பதிவர் தொகுப்புகள்

கடந்து வந்த பாதை .. தி சிராங்கூன் டைம்ஸ்

Posted: ஜூலை 1, 2021 in வகைப்படுத்தப்படாதது

சிங்கப்பூர் தனிநாடாக மலர்ந்து, அரைநூற்றாண்டு கடந்து, தன் பொன்விழா தேசிய தினத்தை 9 ஆகஸ்ட் 2015இல் கொண்டாடியது. அந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ மாத இதழும் தன்னம்பிக்கையுடன் ‘சிங்கைத் தமிழரின் சிறப்பு’ என்ற முழக்க வரியுடன் 32 பக்க அச்சிதழாகத் தன் முதலடியை எடுத்து வைத்தது.

காலத்திற்கேற்ப ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ மின்னிலக்க இதழைத் தற்போது இணையத்திலும் http://www.serangoontimes.com தளத்தில் வாசிக்கலாம். இதுவரை வெளியாகியுள்ள 64 இதழ்களும் இத்தளத்தின் ‘களஞ்சியம்’ பகுதியில் கிடைக்கின்றன. சிங்கைத் தமிழ்ச் சமூகத்தின் சமகால வரலாறும் இலக்கிய நாடித்துடிப்பும் முறையாகவும் பொறுப்பாகவும் இக்களஞ்சியத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்று துணிந்து சொல்வேன்.

தற்போது ஆறாம் ஆண்டு நடக்கிறது. இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் 65வது இதழுக்கான (ஜூன் 2021) வேலை மும்முரமாக நடந்துகொண்டிருக்கிறது. தமிழ் கற்பித்தல் குறித்தும், சட்டத்துறை குறித்தும் தங்கள் பார்வைகளுடன் இரண்டு உள்ளூர் இளையர்கள் புதிய கட்டுரையாளர்களாக அறிமுகமாகின்றனர். வரும் ஆகஸ்ட் இதழை சிங்கை இளையர் சிறப்பிதழாகக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். அடுத்த சில ஆண்டுகளுக்கான முன்னெடுப்புகளை விவாதித்து வருகிறோம்.

சிங்கப்பூர் ஒரு தனி நாடாக சொந்தக்காலில் நிற்கமுடியுமா என்ற ஐயத்தைப் பொய்யாக்கி நிமிர்ந்ததுபோல ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ இதழும் ‘இன்னும் எத்தனை நாள்?’ என்ற ஏகடியப் பேச்சுகளைத் தன் தொடர்ந்த, அழுத்தமான செயல்பாடுகளால் காணாமற்போகச் செய்துவிட்டது. இதழ் அச்சாகும் சென்னையில் வெள்ளம் வந்தபோதும், கொரோனா கால ஊரடங்கின்போதும் தவிர ஒவ்வொரு மாதமும் தொய்வின்றி சிராங்கூன் டைம்ஸ் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

தமிழ்க் குடும்பங்களில் தமிழ்மொழிப் புழக்கம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்துவரும் சிங்கப்பூரில் ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ தாக்குப்பிடித்து எதிர்நீச்சல் போட்டுக்கொண்டிருக்கிறது. விவாதங்களை எழுப்பும், பதிவுசெய்யும் தளமாகச் செயல்பட்டுவருகிறது. தமிழ்ச் சமூகத்தின் ஆதரவு தொடர்ந்து அதிகரித்தால் எங்களால் இன்னும் ஊக்கத்துடன் செயல்படவியலும்.

‘தி சிராங்கூன் டைம்ஸ்’ஸின் ஒவ்வொரு இதழையும் விதைகளாகப் பார்க்கும் நிறுவனர் எம்.ஏ.முஸ்தபா, அனுதினமும் அடுத்த இதழில் என்னென்ன படைப்புகள் என்று சிந்திக்கும், விவாதிக்கும் ஆசிரியர் குழு நண்பர்கள், தமிழுக்காகவும் தன்நிறைவுக்காகவும் மட்டுமே எழுதும் படைப்பாளிகள், ஒவ்வோர் இதழையும் விடாமல் வாசித்து குறைநிறைகளைச் சுட்டிக்காட்டும் நம் சமூகத்தின் வாசகர்கள், வழிகாட்டும் அறிவுஜீவிகள் ஆகியோரை நம்பியே எங்கள் பயணம் தொடர்கிறது.

  • தி சிராங்கூன் டைம்ஸ் கடந்து வந்த பாதைபற்றி ஆசிரியர் ஷாநவாஸ் ‘வல்லினம்’ இணைய இதழில் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து சில பகுதிகள்.

கட்டுரையை முழுமையாக வாசிக்க…

https://vallinam.com.my/version2/?p=7676

டூரியான் (முள் நாறிப் பழம் )

Posted: ஜூன் 21, 2021 in வகைப்படுத்தப்படாதது

இலைப்பரப்பில் முள் பாதைகள்உள்ளிருக்கும் ரகசியம் எதுவும் வெளியே தெரிவதில்லைநம்பினால் ருசிமேலும் நம்பினால் அதி ருசி


பூப்போல பிடித்து ஒர் உருட்டு உருட்டி சின்னக்கத்தியின் அடிப்பாகத்தை வைத்து ஒரு தட்டு தட்டி கடைக்கார சீனர் கீறிப்பிளக்கும் வரை நமக்கு டூரியான் சுளை கலர் தெரியாது அது வெளிற் மஞ்சள் நிறத்தில் இருந்தால் அதி ருசி என்பவர்கள் சில வேளைகளில் அடர் மஞ்சள் இனிப்பில் மயங்கி விடுவதும் உண்டு .ஜூன் மாதம் சிங்கப்பூரில் டுரியான் வேட்டையை நண்பர்களுடன் தொடரும் நான் செப்டம்பர் மாதம் கடையில் அடுக்கு வரிசை குறைவது வரை விடுவதில்லை .மூசா கிங் நட்சத்திர அந்தஸ்து பெற்றது ,கேலாங்கில் ஒரு சில கடைகளில் கிடைக்கும் இந்த மாதம் சீசன் ஆரம்பத்தில் பினாங்கு டுரியான் சிங்கப்பூருக்கு வரத்து அதிகமாக வாய்ப்புண்டு என்று சொல்கிறார்கள் .உண்மையில் பினாங்கு டுரியான் சீசனில் அவர்களுக்கே போதாது .கோவிட் பெருந்தொற்று காலம் அங்கே விற்பனை குறைந்து சிங்கப்பூருக்கு இறக்குமதி ஆகிவிட்டது . பஹாங் டுரியான் விதை சிறியதாக இருக்கும் ,சீசனில் இங்கு அதிகம் கிடைக்கும் ,இவற்றில் சிறிய விதை சுளை என்று டுரியானை நாம் விருப்பப்படி துல்லியமாக தேர்ந்தெடுக்க முடியாது அது கடைக்காரர் சதி என்று கூட நான் அவர்களிடம் சண்டைக்கு போயிருக்கிறேன் .உண்மையில் அவர்களே கூட அதை அறிந்திருக்க மாட்டார்கள்.அதன் பிளவுக்கோடு அறிந்து நகைப் பெட்டி போல் திறந்து சுளையைக் காட்டும் விற்பன்னர்கள் இப்போது சிங்கப்பூரில் குறைந்துவிட்டார்கள்.டுரியான் பழங்களில் சூரியன்,அது தூரிகை படாத ஓவியம் எப்படி வரைந்தாலும் அதன் உருவத்தை துல்லியமாக வரைய இயலாது ..அது போலத்தான் அதன் ருசியும் ,டுரியானை மூன்று முறை நுகர்ந்து பார்த்துவிட்டு சாப்பிட ஆரம்பித்து பாருங்கள் ருசி தூக்கலாக இருக்கும் .டூரியானப் பொருத்தவரை மனிதர்களை இரண்டாக பிரித்து விடலாம். டுரியானை வெறித்தனமாக விரும்புகிறார்கள் மற்றும் வெறித்தனமாக வெறுப்பவர்கள். எனக்கு வெறுப்பவர்களைக் கண்டால் பிடிக்காது ..டுரியான் பற்றிய என் கட்டுரைக்கு மறைந்த எழுத்தாளர் திரு ரெ கார்த்திகேசு அவர்களின் நெகிழ்வான கடிதம் ….


“அயல் பசி” வழியாக ஷாநவாஸ் படைக்கும்இலக்கிய விருந்து (ரெ.கார்த்திகேசு) ஷாநவாசின் “அயல் பசி” தமிழ் வாசகனுக்கு இரண்டு விதமான அனுபவங்களைத் தரக் கூடியது. முதலாவது இது ஓர் அசாதாரணமான வாசிப்பு உணர்வு. உணவையே தலைமைக் கருவாக வைத்து எழுதப்பட்ட இலக்கியப் படைப்புக்கள் தமிழில் அபூர்வமாகத்தான் வருகின்றன. “அந்தக் காலத்தில் காப்பி இல்லை” என்னும் தொ.மு.பரமசிவன் அவர்களின் அருமையான கட்டுரைகள் நினைவுக்கு வருகின்றன. பலர் சமையல் புத்தகங்கள் எழுதியுள்ளார்கள். அதில் இலக்கிய வாசிப்பின் ருசி இருக்காது. இலக்கியச் சுவையையும் உணவுச் சுவையையும் கலந்துகொடுக்கும் தி.ஜானகிராமனின் “பாயசம்” சிறுகதை ஒரு செவ்விலக்கியத் தகுதி உள்ளது. அந்த வகையான அபூர்வப் படைப்புத்தான் ஷா நவாசின் “அயல் பசி”. அவர் ஆசியாவின் பலவிதமான விநோதமான உணவு வகைகளைப் பற்றித் தமிழில் பேசுகிறார் என்னும் தகவல் மதிப்புக்காக மட்டும் இல்லை. அதைச் சொல்லுகின்ற சுவையான நடையாலும் அது சிறக்கிறது.

“முள்நாறிப் பழம்” என்னும் டுரியான் பற்றிய கட்டுரை என்னைக் குறிப்பாகக் கவர்ந்தது. நான் ஒரு திருத்த முடியாத டுரியான் அபிமானி. டையபிடிஸ் உச்சகட்டத்தில் இருந்த நாட்களில்கூட அதை விடவில்லை. டுரியான் தோட்டத்துக்குப் பக்கத்தில் இருந்த மலாய்க் கம்பத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால் அதனுடன் பிறப்பு முதல் தொடர்பு உண்டு. போன ஜென்மத்தில்கூட இருந்திருக்கலாம் எனச் சில சமயம் தோன்றுவதுண்டு. “சிங்கப்பூரில் டுரியான் சாப்பிடுவது ஒரு கலாசார நிகழ்வு” என்று ஷா நவாஸ் எழுதும்போது “அதை நீங்கள் கற்றுக் கொண்டதே மலேசியாவில் இருந்துதான்” என நான் சொந்தம் கொண்டாட வேண்டும் என்ற நினைவு தோன்றியது. டுரியானைச் சாப்பிடுவது மட்டுமல்ல. குடும்பத் தலைவர் அதை வீட்டுக்குக் கொண்டு வந்து, குடும்பத்தைச் சுற்றி உட்கார வைத்து, அறிவாளால் அதனைப் பிளந்து சுளை சுளையாக எடுத்துக் கொடுக்கும் அனுபவமும் கலாசார நிகழ்வுதான். டுரியானை அதன் பிளவுக் கோடு கண்டு பிடித்து அரிவாளால் வெட்டினால் நகைப் பெட்டி திறப்பது போல் சுலபமாகத் திறக்கும். சுளைகள் சிதையாமல் அப்படியே எடுக்கலாம். அப்படித் தெரியாமல் முரட்டுத் தனமாக வெட்டினால் சுளைகள் வெட்டுப்பட்டு வீணாகும். தோலும் நார் நாராக வரும்.

இந்த “முள்நாறிப் பழம்” கட்டுரைக்கு நான் சில மிகு தகவல்கள் சொல்ல முடியும். முன்பெல்லாம் நாங்கள் டுரியான் தோட்டத்துக்கே சென்றுதான் டுரியான் வாங்குவாம். அப்படிப் போனால் முதலில் விருந்தாளியாக உபசரித்து உட்கார வைத்து அங்கேயே பிளந்து சாப்பிடும் டுரியானை இலவசமாகவே தருவார்கள். கூடவே வங்குஸ்தான் பழமும் கிடைக்கும். டுரியானின் சூட்டுக்கு நிவாரணம் வங்குஸ்தானின் குளுமை. பின்னர் வேண்டியதைக் கோணிச் சாக்கில் போட்டு வாங்கி வரலாம். (அப்பவெல்லாம் பிளாஸ்டிக் பைகளை யார் கண்டார்கள்?) உத்தேசமான விலைதான். கிலோ கணக்கில் நிறுப்பதெல்லாம் இல்லை. சீர்காழி கோவிந்தராஜன் மலேசியா வந்திருந்த போது மலேசியாவின் அழகைப் பற்றிப் புதிதாகப் புனைந்த ஒரு பாடலை எங்கும் மேடைகளில் பாடுவார். அவருடைய ஆஸ்தானப் பாடலாசிரியர் புத்தனேரி சுப்பிரமணியம் இயற்றிய “மலை நாட்டில் கலை வண்ணம் கண்டோம்” என்ற பாடல். நாட்டின் சிறப்புக்களை எல்லாம் வருணித்துவிட்டுப் பாடலை முடிப்பார். அப்புறம் ஏதோ மறந்து விட்டவரைப் போல கடைசிப் பத்தியை ஆரம்பிப்பார்: “டுரியானை மறந்து விட்டேனே..” என ஆரம்பித்தவுடன் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரிப்பார்கள். அடுத்த அடியில் “அதன் துர்நாற்றம் நாசியைத் துளைத்திடும்தானே…” என்பார். “இல்லை, இல்லை” என ரசிகர்கள் சத்தம் போடுவார்கள். அடுத்த இரண்டு வரிகள் எனக்கு மிகவும் பிடித்தவை: “புரியாத சுவையுள்ளதென்பார்,முட்போர்வையை நீக்கியே போராடித் தின்பார்” ஆம். முள்போர்வையை நீக்கிப் போராடித்தான் தின்கிறோம். அந்த வெற்றிக்கு நிகர் வேறெது? ஆனால் ஷாநவாசின் கட்டுரையில் அவர் வைத்துள்ள முத்தாய்ப்பு இன்னும் சுவையானது.“டுரியான் டுரியான் என்று மாற்று மொழியில் எழுதுவது என்னவோ போலிருக்கிறது என்று தமிழ் அகராதியைத் தேடினேன். ‘முள்நாறிப் பழம்’ என்று போட்டிருந்தது. ஏதோ டுரியானைச் சாப்பிட்டுவிடக் கூடாது என்ற உள்நோக்கதில் பெயர் வைத்த மாதிரி இருக்கிறது” சபாஷ், ஷாநவாஸ்! நல்ல போடு போட்டீர்கள். பிடியுங்கள் பொற்குவியல்.

