Posts Tagged ‘சிங்கப்பூர்’

சிங்கப்பூர் கிளிஷே – 4

Posted: ஜனவரி 5, 2011 in பத்தி
குறிச்சொற்கள்:

“நீ பார்த்தாயா
என் டைரியை
அதில் என் அடையாள அட்டை
தொலைபேசி எண்கள்
சில கணக்குகள் குறித்து வைத்திருந்தேன்
அதற்காகவெல்லாம் தேடவில்லை அதை
ஒரே நேரத்தில் நான்கு திசைகளிலும்
ஊர்ந்து கொண்டிருக்கும் பாம்பு ஒன்றின்
படத்தை அதில் ஒட்டி வைத்திருந்தேன்
அதைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது எனக்கு”

-தேவதச்சன்

ஒவ்வொரு வருடம் பிறக்கும்போது நாளின் நிகழ்வுகளைக் குறித்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் வந்து பெரும்பாலும் அன்று மாலையே சருகாகி உதிர்ந்து விடும். ஆனாலும் வேலை கிடைத்த நாள், வேலை ”பனால்” ஆன நாட்களும் என்றும் மறக்காமல் மனதில் எப்போதும் நிற்கின்றன. சிங்கப்பூரில் வேலை இருப்பவர்கள், வேலை இல்லாதவர்கள் இருவருமே தவறாமல் Classfied பார்ப்பார்கள். நான் வேலை இல்லாததால் பார்த்தேன். புகழ்பெற்ற Franchise கிளீனிஸ் நிறுவனம், நல்ல சம்பளம். நேர்முகத்தேர்வுக்கு வந்திருந்தவர்களில் அதிகம் பேர் மலாய்க்காரர்கள். நான் சுத்தம், அசுத்தம் இரண்டு வார்த்தைகளையும் டைப் செய்து விக்கிபிடீயாவில் நுழைந்து ஒரு முழுமையான தயாரிப்புடன் களமிறங்கியிருந்தேன். கிளீனிங் இன்டஸ்டிரியில் 3’R’ முக்கியமானவை. Reuse, Reduce, & Recycle. குறிப்பாகத் தினந்தோறும் (2005 கணக்கு) 1000 டன் குப்பைகள் சேர்கின்றன. இது சுமார் 950 யானைகளுக்குச் சமம்.ஞாயிற்றுக்கிழமை மற்றும் விழாக்காலங்களில் 25 யானைகள் அதிகம் சேர்கின்றன.

வித்தியாசமாகப் பதில் சொல்லி நேர்முகத் தேர்வில் அசத்திவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தால் இன்டர்வியூ ரூமில் இரண்டு சீனர்களுடன், ஒரு வெள்ளைக்காரர் உட்கார்ந்திருந்ததால் சிங்கிலிஸ் மலாய் கேள்விகளை எதிர்கொள்வதற்குத் தயாராக இருந்த எனக்குப் பெரிய அதிர்ச்சியாகிவிட்டது. சில சமயங்களில் Franchise கம்பெனிகளில்  தலைமை இடத்திலிருந்து வந்து ஆள் எடுக்கும் நடைமுறைகளைக் கண்காணிப்பார்களாம். ஆரம்பத்திலிருந்தே வெள்ளைக் காரர்தான் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார். வீடு எங்கே என்றார். சொன்னேன். Govt (Or) Private என்றார். நான் HDB என்றேன். HDB என்றால் “ஹை டென்ஸிட்டி பில்டிங்” அப்படியா என்றார் தொடர்ந்து அது என்ன NTUC, PUB, NEA என்று Short பார்ம் யூஸ் பண்ணுகிறீர்கள். சிங்கப்பூரில் மொத்தம் எத்தனை Wash rooms உள்ளன இப்படிப் பல கேள்விகள் கேட்டார். சொன்ன பதில்களில் எனக்கே திருப்தி இல்லை. யூரின் பாஸ் பண்ணவதற்கு Loo என்று சொல்கிறார்களே அது என்ன மொழி என்றார். அது ஆங்கிலம்தான் “”Let us observe Ourselves” என்றேன். அநேகமாக இந்தப் பதில்தான் எனக்கு வேலை வாங்கிக் கொடுத்திருக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

கம்பெனி பாஸ் Mr.Albert பிரிட்டன் திரும்பும்வரை அவரைக் கவனிக்கும் PRO வேலையும் சேர்த்து எனக்குக் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு வாரமும் ஆங்கில மொழியில் ஒரு புதிய வார்த்தை சேர்வதாகச் சொல்கிறார்கள். பெயர்ச்சொல், வினைச் சொல்லாகவும் சில சமயங்களில் உரிச் சொல்லாகவும் மாற்றம் கொண்டு வருகின்றன. காரணம் ஆங்கிலத்தைக் கூறு போட்டால் கொஞ்சம் ஸ்கேண்டினேவியன்,  கொஞ்சம் லத்தீன், அதிகமாகப் பிரான்ஸ், ஜெர்மன் இப்போது கொஞ்சம் Chinglish-ம் சேர்ந்து கொண்டுவிட்டன.

