பதவியைப் பறித்த உணவு ரசனை

Posted: ஜனவரி 29, 2021 in வகைப்படுத்தப்படாதது


‘பச்சை, ஊதா இரண்டையும் கூப்பிட்டால் வேலைக்கு ஆகாது, சிவப்பு டிரெஸ்ஸைக் கூப்பிடு. சர்வீஸ் பறந்து வரும்’ என்பார் நண்பர் பஷீர். விமானப் பயணத்தில் அவருடன் சென்றால் விவரமாக ஆர்டர் செய்து ‘முழு சர்வீசை’ வாங்கி விடுவார். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் கெப்யா உடை அணிந்திருக்கும் விமானப் பணிப்பெண்களில் நீலநிற உடை ரொம்ப ஜூனியர், பச்சை சூப்பர் ஜூனியர், சிவப்பு நிறம் அணிந்திருப்பவர்தான் சீனியர் என்று அவ்வளவு விவரமாகத் தெரிந்து வைத்திருப்பார்.சாப்பாடு ஆர்டர் செய்வதில் மெனுகார்டில் உள்ளவையே எனக்கு ஏகக்குழப்பமாக இருக்கும். ஆனால் அதில் இல்லாத வகையைச் சொல்லி ஆர்டர் செய்து சாப்பிடுவதில் பஷீர் படு கில்லாடி. சாப்பிட விரும்புவதையும், சாப்பிட்ட பின் அதைச் சரியாக விமர்சிப்பதற்கும் பஷீர் போன்ற சில ஆட்கள்தான் இருக்கிறார்கள். பெரும்பாலும் சிங்கப்பூர் வந்து உணவைச் சரியாக ஆர்டர் செய்யத் தெரியாமல் தவிப்பவர்கள் அல்லது சிவப்பாக இருந்ததே, வெள்ளையாக இருந்ததே என்று குழம்பி விரும்பிய உணவைச் சாப்பிட இயலாமல் போனவர்கள்தான் அதிகம். பல ஆண்டுகள் இங்கிருந்தாலும் டாக்ஸி பெயர்கூட சரிவரத் தெரிந்து கொள்ளாமல் பலர் இருக்கிறார்கள். மஞ்சள் டாக்ஸி, கறுப்பு டாக்ஸி, சிவப்பு டாக்ஸி என்பார்கள்.குழப்பமில்லாமல் இருப்பதற்கு MRTயில் கூட சர்க்கிள் லைன் ஆரஞ்சு கலரிலும் டவுன்டவுன் லைன் ப்ளூ கலரிலும் கோடு போட்டு புழக்கத்தில் இருக்கிறது. நாங்களும் வாடிக்கையாளர்களிடம் ஆர்டர் வாங்கிவிட்டு, சமையல் கட்டுக்கு ஆர்டர் கொடுக்கும்போது ஒரு மஞ்சள் (மீ கோரிங்) ஒரு மஞ்சளும் வெள்ளையும் கலந்து(மீ-மீகூன் கலந்து) சிவப்புகுறைவு, கறுப்பு சாஸ் அதிகம் என்று சொல்கிறோம்.


வெள்ளைக்காரர்கள் குறிப்பாக மட்டன் என்று ஆர்டர் கொடுக்க மாட்டார்கள். லேம்ப் (lamb) என்பார்கள். அதிலும் சிலர் spring lamb அல்லது baby lamb என்பார்கள். மலாய்க்காரர்கள் கம்பிங்(மட்டன்) என்று பொதுவாக கேட்பார்கள். அதிலும் ஒரு சிலர் லெம்பு. என்பார்கள். தமிழர்கள் ஆட்டுக்கறி என்பதோடு மாட்டுக்கறி வேண்டாம் என்று சொல்வார்கள். ஒரு வருடத்திற்குக் குறைவான வயதுடைய ஆடுதான் lamb. Baby Lamb என்பது 6 லிருந்து 8 வாரத்திற்குள் உள்ள ஆட்டுக்கறி, Spring Lamb 3லிருந்து 5 மாதங்கள். மட்டன் என்பது 12லிருந்து 24 மாதங்கள் உள்ள பல் விழுந்த ஆட்டிறைச்சி.இறைச்சி நிறம் பிரவுன் கலரிலிருந்து சிவப்பாகி கலர் மாறி கறுப்பு நிறத்திற்கு வந்துவிட்டால் அது வயதான ஆட்டிறைச்சி என்பதைக் குத்துமதிப்பாக தெரிந்து கொள்ளலாம். Baby Lamb,, Spring Lamb இறைச்சி வெட்டு அழுத்தமாக இல்லாமல் தோய்ந்து மிருதுவாக பிசிறாக வெட்டு விழுந்திருக்கும் .
கடல் உணவுகள் சமைப்பதில் தேர்ந்த சமையல்காரர்கள் பலருடன் நானும் வேலை செய்திருக்கிறேன். ஏதாவது ஒருவகையில் தன் திறமையை அழுத்தமாகக் காண்பித்து பெயர் வாங்கி விடுவார்கள் .நீண்ட நாட்களாக ஒரே நிறுவனத்தில் பணிபுரியும் சமையல்காரரை எனக்குத் தெரியும். அவரே மார்க்கெட் சென்று கடல் உணவுகள் வாங்கி வருவார். அவர் இறால் பற்றி நிறைய சொல்வார். வெறுமனே, இறால் (Prawn) என்றால் எதையாவது கொடுத்துவிடுவார்கள். அதில் Shrimp, Prawn என இரண்டு வகை இருக்கிறது. ஒரு விரல் கடை நீளம், 5 செ.மீ நீளம், 2 இன்ச் அகலம் இதற்குக் குறைவான சைஸில் Prawn கிடையாது. அப்படி இருந்தால் அது Shrimp கூனி இறால் என்று சொல்லலாம். சாதாரணமாக Fine Dining உணவகங்களில் Mediterranean Prawn (20 செ.மீ. நீளம் 8 இஞ்ச் அகலம்)ல் மூன்று சாப்பிட்டால் வயிறு நிரம்பிவிடும். அதிலும் Tiger Prawn அரிதான வகை. அமெரிக்கர்கள் இதை Jumbo Prawn என்பார்கள்.

சிங்கி இறால் (Lobster) சமைப்பது வெகு துல்லியமாக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் அதன் சிறப்பான சுவை போய்விடும் ,பெரும்பாலும் உயிரோடிருக்கும் சிங்கி இறாலின் தலைப்பகுதியில் கத்தியைச் சொருகி உடனே மரணத்தை ஏற்படுத்தலாம். ஆனால் என்னுடைய செஃப் அதைச் செய்யமாட்டார். உப்பு கலந்த ஐஸ் கட்டியில் முக்கி எடுப்பார். லாப்ஸ்டர் மயக்க நிலைக்குப் போய்விடும். அதை ஒரு பாத்திரத்திலுள்ள தண்ணீரில் போட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக சூடேற்றுவார். கொதிவரும் முன்பே லாப்ஸ்டர் இறந்துவிடும். சுடுதண்ணீரில் போட்டு அது பொன்னிறமாக வரும்வரை வைத்திருந்து முதலில் ஓட்டுப் பகுதியை நீக்கி விட்டு, கால்களை முறித்து எடுத்து விட்டு, நீளவாக்கில் உடலை வெட்டுவார். வால்பகுதி வரை இரண்டு சம துண்டுகளாகப் பிரித்து எடுத்து, வயிற்றுப்பகுதியை நீக்கி, சதைப் பகுதியை மட்டும் எடுத்து, மசாலாக்கலவை சேர்த்து தட்டையில் வைத்து தரும்போது அவ்வளவு அழகாக இருக்கும்.


பைன் டைனிங் உணவகங்கள் செல்லும்போது இத்தாலியின் Macaroni சாப்பிட ஆசையாக இருக்கும். ஆனால் அதை எப்படி ஆர்டர் பண்ணுவது, நாம் ஏதாவது சொல்லி வெயிட்டர் நம்மைப் புதுமுகம் என்று நினைத்துவிடுவாரோ என்று பலமுறை தயங்கி சிக்கன், மட்டன், பிரைட் ரைஸ் என்று சாப்பிட்டுவிட்டு எழுந்து வந்திருக் கிறேன். Macaroni என்றால் இத்தாலி மொழியில் Very Dear என்று அர்த்தம். இதுவும் பாஸ்தா போன்றதுதான். நூடுல்ஸ் துளையும் குழாய் வடிவில் இருக்கும். சுடு தண்ணீரில் போட்டு எடுத்தால் இரண்டு மடங்காகிவிடும். இதில் Shells, Twister, Ribbon வகைகளைப் பெரும்பாலும் இறைச்சி அல்லது கடல் உணவுகள் சேர்த்து ஆர்டர் செய்ய வேண்டும். கோழி ஆர்டர் பண்ணாதிங்க ..அது அதற்கு சரியான ஜோடி இல்லை ..

Tasting and Complaining என்பது உணவுத் தொழிலில் உள்ளவர்கள் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய சமாச்சாரம். தாய்லாந்து முன்னாள் பிரதமர் சாமக் சுந்தரவேஜ் எந்த நாட்டிற்குச் சென்றாலும் அந்த நாட்டின் உணவுகளைப் பற்றிய விவரங்களை அறிந்துகொள்வதிலும் அதன் பூர்வீகம் குறித்து ஆராய்வதிலும் மிகுந்த ஆர்வம் காட்டுவார். 2008ல் அவர் சிங்கப்பூர் வந்தபோது ‘தியோங் பாரு’ ஈரச்சந்தை கடைக்கு விஜயம் செய்து மீன், இறைச்சி வகைகளைப் பற்றி மிகுந்த ஆர்வமுடன் பேட்டி கொடுத்திருக்கிறார். தாய்லாந்தில் ஒரு தொலைக் காட்சி உணவு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களிடம் 2350 டாலர் வெகுமதியாகக் பெற்றுக்கொண்டதற்காக தாய்லாந்து பாராளுமன்றம் அவரைப் பதவி நீக்கம் செய்தது. மற்றபடி அவர் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் கிடையாது. தாய்லாந்து செல்லும்போதெல்லாம் இப்படிப்பட்டவரைச் சந்திக்க வேண்டும் என்று விருப்பமாயிருக்கும். அவர் எழுதிய உணவுக் குறிப்புகளின் மூலம்தான் ‘‘Humble Pie’ என்றால் என்ன என்ற விவரம் தெரிந்தது. இது 17வது நூற்றாண்டில் இங்கிலாந்தின் பிரபலமான உணவு. மான் ஈரல், இதயம், கிட்னி, குடல் இவற்றை ஒன்றாகக் கலந்து சமைத்து ஆப்பிளும், சர்க்கரையும் கலந்து Pie செய்து சாப்பிடுவதுதான் Humble Pie.. மானைக் கொன்றுவிட்டு humble என்கிறார்கள். Numble என்றால் மான் உள்ளுறுப்புகள். அது நாளடைவில் Numble Pie ஆகி, Umble Pie ஆகி Humble ஆகிவிட்டது.

அரசியலில் மட்டுமல்ல, சாப்பிடுவதிலும் முத்திரை பதித்தவர் வின்ஸ்டன் சர்ச்சில். அவர் இழுத்த சுருட்டு பிராண்ட் பிரசித்தமானது. அவர் ஒரு நாள் டின்னர் சாப்பிட்டுவிட்டு திரும்பியபோது நிருபர்கள் ‘விருந்து எப்படி?’ என்று கேள்வி கேட்டார்களாம். ‘என்னத்தைச் சொல்ல? டின்னர் ஓகே. சூப் ஒயின் மாதிரி ஐஸாக இருந்தது. Beef துண்டு என் டேபிளில் பரிமாறிய இரண்டு பேர் மாதிரி குறைந்த எண்ணிக்கையில் இருந்தது. ஒரு மீன் சிறப்பு அயிட்டமாக வைத்திருந்தார்கள். அது பிராந்தி மாதிரி அரதப்பழசு” என்றாராம் சர்ச்சில்.ஆப்ரஹாம் லிங்கன் உணவகத்திற்குச் சென்று சாப்பிட்டுவிட்டு தேநீர் ஆர்டர் பண்ணினார். அவர் குடித்து முடித்தவுடன் அதன் ருசி என்னவென்று புரியாத வகையில் இருந்தது. அப்ப சாமி வெயிட்டர், இது தேநீராக இருந்தால் காபி கொண்டு வாருங்கள். காபியாக இருந்தால் தேநீர் கொண்டு வாருங்கள்’ என்றாராம்.
Tasting and Complaining ரக வாடிக்கையாளர்கள் நிச்சயமா தேவையான வர்கள் ஆனால் அவர்கள் சில உணவுக் கடைக்காரர்களுக்கு சிம்ம சொப்பனம்.

ஆவுலியா…

Posted: ஜனவரி 27, 2021 in வகைப்படுத்தப்படாதது


சிங்கப்பூரின் புக்கிட் திமா காடுகளைச் சுற்றிப் பார்க்க ஊரிலிருந்து வரும் எழுத்தாளர்கள் விரும்பும் போதுதான் வட அமெரிக்க கண்டத்தையும் விட அதிகமான மர வகைகளைக் கொண்ட சிங்கப்பூரின் சாயா வனத்தை அடிக்கடி சென்று பார்க்க எனக்கும் விருப்பம் ஏற்ப்ட்டது ,சிங்கப்பூரின் இயற்கையான தாவரங்கள் வெப்பமண்டல மழைக்காடுகள், ஆனால் அதில் பெரும்பகுதி அழிக்கப்பட்டு விவசாயம், நீர் தேக்கங்கள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகள் பூமத்திய ரேகை தாவரங்களின் கடைசி தீண்டப்படாத தீவுகளாக இருக்கின்றன, ஆனால் அவற்றில் பெரும்பாலானவை பயிரிடப்பட்டு தோட்டம் மற்றும் பூங்காமண்டலமாக பயன்படுத்தப்படுகின்றன.இதில் வன விலங்குத் தோட்டம் , அதில் நைட் சஃபாரி,ரிவர் சஃபாரி இவை அனைத்தும் மற்ற நாடுகளில் காண இயலாத சில குறிப்பிடத்தக்க சிறப்புக்களை கொண்டிருக்கின்றன. ஆண்டு தோறும் தன்னுடைய மக்கள் தொகையில் 3மடங்கு மக்களை சுற்றுலாப்பயணிகளாக ஈர்க்கும் சிங்கப்பூரின் ரகசியங்களில் இந்த வனத் தோட்டத்தில் இயற்கையை பெரிதும் அழிக்காமல் உருவாக்கப்பட்ட இவைகள் மிக முக்கியமானவை.


நான் கல்லூரிக் காலங்களில் சிங்கப்பூர் வரும்போது நினைவில் நிற்கும் சந்தோசாவின் நீரடி உலகம் மறக்க முடியாத நினைவுகள் கொண்டது .நகரும் படிக்கட்டுக்கள கடலின் ஊடாக நம்மை கொண்டு சென்று ஒரு குகையினுள் தள்ள கண்ணாடியினால் ஆன தடுப்பு நமக்கும், கடல் உயிர்களுக்கும் இடையே இருந்தும் இல்லாதது போல் அமைக்கப்பட்டிருக்கும் 80 மீட்டர் வட்டப் பாதையில் சிறிய ,பெரிய மீன்கள், ஆமைகள் என பல வகையான கடல் உயிரினங்கள் ,மஞ்சள் நிறத்தில் கறுப்பு புள்ளிகளுடன் அலையும் sea Dragon (இதில் ஆண்தான் முட்டையிடும் என்று என் நண்பன் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன ,)அழகழகான ஜெல்லி மீன்களும் ,ஸ்டார் மீன்களும் துள்ளித் திரிந்த சிங்கப்பூரின் நீரடி உலகம் (under water world 2016 )ல் மூடப்பட்டு விட்டது .அதற்கு பிறகு ரிவர் சாபாரியின் அமைப்பும் ,சிறப்புக்களும்
என்னை மிகவும் கவர்ந்தன .


160 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட ரிவர் சஃபாரி Rivers of the world,Giant panda forest ,wild Amazonia மூன்று பகுதிகளாக இருக்கிறது .உலகின் கவனத்தை ஈர்க்கும் ஆறுகளும் அதன் உயிரினங்களும் மூடப்பட்ட ஆகாயத்தின் கீழ் காட்சிப் படுத்தப்பட்டு இருக்கின்றன .கனடாவில் தொடங்கி அமெரிக்கா வழியாக மெக்ஸிக்கோ வந்தடையும் மிஸ்ஸிஸிபி ஆறு .சுமார்220 மீட்டர் ஆழமுள்ள ஆப்ரிக்காவின் காங்கோ ஆறு ,நைல் நதி,ஆஸ்திரிலியாவின் மெக்கோங் ஆறு .இவற்றுடன் புனித கங்கையும் அங்கு வாழும் உயிரினங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் இங்குள்ள கங்கை சிங்கப்பூரில் சுத்தமாக பளிச்சென்று இருக்கிறது .மெக்கோங் ஆற்றில் வாழும் மீன் வகைகள் 4 டபுள் டக்கர் பஸ் உயரத்தில் உலகின் மிகப்பெரிய நன்னீர் மீன்தேக்கத்தொட்டியில் சுற்றிதிரிவது கண் கொள்ளாக்காட்சி.

