ஷாநவாஸ் + 65 82858065
பூங்குன்ற பாண்டியன் +65 83602341
சிங்கப்பூர்த் தமிழ் இதழ்கள் 1875 – 1941 பற்றிய தங்களது பேச்சு குறித்துத் தங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்ப நினைத்தேன். அதைத் தங்கமீன் வழியாகப் பகிர்ந்து கொள்ள முடிவு செய்து – இந்தக் கடிதம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டங்களில் சந்திக்க இயலாத சில ஆளுமைகளை ஒருசேரப் பார்க்கவும், இதுவரை தெரியாத பல செய்திகளை அறிந்து கொள்ளும் ஒரு நிகழ்வாகவும் இந்தக் கூட்டம் அமைந்தது.
தாங்கள் பேச்சின் துவக்கத்திலிருந்து இறுதிவரை குறிப்புகளை எடுத்து முடிக்கும்போது, செய்தித்தாள்களை ‘இதழ்கள்’ என்று குறிப்பிடுவது சரியா என்று கூட்டத்தில் ஒரு கேள்வி எழுப்பப் பட்டவுடன் ‘இந்திரஜித்’ மொழியில் சொல்வதானால், நான் கொஞ்சம் ஆடிப் போய் விட்டேன். வீட்டுக்கு வந்து என் பழைய சிதலமடைந்த குறிப்புகளைத் தேடிப் பார்த்ததில்,
– செய்திகளையும், கருத்துக்களையும், இயற்கால படைப்புகளையும் அறியவும், பகிர்ந்து கொள்ளவும், பாராட்டவும், ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து மீண்டும் மீண்டும் அச்சிட்டு விற்கப்படும் நூல்களை இதழ் என்று கூறுவது வழக்கம்.
கிழமை இதழ்கள்
மாதிகைகள் (மாத இதழ்கள்)
என்ற குறிப்பு இருந்தது.
பழைய குறிப்புகளைச் சாதாரணமாகத் தூக்கிப் போட்டுவிடக் கூடாது என்பது சரிதான் போலும்.
வரலாறு ஒரு விந்தையான விஷயம். ஒரு காலத்தில், முரண்பாடாகத் தோன்றிய விஷயம், சில காலம் கழித்து ஒரே கருத்தின் இரு கூறுகளாகத் தென்படும் என்று சொல்வார்கள். தகுதியான நபர்கள் பத்திரிக்கை நடத்தி இருந்தால், மிகக் குறுகிய காலத்தில் அவை மூடப்பட வேண்டிய நிலைக்கு உட்பட்டிருக்காது என்ற கருத்தை ஒப்பு நோக்க, இப்போது பத்திரிக்கை நடத்தத் தகுதியான நபர்கள் இருக்கிறார்கள். ஆனால் பதிப்பாளர்கள் உற்பத்தியாளர்களாகவும், எழுத்தாளர்கள் முகவர்களாகவும், வாசகர்கள் நுகர்வோர்களாகவும் ஒரு சந்தை உருவாகிக் கொண்டிருக்கிறது.
தனது பார்வை வலியுறுத்தும் இடத்திலிருந்து நின்று பேசுவது என்பது இப்போதும் ஒவ்வொரு பத்திரிக்கையாளருக்கும் வேறுபடவே செய்கிறது.
பாம்பும் நோகாமல், அடிக்கும் கோலும் நோகாமல், பத்திரிக்கையில் தன் எண்ணங்களை எழுதுபவர்களைக் கிண்டல் செய்த தகவல், இன்றைய காலகட்டத்திலும் அந்நிலை தொடரும் அவல நிலையை எண்ணிப் பார்க்க வைத்தது.
