ஜூலை, 2021 க்கான தொகுப்பு

கடந்து வந்த பாதை .. தி சிராங்கூன் டைம்ஸ்

Posted: ஜூலை 1, 2021 in வகைப்படுத்தப்படாதது

சிங்கப்பூர் தனிநாடாக மலர்ந்து, அரைநூற்றாண்டு கடந்து, தன் பொன்விழா தேசிய தினத்தை 9 ஆகஸ்ட் 2015இல் கொண்டாடியது. அந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ மாத இதழும் தன்னம்பிக்கையுடன் ‘சிங்கைத் தமிழரின் சிறப்பு’ என்ற முழக்க வரியுடன் 32 பக்க அச்சிதழாகத் தன் முதலடியை எடுத்து வைத்தது.

காலத்திற்கேற்ப ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ மின்னிலக்க இதழைத் தற்போது இணையத்திலும் http://www.serangoontimes.com தளத்தில் வாசிக்கலாம். இதுவரை வெளியாகியுள்ள 64 இதழ்களும் இத்தளத்தின் ‘களஞ்சியம்’ பகுதியில் கிடைக்கின்றன. சிங்கைத் தமிழ்ச் சமூகத்தின் சமகால வரலாறும் இலக்கிய நாடித்துடிப்பும் முறையாகவும் பொறுப்பாகவும் இக்களஞ்சியத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்று துணிந்து சொல்வேன்.

தற்போது ஆறாம் ஆண்டு நடக்கிறது. இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் 65வது இதழுக்கான (ஜூன் 2021) வேலை மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. தமிழ் கற்பித்தல் குறித்தும், சட்டத்துறை குறித்தும் தங்கள் பார்வைகளுடன் இரண்டு உள்ளூர் இளையர்கள் புதிய கட்டுரையாளர்களாக அறிமுகமாகின்றனர். வரும் ஆகஸ்ட் இதழை சிங்கை இளையர் சிறப்பிதழாகக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். அடுத்த சில ஆண்டுகளுக்கான முன்னெடுப்புகளை விவாதித்து வருகிறோம்.

சிங்கப்பூர் ஒரு தனி நாடாக சொந்தக்காலில் நிற்கமுடியுமா என்ற ஐயத்தைப் பொய்யாக்கி நிமிர்ந்ததுபோல ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழும் ‘இன்னும் எத்தனை நாள்?’ என்ற ஏகடியப் பேச்சுகளைத் தன் தொடர்ந்த, அழுத்தமான செயல்பாடுகளால் காணாமற்போகச் செய்துவிட்டது. இதழ் அச்சாகும் சென்னையில் வெள்ளம் வந்தபோதும், கொரோனா கால ஊரடங்கின்போதும் தவிர ஒவ்வொரு மாதமும் தொய்வின்றி சிராங்கூன் டைம்ஸ் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

தமிழ்க் குடும்பங்களில் தமிழ்மொழிப் புழக்கம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்துவரும் சிங்கப்பூரில் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ தாக்குப்பிடித்து எதிர்நீச்சல் போட்டுக்கொண்டிருக்கிறது. விவாதங்களை எழுப்பும், பதிவுசெய்யும் தளமாகச் செயல்பட்டுவருகிறது. தமிழ்ச் சமூகத்தின் ஆதரவு தொடர்ந்து அதிகரித்தால் எங்களால் இன்னும் ஊக்கத்துடன் செயல்படவியலும்.

‘தி சிராங்கூன் டைம்ஸ்’ஸின் ஒவ்வொரு இதழையும் விதைகளாகப் பார்க்கும் நிறுவனர் எம்.ஏ.முஸ்தபா, அனுதினமும் அடுத்த இதழில் என்னென்ன படைப்புகள் என்று சிந்திக்கும், விவாதிக்கும் ஆசிரியர் குழு நண்பர்கள், தமிழுக்காகவும் தன்நிறைவுக்காகவும் மட்டுமே எழுதும் படைப்பாளிகள், ஒவ்வோர் இதழையும் விடாமல் வாசித்து குறைநிறைகளைச் சுட்டிக்காட்டும் நம் சமூகத்தின் வாசகர்கள், வழிகாட்டும் அறிவுஜீவிகள் ஆகியோரை நம்பியே எங்கள் பயணம் தொடர்கிறது.

  • தி சிராங்கூன் டைம்ஸ் கடந்து வந்த பாதைபற்றி ஆசிரியர் ஷாநவாஸ் ‘வல்லினம்’ இணைய இதழில் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து சில பகுதிகள்.

கட்டுரையை முழுமையாக வாசிக்க…

https://vallinam.com.my/version2/?p=7676