சீனாவிலிருந்து 10 ஆண்டு காலத்தவணைகாலத்துக்கு
சிங்கப்பூர் பெற்றிருக்கும் கியா கியா ..ஜிய ஜியா பாண்டா கரடிகள் உலகில் மொத்தமே 1600 பாண்டா கரடிகள் மட்டுமே உள்ளன.மூன்று மணி நேரம் செலவு செய்வதற்கு நிறைய காட்சிகள் இரு ந்தாலும் கண்ணைக் கவரும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நீரில் 10 மீட்டர் ஆழத்தில் நீரில் அமிழ்ந்துவிடும் அமேஸான் காடுகளில் சிற்றித்திரியும் கடல் பசுக்களை கண்பது தான் ஒவ்வொன்றும் 600 கிலோ எடையுடன் முன் பற்களே இல்லாமல் சாதுவான பசுக்கள் நம் அருகில் தொட்டுச்செல்லும் காட்சிகள். நண்பர்கள் குழுவில் எப்படியும் ஒர் “ஆவுலியா ” என்பவர் இருப்பார்,ரொம்ப நாளாக. அதற்கு அர்த்தம் தெரியாமல் ரிவர் சஃபாரியில் அமேஷான் மேனட்டியைப் பார்த்த பிறகு அர்த்தம் விளங்கியது ,அதன் பெயர்தான் ஆவுலியா ,ஒரு நாளைக்கு 45 கிலோ தாவர உணவு. உட்கொள்ளும் யானைக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த கடல் பசு. ரிவர் சஃபாரியின் நட்சத்திரம் . 2016 ல் பிங்க் டால்பின் நட்சத்திரமாய் விளங்கிய சந்தோசா நீரடி கண்காட்சியகம் மூடப் பட்டபிறகு ஊரிலிருந்து வரும் விருந்தினர்களுக்கு ரிவர் சஃபாரி யை சிபாரிசு செய்ய இதுதான் காரணம் .


22 மீட்டர் நீளமும் 4மீட்டர் அகலமும் உள்ள நன்னீர் தொட்டியில் மெல்ல மெல்ல நீந்திவரும் மேனாட்டி 15 நிமிடங்களுக்கு ஒரு முறை நீருக்கு மேல் வந்து மூச்சுக் காற்றை நிரப்பி செல்லும் அழகும் ,அதற்கு உணவு கொடுக்கும் பாங்கும் கண்கொள்ளாக் காட்சி …தம்மைவிடப் பலமடங்கு பெரிய விலங்குகளைக்கூட ஒரு சில நிமிடங்களில் கடித்துக் குதறி எலும்புக் கூட்டை மட்டும் விட்டு வைக்கின்ற பிரானா மீன்கள் (Piranha) வாழும் அமேஸான் நதியில் இந்த மேனாட்டிக்கு சக விலங்குகள் மூலம் ஏற்படும் ஆபத்தைவிட மனிதர்கள் மூலம்தான் ஆபத்து அதிகம்என்கிறார்கள் ..இருஞ்சேற்று அயிரையையும் சிற்றினக் குருமீன் நெத்திலியையும் நா ருசிக்க விரும்பும் நண்பர்கள் மீன் வகைகளை பிள்ளைகளுக்கு யூ டியூப் களில் அறிமுகம் செய்யாமல் இங்கு நேரில் சென்று கண்டு உணர்த்துவது உத்தமம் ..

அமி காணார் ..நாஞ்சில் நாடான்

Posted: ஜனவரி 23, 2021 in வகைப்படுத்தப்படாதது

நாஞ்சில் நாடனை அவருடைய தீதும் நன்றும் கட்டுரையை வாசித்துவிட்டு அவர் மற்ற படைப்புக்களையும் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவருடைய கட்டுரைகளை தவற விடாமல் வாசிக்க ஆரம்பித்தேன் .எந்த ஒரு பிரச்னையையும் சமூக அக்கறையோடு அலசி, அதனை விவாதப் பொருளாக்கிவிடும் ஆற்றல் இவரது எழுத்துக்கு உண்டு. எழுதுவது கதையாயினும், கட்டுரையாக இருப்பினும், கவிதையாகப் பூத்தாலும் அதில் தனி முத்திரை இருக்கும் பெண்கள் பயிலும் பள்ளிகளில் சுகாதாரக்கேடு நிறைந்திருப்பதை, மிகுந்த அக்கறையோடு இவர் சுட்டிக்காட்டி எழுதிய கட்டுரை, கல்வித்துறை அதிகாரிகளை உற்றுநோக்க வைத்தது. கலாசாரச் சின்னங்களைப் பாதுகாக்க, கோபுரங்கள் மற்றும் சிலைகளின் பெருமைகளைச் சொன்ன விதமும், வர்ணித்த அழகும் உந்துதலை என்னுள் ஏற்படுத்தியவை அதிலும் தமிழ் உணவுக் கலாச்சாரம் பற்றி அவர் எழுதிய கட்டுரைகள் வாயூறும் ..அவருடைய சிறுகதை “யாம் உண்பேம் “மிகப் பரவலாக வாசிப்புக்கு உள்ளான ஒன்று ,சூடிய பூ சூடற்க என்ற தொகுப்பில் உள்ள அந்தக் கதையில் “அமி கணார் “ அமி கணார் “என்ற அந்தச் சொல் ஒவ்வொரு வாசகரையும் உணர்ச்சி வசப்பட வைத்த சொல் ,அவர் எடுத்தாலும் சொற்கள் அவருடைய படைப்புகளுக்கு பலம் என்று சொல்வார்கள் ஆனால் ,அது அனுபவத்தின் வழி உருவான சொல்லாக இருப்பதால் இன்னும் பலம் கூடுதலாக இருக்கிறது .

திரு நாஞ்சில் நாடன் சிங்கப்பூர் வாசகர் வட்ட வருகையில் என்னுடைய சுவை பொருட்டன்று கவிதை நூலை அவர் வெளியிட்டு எங்களுடன் மூன்று நாட்களும் தங்கியிருந்த நாட்கள் மறக்க முடியாதவை .நண்பர்கள் சாரை சாரையாக வந்து சந்தித்து சங்க இலக்கியத்தில் திளைத்தார்கள் என்றே சொல்லலாம் ,சிங்கப்பூர் உணவுகளை ருசி பார்க்க பல இடங்களுக்கு கூட்டிச் சென்றோம்..ஒவ்வொரு உணவுக்கும் சங்க இலக்கியத்திலிருந்து ஒரு பாடல் பரிசாய் வந்து விழுந்தது ..எல்லோருக்கும் மூன்று நாள் போதவில்லை பாதியில் பிரிவதாக உள்ளது என்றோம் ..ஷா நவாஸ் எனக்கு இந்த ஸ்டார் ஹோட்டல் ரூமெல்லாம் வேண்டாம், வீட்டில் உள்ள சின்ன அறையில் ஒரு பாய் தலையணை கொடுங்க .எத்தனை நாட்கள் விஷா கொடுப்பான் தங்கிக் கொள்கிறேன் ,யோவ் நீங்க கேட்க கேட்க சங்க இலக்கியம் விஸ்தாரமாக ஊற்றெடுக்கிறது என்றார்.நாங்கள் அந்த நாளுக்கு காத்திருக்கிறோம் .

என்னுடைய அயல் பசி நூலை வாசித்து
பதாகை மின்னிதழில் அவர் எழுதிய கட்டுரையை இங்கு பகிர்கிறேன் ,

உண்டி முதற்றே உலகு!

அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சில சிறுகதைகள், கட்டுரைகள் வாசித்து ஷா நவாஸ் எனும் பெயரை ஏற்கனவே அறிந்திருந்தேன். எனது அறுபத்தெட்டாவது வயதில் முதன் முறையாக சிங்கப்பூர் வாசகர் வட்டத்தின் அழைப்பின் பேரில் திருமதி. சித்ரா ரமேஷ் அவர்களின் விருந்தினராக 2016 மார்ச் மாதம் சென்று சில நாட்கள் தங்கியிருந்தபோதுதான் அவரை நேரடியாக அறிந்துகொள்ள முடிந்தது. அநேகமாகத் தினமும் சந்தித்து உரையாடினோம்.எனக்கவர் கையளித்த ‘ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும்’ எனும் கட்டுரைத் தொகுப்பும் ‘மூன்றாவது கை’ எனும் சிறுகதைத் தொகுப்பும் இந்தியா திரும்பிய சில மாதங்களுக்குள் வாசித்து விட்டேன். ஆனால், ‘அயல் பசி’ என்ற கட்டுரைத் தொகுப்பு புத்தகக் குவியலில் மூச்சு முட்ட அடுக்கப்பட்டிருந்தது.

பிறகே அறிந்து கொண்டேன் அவர் இராமநாதபுரம் நத்தம் (அபிராமம்) எனும் ஊரில் பிறந்தவர் என்பதும் என்னில் பன்னீராண்டு இளையவர் என்பதும். வேதியியலில் பட்டப் படிப்பும் அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறையில் பட்ட மேற்படிப்பும் பெற்றவர். மத்திய அரசுத்துறையில் பணிபுரிந்து தற்போது சிங்கப்பூரில் குடியேறி உணவகம் நடத்துகிறவர்.யாவற்றுக்கும் மேலான அவர் சம்பத்து, படையொடுங்காத பூரித்த சிரிப்பு. அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சத்து நேசம் காட்டும் முகம். இரண்டாம் முறை, செப்டம்பர் 2016 -ல் சிங்கப்பூர் சென்ற எனக்கு அன்றே ஊர் மடங்க வேண்டியதிருந்தது. தொண்ணூறு வயதில் அம்மாவின் இறப்பு. என்றாலும் 2016 நவம்பரிலும் 2017 நவம்பரிலும் மலேசிய நாட்டு ம. நவீன் ஏற்பாடு செய்திருந்த வல்லினம் அமைப்பின் இலக்கியப் பயிற்சி முகாம்களுக்கு கோலாலம்பூர் போயிருந்தபோது நண்பர் ஷா நவாஸ் சிங்கப்பூர் வந்திருந்தார். சிலமணி நேரம் உடனிருந்து உரையாட முடிந்தது.

தற்போது நாம் பேச முற்பட்ட விடயம், ஷா நவாஸ் அவர்களின் ‘அயல் பசி’ எனும் நூல் பற்றியது. 144 பக்கங்களே கொண்ட சின்னப் புத்தகம். 2014-ம் ஆண்டில் உயிர்மை வெளியிட்டது. ‘உயிரோசை’ மின்னிதழில் 2012-ம் ஆண்டு ஷா நவாஸ் எழுதிய கட்டுரைத் தொடர் இது.2020-ம் ஆண்டின் மார்ச் 24-ம் நாள் முதலான ஊரடங்கு நாட்களில் முதல் வேலையாக எனது நூலகத்தின் புத்தக அடுக்குகளைத் தூசி தட்டித் துடைத்து மறு அடுக்குதல் செய்யத் தலைப்பட்டேன். எழுத்து ஊற்று வற்றிக்கிடக்கும் நாட்களில் – எப்போது அது பெருக்கு எடுத்துப் பாய்ந்தது என்று கேளாதீர் ஐயன்மீர்! – ஏதோ ஒரு அடுக்கைச் சீரமைக்க ஆரம்பித்தால் அடுத்த நாளே அமர்ந்து ஏதாவது எழுதத் தோன்றும் எனக்கு.ஒருவன் குடித்துவிட்டு வந்து பெண்டாட்டி முதுகில் சாத்து சாத்தென்று சாத்துவானாம். தினமும் நடக்கும் மண்டகப்படி. ஒருநாள் கணவன் வெளியூர் போய்விட்டான். மனைவிக்கு அரிப்பெடுக்க ஆரம்பித்ததாம். ஆபத்தான கற்பனை வேண்டாம், முதுகில்தான். முதுகுத் தினவு தாங்க முடியாமற் போனபோது, ஒரு பையில் ஐந்து பக்கா அரிசி அளந்து கட்டி, அதை உத்தரத்தில் வாகான உயரத்தில் தொங்கவிட்டு, வேகமாக ஆட்டிவிட்டு, வேகமாக வரும் அரிசிப் பைக்குத் தோதாக முதுகைக் காட்டி நிற்பாளாம் தினவு தீரும்வரை. 1960-ல் என் அப்பனைப் பெற்ற ஆத்தா பறக்கை நெடுந்தெரு வள்ளியம்மை எனக்குச் சொன்ன கதை. பெண் விடுதலைப் புரட்சி அன்று தொடங்கியிருக்கவில்லை என்பதால் வள்ளியம்மையை இன்று தண்டிக்க இயலாது. அவளது சாம்பல் கரைக்கப்பட்டும் 42 ஆண்டுகள் இற்றுப் போயின. எதற்குச் சொல்லவந்தேன் என்றால், நமக்கு எழுதுவதும் வாசிப்பதும் தினமும் முதுகில் சாத்துமுறை வாங்கும் மனையாட்டிபோலப் பழகிய காரியமாகிப் போயிற்று.
மலையாளத்தில் சொல்வார்கள், ‘எலிக்குப் பிராண வேதனை பூச்சைக்கு வீணை வாயனை’ என்று. தமிழில் சொன்னால், வேட்டையாடப்படும் எலிக்கு உயிர் வேதனை, வேட்டையாடிய பூனைக்கோ வீணை வாசிப்பதைக் கேட்பது போன்றது. எழுதுபவனுக்கு எலியின் வேதனை. தமிழ் வாழ்க எனக் கொக்கரிப்பவனுக்குப் பூனையின் சுக பாவனை.புத்தக அடுக்குகளில் இருந்து உடனடியாகப் படிக்க என 150 புத்தகங்கள் தனியாகப் பிரித்து வைத்தேன். கடந்த 150 நாட்களில் கிட்டத்தட்ட வாசித்து ஒதுக்கினேன். எல்லாம் காசு கொடுத்து கடந்த ஈராண்டு புத்தகக் காட்சிகளில் வாங்கியவை. பள்ளி கல்லூரிகளில் உரையாற்றப் போனபோது கிடைத்தவை. இளைய எழுத்தாள நண்பர்களால் வாசித்துப் பார்க்கத் தரப்பட்டவை. வாங்கியதோ அல்லது கையளிக்கப்பட்டதோ, தன்வயம் வரும் எப்புத்தகத்தையும் வாசிக்காமல் நான் கடத்துவதில்லை. சிலவற்றை புரட்டிப் பார்த்துத் தள்ளி வைப்பேன். வாசித்த யாவற்றையுமே கருமி பொருள் சேமித்து வைப்பதுபோல் வைப்பதிலும் எந்தப் பயனும் இல. ‘துய்ப்பேம் எனினே தப்புந பலவே!’ என்பது புறநானூற்றில் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடலின் ஈற்றடி.


