எச்சரிக்கை :
”இந்தக் கட்டுரைக்கும் அண்ணா நூலகக் கட்டிட இடமாற்றப்
பிரச்சினைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.”
.இந்த இரண்டாவது அலாரம் எதற்காக என்று எடுத்துப் பார்த்தால் காலையில் வேலைக்குச் செல்லுவதை நினைவூட்ட ஓர் அலாரம், குளித்து முடித்தவுடன் ஓர் அலாரம் என இரண்டு முறை ஐ ஃபோன் ஒருவாரமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது, “Bus No. 63 : On the way” என்ற எழுத்துக்கள் ஒளிர்கின்றன. வீட்டு வாசலில் பஸ் வந்து நிற்கும்போது மேற்சொன்ன ஐஃபோன் நினைவூட்டலைத் தொடர்ந்து, தினமும் ஓடிப் போய் ஏறிக் கொள்ளுகிறான் என்னுடைய இரண்டாவது மகன். முதல் பிள்ளை கார் வைத்திருக்கிறான். ’இரவில் ஏன் லேட்டாக வருகிறாய்?’ என்றால் எங்கு சென்றாலும் பார்க்கிங் பிரச்சினை என்கிறான்.
கூடிய சீக்கிரம் சிங்கப்பூரில் இன்னொரு பே ஃபோன் பயன்பாடு வரவிருக்கிறது. பார்க்கிங் லாட் ஏற்கனவே முன்பதிவு செய்திருப்பவர்கள், ‘கொஞ்ச நேரத்துக்கு வண்டியை நிறுத்த மாட்டேன். யாராவது அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்று ஐஃபோனில் செய்தி ஒன்றைத் தட்டி விட்டால், தேவைப்படும் பயனாளிகள் அந்தப் பார்க்கிங் லாட்டைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
லண்டன், ம்யூனிச் நகரங்களில் இநத நடைமுறை ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கிறது. என்னுடைய ஐஃபோனில், “இன்றே கடைசி! நூலகத்தில் எடுத்த புத்தகங்களைத் திருப்பிக் கொடுத்து விடுங்கள். ஏன் வீணாக அபராதம் செலுத்த வேண்டும்?” என்ற குறுஞ்செய்திதான் அடிக்கடி வரும். நகரில் மொத்தம் உள்ள 39 அரசாங்க நூலகங்களில் Book dropல் எங்கு வேண்டுமானாலும் புத்தகங்களைத் திருப்பிக் கொடுத்து விடலாம். மூன்றில் இரண்டு நூலகங்கள் MRT பேரங்காடிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் வாரத்துக்கு 10 வெள்ளி அபராதம் கட்டுவது எனக்கு வாடிக்கையாகி விட்டது. என் கடையில் இருந்து அல்ஜூனைட் நூலகம் மூன்று பஸ் நிறுத்தங்கள் தள்ளி இருக்கிறது. சென்ற ஜனவரி முதல் சிராங்கூன் பேரங்காடியில் புதிய நூலகம் Roof topல் திறந்திருக்கிறார்கள். இப்போது புத்தகம் எடுப்பது மிகவும் எளிமையாகி விட்டது.
பெரும்பாலான நூலகங்களுக்கும் நான் சென்று வந்திருக்கிறேன். ஒவ்வொரு நூலகத்துக்கும் ஒரு தனி முகம் இருக்கிறது. கை கால்கள் கூட இருக்கின்றன. அவைகளுடன் ஒன்றிப் பழகும் போதுதான் இது எனக்குத் தெரிய வந்தது.
