சுவை விருப்பங்கள்

Posted: ஜனவரி 21, 2021 in வகைப்படுத்தப்படாதது

என் கடைக்குப் பக்கத்தில் பிரைம் மார்ட் இருக்கிறது. சிலநேரங்களில் அங்கு வாங்கிய பொருட்களைக் கூடையுடன் கொண்டுவந்து வைத்திருப்பார் சீன நண்பர் ,ஒரு நாள் அதில் கறுப்பாக அல்வா மாதிரி ஒரு பொருள் இருந்தது. அதைப்பற்றிக் கேட்டபோது You never try? என்று கேட்டுவிட்டு விளக்கம் சொன்னார். ஜெலட்டின் என்ற சீன உணவு, கழுதைத்தோலை கொதிநீரில் நாள்முழுவதும் வேகவைத்து ரோமங்களை அகற்றிய பிறகு அரைத்து எடுத்து கற்கண்டு கலந்து சோயா எண்ணெய், கடலை எண்ணெய் இவற்றைக் கலந்து சவ்வுமிட்டாய் கிண்டுவது மாதிரி கிண்டி எடுத்து, பதமான நிலைக்கு வந்தவுடன் ஒரு மொபைல் போன் சைஸில் வார்த்து காயப்போட்டுவிடுவார்களாம் அதன் 200 கிராம் 31.20 வெள்ளி விலை என்றார். சாப்பாட்டுக்குப் பின் இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ஈரல், கிட்னிகளுக்கு அதிகம் வேலை இருக்காது என்றார்.


எப்போதுமே அவர் பேசும்போது சீனாவை விட பிரான்ஸ்தான் உலகில் சமையல் கலையில் உலகிற்கு வழிகாட்டி என்ற பெருமிதம் பொங்கி வழியும். இத்தாலியிலிருந்து ஆட்களைக் கடத்திக்கொண்டு போய் சமையல் கற்றவர்கள் பிரான்சுக்காரர்கள் என்று ஒரு பேச்சும் உள்ளது ,இருந்தாலும் சமையல் பற்றி மிக அதிகமான குறிப்புக்கள் பிரான்சுக்காரர்களிடம் தான் குவிந்து கிடக்கிறது. அவரிடம் ஒரு நாள் ‘நீங்கள் கருவாடு சாப்பிட்டதுண்டா? என்றேன். ‘பழைய சாக்கு மூட்டைமாதிரி வாசனை அடிக்கும் அதை எப்படி சாப்பிடுகிறார்கள்?’ என்று திருப்பிக் கேட்டார்.

வடகொரிய அதிபர் கிம்ஜான் இறந்தபிறகு ஒரு செய்தி படித்தேன். அவரிடம் 10 வருடமாக வேலை செய்த சமையல் நிபுணர் Kenji Fujimoto ஜப்பானுக்குத் தப்பிச் சென்று ஒரு பேட்டி கொடுத்திருந்தார். பெரும்பாலும் சதாம் வீழ்ந்த பிறகும், கடாஃபி வீழ்ந்த பிறகும் அவர்களுக்கு சமையற்காரர்களாக இருந்தவர்கள் எப்படியாவது தப்பித்துவிடுகிறார்கள். இவர் வடகொரிய அதிபர் குடிக்கும் அமெரிக்க மதுபான வகைகள் ஜானிவாக்கர் ஹென்னஸி XO மற்றும் அவருடைய பிரான்சு ஒயின் சீன, மலேசியப் பழவகைகள் மற்றும் இத்யாதி ரகசியங்களைச் சொல்லிவிட்டு ஜப்பானிய Sashimiக்கு அவர் அடிமை என்கிறார். இதில் அவருக்குள்ள பிரச்சினை, அந்த மீனை அவர் சாப்பிடும்போது அதன் வாய் மற்றும் வால் துடித்துக் கொண்டிருக்க வேண்டுமாம் செதில்களையும் மற்ற உறுப்புகளையும் வெட்டி சுத்தப்படுத்தும்போது அதன் உயிர் போகக் கூடிய பகுதிகளை மட்டும் விட்டுவிட்டு, வெட்டி எடுத்துக் கொடுப்பது இவருக்கு நரக வேதனையாக இருந்திருக்கிறது. என்றாவது மீன்அசைவற்றுக் கிடந்துவிட்டால் ஒரு கோபப் பார்வையுடன் Get lost என்று வெளியே போய்விடச் சொல்லி சத்தம் போடுவாராம் .இது மேலும் விபரீதமாக முடிவதற்குள் தப்பித்துவிட்டதாகப் பேட்டி கொடுத் திருந்தார். உணவைச் சமைக்கும்போது அதில் உள்ள உயிர்த்தன்மை அழிகிறது, சமைத்த உணவு சாவை அழைப்பதற்கு சமம். தெரிந்தும் தெரியாமலும் பல நுண்ணுயிர்கள் அழியும் சமைத்த உணவு உடலுக்கு ஏற்றதல்ல என்ற ராமகிருஷ்ணரின் கொள்கை வடகொரிய அதிபருக்குத் தெரிந்திருக்கிறது.உயிருடன் அல்லது பாதி உயிருடன் சாப்பிடுவது சில நாடுகளில் சாதாரண உணவுப் பழக்கமாக இருக்கிறது. பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளில் Baalut என்ற உணவுகள் சாதாரண கையேந்திபவன்களில் கூட கிடைக்கின்றன. அது ஒரு கால் முளைத்த முட்டை என்று சொல்கிறார்கள். முட்டையை சில வாரங்கள் மண்ணுக்குள் புதைத்து வெளியிலெடுத்து வேகவைத்து தருவார்கள். பாதி வளர்ந்த எலும்புகள் சாப்பிட மொறுமொறுவென்று இருக்குமாம்.