இன்னொரு முறை வாசிக்க வேண்டும் அல்லது பின்னர் உதவும் என நினைப்பவற்றை மட்டுமே பாதுகாப்பேன். எனக்கு மேலால் அவசியப்படாது எனக்கருதுவன பலவற்றையும் வீட்டுக்கு வரும் நண்பர்களிடம் கடத்தி விடுவேன். சிலவற்றைத் தூதஞ்சல் மூலம் அனுப்பி விடுவதும் உண்டு. எப்படியும் எந்த நாளிலும் என்னிடம் எட்டாயிரம் புத்தகங்கள் இருக்கலாம். சித்திரபுத்திரன் கணக்குப் பார்க்கும் நாளிலும் வாசிக்கப்படாமல் இருநூறு நூல்கள் கிடக்கும்.அயல் பசி’ வாசித்து முடித்த கையுடன் தனியாகத் தங்கரியம் செய்து வைத்த பிறகே இந்தக் கட்டுரையை எழுதத் துவங்குகிறேன். “எங்க அம்மா வெக்கற மாரி வத்தக்கொழம்பு இந்த லோகத்திலே யாராலும் வெக்க முடியாது” என்பது போன்ற Qualifying Statements விடுகிறவர்களுக்கான புத்தகம் அல்ல அயல்பசி. திறந்த மனமும் உணவில் நேசமும் மதிப்பும் கொண்டவர்கள் வாசிக்க வேண்டிய நூல்.கடல் உணவுகளில் மீன் சாப்பிடுகிறவர்களிடையே நண்டு, சிப்பி, திரைச்சி, சுறா, கணவாய் சாப்பிடாதவர் உண்டு. உண்ணாதவரை, உண்ண விருப்பம் இலாதவரை, நினைத்தாலே ஓங்கரித்துச் சர்த்திப்பவரை எவரும் நிர்ப்பந்திப்பது சரியல்ல. என் அம்மை சாகிறவரை கடலை எண்ணெய் பயன்படுத்தியவள் அல்ல. அவளுக்கானது நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், தரித்திரம் செலுத்தியதால்தான் ரேஷன் கடை பாமாயில் வாங்கினாள். அதற்கென்ன செய்ய இயலும்?மெய் கூறப் புகுந்தால் 32 அத்தியாயங்களில் பேசப்பட்டிருக்கும் உணவுப் பதார்த்தங்கள், செய்முறைகள், கருவிகள், விவரிக்கப்படும் காய், கனி, கிழங்குகள், மீன்கள், விலங்குகள், பறவைகள் பற்றி எனக்கு ஒரு அறிவும் இல்லை. உலகின் ஆகச்சிறந்த உணவு சம்பா அரிசிச்சோறு, வறுத்து அரைச்ச மீன் கறுத்தக்கறி, புளிமுளம், சைவ உணவெனில் அவியல், எரிசேரி, புளிசேரி, மொளவச்சம், ஐந்து வகைப் பிரதமன், இலைப் பணியாரம், கொழுக்கட்டை, உளுந்தங்களி, வெந்தயக்களி என நம்பும் வயதும் முன்முடிவுமே எனக்கு.நண்டு, சிப்பி என சாப்பிட்டுப் பழகியிராதவன். சொல்லப்போனால் தலைக்கறி, குடல்கறி,ரத்தப்பொரியல் யாவும் அந்நியம். கடல்மீன் தின்னும் பிராந்தியத்தவன். ஆற்றுமீன், குளத்துமீன் ருசி அறியாதவன். வளர்ந்து ஆளாகி வேலைக்குப் போய் தேசங்கள் சுற்றிக் கறங்க ஆரம்பித்த பிறகே, ‘கஞ்சி குடிச்ச மலையாளி சோத்தக் கண்டா விடுவானா?’ எனும் நிலைக்கு மனம் தேறியது. நியூயார்க்கில சாப்பிட்ட கணவாயும், டொரண்டோவில் சாப்பிட்ட சுட்ட மாட்டிறைச்சியும், டோக்கியோவில் சுவைத்துத் தின்ற சூஷியும், சிங்கப்பூரில் நண்பர்கள் வாங்கித்தந்த சகல கடல்வாழ் உயிரினங்களின் தாய் சூப்பும், கொலாலம்பூரில் சக்கைப் பிரதமன் போலிருந்த இனித்த கிரேவியில் பொரித்து மிதக்கவிடப்பட்டிருந்த மீனும், மலேசியத் தமிழ்ச் சங்கத் தலைவர் வாங்கித் தந்த மான் இறைச்சியும், பிரான்சில் ஸ்ட்ராஸ்பூர் நகரில் நண்பர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் பிரஞ்சுக்கார நண்பர் வாங்கித்தந்த பன்றி இறைச்சியும் மூன்று வகை வைனும், மெல்பர்ன் நகரில் யாழ்ப்பாணத்து சகோதரி கலாவதியின் தம்பி மனைவி செய்து தந்த, வாழ்க்கையில் முதல் முறையாக நான் சாப்பிட்ட சம்பலும்.புறநானூற்றில் மிளைகிழான் நல்வேட்டனார் பாடல்வரி பேசும், “நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்று” என்று. நீண்ட நேரம் சொற்பொழிவாற்றுவதும் கண்டபடி விரைந்து பயணங்கள் மேற்கொள்ளுவதும் சம்பத்து அல்ல என்பது பொருள். மேற்சென்று நான் உரைக்க விரும்புவது சுவையான விருப்பமான உணவை வயிறார உண்பதுவே செல்வம். நெடுஞ்சாலை ஓரத்து பஞ்சாபி டாபாவில், லாரி டிரைவர் ரொட்டி பிய்த்துத் தின்பதைக் கண்டவர் உணர்வாரதை.வாஷிங்டன் டி.சி. சதுக்கத்தில் நின்றுகொண்டு தயிர்சாதமும் மோர் மிளகாயும் கேட்கும் கதாபாத்திரங்களும் உண்டு. பாம்பு தின்கிற ஊருக்குப் போனால் நடுக்கண்டம் நமக்கென்று சொல்ல வேண்டும் என்பார்கள் ஊரில். எத்தனை ஆயிரம் கோடி அபகரித்து என்ன பயன் அரை இட்டிலியை மிக்சியில் அடித்துக் கரண்டி கொண்டு ஊட்டப்படும் நிலை வருமாயின்? பசியையும் சீரணிக்கும் சக்தியையும் தந்த இறைக்கு நன்றி கூறத்தானே வேண்டும்! அதனால்தானே இறைவன் ஏழைக்கு உணவு வடிவத்தில் வருவான் என்றனர்!

1981-ம் ஆண்டு Authors Guild of India மாநாட்டில் கலந்துகொள்ள புதுதில்லி சென்றிருந்தேன். என் நண்பர் வீட்டில் தங்கியிருந்தேன். பெயர் நீலமேகாச்சாரியார் சந்தானம். வடகலை வைணவர். கும்பகோணத்தில் தி. ஜானகிராமன் வீடிருந்த தெருவுக்குப் பக்கத்துத் தெரு. தி.ஜா.வின் தீவிர வாசகர். ஒருநாள் மதிய உணவின்போது “சாம்பார்ல ஏதாம் வித்தியாசம் தெரியுதாய்யா?” என்றார். “ஏன் நல்லாத்தானே இருக்கு!” என்றேன். “வெங்காய சாம்பார்யா… உமக்காக விசேஷமாச் செய்தது!” என்றார். அதாவது உணவில் பூண்டு, வெங்காயம் சேர்த்துக் கொள்வதே ஒரு மரபு மீறலாகக் கொள்ளப்பட்டது. எனில் பன்றிக்கறியும் மாட்டுக்கறியும் மறைவாய் வாங்கும் இருவழியும் தூய வந்த குலப்பெருமை பேசும் வீடுகளையும் நானறிவேன் ஐம்பதாண்டுகள் முன்பே.நாய்க்கறி தின்ற சிறுகதை ஒன்றுண்டு ஆ.சி. கந்தராசா கதைத் தொகுப்பில். என் நெருங்கிய நண்பர் ஒருவர், தரைப்படையில் பணிபுரிந்தவர், வடகிழக்கு எல்லையில் பணிபுரிந்து, நண்பர்கள் வீட்டுத் திருமணங்களுக்குச் சென்றால் நாய்க்கறி தவிர்க்க இயலாதது என்றார். முகம் நோக்கிக் கேட்டேன் “நீங்க திண்ணுருக்கேளா?” என்று. அவர் பதில் தவிர்க்க இயலாது என்பதும் மறுத்தால் அவமதிப்பாகக் கருதப்படும் என்பதும்.


நாம் முன்பு சொன்ன என் நெருங்கிய நண்பர் நீலமேகாச்சாரியார் சந்தானம் குடும்பத்துடன் கன்னியாகுமரி போயிருந்தபோது, குடும்பத்தை அங்கேயே விட்டுவிட்டு என் ஊரைக் கண்டுவர பேருந்து பிடித்துப் போனார். என் தங்கை விருந்து உபசரிக்கக் கோழி அறுத்துக் குழம்பு வைத்து இலை போட்டு சோறு விளம்பிக் கறியும் ஊற்றினார். புரிந்துகொண்ட நண்பர் துண்டைப் பொறுக்கித் தள்ளி வைத்து, பிசைந்து சாப்பிட்டு எழுந்தார். இதையவர் ஊர் திரும்பியபிறகு என்னிடம் சொன்னபோது எனக்குக் கண்கள் கலங்கின.


முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்
. எனும் நற்றிணைப் பாடல் வரியின் பொருள் விளங்கியது எனக்கு.


ஷா நவாஸ் Song Bird சூப் என்றும், சேவல் கொண்டைக் கறி என்றும், ஆடு மாடு பன்றி இரத்தத்தில் செய்யப்படும் Black Pudding என்றும், Bat Paste என்றும், விடத்தன்மை கொண்ட Fugu மீன் என்றும், தெளிவாக விரிவாகப் பேசுகிறார். இவை எவை பற்றியும் இதற்கு முன் நான் கேட்டதில்லை. எக்காலத்திலும் இனி உண்ணப் போவதும் இல்லை, விருப்பும் இல்லை. யாவற்றையும் ஷா நவாஸ் ருசி பார்த்திருப்பார் என்ற உறுதியும் இல்லை.
பாரதிமணி அண்ணா அடிக்கடி சொல்வார், “கடுக்காயைத் தொட்டானாம் கோவணத்தை அவிழ்த்தானாம்” என்று. கடுக்காயைத் தொட்ட உடனேயே மலம் இளகிவிடும் என்பதற்கான மிகைச் சொல்லாடல் அது. ஷா நவாஸ் ஜாவானியப் பழமொழியொன்று கூறுகிறார், “டுரியான் ஜாத்து சாரோங் நைக்” என்று. அதற்கு அவர் எழுதும் மொழிபெயர்ப்பு – “மரத்தில் இருந்து டுரியான் விழுந்தவுடன் கைலி மேலே தூக்கும்” என்று. கைலி என்றால் லுங்கி அல்லது சாரம்.


நான் முதலில் பயணம் போன நாடு மலேசியா. ஜனவரி 2010-ம் ஆண்டில் மலேசியா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலக்கியப் பயணம். ஏற்பாடு செய்தவர் மலேசியத் தமிழ் அமைச்சர் டத்தோ சரவணன். நல்ல சொற்பொழிவாளர். சைவத் திருமுறைகள் கற்றவர். நவீன தமிழ் இலக்கியம் வாசிப்பவர். பத்துமலை முருக பக்தர். தைப்பூசத்தின்போது மலேசியப் பிரதம மந்திரி கலந்து கொண்ட கொண்டாட்டங்களில் எங்களையும் கலந்து கொள்ளச் செய்தார். பத்துமலை குகைகளுக்கும் படியேறிப் போனோம். பன்மையில் நாம் பேசுவதன் காரணம், எங்கள் குழுவில் ஜெயமோகன், மரபின் மைந்தன் முத்தையா, இலக்கியச் சொற்பொழிவாளர் த. இராமலிங்கம் என்ற உயர்நீதிமன்ற வழக்கறிஞர், கல்கி வார இதழ் சார்பில் சந்திரமௌலி, இளம் படைப்பாளி கனகதூரிகா. தைப்பூசம் திருவிழாக் கூட்டத்தில் நான் தப்பிப் போய் அலைந்தது தனிக்கதை.அந்தப் பயணத்தின்போது டுரியன் பழமும் மங்குஸ்தீன் பழமும் உண்ண ஆசைப்பட்டேன். நாங்கள் தங்கியிருந்த நட்சத்திரப் பல்லடுக்கு விடுதியில் அறிவிப்பே வைத்திருந்தனர் டுரியன் பழத்துக்கு அனுமதி இல்லை என்று. என் வேண்டுகோளை ஏற்று அமைச்சர் டத்தோ சரவணன் ஏற்பாடு செய்தார். அவரது உதவியாளர் சாலையோர டுரியன் பழச்சாலைக்கு அழைத்துச் சென்றார். பார்வைக்கு பலாப்பழத்தின் சிறு வடிவம். உள்ளே சுளை அமைப்பே பலாப்பழ வரிசைதான். நம் மக்கள் சிலருக்கு பலாப்பழ மணமே தலைவலியைத் தருமாம். டுரியன் பழ வாசனை தலைச்சுற்று, மயக்கம், வாந்திகூட ஏற்படுத்தி விடலாம். டுரியன் பழ வாசனையைக் கூர்மையான, கருத்த, அடர்ந்த வாசனை எனப் பகர்ந்தாலும் அதனை வகைப்படுத்தியது ஆகாது.
பழச்சாலையில் பழம் தேர்ந்து வெட்டி எடுத்து சுளை பிரித்துப் பரிமாறினார்கள். நாங்கள் அறுவரும் உதவியாளருமாக இரண்டு டுரியன் பழத்துச் சுளைகளைத் தின்றோம். எவருக்கும் கைலி தூக்கவில்லை, காற்சட்டை அணிந்திருந்ததால் இருக்கலாம்.
ஷா நவாசின் நூலின் பல பகுதிகளில் பேசப்பட்டுள்ள பல உணவுத் தினுசுகளை எந்தக் காலத்திலும் நான் தின்னப் போவதில்லை. ஏன் பார்க்கக்கூட போவதில்லை. பிறகல்லவா பரிந்துரைப்பது! என்றாலும் நூல் முழுவதையும் ஒவ்வாமையின்றி வாசித்தேன். அது நூலாசிரியரின் செய்நேர்த்தி. சலிப்பற்ற சொல்முறை. இணக்கமான மொழி.


பாப்புவா நியூகினியில் மரத்தடியில் ஊரும் எறும்புகள், தாய்லாந்தின் Rice Bugs, ஆஸ்திரேலியாவின் பிளம் பழத்தின் புழுக்கள், சீனாவின் Boby Mice Wine, யப்பானில் கணவாய் மீனைச் சமைக்காது கரைசலில் ஊறவைத்துக் குடிப்பது, மெக்சிகோவில் பச்சை மீனை எலுமிச்சைச் சாற்றில் ஊற வைத்துச் சாப்பிடுவது எனப் பற்பல தகவல்கள் உண்டு நூலில். பூச்சியியலின்படி 1462 வகைப் புழுக்கள் உண்ணத்தகுந்தவை, Edible என்கிறார்.
இந்து மரபையும் வேத தர்மத்தையும் மநு சாத்திரத்தையும் இன்னுயிர் ஈந்தும் காத்திட, பரப்பிட, வளர்த்திட முயலும் இந்தியரும் இன்று விரும்பி உண்ணும் பிரியாணி, பஸ்தா பற்றியும் உணவு விடுதிகளில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் பற்றியும் அநேகத் தகவல்கள். ஒரு உணவுக் களஞ்சியமாகவே கொள்ளலாம்.
இப்போது ஷா நவாசின் பத்தியொன்றை அப்படியே மேற்கோள் காட்டுகிறேன். “முழு ஒட்டகத்தின் வயிற்றைச் சுத்தமாகக் காலிசெய்து, அதனுள் ஒரு ஆடு, அந்த ஆட்டின் வயிற்றில் சுமார் இருபது கோழிகள், அந்தக் கோழிகளின் வயிற்றில் முட்டை, அரிசி உள்ளே வைத்து அவித்து சமைக்கும் கிளாசிகல் உணவுதான் Stuffed Camel” என்று எழுதுகிறார். நமக்கு Stuffed Paratha தான் பழக்கம்.


ஒட்டகக்கறி நான் தின்றதில்லை. ஆனால் தின்ற அநுபவம் கிடைத்தது கீரனூர் ஜாகிர்ராஜாவின் ‘கசாப்பின் இதிகாசம்’ என்ற சிறுகதை வாசித்தபோது. மலையாளத்தில் ஓ.வி. விஜயன் எழுதிய ‘கசாக்கின்ற இதிகாசம்’ வேறு சமாச்சாரம்.அயல்பசி’ ஆசிரியரின் வாசிப்புப் பரப்பு நம்மை மலைக்க வைக்கிறது. இந்த இடத்தில் ஒரு தேற்று ஏகாரம் போட்டு நம்மையே மலைக்க வைக்கிறது என்று ஒருபோதும் எழுதமாட்டேன். அது எலி புழுத்துவது போல் ஆகிவிடும். சீனாவில் இருந்துதான் கரும்புச் சர்க்கரை வந்தது எனவும், சரித்திர காலத்துக்கு முன்பாகவே சீனாவிலும் இந்தியாவிலும் கரும்புப் பயிர் இருந்தது என்றும் சொல்கிறார். ரிக் வேதத்தில் கரும்பு பற்றிய செய்தி இருக்கிறது என்று A.T. Acharya எனும் வரலாற்று ஆசிரியரை மேற்கோள் காட்டிப் பேசுகிறார். நாலடியார் பாடலில் கரும்புத் தோட்டம் பற்றிய குறிப்பு உண்டு என்கிறார். ‘அங்ஙன விட்டாப் பற்றுல்லல்லோ!’ என்பார் மலையாளத்தில். ஷா நவாசை அப்படி விட்டுவிடலாகாது என்று கருதி நாலடியாரைத் தேடிப்போனேன். அந்தச் செய்தி ஷா நவாஸ் எமக்கறித்த திறவுகோல்.


நாலடியார், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று. கி.பி. இரண்டாம் நூற்றாண்டு.
கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி
இடித்துநீர் கொள்ளினும் இன் சுவைத்தே ஆகும்”

என்பது பாடலின் முதலிரு வரிகள். தருமர் அல்லது பதுமனார் உரைகளை எளிமைப்படுத்திச் சொல்லலாம். கரும்பினைத் தறித்து, கணுக்கள் தகர்ந்து போகும்படியாக நெரித்து இடித்து ஆலையில் வைத்துக் கருப்பஞ்சாற்றினை எடுத்தாலும் அதன் சுவை இனிப்பானதாகவே இருக்கும் எனப் பொருள் கொள்ளலாம்.இன்னொரு நாலடியார் பாடல்வரிகள்,
கருத்துணர்ந்து கற்றறிந்தார் கேண்மை எஞ்ஞான்றும்
குருத்தில் கரும்பு தின்றற்றே”

என்பன. கற்றுணர்ந்த அறிவுடையாருடன் கொண்ட உறவு எப்போதும் நுனியில் இருந்து கரும்பு தின்னத் தொடங்குவதைப் போன்றது என்று பொருள் சொல்லலாம்.ஆனால் பல்கலைக்கழகங்களின் கருத்தரங்குகளில் கட்டுரை வாசிப்புத் தொழில் பார்க்கும் தமிழறிஞர்கள் இராசேந்திரசோழன் காலத்துக்குப் பிறகே இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவுக்குள் கரும்பு வந்தது என்று சாதிக்கிறார்கள்.உலக நாடுகளின் உணவு பேசும் நவாஸ் கூப்பதனியும், எரிக்கலான் கொழுக்கட்டையும், பால் கொழுக்கட்டையும், சீனிக்கொழுக்கட்டையும் பேசுகிறார். உடுப்பி கிருஷ்ணாராவ் பற்றியும் தகவுரைக்கிறார். உலகின் மூன்று வகையான நாக்கு உள்ளவர்கள் பற்றி விவரிக்கிறார். அவை உண்மை பேசும் நாக்கு, கருநாக்கு, சழக்கு நாக்கு என்பவை அல்ல. சுவை பேதமுடைய நாக்குகள். அதிவேக நாக்கு, தடி நாக்கு, காய்ச்சல் கண்டவன் நாக்கு போன்ற நிரந்தரத்துவம் கொண்ட நாக்கு என்கிறார்.வெற்றி பெற்ற கிளாடியேட்டர்களிடம் ரோமானியர்கள் ஒரு சொட்டு ரத்தம் கோரிப்பெறும் செய்தி பேசுகிறார். கெட்ச்சப்பின் வகைகள், உபயோகங்கள் பேசப்படுகிறது.