தேசிய நூலகம் (Victoria street) எல்லா நூலகங்களுக்கும் தலைமையானது. அதில் ஒன்பதாவது மாடிக்குச் சென்று விட்டால் இரவா பகலா என்பது மறந்து விடும். புத்தகங்களைப் புரட்டும் ஒலியைத் தவிர வேறு எந்த ஓசையும் கேட்காமல் நிசப்த வெளியில் ஆகாயத்தில் உட்கார்ந்திருப்பதைப் போன்று தோன்றும். ஏனெனில் சுற்றிலும் கண்ணாடிச் சுவர்கள். நகரத்தின் நடுவே நாம் தனிமையில் மிதக்கும் உணர்வு உண்டாகும். வெயில் உக்கிரமானால் ஜன்னலகள் தானியங்கி முறையில் திரையை அவிழ்த்து, அறையில் இருளைப் பரவச் செய்யும். அறையில் நிலவும் வெளிச்சத்துக்கு ஏற்றவாறு விளக்குகள் மெல்ல ஒளிர்வதும் அடங்குவதும் – எவ்வளவு நாட்களானாலும் சலிக்காத விளையாட்டு. 1953ல் டாக்டர் லீகோங் சியான் கொடுத்த 3,75,000 சிங்கப்பூர் வெள்ளியில் அமைக்கப்பட்ட சிங்கப்பூர் நூலக வாரியத்தில் 14,000 சதுர மீட்டர் பரப்பில் வருடத்துக்கு சுமார் 28.63 மில்லியன் புத்தகங்கள் இரவல் பெறப்படுகின்றன.
ஜீரோங், தெம்பனீஸ், உட்லேண்ட்ஸ் நூலகங்கள் தரும் அனுபவங்கள் வேறு மாதிரியானவை. உள்ளே நுழைந்தவுடன் புதிய வரவுகள் பகுதி, அங்கேயே உட்கார்ந்து படிக்கத் தூண்டும் படியாக இருக்கும். ஆங்மோகியோ நூலகத்தில் அதிகத் தமிழ்ப் புத்தகங்கள், பிடோக்கில் அதிக மலாய் புத்தகங்கள், தெம்பனீஸில் அதிக சீனப் புத்தகங்கள் என்று பலவகைக் கலாச்சாரத்தையும் சேர்ந்த வாசகர்களை ஈர்க்கும் வகையில் புத்தகங்கள் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தன.
நூலின் தலைப்பு அல்லது ஆசிரியரின் பெயரை வைத்துக் கணினியில் எந்தக் கிளையில் எந்த வரிசையில் குறிப்பிட்ட புத்தகம் இருக்கிறது எனபதைத் தமிழில் தேடிக் கண்டுபிடிக்க முடியும். எல்லாப் பிரதிகளும் இரவல் பெறப்பட்டிருந்தால் மிகக் குறைந்த கட்டணத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
2008ல் எஸ்.ரா. ‘Read Singapore’ நிகழ்வுக்கு வந்திருந்தபோது, மலேசியாவிலிருந்து வந்திருந்த நண்பர் பாலமுருகன் நூலகத்தின் செயல்பாடுகளைப் பார்த்து வியந்து விட்டார். அவருக்கு அன்று முழுவதுமே எங்கும் செல்ல மனம் வரவில்லை. சிங்கப்பூர் வரும் நண்பர்களை நான் முதலில் கேட்கும் கேள்வி, ‘புகிஸ் நூலகம் சென்று விட்டீர்களா?’ என்பதுதான். நண்பர் திரு.லதானந்த் மணற்கேணி 2010 போட்டியில் அறிவியல் பிரிவில் பரிசு பெற்று சிங்கப் பூர் வந்திருந்தார். ஏற்கனவே திட்டமிட்ட பயண நிரலில் இது இடம் பெறாததால் அவரால் பார்க்க இயலவில்லை. நூலகங்களைப் பற்றிப் பின்னர் அவரிடம் நான் சொன்னபோது பார்க்காமல் தவறவிட்டு விட்டதற்காக மிகவும் வருந்தினார்.
1812ல் வில்லியம் மர்சலென் உருவாக்கிய ஆங்கில – மலாய் அகராதி, தேசிய நூலகத்தில் பார்க்க வேண்டிய ஒன்று. ஐரோப்பிய நூல்கள், தமிழ் நூல்கள், பதிப்பிக்கப்படாத ஆவணங்கள், ஓலைச் சுவடிகள் போன்றவையும் தமிழகத்தில் கூடக் கிடைக்காத 19 ஆம் நூற்றாண்டு ஆவணங்களும், ஓலைச் சுவடிகளும் பிரிட்டிஷ் நூலகம், லண்டன் பொடிலின் நூலகம், ஆக்ஸஃபோர்டு ப்ராங்கே நிறுவன நூலகம் இவற்றில் செம்மையாகப் பாதுகாக்கப்பட்டு வருவதாகச் சொல்லுகிறார்கள்.