நீங்கள் சிங்கை வர்த்தமாணி தொடங்கி, சிங்கைநேசன், தங்கை நேசன், ஸ்நேகன், ஞானசூரியன், சிங்கை விஜய கேதன், இந்து காவலன், சிங்கை ஜனமித்திரன், நூருல் இஸ்லாம், ஞானோதயம், இந்திய நேசன், சிங்கை கிறித்துவ வர்த்தமானி, சிங்கை மித்திரன், மலாய விளக்கம், சிங்கைத் தூதன், பொது ஜன மித்திரன், உதய தாரகை, மலேயா நாடு, தனவர்த்தினி, முன்னேற்றம், மலேயா நண்பன், இன்னும் என்னால் குறிப்பெடுக்க இயலாமல் போன பத்திரிக்கைப் பெயர்களோடு சுமார் 50-க்கும் மேற்பட்ட பத்திரிக்கைகள் அது ஆரம்பித்த வருடம், அதன் ஆசிரியர்கள், அவை ஒவ்வொன்றும் அற்ப ஆயுளில் கதைகள், அவற்றுக்கான காரணங்கள் என்று அடுக்கிக் கொண்டே சென்றது, மிகவும் மலைப்பாக இருந்தது.
நீண்டகால ஆய்வுப் பணியில் தாங்கள் எடுத்துக் கொண்ட சிரமங்கள் ஆச்சரியமாக உள்ளது.
ஒரு பத்திரிக்கை மூடுவிழா நடக்கும்போது, புதிதாக ஒரு பத்திரிக்கையாளன் முளைத்து வந்து எழுத முற்படுகிறான் என்ற செய்தியும், சீனர்கள் தமிழர்களுக்காக நடத்திய தமிழ் பத்திரிக்கை ‘பொதுஜனமித்திரன்’ குறித்த தகவலும் முத்தாய்ப்பான விஷயங்கள்.
இத்துடன் நான் தாங்களிடம் கேட்க நினைத்த கேள்வி, பத்திரிக்கைகளுக்கு மூன்று விதமான இருப்பு நிலைகள் வேண்டும் என்று சொல்கிறார்கள். இகம், பரம், விளம்பரம். நீங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட காலகட்டத்தில் விளம்பரங்கள் பத்திரிக்கை வளர்ச்சியில் பங்காற்றிய குறிப்பு உண்டா ? இதை நான் கேட்க நினைத்துக் கொண்டிருந்தபோது, ‘தங்கமீன்’ பாலு, கடைசிக் கேள்வி என்று ஏற்கனவே சொல்லி முடித்து விட்டார்.
சிங்கப்பூர் நாளிதழ்களின் வரலாற்றில் ஆழ்ந்த அறிவும், நேரடி அனுபவமும் கொண்ட தங்களது பேச்சு எங்களுக்கு ஒரு சிறப்பான அரிதான கூட்டத்தில் கலந்து கொண்ட உணர்வைத் தந்தது. தங்களுக்கும், தங்கமீன் இணைய இதழ் ஆசிரியர் பாலு மணிமாறனுக்கும் நன்றி.
அன்புடன்
ஷானவாஸ்
நிகழ்வைப்பற்றி….
மாதவி இலக்கிய மன்றமும், தங்கமீன் இணைய இதழும் இணைந்து, ‘சிங்கப்பூர்த் தமிழ் இதழ்கள் 1875 – 1941′ என்ற தலைப்பில் திரு. பால பாஸ்கரனின் உரை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. பிப்ரவரி 19, சனிக்கிழமை அன்று அங் மோ கியோ நூலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
பாலபாஸ்கரன், தமிழ் ஆய்வாளர், ஊடகவியலாளர் என்ற பன்முகத் தன்மை கொண்ட ஆளுமை. மலேசியாவில் பிறந்த இவர், தற்போது சிங்கப்பூர் நிரந்தரவாசி. மலாயப் பல்கலைக் கழகத்தின் விரிவுரையாளர், தமிழ்நேசன் பத்திரிக்கையாளர், சிங்கப்பூர் மலேசிய வானொலிகளின் ஒலிபரப்பு இதழாளர் என்று பலவகைகளில் பங்காற்றியவர்.