இன்னொரு மொழியிலுள்ள வார்த்தை பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தால் அதைக் கடன் வாங்கித் தன்னுடையதாக்கிக் கொள்ளும் வித்தை ஆங்கிலத்தைத் தவிர மற்ற எந்த மொழிகளுக்கும் இல்லை. Mr.ஆல்பர்ட் டிஸோஸா சிங்கப்பூரைப் பற்றி விரிவான விபரங்களைக் கை நுனியில் வைத்திருந்தார். ஒரு தகவலை அவர் கேட்கும் போது அது வேறு ஒன்றுக்கான பிரதிவடிவமாக விரிவான அர்த்தம் கொண்டதாக இருக்கும்.

ஆர்ச்சர்டு ரோட்டிலுள்ள அந்தப் புகழ்பெற்ற கிளப்பில் வார இறுதி நாட்கள் மட்டுமல்ல வார நாட்களிலும் கூட்டம் நிரம்பி வழியும். ஒருவாரம் முன்னதாகவே நிகழ்ச்சி அட்டவணையைக் கொடுத்து விடுவார்கள். பெரிய ஹாலில் பலவிதமான நிகழ்ச்சிகள் ஒரே நேரத்தில் நடக்கும். அதற்கேற்றாப்போல் ஹாலைச் சிறு சிறு அறைகளாகப் பிரித்துத் தடுப்பு ஏற்படுத்த வேண்டும். சீலிங் பகுதியில் தண்டவாளங்களில் தடுப்புகள் தொங்கிக் கொண்டிருக்கும். பெருக்கல் வாய்ப்பாடு தெரிந்தால் மிகச் சுலபமாக 4, 8, 12 அறைகளை அரை மணி நேரத்தில் அமைத்து விடலாம். புள்ளி தவறிச் சுவரை இழுத்துவிட்டால் மொத்த தடுப்புகளையும் வெளியில் இழுக்க முடியாது. Mr.ஆல்பர்ட் டிஸோஸா மற்ற கிளை நிறுவன உரிமையாளர்களைச் சந்திக்க முழுநேரமும் அங்கே இருப்பார்.

அவர் அதிகம் உபயோகிக்கும் வார்த்தைகள்
What ever
You know what i mean
to tell you the truth
Actually

இவைகளுக்கு ஆமாம் என்றோ இல்லை என்றோ சொல்லமுடியாத நிலைமையில் நான் தவிக்கும்போது you think, think when you will get the answer என்பார்.

ஒரு நாள் சிங்கப்பூர் கிளை உரிமையாளர் Ms. கேதரின் டிஸோஸாவுக்கு சீனப் புத்தாண்டு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது ஹவ்பார்வில்லாவுக்கு எதிரிலுள்ள Seafood Restarant- ல் விருந்து நடந்தது.

பிஸ் சூப், அப்லோன், Sea cucumber, fatt choy, waxed duck மேஜையில் கொண்டு வந்து வைத்தார்கள். நான் Mr.டிஸோஸாவிடம் சில்லி ok வா என்றேன். ஏன் எப்போதும் வெள்ளைக்காரர்களிடம் இதே கேள்வியைக் கேட்கிறீர்கள் நான் மெக்ஸிகன், தாய் உணவுகளை வெளுத்து கட்டியவன் இது என்ன பிரமாதம் என்றார். ms.கேதரினிடம் சீனப்புத்தாண்டு என்றால் இதே வகை உணவுகள்தான் பரிமாறவேண்டுமா என்ன? என்றார்.

அதற்கு கேதரின் ”கொங்ஸி பட்சாய்” என்று வார்த்தையால் Fatt choy பொருந்துகிறது. Fish என்று உச்சரித்தால் கண்டனிஸில் அபரிதமான மிகையான செல்வம் என்று அர்த்தம் என்றார்.

டிஸோஸா தொடர்ந்து, ‘அப்படியானால் இனிமேல் விருந்தில் Peas, Corn, Honey மூன்று மட்டும்தான் சாப்பிடவேண்டும்’ என்று நினைக்கிறேன்.
Peas உச்சரிப்பில் Peace வருகிறது
Corn உச்சரிப்பில் Coin வருகிறது
Honey ஊற்றினால் Money OK வா எப்படி என்றார்.

எல்லோரும் சிரித்தோம்

”Lee har dai siv”
‘இந்த வருடம் முழவதும் சிரித்துக் கொண்டிருங்கள்’ என்று சீனத்தில் பேசி அனைவரையும் அசத்தினார்.

Mr.டிஸோஸா நான் வேலையில் சேர்ந்து இரண்டு வாரங்களில் எனக்கு ”Zaijiaw” (குட்பை) சொல்லிவிட்டு லண்டன் சென்று விட்டார். ஒரு வருடம் தொடர்ந்து அதே கம்பனியில் வேலை செய்தேன். நான் சூப்பர்வைஸ் செய்யும் இடங்கள் கூடுதலாகக் கிடைத்துச் சம்பளமும் உயர்ந்தது. மலேசியர்கள் தவிர Senior Citizen மற்றும் மாற்றுத் திறனாளர்கள் துப்புரவு வேலைகளில் அதிகம்.

அதில் ஒரு மாற்றுத் திறனாளி பற்றி உங்களுக்கு சொல்லவேண்டும். அவர் Ms.ஷெர்லி யங். வாய் பேச இயலாதவர், காதும் கேட்காது. இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தாய். கணவர் இறந்துவிட்டார், படித்தவர். பொதுவாக சிங்கிலீஷ், ஜப்பலிஸ், கொரிலிஷ் என்று கற்றுக் கொண்டு கம்பெனியில் பெயர் வாங்கியவர்கள் பலரை நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். எனக்கு கொஞ்சம் ‘Sign’lish தெரியும். அது Ms.ஷெர்லி போன்றவர்களை வேலை வாங்குவதற்கு மிகவும் பயன்பட்டது. ஷெர்லிக்கு 10 மாடிகளிலும் உள்ள Toilet களைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டிய டூட்டி.

