Archive for the ‘சிறுகதை’ Category

அனுமானம்

Posted: நவம்பர் 20, 2011 in சிறுகதை


”நாளையிலிருந்து கடைக்குப் போக வேண்டாம். வீட்டிலேயே இருங்கள். செலவுக்கு வெள்ளி வாங்கிக் கொள்ளுங்கள்”

எப்படி இப்படிச் சில வார்த்தைகளில் சொல்லி விட்டான் என் மகன்! “செலவுக்கு வேண்டுமானால் வெள்ளி வாங்கிக் கொள்ளுங்கள்” அதாவது வேளா வேளைக்குச் சாப்பிட்டு விட்டு வெறுமனே வீட்டில் உட்கார்ந்திருங்கள்” என்கிறான்.

உடலில் வயிற்றைத் தவிர வேறு உறுப்புக்கள் இல்லையா? தினமும் எனக்கு என்ன ‘படி’ காசா கொடுக்கப் போகிறான்? 1950களில் சிங்கப்பூருக்கு வந்து, கையில் ஒரு காசில்லாமல், கூலி வேலை பார்த்து, ஓட்டுக் கடை வைத்து, இன்று “அகுன் மினிமார்ட்” என்று வளர்ந்து நிற்கும் இந்தக் கடைக்கு உன்னை உயர்த்திய என்னைப் பார்த்து, ”கடைக்கு வர வேண்டாம்” என்கிறான். நான் எதுவுமே பேசவில்லை. அவனுக்குத் தெரியும். நான் மௌனமாக இருந்தால் சம்மதிக்கவில்லை என்று.

“ஏன் இவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ளுகிறீர்கள்? உங்கள் உடல் நலத்திலுள்ள அக்கறையில்தான் சொல்கிறேன். தேவைப்படும் போது சொல்கிறேன். அப்போது கடைக்கு வந்தால் போதும்” என்றான் மறுபடியும்.

நான் “காளிதாசனுக்குப் போனைப் போடு” என்றேன். காளிதாசன் எனது பால்ய நண்பன். அவன் எனக்கு ஒரு மீடியம் எழுத்தாளன். பேசித் தீர்க்க முடியாத விஷயங்களில், அவன் என்னுடன் இருந்தால் எனக்கு இலகுவாகப் பேச முடியும்.

கடந்த ஒரு மாத காலமாகவே இந்த வீட்டில் அந்தப் பேச்சு நடந்து வருகின்றது. கடையில் ஒரு காரியத்தை நான் திரும்பத் திரும்ப செய்வதாகவும், ஆர்டர் “சாலாவாக” எடுத்துக் குழப்புவதாகவும், மகனும் மருமகளும்  என் காதில் விழுவது மாதிரி பேசிக் கொள்ளுகிறார்கள். என் மருமகள் கௌசல்யா யாருக்கோ போன் போட்டு. அல்ஜைமர் மற்றும் டெமென்ஷியா என்பதற்கு விளக்கம் வேறு கேட்கிறாள்.

யாருக்கு அல்ஜைமர் எனக்கா…..

எல்லோரும் சேர்ந்து என்னைக் கரப்பான் பூச்சி மதிரி நசுக்கித் தோம்பில் போடுவது என்ரு தீர்மானித்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். மகன் அருண் கடைக்குப் போய் விட்டான். காளிதாசன் வீட்டுக்கு வந்து விட்டான். மகனிடம் விசாரித்திருப்பான் என்று எனக்குத் தெரிந்து விட்டது. எடுத்த எடுப்பில், “ஏன் இப்படி சீரியஸாக எடுத்துக் கொள்ளுகிறாய்? உன் உடல் நலத்தின் மேல் உள்ள அக்கறையினால்தானே உன்னைக் கடைக்கு வர வேண்டாம் என்று அருண் சொல்கிறான்” என்றான்.

“உனக்கு அல்ஜைமர் என்றால் தெரியுமா?”

“அப்படி யாரும் உன்னைச் சொன்னார்களா?”

”நான் கேட்தற்கு பதில் சொல். அறுபதைத் தாண்டிய எல்லோருக்கும் அல்ஜைமர் வந்து விடுமா?”

பேசாமல்  என்னையே காளிதாசன் பார்த்துக் கொண்டிருந்தான்.

”அல்ஜைமர் என்றால் என்ன? டெமென்ஷியா என்றால் என்ன? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?”

“ஏதாவது அனுமானத்தில் சொல்லியிருப்பார்கள். அதை விடு” என்றான்.

”சரி! அனுமானம் என்றால் என்ன சொல்லு?”

“கொஞ்சம் டென்ஷனைக் குறை” என்றான்.

“இல்லை. அனுமானம் என்றால் என்ன? அதைச் சொல்லு”

”அனுமானம் (inference) அறிந்தவற்றிலிருந்து அறியாதவை பற்றிச் செய்யப்படும் ஊகம்.”

”அதாவது அல்ஜைமர் மற்றும் டெமென்ஷியா பற்றித் தெரியாதவர்கள்  அது எனக்கு வந்திருக்கிறது என்று எப்படி ஊகம் செய்யலாம்?”

நான் சில விஷயங்களைச் சரியான பிடிமானம் இல்லாமல் பேசமாட்டேன் என்று காளிதாசனுக்குத்தெரியும்.

”1955ல் தமிழ் முரசில் ஒரு புதிர்ப் போட்டி வைத்திருந்தார்களே உனக்கு ஞாபகம் இருக்கிறதா? அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்திய கொரியர் உயிரோடு இருப்பது தெரியாமல் மனைவி  மறுமணம் செய்து கொண்டது, அவர் திரும்பி வந்த பின் அந்தக் குடும்பத்தில் நடந்த குழப்பங்கள் நினைவிருக்கிறதா?”

