இலைப்பரப்பில் முள் பாதைகள்உள்ளிருக்கும் ரகசியம் எதுவும் வெளியே தெரிவதில்லைநம்பினால் ருசிமேலும் நம்பினால் அதி ருசி
பூப்போல பிடித்து ஒர் உருட்டு உருட்டி சின்னக்கத்தியின் அடிப்பாகத்தை வைத்து ஒரு தட்டு தட்டி கடைக்கார சீனர் கீறிப்பிளக்கும் வரை நமக்கு டூரியான் சுளை கலர் தெரியாது அது வெளிற் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அதி ருசி என்பவர்கள் சில வேளைகளில் அடர் மஞ்சள் இனிப்பில் மயங்கி விடுவதும் உண்டு .ஜூன் மாதம் சிங்கப்பூரில் டுரியான் வேட்டையை நண்பர்களுடன் தொடரும் நான் செப்டம்பர் மாதம் கடையில் அடுக்கு வரிசை குறைவது வரை விடுவதில்லை .மூசா கிங் நட்சத்திர அந்தஸ்து பெற்றது ,கேலாங்கில் ஒரு சில கடைகளில் கிடைக்கும் இந்த மாதம் சீசன் ஆரம்பத்தில் பினாங்கு டுரியான் சிங்கப்பூருக்கு வரத்து அதிகமாக வாய்ப்புண்டு என்று சொல்கிறார்கள் .உண்மையில் பினாங்கு டுரியான் சீசனில் அவர்களுக்கே போதாது .கோவிட் பெருந்தொற்று காலம் அங்கே விற்பனை குறைந்து சிங்கப்பூருக்கு இறக்குமதி ஆகிவிட்டது . பஹாங் டுரியான் விதை சிறியதாக இருக்கும் ,சீசனில் இங்கு அதிகம் கிடைக்கும் ,இவற்றில் சிறிய விதை சுளை என்று டுரியானை நாம் விருப்பப்படி துல்லியமாக தேர்ந்தெடுக்க முடியாது அது கடைக்காரர் சதி என்று கூட நான் அவர்களிடம் சண்டைக்கு போயிருக்கிறேன் .உண்மையில் அவர்களே கூட அதை அறிந்திருக்க மாட்டார்கள்.அதன் பிளவுக்கோடு அறிந்து நகைப் பெட்டி போல் திறந்து சுளையைக் காட்டும் விற்பன்னர்கள் இப்போது சிங்கப்பூரில் குறைந்துவிட்டார்கள்.டுரியான் பழங்களில் சூரியன்,அது தூரிகை படாத ஓவியம் எப்படி வரைந்தாலும் அதன் உருவத்தை துல்லியமாக வரைய இயலாது ..அது போலத்தான் அதன் ருசியும் ,டுரியானை மூன்று முறை நுகர்ந்து பார்த்துவிட்டு சாப்பிட ஆரம்பித்து பாருங்கள் ருசி தூக்கலாக இருக்கும் .டூரியானப் பொருத்தவரை மனிதர்களை இரண்டாக பிரித்து விடலாம். டுரியானை வெறித்தனமாக விரும்புகிறார்கள் மற்றும் வெறித்தனமாக வெறுப்பவர்கள். எனக்கு வெறுப்பவர்களைக் கண்டால் பிடிக்காது ..டுரியான் பற்றிய என் கட்டுரைக்கு மறைந்த எழுத்தாளர் திரு ரெ கார்த்திகேசு அவர்களின் நெகிழ்வான கடிதம் ….

“அயல் பசி” வழியாக ஷாநவாஸ் படைக்கும்இலக்கிய விருந்து (ரெ.கார்த்திகேசு) ஷாநவாசின் “அயல் பசி” தமிழ் வாசகனுக்கு இரண்டு விதமான அனுபவங்களைத் தரக் கூடியது. முதலாவது இது ஓர் அசாதாரணமான வாசிப்பு உணர்வு. உணவையே தலைமைக் கருவாக வைத்து எழுதப்பட்ட இலக்கியப் படைப்புக்கள் தமிழில் அபூர்வமாகத்தான் வருகின்றன. “அந்தக் காலத்தில் காப்பி இல்லை” என்னும் தொ.மு.பரமசிவன் அவர்களின் அருமையான கட்டுரைகள் நினைவுக்கு வருகின்றன. பலர் சமையல் புத்தகங்கள் எழுதியுள்ளார்கள். அதில் இலக்கிய வாசிப்பின் ருசி இருக்காது. இலக்கியச் சுவையையும் உணவுச் சுவையையும் கலந்துகொடுக்கும் தி.ஜானகிராமனின் “பாயசம்” சிறுகதை ஒரு செவ்விலக்கியத் தகுதி உள்ளது. அந்த வகையான அபூர்வப் படைப்புத்தான் ஷா நவாசின் “அயல் பசி”. அவர் ஆசியாவின் பலவிதமான விநோதமான உணவு வகைகளைப் பற்றித் தமிழில் பேசுகிறார் என்னும் தகவல் மதிப்புக்காக மட்டும் இல்லை. அதைச் சொல்லுகின்ற சுவையான நடையாலும் அது சிறக்கிறது.