எனக்கு Signlish எப்படிப் பரிச்சயமானது என்றால் நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் என் உறவினர் காது கேளாதோர் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தவர் என்னை அடிக்கடி சந்தித்துச் சைகை மொழியில் பேச பேச, எனக்கு அது மிகவும் சுலபமாக வந்தது.

குறிப்பாக அத்தனை எண்களையும்  2 கை விரல்களையும் பயன்படுத்திச் சொல்லி விடலாம். 1, 2, 3 கைவிரல்களைக் காண்பித்துச் சொல்லிவிடலாம். 20 என்கிற போது இரண்டு விரல்களை நீட்டி வைத்துக்கொண்டு பக்கவாட்டில் திரைவிலகுவது மாதிரி இழுத்துவிட வேண்டும். 99 வரை இதே முறையில் பக்கவாட்டில் இழுத்துவிட்டு அடுத்த நொடியில் +1 காட்டினால் சொல்லி விடலாம்.

100 என்பதற்கு ஒற்றை விரலை நீட்டி, ரஜினி கையை சுழற்றி மேலே கொண்டு போவதுமாதிரி அல்லாமல் கீழே ஒரு இழுப்பு இழுக்கவேண்டும். அதே மாதிரி 900 வரை சொல்லிவிடலாம் 1000க்கு ஆள்காட்டி விரலைக் கையின் செவ்வாய் மேட்டைத் தொட்டுக் காட்டி மேல் நோக்கி நகர்த்தினால் 1000 .. இப்படி…

நடிகர், நடிகைகள் பெயர்களை எழுதிக் காண்பிப்பதை விட அதற்கும் சைகை மொழி இருக்கிறது. MGR என்றால் ஆள்காட்டி விரலை நாடியில் வைத்து இரண்டாகப் பிரித்துக் காண்பிக்க வேண்டும் (இரட்டை நாடி). சிவாஜி என்றால் ஆள் காட்டிவிரலை முதல் கட்டையை மடக்கி வைத்துக்கொண்டு நாடியில் வைக்க வேண்டும். ஜெமினி கணேசனுக்கு கன்னத்தில் இட்லி சுடவேண்டும் (சாம்பார்) இப்படிக் கமல், ரஜினி அவர்கள் உடல்மொழிக்கு ஏற்ப….. ஷெர்லிக்கு நான் நண்பனாகி விட்டேன். அவர் வேலையைச் சுலபமாக புரிந்து கொண்டு முடிக்க நான் உதவியாக இருந்ததில் அவர் பிள்ளைகளைக் கூட்டிவந்து எனக்கு அறிமுகப்படுத்தினார். இவ்வளவு நுணுக்கமாக இருந்த ஷெர்லி நட்பால் ஒரு பிரச்சினையில் எனக்கு ஒருவாரம் சஸ்பெண்ட் கிடைத்தது. அந்த பிரச்சினை ஒரு நாள் VVIP விசிட் 6வது மாடியில் மீட்டிங். ஆட்கள் ஒரே நேரத்தில் கூடும் மாடிகளில் டாய்லெட் பிரச்சினை வந்துவிடும். நான் ஹாலில் நின்று கொண்டு ஷெர்லியிடம் 6வது மாடிக்குச் சுண்டுவிரலை காண்பித்து 6வது மாடியை பார்த்தால் போதும் கவனமாக இருக்கவும் என்று சைகை மொழியில் பேசிக் காண்பித்தேன். அவர் OK என்று கட்டைவிரலை காண்பித்தார்.

 கூட்டம் முடிந்தவுடன் கட்டிட CEO என்னைக் கூப்பிட்டார். 6 வது மாடியில் டாய்லெட் பேப்பர் இல்லை ஒரே அசுத்தம் என்ன வேலை கிழிக்கிறீர்கள் என்றார். நான் ஷெர்லியை என்ன இப்படிச் சொல்கிறீர்கள் என்றேன். 6வது மாடியை நான் சுத்தம் செய்யவில்லை நீதான் சுண்டு விரலைக் காண்பித்து கடைசிமாடி என்றாய் என்று சொன்னார். (சைகையில்தான்) 10வது மாடியைத்தான் கிளீன் செய்தேன் என்றார் சுண்டுவிரல் 6 தானே என்றேன்.

6 அப்படி அல்ல சுண்டுவிரலோடு கட்டை விரலையும் பாபா முத்திரை மாதிரிக் காண்பிக்க வேண்டும் அதுதான் சீனப் பண்பாடு என்று பாபா முத்திரை காண்பித்து இரண்டு கைகளையும் சேர்த்து நெற்றியில் வைத்து இது சீனப் பண்பாடு என்றார்

.
ஆனால் CEO பண்பாடு காக்காமல் எனக்கு மெமோவும் ஒருவார சம்பள வெட்டும் கொடுத்து விட்டார். இதே மாதிரி நான் செய்யாத தவறால் வேலை போன விசயத்தை அடுத்த கட்டுரையில் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

புத்தாண்டு வாழ்த்துகள் எப்படி சைகை மொழியில் செய்வது என்று ஷெர்லி எனக்குச் சொல்லிக்கொடுத்தார் அதை எப்படி உங்களுக்குச் சொல்வது என்றுதான் தெரியவில்லை!