“ இதெல்லாம் நன்றாக ஞாபகம் இருக்கிறது” என்றான் காளிதாசன்.

“எத்தனை பேர் அந்தப் புதிர்ப் போட்டியில் கலந்து கொண்டார்கள் என்ற விபரம்கூட என்னால் சொல்ல முடியும். போயும் போயும் எனக்கு அல்ஜைமர் என்கிறார்கள் நீயும் சப்பைக் கட்டுக் கட்டுகிறாயே?”

”இப்படியே எதற்கும் பதில் சொல்லாமல் பேசாமல் இரு” என்று சொல்லிக் கொஞ்சம் வெளியில் சென்று வரலாம் என்று என்னைக் கூட்டிக் கொண்டு கீழே இறங்க்னினான்.

இரண்டு பேருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான். அவனுக்குக் தொப்பை சரிந்து கண்ணுக்குக் கீழே கனமான தொங்கல். கண்கள் நீர் கோர்த்து விட்டன. கன்னங்கள் உப்பி விட்டன. தாடை, தவளைத் தாடையாகி விட்டது. நான் இன்னமும் அந்த அளவுக்குப் போக வில்லை. அவன் வெள்ளை முடிகளை அப்படியே விட்டு விட்டான். நான் கொஞ்சம் மை போட்டுக் கொள்ளுவேன்.

நாங்கள் இருவரும் ஒன்றாக  புளோக்குக் கீழே உட்கார்ந்திருந்தால் “லாரல் ஹார்டி” என்று நடுவயதுக் காரர்கள் கிண்டலடித்துக் கொண்டு செல்வார்கள். அவனும் தடியாகத்தான் இருப்பான். ஆனாலும் என்கூட உட்கார்ந்திருக்கும் போது கொஞ்சம் ஒல்லி மாதிரி தெரிவான். இருவரும் பேச ஆரம்பித்து விட்டால் பேசிப் பேசி சாயங்காலத்துக்குள் அலுத்து விடுவோம்.

“சாரங்கா! ஏன் இப்படிக் கோப்ப் படுகிறாய்? நம்ம இரண்டு பேருக்கும் வயது என்ன ஆகிறது? எழுபது ஆயிற்றல்லவா?  பிள்ளைகள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு போக வேண்டியதுதான்” என்றான்.

என்னைப் பற்றி அவனுக்கு நன்கு தெரியும். அவனும் அதை மறைத்துக் கொண்டு உப்புச் சப்பில்லாமல் பேசினான். அன்றிலிருந்து நான் கடைக்குப் போகவில்லை.  ஒரு வாரம் ஓடி விட்டது. பகல் நேரங்களில் சினிமாவுக்குச் செல்ல்லாம் என்று நினைத்தால் அந்த நினைப்பு வந்ததுமே மனம் எதிர்த்து விட்டது. மனதில் ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும் நினைவுகள் மீண்டும் மீண்டும் வந்து உட்கார்ந்து கொண்டு அலைக்கழித்தன.

’எனக்குக் கட்டாய ஓய்வு கொடுக்க இவர்கள் யார்?’…..

வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் என்னைப் பக்கத்து வீட்டுக்காரர்கள் பார்க்கும் பச்சாதாபப் பார்வை, மகனின் அலட்சியம் எல்லாம் சேர்ந்து என்னைக் குழப்பமான மன நிலைக்குத் தள்ளி விட்டன.

என் மனைவி இறந்து 10 வருடங்களில் கடைக்குப் போகாமல் இத்தனை நாட்கள் இருந்ததில்லை. என் அறையில் உள்ள புகைப்படத்தில் கெட்டிக் கரை போட்ட பட்டுப் புடவை,  கழுத்தில் வகை வகையான சங்கிலிகள், கட்டை விரல் தவிர மீதி எல்லா விரல்களிலும் மோதிரங்கள், நெற்றியில் கல் வைத்த சுட்டி, மூக்குத்தி புல்லாக்கு, காதில் வளையம், இடுப்பில் ஒட்டியாணம் இவை அணிந்து, அலங்காரமாக உயரமான ஸ்டூலின் மீது சாய்ந்தபடி நின்று கொண்டிருந்தாள். திருமணமான புதிதில் எடுத்த புகைப்படம். கீழே இருந்த தேதி கூட மங்கலாகி விட்டது.  ஆனால் அந்தப் புகைப்படத்தை எடுத்த புகைப்படக்காரன் கனகாம்பரம் இன்னும் நினைவில் நிற்கிறார். அந்தி சாயும் நேரத்தில் புகைப்படம் எடுத்தால்தான் திருப்தியாக வரும் என்று நினைப்பவர்அவர். இவ்வளவு கச்சிதமாக நினைவுகளை வைத்திருக்கும் எனக்கு   டெமென்ஷியாவா?  இந்த வயதில் எல்லோருக்கும் முதுகில் கண் திறந்து கொள்ளும் போல!  என் அருகே வந்து செல்பவர்கள் முகத்தில் விரிந்த ஏளனச் சிரிப்பு, திரும்பத் திரும்ப என்னைப் பார்த்த பின்பு ஒருவர் கண்களை மற்றவர் பார்த்துக் கொள்ளுவது, உதடு அசைய, ஓசையில்லாமல் பேசி வாயைப் பொத்திக் கொள்ளுவது எல்லாம் எனக்குத் தெரிந்தது.

நான் தீர்மானமாக ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்.