“முள்நாறிப் பழம்” என்னும் டுரியான் பற்றிய கட்டுரை என்னைக் குறிப்பாகக் கவர்ந்தது. நான் ஒரு திருத்த முடியாத டுரியான் அபிமானி. டையபிடிஸ் உச்சகட்டத்தில் இருந்த நாட்களில்கூட அதை விடவில்லை. டுரியான் தோட்டத்துக்குப் பக்கத்தில் இருந்த மலாய்க் கம்பத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் அதனுடன் பிறப்பு முதல் தொடர்பு உண்டு. போன ஜென்மத்தில்கூட இருந்திருக்கலாம் எனச் சில சமயம் தோன்றுவதுண்டு. “சிங்கப்பூரில் டுரியான் சாப்பிடுவது ஒரு கலாசார நிகழ்வு” என்று ஷா நவாஸ் எழுதும்போது “அதை நீங்கள் கற்றுக் கொண்டதே மலேசியாவில் இருந்துதான்” என நான் சொந்தம் கொண்டாட வேண்டும் என்ற நினைவு தோன்றியது. டுரியானைச் சாப்பிடுவது மட்டுமல்ல. குடும்பத் தலைவர் அதை வீட்டுக்குக் கொண்டு வந்து, குடும்பத்தைச் சுற்றி உட்கார வைத்து, அறிவாளால் அதனைப் பிளந்து சுளை சுளையாக எடுத்துக் கொடுக்கும் அனுபவமும் கலாசார நிகழ்வுதான். டுரியானை அதன் பிளவுக் கோடு கண்டு பிடித்து அரிவாளால் வெட்டினால் நகைப் பெட்டி திறப்பது போல் சுலபமாகத் திறக்கும். சுளைகள் சிதையாமல் அப்படியே எடுக்கலாம். அப்படித் தெரியாமல் முரட்டுத் தனமாக வெட்டினால் சுளைகள் வெட்டுப்பட்டு வீணாகும். தோலும் நார் நாராக வரும்.

இந்த “முள்நாறிப் பழம்” கட்டுரைக்கு நான் சில மிகு தகவல்கள் சொல்ல முடியும். முன்பெல்லாம் நாங்கள் டுரியான் தோட்டத்துக்கே சென்றுதான் டுரியான் வாங்குவாம். அப்படிப் போனால் முதலில் விருந்தாளியாக உபசரித்து உட்கார வைத்து அங்கேயே பிளந்து சாப்பிடும் டுரியானை இலவசமாகவே தருவார்கள். கூடவே வங்குஸ்தான் பழமும் கிடைக்கும். டுரியானின் சூட்டுக்கு நிவாரணம் வங்குஸ்தானின் குளுமை. பின்னர் வேண்டியதைக் கோணிச் சாக்கில் போட்டு வாங்கி வரலாம். (அப்பவெல்லாம் பிளாஸ்டிக் பைகளை யார் கண்டார்கள்?) உத்தேசமான விலைதான். கிலோ கணக்கில் நிறுப்பதெல்லாம் இல்லை. சீர்காழி கோவிந்தராஜன் மலேசியா வந்திருந்த போது மலேசியாவின் அழகைப் பற்றிப் புதிதாகப் புனைந்த ஒரு பாடலை எங்கும் மேடைகளில் பாடுவார். அவருடைய ஆஸ்தானப் பாடலாசிரியர் புத்தனேரி சுப்பிரமணியம் இயற்றிய “மலை நாட்டில் கலை வண்ணம் கண்டோம்” என்ற பாடல். நாட்டின் சிறப்புக்களை எல்லாம் வருணித்துவிட்டுப் பாடலை முடிப்பார். அப்புறம் ஏதோ மறந்து விட்டவரைப் போல கடைசிப் பத்தியை ஆரம்பிப்பார்: “டுரியானை மறந்து விட்டேனே..” என ஆரம்பித்தவுடன் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரிப்பார்கள். அடுத்த அடியில் “அதன் துர்நாற்றம் நாசியைத் துளைத்திடும்தானே…” என்பார். “இல்லை, இல்லை” என ரசிகர்கள் சத்தம் போடுவார்கள். அடுத்த இரண்டு வரிகள் எனக்கு மிகவும் பிடித்தவை: “புரியாத சுவையுள்ளதென்பார்,முட்போர்வையை நீக்கியே போராடித் தின்பார்” ஆம். முள்போர்வையை நீக்கிப் போராடித்தான் தின்கிறோம். அந்த வெற்றிக்கு நிகர் வேறெது? ஆனால் ஷாநவாசின் கட்டுரையில் அவர் வைத்துள்ள முத்தாய்ப்பு இன்னும் சுவையானது.“டுரியான் டுரியான் என்று மாற்று மொழியில் எழுதுவது என்னவோ போலிருக்கிறது என்று தமிழ் அகராதியைத் தேடினேன். ‘முள்நாறிப் பழம்’ என்று போட்டிருந்தது. ஏதோ டுரியானைச் சாப்பிட்டுவிடக் கூடாது என்ற உள்நோக்கதில் பெயர் வைத்த மாதிரி இருக்கிறது” சபாஷ், ஷாநவாஸ்! நல்ல போடு போட்டீர்கள். பிடியுங்கள் பொற்குவியல்.