சீனாவில் Baby mice Wine மிகவும் பிரபலமான சூப். இரைதேடச் சென்ற தாய் எலியை ஏமாற்றிவிட்டு பிடிக்கப்பட்ட பிறந்து சில நாட்களே ஆன எலிக்குஞ்சுகள் – இதன் எலிக்குஞ்சு பாதிக்கண் திறந்த நிலையில் இருப்பதுதான் மிகவும் முக்கியம். இல்லாவிட்டால் ஒரு ருசியும் இருக்காதாம். ஆனால் இதைக் குடித்தவர்களிடம் விசாரித்தால் மண்னெண்ணெய் வாடை அடிக்கும் என்று சொல்கிறார்கள். இதே மாதிரிதான் வாத்து முட்டை ஊறுகாய் பிலிப்பைன்ஸில் பிரபலமானது. குஞ்சு வெளியே எட்டிப்பார்க்கும் நேரமாகப் பார்த்து பச்சை மிளகாய் உப்பு கலந்து Omlette போட்டுத் தருவார்கள்.ஜப்பானின் Shiokooa கணவாய் மீனை சமைக்காமல் கரைசலில் ஊறவைத்து குடிப்பது, மெக்ஸிக்கோவில் பச்சை மீனை எலுமிச்சை சாற்றில் இரவு முழுதும் ஊறவைத்து, அடுத்த நாள் எடுத்து சாப்பிடுவது. இதற்கு Red Snapper மீன் வகைதான் பொருத்தமானது என்கிறார்கள். கோழி சூப்பில் ஆந்தைத் தலைகளை மட்டும் வெட்டிப்போட்டு ஆந்தை சூப் என்று விற்பனை செய்வதைக் கட்டுப்படுத்தி இருப்பதாக இப்போது சீனாவிலிருந்து செய்தி வருகிறது .

Mr.Bean படத்தில் வரும் Raw Beef காட்சிகள் நகைச்சுவைக்காக எடுக்கப்பட்டவை அல்ல. உண்மையில் அது Steak Tartare. நடிகை Angelina Jolie கம்போடியா, தாய்லாந்து செல்லும்போது கலோரி குறைந்த புரோட்டின் அதிகமுள்ள கரப்பான்பூச்சி, புழுவகைகளைத் தான் விரும்பிச் சாப்பிடுவாராம். பூச்சியியலின் (Entomophagy)படி 1462 புழு வகைகள் சாப்பிட உகந்தவை என்கிறார்கள்.
பாப்புவா, நியூகினியில் மரத்திற்கு அடியில் ஊறும் எறும்புகளைப் பிடித்து விற்பது பெரிய வியாபாரம் Sago Norms சாப்பிட அவ்வளவு மொறுமொறுப்பாக இருக்குமாம். தாய்லாந்தில் Rice Bugs சாப்பிடாதவர் களே இல்லை எனலாம். இது கரப்பான் பூச்சி மாதிரி இருக்கும். ஆனால் நிறம் வெள்ளை. அரிசிதான் சாப்பிடும் உணவு. அரிசியில் தலையை விட்டு ஒரு உறிஞ்சு உறிஞ்சிவிட்டு தலையை சிலிர்த்துக் கொண்டு எழும் அழகே தனி என்பார்கள் அதை அப்படியே பிடித்து
பொரித்து சாப்பிட்டால் ருசியோ ருசிதானாம் .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s