என் மனைவியின் அக்கா பிள்ளைகள் ஊரில் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பல வகைகளிலும் நான் உதவிகளைச் செய்திருக்கிறேன். என்னைத் தங்களது தகப்பனாரை விட மேலாக மதிப்பவர்கள்.  அவர்களிடம் போய்விட வேண்டும். காளிதாசனிடம்கூட இந்தத் திட்டத்தைச் சொல்லக் கூடாது.

பாஸ்போர்ட், டிக்கட் என்று எல்லாக் காரியங்களையும் கச்சிதமாக முடித்து விட்டேன்.

ஊருக்குப் புறப்படும் நாளுக்காக்க் காத்திருந்ததில் நாட்கள் விறுவிறு என்று ஓடி விட்டன.

அருண் மட்டும் 5 மணிக்கெல்லாம் எழுந்து விடுவான். பணிப் பெண் சில சமயங்களில் கொஞ்சம் முன்னதாகவே வேலை ஆரம்பித்து விடுவாள். காலையில் வீட்டில் இருந்து கிளம்பினால் இரண்டு பேரில் யாராவது ஒருவர் பார்த்துவிட வாய்ப்பிருக்கிறது. நடுநிசியில் புறப்பட்டுவிட வேண்டும் என்ற திட்டமே எனக்கு உசிதமாகப் பட்டது. வீட்டில் கடைசியாகத் தூங்கச் செல்லுவது என் பேரன் விமல்தான்.

“தாத்தா இன்னம் தூங்கலையா?”

“லேட்டர்”

ஐ போன் 4S டெமான்ஸ்ட்ரேஷன் காட்டினான்.

”சூப்பர் தாத்தா. அப்பா பிராமிஸ் பண்ணியிருக்கார். ஐ காட் இட்”

என் மேல் பிரியமான பேரன். அந்த இரவுதான் அவனை நான் பார்ப்பது கடைசியாக இருக்க்க் கூடும். அவனை மார்போடு அணைத்து எதுவும் பேசாமல் முத்தமிட்டேன். அவன் அதை என்றைக்குமான தாத்தாவின் அணைப்பு என்று நினைத்திருப்பான்.

எல்லோரும் தூங்கியாகி விட்டது. எங்கோ சமையல்கட்டிலிருந்து பாத்திரங்கள் இடைவெளியில்லாது கழுவப்பட்டுக் கொண்டிருக்கும்  சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.  புளோக்குக்குக் கீழ் கார்கள் வந்து நிற்பதும் கிளம்புவதுமாக இருந்தன.

தேவைப்படும் சாமான்களை ஒரே பெட்டியில் அடைத்து எடுத்து வைத்துக் கொண்டேன். வசந்தாவின் போட்டோ, கொக்கி ஆணி அடித்து உள்நோக்கி மாட்டப்பட்டிருந்தது.  இவ்வளவு நாட்களாக இது எனக்குத் தெரியவில்லை.  சட்டத்தை நெம்பி எடுத்ததில் மேல் பகுதி பிய்த்துக் கொண்ட்து. எல்லாவற்றையும் சரி பார்த்துக் கொண்டு மெதுவாக ஹாலுக்கு வந்து ஒரு முறை பார்த்து விட்டு, பெட்டியைத் தூக்கிக் கொண்டு சத்தம் கேட்காமல் கதவுகளைப் பூட்டி விட்டு லிஃப்டில் ஏறினேன். எனக்காகக் காத்திருந்த மாதிரி கீழ்த் தளத்தில் பச்சை விள்க்குடன் டாக்ஸி ஒன்று நின்று கொண்டிருந்தது.  தேபான் கார்டனில் இருந்து உடனே டாக்ஸி கிடைப்பது மிகவும் அரிதான ஒன்று.

9 மணி விமானத்துக்கு, விமான நிலையத்தில் 7 மணிக்கு இருந்தால் போதுமானது. ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கில் மீதி உள்ள நேரத்தைக் கழித்து விட்டு மறுபடியும் டாக்ஸி எடுத்துக் கொண்டு விமான நிலையம் செல்ல வேண்டும் என்ற என்ற எனது படுகச்சிதமான திட்டத்தை நினைத்து நானே சபாஷ் போட்டுக் கொண்டேன்.

அபாவ் மானா பிக்கி ஏர்போர்ட்.

தமோ லகூன் சரங்கர் சென்டர்….

என் மன வேகத்துக்கு இணையாக சாலையில் டாக்சி விரைந்து கொண்டிருந்தது. நாளை விழித்துக் கொள்ளுவதற்காக நகரம் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தது. காஸினோ மட்டும் பகல் போல வெளிச்சம் போட்டுக் கொண்டு விழித்திருந்தது. டாக்ஸி டிரைவர் வழியெங்கும் பேசிக் கொண்டே வந்தார். இடையிடையே பெட்டியைத் தூக்கிக் கொண்டு ஈஸ்ட் கோஸ்ட் பார்க் போவதைப் பட்டும் படாமலும் விசாரித்துக் கொண்டார். அவரிடம் விரிவாக ஏதாவது பேசினால் உளறி விடுவேனோ என்ற பயத்தில் ‘ஆமாம்’, ’இல்லை’ என்பதற்கு மேல் பேச ஒன்றுமில்லை என்பதைப் போல உட்கார்ந்திருந்தேன். கடற்கரை முழுவதுமே நில மீட்பு செய்யப்பட்ட இடத்தில் அமைந்துள்ள ஈஸ்ட் கோஸ்ட் பார்க் அங்காடி உணவுக் கடைகளில் சாப்பிட்டு எத்தனையோ வருடங்கள் ஓடி விட்டன.

