திற்கு அடிக்கடி சென்று வந்த பினாங்கில் 1946இல் சேவகா என்ற பத்திரிகையும், சுதந்திர இந்தியா’, ‘சுதந்திரோதயம், ‘யுவபாரதம்’ என்ற பத்திரிகைகள் மலேசியாவிலும், நவயுகம் என்ற பத்திரிகை சிங்கப்பூரிலும் பிரிட்டிஷ் எதிர்ப்புணர்ச்சியை திரட்டிய சுபாஷ் சந்திரபோஸ் தலைமைக்கு ஆதரவுப் பத்திரிகைகளாக வெளியிடப்பட்டு வந்திருக்கின்றன.


ஆனால் ஜப்பானியர் ஆக்கிரமிப்பு, சீனர்களின் கொரில்லா யுத்தம் ,, சுபாஷ் சந்திர போஸின் படைகளின் செயல்பாடுகள் பற்றி ஆங்கிலேயர் பதிவு செய்த ஒரு சிறுபகுதியைக்கூட தமிழில் யாரும் பதிவு செய்யவில்லை. பா.சிங்காரத்தின் அங்கதம், சங்க இலக்கிய, சிலப்பதிகார வரிகளைப் பகடிக்காக வளைத்து நாவலின் பல பகுதிகளில் சுவை சேர்த்திருக்கிறது.நெருஞ்சிப் பூ சேலை, அமுசு பப்பாளிச் சேலை, ஊசிவர்ணச்சேலை, சேலம் குண்டஞ்சு வேஷ்டி, அருப்புக்கோட்டை துண்டு, பரமக்குடி சிற்றாடை கடைகளுக்கு முன்னே அர்ச்சுணன்பட்டி பெண்களின் புல்லுக்கட்டு வரிசை, வலப்பக்கம் சங்கர மூர்த்தியா பிள்ளையின் கோமதிவிலாஸ், அசல் திருநெல்வேலி சைவாள் மண்பானைச் சமையல், கிளப்புக்கடை, அபூபக்கர் தகரக்கடை, கண்டரமாணிக்கம் செட்டியார் லேவாதேவிக் கடை, பாலக்காட்டு ஐயர் காபி கிளப்… என்று சொல்லிக்கொண்டே போகலாம் .அறியா வயதில் வாங்கிச் சாப்பிட்ட அப்பள செட்டியார் கடை மசால் மொச்சை, ராஜாளிப் பாட்டி விற்கும் புளிவடை, தெருப்புழு தியில் உட்கார்ந்து சந்தைப்பேட்டை பெரியாயியிடம் பிட்டும், அவைக்கார வீட்டம்மாளிடம் ஆப்பமும், செட்டி குளத்தங்கரை வள்ளியக்காளிடம் பணியாரமும் இப்படி ஊரின் நினைவுகளில் நாவூறும் விஷயங்களைத் தன் நாவலில் மறைவாக ஊடுருவவிட்டவர்.


மேதானின் உணவைப் பற்றி ஏதாவது எழுதியிருப்பார் என்று துருவித்துருவி படித்துப் பார்த்தேன். பாண்டியன் சாப்பிட எத்தனிக்கும் இடங்கள் அனைத்திலும் ரோக்கோவும் (சிகரெட்) மதுவுமாக முதல் நிலைப்படுத்தி எங்கேயுமே அவனைச் சாப்பிட விடாமல் செய்திருக்கிறார். மங்காத்தா ஸ்டைலில் பாண்டியன் ஊதித் தள்ளிக் கொண்டே யிருக்கிறார்.  யுத்தகால பரபரப்பில் பாண்டியனை எங்காவது சம்மணம் போட்டு சாப்பிட உட்கார வைத்திருந்தால் அது மழுங்கிப் போயிருக்கும் அதனால்தான் மேதான், பினாங்கு உணவுகளைப் பற்றி ஒரு இடத்தில்கூட விரிவாகப் பேசாமல் விட்டுவிட்டார் என்று நினைக் கிறேன். ஆனால் மனுஷன் டுரியான் பழம் பற்றி அசத்தல் குறிப்பு ஒன்றுகொடுத்திருக்கிறார். புருனே, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், மலேசிய நாடுகளில் புகழ்பெற்ற டுரியான் தென்கிழக்காசியாவின் பழங்களின் அரசன். இந்த நாடுகளைக் காலனிப்படுத்திய மேற்குலகினருக்கு பிரிட்டிஷ் இயற்கையியல்வாதி ‘ஆல்பர்ட் ரஸ்ஸல் வாலாஸ்’ அடடா, இதுவல்லவோ இயற்கையின் கொடை என்று அறிவித்த பிறகுதான் அதன் அருமை, பெருமை தெரியவந்ததாம். சிங்கப்பூரில் டுரியான் சாப்பிடுவது ஒரு கலாச்சார நிகழ்வு. டுரியானை வெறியாகச் சாப்பிடும் நண்பர்கள் குழுவில் எப்படியும் ஒரு ஆள் அதை செலக்ட் செய்வதில் எக்ஸ்பர்ட்டாக இருப்பார். அப்படி ஒருவர் என் மைத்துனர் காசிம். அவர் ஊரில் நுங்கு சாப்பிடுவது மாதிரி குலைகுலையாக முன்னால் குவித்து வைத்துக்கொண்டு சாப்பிடவேண்டும் என்பார். டூரியான்சீஸன் சமயங்களில் அதைச் சாப்பிடுவதற்கென்று தேபான் கார்டன் செல்வேன் .