thanks: http://www.thangameen.com/contentdetails.aspx?tid=155

©அப்துல்காதர் ஷாநவாஸ்
shaaanavas@gmail.com

சிங்கப்பூர் கிளிஷே – 3

Posted: திசெம்பர் 10, 2010 in பத்தி
குறிச்சொற்கள்:

“வாழ்க்கை என்பது
ஏராளமான நிகழ்வுகள்
அலுப்புணர்வுகளால்
பின்னப்பட்ட ஒன்றாகும்.
நினைவில் அலுப்புணர்வு
மறந்துபோய் நிகழ்வுகள் மட்டும்
நிலைத்திருக்கின்றன’
 
– கவிஞர் டாம் மொரைஸ்

நாங்கள் செய்த நாணய மாற்று வியாபாரம், கம்பிகளுக்குள் உட்கார்ந்து ‘வெள்ளி’ எண்ணிக் கொடுப்பதல்ல. காலையில் கடை திறந்ததும், கரன்சிக்களின் அன்றைய விலைக் குறியீட்டு மதிப்பை ஆர்கேடுக்கு ஃபோன் செய்து வாங்கி வைத்துக் கொள்வோம் (அப்போது எல்லாக் கடைகளிலும் இண்டெர்நெட் வசதி கிடையாது). வாடிக்கையாளர்கள் கரன்சி விலை விசாரித்து ஃபோன் அடிப்பார்கள். 12 மணிக்குள் பேரத்தை வித்துக் கொண்டு தேவைப்படும் கரன்சிகள் வாங்க ஆர்கேட் போவேன். நான்தான் கேரியர், டெலிவரிமேன், கேங்கர் எல்லாம். இரண்டு சட்டை பாக்கெட், நான்கு பேண்ட் பாக்கெட்களையும் சேர்த்து ஆறு பாக்கெட்டுகளிலும் கரன்சிகள். தனித்தனியே பில்போட்டு எடுத்துக் கொள்வேன். சிலநேரங்களில் கப்பலில் இருந்து ஆர்டர் வரும். ஆறு மணிக்கெல்லாம் டெலிவரி நடந்து விடும்.

இந்த வியாபாரத்தில் பல வாடிக்கையாளர்கள் இருந்தாலும், இரண்டு முக்கியமான வாடிக்கையாளர்களைப் பற்றி உங்களிடம் சொல்ல வேண்டும். ஒருவர் மிஸ்டர் ஹொசிமோட்டோ. PSA பில்டிங்கில் தோஷிபா கம்பனியில் வேலை பார்த்தவர். சிங்கப்பூரில் குடியேறியவர். ஜப்பானிய ‘யென்’னில் சம்பளம் வாங்குபவர். அவரிடம் ஒரு யென்னுக்கு 2 காசு கமிஷன் வைப்பதற்குள், ‘போதும், போதும்’ என்றாகிவிடும். அத்தோடு நான் அவருக்கு யென் கொண்டுபோய்க் கொடுக்கும் போதெல்லாம், அவரைப் பார்த்தவுடன், 1942 ஜப்பான் kempeitai போலீஸிடம் அகப்பட்ட மிஸ்டர் யூ கியான் சாங் நினைவு வந்து விடும். அவருடைய பேட்டியை எல்லோரும் படித்திருப்போம். அப்போது அவருக்கு 20 வயது. ஒன்பது பேரைப் பிடித்துக் கொண்ட ஜப்பானியர்கள், அவர்களை வரிசையாக நிற்க வைத்து ‘பாராங்’ கத்தியால் வெட்டினார்கள். கடைசியில் நின்ற இவர் கழுத்தில் வெட்டு ஆழமாக விழாமல் தப்பித்து, இன்று 4 பேரக் குழந்தைகளுடன் (வயது 92) ஆரோக்கியமாக இருக்கிறார். மிஸ்டர் ஹொஷிமோட்டோ அதில் சம்பந்தமில்லாதவர். ஆனாலும் அந்த நினைவு வந்துவிடும். அத்தோடு எனக்கு அவரிடம் பிடிக்காத ஒரு குணம், ‘யென்’ எண்ணிக் கொடுத்துவிட்டு, சிங்கப்பூர் வெள்ளியை வாங்கும்போது, ‘நிஹான் சிபான்’ என்று சொல்லுவார். கட்டை விரலை வேறு தம் பிடித்துக் காண்பிப்பார். ஆர்தர் என்று ஒரு சீன நண்பர் கீழே உள்ள பேங்கில் வேலை பார்த்தார். அவரிடம் ஹொஷிமோட்டோ சொன்ன வார்த்தையைச் சொல்லி அர்த்தம் கேட்டேன். அவர் சொன்னார், ‘ஜப்பான் இஸ் த பெஸ்ட்’ என்று அர்த்தம். நீங்கள் அவரிடம், சிங்கப்பூர் இச்சிபாங் என்று சீன மொழியில் சொல்லுங்கள். அத்தோடு ‘யென்’ மதிப்புக் குறையும்போது அப்படிச் சொல்கிறாரா என்று கவனித்துக் கொள்ளுங்கள். அப்படிச் சொல்லாவிட்டால், ‘யென்’தான் ஜப்பான் என்று நினைத்துக் கொள்கிறார். அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.’ என்றார். ஆர்தர் சொன்னது மாதிரித்தான் நடந்தது. நான் ‘சிங்கப்பூர் இச்சிபாங்’ என்று மனப்பாடம் செய்து வைத்திருந்தேன். அதைச் சொல்லச் சந்தர்ப்பம் அமையவில்லை. மிஸ்டர் ஹொஷிமோட்டோவைப் பற்றிய என் நினைவுகள் இத்தோடு முடியவில்லை. மேடம் வசந்தி, கிம்மோ பள்ளித் தமிழாசிரியை. என் பிள்ளைகள் அவரிடம்தான் தமிழ் படித்தார்கள். பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்குச் சிங்கப்பூரில் எத்தனையோ இடங்கள் இருக்கும்போது, தன் பிள்ளைகளின் பிறந்தநாளை முதியோர் இல்லத்தில்தான் கொண்டாடுவார். நாணய மாற்று வியாபாரத்தை விட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு தெலுக் பிளாங்கா முதியோர் இல்லத்தில் மேடம் வசந்தியின் மகன் பிறந்தநாளுக்குச் சென்றிருந்தேன். ஒரு பெரியவர், ‘உங்கள் பிரியாணி நன்றாக இருக்கிறது’ என்று சொல்லி என் கையை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தார். திடீரென்று, ‘மணிச்சேஞ்சர், மணிச்சேஞ்சர்’ என்று குரல் கேட்டுத் திரும்பினேன். மிஸ்டர் ஹொஷிமோட்டோ, ஓர் இந்திய முதியவரைப் படிக்கட்டுகளின் வழியாகக் கையைப் பிடித்துக் கூட்டி வந்து கொண்டிருந்தார். சடாரென்று எனக்குள்ளிருந்த ‘திரை’ விலகி, ஹொஷிமோட்டோ பளிச்சென்று காட்சியளித்தார். நான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையைப் பற்றி விசாரித்தார். மாதம் ஒருமுறை முதியோர் இல்லம் வந்து விடுவாராம்.எனக்கு இப்போது அவரிடம் பேசிக் கொண்டிருப்பது மிகவும் பிடித்தது. நான் அவரிடமிருந்து விடைபெறும்போது, ‘நிஷான் சிபான்’ என்றேன். அவர் சிரித்துக் கொண்டே, ‘ யென் விலை இப்போது ஏற்றமாக இருக்கிறதா..’ என்றார்.