லேசாக மழைத் துளி விழ ஆரம்பித்து விட்டது.  டாக்சியிலிருந்து இறங்கி பீச் மணலில் சந்தடி இல்லாத இடம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.  சில இளைஞர்கள் பெட்டியையும் என்னையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே கடந்து போனார்கள்.

அலைகளைப் பார்க்கும் விதமாக மணலில் உட்கார்ந்து கொண்டேன். பெட்டியை பார்பிக் பிட்டில் வைத்து விட்டேன். கடற்கரை மணல் இன்னும் சூடு தணியாமல் இருந்தது.

கிழக்குப் பகுதியில் மின்னி மின்னி மறைந்து கொண்டிருக்கும் நட்சத்திரங்களினூடே அணைந்து எரியும் விளக்குகளுடன் விமானங்கள் அடிக்கொரு தரம் மேலெழும்பிக் கொண்டிருந்தன. இனி இந்த மண்ணை மிதிப்பதற்கு வாய்ப்பென்பது அநேகமாக இல்லை. அந்த உண்மைக்கு மேலே எனது நினைவுகளை அள்ளி அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தேன். ஒரு சீனர் அந்த நேரத்தில் ஜாக்கிங் போய்க் கொண்டிருந்தார். முப்பது வயது மதிக்கத் தக்க ஒரு ஆள் அங்குமிங்கும் பார்த்துக்க் கொண்டே என்னை நோக்கி வந்தான்.  பார்பிக்யூ பிட்டில் எதையோ தேடுவதைப் போலப் பாவனை செய்தான். பெட்டியையும் என்னையும் இணைத்து ஒரு பார்வை பார்த்தான். அவன் அங்கு எதையோ தேடுவதை விட – இல்லை – தேடுவது மாதிரி நடிப்பதை விட –  என்னைப் பார்ப்பதில்தான் அவனது முழுக் கவனமும் இருந்த்து. எனக்கா அனுமானிக்கத் தெரியாது? கொஞ்சம் வெறுப்பும் பயமும் கலந்த அந்தச் சூழலில் என் குரல் தானாகவே உயர்ந்தது.

“என்னப்பா தேடுறே?”

ஒன்றும் பேசாமல் பக்கத்தில் வந்து விட்டான்.

”ஓர் உதவி பண்ண முடியுமா?” என்று கேட்டான்.

“என்ன விஷயம்?”

”பிடோக் செல்வதற்காக வந்தேன். இருட்டில் ஸ்டாப் தெரியாமல் இங்கு இறங்கி விட்டேன். இனிமேல் பஸ் கிடையாது.  டாக்ஸி மிட் நைட் சார்ஜ் …” கொஞ்சம் இழுத்து, “ ஒரு பத்து வெள்ளி இருக்குமா?” என்றான்.

“இந்த நேரத்தில் நம்ம ஆளு யாராவது கண்ணுல படுவார்களா என்று பார்த்தியா?  ஏன் இப்படி … வேலைக்குப் போறியா இல்லையா? இப்படி பீச்சில் சுற்றிக் கொண்டு திரிகிறாயே! குடும்பம் இருக்கா இல்லை தனிக் கட்டையா? இங்கே என்ன தேடுறே? போலீஸைக் கூப்பிடவா?” என்று சொல்லிக் கொண்டே கை பேசியை எடுப்பது மாதிரி சட்டைப் பையைத் தொட்டேன்.

உடனே அடுத்த பிட்டுக்குத் தாவி விட்டான்.

“இல்லேங்க… இந்த இடத்தில்தான் என் கைபோன் தவறி விட்டது அதுதான் ….” என்று இழுத்தான். கொஞ்ச நேரம் தேடுவது மாதிரி பாசாங்கு செய்து விட்டு விடுவிடென்று செல்லட் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.  இவனை மாதிரி எத்தனை பேரைப் பார்த்திருக்கிறேன்.

சீனர் மறு சுற்று ஆரம்பித்து விட்டார். இப்போது கொஞ்ச நேரம் ஓட்டம், கொஞ்ச நேரம் நடை என்று மாறி மாறி ஓடிக் கொண்டிருந்தவர் பார்பிக் பிட்டில் நான் பெட்டி வைத்திருக்கும் மரப் பலகையில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து ஓய்வெடுத்து விட்டு மீண்டும் ஓட்டத்தைத் தொடர்ந்தார்.

நானும் எத்தனையோ முறை ஜாக்கிங் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். இதுவரை எனக்கு அது கைகூடியதே இல்லை.  காளிதாசன் இதைப் பற்றி நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டான். அவனிடம் என் திட்டத்தைப் பற்றிச் சொல்லாமல் புறப்பட்டு விட்டது கொஞ்சம் மனதில் உறுத்திக் கொண்டேயிருந்தது. ஞாயிற்றுக் கிழமைகளில் கடைக்கு வந்து அந்த வாரத்து இதழ்களை எல்லாம் ஒரு புரட்டுப் புரட்டி விட்டால்தான் அவனுக்குத் திருப்தி. இனி அவனுக்கு அந்த வாய்ப்புக் கிடைக்காது.

கடல் அலைகளில் காலை நனைத்து விட்டு பார்பிக் பிட்டில் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தேன். எங்கிருந்தோ ரிங் டோன் கேட்ட மாதிரி இருந்த்து. கொஞ்சம் கொஞ்சமாக வெகமெடுத்து அடங்கியது. மறுபடியும் கேட்க ஆரம்பித்தது.  மரப் பலகையின் கீழே தேடினேன்.  விளிம்பில் செருகிக் கொண்டு ஒரு கைபோன் கிடந்தது.