1886ல் Straits settlement ஏற்பட்ட பிறகு, ‘Registration of Book Ordinance’ என்ற ஒப்பந்தம் போடப்பட்டு, அதன்படி சிங்கப்பூரில் வெளியிடப்படும் புத்தகங்களின் ஒரு பிரதி, பிரிட்டிஷ் மியூசியத்திற்கு அனுப்பப்பட வேண்டும். அநேகமாகப் பல மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ள புத்தகங்கள் பிரிட்டிஷ் நூலகத்தில் மட்டுமே கிடைக்கும். இந்த ஏற்பாட்டை ஐரோப்பிய நாடுகளின் காலனி ஆதிக்க வரலாற்று நிகழ்வுகளோடு நாம் புரிந்து கொள்ளலாம். ஆங்மோகியோ நூலகத்தில் ஓர் உரையாடலில் ’அரசியலில் உச்சத்தில் இருக்கும் தலைவர்கள் புத்தகங்களைப் படிப்பார்களா’ என்று விவாதம் நண்பர்களுக்கிடையில் காரசாரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் ஒரு செய்தி: கனடா எழுத்தாளர் யான் மரொடெல் 15 நாட்களுக்கு ஒரு முறை, பிரதமருக்குத் தன்னுடைய புத்தகங்களை அனுப்பி விடுவாராம். அப்படி அனுப்பும்போது அதை அனுப்பிய காரணத்தையும் குறித்து அனுப்புவாராம். ஆனால் இதுவரை ’புத்தகம் கிடைத்தது’ என்று கூட பதில் வந்ததில்லையாம். இருந்தாலும் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு அவர் புத்தகங்களைப் படித்துத்தான் நல்ல தலைவர் ஆக வேண்டும் என்பதில்லை. ஆனால் ஒரு நல்ல தலைவர் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்பாராம்.
“Life of O Pi together” என்ற புத்தகத்தை அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அனுப்பி வைத்தாராம். அதிசயப் படத்தக்க வகையில் அவரிடமிருந்து ‘excellent power of story telling’ என்று பதில் வந்ததாம்.
சிங்கப்பூரில் பொது நூலகங்கள். கல்விசார் நூலகங்கள், பல்கலைக் கழக நூலகங்கள், பள்ளி நூலகங்கள், சிறுவர் நூலகங்கள், அருங்காட்சி நூலகங்கள், சிறப்பு நூலகங்கள் என்று எங்கு சென்றாலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அணிவகுத்து நிற்கும் காட்சியைப் பார்க்கலாம். அவர்கள் கைகளில் அன்று இரவல் பெற்ற புத்தகங்கள் இருக்கும்.
பிஷான் நூலகம் எனது மனதுக்குப் பிடித்த நூலகம் ஆகும். கடைத் தொகுதிகளுடன் உயிரோவியமாகக் காட்சி அளிக்கும். படித்துக் கொண்டிருக்கும்போது கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டு கீழே வந்தால் கூட்டம் அலைமோதும் அங்காடிக் கடைகளைப் பார்க்கலாம். இரண்டாவது மாடியில் எப்போதும் எப்படி உட்கார இடமில்லாமல் போகிறது என்று ஆச்சரியமாக இருக்கும்.
”மனித நூலகம்”
2000ஆம் ஆண்டு, டென்மார்க்கில் நடைபெற்ற ரோஸ்கில்ட் திருவிழாவின்போது உதித்த வித்தியாசமான சிந்தனையின் தாக்கத்தால், இளைஞர் குழு ஒன்று சிங்கப்பூரின் முதல் மனித நூலகத்தை நிறுவியிருக்கிறது.