1. Malaysian Tamil Short Story: The Historical Development, 1995 (in Tamil)
2. The Malaysian Tamil Short Stories 1930 – 1980: A Critical Study, 2006 (in English)
இவை இரண்டும் பாலபாஸ்கரன் எழுதியுள்ள புத்தகங்கள்
‘சிங்கப்பூர்த் தமிழ் இதழ்கள் 1875 – 1941’ என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரை அமைந்திருந்தாலும், அவரது 3 வருடத்திற்கும் மேற்பட்ட ஆராய்ச்சி என்னவோ சிங்கப்பூர்-மலேசியா ஆகிய இரண்டு நாடுகளையும் இணைத்ததாகவே இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில் சிங்கப்பூரில் 50க்கும் மேற்பட்ட தமிழ் இதழ்களும், மலேசியாவில் 60க்கும் மேற்பட்ட தமிழ் இதழ்களும் வெளிவந்திருப்பதாகச் சொன்னார் பாலபாஸ்கரன். பத்திரிக்கைகளின் எண்ணிக்கை அதிகம் என்றால் என்ன அர்த்தம்…ஆயுசு குறைவு என்று அர்த்தம்… என்று சொல்லிச் சிரித்தார். ஆனால், இந்தியர்கள் இந்தக் காலகட்டத்தில் ஆங்கிலம், சீனமொழி, மலாய் என அனைத்துமொழியிலும் இதழ்களை நடத்தி இருக்கிறார்கள். சிங்கப்பூரில் வெளிவந்த முதல் மலாய் மொழி செய்தித்தாளும், கோலாலம்பூரில் வெளிவந்த முதல் சீனமொழி செய்தித்தாளும் இந்தியர்களால் நடத்தப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் நிகழ்ச்சிக்கு முன்பாகவே பாலபாஸ்கரன் பகிர்ந்து கொண்ட தகவல்கள்.
தங்கமீன் இணைய இதழ் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளைச் சமூக மற்றும் தமிழ் அமைப்புகளின் உதவியோடு தொடர்ந்து நடத்தும் என்று இதழாசிரியர் பாலு மணிமாறன் தமது அறிமுக உரையில் குறிப்பிட்டார். 80க்கும் மேற்பட்ட தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டார்கள். கலந்துரையாடல் நிகழ்ச்சியில், திரு.அருண் மகிழ்நன், திரு.இலியாஸ், திரு.சோதிநாதன், திரு.தென்றல் ரவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கேள்விகள் கேட்டார்கள். ஊடகத்துறை சார்ந்த பலரும் கலந்து கொண்டார்கள். செவிக்கு உணவோடு, சென்னை தோசை-யின் வயிற்றுக்கு உணவும் சேர்ந்து மகிழ்வளித்த நிகழ்ச்சி இது,
கடந்த ஞாயிறு ‘03.10.2010’ அன்று சிங்கப்பூரில் புதிய இணைய இதழ் ‘தங்கமீன்’ துவக்கி வைக்கப்பட்டது.