‘அடச்சே! என் அனுமானம் தவறி விட்டதே!” என்று நினைத்துக் கொண்டு, அந்த ஆள் போன திசையில் சென்றேன். பெட்டியை மறந்து விட்டு அவன் சென்ற திசை நோக்கி விரைந்தேன். அவனைத் தேடிக் கொண்டே சாலையின் விளிம்புக்கு வந்து விட்டேன். தூரத்தில் இருந்து என்னை அவன் பார்த்து விட்டான்.  அவனை நோக்கி நடக்க ஆரம்பித்தவுடன் வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

“ஹலோ பிரதர்! இந்தாங்க உங்க போன்”

தயங்கியபடியே என் பக்கத்தில் வந்தான்.

“சாரி. தப்பா நினைச்சுட்டேன் தம்பி. இந்தாங்க உங்க போன். 20 வெள்ளி வைத்துக் கொள்ளுங்கள். வீட்டுக்கு டாக்ஸியில் போய் விடுங்கள்.”

அவசரமாக வாங்கிக் கொண்டு என்னை விட்டுப் போனால் போதும் என்பது போல வேகமாக நடையைக் கட்டினான். திரும்பி பார்பிக் பிட்டை நோக்கி நடந்தேன். அந்த ஜாக்கிங் சீனர் என் பெட்டிக்கு அருகில் நின்று கொண்டு எதையோ தேடிக் கொண்டிருந்தார்.

நான் பக்கத்தில் நெருங்கியவுடன்,

“ஸாரி. ஐ மிஸ் மை போன் .. ஹியர்” என்றார்.

யாரோ என் முதுகுக்குப் பின்னால் நின்று வாயைப் பொத்திக் கொண்டு சிரிப்பது மாதிரி இருந்தது.

அந்தச் சீனர் அங்கும் இங்கும் தேடிக் கொண்டே தான் ஓடிய பாதையெங்கும் நடந்து கொண்டிருந்தார். நான் பெட்டியைத் தூக்கிக் கொண்டு சாலைக்கு வந்து டாக்சியில் ஏறிவிட்டேன்.

“வேர் யூ வாண்ட் டு கோ? ஏர் போர்ட்?” என்று கேட்டார் ட்ரைவர்.

“நோ! நோ! தேபான் கார்டன்!” என்றேன்.

“ஐ திங் யூ கோ டு ஏர்போர்ட்” என்றார் ட்ரைவர்.

அவர் நினைத்த்து சரியா தவறா என்பதைப் பற்றி வீடு வந்து சேரும் வரை அவரிடம் நான் எதுவும் பேசிக் கொள்ள வில்லை.

***********

 

அழைப்பது
பாண்டித்துரை + 65 82377006
ஷாநவாஸ் + 65 82858065
பூங்குன்ற பாண்டியன் +65 83602341

சிங்கப்பூர்த் தமிழ் இதழ்கள் 1875 – 1941 பற்றிய தங்களது பேச்சு குறித்துத் தங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப நினைத்தேன். அதைத் தங்கமீன் வழியாகப் பகிர்ந்து கொள்ள முடிவு செய்து – இந்தக் கடிதம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டங்களில் சந்திக்க இயலாத சில ஆளுமைகளை ஒருசேரப் பார்க்கவும், இதுவரை தெரியாத பல செய்திகளை அறிந்து கொள்ளும் ஒரு நிகழ்வாகவும் இந்தக் கூட்டம் அமைந்தது. 

தாங்கள் பேச்சின் துவக்கத்திலிருந்து இறுதிவரை குறிப்புகளை எடுத்து முடிக்கும்போது, செய்தித்தாள்களை ‘இதழ்கள்’ என்று குறிப்பிடுவது சரியா என்று கூட்டத்தில் ஒரு கேள்வி எழுப்பப் பட்டவுடன் ‘இந்திரஜித்’ மொழியில் சொல்வதானால், நான் கொஞ்சம் ஆடிப் போய் விட்டேன். வீட்டுக்கு வந்து என் பழைய சிதலமடைந்த குறிப்புகளைத் தேடிப் பார்த்ததில்,

– செய்திகளையும், கருத்துக்களையும், இயற்கால படைப்புகளையும் அறியவும், பகிர்ந்து கொள்ளவும், பாராட்டவும், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து மீண்டும் மீண்டும் அச்சிட்டு விற்கப்படும் நூல்களை இதழ் என்று கூறுவது வழக்கம்.

இதழ்களில் –
 நாளிதழ்கள்

கிழமை இதழ்கள்

மாதிகைகள் (மாத இதழ்கள்)

என்ற குறிப்பு இருந்தது. 

 பழைய குறிப்புகளைச் சாதாரணமாகத் தூக்கிப் போட்டுவிடக் கூடாது என்பது சரிதான் போலும்.

 வரலாறு ஒரு விந்தையான விஷயம். ஒரு காலத்தில், முரண்பாடாகத் தோன்றிய விஷயம், சில காலம் கழித்து ஒரே கருத்தின் இரு கூறுகளாகத் தென்படும் என்று சொல்வார்கள். தகுதியான நபர்கள் பத்திரிக்கை நடத்தி இருந்தால், மிகக் குறுகிய காலத்தில் அவை மூடப்பட வேண்டிய நிலைக்கு உட்பட்டிருக்காது என்ற கருத்தை ஒப்பு நோக்க, இப்போது பத்திரிக்கை நடத்தத் தகுதியான நபர்கள் இருக்கிறார்கள். ஆனால் பதிப்பாளர்கள் உற்பத்தியாளர்களாகவும், எழுத்தாளர்கள் முகவர்களாகவும், வாசகர்கள் நுகர்வோர்களாகவும் ஒரு சந்தை உருவாகிக் கொண்டிருக்கிறது.

