மார்ச், 2021 க்கான தொகுப்பு

யாதும் ..பா .சிங்காரம் விருது

Posted: மார்ச் 5, 2021 in வகைப்படுத்தப்படாதது

கல்லூரி நாட்களில் கட்டம் கட்டி வரும் மெட்ராஸ் டைரியை தவற விடாமல் வாசிக்கும் எனக்கு அதை எழுதியவரே என் முன்னால் வந்து நின்ற போது இன்ப அதிர்ச்சியாக இருந்தது ,சென்னை மாநகர் குறித்த வரலாற்றை சாமானியரும் படிக்கும் வண்ணம் கதைகளாய், நிகழ்வுகளாய் எழுதி, ஆவணப்படுத்தி, தமிழ் நாட்டின் இன்றைய தலைநகர் குறித்து பெருமிதம் கொள்ளச் செய்த திரு முத்தையா நீங்கதானே எழுத்தாளர் ஷா நவாஸ் ,உங்களைச் சந்திக்கத்தான் வந்தேன் என்றார் .பல சிறந்த மனிதர்களை எனக்கு அறிமுகம் செய்த திரு அருண் செங்குட்டுவன் அவர்களின் மூலமாகத்தான் என்னைச் சந்திக்க வந்திருந்தார்கள். மெட்ராஸ்டைரியைப் பற்றி என் நினைவில் நின்ற விஷயங்களையெல்லாம் நான் சொல்ல , புன்னகையுடன் ஆமோதித்துக் கொண்டே தான் தென்கிழக்காசியாவின் வரலாறு பற்றிச் சில செய்திகளை தொகுப்பதற்கு சிங்கப்பூர் வந்துள்ளதாகச் சொன்னார்கள் ,திரு சாமுவேல் துரைசிங்கத்தை சந்திக்க அழைத்துச் சென்றேன் , 1930 களில் தரவுகள் இல்லாமல் வெற்றிடமாக தான் நினைக்கும் சில நிகழ்வுகளைப்பட்டியலிட்டார்கள் . தொடர்ந்து அது பற்றிய தகவல்களுடன் பல தடவை உரையாடிவந்தார்கள் ,அவர்கள் மறைவு .வெளி வர வேண்டிய பல வரலாற்று ஆவணங்களை நாம் இழந்துவிட்ட தருணமாக நான் உணர்ந்தேன்.இளம் வயதிலேயே உங்கள் பாரம்பரியத்தை மதித்துக் காப்பதற்கும், நீங்கள் வாழும் இடத்தைப் பற்றியும் உங்களுக்குக் கற்பிக்கப்பட்டுவிட்டால் அவற்றை நேசித்துப் பேணுவீர்கள். நீங்கள் படிக்கும் கல்வி அதைக் கற்றுத்தராமல் வெறுமனே அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் வர்த்தகத்தையும் கற்றுக்கொடுத்தால், உங்கள் சொந்த ஊரின் பாரம்பரியம், உங்கள் மாநிலம், உங்கள் நாட்டின் பாரம்பரியமெல்லாம் உங்களைப் பொறுத்தவரை அர்த்தமற்றவையாக இருக்கும். அதனுடன் உங்களுக்கு எந்தத் தொடர்பும் இருக்காது” திரு முத்தையா அவர்களின் வார்த்தைகள் என் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன .கோம்பை S அன்வர், அப்படிப்பட்ட மிகச் சிறந்த வரலாற்று ஆய்வாளர் முத்தையா அவர்களுடன் 25 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு நிலைகளில் உடன் பணியாறறியவர். தமிழ் முஸ்லிம்களின் வரலாற்றை சித்தரிக்கும் “யாதும்” என்ற அன்வரின் ஆவணப்படத்தை முத்தையா அவர்களே வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது .


அசைட் என்று சென்னையை மையமாகக்கொண்டு வெளிவந்த ஆங்கிலப் பத்திரிகையில் ஃபிரீலான்ஸ் பத்திரிகையாளராகவும், புகைப்படக் கலைஞராகவும் தனது ஊடகப் பயணத்தை துவக்கியவர் இன்று “வரலாற்றை” பதிவு செய்வதையும் ஆய்வாளராக தென்னிந்திய முஸ்லிம் வரலாற்றை ஆய்வு செய்வதயும் குறிப்பாக பெரிதும் தவறுதலாக எழுதப்பட்ட, புரிந்து கொள்ளப்பட்ட, முஸ்லிம் வரலாற்றில் கோம்பை அன்வர் கவனம் செலுத்தி வருகிறார் கி.பி 1600-ல் இருந்து கி.பி 2000 வரையிலான சென்னை வரலாற்றைத் தொகுத்தளிக்கும் “Madras Gazateer Project”-ல் அவரும் ஒரு பங்களிப்பாளர். தஞ்சை “பெரிய கோவில்” பற்றிய குறும்படங்களை இந்திய தொல்லியல் துறைக்காக எடுத்திருக்கிறார் கருட வாகனத்தில் பெருமாள் எடுத்துச் செல்லப்படும் காட்சியுடன் மேளம் முழங்க ஊர்வலம் சென்று அங்குள்ள மசூதியைத் தாண்டிச் செல்லும் காட்சியுடன் துவங்கும். அந்தக்குறும்படம் தமிழக இஸ்லாமியர்களின் வாழ்க்கையையும் வழிபாட்டையும் சித்திரிக்கிறது பல நூறு ஆண்டுகளுக்கு முன் குறுமிளகு, ஏலக்காய் வர்த்தகத்தின் மூலம் இந்தியாவின் தென்பகுதியில் இருந்த இஸ்லாமியர் சீனாவுடனும், ஐரோப்பாவுடனும், மேற்கு ஆசியாவுடனும் கொண்டிருந்த வணிக உறவையும் தமிழகத்தில் மட்டுமல்லாமல், கேரளத்திலும் இஸ்லாம் வேர்விட்டதையும் அந்தந்தப் பகுதியின் கலாசாரத்தை ஒட்டிக் கட்டப்பட்ட மசூதி அல்லது பள்ளிவாசல்களைப் பற்றியும் அரிய தகவல்களைத் தருகிறார் அன்வர்.

இஸ்லாமியத் தமிழர்களின் இலக்கியப் பங்களிப்பு பற்றியும், அவர்கள் பிற சமூகத்தினரோடு ஒட்டி வாழ்ந்த வாழ்க்கையையும் அழுத்தமாகவே பதிவு செய்திருக்கும் அன்வரையும் அவர் குறும்படத்தையும் காண்பதற்கு ஓர் அரிய சந்தர்ப்பத்தை தமிழ் மொழி விழாவில் 18.04 2015 சிங்கப்பூர் கடையநல்லூர் சங்கத்தினர் ஏற்படுத்தும் கொடுத்தார்கள் .எங்கே தொலைந்தது மண் சார்ந்த அந்த ஒற்றுமையுணர்வு? ஏன் தமிழ்ச் சொந்தங்கள் மத ரீதியாகப் பிரிந்துகொண்டிருக்கின்றன? பண்பாட்டுத் தளத்தில் நான் யார்? எனது வேரும் அடையாளமும் எவை? இந்தக் கேள்விகளைத் எழுப்பிய “யாதும்’ ஆவணப் படம். வெண்கல Remi விருதினை ஹியூஸ்டன் – வட அமெரிக்கா வில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் பெற்றது ,33 நாடுகள் பங்குபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் 550 க்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


முஸ்லிம் மன்னர்கள் படையெடுத்து வந்து, இந்த மண்ணில் ஆட்சி செய்வதற்கு முன்பாகவே முஸ்லிம் மக்கள் இங்கு வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதையும் அவர்களின் தொடர்ச்சிதான் இன்றைய தமிழ் முஸ்லிம்கள் என்பதையும் இயக்குநர் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கும் இ ந்த ஆவணப்படம் தமிழ் என்பது உதட்டளவில் மட்டுமல்ல, முஸ்லிம் களின் வாழ்க்கையிலும் இருக்கிறது என்பதை அவர்களின் வழிபாடு மூலமாகவும் திருமண நிகழ்ச்சிகள் மூலமாகவும் பதிவு செய்திருக்கிறது ,முஸ்லீம்களையும், இந்துக்களையும் மதங்களைச் சொல்லி பிளவுபடுத்திவரும் மிகக் கொடிய இக்காலத்தில், அவைகளுக்கு நேரெதிராக இரு சமூகங்களின் தொப்புள் கொடி உறவுகளைச் சொல்லி, தமிழ் முஸ்லீமின் வேர்களைத் தேடி தனது வாழ்வின் லட்சிய பயணத்தை தொடரும்.