“சிங்கப்பூர் தலைக் கறி” என்ற கட்டுரையில் பல கிடைத்தற்கரிய செய்திகள் இருக்கின்றன. (எல்லாக் கட்டுரைகளிலுமே இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இது.)

“ஜப்பானுக்கு கலாசார ரீதியில் அதிகம் தொடர்பில்லாத இந்திய மசாலாப் பொருட்கள் அங்கு பிரபலமானதற்கு ஒரு காரணம் சொல்வார்கள். இந்திய மசாலாக்கள்தான் இங்குள்ள குழந்தைகள் உயரமாகவும் உடற்கட்டுடனும் பிறக்கக் காரணம் என்ற நம்பிக்கை இருந்திருக்கிறது. 1903இல் ஒசாக்காவில் மசாலாத் தூள் விற்பனையை முதல் முதலில் துவங்கிய பதிவுகள் யோக்கோஹாமா நகரத்தில் உள்ள யோக்கோஹாமா கரி மியுசியத்தில் உள்ளன”.

சரி! இப்போது நம் இந்தியக் குழந்தைகள் பிட்சாவும் பர்கரும் சாப்பிட்டால் ஐரோப்பியன் மாதிரி ஆகிவிடலாம் என்று நம்புவதைப் போல்தான் இது. ஷாநவாசின் கட்டுரைகளைப் படிக்கப் படிக்க, இப்போது நாம் அதிகமாகப் பேசும் உலகமயமாதல், முதலில் உணவுப் பழக்கவழக்கத்தால்தான் ஏற்பட்டிருக்கவேண்டும் என்றே தோன்றுகிறது. உணவுக்கான மசாலா பொருட்களைத்தேடித்தானே மேற்கத்தியர்கள் கிழக்குக்கு வந்தார்கள்? இந்தியாவைத் தேடிப் போன கொலம்பஸ்தான் அமெரிக்காவைத் திறந்து வைத்தார். ஆனால் இந்த உணவு உலகமயமாதல் இப்போது தலைகீழாகவும் நடக்கிறது.

“கிளேடியேட்டர்களின் ரத்தம்” என்னும் கட்டுரையில் அவர் தெரிவிக்கும் மறுக்க முடியாத உண்மை இது: “சீன, ஜப்பான், தென் கொரியா, இந்தோனேசியா நாடுகளில் பாரம்பரியமாகச் சாப்பிட்டு வந்த பல உணவு வகைகள் குறைந்துவிட்டன. அமெரிக்கக் கப்பல்கள் தொடர்ச்சியாக உணவுப் பொருட்களை அந்த நாடுகளுக்குப் பெருமளவில் கொண்டு சேர்ப்பதைப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

“இந்தோனேசியா ‘தெம்பே’ தயாரிப்புக்கு முன்பு பயன்படுத்திவந்த தங்கள் நாட்டில் விளையும் legumesஐத் தவிர்த்துவிட்டு, அமெரிக்க சோயாவை இறக்குமதி செய்கிறது. 1995இல் சோயாவை ஏற்றுமதி செய்யும் நிலையிலிருந்த சீனா உணவுப் பழக்க மாற்றங்கள் மற்றும் நடுத்தர வர்க்க வருமான உயர்வு போன்றவற்றின் காரணமாக அமெரிக்காவிலிருந்து சோயாவை இறக்குமதி செய்கிறது. … இந்த சோயா நேரடிப் பயன்பாட்டுக்கு அல்ல. நான்கு மடங்கு தானியங்களுடன் ஒரு மடங்கு சோயா கலந்து கால்நடைத் தீவனமாக்கினால் கூடுதலான இறைச்சி கிடைக்கிறது. அதனால் இறக்குமதி செய்யும் சோயா அனைத்தும் கால்நடை வளர்ப்புக்கே செல்கிறது. இன்றைய நிலவரப்படி சீனர்கள் வருடத்திற்கு 13 மில்லியன் கோழி இறைச்சி சாப்பிட்டு அமெரிக்கர்களை முந்தியிருக்கிறார்கள்.

“தலைகீழ் மாற்றமடைந்துள்ள சீனர்களின் உணவுப் பழக்கம் உலகின் விலைவாசி உயர்வுக்கு அதிக வாய்ப்பை ஏற்படுத்திவிட்டது என்கிறது U.S. Grains Council”. இப்படியாக சிந்திக்கவைக்கும் கருத்துக்களைக் கொண்ட அடர்த்தியான கட்டுரைகளாக அவை திகழ்கின்றன. பல இடங்களில் ஆசிரியரின் நகைச்சுவை உணர்வு அடிநாதமாக, அடக்கமாகவே ஒலிக்கிறது. ஆனால் அதன் பிரசன்னம் தெளிவாக உள்ளது. வரலாறு, நிலநூல், தாவர நூல், மிருகவியல், அனைத்துலகப் பொருளாதாரம் முதலிய வெவ்வேறுபட்ட தளங்களிலிருந்து அவர் தம் கட்டுரைகளுக்கான கருப்பொருள்களைப் பெறுகிறார். அவருடைய நேரடி அனுபவங்கள், அவருடைய தமிழ் இலக்கிய ரசனை அனைத்தையும் அவற்றுள் கலந்து அவர் கொடுக்கிறார். பாருங்கள், இந்த ‘சாம்பு ஐயரும் சாம்பாரும்’ கட்டுரையில் பல தகவல்களைச் சொல்லி போகிற போக்கில்

“நெல்வரித் தொழுவார் கூர்வாள் மழுங்கின்பிள்ளை மறத் தொடரியக் கல் செத்துஅண்ணல் யாமைத் தன் கூன் புறத்துரித்தும்நில்லமல் புரவு”

என ஒரு புறநானூற்றுப் பாடலை அப்படியே வீசி “.. என்ற பாட்டு நமக்குக் கிடைத்திராவிட்டால் பழங்காலத்தில் தமிழகத்தில் நிலவிய ஆண்டான் அடிமை கலாசாரம், நெல் அறுக்கும் அரிவாளைத் தொழிலாளர்கள் ஆமை ஓட்டில் வைத்து கூர் தீட்டிய செய்திகள் போன்றவை நமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை” என்று எழுத இலக்கியப் பரிச்சயமும் இலக்கிய மனமும் இல்லாவிட்டால் எப்படி? அண்மையில் நான் வாசித்த நூல்களுள் அட்டையைத் திறந்தவுடனேயே என்னைக் கவர்ந்திழுத்து தொடர்ந்து படிக்கவைத்த நூல் இதுதான். ஷாநவாசின் “அயல் பசி” தமிழ் இலக்கியத்துக்கு ஒரு நல்ல வரவு. வாழ்த்துவோம். (நல்ல முறையில் அச்சிடப்பட்டுள்ள இந்த நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆங்கிலச் சொற்களின் எழுத்துக் கூட்டல்களில் அதிகமான தவறுகள் உள்ளன. Cock’s Comb என்று இருக்க வேண்டியது coks comp ஆக உள்ளது. Scholar என்னும் சொல் scholor என வந்திருக்கிறது. Bass இன மீன் என்பது BASA என இருக்கிறது. Sogo worms என்பது Sogo warms என இருக்கிறது. Khmer Rouge என இருக்கவேண்டியது Khmer rough என வந்திருக்கிறது. இன்னும் பல. தேவையில்லாத இடங்களிலெல்லாம் ஆங்கில capital எழுத்துக்கள் மானாவாரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. பயன்படுத்தப்பட வேண்டிய இடங்களில் இல்லை. இவ்வளவு அருமையான உள்ளடக்கம் கொண்ட நூலுக்கு இவை கறுப்புப் புள்ளிகளல்லவா? மெய்ப்புப் பார்ப்பதில் பதிப்பாளர்களுக்குக் கவனம் அவசியம்.)

விருதுகள் பலபெற்ற எழுத்தாளர் ஷாநவாஸ் – மா.அன்பழகன்

Posted: ஜூன் 18, 2021 in வகைப்படுத்தப்படாதது

ஒருவரை அல்லது ஒரு குடும்பத்தாரை நம் இல்லத்திற்கு அழைத்தோமெனில் பகல் உணவுநேரத்தில் அழைப்பதா? இரவு விருந்துக்கு அழைப்பதா? என்றுதான் யோசிக்கிறோம். ஆனால்முன்பெல்லாம் அப்படியேதும் பெரிதாகத் திட்டமிடல் இல்லை. எதிர்பாராதவிதமாக வீட்டுக்குயாரேனும் வந்துவிட்டால் இருப்பதைக் கொடுத்து உண்ணச் செய்யாமல் அவர்களைஅனுப்பமாட்டார்கள். அந்த அளவுக்குப் பிறருக்குக் கொடுக்கக்கூடிய நிலை ஏற்படலாம்என்றெண்ணிச் சற்றுக் கூடுதலாகவே சமைப்பார்களாம். ஆனால் இப்போது தலைகளை எண்ணி, அளந்து, நிறுத்துச் சமைக்கிறோம்.

சிங்கப்பூரில் ‘உணவு’ – தயாரிப்பு முறை, அதன் சிறப்பு என்று இன்று சொன்னால் அது சிராங்கூன்டைம்ஸ் இதழின் இன்றைய முதன்மை ஆசிரியர் திரு. ஷாநவாஸ் அவர்களின் நினைவுதான் நமக்குஉடனே வரும். தமிழகத்தில் இருந்தபோது பணியில் இருந்தோம்; பொருளீட்டினோம்; தகப்பனார்வசித்து வந்த சிங்கப்பூருக்கு வந்துவிட்டோம்; பிள்ளைகள் எல்லோரும் வளர்ந்துவிட்டார்கள். அவர்களுக்குக் கல்வியைக் கொடுத்து, பொருளீட்டும் வழியைக் காட்டிவிடவேண்டும்; திருமணத்தைச் செய்து வைக்கவேண்டும் போன்ற பொறுப்புகள் இருக்கின்றன. தொழில் செய்யும்நமக்கு ‘இலக்கியம்’ ‘எழுத்து’ – இவையெல்லாம் தேவையா அதெல்லாம் நமக்கு ஒத்து வராது; அத்துடன் அதில் வெற்றி பெறவும் முடியாது என்றெல்லாம் தயக்கம் காட்டாமல்; குடும்பச் சூழல்கருதி யோசிக்காமல் எழுதத் தொடங்கினாரே – அதுதான் இதைப் படிப்பவர்களாகிய நமக்குஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கிறது. எழுதுவதற்கு எதுவும் தடையாய் இருந்ததில்லைஎன்பதை நினைவூட்டி நமக்கு ஓர் முன்னுதாரண மனிதராக விளங்குகிறார் ஷாநவாஸ்.

தமிழ்நாடு முகவை மாவட்டம் நத்தம் அபிராமம் எனும் கிராமத்தில் 1961ஆம் ஆண்டு பிறந்தார். மலாயா என்று இந்த நாடு ஒன்றாக இருந்தபோது 1940களில் அதாவது இரண்டாம் உலகப்போரின்போது இவரது தந்தை பினாங்குக்கு அழைத்து வரப்பட்டவர். பின்னர் சிங்கப்பூருக்குக்குடிபெயர்ந்தது வணிகம் செய்து வாழ்ந்து வந்தவர்

ஆனால் ஷாநவாஸ் தாயாருடன் தமிழகத்திலேயே  ஊரில் படிப்பைத் தொடங்கி திருச்சி ஜமால்முகமது கல்லூரியில் இளங்கலை பட்டத்தையும், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில்முதுகலைப் பட்டத்தையும் படித்து முடித்தார்.

படிக்கும்போதே கவிதை எழுதும் ஆர்வம் கொண்டவராய்த் திகழ்ந்தார். அத்துடன் ஜமால் முகமதுகல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் புலவர் நைனா முகமது அவர்கள்தான் ஷாநவாஸுக்குத் தமிழ்இலக்கிய ஆர்வத்தைத் தூண்ட முதற்காரணமாய்த் திகழ்ந்தவர். அதனால் அவரையே தம் இலக்கியப்பயணத்தின் முதல் குருவாக  ஏற்றுக்கொண்டுள்ளார்.

படிக்கும்போதே இடதுசாரி சிந்தனையுள்ள பொதுவுடமை இயக்கத்தின் துணை அமைப்பாகியதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் சேர்ந்து மானாமதுரை கிளையின் செயலாளர்பொறுப்பேற்றுச் சொற்பொழிவு, நாடகம், பட்டிமன்றம் போன்றவற்றிற்கு மேடைகளை உருவாக்கிக்கொடுத்ததோடு தானும் அவற்றில்  பங்கேற்றவர். ஒருமுறை குன்றக்குடி அடிகளார் தலைமை வகித்தபட்டிமன்றத்தில் பங்கேற்றதைப் பெருமையுடன் நினைவுகூர்கிறார்.

தமிழகத்தின் புகழ்பெற்றக் கவிஞர் மீரா அவர்களின் இதழில் ‘அன்னம் விடு தூது’ என்ற கவிதையைஅன்றே எழுதித்தம்  இலக்கியப் பயணத்தைத் தொடங்கியவர். நாடகம் எழுதி இயக்கி நடித்தும்இருக்கிறார்.

சிறுகதை மன்னன் ஜெயகாந்தன், பொதுவுடமை இயக்க ஊடவியலாளர் அறந்தை நாராயணன், திரைப்படப் பாடலாசிரியர் கவி கா. மு. ஷெரிப் போன்ற பெரிய  சாதனையாளர்களுடன் பழக்கமும்அறிமுகமும் கிடைத்தை எண்ணிப் பெருமைப்படுகிறார். குறிப்பாகக் கவியரசு கண்ணதாசன்அவர்களைச் சந்திக்க வேண்டும் என்ற அவாவில் மூன்று நாள்கள் கவிதா விடுதியில் தங்கி இருந்துசந்தித்துப் பழகியதை ஒரு பேறாகவே கருதுகிறார்.

கலை இலக்கியப் பெருமன்றத்திற்காகக் ‘கிருதயுகம்’ எனும் திங்கள் இதழை நண்பர்களுடன்இணைந்து கையெழுத்துப் பிரதியாக நடத்தியவர்.