தனது பார்வை வலியுறுத்தும் இடத்திலிருந்து நின்று பேசுவது என்பது இப்போதும் ஒவ்வொரு பத்திரிக்கையாளருக்கும் வேறுபடவே செய்கிறது.

பாம்பும் நோகாமல், அடிக்கும் கோலும் நோகாமல், பத்திரிக்கையில் தன் எண்ணங்களை எழுதுபவர்களைக் கிண்டல் செய்த தகவல், இன்றைய காலகட்டத்திலும் அந்நிலை தொடரும் அவல நிலையை எண்ணிப் பார்க்க வைத்தது. 

நீங்கள்  சிங்கை வர்த்தமாணி தொடங்கி, சிங்கைநேசன், தங்கை நேசன், ஸ்நேகன், ஞானசூரியன், சிங்கை விஜய கேதன், இந்து காவலன், சிங்கை ஜனமித்திரன், நூருல் இஸ்லாம், ஞானோதயம், இந்திய நேசன், சிங்கை கிறித்துவ வர்த்தமானி, சிங்கை மித்திரன், மலாய விளக்கம், சிங்கைத் தூதன், பொது ஜன மித்திரன், உதய தாரகை, மலேயா நாடு, தனவர்த்தினி, முன்னேற்றம், மலேயா நண்பன், இன்னும் என்னால் குறிப்பெடுக்க இயலாமல் போன பத்திரிக்கைப் பெயர்களோடு சுமார் 50-க்கும் மேற்பட்ட பத்திரிக்கைகள் அது ஆரம்பித்த வருடம், அதன் ஆசிரியர்கள், அவை ஒவ்வொன்றும் அற்ப ஆயுளில் கதைகள், அவற்றுக்கான காரணங்கள் என்று அடுக்கிக் கொண்டே சென்றது, மிகவும் மலைப்பாக இருந்தது.

நீண்டகால ஆய்வுப் பணியில் தாங்கள் எடுத்துக் கொண்ட சிரமங்கள் ஆச்சரியமாக உள்ளது.

ஒரு பத்திரிக்கை மூடுவிழா நடக்கும்போது, புதிதாக ஒரு பத்திரிக்கையாளன் முளைத்து வந்து எழுத முற்படுகிறான் என்ற செய்தியும், சீனர்கள் தமிழர்களுக்காக நடத்திய தமிழ் பத்திரிக்கை ‘பொதுஜனமித்திரன்’ குறித்த தகவலும் முத்தாய்ப்பான விஷயங்கள்.

இத்துடன் நான் தாங்களிடம் கேட்க நினைத்த கேள்வி, பத்திரிக்கைகளுக்கு மூன்று விதமான இருப்பு நிலைகள் வேண்டும் என்று சொல்கிறார்கள். இகம், பரம், விளம்பரம். நீங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட காலகட்டத்தில் விளம்பரங்கள் பத்திரிக்கை வளர்ச்சியில் பங்காற்றிய குறிப்பு உண்டா ? இதை நான் கேட்க நினைத்துக் கொண்டிருந்தபோது, ‘தங்கமீன்’ பாலு, கடைசிக் கேள்வி என்று ஏற்கனவே சொல்லி முடித்து விட்டார்.

சிங்கப்பூர் நாளிதழ்களின் வரலாற்றில் ஆழ்ந்த அறிவும், நேரடி அனுபவமும் கொண்ட தங்களது பேச்சு எங்களுக்கு ஒரு சிறப்பான அரிதான கூட்டத்தில் கலந்து கொண்ட உணர்வைத் தந்தது. தங்களுக்கும், தங்கமீன் இணைய இதழ் ஆசிரியர் பாலு மணிமாறனுக்கும் நன்றி.

அன்புடன்

ஷானவாஸ் 

நிகழ்வைப்பற்றி….

மாதவி இலக்கிய மன்றமும், தங்கமீன் இணைய இதழும் இணைந்து, ‘சிங்கப்பூர்த் தமிழ் இதழ்கள் 1875 – 1941′ என்ற தலைப்பில் திரு. பால பாஸ்கரனின் உரை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. பிப்ரவரி 19, சனிக்கிழமை அன்று அங் மோ கியோ நூலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. 

பாலபாஸ்கரன், தமிழ் ஆய்வாளர், ஊடகவியலாளர் என்ற பன்முகத் தன்மை கொண்ட ஆளுமை. மலேசியாவில் பிறந்த இவர், தற்போது சிங்கப்பூர் நிரந்தரவாசி. மலாயப் பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர், தமிழ்நேசன் பத்திரிக்கையாளர்,  சிங்கப்பூர் மலேசிய வானொலிகளின் ஒலிபரப்பு இதழாளர் என்று பலவகைகளில் பங்காற்றியவர்.  