அடுத்தவர் மிஸ்டர் ரகுநாதன். மெக்கானிக்கல் எஞ்சினியர். மோட்டார் பாகங்களில் வெளியாகும் ஈயக் கழிவுகள் ஆராய்ச்சி பிரிவில் வேலை பார்த்தார். அவருக்குப் பச்சையில் சம்பளம் (யு.எஸ் டாலர்). அதிகம் பேசமாட்டார். அவருக்கு டோர் டெலிவரி செய்ய வேண்டும். ஹவ்காங்கில் குடியிருந்தார். அலெக்ஸாண்டிரா ரோட்டிலிருந்து வியர்க்க விறுவிறுக்க, வெள்ளி கொண்டு வந்து கொடுத்தால், மெயின் கேட்டைத் திறக்காமல், கதவைப் பாதி திறந்து கொண்டு வாங்குவார். வெள்ளியை எண்ணி வாங்கிக்கொண்டு படாரென்று கதவை மூடி விடுவார். ஒருநாள் அவர் கதவை அப்படி மூடுவதற்குள், ‘ மிஸ்டர் ரகுநாதன், நீங்கள் south paw-வா..’ என்று கேட்டேன். கொஞ்சம் தயங்கிக் கதவை முழுவதும் திறந்து கொண்டு என்னிடம், ‘எப்படிக் கண்டு பிடித்தீர்கள்..; என்றார். ‘வெள்ளியை யாரும் இடது கையால் வாங்க மாட்டார்கள் உங்களுக்கு இடது கைதான்முதலில் நீள்கிறது. நம் பிரதமர், கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர், பில்கேட்ஸ் கூட இடது கை பழக்கம் உள்ளவர்கள்தான்’ என்றேன். என் பேச்சில் கொஞ்சம் விஷயம் இருப்பதாக நினைத்துக் கொண்டார். கடைக்குப் போன் அடிக்கும் போது, ஷானவாஸைக் கூப்பிடுங்கள் என்று சொல்ல ஆரம்பித்தார். அடிக்கடி அவர் ‘ஐ வாண்ட் டு பர்சேஸ்’ என்று சொல்வார். ‘நீங்கள் இப்படிப் பெரிய வார்த்தைகளைப் போட்டால் நான் லாரியில்தான் கொண்டு வந்து தரவேண்டும்’ என்பேன். பர்சேஸுக்கு அதுதானே அர்த்தம்! ஒருநாள் இரவு எட்டு மணி இருக்கும் எனக்குப் போன் அடித்தார். ‘ஷானவாஸ், ஒரு ஹெல்ப். உடனே என் வீட்டுற்கு வரமுடியுமா’ என்றார். அவர் குரலில் ஏகப் பதற்றம். விஷயம் ஒன்றுமில்லை. புளோக் கீழே விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளுக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்திருக்கிறார். யாருடனும் பழகாததால், இவரை அந்த ஏரியாவில் யாருக்கும் தெரியவில்லை. அதானால் அந்த பிள்ளைகளின் தந்தை போலீஸுக்குப் போன் அடித்து விட்டார். நான் போனபோது பிரச்சனை ஓய்ந்து விட்டிருந்தது. அவரை ஆர்.சி சேர்மேனிடம் அறிமுகம் செய்து வைத்தேன்.