தமிழகத்தில் மத்திய அரசுத்துறையில் உத்தியோகத்தில் இருந்தவர், தமது தந்தையுடன் சேர்ந்துபொருளீட்டலாம் என்ற எண்ணத்தில்,  தமது 34ஆம் அகவையில் அதாவது 1995ஆம் ஆண்டுசிங்கப்பூருக்கு வந்தார். தொடக்கத்தில் நாணய மாற்று வணிகத்தில் ஐந்து ஆண்டுகள் பணிசெய்தார்.  ஈராயிரமாம் ஆண்டுகளுக்குப் பின் உணவகத் துறையில் நுழைந்தவர் இன்னும்அதிலிருந்து மீளவில்லை.

வகிதாபானுவை மணந்து , பிள்ளைகளுக்கு மணமுடித்து இன்று தனித்தனி சுதந்திரவாழ்க்கையை வாழ அவர்களுக்கு வழிவகுத்துக் கொடுத்துள்ளார்.

கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்து, அவரிடம் இருந்துவந்த வாசிப்புப் பழக்கம்தான்பிற்காலத்தில் இவருடைய படைப்புகளைப் பிறர் படிக்கும் நிலைக்கு உயர்த்தியது எனலாம்.

இடைக்காலத்தில் தமிழர்களிடையே வாசிக்கும் பழக்கம் குறைந்திருந்தது என்பதை நாம்அறிவோம். ஆனால் கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாய்ச் சென்னையில் புத்தகக் கண்காட்சிதொடங்கப்பட்டு மக்களிடையே வாசிக்கும் பழக்கத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். சிங்கப்பூரிலிருக்கும் நூலகத்திற்காகச் சில அதிகாரிகள் அக்கண்காட்சிக்குச் சென்று தமிழ்நூல்களைத் தேர்வுசெய்து வாங்கி வருகின்றனர்.

சென்னைக் கண்காட்சியில் ஒரு நூல் விற்பனையாளரை அணுகி ‘உங்களிடம் எந்த வகையானநூல்கள் அதிகம் விற்பனையாகின்றன?’ என்று கேட்டால், ஆரூடம், திரைப்படம், மற்றும்சமையற்குறிப்பு நூல்கள்தாம் நிறைய விற்பனையாகின்றன என்கிறார். ஆனால் நமது சிங்கப்பூர்ப்படைப்பாளர்கள், ‘என் நூல்களை வாங்கி நூலகங்களில் வாசிப்புக்கு வையுங்கள்’ என்று நூலகவாரியத்திடம் கேட்டால், அவர்கள் பிரச்சினையில்லா அனைத்துச் சிங்கப்பூர்படைப்பிலக்கியங்களையும் வாங்கிக்கொள்கிறார்கள். புனைவு நூல்களாகிய சிறுகதைகளுக்குமுன்னுரிமை கொடுத்து, அதிகப் படிகளை வாங்குகிறார்கள். அதையடுத்துத்தான் சிறுவர்களுக்கானநூல்கள், கட்டுரை, கவிதை நூல்களை இந்த வரிசையில் வாங்குகின்றனர்.

இந்த வரிசை நூலகத்தாரால் உருவாக்கப்பட்டது எனக் கொள்ளல் தவறு. சிங்கப்பூரில் தேசியநூலகம் உள்பட சுமார் முப்பது வட்டார நூல்கங்களிலும் பொதுமக்கள் நூல்களை இரவல் வாங்கிப்படிக்க வசதி செய்து அரசு கொடுத்திருக்கிறது. மக்கள் அதிகமாக இரவல் எடுக்கும் நூல்களின்புள்ளிவிவரப்படித்தான் அவர்கள் தர வரிசையைக் கணக்கிடுகிறார்கள் என்ற உண்மையை நாம்புரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான் பல அமைப்பின் தலைவர்கள் அதிகமான நூல்களைநூலகங்களில் இரவல் எடுத்துப் படியுங்கள் என்று நமக்கு அறிவுறுத்தி வருகிறார்கள். இல்லையெனில் அரசின் பொதுப்பார்வையில் நமது தமிழ் நூல்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம்குறைந்துவிடுமோ என்ற அச்சம் நம்மிடையே நிலவுகிறது.

சட்டமேதை அண்ணல் அம்பேத்கார் லண்டனுக்குச் சென்றபோது ‘எங்கு உங்களுக்கு அறை எடுக்கவேண்டும்’ எனக் கேட்டபோது, ‘எந்த விடுதிக்கு அருகில் நூலகம் உள்ளதோ அந்த விடுதியில்அறையை எனக்கு உறுதி செய்துத் தாருங்கள்’ என்று சொன்னாராம்.

ஒரு படைப்பாளன் எந்த அளவுக்கு மதிக்கப்படுகிறான் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டைச்சொல்லப்போனால், ஜப்பான் நாட்டின் கரன்ஸி நோட்டில் அந்த நாட்டின் புகழ்பெற்ற ‘சொசுகிநாட்சு’ எனும் நாவலாசிரியரின் படம் இடம்பெற்றிருக்கிறது.

மாவீரன் அலெக்ஸாந்தர், ‘தீபே’ என்கிற பகுதியின் மீது படையெடுத்துப் போகுமுன் அந்தபிரதேசத்தின் சிறந்த கவிஞரான ‘பிண்டார்’ என்பவருக்கும், அவரது வாரிசுகளுக்கும் எந்தவிதபாதிப்பும் நேர்ந்திடக்கூடாதென்று தன் படையினருக்கு ஆணையிட்டானாம்.

ஷாநவாஸ் ஒரு படைப்பாளர் என்பதோடு சமையற்கலை தெரிந்தவராகவும் விளங்கி வருவதால்அவருடைய படைப்புகள் சற்று வித்தியாசமாகவும், படிப்பதற்குச் சுவையானதாகவும் அமைந்துள்ளன. அமெரிக்க நாடு விடுதலை பெற்றபின், அந்த நாட்டின் இலக்கியம், வர்த்தகம், அரசியல், மற்றும்அறிவியலில் சிறந்து விளங்கிய பெஞ்சமின் பிராங்க்ளின் அவருக்குத்தான் முதன் முதலில்தபால்தலை வெளியிடப்பட்டது.  அவ்வளவு சிறப்புடைய பெஞ்சமின், “இறந்த பிறகும் நீங்கள்மறக்கப்படாதிருக்க வேண்டுமானால், சிறந்த படைப்புகளை எழுதுங்கள்”  என்று சொல்லியுள்ளார்.

2008 வாக்கில் கவிமாலை நடத்திய கவிஞர்களின் ஒன்றுகூடல் மாதாந்திர நிகழ்வுக்குக்  கவிதையுடன் வருகை புரிந்தார்; பரிசையும் பெற்றார். அந்த நிகழ்வுதான் சிங்கப்பூர்  இலக்கியஉலகில் ஷாநவாஸ் முதன் முதலில் தடம் பதித்தது எனலாம். அதன்பின் சில ஆண்டுகள் கழித்துபடைப்புலகில் நுழைகிறார். உணவகத்தொழில் என்பது பொருளாதார வருவாய்க்குத்தான். ஆனால்இதயத்திற்குள் எழுதவேண்டும் என்ற துடிப்பிலேயே இருந்து வந்தார்.  மனநிறைவும் மகிழ்ச்சியும்பெருமையும் நூல் படைப்பதானால் கிடைக்கிறது என்றும்,  வாழ்வதன் அர்த்தம் அதிலேதான்பூர்த்தியாகிறதென்றும் ஆய்ந்து நம்பினார். அதனால்தான் இதுவரை பத்து நூல்களை நமக்குப்படைத்தளிக்க அவரால் முடிந்திருக்கிறது.

ஷாநவாஸ் தமிழகத்தைவிட்டு இங்கு வந்தபோது, மன அளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டார்எனலாம். காரணம் ஊரோடும் உறவோடும், நட்போடும் பெரிய அளவில் நெருக்கமாகப் பழகிவந்தவர். திடீரென்று அத்தனை அன்பிற்குரிய உறவுகளைப் பிரிந்து சிங்கப்பூர் வந்தபோது பைத்தியம்பிடித்தவர்போல் உளைச்சலில் இருந்த தம்மை மாற்றியது இலக்கிய ஈடுபாடுதான் என்கிறார்.

பொதுவாகப் பேச்சாற்றல் மிக்கவர்கள் நிகழ்காலத்தை வென்றவர்களாக இருப்பார்கள்.  ஆனால்சிறந்த படைப்பாளர்கள் எதிர்காலத்தை வென்றவர்களாக இருக்கிறார்கள். நமது எழுத்தாளர்ஷாநவாஸ் படைப்புலகில் நுழைந்து  குறுகிய காலத்திலேயே தம் கண்முன்னே பல பரிசுகளையும், விருதுகளையும் பெற்றவராய்த் திகழ்கிறார்.

நூல் உருவாக்கம் என்பது ஒரு சாதாரண செயலன்று. ஒரு நூலை எழுதித் தயாரித்துவிட்டால்  அவர்ஒரு படைப்பாளி எனும் பதவி உயர்வு பெற்றுவிடுகிறார். அவருக்குச் சென்ற இடங்களிலெல்லாம்பெருமை கிடைக்கிறது. படைப்பாளிக்கு ஒருநேரத்தில் மரணம் நிச்சயம்; ஆனால் அவருடையபடைப்புக்கு மரணமே இல்லை. பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இன்றும் நாம் தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற வரலாறு படைத்த பல இலக்கியங்களைப்படித்தும்,  பின்பற்றியும், அதன் பெருமைகளைப் புகழ்பாடியும் வருகிறோம்.

பாரதியாருக்குப் பிடித்தமான இத்தாலியப் போர்வீரன் மாஜினி. “எனக்குத் தண்டனைகொடுப்பதற்காக ஆளில்லாத்  தனித்தீவில் கொண்டுபோய்விட எண்ணினால், அப்படியேசெய்யுங்கள். ஆனால் எனக்குக் கைநிறைய புத்தகங்களை மட்டும் கொடுத்துவிடுங்கள்” என்றானாம்.

கொடுங்கோலன் முசோலினிக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள்  முற்பட்டபோது மயக்கமருந்து கிடைக்கவில்லை. இதை அறிந்த முசோலினி புத்தகம் ஒன்றை வரவழைத்து ‘நான்படித்துக்கொண்டே இருக்கிறேன். அந்தநேரத்தில் உங்கள் அறுவையை முடித்துவிடுங்கள்’ என்றானாம்.   ஒருவன் ஒரு புத்தகத்தைப் படிக்கத் தொடங்கிவிட்டால் ஆழ்கடலில்முத்தெடுப்பதுபோல் வெளிச்சூழலை மறந்துவிடுகிறான். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றுதெரியாமலே புத்தகத்திற்குள் ஆழ்ந்து விடுவான். இதுதான் ஒரு நல்ல வாசகனின் அடையாளமும்நல்ல நூலின் அடையாளமும்.  இதிலிருந்து நூல்களின் அவசியத்தையும் அருமையையும் நம்மால்உணரமுடிகிறது.

கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே என்பதைப் போல், தன் ஆசையை நிறைவேற்றஇயற்கையாகத் தன்னுள் எழுந்த சிந்தனையை அவ்வப்போது நூல்களாக வெளிப்படுத்திக்கொண்டே வந்தார் ஷானவாஸ். அதற்கு ஊடகத்துறை அவருக்கு ஏதுவாகவும், உதவியாகவும்இருந்தன.

குட்டித் தீவை எட்டிப்பார்த்தேன்” எனும் கட்டுரை நூலை முதலில் எழுதினார். கிராமத்தில் ஒருகருத்தியலைச் சொல்வார்கள். ‘முதல் கொலை ஒன்று செய்வதுதான் ஒருவனுக்குக் கடினம். ஒருமுறை செய்துவிட்டால், பிறகு அடுத்தடுத்துக் கொலைகளைச் செய்வது என்பது அவனுக்குச்சர்வ சாதாரணமாகப் போய்விடுமாம்.  அதைப்போல் எந்த எழுத்தாளனுக்கும் முதல் நூல் ஒன்றைஉருவாக்கும்போது அவன் படும் சிரமங்கள் ஏராளம். பின்னர் தொடர்ந்து வெளியிடுவதுஎளிதாகிவிடுகிறது.

கைவலிக்க எழுதி முடிக்க வேண்டும்; சிந்தனையைச் சீர் செய்து கருத்துகளைக் கோர்வையாகமாலைபோல் தொடுக்க வேண்டும். நூலுக்கான செலவினத்தை எதிர்கொள்ளத் தேவையானபொருளாதாரத்தை முதலில்  உருவாக்க வேண்டும். ஏனெனில் நாமெல்லாரும் தொழில்முறைஎழுத்தாளர்கள் அல்லர். யார் குறைந்த செலவில் அச்சாக்கித் தருபவர்கள் என்று தேடவேண்டும்; பிறகு மெய்ப்பு பார்க்கவேண்டும்; நாம் முற்றிலும் இலக்கணம் அறிந்தவர்கள் அல்லர். அதனால் ஒருமொழியியல் வல்லுநரிடம் கொடுத்துப் பிழை திருத்தம் செய்துகொள்ளவேண்டும்; பின்னர்புத்தகத்தின் அட்டைப்படம் உள்ளே பக்க வடிவமைப்புகளில் நம் எதிர்பார்ப்புகளைச் சொல்லிநனவாக்க வேண்டும்;  தாய் ஒரு கருவைச் சுமந்து பல இன்னல்களைச் சந்தித்துஈன்றெடுப்பதைப்போல் ஒரு நூலை வெளியாக்கவேண்டும். இதை நாம் ஒரு ‘ஆண் பிரசவம்’ என்போம்.

ஷாநவாஸ் முதல் நூலை உருவாக்கும்போது மேற்கண்ட சவால்களை எதிர்நோக்கியிருப்பார். ஆனால் அடுத்தடுத்து நூல் உருவாக்கங்களில் சிரமங்கள் குறைந்துகொண்டே வந்திருக்கும். அந்தஅடிப்படையில்தான் இதுவரை பத்து நூல்களை நமக்குத் தந்திருக்கிறார்.

சிங்கப்பூர் சிறைச்சாலையில் கைதிகளின் சினங்களையும், வன்முறை போக்குகளையும் தணிக்கும்சிந்தனையை வெளிப்படுத்தும்  “துண்டு மீனும் வன்முறை கலாசாரமும்” எனும் ஒரு நூலைஇரண்டாவதாக வெளிக்கொணர்ந்தார்.

புலம் பெயர்ந்தவர்களுக்ககான சத்து கோஸம் சத்து துளோர் என்பதன் பொருள்கொண்ட    “முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும்” எனும் இன்னொரு நூலைப் படைத்தார்.