நூலில் தலைக்கறி தக்கடி என்றொரு நுட்பமான அத்தியாயம். நான் பம்பாயில் தொழிற்சாலையொன்றில் வேலை பார்த்த 1973-1980 காலகட்டத்தில் என்னுடன் பணிபுரிந்த கூர்க்கா தன்ராம்சிங் பற்றிய கதையொன்று ‘தன்ராம்சிங்’ எனும் தலைப்பிலேயே எழுதினேன். 2007-ம் ஆண்டு ஆனந்த விகடன் வெளியிட்டது. அதில் திபேத்திய கூர்க்காக்கள் மலிவான விலையில் ஆட்டுக் காதுகள் வாங்கி, மயிர் பொசுக்கி, நறுக்கிச் சமைப்பது பற்றி எழுதியிருப்பேன். ஷா நவாஸ், “சதையுமில்லாமல் எலும்புமில்லாமல் காது மடல்களை நச் நச்சென்று கடித்துத் தின்னும் சுகம் இருக்கிறதே… அதைச் சாப்பிட்டவர்களுக்கே தெரியும்” என்கிறார்.சிங்கப்பூர் தலைக்கறி பற்றி அருமையான பதிவொன்றும் உண்டு. ‘சிங்கப்பூர் கிளாசிகல் உணவுகளில் முதலிடத்தில் மீன் தலைக்கறி உள்ளது’ என்கிறார். நான் முதன்முறை சென்றிருந்தபோது, ‘முத்து கறீஸ்’ எனும் புகழ்பெற்ற உணவகத்தில் மீன் தலைக்கறியுடன் சோறு தின்றது நினைவில் உண்டு. அன்றிருந்து சிங்கப்பூர் மீன் தலைக்கறிக்கு அடியேம் யாம். சில ஆண்டுகள் முன்பு புவனேஷ்வர், கட்டக், பூரி என ஒருவார காலம் ஒடிசா மாநிலத்தில் அலைந்தபோது சொன்னார்கள் – ஒரிய மக்களின் திருமணம் நள்ளிரவில் நடக்கும் என்றும் சம்பந்திகளுக்கு மீன் தலைக்கறி பரிமாறுவது ஒரு கட்டாயம் என்றும்.


உருளைக்கிழங்கு உத்திகள் என்றொரு அத்தியாயம். இன்று இந்தியர் 130 கோடிப்பேரில் உருளைக்கிழங்கு உண்ணாதவர் இல்லை. ஒரே செடியில் 165 கிலோ உருளைக்கிழங்கு விளைவித்த சாதனையில் தொடங்குகிறது அந்தக் கட்டுரை. Macdonald பற்றி விரிவாகப் பேசுகிறது.இன்னதுதான் என்றில்லை. சமையல் குறித்த எதைப்பற்றியும் பேசுகிறார் ஷா நவாஸ். மிகவும் பிரபலமான வினிகர் திராட்சையில் இருந்துதான் செய்யப்படுகிறது. ஆப்பிளில் இருந்து பெறப்படுவது சிடார் வினிகர். ஓட்ஸ் அல்லது பார்லியில் இருந்து பெறப்படுவது மால்ட் வினிகர். அரிசியில் இருந்து பெறப்படுவது Rice Vinigar என்று வகைப்படுத்துவதோடு நின்றுவிடாமல் ஒவ்வொரு வினிகரும் குறிப்பிட்ட வகை சமையலுக்கு மட்டுமே பொருந்தும் என்கிறார். நாமோ கடுகு எண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் யாவற்றுக்குமான சமூக நீதி செய்து பாமாயிலுக்கு நகர்ந்து விட்டோம். சூர்யகாந்தி எண்ணெய், அரிசித்தவிட்டு எண்ணெய், மாட்டுக் கொழுப்பு – பன்றிக் கொழுப்பு – நெய் – டால்டா யாவுமே சர்வஜன மகத்துவங்கள் ஆகிப்போயின.நூலின் இறுதியில் அற்புதமாக இரு சொற்றொடர் எழுதுகிறார் “நான் சமையல் பிஸ்தாவாக நினைக்கும் ஒருவரிடம் எது நமக்கு ஆரோக்கியமான உணவு என்று கேட்டேன். நீங்கள் சிறு பிராயத்தில் இருந்து பிரியமாகச் சாப்பிட்டு வரும் உணவுதான் ஆரோக்கியமானது என்றார்” என்று.சிவகாசி நாடார் சமூகத்துத் திருமண விருந்தில் இரவு பால்சோறு விசேடமாகப் பரிமாறுவார்கள். அது சிறப்பான உணவாகக் கொள்ளப்படுகிறது என்பதும் அறிவேன். எனினும் உளுந்தங்கஞ்சியும், சாளைப்புளிமுளமும், புட்டு பயிறு பப்படமும், கூட்டாஞ்சோறும் என்றும் நமக்குப் போதும் என்று ஆறுதல் கொள்கிறது மனது.

சுவை விருப்பங்கள்

Posted: ஜனவரி 21, 2021 in வகைப்படுத்தப்படாதது

என் கடைக்குப் பக்கத்தில் பிரைம் மார்ட் இருக்கிறது. சிலநேரங்களில் அங்கு வாங்கிய பொருட்களைக் கூடையுடன் கொண்டுவந்து வைத்திருப்பார் சீன நண்பர் ,ஒரு நாள் அதில் கறுப்பாக அல்வா மாதிரி ஒரு பொருள் இருந்தது. அதைப்பற்றிக் கேட்டபோது You never try? என்று கேட்டுவிட்டு விளக்கம் சொன்னார். ஜெலட்டின் என்ற சீன உணவு, கழுதைத்தோலை கொதிநீரில் நாள்முழுவதும் வேகவைத்து ரோமங்களை அகற்றிய பிறகு அரைத்து எடுத்து கற்கண்டு கலந்து சோயா எண்ணெய், கடலை எண்ணெய் இவற்றைக் கலந்து சவ்வுமிட்டாய் கிண்டுவது மாதிரி கிண்டி எடுத்து, பதமான நிலைக்கு வந்தவுடன் ஒரு மொபைல் போன் சைஸில் வார்த்து காயப்போட்டுவிடுவார்களாம் அதன் 200 கிராம் 31.20 வெள்ளி விலை என்றார். சாப்பாட்டுக்குப் பின் இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ஈரல், கிட்னிகளுக்கு அதிகம் வேலை இருக்காது என்றார்.


எப்போதுமே அவர் பேசும்போது சீனாவை விட பிரான்ஸ்தான் உலகில் சமையல் கலையில் உலகிற்கு வழிகாட்டி என்ற பெருமிதம் பொங்கி வழியும். இத்தாலியிலிருந்து ஆட்களைக் கடத்திக்கொண்டு போய் சமையல் கற்றவர்கள் பிரான்சுக்காரர்கள் என்று ஒரு பேச்சும் உள்ளது ,இருந்தாலும் சமையல் பற்றி மிக அதிகமான குறிப்புக்கள் பிரான்சுக்காரர்களிடம் தான் குவிந்து கிடக்கிறது. அவரிடம் ஒரு நாள் ‘நீங்கள் கருவாடு சாப்பிட்டதுண்டா? என்றேன். ‘பழைய சாக்கு மூட்டைமாதிரி வாசனை அடிக்கும் அதை எப்படி சாப்பிடுகிறார்கள்?’ என்று திருப்பிக் கேட்டார்.

வடகொரிய அதிபர் கிம்ஜான் இறந்தபிறகு ஒரு செய்தி படித்தேன். அவரிடம் 10 வருடமாக வேலை செய்த சமையல் நிபுணர் Kenji Fujimoto ஜப்பானுக்குத் தப்பிச் சென்று ஒரு பேட்டி கொடுத்திருந்தார். பெரும்பாலும் சதாம் வீழ்ந்த பிறகும், கடாஃபி வீழ்ந்த பிறகும் அவர்களுக்கு சமையற்காரர்களாக இருந்தவர்கள் எப்படியாவது தப்பித்துவிடுகிறார்கள். இவர் வடகொரிய அதிபர் குடிக்கும் அமெரிக்க மதுபான வகைகள் ஜானிவாக்கர் ஹென்னஸி XO மற்றும் அவருடைய பிரான்சு ஒயின் சீன, மலேசியப் பழவகைகள் மற்றும் இத்யாதி ரகசியங்களைச் சொல்லிவிட்டு ஜப்பானிய Sashimiக்கு அவர் அடிமை என்கிறார். இதில் அவருக்குள்ள பிரச்சினை, அந்த மீனை அவர் சாப்பிடும்போது அதன் வாய் மற்றும் வால் துடித்துக் கொண்டிருக்க வேண்டுமாம் செதில்களையும் மற்ற உறுப்புகளையும் வெட்டி சுத்தப்படுத்தும்போது அதன் உயிர் போகக் கூடிய பகுதிகளை மட்டும் விட்டுவிட்டு, வெட்டி எடுத்துக் கொடுப்பது இவருக்கு நரக வேதனையாக இருந்திருக்கிறது. என்றாவது மீன்அசைவற்றுக் கிடந்துவிட்டால் ஒரு கோபப் பார்வையுடன் Get lost என்று வெளியே போய்விடச் சொல்லி சத்தம் போடுவாராம் .இது மேலும் விபரீதமாக முடிவதற்குள் தப்பித்துவிட்டதாகப் பேட்டி கொடுத் திருந்தார். உணவைச் சமைக்கும்போது அதில் உள்ள உயிர்த்தன்மை அழிகிறது, சமைத்த உணவு சாவை அழைப்பதற்கு சமம். தெரிந்தும் தெரியாமலும் பல நுண்ணுயிர்கள் அழியும் சமைத்த உணவு உடலுக்கு ஏற்றதல்ல என்ற ராமகிருஷ்ணரின் கொள்கை வடகொரிய அதிபருக்குத் தெரிந்திருக்கிறது.உயிருடன் அல்லது பாதி உயிருடன் சாப்பிடுவது சில நாடுகளில் சாதாரண உணவுப் பழக்கமாக இருக்கிறது. பிலிப்பைன்ஸ், கம்போடியா நாடுகளில் Baalut என்ற உணவுகள் சாதாரண கையேந்திபவன்களில் கூட கிடைக்கின்றன. அது ஒரு கால் முளைத்த முட்டை என்று சொல்கிறார்கள். முட்டையை சில வாரங்கள் மண்ணுக்குள் புதைத்து வெளியிலெடுத்து வேகவைத்து தருவார்கள். பாதி வளர்ந்த எலும்புகள் சாப்பிட மொறுமொறுவென்று இருக்குமாம்.

சீனாவில் Baby mice Wine மிகவும் பிரபலமான சூப். இரைதேடச் சென்ற தாய் எலியை ஏமாற்றிவிட்டு பிடிக்கப்பட்ட பிறந்து சில நாட்களே ஆன எலிக்குஞ்சுகள் – இதன் எலிக்குஞ்சு பாதிக்கண் திறந்த நிலையில் இருப்பதுதான் மிகவும் முக்கியம். இல்லாவிட்டால் ஒரு ருசியும் இருக்காதாம். ஆனால் இதைக் குடித்தவர்களிடம் விசாரித்தால் மண்னெண்ணெய் வாடை அடிக்கும் என்று சொல்கிறார்கள். இதே மாதிரிதான் வாத்து முட்டை ஊறுகாய் பிலிப்பைன்ஸில் பிரபலமானது. குஞ்சு வெளியே எட்டிப்பார்க்கும் நேரமாகப் பார்த்து பச்சை மிளகாய் உப்பு கலந்து Omlette போட்டுத் தருவார்கள்.ஜப்பானின் Shiokooa கணவாய் மீனை சமைக்காமல் கரைசலில் ஊறவைத்து குடிப்பது, மெக்ஸிக்கோவில் பச்சை மீனை எலுமிச்சை சாற்றில் இரவு முழுதும் ஊறவைத்து, அடுத்த நாள் எடுத்து சாப்பிடுவது. இதற்கு Red Snapper மீன் வகைதான் பொருத்தமானது என்கிறார்கள். கோழி சூப்பில் ஆந்தைத் தலைகளை மட்டும் வெட்டிப்போட்டு ஆந்தை சூப் என்று விற்பனை செய்வதைக் கட்டுப்படுத்தி இருப்பதாக இப்போது சீனாவிலிருந்து செய்தி வருகிறது .

Mr.Bean படத்தில் வரும் Raw Beef காட்சிகள் நகைச்சுவைக்காக எடுக்கப்பட்டவை அல்ல. உண்மையில் அது Steak Tartare. நடிகை Angelina Jolie கம்போடியா, தாய்லாந்து செல்லும்போது கலோரி குறைந்த புரோட்டின் அதிகமுள்ள கரப்பான்பூச்சி, புழுவகைகளைத் தான் விரும்பிச் சாப்பிடுவாராம். பூச்சியியலின் (Entomophagy)படி 1462 புழு வகைகள் சாப்பிட உகந்தவை என்கிறார்கள்.
பாப்புவா, நியூகினியில் மரத்திற்கு அடியில் ஊறும் எறும்புகளைப் பிடித்து விற்பது பெரிய வியாபாரம் Sago Norms சாப்பிட அவ்வளவு மொறுமொறுப்பாக இருக்குமாம். தாய்லாந்தில் Rice Bugs சாப்பிடாதவர் களே இல்லை எனலாம். இது கரப்பான் பூச்சி மாதிரி இருக்கும். ஆனால் நிறம் வெள்ளை. அரிசிதான் சாப்பிடும் உணவு. அரிசியில் தலையை விட்டு ஒரு உறிஞ்சு உறிஞ்சிவிட்டு தலையை சிலிர்த்துக் கொண்டு எழும் அழகே தனி என்பார்கள் அதை அப்படியே பிடித்து
பொரித்து சாப்பிட்டால் ருசியோ ருசிதானாம் .

பித்தகோரஸுக்குப் பிடிக்காத பருப்பு

Posted: ஜனவரி 18, 2021 in வகைப்படுத்தப்படாதது

உலகின் மாற்றங்களுக்குக் காரணமான அறிவியலாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இவர்கள் தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்பு களைத் துறந்து “தன்னை மறந்தவர்களாகத்தான்” இருந்திருக்கிறார்கள். அதிலும் எழுத்தாளர்களுக்கு அறிவியலாளர்களைவிட எப்போதும் தன்னை மறந்த நிலை இருக்கும்தானே ,பாரதி சாப்பிட்டுவிட்டு வரும்போது தாடியும் சாப்பிட்டிருக்கும் என்னும் வரி வேறொரு பாரதியை நமக்குக் காட்டுகிறது.பாரதி சோற்றை சிந்தி இறைத்து சாப்பிடுவார், சாப்பிடும்போதே சாப்பாட்டை மறந்துவிடுவார் என்கிறார் அவருடன் பழகிய நாகசாமி. குளிக்க ஆரம்பித்தால் ஆடைமேலேயே தண்ணீரை விட்டுக்கொண்டே இருப்பார்.மேலும் கையில் கிடைத்த ஏதேனும் துணியை தலைப்பாகையாக கட்டிக்கொண்டு வெளியே செல்வார் என்கிறார்.உணவு விஷயத்தில் கேலியும் கிண்டலுமாக எழுத்தாளர்களின் நக்கலை எழுதினால் ஒரு நூலே வெளியிடலாம் .ஒருமுறை பிரெஞ்சு நாடக எழுத்தாளர் ஜார்ஜ் பியூடா தான் ஆர்டர் செய்த சிங்கி இறால் (Lobster) ஒரு காலை இழந்து காணப்பட்டது. வெயிட்டரைக் கூப்பிட்டுக் காரணம் கேட்டிருக்கிறார். ‘பொதுவாக மீன்தொட்டியில் போடப்படும் சிங்கி இறால்கள் சண்டையிட்டுக்கொள்ளும் இயல்பு கொண்டவை. அதுபோன்ற ஒரு சண்டையில் இந்த இறாலுக்குக் கால் ஒடிந்துவிட்டது’ என்று வெயிட்டர் சொல்ல, ’அப்படியென்றால் சண்டையில் இதன் காலை ஒடித்து வெற்றிபெற்ற அந்த இறாலை சமைத்துக் கொண்டுவா. என்றாராம் .