1. Malaysian Tamil Short Story: The Historical Development, 1995 (in Tamil)

2.  The Malaysian Tamil Short Stories 1930 – 1980: A Critical Study, 2006 (in English)

இவை இரண்டும் பாலபாஸ்கரன் எழுதியுள்ள புத்தகங்கள் 

‘சிங்கப்பூர்த் தமிழ் இதழ்கள் 1875 – 1941’ என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை அமைந்திருந்தாலும், அவரது 3 வருடத்திற்கும் மேற்பட்ட ஆராய்ச்சி என்னவோ சிங்கப்பூர்-மலேசியா ஆகிய இரண்டு நாடுகளையும் இணைத்ததாகவே இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் சிங்கப்பூரில் 50க்கும் மேற்பட்ட தமிழ் இதழ்களும், மலேசியாவில் 60க்கும் மேற்பட்ட தமிழ் இதழ்களும் வெளிவந்திருப்பதாகச் சொன்னார் பாலபாஸ்கரன்.  பத்திரிக்கைகளின் எண்ணிக்கை அதிகம் என்றால் என்ன அர்த்தம்…ஆயுசு குறைவு என்று அர்த்தம்… என்று சொல்லிச் சிரித்தார். ஆனால், இந்தியர்கள் இந்தக் காலகட்டத்தில் ஆங்கிலம், சீனமொழி, மலாய் என அனைத்துமொழியிலும் இதழ்களை நடத்தி இருக்கிறார்கள். சிங்கப்பூரில் வெளிவந்த முதல் மலாய் மொழி செய்தித்தாளும், கோலாலம்பூரில் வெளிவந்த முதல் சீனமொழி செய்தித்தாளும் இந்தியர்களால் நடத்தப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் நிகழ்ச்சிக்கு முன்பாகவே பாலபாஸ்கரன் பகிர்ந்து கொண்ட தகவல்கள்.

தங்கமீன் இணைய இதழ் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளைச் சமூக மற்றும் தமிழ் அமைப்புகளின் உதவியோடு தொடர்ந்து நடத்தும் என்று இதழாசிரியர் பாலு மணிமாறன் தமது அறிமுக உரையில் குறிப்பிட்டார்.  80க்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டார்கள். கலந்துரையாடல் நிகழ்ச்சியில், திரு.அருண் மகிழ்நன், திரு.இலியாஸ், திரு.சோதிநாதன், திரு.தென்றல் ரவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கேள்விகள் கேட்டார்கள். ஊடகத்துறை சார்ந்த பலரும் கலந்து கொண்டார்கள்.  செவிக்கு உணவோடு, சென்னை தோசை-யின் வயிற்றுக்கு உணவும் சேர்ந்து மகிழ்வளித்த நிகழ்ச்சி இது, 

கடந்த ஞாயிறு ‘03.10.2010’ அன்று சிங்கப்பூரில் புதிய இணைய இதழ் ‘தங்கமீன்’ துவக்கி வைக்கப்பட்டது.

விழா கச்சிதமாக நடந்தது. திரு விசயபாரதி விழாவை வழிநடத்தினார், கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது நிகழ்வு 10 நிமிட தாமதத்தில் முன்னேறிக்கொண்டிருக்கிறது என்று அவ்வப்போது பேச்சாளர்களின் நேரத்தை ஒட்டி அறிவிப்பு செய்தது ரசிக்கும்படி இருந்தது. எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் பேசும்போது விக்கிபீடியாவில் குறைந்த மக்களே பேசக்கூடிய மொழிக் கட்டுரைகளை ஒப்பு நோக்க தமிழில் கட்டுரைகள் குறைவாகப் பதிவு செய்யப்படுகின்றன என்றார். திரு சுப. திண்ணப்பன் விண்மீன் கடல்மீன் தரையில் தங்கமீன் என்று வர்ணித்து, இந்த தங்கமீன் மனதில் தங்கவேண்டும் என்றார். திரு அழகியபாண்டியன் அதிகப்படியான உள்ளடக்கங்களை தொடர்ந்து கட்டிக்காக்க இயலுமா என்று கேள்வி எழுப்பித் தொடர்ந்து பாலுமணிமாறன் கட்டிகாப்பார் என்றார். திரு.செ.ப.பன்னீர்செல்வம் இணைய பத்திரிகை ஆரம்பிக்க தகுந்த சூழல் சிங்கப்பூரில் இருந்தபோதும் இதோ அதோ என்று சொன்னார்கள். ஓரான் லாவா ச்ககாப் சக்கப் தற்போது பாலு அதை நிறைவேற்றிக் காட்டிவிட்டார். நம் சந்ததிகளுக்கு நாம் எதையாவது கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும் சரிதானே என்றார். திரு ஜோதிமாணிக்கவாசகம் வாள்முனையை விட பேனா முனை கூர்மையானது என்று சொல்வார்கள் இப்போது எலியின் சிணுங்கல் அதைவிடக் கூர்மையாகிவிட்டது என்றார். திரு.ராம.கண்ணபிரான், ரத்தினசபாபதி, சபா ராஜேந்திரன் மற்றும் தொலைக்காட்சி நடிகர் மதியழகன், நல்லு தினகரன் ஆகியோர் வாழத்திப்பேசினர்.

சிறப்புரை ஆற்றிய திரு அருண்மகிழ்நன் -கொள்கை ஆய்வுக் கழகத் தலைவர்- தன்னுடைய 10 வருடக் கனவை திரு.பாலுமணிமாறன் நிறைவேற்றி விட்டதாகச் சொன்னார். குழுக்களுக்குள்ளும் உள் வட்டங்களிலும் இதை அடக்கி விடாமல் சிங்கப்பூரிலுள்ள பல ஊடகங்களின் செயல்பாட்டுத் தளமாக இது விளங்க வேண்டும் என்றார்.

தனக்கும் 10 வருடக் கனவு இது என்ற எழுத்தாளர் கழகத் தலைவர் ஆண்டியப்பன், அருண் மகிழ்நன் இருவரும் இணைய இதழை துவக்கிவைத்தனர்.