மணிசேஞ்ச் கவுண்டருடன் பிஸ்கேட், சிகரெட், புத்தகங்கள், சாப்ட் டிரிங்க்ஸ் விற்பனையும் உண்டு. அவ்வப்போது பகுதிநேரமாகப் பள்ளிவிடுமுறை காலத்தில் மாணவர்களை வேலைக்குச் சேர்த்துக் கொள்வோம். அப்படி வந்து சேர்ந்த பையன் ரனீத்தீன் கொஞ்ச நாட்களே வேலை பார்த்தான். ஏரியாவைக் கலக்கி விட்டான். வாரம் ஒருமுறை வரும் 8 Days பத்திரிக்கையை வாங்க வரிசை பிடித்து நிற்பார்கள். பெண் வாடிக்கையாளர்களை ஓடி ஓடிக் கவனிப்பான். 1996-ல் பேஜர்தான் லேட்டஸ்ட்! PSA -யில் வேலை பார்க்கும் பெண் அடிக்கடி அவனுக்கு பேஜ் செய்ய ஆரம்பித்தது. கடை போனில்தான் பேசுவான். என்னை ஓரக்கண்ணால் அடிக்கடி பார்த்துக் கொள்வான். ஒருநாள் போன் பேசும்போது, No France, Itally, Itally என்றான். எதற்கு பிரான்ஸ் இட்டாலி என்கிறாய் என்றேன். அந்தப் பெண் எக்சேஞ்ச் ரேட் கேட்பதாகச் சொன்னான். எனக்கு சந்தேகம் வந்து விட்டது. இதையே பலநாட்கள் போனில் பேசிக் கொண்டிருந்தான். பிரான்ஸ், இத்தாலி என்று கரண்ஸிகள் இல்லை. பிரான்ஸ் கரன்சியை ‘பிரான்க்’ என்பார்கள். இத்தாலி கரன்சியை ‘லிரா’ என்பார்கள். இவன் விலை சொல்லவில்லை என்று தெரிந்து ஒருநாள் இருக்குப்பிடி போட்டவுடன், சொன்னான். இதுதான் அந்த அர்த்தம் FRANCE – Friendship Remains And Never Can End ITALY – I Trust And Love You எப்படியெல்லாம் ரூட் கண்டுபிடிக்கிறார்கள்.

அப்புறம் இன்னொரு கேரக்டர். மீடியாவில் வேலை பார்த்து, கட்டாய ஓய்வில் வெளியில் வந்து கே என்பவர் செக்கியூரிட்டியாக வேலை பார்த்தார். அவருடைய வேலை நேரம் எங்கள் கடையில்தான் கழியும். தினமும் பச்சை விலை விசாரிப்பார். ஆனால், ஒருநாள் கூட அவர் பச்சையை மாற்றியதே இல்லை. கரன்சி வரலாற்றைக் கரைத்துக் குடித்தவர். ஏசுநாதர் நாணய வியாபாரிகளினால் சர்ச்சை விட்டு வெளியேற்றியதிலிருந்து ஜூலியஸ் சீசரைக் கொல்லச் சதி செய்தவர்கள் நாணய வியாபாரிகள் என்பதுவரை எங்களுக்கு இதைப் பற்றிய செய்திகள் ஏதாவது எங்களுக்குத் தெரிகிறாதா என்று ஆழம் பார்ப்பார். அதன்பிறகு நான் அவரைப் பார்த்தவுடன் முந்திக் கொண்டு, ‘Economy boom and bust, recession, depression, business cycle’ என்று பேச ஆரம்பித்தவுடன் கொஞ்சம் அடங்கிப் போனார். பணம் எண்ணிக் கொண்டிருக்கும்போது ஒருநாள் சொன்னார், ‘பணம் சந்தோஷம் தராது, சந்தோஷம் பணம் தராது’ என்று மார்க்ஸ் சொல்லியிருக்கிறார் என்றார். நான் கரன்சியைக் காண்பித்து, ‘பணம், பணம் தரும்’ என்றேன்! என்றாவது ஒருநாள் பர்ஸைத் திறந்து பச்சையை மாற்றுவார் என்று எதிர்பார்த்தேன். அந்த நிகழ்வு நடக்கவேயில்லை. இதெல்லாம் கதையா அல்லது நடந்தவையா என்று யோசிக்காதீர்கள்.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் அனுபவங்கள் மிகக் குறைவாக இருந்தாலும், இலக்கியமும், வாசிப்பும், ஒரு வாழ்க்கையைப் பற்பல வாழ்க்கையாக வாழும் வாய்ப்பை அளிக்கிறது. வாழ்க்கையின் நல்ல நிகழ்வுகளை அசை போடுவதன் மூலம் இன்னும் விரிவாக நிகழ்த்திக் கொள்ள வழி செய்கிறது.

thanks: http://www.thangameen.com/ContentDetails.aspx?tid=122

சிங்கப்பூர் கிளிஷே -1

Posted: நவம்பர் 20, 2010 in பத்தி
குறிச்சொற்கள்:

‘ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு
 உடையைத் தரும் மாநகரம்
 உங்களுக்குக் கோமாளி உடையைத்
 தந்திருக்கிறது’

 – என்கிறது மகாதேவனின் கவிதை

சிங்கப்பூரில் நீங்கள் கோமாளியாக இருக்க வேண்டாம். அந்த உடல் மொழியுடன் மற்றவர்களிடம் நீங்கள் பழக ஆரம்பித்தாலே போதும், செய்யும் காரியங்களில் எல்லாம் வெற்றி முகம்தான்.