அவர் படைத்த இன்னொரு சிறந்த நூல், மனித வாழ்வின் அடியாதாரமான உணவு எனும் மாபெரும்சக்தியின் சித்திரங்களையும், விசித்திரங்களையும் பற்றிய “அயல் பசி ” எனும் நூல்.

தம் 25 ஆண்டுகால சிங்கப்பூர் அனுபவங்களைப் பிரதிபலிக்கும் “நனவு தேசம்” எனும் கட்டுரை நூல்அடுத்து வெளிவந்தது.

அடுத்து ஒரு கவிதைத் தொகுப்பு “சுவை பொருட்டன்று ” எனும் நூல்,

ஆங்கில மொழி மாற்றத்துடன்கூடிய    சிறுகதைத் தொகுப்பான  ” மூன்றாவது கை ” எனும் நூல்என்பது அவருடைய நூல்களில் குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்ந்து அவர் வெளியிட்ட நூல்களாவன “ஒலி மூங்கில்”  “இடமும் இருப்பும்” (சிறுகதைகள்)  மற்றும் ஒரு நூல் “காலச்சிறகு”  எனும் கட்டுரை நூல்.

ஆக ஷாநவாஸ் கவிதை, கட்டுரை, கதை எனும் படைப்புகளின் எல்லா ஆளுமைகளிலும் பயணித்துவருகிறார்.

இவற்றில் ‘அயல்பசி’ – நூலில் அடங்கிய கட்டுரைகள்  2012ஆம் ஆண்டின் சிறந்த பண்பாட்டுக்கட்டுரைகள் அடங்கிய நூல்  என பிரபல எழுத்தாளர் எஸ்ரா அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதுஎன்பது ஒரு சிறப்புக்குரிய செய்தி.

2014ஆம் ஆண்டில்  சிங். புனைவு இலக்கியப் பரிசைப்  பெற்றிருக்கிறது. ‘மூன்றாவது கை’  எனும்சிறுகதைத் தொகுப்பு நூலானது,  சிங். தமிழ் எழுத்தாளர் கழகமும் ஆனந்தபவன் உணவகமும்இணைந்து நடத்தும்  மு.கு. இராமச்சந்திரா புத்தகப் பரிசையும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சிங்கப்பூர் தொழிலதிபரும், சிராங்கூன் டைம்ஸ் இதழின்உரிமையாளருமான  திரு எம் ஏ முஸ்தபா அவர்கள் ஆண்டுதோறும் ஒரு சிறந்த படைப்புக்குத் தரும்  ‘கரிகாற்சோழன் விருதினை’ 2015ஆம் ஆண்டு  அதே அயல்பசி நூல் பெற்றது.

2016ஆம் ஆண்டு ‘நனவு தேசம்’ எனும் நூல்,  புத்தக மேம்பாட்டு வாரியத்தின் சிறந்த சிங்கப்பூர்புனைவு அல்லாத (அபுனைவு) இலக்கியத்திற்கான சிறப்பு பரிசினைப்  பெற்றது.

தற்போது “ருசி பேதம்” எனும் நூலை எழுதிக்கொண்டிருக்கிறார்.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக உணவகத் தொழிலில் இருப்பதால் தொழில் நடத்துவது  பழகிவிட்டது.  எழுத நேரம் ஒதுக்குவதற்குச் சற்றுச் சிரமாக இருந்தாலும், தேர்ந்த சமையல்தொழிலாளர்களும் மற்ற உதவியாளர்களும், அவருடைய இல்லத்தரசியும் கைகொடுத்துஉதவுவதால், அவ்வப்போது  தம் சிந்தனையில் தோன்றுவதை ஊறப்போட்டு, உறங்கும் நேரத்தைக்கொஞ்சம் திருடி எழுதுவேன் என்கிறார். என் படைப்புகள் சற்று வித்தியாசமாக இருந்ததால்பல்வேறு நாடுகளின் வாசிப்பாளர்கள் படித்துவிட்டு இன்றும் பாராட்டி வருகின்றனர் என்றுபெருமையோடு சொல்கிறார்.

சிங்கப்பூரில் ‘வாசகர் வட்டம்’ எனும் அமைப்பில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு அதன் வளர்ச்சியில்தோழமைகளுடன் இணைந்து பாடுபட்டு வருகிறார். சிராங்கூன் டைம்ஸ் இதழ் வாயிலாகப் பல புதுஎழுத்தாளர்களுக்கு எழுத வாய்ப்புகளைக் கொடுத்து ஊக்கப்படுத்துகிறார்.

அவருடைய எண்ணங்கள் ஈடேற நாம் வாழ்த்துவோமாக!

மா. அன்பழகன்

கதை, கவிதை, கட்டுரை என பல தளங்களிலும் 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். திரைப்படத் தயாரிப்பாளர், கே.பாலச்சந்தரின் உதவி இயக்குநர் போன்ற மற்ற திறன்களும்இவருக்கு உண்டு. சிங்கப்பூரின் முக்கியத் தமிழ் அமைப்பான கவிமாலையின் காப்பாளர்.

யாதும் ..பா .சிங்காரம் விருது

Posted: மார்ச் 5, 2021 in வகைப்படுத்தப்படாதது

கல்லூரி நாட்களில் கட்டம் கட்டி வரும் மெட்ராஸ் டைரியை தவற விடாமல் வாசிக்கும் எனக்கு அதை எழுதியவரே என் முன்னால் வந்து நின்ற போது இன்ப அதிர்ச்சியாக இருந்தது ,சென்னை மாநகர் குறித்த வரலாற்றை சாமானியரும் படிக்கும் வண்ணம் கதைகளாய், நிகழ்வுகளாய் எழுதி, ஆவணப்படுத்தி, தமிழ் நாட்டின் இன்றைய தலைநகர் குறித்து பெருமிதம் கொள்ளச் செய்த திரு முத்தையா நீங்கதானே எழுத்தாளர் ஷா நவாஸ் ,உங்களைச் சந்திக்கத்தான் வந்தேன் என்றார் .பல சிறந்த மனிதர்களை எனக்கு அறிமுகம் செய்த திரு அருண் செங்குட்டுவன் அவர்களின் மூலமாகத்தான் என்னைச் சந்திக்க வந்திருந்தார்கள். மெட்ராஸ்டைரியைப் பற்றி என் நினைவில் நின்ற விஷயங்களையெல்லாம் நான் சொல்ல , புன்னகையுடன் ஆமோதித்துக் கொண்டே தான் தென்கிழக்காசியாவின் வரலாறு பற்றிச் சில செய்திகளை தொகுப்பதற்கு சிங்கப்பூர் வந்துள்ளதாகச் சொன்னார்கள் ,திரு சாமுவேல் துரைசிங்கத்தை சந்திக்க அழைத்துச் சென்றேன் , 1930 களில் தரவுகள் இல்லாமல் வெற்றிடமாக தான் நினைக்கும் சில நிகழ்வுகளைப்பட்டியலிட்டார்கள் . தொடர்ந்து அது பற்றிய தகவல்களுடன் பல தடவை உரையாடிவந்தார்கள் ,அவர்கள் மறைவு .வெளி வர வேண்டிய பல வரலாற்று ஆவணங்களை நாம் இழந்துவிட்ட தருணமாக நான் உணர்ந்தேன்.இளம் வயதிலேயே உங்கள் பாரம்பரியத்தை மதித்துக் காப்பதற்கும், நீங்கள் வாழும் இடத்தைப் பற்றியும் உங்களுக்குக் கற்பிக்கப்பட்டுவிட்டால் அவற்றை நேசித்துப் பேணுவீர்கள். நீங்கள் படிக்கும் கல்வி அதைக் கற்றுத்தராமல் வெறுமனே அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் வர்த்தகத்தையும் கற்றுக்கொடுத்தால், உங்கள் சொந்த ஊரின் பாரம்பரியம், உங்கள் மாநிலம், உங்கள் நாட்டின் பாரம்பரியமெல்லாம் உங்களைப் பொறுத்தவரை அர்த்தமற்றவையாக இருக்கும். அதனுடன் உங்களுக்கு எந்தத் தொடர்பும் இருக்காது” திரு முத்தையா அவர்களின் வார்த்தைகள் என் காதில் ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன .கோம்பை S அன்வர், அப்படிப்பட்ட மிகச் சிறந்த வரலாற்று ஆய்வாளர் முத்தையா அவர்களுடன் 25 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு நிலைகளில் உடன் பணியாறறியவர். தமிழ் முஸ்லிம்களின் வரலாற்றை சித்தரிக்கும் “யாதும்” என்ற அன்வரின் ஆவணப்படத்தை முத்தையா அவர்களே வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது .


அசைட் என்று சென்னையை மையமாகக்கொண்டு வெளிவந்த ஆங்கிலப் பத்திரிகையில் ஃபிரீலான்ஸ் பத்திரிகையாளராகவும், புகைப்படக் கலைஞராகவும் தனது ஊடகப் பயணத்தை துவக்கியவர் இன்று “வரலாற்றை” பதிவு செய்வதையும் ஆய்வாளராக தென்னிந்திய முஸ்லிம் வரலாற்றை ஆய்வு செய்வதயும் குறிப்பாக பெரிதும் தவறுதலாக எழுதப்பட்ட, புரிந்து கொள்ளப்பட்ட, முஸ்லிம் வரலாற்றில் கோம்பை அன்வர் கவனம் செலுத்தி வருகிறார் கி.பி 1600-ல் இருந்து கி.பி 2000 வரையிலான சென்னை வரலாற்றைத் தொகுத்தளிக்கும் “Madras Gazateer Project”-ல் அவரும் ஒரு பங்களிப்பாளர். தஞ்சை “பெரிய கோவில்” பற்றிய குறும்படங்களை இந்திய தொல்லியல் துறைக்காக எடுத்திருக்கிறார் கருட வாகனத்தில் பெருமாள் எடுத்துச் செல்லப்படும் காட்சியுடன் மேளம் முழங்க ஊர்வலம் சென்று அங்குள்ள மசூதியைத் தாண்டிச் செல்லும் காட்சியுடன் துவங்கும். அந்தக்குறும்படம் தமிழக இஸ்லாமியர்களின் வாழ்க்கையையும் வழிபாட்டையும் சித்திரிக்கிறது பல நூறு ஆண்டுகளுக்கு முன் குறுமிளகு, ஏலக்காய் வர்த்தகத்தின் மூலம் இந்தியாவின் தென்பகுதியில் இருந்த இஸ்லாமியர் சீனாவுடனும், ஐரோப்பாவுடனும், மேற்கு ஆசியாவுடனும் கொண்டிருந்த வணிக உறவையும் தமிழகத்தில் மட்டுமல்லாமல், கேரளத்திலும் இஸ்லாம் வேர்விட்டதையும் அந்தந்தப் பகுதியின் கலாசாரத்தை ஒட்டிக் கட்டப்பட்ட மசூதி அல்லது பள்ளிவாசல்களைப் பற்றியும் அரிய தகவல்களைத் தருகிறார் அன்வர்.

இஸ்லாமியத் தமிழர்களின் இலக்கியப் பங்களிப்பு பற்றியும், அவர்கள் பிற சமூகத்தினரோடு ஒட்டி வாழ்ந்த வாழ்க்கையையும் அழுத்தமாகவே பதிவு செய்திருக்கும் அன்வரையும் அவர் குறும்படத்தையும் காண்பதற்கு ஓர் அரிய சந்தர்ப்பத்தை தமிழ் மொழி விழாவில் 18.04 2015 சிங்கப்பூர் கடையநல்லூர் சங்கத்தினர் ஏற்படுத்தும் கொடுத்தார்கள் .எங்கே தொலைந்தது மண் சார்ந்த அந்த ஒற்றுமையுணர்வு? ஏன் தமிழ்ச் சொந்தங்கள் மத ரீதியாகப் பிரிந்துகொண்டிருக்கின்றன? பண்பாட்டுத் தளத்தில் நான் யார்? எனது வேரும் அடையாளமும் எவை? இந்தக் கேள்விகளைத் எழுப்பிய “யாதும்’ ஆவணப் படம். வெண்கல Remi விருதினை ஹியூஸ்டன் – வட அமெரிக்கா வில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் பெற்றது ,33 நாடுகள் பங்குபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் 550 க்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


முஸ்லிம் மன்னர்கள் படையெடுத்து வந்து, இந்த மண்ணில் ஆட்சி செய்வதற்கு முன்பாகவே முஸ்லிம் மக்கள் இங்கு வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதையும் அவர்களின் தொடர்ச்சிதான் இன்றைய தமிழ் முஸ்லிம்கள் என்பதையும் இயக்குநர் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கும் இ ந்த ஆவணப்படம் தமிழ் என்பது உதட்டளவில் மட்டுமல்ல, முஸ்லிம் களின் வாழ்க்கையிலும் இருக்கிறது என்பதை அவர்களின் வழிபாடு மூலமாகவும் திருமண நிகழ்ச்சிகள் மூலமாகவும் பதிவு செய்திருக்கிறது ,முஸ்லீம்களையும், இந்துக்களையும் மதங்களைச் சொல்லி பிளவுபடுத்திவரும் மிகக் கொடிய இக்காலத்தில், அவைகளுக்கு நேரெதிராக இரு சமூகங்களின் தொப்புள் கொடி உறவுகளைச் சொல்லி, தமிழ் முஸ்லீமின் வேர்களைத் தேடி தனது வாழ்வின் லட்சிய பயணத்தை தொடரும்.


கோம்பை அன்வர் ஆயிரம் கேள்வி, பதில்கள்எனும் ஆயிரம் மசாலா நூல் 16-ம் நூற்றாண்டில் மதுரை தமிழ்ச் சங்கத்தில் முதன் முதலில் அரங்கேற்றப்பட்ட செய்தி ஆலிம் புலவர் அப்பா அவர்கள், முஹம்மது நபியின் மெஹராஜ் இரவு பயணம் குறித்துப் பாடிய யாப்பு “மெஹராஜ் மாலை’ (மிகுராசு மாலை), நாகர்கோவில் கோட்டாறு பள்ளிவாசலில் இயற்றப்பட்ட செய்தி இந்தத் தகவலின் மூலம், முஸ்லீம்கள் பள்ளிவாசலைத் தொழுகைக்கான இடமாக மட்டும் பயன்படுத்தாது, தமிழ் வளர்க்கவும் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை
ஆவணப்படத்தில் நிறைய அம்சங்களையும், நெஞ்சை கலங்க வைக்கும் பல காட்சிகளையும் என்னால் காண முடிந்த்தது பழவேற்காட்டில் உள்ள ஒரு பள்ளிவாசலில், அந்த ஊரில் முஸ்லீம்கள் வந்த வரலாற்றை எழுத்தில் அரபியும், வாசிப்பில் தமிழுமாக எழுதி வைத்துள்ளார்கள் இப்படியான ஒரு நடைமுறையை நாம் எங்கும் பார்த்திட இயலாது.இதேபோல தாய்மொழியை முஸ்லீம்கள் நேசிப்பதற்கு ஒரு உதாரணமாக, இப்படத்தின் துவக்கத்தில் ஒரு காட்சி வரும். அதில் இசுலாமிய மதரசா ஒன்றில், அங்குள்ள மாணவருக்கு, திருக்குரான் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பார், அங்குள்ள ஹஜ்ரத் அப்படி அவர் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பது, தமிழ் மொழி பெயர்ப்பு செய்யப்பட்ட திருக்குரான் ஆகும். இயல்பில் தமிழ் மொழிபெயர்ப்பில் திருக்குரான் இன்று பரவலாக அறியப்பட்டிருந்தாலும், அதிலுள்ள முஸ்லீம்களின் மொழிப்பற்றை யாரும் கருத்தூன்றிப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் அதனை இப்படம் அழகாக எடுத்துக் காட்டி, முஸ்லீம்களின் மொழி நேயத்தைச் சொல்லியிருக்கிறது.