18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு எழுத்தாளர் “Conte De Buffon “தொகுதிகள் அடங்கிய Historie Naturelle என்ற புத்தகத்தை எழுதிப் புகழ் பெற்றவர். அவரை தினமும் காலை ஆறு மணிக்குத் தூக்கத்திலிருந்து எழுப்புவதற்காகவே ஒரு வேலையாள் வைத்திருந்தராம். முதலில் உடம்பைத் தட்டி உருட்டிவிட்டுப் பார்க்க வேண்டும். அதிலும் எழாவிட்டால் ஐஸ் தண்ணீரை மேலே ஊற்றி எழுப்ப வேண்டும். அப்படி சரியாக எழுப்பிவிட்டால் போனஸும் கொடுப்பாராம். தூக்கம் என்றவுடன் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் பித்தகோரஸ் தியரத்தை ஒப்புவிக்க வேண்டும் என்று கூறும் என் பள்ளி ஆசிரியர் ஈசுப் ஞாபகத்திற்கு வருகிறார். பித்தகோரஸ் தியரத்தை எப்படி உருப்போடுவது என்பது மட்டுமல்லாமல் பித்தகோரஸ் வாழ்வில் நடந்த சம்பவங்களையும் என்றும் நினைவில் நிற்கும் வகையில் சொல்வதுதான் ஈசுப் சாரின் பாணி.பித்தகோரஸ் ரொட்டி, தேன், கீரைகள் தவிர எப்போதாவது மீன் சாப்பிடுவாராம். இறைச்சி, கோழி இவைகளைத் தொட மாட்டாராம். பச்சைப்பருப்பாக இருந்து நாளாக நாளாக பிரவுன் கலரில் மாறும் Fawa Beans அவருக்குப் பிடிக்காதாம். இறைச்சி மாதிரியே ஊட்டச்சத்து நிறைந்த பருப்பு அது. இரவில் பாலுணர்வைத் தூண்டிவிட்டு தன் சிந்தனையைக் குலைத்துவிடும் என்று தன் வாழ்நாளில் அறவே அதை ஒதுக்கிவிட்டாராம்.

இத்தாலியில் பித்தகோரஸிடம் கணிதம் கற்றுக்கொள்வதற்காகவே ஒரு மாணவர் வட்டம் உருவானது. பித்தகோரியன்கள் என்ற தனி கலாச்சாரக் குழுவாக அவர்கள் உருவெடுத்தார்கள். இறைச்சி, பீன்ஸ் போன்றவற்றை விலக்கி வைப்பது அவர்களின் கோட்பாட்டில் ஒன்று .டைனசோர் படிவங்களைக் கண்டுபிடித்ததில் முக்கியப் பங்காற்றிய பிரிட்டிஷ் விஞ்ஞானி William Buckland பிரிட்டனைச் சேர்ந்த அறிவிய லாளர். எத்தனை மிருகங்களை ருசிபார்க்க முடியுமோ அத்தனை மிருகங்களை ருசிபார்க்க முடியுமோ அத்தனை மிருகங்களை தன் வாழ் நாளில் ருசி பார்த்தவர். இவர் ஆராய்ச்சி செய்த லண்டன் மிருகக் காட்சியில் செத்துப் போகும் மிருகங்கள் இவரின் உணவு மேஜைக்கு வந்து விட்டு மிச்சம் மீதிதான் அடக்கம் செய்யப்படும். ஒரு நாள் Buckland அடர்ந்த காட்டில் பயணம் செய்து கொண்டிருந்த போது தான் வழி தவறிவிட்டார். கடைசியில் அவர் எப்படி வழி கண்டுபிடித்திருப்பார் என யாராலும் யூகிக்க முடியாது. கீழே இறங்கி மண்ணை கொஞ்சம் ருசிபார்த்துவிட்டு, அந்த இடம் லண்டன் ஆக்ஸ் Bridgeக்கு அருகில் உள்ளது என்று சரியாகச் சொன்னாராம். திரவ எரிபொருளில் இயங்கும் ராக்கெட்டை முதன்முதலாக வடிவமைத்த தொழில்நுட்ப வல்லுநர் Robert Goddard,, தான் சாப்பிட்டதை கால் மணி நேரத்தில் மறந்துவிடுவாராம். இரண்டாம் உலகப் போரின்போது நியூ ஜெர்ஸியில் உள்ள ஒரு கம்பெனியில் அவர் வேலை செய்தார். அந்தக் கம்பெனியின் ஆடிட்டர் ‘இவ்வளவு குறைந்த அளவில் உணவைச் சாப்பிட்டு உயிர் வாழ்பவரை இப்போதுதான் பார்க்கிறேன் என்ற வியந்திருக்கிறார்.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ரசாயன வின்ஞானி Karl Scheele ஆக்ஸிஜன் மற்றும் பல வேதியல் மூலக்கூறுகளைக் கண்டுபிடித்தவர். அவர் 1706இல் தன்னுடைய 43வயதிலேயே இறந்ததற்குக் காரணம் பல ரசாயனப் பொருட்களை வாயில் வைத்து ருசி பார்த்ததுதான் காரணம் என்கிறார்கள்.


தன்னை மறந்த விஷயத்தில் ஐசக் நியூட்டனுக்கு முதலிடம் கொடுக்கலாம். நியூட்டன் கொதிக்கும் பாத்திரத்தில் முட்டையைப் போடுவதற்குப் பதிலாக தன் கைக்கடிகாரத்தைப் போட்டு விட்டுகையில் முட்டையுடன் பாத்திரத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருப் பதை அவருடைய பணிப்பெண் பலமுறை பார்த்திருக்கிறாராம். ஒரு நாள் தன் நண்பரை விருந்துக்கு வரச் சொன்ன நியூட்டன் ஏதோ சிந்தனையில் இருக்க, வந்த நண்பர் தான் வந்த வேலையை முடித்து ஏப்பம் விட்டுக்கொண்டிருந்திருக்கிறார். கொஞ்ச நேரம் கழித்து உணவு மேஜையில் வந்து அமர்ந்த நியூட்டன், ‘நண்பரே, நான் இந்த மிச்சமிருக்கும் உணவுகளைப் பார்த்திருக்காவிட்டால் நான் இன்னும் சாப்பிடவில்லையோ என்றுதான் இன்னும் நினைத்துக் கொண்டிருப்பேன்’ என்றாராம்.
அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல் இரவு முழுதும் விழித்திருந்து விட்டு பகல் பொழுதில் தாமதமாக எழும் வழக்கம் உள்ளவர். காலையில் தயார் செய்யப்பட்ட காலை உணவை மாலையிலும் இரவிலும்தான் சாப்பிட்டு பழகிய கிரஹாம்பெல் கடைசியில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டார். ஒருமுறை கிரஹாம்பெல்லிடம் மருத்துவர் ‘இரவு நேரங்களில் சமையலறையில் புகுந்து சீஸ், மர்கோனி, உருளைக்கிழங்கு என்று சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அவை வாழ்வை சீக்கிரம் முடிவுக்குக் கொண்டு வந்துவிடும்’ என்றார். அதற்கு கிரஹாம்பெல்லின் பதில், ‘வாழ்நாளெல் லாம் இப்படியே சாப்பிட்டு பழக்கமாகிவிட்டது, அது முடிவுக்கு வருவதில் எனக்கு வருத்தமில்லை.’லண்டனைச் சேர்ந்த இரசாயன விஞ்ஞானி Henry Cavendish தண்ணீரின் மூலக்கூறுகளைச் சரியாகக் கணக்கிட்டவர். உணவில் எந்தப் பிடிப்பும் இல்லாமல் சமைத்துப் போட்டதைச் சாப்பிட்டுவிடும் குணமுடையவர். இறைச்சியில் ஒரு சின்ன கால்பகுதி துண்டை மட்டும் சாப்பிடுவாராம். விருந்தினர்களையும் அவர் அப்படி எடை போட்டதுதான் சுவாரஸ்யம். ‘விருந்தினர்களுக்குக் கொடுக்க ஒரு கால்துண்டு போதுமா’ என்று சமையல்காரர் கேட்டபோது, ‘வேண்டுமானால் இன்னொரு கால் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதானே’ என்றாராம்.

Rita Levi Montalcini – இத்தாலியை சேர்ந்த நரம்பியல் நிபுணர். 1986இல் மருத்துவத்தில் நோபல் பரிசைப் பகிர்ந்துகொண்டவர். இரண்டாம் உலகப் போர் காலத்தில் அவர் யூதராக இருந்ததால் பல்கலைக்கழகத்தில் தடை விதிக்கப்பட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த காலத்தில் தன்னுடைய வீட்டின் சமையலறையைப் பரிசோதனைக்கூடமாக்கி முட்டைக் கருவின் நரம்பியல் செயல்பாடுகளைக் கண்டறிந்தவர். ஆராய்ச்சி முடிந்த ஒவ்வொரு நாளும் அந்த முட்டைகள்தான் அவருக்கு உணவானதாம்.ஷெல்லி கவிதைகள் எழுதும்போது, அவருடைய வாய் நிறைய நொறுக்குத்தீனி இருக்குமாம் எதையாவது மென்றுகொண்டே இருந்தால்தான் கவி மனம் வாய்க்கும் என்பாராம் , இளம் எழுத்தாளர் நிக்கோலஸ் கேஜ். கௌரவமான செக்ஸ் பழக்கமுடைய விலங்குகளை மட்டும் சாப்பிடும் குணமுடையவர் ,அவர் சமீபத்தில் அளித்த நேர்காணலில் அதையெல்லாம் எப்படிங்க கண்டுபிடிப்பீங்க என்றால் ,நான்அதனால் பன்றி இறைச்சியை சாப்பிடுவதில்லை என்று முடித்துக் கொண்டார் .விக்டர் கியூகோ பாதி எறுமை இறைச்சியை ஒரே ஆளாக
இளமையில் சாப்பிட்டதை அடிக்கடி நினைவு கூர்ந்து தன் சாப்பாடு மேஜையில் இறைச்சி மிஞ்சி விடாமல் பார்த்துக் கொண்ட செய்தியுடன் இந்தக் கட்டுரையை முடித்து கொள்ளலாம் .

ஆனந்தமான கசப்பு

Posted: ஜனவரி 15, 2021 in வகைப்படுத்தப்படாதது

இந்தோனேசிய நட்சித்திர விடுதி ஒன்றில் என் நண்பர் மேலாளராக இருக்கிறார். சிங்கப்பூர் வரும்போதெல்லாம், விடுதியில் நடக்கும் சுவாரஸ்யங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார். ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு ஓய்வெடுக்க வந்த பணக்கார வாடிக்கையாளர் பற்றி நண்பர் ஒரு நாள் சொன்னார். அந்தப் பணக்காரரும் பெண்ணும் அறையில் இருந்தபோது, விடுதிக்கு இன்னொரு பெண் வந்தாராம். அந்த பணக்காரர் பெயரைக் குறிப்பிட்டு, தன்னை அவரது மனைவி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, அறை எண் விவரம் கேட்டிருக் கிறார். என் நண்பர் மனதில் ஏதோ அலாரம் அடித்திருக்கிறது. உடனே உஷாராகி, பணக்காரரை இன்டர்காமில் அழைத்து விஷயத்தைச் சொல்லியிருக்கிறார். ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று பணக்காரர் என் நண்பரிடம் கேட்க, அறைக்குள் இருக்கும் பெண்ணை சைலண்ட்டாக வெளியேற்றவும் தடயங்களை மறைக்கவும் நண்பர் அவசரமாக இரண்டு பணியாளர்களை அனுப்பியிருக்கிறார். அறையை மின்னல் வேகத்தில் ஒழுங்குபடுத்தி பணக்காரரை அவருடைய மனைவியிடமிருந்து காப்பாற்றியதில் என் நண்பருக்கு பரம திருப்தி. காலத்தால் மறக்க முடியாத இந்த உதவிக்காக காலையில் பணக்கார வாடிக்கையாளரிடமிருந்து தக்க வெகுமதி கிடைக்குமென்று எதிர்பார்த் திருந்த நண்பருக்கு நடந்தது வேறு. அந்த வாடிக்கையாளர் நண்பரை வறுத்தெடுத்துவிட்டாராம். நண்பர் அனுப்பி வைத்த பணியாளர்கள் தடயங்களை வெளியே வீசும் அவசரத்தில், பணக்காரர் ஆசை ஆசையாக ஐவரி கோஸ்டிலிருந்து வாங்கி வந்த ரபூஸ்த்தா (Ivory Coast )காபிக்கொட்டை டின்னையும் வெளியே வீசி விட்டாராம் ,ஆசை மனைவி கோபத்தை விட ரபூஸ்த்தா கோப்பிக் கொட்டை மேல் பிரியம் அப்படி !


‘இசை மேதை பீத்தோவன் தினமும் காலையில் 60 ஐவரி கோஸ்ட் காப்பிக்கொட்டைகளை எண்ணி எடுத்து, அவற்றை நாள் முழுதும் வடிகட்டிக் குடிக்கும் பழக்கம் உடையவர்.தத்துவ ஞானிகளுக்கும், சூஃபிகளுக்கும் போதை தரும் ஒரு வஸ்துவாக காபி எத்தியோப்பியாவிலிருந்து அறிமுகமானது. ஒயின் மாதிரி சாறை வடித்து அருந்திக்கொண்டிருந்தவர்களில் ஒருவர் அதை வறுத்துப் பொடியாக்கி உபயோகித்தால் கூடுதல் சுவை தருவதைக் கண்டுபிடித்தார். சூஃபிகளுக்கு மதுவகைகள் விலக்கப்பட்ட பானங்களாக இருந்ததால், காபி அந்த இடத்தை நிரப்பியது. நடுநிசி தியானத்திற்கு எழுந்தவுடன் உடம்பைத் தயார்படுத்தும் காபியின் இடத்தை வேறு எதனாலும் நிரப்ப இயலவில்லை. அரபு மொழியில் Qahwa என்றால் ஒயின், Qawi என்றால் பலம்.பெர்ஷியா, எகிப்து, துருக்கி, ஆப்ரிக்க நாடுகளில் மெக்கா புனித யாத்ரீகர்களிடம் பரவிய காப்பிக்கொட்டை 1511ல் மெக்கா நகர ஆளுனரால் முதன் முதலில் தடைசெய்யப்பட்டது.


Travels in The Orient 1582 என்ற புத்தகம் வெளிவந்த பிறகுதான் காபியின் மகிமையைப் பற்றி ஐரோப்பியர் களுக்கு தெரியவந்தது. ஒயின்ஸ் கலாச்சாரத்தில் கொடி கட்டிப் பறந்துகொண்டிருந்த பிரான்ஸ் காபி அருந்தினால் மலட்டுத்தன்மையும், வாதமும் ஏற்படும் என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது புகழ்பெற்ற பிரான்ஸ் மருத்துவர் ஒருவர் காபி சிறுநீரகக் கல்லையும், ஸ்கார்வி நோயையும் குணப்படுத்துவதாக அறிவித்தார்.  காபி கிளப்கள் குறைந்த நேரத்தில் அதிக நேரம் பேசிக்கொண்டிருக்கும் கலாச்சாரம் இங்கிலாந்திலிருந்து தொடங்கியது. பீர், ஒயின், விஸ்கி வகைகளைக் குடித்துவிட்டு மட்டையாகிவிடும் விருந்தினர்களுக்கு காபி குடிக்கும் கலாச்சாரம் ஒரு  மாற்றுத் தீர்வாக அமைந்தது. காபி தன்னை நிலைநிறுத்த பல தடைகளைக் கடந்து வந்திருக்கிறது. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்வீடன் அரசன் இரண்டாம் Adolf Gustav காபி குடிப்ப தால் உடம்பில் விஷமேறி வரும் என்பதை அறிவியல்ரீதியாக நிரூபிக்க முயன்றார். ஒரு மருத்துவக் குழு அமைத்து, அவர்கள் மூலம் இரண்டு ஜெயில் கைதிகளை ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார்.கைதிகள் காபியைத் தினமும் அதிக அளவில் குடிக்கவைக்கப் பட்டார்கள். கடைசியில் அரசனும், அந்த மருத்துவக் குழுவினரும் இறந்த பிறகும், கைதிகள் உயிர் வாழ்ந்தார்களாம்.பல விதமான தடைகளை அனுபவித்த காப்பிக்கு 1930களில் ஒலிம்பிக் விளையாட்டில் தடை விதிக்கப்பட்டது. 1960களில் ஊக்க மருந்து சோதனையை அறிமுகப்படுத்திய ஒலிம்பிக் கமிட்டி காபியையும் ஊக்க மருந்து லிஸ்ட்டில் சேர்த்தது. ஆனால் காமன்வெல்த் போட்டிகளில் ‘காபி குடிப்பதற்கான ஒரு பானம். ஊக்க மருந்தல்ல’ என்று தடை நீக்கப் பட்டது.


காபிக்கும் கருவுறுதலுக்கும் உள்ள தொடர்புகளை எலிகளை வைத்து ஆராய்ச்சி செய்ததில், கருமுட்டைகளை எடுத்துச்செல்லும் குழாய்களின் தசைஇயக்கத்தை காபி கட்டுப்படுத்துகிறது என்று கண்டுபிடித்தார்கள்.
காஃபின் பற்றிய இரண்டு முக்கியமான புத்தகங்கள் எழுதிய Jack James  காபிக்கு அடிமையான சுமார் 12,000  கர்ப்பிணிப் பெண்களின் குழந்தைகள் எந்தக் குறையுமில்லாமல்  பிறந்ததை ஆய்வு மூலம் பதிவு செய்தார் .ஜெர்மானியர்கள் அதிகமான பீர்விரும்பிகள் என்று சொல்வார்கள் ஆனால் உண்மையில் அவர்கள் காஃபி பிரியர்களாகவும் விளங்கினார்கள்.இது பீர் பருகலையே புறந்தள்ளியது. பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே இந்த ‘துருக்கிய பானம்’ பற்றிய செய்திகள் வெனிஸ் நகர வணிகர்கள் மூலம் ஐரோப்பாவை எட்டியிருந்தன. பதினேழாம் நூற்றாண்டில் – ஃபிரான்ஸிலும் இங்கிலாந்திலும் காஃபி விற்பனை நிலையங்கள் காஃபி வட்டங்களாகி அரண்மனை மற்றும் மேட்டுக்குடி மக்களிடம் இருந்து நகரங்களில் இருந்த பணக்கார நடுத்தர மக்களுக்கும் பரவியது. ஜெர்மனி ஒரு நாடாக உருவெடுப்பதற்கு முன்னர், தனக்கென அதற்குக் காலனிகள் ஏதும் இல்லை. எனவே காஃபிக் கொட்டைகளை அதிக விலகொடுத்து இறக்குமதி செய்ய நேரிட்டதாக ஜெர்மனி வரலாற்றாளர்கள் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள் .