கணக்கில்லாமல் சாப்பிட்டுவிட்டு நுங்கு கோந்தையை எண்ணுவது மாதிரி டுரியான் தோலை எண்ணி சரிபார்த்து சீனர் வெள்ளிவாங்கிக் கொள்வார். டுரியான் நிலத்தில் விழுந்துவிட்டாலும் அதில்சிறுவெடிப்பு வந்தபிறகு சாப்பிட்டால்தான் பழ ருசி கிடைக்கும்,ஆனால் டூரியான் சாப்பிடுவதில் என் கில்லாடி நண்பர்கள் , அது கீழே விழுந்து 6 மணி நேரத்திற்குள் சாப்பிடுவதுதான் சிறந்தது என்கிறார்கள். அங்குமிங்கும் கொண்டுசென்று காசாக்குவதற்கான கொடைக்கானல், குற்றாலத்தில் ஒரு பலாப்பழத்தை வெட்டிவைத்துக்கொண்டு அனைத்துப்பழங்களும் இந்த ருசிதான் என்று மாயாஜால வித்தைகளை டுரியான் பழத்தில் செய்வதில்லை ,சிலர் மோப்பம் பிடித்தே பழம் எப்படி என்றுசொல்லிவிடுவார்கள். சிங்கப்பூர் நட்சத்திர தங்கும் விடுதிகளில் நிலவறையில்தான் டுரியான்கள் அடைத்து வைத்திருப்பார்கள். எம்.ஆர்.டி.யில் கொண்டு செல்லத்தடை. இவையெல்லாம் அதன் வாசனையால் வந்த வினைகள். தாய்லாந்து நாடு புயலுக்குப் பெயர் வைக்கும் பட்டியலில் ‘‘டுரியான் புயல்’ என்று ஒரு பெயரைக் கொடுத்துவைத்திருக்கிறது.
சிங்கப்பூரின் டுரியான் கட்டிடம் உள்பட மேற்சொன்ன விஷயங்கள் டுரியான் எப்படிப்பட்ட ருசியுடையது என்பதை நமக்குச் சொல்லாமல் சொல்லும். அது ஒரு ‘சமாச்சாரத்திற்குப் பெயர் போனதும்கூட. ஜாவனிஸில் ஒரு பழமொழி உள்ளது. ‘‘டூரியான் ஜாத்து சாரோங்நைக். மரத்திலிருந்து டுரியான் விழுந்தவுடன் கைலி மேலே தூக்கும் என்று இதற்கு அர்த்தம்.ப.சிங்காரம் தன்  நாவலில்   அந்த மன்மதபான  லேகியம்   தயாரிப்பு பற்றி சொல்கிறார் , டூரியான் சுளைகளைப் பிழிந்து ரசம் எடுத்துக்கொள்ள வேண்டும். கால்படி ரம்புத்தான், பிசாங்மாஸ், மங்குஸ்தான், வாதுமைப்பருப்பு, முந்திரிப்பருப்பு, பிஸ்தா பருப்பு, குங்குமப்பூ, கற்கண்டு, குல்கந்து, பால், நெய், தேன் இவற்றை சம அளவில் ஒரு ‘தோலா’ எடுத்து விழுது பதமாய் அரைத்து டூரியான் சாற்றில் போட்டு அடுப்பில் வைத்து பாதியாய் சுண்ட வைத்து காலையில் மாலையில் சாப்பிடவேண்டும். வடிவாய் ஒரு மண்டலம் பலன் தெரியும்… என்று எழுதியிருக்கிறார்.திரும்பவும் மேதான் சென்று அங்கிருந்து தொங்கானில் (படகு) பினாங்கு செல்ல அவருடைய நாவல் தூண்டிக்கொண்டேயிருக்கிறது

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s