விழா கச்சிதமாக நடந்தது. திரு விசயபாரதி விழாவை வழிநடத்தினார், கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது நிகழ்வு 10 நிமிட தாமதத்தில் முன்னேறிக்கொண்டிருக்கிறது என்று அவ்வப்போது பேச்சாளர்களின் நேரத்தை ஒட்டி அறிவிப்பு செய்தது ரசிக்கும்படி இருந்தது. எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் பேசும்போது விக்கிபீடியாவில் குறைந்த மக்களே பேசக்கூடிய மொழிக் கட்டுரைகளை ஒப்பு நோக்க தமிழில் கட்டுரைகள் குறைவாகப் பதிவு செய்யப்படுகின்றன என்றார். திரு சுப. திண்ணப்பன் விண்மீன் கடல்மீன் தரையில் தங்கமீன் என்று வர்ணித்து, இந்த தங்கமீன் மனதில் தங்கவேண்டும் என்றார். திரு அழகியபாண்டியன் அதிகப்படியான உள்ளடக்கங்களை தொடர்ந்து கட்டிக்காக்க இயலுமா என்று கேள்வி எழுப்பித் தொடர்ந்து பாலுமணிமாறன் கட்டிகாப்பார் என்றார். திரு.செ.ப.பன்னீர்செல்வம் இணைய பத்திரிகை ஆரம்பிக்க தகுந்த சூழல் சிங்கப்பூரில் இருந்தபோதும் இதோ அதோ என்று சொன்னார்கள். ஓரான் லாவா ச்ககாப் சக்கப் தற்போது பாலு அதை நிறைவேற்றிக் காட்டிவிட்டார். நம் சந்ததிகளுக்கு நாம் எதையாவது கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும் சரிதானே என்றார். திரு ஜோதிமாணிக்கவாசகம் வாள்முனையை விட பேனா முனை கூர்மையானது என்று சொல்வார்கள் இப்போது எலியின் சிணுங்கல் அதைவிடக் கூர்மையாகிவிட்டது என்றார். திரு.ராம.கண்ணபிரான், ரத்தினசபாபதி, சபா ராஜேந்திரன் மற்றும் தொலைக்காட்சி நடிகர் மதியழகன், நல்லு தினகரன் ஆகியோர் வாழத்திப்பேசினர்.
சிறப்புரை ஆற்றிய திரு அருண்மகிழ்நன் -கொள்கை ஆய்வுக் கழகத் தலைவர்- தன்னுடைய 10 வருடக் கனவை திரு.பாலுமணிமாறன் நிறைவேற்றி விட்டதாகச் சொன்னார். குழுக்களுக்குள்ளும் உள் வட்டங்களிலும் இதை அடக்கி விடாமல் சிங்கப்பூரிலுள்ள பல ஊடகங்களின் செயல்பாட்டுத் தளமாக இது விளங்க வேண்டும் என்றார்.
தனக்கும் 10 வருடக் கனவு இது என்ற எழுத்தாளர் கழகத் தலைவர் ஆண்டியப்பன், அருண் மகிழ்நன் இருவரும் இணைய இதழை துவக்கிவைத்தனர்.
சிங்கப்பூர் ஊடகங்களில் கேளிக்கைகளுக்கும் நுகர்ப் பொருட்களின் மீதான வேட்கைக்கும் அப்பால் என்ன இருக்கிறது என்று http://www.thangameen.com கிளிக் செய்யக் கூட்டத்தினர் ஆர்வத்துடன் பரபரத்தார்கள்.
வழக்கம்போல திரு சாரு அவர்களின் கட்டுரைக்கு எதிர்வினையுடன், ‘தங்கமீன்’ சிணுங்க ஆரம்பித்துவிட்டது.
http://thangameen.com/ContentDetails.aspx?tid=39
thanks:தங்கமீன்.com & உயிரோசை.com
கடற்கரை இப்போது அவ்வளவு சுத்தமாக இருக்கிறது. தூரத்தில் ஒன்றிரண்டு கப்பல்கள் எங்கோ போய்க் கொண்டிருக்கின்றன. அலை அடித்து ஒதுங்கும் கடல்பாசிகள் அங்குமிங்கும் சிதறிக் கிடக்கின்றன. 30 வருடங்களுக்கு முன்னால் ஒப்பிலான் கிராமத்து மக்கள் சந்தோசப்படும்போது கடல் கூடவே ஆர்ப்பரித்தது, ஆத்திரம் வரும்போது கூடவே கரைந்தது, வருந்தும் மனம் சாந்தியடையும்போது தன் எழுச்சி மிக்க அலைகளால் ஆசிர்வாதம் செய்தது.
என் ஞாபகப் படுக்கையைப் புரட்டிப்போட்டது சிங்கப்பூரில் 15.08.2010 – ல் நடைபெற்ற வாசகர்வட்டம் வண்ணநிலவனின் ”கடல்புரத்தில்” நாவலும் தி.ஜானகிராமனின் ”அம்மா வந்தாள்” நாவலும் “வாசிப்போம் நேசிப்போம்“ நிகழ்விற்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தது. இரண்டு நாவல்களையுமே அனைவரும் படித்து வந்தது கலந்துரையாடலைக் கலகலப்பாக்கியது.