சிங்கப்பூரில் கோபி-ஒ(பால் கலக்காமல்) அதிலும் சர்க்கரை போடாமல் குடிப்பது தனிசுகம். தேநீர் கசந்தால் குடிக்கமுடியாது.கோபி கசந்தால் அடிநாக்கில் ஒரு சுவை மேலெழும்பும் அந்த தேவாமிர்த சுவைக்காகத்தான் மிக அதிகமான சீனர்கள் பால் கலக்காமல் காபி குடிக்கிறார்கள்.Neolithic காலத்திலிருந்து பால் பொருட்களை சீனர்கள் தவிர்த்து வந்திருக்கிறார்கள். பன்றி வளர்ப்பு அவர்களின் வாழ்வாதாரத் தொழிலாக இருந்தும் ஏன் அவர்கள் பன்றியில் பால் கறக்கவில்லை என்பது ஒரு புதிரான விஷயம். பன்றியின் மடு அதிக அளவில் பாலைச் சேமிக்கும் வசதியை இயற்கையாகவே கொண்டிருக்கவில்லை என்று காரணம் சொன்னாலும், எப்படி அதை விட்டு வைத்தார்கள் என்பதற்கான காரணம் தெரியவில்லை. பால் பொருட்களைக் குறைவான அளவில் உபயோக்கும் பழக்கமே, இதற்கான தேவையையும் குறைத்திருக்கலாம் என்று சொல்கிறார்கள்.கால்சியம் அதிகமுள்ள சோயா பீன் மற்றும் பாலில் உள்ள லாக்டோஸ் சீனர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடியது. மலேசியர் களுக்கும், இந்தோனேசியர்களுக்கும் கூட பால் பொருட்கள் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடியது. மலேசிய, இந்தோனேசியா நாடுகளில் தேங்காய்ப் பாலும், இக்கான் பிளிஸ் மீன் உணவும் பாலிலிருந்து கிடைக்க வேண்டிய கால்சியம் சத்தை ஈடு செய்து விடுகின்றன .பிரெஞ்சு தத்துவ ஞானி Voltaire ‘கோபி-ஒ’(பாலில்லாத காபி) ஒரு நாளைக்கு 50 குவளைகள் அருந்துவாராம். அவர் கோபி ஒ-வைப் பற்றி ‘Black as Devil, hot as gell, pure as an angel, sweet as love’’ என்றார்.


எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ் ‘வடிகால் வாரியம்’ என்ற சிறு கதையில் காபியைப் பற்றி ஒரு குறிப்பில் ‘ஆனந்தமான கசப்பு’ என்கிறார். அது ‘கோபி-ஒ’ வா, ‘கோபி போ’(பால் கலந்தது) வா என்பது தெரியவில்லை .கத்திரி வெயிலில்கூட, வீட்டுக்கு வரும் விருந்தினர்களை ‘காபி சாப்பிடுகிறீர்களா?’ என்று சொல்லும் நம் கலாச்சாரம் இன்னும் மறைந்து விடவில்லை. உணவகத்தில் பயன்படுத்தப்படும் காபி பவுடர் அராபிக் காவா, ரோபாஸ்டாவா? எந்த நாட்டு காபி கொட்டை? சிக்ரி கலந்ததா, கலக்காததா? (சிக்ரி என்பது அதன் வேரை அரைத்துப் பொடியாக்குவது) என்ற விஷயங்களிலெல்லாம் நான் கவனம் எடுத்துக்கொள்வேன்.என் நண்பர் ஒருவர் பிரேக்பாஸ்ட், லஞ்ச், டின்னர் என்று துல்லியமாக உணவு வகைகளை ருசிபார்ப்பவர். Tea Time என்று சொல்வதற்கும் Coffee Break என்று சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்பார். Tea break என்பது பார்ட்டி மனோபாவத்தில் வேலை முடிந்தது என்று எடுத்து கொள்வது Coffee Break அடுத்த வேலை தொடங்குகிறது என்ற உள்அர்த்தமும் உள்ளது’ என்பார். சரிதானோ

பா.சிங்காரமும் டுரியானும்

Posted: ஜனவரி 13, 2021 in வகைப்படுத்தப்படாதது

ஜகர்த்தாவுக்கும், சுரபயாவுக்கும் அடுத்து இந்தோனேஷியாவின் பெரிய நகரம் மேதான். டச்சுக்காரர்களின் அழகான ரசனையால் உருவான நகரம். எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென்று பூங்காக்கள். நான் இரண்டு தடவை சென்றிருக்கிறேன். இனிப்பான ஜாவானிஸ் கறியுடன் பாடாங்கின் காரம், இந்திய மசாலா கலவையுடன் கலந்த புதுவிதமான சுவை உணவுகள் கிடைக்குமிடம். சாப்பாட்டு மேஜையில் மெனுகார்டை ஓரங்கட்டிவிட்டு அத்தனை முக்கியமான அயிட்டங்களையும் பரப்பிவிடுவார்கள். வேண்டியதைச் சாப்பிட்டுவிட்டு எழுந்து போகும்போது மீதமுள்ளவைகளைக்கணக்கிட்டு பில் கொடுப்பார்கள். இந்தோனேஷியாவே 1900க்குப் பிறகுதான் அந்தப் பெயரில் அழைக்கப்படுகின்றது. மலேனேஷியா, மைக்ரோனே ஷியா, பாலினேஷியா என்று பலவாறு எழுதி வந்ததை அடோல்ஃப் பாஸ்டியன் என்ற ஜெர்மானியர் தன்னுடைய புத்தகத்தில் ‘இந்தோனேஷியா’என்ற பெயரைப் பயன்படுத்த, அதுவே நிலைபெற்றுவிட்டது.மேதான் நகரம் 16ஆவது நூற்றாண்டில் சவூதி அரேபியாவின் மதினா நகரத்தின் பெயரால் மேதான் என்று பெயர் சூட்டப்பட்டது. புயலிலே ஒரு தோணி நாவலில் ப.சிங்காரம் ‘மைதான்’என்ற உருதுமொழிச்சொல் இங்கு பெயராகிவிட்டது என்கிறார்.


சிங்கப்பூரில் லைச்சி மாதிரி salud என்ற பழச்சாறு அனைத்துக் கடைகளிலும் கிடைக்கிறது. சிங்கப்பூரில் சூப் கம்பிங் பிரபலமானது மாதிரி இங்கு சூப் ஆயாம் மீகோரிங்கில் கோழி கலந்து சாப்பிடுவது, எந்த உணவு கேட்டாலும் அதில் நிலக்கடலை தூவித் தருவது எனக்கு மிகவும் வித்தியாசமாகப்பட்டது. அதோடு மேஜை ஓரத்தில் ‘தேபோத்தல்’ ((Tea Bottle) ஓர்டர் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் வந்து உட்கார்ந்துவிடும்.சிங்காரம் 1946இல் இந்தியா திரும்பாமல் மேதானிலேயே தங்கி நாவலை எழுதியிருந்தால் சிறப்பான நாவல் நமக்குக் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இரண்டாம் உலகப் போர் முடியும் தறுவாயில் இடதுசாரிகளின் ஹிட்லிஸ்ட்டில் முதலிடம் பிடித்தவர்கள் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்கள். பின்பு சுதந்திரம் கிடைத்தபிறகு ஆட்சிக்கு வந்தவர்களும் எழுத்தாளர்களைச் சிறைக்கு அனுப்புவதை தங்களுடைய முதல் கோட்பாடாக வைத்திருந்தனர். இதில் தப்பிப் பிழைத்து Pramoedya Ananta Toer என்பவர்தான் 1995இல் மகஸேஸே விருதுபெற்ற இந்தோனேஷியாவின் ஒரே எழுத்தாளர்தான் .. பா.சிங்காரம் வியாபாரத்திற்கு அடிக்கடி சென்று வந்த பினாங்கில் 1946இல் சேவகா என்ற பத்திரிகையும், சுதந்திர இந்தியா’, ‘சுதந்திரோதயம், ‘யுவபாரதம்’ என்ற பத்திரிகைகள் மலேசியாவிலும், நவயுகம் என்ற பத்திரிகை சிங்கப்பூரிலும் பிரிட்டிஷ் எதிர்ப்புணர்ச்சியை திரட்டிய சுபாஷ் சந்திரபோஸ் தலைமைக்கு ஆதரவுப் பத்திரிகைகளாக வெளியிடப்பட்டு வந்திருக்கின்றன.


ஆனால் ஜப்பானியர் ஆக்கிரமிப்பு, சீனர்களின் கொரில்லா யுத்தம் ,, சுபாஷ் சந்திர போஸின் படைகளின் செயல்பாடுகள் பற்றி ஆங்கிலேயர் பதிவு செய்த ஒரு சிறுபகுதியைக்கூட தமிழில் யாரும் பதிவு செய்யவில்லை. பா.சிங்காரத்தின் அங்கதம், சங்க இலக்கிய, சிலப்பதிகார வரிகளைப் பகடிக்காக வளைத்து நாவலின் பல பகுதிகளில் சுவை சேர்த்திருக்கிறது.நெருஞ்சிப் பூ சேலை, அமுசு பப்பாளிச் சேலை, ஊசிவர்ணச்சேலை, சேலம் குண்டஞ்சு வேஷ்டி, அருப்புக்கோட்டை துண்டு, பரமக்குடி சிற்றாடை கடைகளுக்கு முன்னே அர்ச்சுணன்பட்டி பெண்களின் புல்லுக்கட்டு வரிசை, வலப்பக்கம் சங்கர மூர்த்தியா பிள்ளையின் கோமதிவிலாஸ், அசல் திருநெல்வேலி சைவாள் மண்பானைச் சமையல், கிளப்புக்கடை, அபூபக்கர் தகரக்கடை, கண்டரமாணிக்கம் செட்டியார் லேவாதேவிக் கடை, பாலக்காட்டு ஐயர் காபி கிளப்… என்று சொல்லிக்கொண்டே போகலாம் .அறியா வயதில் வாங்கிச் சாப்பிட்ட அப்பள செட்டியார் கடை மசால் மொச்சை, ராஜாளிப் பாட்டி விற்கும் புளிவடை, தெருப்புழு தியில் உட்கார்ந்து சந்தைப்பேட்டை பெரியாயியிடம் பிட்டும், அவைக்கார வீட்டம்மாளிடம் ஆப்பமும், செட்டி குளத்தங்கரை வள்ளியக்காளிடம் பணியாரமும் இப்படி ஊரின் நினைவுகளில் நாவூறும் விஷயங்களைத் தன் நாவலில் மறைவாக ஊடுருவவிட்டவர்.


மேதானின் உணவைப் பற்றி ஏதாவது எழுதியிருப்பார் என்று துருவித்துருவி படித்துப் பார்த்தேன். பாண்டியன் சாப்பிட எத்தனிக்கும் இடங்கள் அனைத்திலும் ரோக்கோவும் (சிகரெட்) மதுவுமாக முதல் நிலைப்படுத்தி எங்கேயுமே அவனைச் சாப்பிட விடாமல் செய்திருக்கிறார். மங்காத்தா ஸ்டைலில் பாண்டியன் ஊதித் தள்ளிக் கொண்டே யிருக்கிறார்.  யுத்தகால பரபரப்பில் பாண்டியனை எங்காவது சம்மணம் போட்டு சாப்பிட உட்கார வைத்திருந்தால் அது மழுங்கிப் போயிருக்கும் அதனால்தான் மேதான், பினாங்கு உணவுகளைப் பற்றி ஒரு இடத்தில்கூட விரிவாகப் பேசாமல் விட்டுவிட்டார் என்று நினைக் கிறேன். ஆனால் மனுஷன் டுரியான் பழம் பற்றி அசத்தல் குறிப்பு ஒன்றுகொடுத்திருக்கிறார். புருனே, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், மலேசிய நாடுகளில் புகழ்பெற்ற டுரியான் தென்கிழக்காசியாவின் பழங்களின் அரசன். இந்த நாடுகளைக் காலனிப்படுத்திய மேற்குலகினருக்கு பிரிட்டிஷ் இயற்கையியல்வாதி ‘ஆல்பர்ட் ரஸ்ஸல் வாலாஸ்’ அடடா, இதுவல்லவோ இயற்கையின் கொடை என்று அறிவித்த பிறகுதான் அதன் அருமை, பெருமை தெரியவந்ததாம். சிங்கப்பூரில் டுரியான் சாப்பிடுவது ஒரு கலாச்சார நிகழ்வு. டுரியானை வெறியாகச் சாப்பிடும் நண்பர்கள் குழுவில் எப்படியும் ஒரு ஆள் அதை செலக்ட் செய்வதில் எக்ஸ்பர்ட்டாக இருப்பார். அப்படி ஒருவர் என் மைத்துனர் காசிம். அவர் ஊரில் நுங்கு சாப்பிடுவது மாதிரி குலைகுலையாக முன்னால் குவித்து வைத்துக்கொண்டு சாப்பிடவேண்டும் என்பார். டூரியான்சீஸன் சமயங்களில் அதைச் சாப்பிடுவதற்கென்று தேபான் கார்டன் செல்வேன் .


கணக்கில்லாமல் சாப்பிட்டுவிட்டு நுங்கு கோந்தையை எண்ணுவது மாதிரி டுரியான் தோலை எண்ணி சரிபார்த்து சீனர் வெள்ளிவாங்கிக் கொள்வார். டுரியான் நிலத்தில் விழுந்துவிட்டாலும் அதில்சிறுவெடிப்பு வந்தபிறகு சாப்பிட்டால்தான் பழ ருசி கிடைக்கும்,ஆனால் டூரியான் சாப்பிடுவதில் என் கில்லாடி நண்பர்கள் , அது கீழே விழுந்து 6 மணி நேரத்திற்குள் சாப்பிடுவதுதான் சிறந்தது என்கிறார்கள். அங்குமிங்கும் கொண்டுசென்று காசாக்குவதற்கான கொடைக்கானல், குற்றாலத்தில் ஒரு பலாப்பழத்தை வெட்டிவைத்துக்கொண்டு அனைத்துப்பழங்களும் இந்த ருசிதான் என்று மாயாஜால வித்தைகளை டுரியான் பழத்தில் செய்வதில்லை ,சிலர் மோப்பம் பிடித்தே பழம் எப்படி என்றுசொல்லிவிடுவார்கள். சிங்கப்பூர் நட்சத்திர தங்கும் விடுதிகளில் நிலவறையில்தான் டுரியான்கள் அடைத்து வைத்திருப்பார்கள். எம்.ஆர்.டி.யில் கொண்டு செல்லத்தடை. இவையெல்லாம் அதன் வாசனையால் வந்த வினைகள். தாய்லாந்து நாடு புயலுக்குப் பெயர் வைக்கும் பட்டியலில் ‘‘டுரியான் புயல்’ என்று ஒரு பெயரைக் கொடுத்துவைத்திருக்கிறது.
சிங்கப்பூரின் டுரியான் கட்டிடம் உள்பட மேற்சொன்ன விஷயங்கள் டுரியான் எப்படிப்பட்ட ருசியுடையது என்பதை நமக்குச் சொல்லாமல் சொல்லும். அது ஒரு ‘சமாச்சாரத்திற்குப் பெயர் போனதும்கூட. ஜாவனிஸில் ஒரு பழமொழி உள்ளது. ‘‘டூரியான் ஜாத்து சாரோங்நைக். மரத்திலிருந்து டுரியான் விழுந்தவுடன் கைலி மேலே தூக்கும் என்று இதற்கு அர்த்தம்.ப.சிங்காரம் தன்  நாவலில்   அந்த மன்மதபான  லேகியம்   தயாரிப்பு பற்றி சொல்கிறார் , டூரியான் சுளைகளைப் பிழிந்து ரசம் எடுத்துக்கொள்ள வேண்டும். கால்படி ரம்புத்தான், பிசாங்மாஸ், மங்குஸ்தான், வாதுமைப்பருப்பு, முந்திரிப்பருப்பு, பிஸ்தா பருப்பு, குங்குமப்பூ, கற்கண்டு, குல்கந்து, பால், நெய், தேன் இவற்றை சம அளவில் ஒரு ‘தோலா’ எடுத்து விழுது பதமாய் அரைத்து டூரியான் சாற்றில் போட்டு அடுப்பில் வைத்து பாதியாய் சுண்ட வைத்து காலையில் மாலையில் சாப்பிடவேண்டும். வடிவாய் ஒரு மண்டலம் பலன் தெரியும்… என்று எழுதியிருக்கிறார்.திரும்பவும் மேதான் சென்று அங்கிருந்து தொங்கானில் (படகு) பினாங்கு செல்ல அவருடைய நாவல் தூண்டிக்கொண்டேயிருக்கிறது