கவிமாலை முடிந்து வீட்டிற்குச் செல்வதற்குக் காத்திருந்தபோது திருமதி. தவமணியும் வந்து சேர்ந்து கொண்டார். இருவரும் பஸ் நம்பர் 61ல் ஏறினோம். பஸ்ஸில் ஒரே ஒரு இருக்கை காலியாக இருந்தது. அதில் ஒரு மாது இரண்டு சீட்டிலும் சேர்ந்து உட்கார்ந்து கொண்டிருந்தார். தவமணி, தான் அந்த சீட்டில் உட்கார நினைப்பதை உடல் மொழியால் உணர்த்திப் பார்த்தார். அந்தப் பார்ட்டி மசிவதாகத் தெரியவில்லை. சில நிமிடங்கள் பொறுத்துப் பார்த்து விட்டு அந்த ஆன்ட்டியிடம் ‘This one, i want to sit’ என்று இருக்கையைக் காண்பித்தார். ‘ம்ஹூம்’ எந்தப் பதிலும் இல்லை. நான் தெரியாத மாதிரி வேறு பக்கம் திரும்பிக் கொண்டேன்.

ஒரு வழியாக எதிரில் உள்ள இருக்கை காலியானது. தவமணி தன் தோல்வியை ஒப்புக் கொண்டவராக அதில் போய் உட்கார்ந்து விட்டார். இந்த இடத்தில் தவமணி ‘சினி டுடோ போலே’ என்று ஒரு வார்த்தையைப் போட்டிருந்தால் சூழ்நிலை நிச்சயமாக அவருக்குச் சாதகமாக இருந்திருக்கும். ஏனெனில் என் அனுபவம் அப்படி. அதைப் பற்றிதான் சொல்லப் போகிறேன்.

முதலில் ‘சிங்கிலிஷ்’ (Singapore English = Singlish) பற்றி சொல்லி விடுகிறேன்.

சிங்கப்பூரில் சுமார் 75 சதவீதத்திற்கும் மேலானோர் ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். சிங்கிலிஷ் பேசக் கற்றுக் கொண்டு விட்டால், நீங்கள் இங்கு பிறந்து வளர்ந்தவரா அல்லது குடியேறியா என்பதைக் கண்டுபிடிக்க மற்றவர்கள் சிரமப்படுவார்கள். சிங்கிலிஷ் பேசத் தெரியாவிட்டால், நீங்கள் எவ்வளவுதான் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலும் அது கதைக்கு உதவாது என்பது நாம் அறிந்த உண்மைதான். ‘சிங்கிலிஷ்’ கற்றுக் கொள்வது என்று சொல்வதை விட, பேசிப் பேசிப் பழகிக் கொள்வது என்று சொல்வதுதான் சரி.

‘சிங்கிலிஷ்’ என்பதே ‘மங்கிலிஷின்’ மறுபிறவிதான். 1819-லிருந்து, 1965 வரை மலேய தீபகற்பம் காலணித்துவ ஆட்சியிலிருந்த காலத்தில் இருந்தே பழக்கத்துக்கு வந்துவிட்ட மொழி. ‘No good lah’ என்று ஆரம்பிக்கும் கட்டுமானத் தொழிலாளர்களில் இருந்து, ‘Dis one his wife lah’ என்று பேசப் பழகும் ITவாலாக்கள் வரை அனைவரிடமும் நீக்கமற நிறைந்திருப்பது. ஒரு உதாரணம் – ‘Clean Room First. Otherwie kena ‘ என்பதைக் கேட்டவுடன் கொஞ்சம் மலைப்பாக இருந்தால், Kena ஒரு மலாய் வார்த்தை. உண்டு, இல்லை என்றாகிவிடும் என்பதுதான் அதன் அர்த்தம்.

இனி, சிங்கப்பூர் சினிமாப் பெயர்களைப் பார்க்கலாம்

இனி, சிங்கப்பூர் சினிமாப் பெயர்களைப் பார்க்கலாம்
 
Army Doze
12 Storeys
Me pok yan
I Not stupid
Money No Enough
Just Follow Law
 
அடுத்து டி.வி சீரியல் பெயர்களைப் பார்க்கலாம்.
 
Phua Chu Kang
ABC OJ
Under one roof
Maggie 2 Me
முறையான ஆங்கிலம் பேசுங்கள் என்று நம் அரசாங்கம் தொடந்து வலியுறுத்தி வருகிறது. ஆனாலும், இந்தப் பேச்சு முறை நம் கலாச்சாரத்தில் ஊறி விட்டது.

 இன்னொருநாள் நான் பஸ்ஸில் போகும்போது, ஒரு சீன மாது, காலியாக இருந்த சீட்டில் உட்கார வந்தவர், அந்த சீட்டைத் தட்டோ தட்டு என்று ஐந்து நிமிடங்கள் தொடர்ந்து தட்டிக் களேபரம் செய்த பிறகுதான் உட்கார்ந்தார். நான் பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த சீன ஆடவரிடம் கேட்டேன், ‘ Why this lady do like this?” . அதற்கு அவர் ‘ அந்த மாது சீட்டைத் தட்டி அதற்கு உயிர் உண்டாக்குகிறார்’ என்றும், ‘ அது உயிரோடு இருக்கும்போது அதன்மேல் உட்காருவதுதான் அவருக்கு உசிதமாக இருக்கிறது’ என்றும் சொன்னார். அவர் சொன்னது எனக்குக் கொஞ்சம் சீரியஸான விஷயமாகப் பட்டது. பயணம் முடியும் மட்டும், அந்தச் செயலின் பின்னால் இருக்கும் கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.