திரு.கே.ஜே.ரமேஷ் தன் உரையில் வண்ணநிலவனின் ‘ரெய்னிஷ் ஐயர் தெரு‘ படித்தவுடன் அந்தத் தெருவைப் போய் பார்க்க வேண்டும் என்ற உந்துதலில் சென்று ஐயர் தெருவைப் பார்த்தேன், அதுபோல மணப்பாடு ஊரையும் பார்க்கத் தோன்றுகிறது! அவ்வளவு எதார்த்தமாக அந்த ஊரை நம் கண்முன்னே நிறுத்திவிடுகிறார். உறவுகளிடையே கோபம், மனவருத்தம், பகைமை, பொறுமை, நம்பகமின்மை, இன்ன பிற உணர்ச்சிகள் இருந்தாலும் கதை முழுவதும் அடிநாதமாக அன்பு இழையோடிக் கொண்டிருப்பதை உணரமுடிகிறது“ என்று சொன்னார்.
முகவை ராம் மற்றும் திருச்செல்வன் உரைகளும் கடல்புரத்து நாவலைப் படிப்பவர்களின் மனதில் பலகாலத்துக்கு அழுத்தமாக நிற்கக் கூடிய நாவலாகச் சுட்டிக் காட்டினர். “நாளை பிறந்து இன்று வந்தவள் மாதங்கி கதாபாத்திரங்கள் தன்னுடைய சுயத்தை இழந்து வெவ்வேறு நிலைப்பாடுகள் எடுத்திருந்தால் நாவலின் போக்கே திசைமாறியிருக்கும்“ என்று முத்தாய்ப்பு வைத்தார்கள். சித்ரா ரமேஸ் நிகழ்ச்சியை வழிநடத்தினார்.
தி.ஜானகிராமனின் ‘அம்மா வந்தாள்’ நாவலை முழுமையாக மறுவாசிப்பு செய்து ஒரு நீண்ட கட்டுரையுடன் வந்தவர் ஜெயந்தி சங்கர். தன்னுடைய மூக்குக் கண்ணாடியை மறந்துவிட்டு வந்ததால் பாண்டித்துரை அந்தக் கட்டுரையை வாசிக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டார். அவருடைய குரல் அந்தக் கட்டுரையின் உணர்வுகளை முனை மழுங்காமல் கூட்டத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தது.
“தி.ஜானகிராமனின் பெண்பாத்திரங்கள் எல்லோருக்குமே காதருகே கேசம் சற்றே அதிகமாக இறங்கியிருக்கும், சருமம் இழுத்துக் கட்டிய மாதிரியும் திகுதிகுவென்று இருக்கும் முக்கிய பெண்பாத்திரங்கள் யாருமே சராசரி தோற்றத்துடன் வருவதில்லை” என்றார். பிறகு ஒரு பாத்திரத்தை உயர்த்தி இன்னொன்றை இறக்குவதால் மாத்திரம் வேறுபாட்டை ஏற்படுத்தி அவர் நினைக்கும் பாத்திர வேறுபாட்டை ஏற்படுத்தி அவர் நினைக்கும் பாத்திர மேன்மையை மேலும் தூக்கிப் பிடிக்கும் உத்தியை ‘செம்பருத்தி’யிலும், ‘மோகமுள்’ளிலும் தி.ஜா. கடைபிடித்திருப்பதாக விளக்கினார்.
‘‘அவர் காலத்தில் புரட்சியாகவும் அதிர்ச்சியாகவும் இருந்திருக்கும் அலங்காரத்தம்மாள் பாத்திரம் இக்காலத்தில் அதேபோன்ற தாக்கத்தைக் கொணருமா என்றால் சந்தேகம்தான்” என்று சொல்லி, மிகமுக்கியமாக ஜெயந்தி சங்கர் இந்நாவலில் தற்காலத்துக்கு பொருந்தாத மதிப்பீடுகளாகத் தோன்றும் திருமணம், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு, மறுமணம் போன்றவற்றைக் குறித்து இன்றைக்கு இருக்கும் கருத்தோட்டங்களைச் சுட்டிக்காட்டி ‘அம்மா வந்தா’ளை புரட்டிப்போட்டார்.