மண்டேலாவும் பிரியாணியும்

Posted: ஜனவரி 11, 2021 in வகைப்படுத்தப்படாதது

நட்சத்திர விடுதிகளில் தங்கும் வெள்ளைக்காரர்கள் மலிவான, அதே நேரம் ருசியில் குறை வைக்காத உணவுகளைத் தேடிவரும் இடம் அங்காடிக் கடைகள். நாடு ,இனம், மொழி வாரியாக அடையாளம் கண்டுகொள்வதற்கு சில டிப்ஸ் என்னிடம் இருக்கிறது. இதை நான் பரீட்சித்துப் பார்த்து, கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றிருக்கிறேன்.என் கடைக்குப் பக்கத்தில் நட்சத்திர விடுதி உள்ளது. பகல் நேரங்களில் டல்லான சட்டையும் ஜீன்ஸும் மாலையானவுடன் கலர் கலராக பளபள சட்டையும் ஆண்-ஆண் அல்லது ஆண்- பெண் நண்பர்களாக சாப்பிட வந்தால் அவர் அமெரிக்கர். இதில் முதியவர்கள் ஜோடியாகக் கையில் சிங்கப்பூரின் வரைபடத்துடன் கேமராவோடு வருவார்கள். ஏதோ பிரச்சினை இருப்பது மாதிரி தங்களுக்குள் எந்நேரமும் பேசிக்கொண்டு ஒயின் ஒரு பாட்டில் முடிந்தவுடன் அடுத்தவரை பற்றிக் கவலைப்படாமல் கத்தி சிரிக்க ஆரம்பித்து விட்டால் அவர் ஐரோப்பியர். ரொம்ப சாதுவாக பெரிய மூட்டையை முதுகில் சுமந்துகொண்டு, தான் வார்த்தைகளை உச்சரிக்கும் விதம் சரிதானா என்று சுயபரிசோதனையுடன் கவனமாகப் பேசுபவர்கள் கனடியர்கள். இஸ்ரேலியர்கள் விடுதிக்கு வரும்போது பெரிய மூட்டையுடன் வருவார்கள். ஆனால் இப்போதுதான் ராணுவத்திலிருந்து வந்தவர்கள் மாதிரி பெல்ட், தொப்பி சகிதம் காட்சியளிப்பார்கள். சுலபமாக அடையாளம் கண்டுகொள்ளலாம். Kebab shop எங்கிருக்கிறது என்று கேட்டால் நிச்சயமாக இத்தாலியர்கள்தான் இவர்கள் மூன்று அல்லது நான்கு பேராக ஜோடியாக வந்தாலும் தனியாக வந்தாலும் சேர்ந்தே தங்குவார்கள். அத்துடன் பீர் பாட்டிலுடன் அறைக்குள் இருக்காமல் பால்கனியில் உட்கார்ந்திருந்தால் அவர்கள் பிரிட்டிஷ் ஆஸ்திரேலியர்கள் தரும் அடையாளக் குறிப்புகள் ரொம்ப சுலபமானவை. காலை 8 மணிக்கு பீர் ஓபன் பண்ணி விட்டால் அவர் ஆஸி என்று அடித்துச் சொல்லிவிடலாம். இவர்களுக்கும் நியூசிலாந்துக்காரர்களுக்கும் கொஞ்சம் வித்தியாசம்தான். நியூசிலாந்துக்காரர்களின் உச்சரிப்பும், மீசை வைத்திருக்கும் விதமும் எளிதில் காட்டிக் கொடுத்துவிடும். அத்துடன் பிரிட்டிஷார் மாதிரி fried அயிட்டம் கேட்கும்போது Fish and chips விரும்பிச் சாப்பிடுவார்கள்.


ஒவ்வொரு தேசத்துக்கும் என தனித்தனி பண்பாடு, ரசனை, அடையாளங்கள் இருக்கின்றன. தனது சொந்த அடையாளங்களைத் தொலைத்துவிட்ட ஒரு நாட்டின் பிரஜையின் மனநிலை எப்படி இருக்கும்? மிஸ்டர் Akelloவைச் சந்தித்தபோது அதை உணர்ந்தேன்.தென்ஆப்ரிக்காவின் ஜோஹன்ன்ஸ்பர்க் Gauteng பகுதியைச்சேர்ந்த ஆப்ரிக்கர் Akello.. இவருக்குக் கலாச்சாரத் துறையில் வேலை. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உலகம் பூராவும் சென்று திரும்பு வதற்கு வாய்ப்பு கிடைக்குமாம் ,சிங்கப்பூர் வரும்போதெல்லாம் என் கடைக்கு வந்து விடுவார் ,ஆசிய நாடுகளின் உணவுக் கலாச்சாரங்கள் அவருக்கு அத்துபடி,ஜப்பானியர்கள் சோபா நூடுல்ஸ் சூப்பை சத்தம் போட்டு உறிஞ்சிக் குடிக்கும் பண்பாட்டைப் பற்றி சிலாகித்துப் பேசினார். சூப்பைக் குடித்து முடித்த பிறகு, ool shi neh (நாம் தேவாமிர்தம் என்று பாராட்டுவதுபோல) என்று ஜப்பானியர்கள் மனதார சொல்வார்களாம். இதைப் பற்றி விவரிக்கும்போது அவர் முகத்திலும் சூப் குடித்த ஜப்பானியர் போல ஒரு திருப்தி.


Akello இந்தியாவில் சுற்றிப் பார்த்த பல இடங்களைப் பற்றிச் சிறப்பாகச் சொன்னாலும் அவர் பேச்சில் இந்தியாவில் கழிப்பறைகள்தான் அதிகம் இடம்பெற்றிருந்தன. சீனர்களும் இந்தியர்களும் நகம் வளர்ப்பதைப் போல இந்தோனேசியர்களும் நகம் வளர்க்கிறார்கள் என்றார். ஷாங்காய் நகரில் பழங்கால உணவுக்கலாச்சாரமும், பொருட்களும் தன்னைக் கவர்ந்தாலும் சில இடங்களில் சர்வ சாதாரணமாக எச்சில் பறந்து வருவதையும், ஜப்பான் உணவகங்களிலும், இந்தியக் கோவில்களிலும் செருப்பை வெளியில் கழற்றிவைத்துவிட்டு வரக் கட்டாயப்படுத்தப்பட்டதையும் குறிப்பிட்டார். அவரது நாட்டின் உணவுக்கலாச்சாரம் பற்றிக் கேட்டேன். அவர் உற்சாகம் இழந்தது விட்டார்.. தென் ஆப்ரிக்கர்களுக்கென்று இருந்த பிரத்யேகமான உணவு வகைகள், அவர்களின் தேசம் 16ஆம் நூற்றாண்டில் காலனிப்படுத்தப்பட்ட பிறகு மறைந்துவிட்டதாக ஆதங்கத்தோடு சொன்னார்.போர்ச்சுக்கீசியர்கள்தான் கேப் டவுனில் முதலில் காலடி எடுத்துவைத்தவர்கள். ஆனால் அவர்கள் தென் ஆப்ரிக்காவைக் காலனிப்படுத்தவில்லை. நறுமணப் பொருட்களுக்காக இந்தோனேசியா, ஜாவா செல்லும் தங்கள் கப்பல்களின் ஊழியர்களுக்காக கேப் டவுனில் மோட்டல் மாதிரி உணவகங்களையும் தோட்டங்களையும் டச்சுக் கிழக்கிந்திய கம்பெனி ஏற்படுத்தியது.
இதையே நோக்கமாகக் கொண்டு தென் ஆப்ரிக்காவுக்கு வந்து அதை வெற்றிகரமாகச் செய்து முடித்தவர் “வேன் “தென்ஆப்ரிக்காவில் டச்சுக்காரர்களின் அதிக்கத்தை நிறுவியவர் இவர்தான். அந்தக் காலகட்டத்தில் கேப் டவுனில் Van Reibeeck அமைத்த காய்கறித் தோட்டம் இன்றும் அங்கே உள்ளதாம் .டச்சுக்காலனியாக இருந்த தென் ஆப்ரிக்கா வில் 1658இல் மலேசியாவிலிருந்து அடிமைத் தொழிலாளர்கள் குடியேறிய பிறகு கேப்-டச்சு உணவுக் கலாச்சாரம் வளர்ந்தது. அவர்களுக்குப் பிறகு அந்த நாட்டை காலனிப்படுத்திய ஜெர்மானியர் களும், பிரிட்டிஷாரும் பெரிய அளவில் மேலைநாட்டுக் கலாச்சாரம் அங்கு பரவுவதற்குக் காரணமாக இருந்தார்கள். டச்சுக்காரர்களின் நினைவாக Sausage மட்டும்தான் தென் ஆப்ரிக்க உணவுக்கலாச்சாரத்தில் உள்ளது. பிரான்சில் மதத் தண்டனைகளுக்கு பயந்து தென் ஆப்ரிக்காவில் குடியேறியவர்கள்தான் முதல்நாள் மிஞ்சிய உணவுகளைக் காலையில் சாப்பிடும் பழக்கத்தை ஒழித்து Pudding கலாச்சாரத்தை தென் ஆப்ரிக்காவில் தொடங்கி வைத்தார்கள். மலேசியா அடிமைத் தொழிலாளர்கள் குடியேறிய 200 வருடங்களுக்குப் பிறகுதான் இந்திய அடிமைத் தொழிலாளர்கள் 10 வருட ஒப்பந்தத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். ஆனால் அதற்குப் பிறகும் கள்ளக் குடியேறிகளாகித் தங்கி தென்ஆப்ரிக்காவில் அரிசி உணவுகள் பிரபலமாக இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்களே
காரணமாயிருந்தார்கள் என்றார் .மனம் விட்டுப் பேசும் ஒரு தென் ஆப்ரிக்கர் மண்டேலா பற்றிப் பேசாமல் இருப்பாரா? Akelloவும் பேசினார். மண்டேலாவின் உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்தும் எங்கள் பேச்சு நகர்ந்தது. Pollsmoor ஜெயிலில் மண்டேலா இருந்தபோது அவர் தன் குடும்பத்தாருக்கு தணிக்கையாளர்களின் கவனத்துக்குப் புலப்படாத வகையில் எழுதிய கடிதங்கள் ‘So Foody’ என்கிறார். Hunger for Freedom புத்தகத்தை எழுதிய Anna Trapido. அதில் மண்டேலா தனக்கு டிகிரி காபி தயார் செய்து கொடுத்த ஜெயில் ஊழியர் தியாகி பிள்ளை, கோழிக்கறி சமைத்துக் கொடுத்த பரீத் உமர் இவர்களை நினைவு கூர்ந்துள்ளார். அவருக்குப் பன்றித் தலைக்கறியும், நண்டும் சாப்பிட ஆசையிருந்தாலும் 27 வருடங்களும் காலையில் சோளக் கஞ்சி, மாலையில் சூப்பும் கஞ்சியும், மதியம் வேக வைத்த சோளம் இவைகளைத்தான் ஜெயிலில் கொடுத்திருக்கிறார்கள்.

மண்டேலா தீவு ஜெயிலில் இருந்தபோது சிறைவாசிகள் கடற்கரையில் மீன் சேகரித்து உணவில் சேர்த்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டார்களாம்.
மண்டேலா உணவுகளை ரசித்துச் சாப்பிடுபவராக இருந்தாலும் உணவையே ஆயுதமாக்கிப் பட்டினி கிடந்து கைதிகளுக்குப் பல சலுகைகளைப் பெற்றுத் தந்திருக்கிறார். மண்டேலா விடுதலை யாகி 1994இல் நாட்டின் ஜனாதிபதி ஆனபோது, பிரியாணி சமைப்ப தில் தேர்ந்த ஒருவரை ஜனாதிபதி மாளிகையில் வேலைக்கு அமர்த்த உத்தரவிட்டார். தனது பால்ய உணவான Umpho kogo (பீன்ஸ், பட்டர், ஆனியன், உருளைக்கிழங்கு, சில்லி மற்றும் லெமன் கலந்த மக்காச்சோளக்கூழ்)தான் தனக்குப் பிடித்தமான உணவு என்பாராம். கால்நடைகளுக்குத் தேவைப்படும் மக்காச்சோளத்தை வளர்ப்பதற் காகவே இப்போது ஆப்ரிக்க விளைநிலங்களை இந்தியப் பன்னாட்டு கம்பெனிகள் அபகரித்துப் புதிய முறை காலனியாதிக்கத்தைச் செயல் படுத்தி வருகின்றன. முன்னரே அங்கு பங்களாதேஷ் பல நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து பட்டா போட்டு விட்டதாகவும் சொல்கிறார்கள்.
Akello ஆட்டுவால் கறி தென்ஆப்ரிக்காவில் தனக்கு மிகவும் விருப்பமான உணவு என்றார். சிங்கப்பூரில் உங்களுக்குப் பிடித்தமான உணவை எங்கு சாப்பிட்டீர்கள்? என்றேன்.உங்க கடை பரோட்டாதான் என்றார்

ஒப்பிலான் – நெய்தல் வரம்

Posted: ஜனவரி 9, 2021 in வகைப்படுத்தப்படாதது

ஒப்பிலான் “அட ஊர் பெயர் புதுமையாக இருக்கிறதே என்று சிலர் சொல்வதை சில நேரங்களில் எண்ணிப் பெருமிதங்கொள்ளும் தருணங்களில் வழக்குப் பெயர்களாக பல கிராமங்களுக்கு ஒரே பெயர் இடப் பட்டு குழம்பும் நிலையில் தமிழ் நாட்டில் வேறு கிராமங்கள் எதுவும் இந்தப் பெயரில் இல்லை என்பது ஆச்சரியமளிக்கிறது அத்துடன் பெயர் சூட்டியவன் ஒரு புலவனாக இருக்கவேண்டும் என்ற சிந்தனையும் கூடவே எழுகிறது .

தனித் தமிழ் பெயர்களை நாடுதோறும் விதைத்த மொழிச் சலைவையாளர் மறைமலை அடிகளாரின் காலம் (சூலை 15, 1876 – செப்டம்பர் 15, 1950) புகழ் பெற்ற பெயர்ச் சொற்கள்
அனிச்சம், ஆதிரை, இன்பா, ஈழச்செல்வி, எழிலி, ஒண்டொடி, ஓவியா என்பன போன்று பெண்பாற் பிள்ளை களுக்கும், அன்பன், ஆதவன், இனியன், ஈழவன், என்னவன், ஏரழகன், உறங்காப்புலி, ஊரன், ஐயன், ஒப்பிலான், ஓவியன் என்பன போன்று ஆண்பாற் பிள்ளைகளுக்கும் பெயர்சூட்டிய அந்த தனித் தமிழ் புலவர் மன்னார் வளைகுடாகடற்கரைக் கிராமங்களில் கால் பதித்திருப்பாரோ என்ற ஆர்வத்தில்
ஊரில் பழுப்பு நிற காகிதத்தின் சுவடுகளைத் தேடி அலைந்திருக்கிறேன் ,பத்திரப் பதிவுகளில் 1902 வரை ஒப்பிலான் கிராமம் என்றே குறிக்கப்பட்ட பதிவுகளுக்கு முன்னால் எதுவும் இல்லை ,கிளையால் ,நிலத்தால் ,குழுவால் ,காலத்தால் ,பருவத்தால் ,மரபால் பெயர் பெற்ற ஊர்களின் பெயருக்கு மத்தியில் இது ஒரு வினையால் பெயர் கொண்ட ஊராக இருப்பதால் ஆராய்ச்சிக்கு உரியதாகிறது .

பக்கத்து கிராமங்கள் ஒத்தப்பனை ,ஒத்தவீடு என்று எதுகை மோனையில் வரிசைபிடிப்பதும் இது ஒரு புலவரின் கைங்கரியத்தால் பெயர் சூட்டப் பட்டிருக்குமோ என்ற எண்ணத்தை மேலோங்க செய்கிறது .ஊரில் புலவன் புறத்தார் என்ற வகையறாவும் எண்ணிக்கையில் அதிகம் இருப்பதும் இது ஒரு புகழ் மிக்க புலவரின் கிராமமாக இருப்பதற்கு சாத்தியக் கூறுகளை அதிகப் படுத்துகிறது ..வாழ்ந்து மறைந்த கவிஞர் சிங்கப்பூர் இளம்பரிதி ,உதுமான்கனி யிலிருந்து ஆரம்பித்து இன்றுள்ள கவிஞன் சீனி ஷா வரை நூலெடுத்து கவிதைகளின் நுனி காண விழைகிறது மனம் .. ,..இராம நாதபுரத்திற்கு மேற்கே 44 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிறு நிலப்பரப்பே உடைய ஒப்பிலான் கிராமத்தின் தெற்கே பரந்து விரிந்திருக்கும் காடுகளும் கால் புதைக்கும் மணற் பரப்பும் சீறி எழும் மன்னார் வளைகுடா கடல் அலையும் ஒரு பெரும் நிலப்பரப்பில் ஓடி விளையாடிய எங்கள் பால்யத்தின் நினைவுகளாய் என்றும் மிஞ்சி நிற்கின்றன .வெண் கன்னக்குக்குருவான் காலை வேலையில் சீரான இடைவெளியில் “குக்கு” “குக்கு” என்று குரல் எழுப்பும் என்றாவது ஒரு நாள் அந்தப் பறவையை பார்த்து விடலாம் என்று பல முறை முயற்சி செய்துள்ளேன் ம்ஹூம் ..அது ஒரு சிறிய பறவை ,அரிதாகத்தான் பார்க்க இயலும் ஆனால் என் மைத்துனன் ஷாஜகான் அதைப் பல தடவை பார்த்த அதிர்ஷ்டக் காரன் ,காலையில் எழுந்து முதல் வேலையாக காட்டை ரசிக்கும் “காட்டு ஜீவி “ ஷாஜகான் வைத்திருக்கும் கவுதாரிக் கூடு அடிக்கடி அலங்காரம் மாறும் ,கறையானையும் ,சிறு தானியங்களையும் தவிட்டு நிறமும் அழகான கறுப்பு நிற கோடு வயிற்றுப் பகுதியும் கொண்ட கவுதாரிகளுக்கு ஷாஜகான் கொடுக்கும் அழகைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் .