கோம்பை அன்வர் ஆயிரம் கேள்வி, பதில்கள்எனும் ஆயிரம் மசாலா நூல் 16-ம் நூற்றாண்டில் மதுரை தமிழ்ச் சங்கத்தில் முதன் முதலில் அரங்கேற்றப்பட்ட செய்தி ஆலிம் புலவர் அப்பா அவர்கள், முஹம்மது நபியின் மெஹராஜ் இரவு பயணம் குறித்துப் பாடிய யாப்பு “மெஹராஜ் மாலை’ (மிகுராசு மாலை), நாகர்கோவில் கோட்டாறு பள்ளிவாசலில் இயற்றப்பட்ட செய்தி இந்தத் தகவலின் மூலம், முஸ்லீம்கள் பள்ளிவாசலைத் தொழுகைக்கான இடமாக மட்டும் பயன்படுத்தாது, தமிழ் வளர்க்கவும் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை
ஆவணப்படத்தில் நிறைய அம்சங்களையும், நெஞ்சை கலங்க வைக்கும் பல காட்சிகளையும் என்னால் காண முடிந்த்தது பழவேற்காட்டில் உள்ள ஒரு பள்ளிவாசலில், அந்த ஊரில் முஸ்லீம்கள் வந்த வரலாற்றை எழுத்தில் அரபியும், வாசிப்பில் தமிழுமாக எழுதி வைத்துள்ளார்கள் இப்படியான ஒரு நடைமுறையை நாம் எங்கும் பார்த்திட இயலாது.இதேபோல தாய்மொழியை முஸ்லீம்கள் நேசிப்பதற்கு ஒரு உதாரணமாக, இப்படத்தின் துவக்கத்தில் ஒரு காட்சி வரும். அதில் இசுலாமிய மதரசா ஒன்றில், அங்குள்ள மாணவருக்கு, திருக்குரான் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பார், அங்குள்ள ஹஜ்ரத் அப்படி அவர் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பது, தமிழ் மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட திருக்குரான் ஆகும். இயல்பில் தமிழ் மொழிபெயர்ப்பில் திருக்குரான் இன்று பரவலாக அறியப்பட்டிருந்தாலும், அதிலுள்ள முஸ்லீம்களின் மொழிப்பற்றை யாரும் கருத்தூன்றிப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் அதனை இப்படம் அழகாக எடுத்துக் காட்டி, முஸ்லீம்களின் மொழி நேயத்தைச் சொல்லியிருக்கிறது.

இந்தப் பயணம் தென் கிழக்கு ஆசியா வரை பரவியுள்ள தமிழ் முஸ்லீம்களின் வேர் வரை நீளும் என்று, தனது பயணத்தின் எல்லையை முன்வைக்கிறார் கோம்பை அன்வர் அவரின் அடுத்தடுத்த பயணத்தின் தொடர்ச்சியாக தமிழ் முஸ்லிம் திண்ணை உருவானபோது பொதுத் தளத்தில் முஸ்லிம்கள் பற்றிய புரிதல்களுக்கு சரியாக விளக்கமளிக்கவும் ,முஸ்லிம் படைப்பாளர்களை ஒன்றிணைக்கவும் அவர் எடுத்துக் கொண்ட முயற்சி இன்று பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது .
அந்த முயற்சியில் என்னைப் போன்றவர்களையும் இணைத்து பா .சிங்காரம் விருது மூலம் பங்களிக்க ஊக்குவித்த கோம்பை அன்வர் அவர்களுக்கு மிக்க நன்றி ..தொடரட்டும் அவர் பணி ..