மனிதர்களின் இயல்புகள் பொருந்திய ஒரு நூலகத்தைக் கற்பனை செய்து பாருங்கள். அங்கே ‘புத்தகங்கள்’ மனித வடிவில் இருக்கும். ஒருவரோடு ஒருவர் உரையாடும் பொருட்டு நீங்கள் அவர்களை இரவலாகப் பெற முடியும். மாற்று முறையில் குணமாக்கும் மருத்துவர், சிங்கப்பூரில் வசிக்கும் சம கால இளம் கலைஞர்கள், சிங்கப்பூர் காது கேளாதோர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர், கவிஞர் ஒருவர், பார்க்கர் விளையாட்டு ஆர்வலர்கள், கிராமப்புற மேம்பாட்டு சமூக சேவையாளர் போன்றவர்கள் பிஷான் பொது நூலகத்தின் தளம் 2ல் ஆகஸ்டு மாதம் நடைபெற்ற நிகழ்வில் ‘புத்தகங்களாக’ இருந்தார்கள்.
ப்ளாட்டோவின் குகை (Plato’s Cave) என்ற சமூக மக்கள் பிரிவுகளை ஆய்வு செய்யும் சமூக தளம் ஒன்றின் மூலம் கோகிலா அண்ணாமலை இந்தத் திட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அவர் இந்த வித்தியாசமான அனுபவம் பற்றி, “சொல்வதற்கு என்று எந்த விதமான முக்கியச் செய்தியும் என்னிடம் இல்ல்லாமல், என்னுடன் உரையாட வந்தவர்களிடமே நான் விஷயத்தைப் பெற்று, என்னால் முடிந்த அளவு செய்திகளை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுவது வித்தியாசமான அனுபவம்” என்றார். உரையாடலை மேம்படுத்துவது, பாரபட்சங்களைக் குறைப்பது மற்றும் புரிந்துணர்வை ஊக்குவிப்பது போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ள ஒவ்வொரு “புத்தகத்தையும்” இருபது நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம்.
படிக்கவும் எழுதவும் இயலுகின்றபோது எதற்காக ஒரு புத்தகத்திடம் பேச வேண்டும்? என்ற கேள்விக்கு, “இந்தியக் கிராமப்புறங்களில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் புத்தகமாக எழுத நினைத்தேன். ஆனால் அதில் போதுமான அளவு சரளமாகக் கருத்துக்களைத் தெரிவிக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. மனிதப் புத்தகம் என்னும் இந்த எண்ணம் அந்தப் பிரச்சினையைத் தீர்த்து விட்டது. கை தேர்ந்த எழுத்தாளர்களாக இல்லாதவர்கள்கூட மற்றவர்களிடம் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள இந்த நடைமுறை அனுமதிக்கிறது. எழுதுவதை விடப் பேசுவதே எனக்குக் கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது. பிறர் என்னை இரவலாகப் பெற்று என்னிடம் கேள்வி கேட்கும்போது அவர்களுடைய பிரத்யேகமான ஆர்வங்கள் மற்றும் உயிர்த் துடிப்புள்ள எங்கள் உரையாடல் ஆகியவற்றின் அடிப்படையில் அதை நான் இணைத்துக் கொள்ளுவேன். பேச்சாற்றல், கட்டமைப்பு, கோர்வையான எண்ணங்கள் போன்ற எவற்றாலும் நான் அச்சமடைய வேண்டியதில்லை. ஏனெனில் எவ்விதத் திட்டமிடுதலும் இன்றி வருவது அது” என்றார்.
இது பற்றி நூலக நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது பின்லாந்தில் உள்ள “leppavaraa’ பகுதியில் இருக்கும் ஸெல்லோ நூலகத்தில் இந்த முறையில் அங்குள்ள நூலக அலுவலர்களை 45 நிமிடத்திற்கு மனிதப் புத்தகங்களாக இரவல் பெற்றுக் கொள்ள முடியும் என்ற தகவல் கிடைத்தது.
கோபன் ஹேகனிலும் இதே முறையில் தொழில் வல்லுநர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களை இரவல் பெற முடியும் என்று நண்பர் ஒருவர் சொன்னார்.