இந்தப் பயணம் தென் கிழக்கு ஆசியா வரை பரவியுள்ள தமிழ் முஸ்லீம்களின் வேர் வரை நீளும் என்று, தனது பயணத்தின் எல்லையை முன்வைக்கிறார் கோம்பை அன்வர் அவரின் அடுத்தடுத்த பயணத்தின் தொடர்ச்சியாக தமிழ் முஸ்லிம் திண்ணை உருவானபோது பொதுத் தளத்தில் முஸ்லிம்கள் பற்றிய புரிதல்களுக்கு சரியாக விளக்கமளிக்கவும் ,முஸ்லிம் படைப்பாளர்களை ஒன்றிணைக்கவும் அவர் எடுத்துக் கொண்ட முயற்சி இன்று பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது .
அந்த முயற்சியில் என்னைப் போன்றவர்களையும் இணைத்து பா .சிங்காரம் விருது மூலம் பங்களிக்க ஊக்குவித்த கோம்பை அன்வர் அவர்களுக்கு மிக்க நன்றி ..தொடரட்டும் அவர் பணி ..

அயல் தேசங்களின் கறி மோகம்

Posted: பிப்ரவரி 19, 2021 in வகைப்படுத்தப்படாதது

உலக உணவுக்கலாசாரத்தில் எவராலும் மறுக்க இயலாத தமிழ்ச் சமூகத்திற்கென உள்ள தனித்துவமான அடையாளம் ‘கறி’. தமிழ்ச் சிந்தனை மரபில் குறிஞ்சியில் உணவுகளைச் சுடுவதும், முல்லையில் வேக வைத்தலும், நெய்தல் நிலத்தில் பொரித்தலும், கறி சமைத்தலும் என்ற வகைப் பண்பாட்டுவளர்ச்சி ஆதிகாலந் தொட்டே காணப்படு கின்றது. இஞ்சி, பூண்டு, மிளகு, கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய் பயன்படுத்தி கறி சமைப்பது பண்டைய மரபு. இதில் கி.பி 15ஆம் நூற்றாண்டில் சிலி நாட்டிலிருந்து மிளகாய் தமிழ்நாட்டிற்குள் புகும் வரை உறைப்புச் சுவைக்காக கறுப்பு மிளகினை (கருங்கறி) மட்டுமே பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இறைச்சி உணவிற்கு அதிகமாக இந்தக் கறியை (மிளகு) பயன்படுத்தியதால் இறைச்சியே கறி என்று பின்னர் வழங்கப்பட்டது என்று பண்பாட்டு அசைவுகள் என்ற நூலில் தொ.பரமசிவம் குறிப்பிடுகிறார்.இது கிட்டத்தட்ட இன்றைய குருமா கறிதான். வெள்ளைப்பூண்டு, வெங்காயம், ஏலக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை சேர்த்து உறைப்புக்காக அதிக மிளகு சேர்த்து சமைக்கப்படும் இந்தக் கறிக்குருமா நம் உணவுக்கலாச்சாரத்துக்குச் சொந்தமானது. ஆனால் அது பாரசீகத்திலிருந்து அறிமுகமாகி, வடஇந்திய சமையலில் க்ளாசிக் வகைகளை உருவாக்கிய லக்னோவில் பாதாம், மஞ்சள், மிளகாய் சேர்க்கப்பட்டு குருமா கறியாக கட்டிப்படுத்தப்பட்டு உருமாற்றம் அடைந்ததாக மேலைநாட்டு உணவு ஆய்வாளர்கள் எழுதி முடித்து விட்டார்கள். இது தமிழர்களின் கருங்கறி பற்றிய குறிப்புகளைக் கவனத்தில் கொள்ளாமல் பதிவு செய்யப்பட்டதாகவே படுகின்றது.


கருமிளகு சேர்த்து சமைக்கப்பட்ட இறைச்சி முக்கியமாக ஆட்டிறைச்சி சில வகையான மீன்கள், நண்டு இவற்றை மிளகாய் இல்லாமல் சமைப்பது இன்றும் தனித்துவமான சமையல் வகையில் உள்ளது. மிளகாய் சேர்க்காமல் கறி இல்லை என்ற நிலை 15ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்கியது. ‘உன்னைப் பச்சை வர்ணத்தில் பார்த்தேன். முதிர முதிரச் செவ்வண்ணம் அடைந்ததால் பார்ப்பதற்கு அழகாய் இருக்கிறாய். உணவிற்கு உயிரூட்டுகிறாய். ஆனால் அதிகம் சேர்த்தால் உணவுப் பாதையை அரிப்பதாக இருக்கிறாய். ஏழையின் நாயகனே, உணவுக்குச் சுவை சேர்ப்பவனே, கடித்தால் காரமானவனே… பாண்டுரங்கா நீ அணுகுவதற்கு கடினமானவன் மிளகாய் போல’ என்று 16ஆம் நூற்றாண்டில் புரந்தரதாசர் பாடிய பாடல் கருமிளகுப் பயன்பாட்டை அயல் நாட்டிலிருநது வந்த மிளகாய் பின்னுக்குத் தள்ளிவிட்டதை உணர்த்துகிறது. அந்நியர்களின் வருகையால் நமக்கு அறிமுகமான முட்டைகோஸ், காலிபிளவர், நூர்கோல், ராடிஷ், கேரட், பீட்ரூட், பட்டாணி, பீன்ஸ், உருளைக்கிழங்கு ஆகியவை நம்முடைய மசாலாப் பொருட்களுக்கு இணையில்லை என்பது மேலைநாட்டினரிடையே இன்னும் தொடரும் கறிமோகம் சொல்லும் செய்தி.


இந்தோனேசியாவுக்கு வடகிழக்கில் உள்ள மொலுக்கா என்றழைக் கப்பட்ட தீவு சிறியதாக இருந்தாலும், கிராம்பு, மிளகு உள்ளிட்ட நறுமணப்பொருட்கள் கொட்டிக்கிடக்கும் இடம். அதனாலேயே அது ஸ்பைஸ் தீவு என்று அழைக்கப்பட்டது. மிளகைக் குறிவைத்து இங்கே முதலில் வந்த வெளிநாட்டவர்கள் போர்த்துக்கீசியர்கள். ஏறக்குறைய 80 வருடங்கள் அவர்கள் ராஜ்யம்தான். தாமதமாக வந்தாலும், ஸ்பைஸ் தீவுகளைத் தங்கள் கால்சட்டைக்குள் போட்டுக் கொள்ளாத குறையாக வசப்படுத்தியவர்கள் டச்சு நாட்டுக்காரர்கள். இங்கு கிடைத்த மிளகு, கிராம்பின் உலகத்தரத்தையும் மதிப்பையும் புரிந்துகொண்ட டச்சு கம்பெனி அதை வேறு நாடுகளுக்கு விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. ஸ்பைஸ் தீவுகளை நிர்வகிக்க எவ்வளவு கடுமையான வழிமுறைகளையும் பின்பற்றத் தயாராக இருந்தார்கள். ஸ்பைஸ் தீவுக்கு மட்டுமே உரிய கிராம்பு வேறு இடங்களுக்கும் கொண்டுசெல்லப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகச் சில இடங்களை மட்டும் விட்டுவிட்டு, மற்ற இடங்கள் அனைத்திலும் கிராம்புச் செடிகளை அழித்துவிட்டார்கள். ஸ்பைஸ் தீவுகளில் மையம் கொள்ள நினைத்த ஆங்கிலேயர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. கிழக்கிந்தியக் கம்பெனியின் பார்வை இந்திய பகற்பம் நோக்கித் திரும்பியது.மஞ்சள், மிளகு, இஞ்சி, கிராம்பு, இலவங்கப்பட்டை, ஏலக்காய், சீரகம், புளி என்று பலதரப்பட்ட மசாலா மணப் பொருட்கள் கலந்து சமைக்கப்படும் கறி இங்கிலாந்தில் கிளாசிக் உணவு வகைகளின் பட்டியலில் உள்ளது.


காஷ்மீரின் சிவப்பு மிளகாய், சர்க்கரைவள்ளிக்கிழங்கு கலந்து செய்யப்படும் ரோகன் ஜோஸ், வடஇந்திய ஆலு பலாக் (கீரைகள், உருளைக்கிழங்கு) நவரத்னா குருமா, ஆலு கோபி, தென்னிந்திய சாம்பார், மிளகு ரசம், மைசூர் பருப்பு, பாசிப்பருப்பு கலவையில் செய்யப்படும் பருப்பு கறி, மத்தார் பன்னீர், தால் மக்னி கலந்த பஞ்சாப் கறி, வறுத்த பருப்பு வகைகளைக் கொண்டு செய்யப்படும் ராஜஸ்தான் கறி வகைகள் வரைக்கும் சமைக்கத் தெரிந்த சமையல்கலை நிபுணர்கள் இந்தியாவை விட இப்போது அயல் நாடுகளில்தான் அதிகம்.அங்கு மிகப் பிரபலமாயிருக்கும் மிர்ச் மசாலா, எட்ச் ஆஃப் ஸ்பைஸ், மிஸ்ஸிஸிபி மசாலா, ஸ்பைஸ் வோர்ல்ட், ஓல்ட் ஸ்பைஸ், சுகர் அண்ட் ஸ்பைஸ், சிக்கன் டிக்கா மசாலா, கரம் மசாலா வகைகள் கறி மகிமை ..இதில் சுவரஸ்யம் ஆங்கிலேயர்களின் பல குடும்பப் பெயர்கள் எட்வின் கறி, டிம் கறி, ஆடம் கறி .அயல்தேசங்களின் கறி மோகம் சுவைக்காக மட்டுமல்ல, அதன் மருத்துவக் குணங்களுக்காகவும்தான். தாய்லாந்து கறியில் நம்முடைய கலவைகள் தவிர்த்து காரமான எலுமிச்சை இலை கூடுதலாகச் சேர்க்கிறார்கள். மலேசியக் கறி வகைகளும், தாய்லாந்து கறி வகைகளும் கிட்டத்தட்ட ஒரே வகையில் உள்ளது.


சீனக்கறியில் மஞ்சள் அதிகம் சேர்ப்பதில்லை. வெள்ளை மிளகுத் தூள், சோயா சாஸ் கலந்திருக்கும். ஜப்பானின் kare raisu மாட்டுக்கறி கலந்த கறி. கொஞ்சம் இனிப்பாக இருக்கும். ஜப்பானுக்குக் கலாச்சார ரீதியில் அதிகம் தொடர்பில்லாத இந்திய மசாலாப்பொருட்கள் அங்கு பிரபலமானதற்கு ஒரு காரணம் சொல்வார்கள். இந்திய மசாலாக்கள்தான் இங்குள்ள குழந்தைகள் உயரமாகவும், உடற்கட்டுடனும் பிறக்க காரணம் என்ற நம்பிக்கை இருந்திருக்கிறது. 1903ல் Osakaவில் மசாலாத் தூள் விற்பனையை முதன் முதலில் துவங்கிய பதிவுகள் Yokohama நகரத்தில் உள்ள Yokohama Curry மியூசியத்தில் உள்ளன.
இந்தோனேசியாவில் சாப்பிடும்போது கேரளா மாநிலத்தின் தேங்காய் பால் அதிகம் கலந்த கறி வகைகள் சுவை இருக்கிறது .. ஆந்திரக் கறி வகைகள் இலங்கை கறி வகைகளை ஒத்திருக்கின்றன. சிங்கப்பூர் கறி என்றால் அது மீன் தலைக்கறிதான். சமீபத்தில் 2000 மீன் தலைகளை ஒரே நேரத்தில் விற்பனை செய்து சாதனை படைத்திருக்கிறது. ஒரு பண்பாட்டை இன்னொரு பண்பாட்டின் அளவுகோலுடன் அல்லது மதிப்பீடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கக்கூடாது. ஆனால் நம் உணவுப் பண்பாடு பல அவதாரங்கள் எடுத்தாலும் அடிப்படையில் அனைத்துக் கறி வகைகளிலும் தென்னிந்திய கறி வாசனைதான் வருகிறது.
அயிரை மீன் மூக்கையும், வாலையும் கிள்ளி எறிந்து சட்டியில் அப்படியே கொட்டி அலசி எடுத்து, கஞ்சி போல் திரண்டுவரும் செதில்களைக் கொட்டிவிட்டு புளிச்சாற்றோடு உப்பு கலந்து, சிறிது நேரம் ஊறல் போட்டு மீன் விரைப்பானவுடன் அரிசி கலந்த நீரில் குழம்பை நீர்த்துப் போகாமல் கொதிக்கவிட்டு, மண்சட்டியில் எடுத்து அப்படியே சாப்பிடும் சுவையும் மணமும் அயல் நாட்டு நட்சத்திர உணவகங்களில் கிடைக்குமா?