ஓட விரட்டினால் பறக்காமல் குடு குடுவென ஓடும் கவுதாரிகளை ஷாஜகான்
லாவகமாகப் பிடிப்பதில் கை தேர்ந்தவர் ,அபிராமம் -நத்தம் என் தகப்பனார் பிறந்த ஊர் என் தாயாரின் பிறந்த ஊர் ஒப்பிலான் பள்ளி விடுமுறைக்கு உன் ஊருக்கு வந்தால்
என்னைக் கடற்கரைக்கு கூட்டிட்டு போறியா என்று என் மனைவி சிறுமியாக இருந்தபோது கேட்பேன், கடற்கரை பக்கத்தில் இருந்தாலும் அடர்ந்த உடை மரக் காட்டுப் பகுதி ஒற்றை அடிப்பாதையெல்லாம் என் மனைவிக்கு அத்துபடி , தமிழகத்தில் மிக நீண்ட கடற்கரை கொண்ட மன்னார் வளைகுடா பகுதி ஒப்பிலான் நடை தூரத்தில் உள்ள மாரியூரில் பிறந்தவர் என் மனைவி ..மாரியூரிலிருந்து கடற்கரை வழியாகவேநரிப்பையூர் செல்லும் தூரம் 21 கிலோமீட்டர் ,சர்வசாதாரணமாக நரிப்பையூர் உறவினர் வீட்டுக்கு கடற்கரை வழியாக நடந்து போய் வருவதை என்னிடம் சொல்வார் ,எனக்கு ஆச்சரியத்தைவிட ஆஹா நாமும் நடந்து சென்றால் எப்படி இருக்கும் என்று ஆர்வமாக இருக்கும்.


குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு சங்க இலக்கியங்களில்குறிப்பிடப்படும் தலை விரித்தாடும் தாழையின் பச்சை மடல்கள் பரவி விரிந்துள்ள நீண்ட சுத்தமான இந்தக் கடற்கரைதான் சங்க இலக்கியம் கூறும்
நெய்தலின் நிலமாக இருந்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன்
பகாசுர பன்னாட்டு நிறுவனங்கள் தீண்டாத வெண்மணல் பரப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு வத்தைகளையும் தோணிகளையும் கொண்டு இன்னும் தன் நிலத்திலிருந்து புலம்பெயரா மீனவர்கள் மாரியூர் வாலி நோக்கம் ,முந்தல் , மூக்கையூர் பகுதிகளில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் . மே மாதம் முதல் அக்டோபர் வரை தீவுகள் சூழ்ந்திருக்கும் இந்தப் பாற்கடலின் அலை வீச்சு கச்சான் காற்றால் அதிரடியாக இருக்கும்,இதனால் வாடைக் காலம் தொழில் போக கச்சான் காலத்தில் தொழில் இருக்காது ,வளைந்து கொஞ்சம் மேவி நிற்கும் மூக்கையூர் பகுதியில் கச்சான் காற்றுக் காலத்திலும் மீன்பாடு செய்ய விசைப் படகுகளுடன் நாட்டுப் படகுகள் நிறுத்தும் வகையிலும், மீன் ஏலக் கூடம், மீன்களை காய வைப்பதற்கான தளம், வலை பின்னும் கூடம், மீனவர்கள் ஓய்வறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் மீன்பிடி துறைமுகம் கட்டப்பட்டு முழுமையடைய இருக்கிறது .

இது பல நாள் தேங்கி நின்ற கோரிக்கை ,தென் கடல் வாழ்வின்
நம்பிக்கை … கோதுகின்ற சிறகில் பட்டுத் தெரிக்கும் கடல் அலைத் துளிகளை சட்டை செய்யாமல் நேர் செங்குத்தாய் பாயும் நாரைகளையும் நீல நிற கடல் பரப்பு தொட்டுக் கொண்டிருக்கும் வானத்தையும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் .இராமநாதபுரத்திலிருந்து தூத்துக்குடிக்கு Thiruppullani, Keelakkarai, Erwadi, Sikkal, Valinokkam, Oppilan Road, Kadaladi, Sayalgudi, Vembar, Soorangudi, Vaipar and Kulathoor வழியாக ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1910ல் மிகப்பெரிய ரயில்வே பாதைத்திட்டத்துடன் சர்வே பணிகள் செய்யப்பட்டது ..100 ஆண்டுகள் சென்ற பின்பும் ஒரு திட்ட வரையறை கூட இல்லை ..ஆனால் பாராளுமன்றத்தில் ஒவ்வொரு கேள்வி நேரத்திலும் துணைக் கேள்வி கேட்பார்கள் ,பல ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் பேசிவரும் ஒரு தொன்மையான கதை இது ..ஆனால் 1795 ல் ஆங்கிலேயர்கள் முத்துராமலிங்க சேதுபதியை வீழ்த்தி இராம நாதபுர அதிகாரத்தைக் கைப்பற்றினர் 1801 ல் மங்களேஷ்வரி நாச்சியார் சிவகங்கை ஜமீன் ஆக்கப்பட்டார்.ராணி வேலுநாச்சியாருக்குப்பின் மருது சகோதரர்கள் முறையாக வரி செலுத்திஅதிகாரத்தில் இருந்தனர் .1803 துரோகத்தின் வழி பெரிய உடையத் தேவர் சிவகங்கை ஜமீன் ஆகியதும் திப்பு சுல்தானை வீழித்திய கையோடு ஜமீன் முறையை பிரிட்டிஷார் ஒழித்ததும் நாம் வரலாற்றுப் பாடங்களில் தெரிந்து கொண்ட விஷயம்தான் அதன் பிறகு 1910 ல் திரு நெல்வெலியை உள்ளடக்கிய இராமனாத புரமாவட்டத்தின் வாலி நோக்கம் மாரியூர் ஒப்பிலான் ,வேம்பார் .நரிப்பையூர் மன்னார் வளைகுடா கிராமங்கள் இன்றளவும் ஆடசியாளர்களால் முறையான அடிப்படை வசதி செய்து தரப்படாமல் துரோகங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.


ஆராரோ, ஆரிரரோ
மலட்டாறு பெருகிவர,
மாதுளையும் பூச்சொரிய,
புரட்டாசி மாதம்
பிறந்த புனக் கிளியோ
அஞ்சு தலம் ரோடாம்!
அரிய தலம் குத்தாலம்!
சித்திரத் தேர் ஓடுதில்ல !
சிவ சங்கரனார் கோயிலுல!
காடெல்லாம் பிச்சி!
கரையெல்லாம் செண்பகப்பூ
நாடெல்லாம் மணக்குதில்ல!
நல்ல மகன் போற பாதை…

இந்த நாட்டுப்புற பாடல் மிகவும் பிரசித்தம் வாய்ந்தது ,என் நினைவுக்கு எட்டியவரை பெரும் புயல் காலங்கள் தவிர மலட்டாறு பெருகி ஓடியதே இல்லை ..தண்ணீர் தண்ணீர் சினிமா சொல்லும் கதையில் அப்படியே கடற்கரை சீனை பேக் கிரவுண்ட் டில் வைத்தால் ஒப்பிலான் மாரியூர் ஒரிஜினல் கதையாகிவிடும் . நான் ஊர் சென்ற போது தண்ணீர் லாரிகள் வரிசையாக ஊரைச் சுற்றி சுற்றி வந்து சிண்டெக் டேங்கை நிரப்பி க் கொண்டிருந்தன.. ஊர் கூடி ஊருணிக்கு பாத்தி அமைக்கலாம் ஆனால் ..
இப்போது நாலாம் தலைமுறை இளையர்கள் கலர் துண்டுகளுடன் அரசியலில் களம் காணதுடிப்புடன்இருக்கிறார்கள் ..காத்திருக்கிறார்கள் கிராம மக்கள் .எல்லையற்று பரவியிருக்கும் உடைமரங்கள், மனதோடு ஒட்டிக்கொள்ளும் கடல் காற்றின் உப்பு மன்னார் வளைகுடாவின் கடற்கரை ஓரக் கிராமங்களின் ரேகைகள் அனைத்தும் கடலும்,கடல் சார்ந்த நிலமும் என்று நெய்தலின் தொன்மைக்கு அழைத்துச் செல்லாமல் வறட்சியும், வறட்சியின் அழகியலும் என்று புதுவித நிலத்திணைக்குள் அடங்கி விட்டன ஒப்பிலான் , மாரியூர் ,முந்தல் ,வாலி நோக்கம் கிராமங்கள் அவைகளின் உயிர்ப்பாக கரை வலை இழுக்கும் மீன் பிடிதொழிலாளர்களும் ,பனை மரத் தொழிலாளர்களும் , பிழைப்புக்காக புலம்பெயர்ந்து சென்று ஆண்டுகள் இடைவெளியில் வந்து போகும் சபுராளிகளும் கலந்த கலவையான கிராமச் சூழல் ,50 களில் கரமடி வலை இழுத்த முன்னோடிகளில் சிலரே இப்போது மிஞ்சியுள்ளனர் , நான் சிறுவனாக இருந்தபோது வீட்டுக்கு ஒரு மால் முடிக்கும் கம்பு தாழ்வாரத்தில் சொறுகப்பட்டிருக்கும் ,வாரம் ஒரு முறை கடலாடியிலிருந்து நூல் கொண்டு வரும் ஆட்கள் பின்னிய வலைகளை திரும்ப எடுத்து தோளில் சுமந்து செல்வார்கள் ,கால்களில் இடுக்கிக் கொண்டு சரட் சரட் ஓசையுடன் அனாயசமாக என் ,அம்மம்மா மால் முடிக்கும் வேகமும் நூல் வரும் கிழமைக்காக அடுத்து காத்திருப்பதும் ,அப்போது ஊர் கூடி இழுத்த கரமடி வல்லங்களும் இன்று காட்சிப்பொருட்களாகிவிட்டன ,மடி ஏறிய மீன் கனமாகப் பட்டால் ஊரேசெழித்த காட்சிகளும் ,கடலை வென்றவர்கள் செல்வந்தர்களாக அம்பலக் காரார்களாக இருந்ததும் ..உடை முள் சுமந்த தலை பாரத்தில் தேய்ந்த தாய்மார்களின் பாதச் சுவடுகளையும் இன்றைய இளையர்கள் அறிவார்களா?

செங்காங் முகிழும் முகத்துவாரம்

Posted: ஜனவரி 8, 2021 in வகைப்படுத்தப்படாதது

எப்படி பயணம் செய்தாலும் செங்காங்கில் குடியிருந்தால் மத்திய சிங்கப்பூரைத் தொட அரைமணி நேரம் ஆகும் ,ஆனாலும் செங்காங்கில் குடியேறிய இந்த 10 ஆண்டுகளில் மரங்களும் பூத்துக் குலுங்கும் மலர்களும் நகர நெருக்கடியை மறக்கடித்து பயணக் களைப்பெயெல்லாம் ஓரங்கட்டி விட்டது ,உண்மையில் செங்காங்காங்கை செதுக்கியிருக்கிறார்கள் .முகிழும் முகத்துவாரம் என்று பெயர் வைத்ததில் ஆரம்பித்து , பாபிலோன் தொங்கும் தோட்ட தொன்மத்தை மீள் நினைவு கொள்ளவைக்கும் மிதக்கும் தாவர மேடை பச்சைக் கம்பளத்தில் விரித்த 21 ஹெக்டேர் பூங்காவின் மணி பல்லவம் காலை நேரத்தின் என் பொழுதுகளை தினமும் திறந்து வைக்கிறது . நடையோடு நகரும் ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் அமைக்கப்பட்ட பாண்டான் இலைக் கூட்டம் வீசும் சுகந்த மணம் பொழுதெல்லாம் என் கூட வருகிறது . மரக் கூட்டத்தின் ஊடே குலை குலையாய் நுங்கு தொங்கும் பனைக்கூட்டங்கள் சிங்கப்பூரில் எங்கும் காணாத அற்புதம் காட்சி.


சிங்கப்பூரில் ஆகப் பெரிதான தீயனைக்கும் நிலையம் ,1400படுக்கைகள் கொண்ட மருத்துவமனை வசதி , டால்பின்கள் முக்குழிக்கும் கற்சிலைப் பூங்கா . இத்தனையும் இருந்தாலும் சிறிய அரைவட்டச் சிறகு ,சாம்பல் பழுப்பு நிறத்தில் கறுப்பு வண்ண கூரான அலகுகளுடன் சுற்றும் வால் கதிர் குருவியும் ,பெரியகண் தட்டானும் பூங்காவின் ஹை லைட் ,கோனி ஐலண்ட் பார்க்கில் ஆரம்பித்து ஜூரோங் லேக் கார்டன் வரை 35 கிலோ மீட்டர் தூரத்தில் ஓடி நிற்கும் வட்டப்பாதை ,காலை நேர நடையில் நம்மோடு சில நேரங்களில் கூடவே வரும் வண்ணத்துப் பூச்சிகள் மனங் கவர் மலர்களைப் பார்த்தவுடன் நம்மைப் பிரிந்து சென்று விடும் இதில் உயரமாக பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள், தாழ்வாக பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள், நெடுநேரம் அமராமல் பறந்துக்கொண்டிருக்கும் அதில் மஞ்சள் புல்வெளியாள் வண்ணத்துப்பூச்சி (Common Grass Yellow) உயரமாகப் பறப்பதில்லை. விரைவாகப் பறக்கும் வண்ணத்துப்பூச்சி வகைகளில் ஒன்று. அது அமர்வதைப் பார்ப்பதே கொள்ளை அழகு ,பறந்துக் கொண்டிருக்கும்போது அதன் மேற்புற இறக்கையின் விளிம்பு கறுப்பு நிறத்தில் இருக்கும். அமரும்பொழுது இறக்கையை மடித்து வைக்கிறது.

செங்காங் பூங்கா நடையோரத்தில் பேரரளிப்பூவும் ,நந்தியா வட்டையும் காகிதப் பூவுக்கு இணையாக போட்டி போட்டு கொண்டு பூத்துக் கிடக்கின்றன .என் காலை நடை பெரும்பாலும் ஜாலான் காயூ தூங்கா நகர வீதியின் ஒரு பரோட்டாக் கடையில்தான் பெரும்பாலும் முடிவடைகிறது , ஜாலான் காயு 1930 களில் சிலேட்டர் சாலை அமைக்க காரணமாக இருந்த ராயல் ஏர் போர்ஸ் தலைமை பொறியாளர் மிஸ்டர் உட்டின் மலாய் மொழியாக்க பெயரில்தான் அமைந்தது நான் 90 களில் ஜாலான் காயுவில் உணவகம் நடத்தியபோது அடர்ந்த மரங்களும் ஒத்தையடிப் பாதையில் போக்குவரத்தும் கொண்ட இந்த பகுதி சட் சட்டென்று பரோட்டா தட்டும் ஒலியிலும் காட்டுப்பகுதி சூழலில் தேடி வந்து சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் வருகையிலும் எப்போதுமே உயிர்ப்புடன் இருக்கும் ,இதுவரை கேள்விப்படாத பெய்ர்களை தாங்கி நிற்கும் ஜாலான் காயு தெரு க்களின் பெயர்கள் செங்காங்கின் இன்னொரு சிறப்பு மேற்கு சுமத்ராவின் நடன அசைவுகளான Tari Piring – கோப்பை நடனம் Tari Lilin -உருகும் மெழுகுவர்த்தியின் ஆட்டம் Tari Dulang – Tari Zapin –Tari Serimpi என்று இருப்பிட சூழலையும் ,கலாச்சாரத்தையும் கவனத்தில் கொண்டு பெயர் சூட்டியிருக்கிறது நிலப் போக்குவரத்துஆணையம் .ஆங்கர்வெல் ,காம்பஸ் வெல் , ரிவர் வெல் என்று தொடரும் தெரு பெயர்கள் கடலோடிகளை கவனப் படுத்தும் சொற்கள் .1998 ல் சிங்கப்பூரில் Light Rail Transit கட்ட ஆரம்பித்தபோது,ஏதோ வேண்டாத வேலை இவ்வளவு உயரத்தில் இன்னொரு ரயிலா ? என்ற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டது.ஆனால் புற நகர் பகுதிகளில் புதிய விடுகளில் மக்கள் குடியேறியபோது
LRT பயணத்திலும் அலை மோதும் கூட்டம் .


உயரத்தில் பறக்கும் தொடர் வண்டியிலிருந்து
ஆற்றோரமும் அழகிய பூங்காவும் சூழ செங்க்காங்கை பாருங்கள் அழகு …