இந்துவுக்கு அப்புவைப் பிடிக்கிறதா?
“திருமணம் செய்துகொள்ளட்டுமே, திருமணம் வேண்டும் என்றால் வேண்டும். சரி, வேண்டாம் எனில் வேண்டாம். அதற்கேன் பவானி அம்மாளுக்கு இத்தனை குழப்பங்கள், அதேபோல் அலங்காரம் பேசாமல் தண்டபாணியை விவாகரத்து செய்துவிடலாமே? எதற்கு அவளுக்கு இந்த இரட்டை வாழ்க்கை. இதென்ன பெரியவிசயமா எனக்கேட்டு நகர்ந்துவிடும் புதிய சமுதாயத்தில் நாம் இருக்கிறோம்” என்பதைச் சொல்லி அவையை சிறப்பான விவாதத்திற்கு இட்டுச்சென்றார்.
நிகழ்வை வழிநடத்திய சித்ரா ரமேஷ், வண்ணநிலவன், ‘கடல்புரத்தில்’ பிரியமானவர்களுக்கு எழுதப்பட்ட பிரிவுக்கதை என்றார்.
மனதில் அன்பிருந்தால் பேசுகிற சொற்கள் மந்திரம் போலாகும். பாஷை தேவபாஷையாகத்தான் தோன்றும், கொலை செய்தார்கள். ஸ்நேகிதனையே வஞ்சித்தார்கள், மனைவி புருசனுக்குத் துரோகம் நினைத்தாள். ஆனால் எல்லோரிடமும் பிரியமாக இருக்கவும் தெரிந்திருக்கிறது. கதைக்களம். கதை சொல்லப்பட்ட மொழி, கதையின் எளிமை, “மரபுகளை மீறிய கதையின் முடிவு“ இவற்றைச் சுட்டிக் காட்டினார்.
என் பால்ய நினைவுகளில் ஒன்றிப்போன கடற்கரையும் வண்ணநிலவனின் அந்த பாஷையையும் குறிப்பிட்டுப் பேசினேன். கரைவலையில் பாடுவைப்பது தண்டோரா போடுவதை ”சத்தம்போடுவது” என்று சொல்வது, பறவர் வழக்கில் இஸ்லாமியர்கள் தண்டல்காரரை ”சம்மாட்டிகள்” என்றழைப்பது எல்லோருக்கும் பொதுவான ”பண்டியல்கள்.“
அன்புள்ள நண்பர்களுக்கு
ஆக்ஸ்ட் மாதம் வாசிப்பை நேசிப்போம் மாதம்.
இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு நூலகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டக் கதைகள் ”அம்மா வந்தாள்” – ”தி ஜானகிராமன்” ”கடல்புரத்தில்” – ”வண்ணநிலவன்” இந்த இரு நூல்களையும் படித்து ஒரு விமர்சனக்கட்டுரை, அல்லது புனைவுகளைப் பற்றிய ஒரு பார்வை, எழுத்து நடை, இதில் வரும் பெண் கதாபாத்திரங்கள், இவர்களை முன்னிறுத்தி பெண்ணீயம் போன்ற கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
இந்தப் புத்தகங்கள் அனைத்து நூல் நிலையங்களிலும் கிடைக்கின்றன. நிறையப் பிரதிகள் இருக்கின்றன. ஆகையால் இவற்றைப் படித்து கட்டுரைகளுடன் வருமாறு கேட்டுக்கொள்கிறேன்.கட்டுரைகள் படைக்கவில்லையென்றாலும் ஒரு பார்வையாளராகவோ ஒருவாசகராகவோ கலந்து கொள்ளலாம். கட்டுரைகள் படிக்கப்படும் போது அவை குறித்தான கருத்துகள் பரிமாறிக் கொள்ளலாம். ஆனால் புத்தங்களைப் படித்து வந்தால் சிறப்பு!!!!