தோடம் பழம்

Posted: பிப்ரவரி 15, 2021 in வகைப்படுத்தப்படாதது

கிள்ளி வளவன் – தெண்கண் மாக்கிணை முழக்கிச் சென்ற புலவர் எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்க்கு விடியலில் பாம்புத்தோல் போன்ற கலிங்கம், நெய்யில் பொறித்த கறி, மணிக்கலத்தில் தேறலும் . புலவர் கோவூர் கிழார்க்கு வறுத்த உப்புக் கண்டம், கலம் நிறைய பால் வழங்கினான் என்ற குறிப்பு வாசித்தேன் வறுத்த உப்புக்கண்டம் சாப்பிடுவது சங்க காலத்தில் ஒரு மாற்று ருசிப்பண்டமாக இருந்திருக்கிறது .ஆனால் பெரு விருந்துக் கொண்டாட்ட நாட்களில் உப்புக்கண்டம் சாப்பிடுவது மிஞ்சும் இறைச்சியை வீணாக்காமல் பயன் படுத்துவது தமிழர் உணவுக் கலாச்சாரம் ,அது ஒரு சீனப் பெரு நாள் சடங்காக மலேசிய ,சிங்கப்பூர் சீனர்களிடம் எப்படி பரவியது என்று தெரியவில்லை,இந்த ஆண்டு உப்புக் கண்டத்திற்கு இணைய வியாபாரத்தில் அதிக ஆதரவு .பக்வா உப்புக் கண்டம் கிலோ 68 வெள்ளி ஆனாலும் சைனா டவுனில் உள்ள ஒரு புகழ் பெற்ற உப்புக் கண்ட கடையில் நீண்ட வரிசை ஒரு நபருக்கு 50 கிலோவுக்கு மேல் விற்பனையில்லை என்று அறிவிப்பு செய்திருந்தார்கள் ..

பக்வா ,அனேகமாக சிங்கப்பூரில் அனைவருக்கும் தெரிந்திருக்கும் ,ஆடு, மாடு, பன்றி இறைச்சியில் செய்யப்படும் உப்புக் கண்டம் , விழாக்காலங்களில் பன்றி இறைச்சிக்கே முன்னுரிமை அத்தோடு பாரம்பரிய வகையான சுவை என்ற அடிப்படையில் மூலப் பொருளான பக்வா சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது.
விருந்து கொண்டாட்டங்களுக்கு என்னை அழைத்து செல்லும் சீன நண்பர்கள் பக்வாவை என்றுமே என் கண்ணில் காட்டியதில்லை ,பைன் ஆப்பிள் டார்ட் தவிர மிகவும் கவனமாக மாற்று மத நண்பர்களுக்கு உணவுகளை வழங்குவார்கள் . சீனப் பெரு நாள் கொண்டாட்டங்களில் மத சம்பந்தமான சடங்குகளை விட கலாச்சார விழுமியங்களே முதல் நிலை பெறுகின்றன அதற்கு உதாரணமாக மலாய்க் காரர்கள் “யோசுங் “சீனக் கொண்டாடங்களில் கலந்து கொள்ள ஏதுவாக ஹலால் யோசுங் இருப்பது சிங்கப்பூரில் மட்டுதான் ,சீனர்களை படிப்பிலும் ,தொழிலும் இந்தியர்கள் அதிக நண்பர்களாகக் கொண்டது சிங்கப்பூர் ,கடந்த ஆண்டில் மண வாழ்க்கையில் நுழைந்த 5ல் ஒருவர் cheongsam (Chinese ethnic Dress ) ல்மாலை மாற்றிக் கொண்டவர்கள் .


(மாற்று இனத்திலிருந்து தன் இணையத் தேடிக் கொண்டவர்) என்று புள்ளிவிபரங்கள் கூறுகிறது ., என்னிடம் அதிக நாட்கள் வேலை செய்த பல சீனர்கள் தங்கள் வேலையிலும் பழகும் முறையிலும் சீனாக் கலாச்சாரத்தின் மிக உன்னதமான முத்திரைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் ,மத வேறுபாடுகளை ஒரு துளி கூட நான் உணர்ந்ததில்லை ,இரண்டு தோடம் பழங்களுடன் சீனப் பெரு நாள் முதல் நாளில் என்னை முதலில் பார்த்து விட்டு வேலை ஆரம்பிக்கும் நண்பராக பழகிவிட்ட பக்கத்து கடை சீன ஊழியர் தான் செய்யும் கிளாசிக் கடலுணவை நான் ஒரு முறையேனும் ருசித்து பாராட்ட வேண்டும் என்று விருப்பப்பட்டாலும்
என்னைக் கட்டாயப் படுத்துவதில்லை ,

நீ கொடுக்கும் இறைச்சி பிரியாணியை நான் சாப்பிடுகிறேன் ஆனால் நீ சாப்பிட மறுக்கிறாய் என்று ஒவ்வொரு முறையும் Baozhai நினைத்துக் கொண்டிருப்பார் ஆனால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் புலவர் ஆவூர் மூலங்கிழாரை கட்டாயப்படுத்தி “என் மேல் ஆணை புலவரே சாப்பிடுங்க என்று சாப்பிட வைக்கும் குறு நில மன்னன் கீரஞ்சாத்தன் போல் நடந்துகொண்டதில்லை 😁

உருளைக்கிழங்கு மகாத்மியம் ..

Posted: பிப்ரவரி 11, 2021 in வகைப்படுத்தப்படாதது


Potato என்றால் இங்கிலாந்தில் ‘அசலான பொருள்’ என்று அர்த்தம்.’Small Potato’ என்ற சொலவடை ‘ஒரு சின்ன விஷயம்’ என்பதைக் குறிக்குமாம். ‘அழுகிய உருளைக்கிழங்கு’ என்று சொன்னால் மோசமான அர்த்தம் என்று நாம் சொல்லும் அழுகிய தக்காளி என்பதை வைத்து யூகித்துக்கொள்ள வேண்டியதுதான்.
ஆஸ்திரேலியாவில் Potator என்று பெண்களைக் கூப்பிடுகிறார்கள். அமெரிக்கா எப்போதுமே தனிதானே. அவர்கள் அகராதியில் ‘டாலர்’ என்று ஓர் அர்த்தமிருக்கிறது.20ஆம் நூற்றாண்டின் ‘‘Couch Potato’’ என்ற புதிய பெயர் எந்நேரமும் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பவர்களைக் குறிக்கிறது. அதில் இப்போது Mouse Potato என்பதும் சேர்ந்துகொண்டது. இங்கே டிவியை எடுத்துவிட்டுக் கணினியைப் பொருத்தினால் அவர்தான் Mouse Potato.’குலை குலையாய் முந்திரிக்காய்.’ என்ற பாலர் பாட்டு அமெரிக்காவில் உருளைக்கிழங்கு என்று பாடப்படுகிறது. கீழே தவறவிட்ட கிழங்கு ‘Hot Potato’.. இசை வித்தகர் லூயிஸ் ஆம்ஸ்ட்ராங்கின் ‘Potato Head Blues 1927’, பாப் இசைத் தொகுப்பான ‘It is mashed Potato time’’ போன்றவை அந்தந்தக் காலத்தில் ஹிட் அடித்த ஆல்பங்கள். வேக வைத்து, பொரித்து, பொடிமாஸ் செய்து, கறியில் சேர்த்து என பலவகை பயன்பாட்டுக்கு வசதியாகத் திகழும் உருளைக் கிழங்கு, 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை சீனாவில் அறியப்படாமல் இருந்தது. இன்று உலகில் உருளை விளைவிக்கும் நாடுகளின் பட்டியலில் சீனாவும் சேர்ந்துகொண்டது. Eric Jenkins என்ற பிரிட்டிஷ்காரர் ஒரே செடியில் 168 கிலோ உருளைக்கிழங்கு விளைவித்த சாதனையை இதுவரை யாரும் மிஞ்சவில்லை.


உருளைக்கிழங்குக்கு மிகப் பெரிய மரியாதையைப் பெற்றுக் கொடுத்ததே ருசியும், மொறுமொறுப்பும் நிறைந்த அதன் Fries தான். ‘Macdonald’Fries’’ன் ‘Fries’ மாதிரி உலகின் எந்தத் தனிப்பட்ட உணவுக் கண்டுபிடிப்பும் இவ்வளவு பிரபலமாகவில்லை. எனக்கெல்லாம் கெண்டக்கியில் சிக்கன் வாங்குவதோடு சரி .அங்கு சென்றால் fries ஆர்டர் செய்ய மாட்டேன் .
துரித உணவுக் கலாசாரம் பெரும் நம்பிக்கையுடன் உலகில் தனது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள உதவிய முக்கியமான காரணி Burger – Fries ஜோடிதான் என்பதை 70 கிட்ஸ் கூட ஒத்துக் கொள்வார்கள் .7 சதவிகிதம் சோயா எண்ணெயும், 93 சதவிகிதம் மாட்டுக் கொழுப்பும் சேர்த்து Fries பொரித்து முதல் நிலையைத் தக்கவைத்துக் கொண்டது Mac நிறுவனம்.
‘‘Macdonaldன் கிழங்குப் பொரியல்கள் சுவையாக இருப்பதற்கு அவர்கள் பயன்படுத்தும் தரமான கிழங்குகள் காரணமல்ல. மாறாக, தொழில்நுட்பம்தான்’ என்கிறார் Fast Food Nation என்ற புத்தகத்தை எழுதிய எரிக் ஸ்காலர்.


Mac நிறுவனம் உருவாக்கிய எந்திரங்களைப் பிரதியெடுத்து ‘Fries’செய்த மற்ற நிறுவனங்களுக்கு அந்த மொறுமொறுப்பு கைகூடவில்லை. பொரிக்கும் எண்ணெயில் கலக்கப்படும் ஒருவித இரசாயனமே இந்த மேஜிக் மொறுமொறுப்புக்குக் காரணம் என்கிறார்கள் சிலர்.ஆரம்பத்தில் ஃப்ரைசின் பெரிய சைஸ் என்பதே 50 கிராம்தான் பின்னர் அது படிப்படியாக ஆறாகி, இப்போது எட்டு அவுன்ஸாகி, சூப்பர் சைஸ் என்ற பெயரில் 150 கிராம் அளவில் விற்கப்படுகிறது . இந்த உணவுகளால் குழந்தைகள் பாதிப்படைவர் என்பதை விளக்கும் Super Size Me என்ற குறும்படம் வெளியானதும், சிறிய, நடுத்தர, பெரிய என்று மூவகைகளில் அளவுகளை மாற்றி அமைத்தது Mac நிறுவனம்.


1937இல் Herman L.Way என்ற பாப்கார்ன் கம்பெனிக்காரரால் கண்டுபிடிக்கப்பட்ட ஸ்நாக்ஸ் வகை Lay Chips. இது இரண்டாம் உலகப் போருக்குப் பின் இமாலய வளர்ச்சி கண்டது. Fritos Corn Chips, Ruffles, அடுத்து Proctor & Gamble அறிமுகம் செய்த ‘Pringles’ஆகியவை புகழ்பெற்ற ‘Chips’வகைகள். ஒரு லட்சம் பேரைப் பேட்டி கண்டு, மக்கள் அதிகம் விரும்புவது ‘உருளைக்கிழங்கு பொரியலே’ என்று பட்டம் சூட்டியது பெப்சி நிறுவனம். மென் பானத்துக்கும், துரித உணவுக்கும் எப்போதும் ஒரு கூட்டணி உள்ளது போல. பிரிட்டிஷாரின் ‘Crisp’ வகை துரித உணவுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு ‘‘Chips ’ன் கை ஓங்கியது.
உருளைக்கிழங்கில் ‘ஓட்கா’ தயாரிக்கப்படுவதுண்டு. முதலாம் உலகப் போரில் மிதமிஞ்சிய விளைச்சலைக் கண்ட உருளைக் கிழங்கு ஜெர்மனியில் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.பஞ்சாபின் ‘Aloo Gobi’(’(உருளைக் கிழங்கு, காலி ஃபிளவர்,) ‘Aloo Matar’ (பட்டாணி, உருளை), ‘Aloo Parata’,, தென்னிந்தியர்களின் மசாலா தோசை, ஆங்கிலோ-இந்தியக் கலாசாரத்தின் ‘Aloo Cutlet’ போன்றவை உருளைக் கிழங்கு இந்திய உணவு ரசனையில் ஏற்படுத்திய தாக்கத்துக்கான சான்றுகள்.
1990 ல் மேக்கின் மும்பை கிளை சிப்ஸில் மாட்டுக் கொழுப்பைப் பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டப்பட்டு தாக்குதலுக்குள்ளானது. கம்பீரமாகக் கடைக்கு முன் உட்கார்ந்திருக்கும் Mac சிலையின் கழுத்தில் மாட்டுக் குடலை மாலையாகப் போட்டு இந்து உணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


அமெரிக்காவிலும் சுமார் 12 அமைப்புகள் சேர்ந்து நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தன. Macdonald நிர்வாகத்தினர் மாட்டுக் கொழுப்பு உபயோகித்ததைச் சொல்லாமல் மறைத்து சைவ எண்ணெய் பயன்படுத்தியதாகச் சொன்னார்கள் என்பது புகார். இறுதியில் பத்து மில்லியன் கொடுத்து நீதிமன்றத்துக்கு வெளியே வழக்கு ‘பைசல்’ செய்யப்பட்டது.தானியங்கி இயந்திரப் பயன்பாடு, சமையல் நேரத்தையும், வெப்பத்தின் அளவையும் குறைத்துக் கூட்டுவது போன்ற தொழில்நுட்ப வசதிகளை முதலில் பயன்படுத்தியது Mac தான்.Rapid Frying System மூலம் 30லிருந்து 40 வினாடிகள் பொரிக்கும் நேரத்தைக் குறைத்து பல லட்சம் வாடிக்கையாளர்களைத் தாமதமில் லாமல் கையாளும் முறையையும் Mac தான் செயல்படுத்தியது.Macdonald உப்பைப் பொதுவாக வைத்துக்கொண்டு, ஒவ்வொரு நாட்டுக்கும் ‘‘Fries’ உடன் தொட்டுக் கொள்வதற்கான ‘கீச்செப்’ (Ketch up) வகையைத் தேர்ந்தெடுத்துச் செயல்படுத்துகிறது. அமெரிக்கா வில் தக்காளி கீச்செப், இங்கிலாந்திற்கு மால்ட் வினிகர், பெல்ஜியத்திற்கு மயோனிஸ், இந்தோனேசிய சாத்தே சாஸ் போன்றவை இதற்கு கை கொடுக்கும். இதே நோக்கத்துக்கு நெதர்லாந்துக்கும், கனடியர்களுக்கும் உதவுவது வெள்ளை வினிகர். போலந்து நாட்டவருக்கு பூண்டு சாஸ். ஃபிலிப்பைன்ஸ்காரர்களுக்கு சீஸ். சர்க்கரையும், வெண்ணெயும் கலந்த சீஸ் வியட்நாமியருக்கு என்று உலகைப் பகுத்தறிந்து செயல்படுகிறது Mac கரையாத கொழுப்பும், அதிக உப்பும், மிக அதிகமான கலோரிகளும் கிழங்குப் பொரியலைத் தொட்டுக்கொள்ளப் பயன்படுத்தப்படும் சாஸ்களும் உடல்நலப் பிரச்சினைகளை விளைவிக்கும் என்று பல ஆய்வுகள் சொன்னாலும் மூன்றாம் உலக நாடுகளில் Mac ன் விற்பனை அதிகரித்தும் கொண்டே இருக்கிறது .சீனாவும், இந்தியாவும் மரபணு மாற்று உருளைக்கிழங்கு சம்பந்த மான ஆராய்ச்சிகளுக்கு அதிகமாகச் செலவிட்டு வரும் நாடுகள். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் AMAI என்ற மரபணுவை உருளையில் செலுத்தி மும்மடங்கு அதிக உயிர்ச்சத்துள்ள உருளையை உருவாக்கியது. அதன் பெயர் PROTATO🙄