சிங்கப்பூர் ஊடகங்களில் கேளிக்கைகளுக்கும் நுகர்ப் பொருட்களின் மீதான வேட்கைக்கும் அப்பால் என்ன இருக்கிறது என்று http://www.thangameen.com கிளிக் செய்யக் கூட்டத்தினர் ஆர்வத்துடன் பரபரத்தார்கள்.

வழக்கம்போல திரு சாரு அவர்களின் கட்டுரைக்கு எதிர்வினையுடன், ‘தங்கமீன்’ சிணுங்க ஆரம்பித்துவிட்டது.

http://thangameen.com/ContentDetails.aspx?tid=39

சமூகம் : ஷானவாஸ்

thanks:தங்கமீன்.com &  உயிரோசை.com

 அன்புள்ள நண்பர்களுக்கு

ஆக்ஸ்ட் மாதம் வாசிப்பை நேசிப்போம் மாதம்.

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு நூலகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டக் கதைகள் ”அம்மா வந்தாள்” –    ”தி ஜானகிராமன்”  ”கடல்புரத்தில்” – ”வண்ணநிலவன்” இந்த இரு நூல்களையும் படித்து ஒரு விமர்சனக்கட்டுரை, அல்லது புனைவுகளைப் பற்றிய ஒரு பார்வை, எழுத்து நடை, இதில் வரும் பெண் கதாபாத்திரங்கள், இவர்களை முன்னிறுத்தி பெண்ணீயம் போன்ற கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் புத்தகங்கள் அனைத்து நூல் நிலையங்களிலும் கிடைக்கின்றன. நிறையப் பிரதிகள் இருக்கின்றன. ஆகையால் இவற்றைப் படித்து கட்டுரைகளுடன் வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.கட்டுரைகள் படைக்கவில்லையென்றாலும் ஒரு பார்வையாளராகவோ ஒருவாசகராகவோ கலந்து கொள்ளலாம். கட்டுரைகள் படிக்கப்படும் போது அவை குறித்தான கருத்துகள் பரிமாறிக் கொள்ளலாம். ஆனால் புத்தங்களைப் படித்து வந்தால் சிறப்பு!!!!

இடம்: அங் மோ கியோ நூலகம்

அறை: டொமேட்டோ அறை (முதல் மாடி)

நேரம்: மாலை 5.00 மணி நாள்: 15-8-2010 ( ஞாயிற்றுக் கிழமை)

வாசகர் வட்டம் எந்த தலைமையும் இல்லாமல், எந்த அமைப்பையும் சாராமல் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி! எனவே இலக்கியப் பரிமாற்றம் என்ற ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க வேண்டும் என்ற விருப்புடன் மற்ற தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை புறக்கணித்து விட்டு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று

வாசகர் வட்டம் சார்பாக அழைப்பது

அன்புடன்

சித்ரா

‘எனக்குள் இருப்பவள்’
‘வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும்’
‘மனிதர்கள் மத்தியில்’
‘சந்தியா’
‘சுகபோக தீவுகள்’
‘பூக்களை மிதிப்பவர்கள்’
‘குமாரசாமியின் பகல்பொழுது’

கதை சொல்வது மாதிரி இருக்கிறதல்லவா…

சிறுகதை, நாவல், சமூக விமர்சனக் கட்டுரைகள் என்று பல துறைகளில் முத்திரை பதித்த பிரபஞ்சனின் படைப்புகள்தான் இவைகள்.

தமிழக அரசும், புதுச்சேரி அரசும் இவரை சிறந்த எழுத்தாளர் என்று கௌரவித்துள்ளது.

என்னற்ற இலக்கிய மரியாதை பெற்றவர்.

அழகிய தமிழ், அங்கத நடை, அளவான பாத்திர படைப்பு, மனித நேயத்தை உன்னதப்படுத்தும் லட்சியம் இவரது எழுத்தின் சிறப்பு…

மனித சுபாவம் எல்லா எல்லா காலங்களிலும். எல்லா தேசத்துக்கும் இலக்கியத்தின் கருப்பொருளாக இருந்து வருவதை பார்க்கிறோம். உருவம், யுக்திகள் மாறலாம். இது மட்டும் மாறுவதில்லை. மனித சுபாவத்தில் இத்தனை சுழிப்புகள் இருப்பதாலோ என்னவோ, இத்தனை காதல் இத்தனை காரியங்கள் இங்கு சாத்தியமாகின்றன.

பல ஆயிரம் மைல்களை கடந்து வந்த ஐரோப்பியனுக்கும், இந்த மண்ணிலேயே பிறந்த தமிழனுக்குள்ளும் செயல்பட்ட மனித சுபாவத்தை உடைத்துப் பார்த்த இவரது நாவல் ”வானம் வசப்படும்” சாகித்திய அகடாமி பரிசு பெற்றது.

சிறுகதைகள், நாவல்களும் ஒரு அனுபவத்துளி மட்டுமல்ல அது ஒரு முழு வாழ்வின் சிறு துளி. அதில் கூறப்பட்ட தளங்களுக்குள்ளே ஒரு முழு வாழ்வை நம் நினைவில் விரித்துக்கொள்ள முடிந்த எழுத்துக்கள் பிரபஞ்சனுடையவை…

வாருங்கள் …

 

எதிர்வரும் வெள்ளி (23.04.2010) மாலை 6.30மணிக்கு தேசிய நூலகத்திலும்
திங்கள் (26.04.2010) மாலை 7.00மணிக்கு ஆங் மோ கியோ நூலகத்திலும்
பிரபஞ்சன் மற்றும் ஷாஜியின் நினைவுகளை நிரப்பிக்கொள்ள…

அப்துல்காதர் ஷாநவாஸ்