“சிங்கப்பூர் தலைக் கறி” என்ற கட்டுரையில் பல கிடைத்தற்கரிய செய்திகள் இருக்கின்றன. (எல்லாக் கட்டுரைகளிலுமே இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இது.)
“ஜப்பானுக்கு கலாசார ரீதியில் அதிகம் தொடர்பில்லாத இந்திய மசாலாப் பொருட்கள் அங்கு பிரபலமானதற்கு ஒரு காரணம் சொல்வார்கள். இந்திய மசாலாக்கள்தான் இங்குள்ள குழந்தைகள் உயரமாகவும் உடற்கட்டுடனும் பிறக்கக் காரணம் என்ற நம்பிக்கை இருந்திருக்கிறது. 1903இல் ஒசாக்காவில் மசாலாத் தூள் விற்பனையை முதல் முதலில் துவங்கிய பதிவுகள் யோக்கோஹாமா நகரத்தில் உள்ள யோக்கோஹாமா கரி மியுசியத்தில் உள்ளன”.
சரி! இப்போது நம் இந்தியக் குழந்தைகள் பிட்சாவும் பர்கரும் சாப்பிட்டால் ஐரோப்பியன் மாதிரி ஆகிவிடலாம் என்று நம்புவதைப் போல்தான் இது. ஷாநவாசின் கட்டுரைகளைப் படிக்கப் படிக்க, இப்போது நாம் அதிகமாகப் பேசும் உலகமயமாதல், முதலில் உணவுப் பழக்கவழக்கத்தால்தான் ஏற்பட்டிருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது. உணவுக்கான மசாலா பொருட்களைத்தேடித்தானே மேற்கத்தியர்கள் கிழக்குக்கு வந்தார்கள்? இந்தியாவைத் தேடிப் போன கொலம்பஸ்தான் அமெரிக்காவைத் திறந்து வைத்தார். ஆனால் இந்த உணவு உலகமயமாதல் இப்போது தலைகீழாகவும் நடக்கிறது.

“கிளேடியேட்டர்களின் ரத்தம்” என்னும் கட்டுரையில் அவர் தெரிவிக்கும் மறுக்க முடியாத உண்மை இது: “சீன, ஜப்பான், தென் கொரியா, இந்தோனேசியா நாடுகளில் பாரம்பரியமாகச் சாப்பிட்டு வந்த பல உணவு வகைகள் குறைந்துவிட்டன. அமெரிக்கக் கப்பல்கள் தொடர்ச்சியாக உணவுப் பொருட்களை அந்த நாடுகளுக்குப் பெருமளவில் கொண்டு சேர்ப்பதைப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
“இந்தோனேசியா ‘தெம்பே’ தயாரிப்புக்கு முன்பு பயன்படுத்திவந்த தங்கள் நாட்டில் விளையும் legumesஐத் தவிர்த்துவிட்டு, அமெரிக்க சோயாவை இறக்குமதி செய்கிறது. 1995இல் சோயாவை ஏற்றுமதி செய்யும் நிலையிலிருந்த சீனா உணவுப் பழக்க மாற்றங்கள் மற்றும் நடுத்தர வர்க்க வருமான உயர்வு போன்றவற்றின் காரணமாக அமெரிக்காவிலிருந்து சோயாவை இறக்குமதி செய்கிறது. … இந்த சோயா நேரடிப் பயன்பாட்டுக்கு அல்ல. நான்கு மடங்கு தானியங்களுடன் ஒரு மடங்கு சோயா கலந்து கால்நடைத் தீவனமாக்கினால் கூடுதலான இறைச்சி கிடைக்கிறது. அதனால் இறக்குமதி செய்யும் சோயா அனைத்தும் கால்நடை வளர்ப்புக்கே செல்கிறது. இன்றைய நிலவரப்படி சீனர்கள் வருடத்திற்கு 13 மில்லியன் கோழி இறைச்சி சாப்பிட்டு அமெரிக்கர்களை முந்தியிருக்கிறார்கள்.