மேகம் தங்கும் மாடம்

Posted: பிப்ரவரி 8, 2021 in வகைப்படுத்தப்படாதது

உலகத்தில் இருக்கும் பல கலாச்சாரங்களிலும் பல மொழிகளிலும் ஏதேன் தோட்டத்தைப் பற்றி, வித்தியாசமான கதைகள் சொல்லப்படுகின்றன. பூமி முழுவதும் மக்கள் சிதறிப்போகும்போது இந்தத் தோட்டத்தைப் பற்றிய நினைவுகளை ஒவ்வொருவரும் எடுத்து சென்றார்கள். காலம் போகப்போக கட்டுக்கதைகளும் மத நம்பிக்கைகளும் அந்தத் தோட்டத்தைப் பற்றிய உண்மைகளோடு கலந்துவிட்டன. இன்றும்கூட பார்ப்பதற்கு அழகாக இருக்கும் உலகின் அழகான இடங்களை, ஏதேன் தோட்டம் போல் இருக்கிறது என்று வர்ணிக்கிறார்கள்.கவிஞர் ஜான் மில்டன், பாரடைஸ் லாஸ்ட்டில் பூமியில் மக்களுக்கு என்றென்றும் வாழும் வாழ்க்கை திரும்பவும் கிடைக்கும் என்பதைச் சிறப்பித்து காட்ட, “பூமி மீண்டும் ஒரு பூஞ்சோலையாக மாறும்” என்ற வார்த்தைகளை எழுதினார். பிறகு, பாரடைஸ் ரீகெய்ன்ட் என்ற காவியத்தையும் அவர் எழுதினார்.ஒவ்வொரு பன்மைக் கலாச்சாரம் உள்ள நாட்டிலும் அந்தந்த நாடுகளின் புகழ் பெற்ற கலை வடிவங்களை தோட்டங்களில் நிறுவி அம்மாதிரி பூஞ்சோலைகளை நிறுவுகிறார்கள்.

இந்திய மற்றும் அமெரிக்க கட்டிடங்கள். சீன, ஐரோப்பிய மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலையே உலகின் மூன்று முக்கிய கட்டிடவியல் முறைகளாக கருதப்படுகின்றன. இதில் சீன மற்றும் ஐரோப்பிய கட்டிடவியல் முறைகள் மிக நீண்டகாலம் தழைத்துச் செழித்து, மிகப் பரந்துப்பட்ட அளவில் பரவலாயின. சீனக் கட்டிடவியல் பல வகைகளாக பகுக்கப்படுகின்றது.நகரம், மாளிகை, கோயில், நினைவுக்கல்லறை கோபுரங்கள், துறவியர் மடங்கள், புத்த விகாரைகள், கற்குகைகள், தோட்டங்கள், அரசு அலுவலகங்கள், மக்கள் பொதுவாகக் கூடுமிடங்கள், இயற்கைக் காட்சியிடங்கள், கோபுரம் மற்றும் மாடங்கள், அரச அரண்மனைகள், குடியிருப்பு வீடுகள், பெருஞ்சுவர், பாலங்கள் என அவை வகைப்படுத்தப்படுகின்றன.


1975 களில் நெருக்கடியான தொழிற்பேட்டைகள் அடர்ந்த ஜூரோங் பகுதியில் 13.5 ஹெக்டேர் நிலப் பரப்பில் உருவாக்கப்பட்ட சைனீஸ் கார்டன் பூங்கா இன்றைய நவீன சிங்கப்பூரின் குறிப்பிடத்தக்க பொழுது போக்குத் தளமாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் சீனக் கட்டிடக் கலையில் கட்டப்பட்ட அந்த 7 மாடிக் கொபுரமும் ,13கண் பாலமும் ,கல் படகும் தென்கிழக்காசிய பூங்காக்களிலிருந்து சேகரித்து நடப்பட்ட பொன்சாய் மரங்களும் சூழப்பட்ட ஜூரோங் ஏரியும் பலரின் இளமைக் கால ஆல்பங்களில் தவறாமல் இடம் பெற்றவை ..இதில் நிறுவப்பட்ட மூன்று மாடி இரு கோபுரங்களின் பெயர்கள்.

மேகம் தங்கும் மாடம்
அடுத்தது நிலவு வரும் மாளிகை ..
நாம் முதன் முதலாக அனுபவிக்கும் கலையனுபவங்களும் ,காட்சி அனுபவங்களும் நம் மனதின் முதல் அடுக்கில் படிந்து விடுகின்றன ஆண்டுகள் பல சென்றாலும் மீண்டும் அந்த இடங்களை பார்க்கும்போது முதல்சுவை பீரிட்டுக் கிளம்புகிறது ..இந்தப் பெயர்களை எனக்கு அன்று சொன்ன நண்பர் இன்றும் என் நினைவில் நிற்கிறார் .. ..
பழுத்து உதிர்ந்த இலையின் இடங்களை ஒதுக்கிவிட்டு பசுமையான பொன் சாய் செடிகளின் அருகில் நிற்கச் சொல்லி என்னைப் படம் எடுத்த என் தந்தையின் நினைவுகளோடு , கடந்து சென்ற வசந்தங்களை திரும்பிப் பார்க்கவைத்த
தருணங்கள் .. சிங்கப்பூர் சீனத் தோட்டம்

உடுப்பி விலாஸ் ..தேக்கா ..கறிவில்லேஜ்

Posted: பிப்ரவரி 6, 2021 in வகைப்படுத்தப்படாதது

சிலருக்கு ஒரு குறிப்பிட்ட உணவகத்தில் சாப்பிட்டால்தான் திருப்தியாக இருக்கும்.தேக்காவில் எத்தனை கடை இருந்தாலும் நாம் ஒரு கடையில் தொடர்ந்து சாப்பிடச் செல்வதை நினைத்துப் பாருங்கள் ,அதே போல்தான் தஞ்சோங் பகார் எம் ஆர்டியில் இறங்கியவுடன் கறி வில்லேஜ் உங்க கடை மீ சம்பால். வாசனை எங்களை இழுக்கிறது என்று சில வாடிக்கையாளர்கள் சொல்கிறார்கள் 😎சென்னை எக்மோரில் கென்னத் லேனில் தங்கியிருக்கும்போது அங்கிருக்கும் பல உணவகங்களைத் தவிர்த்து விட்டு, காலையில் இட்லி, தோசை சாப்பிடுவதற்காகவே உடுப்பி woodlands சென்றுவிடுவேன். ஏதோ அங்கு சாப்பிட்டால்தான் ஒரு நிறைவாக இருக்கிறது போன்ற உணர்வு. The Hindu நாளிதழில் ‘மெட்ராஸ் டைரி’எழுதும் மறைந்த எஸ்.முத்தையா அவர்களை திரு செங்குட்டுவன் என் கடைக்கு அழைத்து வந்திருந்தார். நாளிதழை எடுத்தவுடன் ‘மெட்ராஸ் டைரி’ படிக்கும் என் பழக்கத்தைச் சொல்லி, அவர் எழுதிய பல வியக்கத்தக்க தகவல்களை அவருடன் இன்னும் சற்று விரிவாகப் பகிர்ந்துகொண்டேன்.


தன் அசலான சமையல் கலையால் உடுப்பியை உலகளவில் பெயர் பெற வைத்த கிருஷ்ணா ராவின் கதை என்னை மிகவும் ஈர்த்தது. கர்நாடகாவில் உள்ள உடுப்பி கிராமத்தில் மாவு அரைத்து, பாத்திரங்கள் கழுவி, எடுபிடி வேலைகளைச் செய்து 3 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தவர் கிருஷ்ணா ராவ். தன் சகோதரியின் கணவர் வெங்கண்ணா சென்னைக்கு அழைக்க, தம்பு செட்டித் தெருவில் அதே வேலைக்கு மாதம் 5 ரூபாய் சம்பளத்தில் சேர்ந்தார்.போஸ்ட் ஆபீஸ் தெருவில் உள்ள ஒரு கடையில் வேலைபார்க்கும்போது அவரது சம்பளம் 20 ரூபாயாக உயர்ந்தது. பிறகு ஆச்சாரப்பன் தெருவில் தனியாகக் கடை தொடங்கினார். ஆச்சாரப்பன் தெருக்கடை யில் அந்தக் காலத்தில் காபி 1 1/2 அணா, இரண்டு இட்லி ஒரு அணா, ஒரு ஃபுல்மீல் 4 அணா. கிருஷ்ணாராவின் கைநேர்த்தியால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமானது. ஒரு நாளைக்கு 100 ரூபாய் லாபம் பார்த்தார். தொடர்ந்து அண்ணா சாலையில் ரவுண்டானாவில் உடுப்பி சைவ உணவகம் ஆரம்பித்ததையும், ராயப்பேட்டை வெஸ்லி ஸ்கூல் எதிரில் இராமநாதபுரம் ராஜா கட்டிடத்தை மாதம் 500 ரூபாய் வாடகை 10 வருட குத்தகைக்குப் பேரம் பேசி Woodlands ஆரம்பித்ததையும் அது உலகமெங்கும் கிளை பரப்பியபோது முனியாண்டி விலாஸ் மாதிரி பல Woodlands உலகெங்கும் உருவானதை கிருஷ்ணா ராவ் பெருந்தன்மையுடன் அனுமதித்ததையும் எஸ்.முத்தையா துல்லியமாகப் பதிவு செய்திருக் கிறார். ஆட்டுக்கல்லில் ஆரம்பித்த கிருஷ்ணாராவின் வாழ்க்கை சுயமான சமையல் கலையில் வெற்றி பெற விரும்பிய பல மனிதர் களுக்கு உந்து சக்தியாக இருந்திருக்கிறது.சமையலில் தேர்ந்த பண்டாரிகளிடம் அடிக்கடி பேசியிருக்கிறேன். பல வகை சுவையான கலவைகளை சமையலில் எவ்வாறு சேர்ப்பது என்பதைவிட, ‘ஏன் சேர்க்கிறோம்’ என்று கேட்கும் கேள்வி கேட்டால் பண்டாரிகள்(chief chef) எதையாவாது சொல்லி கம்பி நீட்டிவிடுவார்கள். பண்டாரி தீன் நான் கேட்கும் கேள்விகளுக்கு விலாவாரியாகப் பதில் சொல்லக்கூடியவர். ‘எப்படி இத்தனை அடுப்புகளையும் ஒரே சமயத்தில் மூற்றிவிட்டு கணக்காக சமைக்கிறீர்கள்?’ என்றேன். அவர் ரஜினி ஸ்டைலில் ‘நாலு உணவு வகைகளை ஒரே சமயத்தில் சமைக்கக் கற்றுக் கொள்வதைவிட ஒரே உணவை நாலு வகைகளில் சமைக்க கற்றுக்கொண்டால்தான் சமையல் புலப்படும்’ என்றார். திருமண விருந்தில் சாப்பிட்டுவிட்டு திரும்பும் நபர்கள் சிலர் ‘பாகூஸ்’ (very nice) என்று சொல்வார்கள். சிலர் ‘அல்லாம்மா நோ குட்லா’ என்பார்கள். இந்த நோ-குட் சொல்பவர்களுக்கு தடித்த நாக்கு என்பார் தீன்.உலகில் மூன்று வகையான நாக்கு உள்ளவர்கள் இருக்கிறார்கள். அதிவேக நாக்கு உள்ளவர்களுக்கு மற்றவர்களைவிட கூடுதலான சுவை நரம்புகள் இருக்கும். ருசியைத் துல்லியமாகக் கண்டுபிடித்து விடுவார்கள். இரண்டாவது நாக்கு தடி நாக்கு. உப்பும் இனிப்பும் கூடுதலாக இருந்தால்தான் இவர்களுக்குச் சுவைநரம்புகள் வேலை செய்யும், உப்பில்லாவிட்டால் உணவே சப்பென்று இருக்கிறது என்று ஒரே வரியில் சொல்லிவிடுவார்கள். ருசிக்காக அலைந்து அலைந்து சாப்பிட்டதில் உடம்பு குண்டானதுதான் இவர்கள் கண்ட பலனாக இருக்கும். இவர்களைச் சமாளிக்க அஜினோ மோட்டோ அதிகம் சேர்த்துவிட்டால் பிரச்னை முடிந்தது.


இரண்டிலும் சேராத நாக்கு ஒன்றிருக்கிறது. காய்ச்சல் வந்து விட்டால் துவரம்பருப்பை வறுத்து அரைத்து தரும் சுவையில் மட்டும் ருசி தெரியும் நாக்கு இது. மன நலமும் உடல் நலமுமில்லாமல் போகும்போது சோர்ந்திருக்கும் நாக்குக்கு seasoning பண்ணிய உணவு வகைகள்தான் சரியான பொருத்தம். இத்தனை பொருத்தங்கள் பார்த்து சமைப்பது அல்லாம்மா “லஜ்ஜை” என்பார்.BBC /Master chef நிகழ்ச்சிகளில் நடுவராக வருபவர்கள் தங்கள் நாக்கு எந்த வகையிலானது என்பதை முதலில் தெரிந்துகொண்டு வர வேண்டும் என்ற பிரச்சினை எழுப்பப்பட்டது. இப்போது நடுவர்கள் தங்கள் நாக்கின் உப்பு-சர்க்கரை எத்தனை சதவீதம் என்பதை உறுதிப்படுத்துக்கொண்டு, நிகழ்ச்சியில் தரப்படும் உணவுகளில் அதற்கேற்றவாறு உப்பு சர்க்கரை கலந்து முடிவு அறிவிக்கிறார்கள்.இன்னொன்று, பண்டாரிகள் தான் செய்த சமையலைத் தானே ருசி பார்க்க மாட்டார்கள். சமையலில் சம்பந்தப்படாத பந்தல்காரரைக் கூப்பிட்டு ருசியாக இருக்கிறதா என்று பார்க்க சொல்வார்கள். இதற்கு சமையல்காரர்களின் Nose Fatigue தான் காரணம். அறையில் நீண்ட நேரம் அரட்டை அடித்துக்கொண்டிருக்கும் நாம் உணராத ஒரு கெட்ட வாசனையைத் திடுமென்று உள்ளே நுழைந்த நபர் சுலபமாகக் கண்டுபிடித்துவிடுவது மூக்கின் நுகரும் தன்மையால்தான்.