இடம்: அங் மோ கியோ நூலகம்
அறை: டொமேட்டோ அறை (முதல் மாடி)
நேரம்: மாலை 5.00 மணி நாள்: 15-8-2010 ( ஞாயிற்றுக் கிழமை)
வாசகர் வட்டம் எந்த தலைமையும் இல்லாமல், எந்த அமைப்பையும் சாராமல் நடத்தப்படும் ஒரு நிகழ்ச்சி! எனவே இலக்கியப் பரிமாற்றம் என்ற ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க வேண்டும் என்ற விருப்புடன் மற்ற தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை புறக்கணித்து விட்டு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று
வாசகர் வட்டம் சார்பாக அழைப்பது
அன்புடன்
சித்ரா
‘எனக்குள் இருப்பவள்’
‘வாழ்தலும் வாழ்தல் நிமித்தமும்’
‘மனிதர்கள் மத்தியில்’
‘சந்தியா’
‘சுகபோக தீவுகள்’
‘பூக்களை மிதிப்பவர்கள்’
‘குமாரசாமியின் பகல்பொழுது’
கதை சொல்வது மாதிரி இருக்கிறதல்லவா…
சிறுகதை, நாவல், சமூக விமர்சனக் கட்டுரைகள் என்று பல துறைகளில் முத்திரை பதித்த பிரபஞ்சனின் படைப்புகள்தான் இவைகள்.
தமிழக அரசும், புதுச்சேரி அரசும் இவரை சிறந்த எழுத்தாளர் என்று கௌரவித்துள்ளது.
என்னற்ற இலக்கிய மரியாதை பெற்றவர்.
அழகிய தமிழ், அங்கத நடை, அளவான பாத்திர படைப்பு, மனித நேயத்தை உன்னதப்படுத்தும் லட்சியம் இவரது எழுத்தின் சிறப்பு…
மனித சுபாவம் எல்லா எல்லா காலங்களிலும். எல்லா தேசத்துக்கும் இலக்கியத்தின் கருப்பொருளாக இருந்து வருவதை பார்க்கிறோம். உருவம், யுக்திகள் மாறலாம். இது மட்டும் மாறுவதில்லை. மனித சுபாவத்தில் இத்தனை சுழிப்புகள் இருப்பதாலோ என்னவோ, இத்தனை காதல் இத்தனை காரியங்கள் இங்கு சாத்தியமாகின்றன.
பல ஆயிரம் மைல்களை கடந்து வந்த ஐரோப்பியனுக்கும், இந்த மண்ணிலேயே பிறந்த தமிழனுக்குள்ளும் செயல்பட்ட மனித சுபாவத்தை உடைத்துப் பார்த்த இவரது நாவல் ”வானம் வசப்படும்” சாகித்திய அகடாமி பரிசு பெற்றது.
சிறுகதைகள், நாவல்களும் ஒரு அனுபவத்துளி மட்டுமல்ல அது ஒரு முழு வாழ்வின் சிறு துளி. அதில் கூறப்பட்ட தளங்களுக்குள்ளே ஒரு முழு வாழ்வை நம் நினைவில் விரித்துக்கொள்ள முடிந்த எழுத்துக்கள் பிரபஞ்சனுடையவை…
வாருங்கள் …
எதிர்வரும் வெள்ளி (23.04.2010) மாலை 6.30மணிக்கு தேசிய நூலகத்திலும்
திங்கள் (26.04.2010) மாலை 7.00மணிக்கு ஆங் மோ கியோ நூலகத்திலும்
பிரபஞ்சன் மற்றும் ஷாஜியின் நினைவுகளை நிரப்பிக்கொள்ள…
அப்துல்காதர் ஷாநவாஸ்