“தலைகீழ் மாற்றமடைந்துள்ள சீனர்களின் உணவுப் பழக்கம் உலகின் விலைவாசி உயர்வுக்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்திவிட்டது என்கிறது U.S. Grains Council”. இப்படியாக சிந்திக்கவைக்கும் கருத்துக்களைக் கொண்ட அடர்த்தியான கட்டுரைகளாக அவை திகழ்கின்றன. பல இடங்களில் ஆசிரியரின் நகைச்சுவை உணர்வு அடிநாதமாக, அடக்கமாகவே ஒலிக்கிறது. ஆனால் அதன் பிரசன்னம் தெளிவாக உள்ளது. வரலாறு, நிலநூல், தாவர நூல், மிருகவியல், அனைத்துலகப் பொருளாதாரம் முதலிய வெவ்வேறுபட்ட தளங்களிலிருந்து அவர் தம் கட்டுரைகளுக்கான கருப்பொருள்களைப் பெறுகிறார். அவருடைய நேரடி அனுபவங்கள், அவருடைய தமிழ் இலக்கிய ரசனை அனைத்தையும் அவற்றுள் கலந்து அவர் கொடுக்கிறார். பாருங்கள், இந்த ‘சாம்பு ஐயரும் சாம்பாரும்’ கட்டுரையில் பல தகவல்களைச் சொல்லி போகிற போக்கில்
“நெல்வரித் தொழுவார் கூர்வாள் மழுங்கின்பிள்ளை மறத் தொடரியக் கல் செத்துஅண்ணல் யாமைத் தன் கூன் புறத்துரித்தும்நில்லமல் புரவு”
என ஒரு புறநானூற்றுப் பாடலை அப்படியே வீசி “.. என்ற பாட்டு நமக்குக் கிடைத்திராவிட்டால் பழங்காலத்தில் தமிழகத்தில் நிலவிய ஆண்டான் அடிமை கலாசாரம், நெல் அறுக்கும் அரிவாளைத் தொழிலாளர்கள் ஆமை ஓட்டில் வைத்து கூர் தீட்டிய செய்திகள் போன்றவை நமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை” என்று எழுத இலக்கியப் பரிச்சயமும் இலக்கிய மனமும் இல்லாவிட்டால் எப்படி? அண்மையில் நான் வாசித்த நூல்களுள் அட்டையைத் திறந்தவுடனேயே என்னைக் கவர்ந்திழுத்து தொடர்ந்து படிக்கவைத்த நூல் இதுதான். ஷாநவாசின் “அயல் பசி” தமிழ் இலக்கியத்துக்கு ஒரு நல்ல வரவு. வாழ்த்துவோம். (நல்ல முறையில் அச்சிடப்பட்டுள்ள இந்த நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆங்கிலச் சொற்களின் எழுத்துக் கூட்டல்களில் அதிகமான தவறுகள் உள்ளன. Cock’s Comb என்று இருக்க வேண்டியது coks comp ஆக உள்ளது. Scholar என்னும் சொல் scholor என வந்திருக்கிறது. Bass இன மீன் என்பது BASA என இருக்கிறது. Sogo worms என்பது Sogo warms என இருக்கிறது. Khmer Rouge என இருக்கவேண்டியது Khmer rough என வந்திருக்கிறது. இன்னும் பல. தேவையில்லாத இடங்களிலெல்லாம் ஆங்கில capital எழுத்துக்கள் மானாவாரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. பயன்படுத்தப்பட வேண்டிய இடங்களில் இல்லை. இவ்வளவு அருமையான உள்ளடக்கம் கொண்ட நூலுக்கு இவை கறுப்புப் புள்ளிகளல்லவா? மெய்ப்புப் பார்ப்பதில் பதிப்பாளர்களுக்குக் கவனம் அவசியம்.)