சமையல் செய்யும்போது, வாசனையை உணரும் சக்தி குறைந்து விடுவதால், சில பண்டாரிகள் சமைத்து முடித்தவுடன் சமையல் கட்டுக்கு காலாற வெளியே நடந்து சென்று ஒரு ‘தம்’ போட்டுவிட்டு வந்து ருசி பார்ப்பார்கள். இதற்கு மத்தியில் பந்திக்கு ஆளாய்ப் பறப்பவர்கள் பண்டாரியின் பந்தாவைப் பார்த்து எரிச்சல் அடைவார் கள். மடங்களில் எப்போதும் ஒரு முழு நேர ஊழியர் சமையல்கட்டில் வெறுமனே உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருப்பார். சமையல்காரர் கள் அவரிடம் உணவைத் தந்து விட்டு பவ்யமாக நின்று கொண்டிருப்பார்களாம். அவரை உண்டுகாட்டி என்பார்கள். உணவை ருசி பார்த்துச் சொல்வதற்கென்றே வேலைக்கு அமர்த்தப்படுபவர் என்கிறார்கள்.
எப்படியோ சமையல்காரருக்கு மூக்கு நன்றாக இருக்கவேண்டும். சமையல்கட்டில் நுழைந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் அதனதன் இடத்தில் கச்சிதமாக உள்ளதா என்பதை அறிய வாசனை பிடிப்பதைப் பலர் பார்த்திருக்கலாம். சிறந்த சினிமா இயக்குநர்களுக்கு திறமையான உதவி இயக்குநர்கள் சிலர் அமைவது மாதிரி பண்டாரிகளுக்கும் எப்போதும் ஒரு குழு இருக்கும். சமைத்து வந்தவுடன் சூட்டோடு சூடாகப் பரிமாறுவதில் கவனம் செலுத்துவார்கள். சூடாக சாப்பிட் டால் ஒரிஜினல் ருசி மாறாமல் இருக்கும்.

புத்தகங்களை அப்படியே சாப்பிடுவேன்—மோனோலித்தின்

Posted: பிப்ரவரி 2, 2021 in வகைப்படுத்தப்படாதது

ஏதேன் தோட்டம் மத்திய கிழக்கில் இருந்ததாக சமய நூல்கள் சொல்வதைக் கணக்கிலெடுத்துக் கொண்டால் ஆதாம் ஆப்பிளைச் சாப்பிட்டிருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. ஏனெனில் ஆப்பிள் மத்திய ஆசியாவில் விளைந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றிருக்க அக்காலகட்டத்தில் நூறு சதவீதம் சான்ஸே இல்லை. வேண்டு மானால் பேரிக்காய் அல்லது மாதுளம் பழம் சாப்பிட்டிருக்கலாம் என்கிறார்கள்.எப்படியோ நன்மையோ மையோ தான் விரும்பியதை சாப்பிட மனித மனம் விரும்புவதை ஆரம்பித்து வைத்தவர் ஆதாம்.சுவை நுட்பம் உள்ளவர்கள் ருசித்து சாப்பிடும் சிலராகவும் பசிக்காக நுகர்வோர் பலராகவும் பயிற்சியும் திறனும் இருப்பவர்கள் சுவையாக சமைக்க வல்லவர்களாவும் சமையல்கலை ஆதிகாலந்தொட்டே சுற்றிச் சுழல்கிறது. விருப்பமான உணவுகளுக்காக உயிரை இழந்த மன்னர்களும் வரலாற்றில் இருக்கிறார்கள்.

மன்னன் 16ஆம் லூயி 1792இல் பிரஞ்சு புரட்சியாளர்களால் Varennes என்ற இடத்தில் சிறைபிடிக்கப்பட்டார். பன்றிக்கால் சூப் சாப்பிடுவதற்கு SAINTE MENEHOULD என்ற உணவகத் திற்குச் செல்லும் உணவுப் பழக்கத்தை மோப்பம் பிடித்து அவரைக் கைது செய்தார்கள் .சோவியத் ரஷ்யாவின் முன்னாள் அதிபரான ஸ்டாலினுக்கு வாழைப்பழம் என்றால் உயிராம். அவருடைய சுயசரிதையை எழுதியவர், ‘ஸ்டாலின் கோபத்தின் உச்சிக்கு செல்வது பெரும்பாலும் தரமில்லாத வாழைப்பழம் சாப்பிடும்போதுதான்’ என்கிறார்.ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்தபோது, பிடில் வாசித்ததாகச் சொல்லப்படும் மன்னர் நீரோ உண்மையில் வாசித்தாரோ இல்லையோ காளான் உணவுகளின் பிரியராக இருந்திருக்கிறார். ஆட்சியைப் பிடிக்கவும் காளான் உணவு அவருக்கு உதவியது. தன் வளர்ப்புத்தந்தை Claudius -ஐ அதே காளான் உணவில் அவருடைய நாலாவது மனைவி மூலமாக விஷம் வைத்துக் கொன்று நீரோ அரியணை ஏறினார் என்பது வரலாற்றுக் குறிப்பு.

பிலிப்பைன்ஸ் அதிபராக இருந்த மார்க்கோஸ் வெறுமனே சார்டின், காய்கறிகள் சாப்பிடும் பழக்கம் உள்ளவர். அதிலும் முருங்கைக்கீரை வகைகளுக்கு அடிமை. அது வயதாவதைத் தடுக்கக்கூடியது என்று யாரோ ஆருடம் சொல்ல, கடைசி வரை இதை அவர் விடவில்லையாம்.மா சே துங் உணவின் தரத்தில் கவனமாக இருந்திருக்கிறார். நாட்டின் சுத்தமான நீர் நிலைகளின் நீரில் விளைந்த நெல்லிலிருந்து கிடைக்கும் கைகுத்தல் அரிசி (அதுவும்முனை முறியாமல்)தான் அவர் விருப்பம். மாவோவுக்காவே அரிதான மீன் வகைகள் மற்றும் சீனாவின் தெற்கு நகரமான Hubei -லிருந்து சுமார் 600 கிலோமீட்டர் தூரத்திலிருந்து ஆக்ஸிஜன் ஏற்றப்பட்ட தண்ணீர் பைகள் மூலம் உயிரோடு கொண்டு வரப்படுமாம்.
ரோமாபுரி மன்னன் Vitellius சரியான சாப்பாட்டு இராமன் என்று சரித்திரம் படித்தவர்களுக்குத் தெரியும். அதிலும் மயில் மூளை, பிளமிங்கோவின் நாக்கு போன்றவை இடம்பெறும் விருந்துகளில் கலந்துகொள்ள எப்போதும் தயாராக இருப்பார். அந்த விருந்துகளுக்குத் தன்னை அழைக்கும் குடும்பங்களுக்குப் பரிசு, பட்டங்கள் கொடுத்து ஊக்குப்படுத்துவாராம்.மிக விநோதமான உணவுப் பழக்கங்களையும் சரித்திரத்தில் பார்க்க முடிகிறது. எத்தியோப்பிய அரசர் இரண்டாம் மேனோலித் நீண்ட காலம் வாழும் ஆசையில் பைபிள் புத்தகத்தை கிழித்துத் தின்னும் பழக்கம் கொண்டிருந்தாராம். அது உண்மையோ பொய்யோ 2002இல் உருளைக்கிழங்கு ஸ்டார்ச்சில் தயாரித்த Eat the Book என்ற புத்தகத்தைப் பதிப்பிக்க பதிப்பாளருக்கு மேனோலித்தின் பழக்கம் தூண்டுகோலாக அமைந்தது.


அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒரு பக்கம் எதிரிகளோடு மல்லுக் கட்டுவதில் மும்முரமாக இருந்தாலும், இன்னொருபக்கம் பிரியமான உணவுகளை ருசிப்பதிலும் விடாப்பிடியான ஆர்வத்துடன் இருந்திருக்கிறார்கள். அதைச் சமைப்பதில் தேர்ந்தவர்களைத் தங்களுடனேயே வைத்துக்கொள்வதற்குப் பலவிதமான வழிமுறைகளைக் கையாண்டிருக் கிறார்கள்.அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் Samuel Fraunces என்பவரை நீண்ட நாட்களாகத் தன் சமையல்காரராக வைத்திருந்திருக்கிறார். அவர் ஓய்வு பெற்ற பிறகு அடிமைத் தொழிலாளி ஹெர்க்குலஸ் என்பவரின் சமையலில் மயங்கி அவரை சமையல்காரராக வைத்திருந்திருக்கிறார். ஆனால் பென்சில்வேனியா வின் சட்டப்படி ஒரு அடிமைத் தொழிலாளி தொடர்ந்து ஆறு மாதங்கள் ஒரு இடத்தில் வேலை பார்க்க முடியாது. எனவே அவரை ஆறு மாதங்களுக்குள் வெர்ஜினியாவுக்கு மாற்றல் செய்து திரும்ப அழைத்துக் கொள்வாராம். இன்று அரசு அலுவலகங்களில் நாம் பார்க்கும் இடம் மாற்றும் தந்திரங்களுக்கு இப்படி பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன.


பிரபலங்களின் வாழ்க்கையை விரிவான வரலாறாக எழுதினால், அவர்களின் சமையல்காரர்களுக்குக் கண்டிப்பாக இடம் ஒதுக்கியே ஆக வேண்டும். நம்பிக்கைக்குரியவர்கள், நம்பிக்கைத் துரோகிகள் என இரண்டுவிதமான பார்வைக்கும் சமையல்காரர்கள் உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள். ரஷ்ய அதிபர் ஸ்டாலின் விரும்பும் உணவைப் பல சமையல்காரர்கள் தனித்தனியாகச் செய்து முடித்துக் காத்திருப் பார்கள். பிறகு அவரே ஒரு சமையல்காரரைத் தேர்ந்தெடுத்து அவர் செய்த உணவைச் சாப்பிடுவார். மாசேதுங் இவ்விஷயத்தில் நேரெதிர். தன் மெய்க்காப்பாளர்கள் உணவைப் பரிசோதித்து தனக்குத் தருவதை எப்போதும் அனுமதி வழங்கியதில்லை .1967லிருந்து 1989 வரை ரோமானியாவை ஆண்ட Nicolae Ceausesue தனக்காக உணவு வண்டி ஒன்றை வைத்திருப்பாராம். அவரது நேரடிக் கண்காணிப்பில் உணவு தயாராகும். அந்த உணவை வண்டியில் வைத்து பூட்டி சாவியைத் தன்னிடமே வைத்துக்கொள்வா ராம். யாருக்குமே அந்தப் பூட்டின் சங்கேத எண் தெரியாதாம்.சர்வாதிகார அரசியலில் உச்சத்தைத் தொட்ட ஹிட்லரை எவ்வளவு சந்தேகங்கள் ஆட்டிப்படைத்திருக்கும்? ஹிட்லர் 1923இல் தன்னுடைய பிறந்த நாளை ஒரு வீட்டில் நண்பர்களுடன் கொண்டாடினார். ஆனால் பிறந்த நாள் கேக்கில் ஒரு துண்டுகூட ஹிட்லர் சாப்பிட வில்லை. ஹிட்லரின் மெய்க்காப்பாளர் Ernst Hanfstaengl இதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, “நீயெல்லாம் ஒரு மெய்க்காப்பாளரா? இந்த வீட்டின் உரிமையாளன் ஒரு யூதன் என்பது உனக்கு தெரியாதா” என்றாராம். இந்த மெய்க்காப்பாளரும் கடைசியில் ஹிட்லரின் சந்தேகத்துக்குள்ளாகி, விலக்கி வைக்கப்பட்டார்.
உலகையே அச்சுறுத்திய செங்கிஸ்கானையும் ஒரு அச்சம் ஆட்டிப் படைத்தது. தன்னுடைய பன்னிரெண்டாவது வயதில் தன் தந்தையை ஒரு சமையல்காரர் விஷம் வைத்துக் கொன்றதை மறக்கவே முடிய வில்லை. அதனால் தன் சமையல்காரர்களை எப்போதும் தீவிரக் கண்காணிப்பில் வைத்திருப்பாராம்.


உகாண்டாவின் சர்வாதிகாரி இடிஅமீன் மனித மாமிசம் சாப்பிடுபவர் (cannibal)) என்று நேரில் பார்த்ததுபோல எல்லோரும் பேசுகிறோம். ஆனால் அவர் நர மாமிசம் சாப்பிட்டதை தான் பார்த்ததில்லை என்கிறார் அவருடைய சமையல்காரர் Otonde Odera. இடிஅமீனின் பேச்சுதான் நரமாமிசக் கதைகளைக் கிளப்பியிருக்கவேண்டும். ‘உன்னை மாற்றிவிடுவேன். டிஸ்மிஸ் செய்து விடுவேன்’ என்ற ரீதியில் இடி அமீன் யாரிடமாவது கோபப்படும்போதெல்லாம் “உன் இதயத்தை தின்று விடுவேன். உன் குழந்தைகளைக் கொன்று தின்ன ஆசையாக இருக்கிறது” போன்ற வார்த்தைகளும் தவறாமல் வெளிப்படும் என்கிறார் அவரிடம் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த Henri Kyemba..இந்த வார்த்தைகளை பரப்பி நரமாமிசம் அளவுக்கு கொண்டு சென்றது மீடியாக்கள் வடகொரியாவின் ராணுவ ஆட்சியாளராக இருந்த இரண்டாம் கிம் ஜோங் தான் நீண்ட நாட்கள் வாழ தன் தந்தையர் பெயரில் ஒரு ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கினார். அங்கு பணிபுரிந்த டயட்டீசியன்ஸ்களிடம் ரிசல்ட் கேட்டு நச்சரிப்பாராம். அதில் யாரோ ஒரு ஆராய்ச்சியாளர் நாயின் உறுப்பைத் தொடர்ந்து சாப்பிடும்படி கிம்முக்கு சிபாரிசு செய்திருக்கிறார். குறைந்தபட்சம் 7 சென்டி மீட்டருக்குக் குறையாமல் இருக்க வேண்டும் என்று நிபந்தனையும் விதித்தாராம். இரண்டாம் கிம் ஜோங் உடல் நலத்தைப் பராமரிப்பதில் அதே கவனம் எடுத்துக்கொண்டாலும் அது காலங்கடந்த முயற்சியாகவே இருந்தது. நாற்பது வயதுகளில் கிம் நீரிழிவு நோயால் மிகவும் கஷ்டப்பட்டார் ,நாயால் வந்த வினைப் பயன் .