பஸ்ஸை விட டாக்ஸியில் பயணம் செய்பவர்கள், தங்கள் அனுபவங்களை வைத்து ஒரு நாவல் எழுதலாம் அல்லது ஒரு சினிமாப் படம்கூட எடுக்கலாம். அவ்வளவு அனுபவங்கள் டாக்ஸிப்பயணங்களில் கிடைக்கும். சிங்கப்பூர் டாக்ஸி டிரைவர்கள் பலவகை.உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், அன்பே வடிவானவர்களை அடிக்கடி பார்க்கலாம். Taxi Driver படத்தில் வரும் ஹீரோ என்று தங்களை நினைத்துக் கொள்பவர்களும் டாக்ஸி டிரைவர்களும் இருக்கிறார்கள். பயணிகளின் மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் பேசிக்கொண்டே வரும் ஆட்களும் உணடு. இதெல்லாம் உங்கள் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது.

ஒருமுறை, நான் Ministry Of Manpower-ல் என்னிடம் பணிபுரிபவருக்கு Employment Pass Renewal கொடுத்து விட்டு மறுபடியும் SIR போக டாக்ஸி எடுத்தேன். டாக்ஸி டிரைவர் ‘ CTE or PIE or AYE? Which Express way?” என்று கேட்டார். நான், ‘மிஸ்டர் டேவிட், சிங்கப்பூரின் நீளம் 42 கிலோ மீட்டர், அகலம் 23 கிலோ மீட்டர். இதில் நீங்கள் எவ்வளவு தூரம் ஓட்ட முடியுமோ ஓட்டுங்கள்’ என்றேன். அவருக்கு. ‘டேவிட்’ என்று பெயர் சொல்லி அழைத்தவுடன் கிலியாகி விட்டது. நான் டாக்ஸியில் ஏறியதும் டிரைவரின் தலைக்கு மேல் ஒட்டப்பட்டிருக்கும் பெயர் அட்டையை படித்து விட்டு, பெயர் சொல்லி அழைப்பது என் வழக்கம். டேவிட் என்னைப் பார்த்து, ‘நீங்கள் ஹோம் டீமா அல்லது நிருபரா..’என்றார். அவர்களைப் பெயர் சொல்லி அழைப்பதில் இன்னொரு அனுகூலம், அரசியல் பேசும்போது கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள். ஒவ்வொருமுறை டாக்ஸியில் ஏறும்போதும், டாக்ஸி டிரைவர் மற்ற இனத்தவராக இருந்தால், அவர்களுடைய கலாச்சாரம் சார்ந்து ஒன்றை தெரிந்து கொள்வதை பழக்கமாக வைத்திருக்கிறேன்.

‘சிங்கப்பூர் லீக் கால்பந்து ஆட்டத்தைப் பார்க்கப்போனால், ஒரு அணி கோல் போட்டவுடன், அது கோல்தான் என்று உறுதி செய்த நடுவரைப் பார்த்து, பார்வையாளர்கள் ‘ Rafree Kayu’ ‘Rafree Kayu’ கத்துவார்கள். அதற்குப் பொருள், நடுவரை ‘உயிரற்ற மரம்’ என்கிறார்கள் என்று தெரியும். ஆட்டக்காரரைப் பார்த்து ‘ plank’ என்று சொன்னால், ‘முட்டாள்’ என்கிறார்கள் என்றும் தெரியும். ஆனால் கோல் போட்டவுடன் ‘Nee-Naw’ ‘Nee-Naw’ என்று குரல் எழுப்புகிறார்களே அதற்கு என்ன அர்த்தம்’ என்று இந்த டாக்ஸி டிரைவரிடம் கேட்டேன். அவர் ஒரு எஸ்.லீக் ரசிகர் போலும். ‘அதுவா… கோல் வாங்கிய அணியைத் தூக்கிக் கொண்டு போக ஆம்புலன்ஸ் வருகிறது என்பதைத்தான் அப்படிச் சொல்கிறார்கள். அது ஆம்புலன்ஸ் சைரன் ஒலி..’ என்றார் சிரித்துக் கொண்டே.

ஒருநாள் லிஃப்டில் போகும்போது பக்கத்திலிருந்த சீன ஆடவரிடம் பேசியபடி வந்தேன். அவர், ‘நம் நாட்டில் திருட்டுக் குறைவாக இருப்பதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்..’ என்று கேட்டார்.’தெரியவில்லையே’ என்றேன். ‘திருடர்கள் லிஃப்டில் மொத்தமாக சாமான்களைக் கீழே கொண்டு வர முடியாது. முதலில் டி.வி. அப்புறம் ரெஃபிரிஜிரேட்டர். அப்புறம் அவர்கள் ஒரு கோப்பி’ஓ’வைக் குடித்து விட்டு, சோபாவைக் கீழே இறக்கி வரும்போது போலீஸ் அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும்’ என்றார். அவர் சொல்வதும் சரிதான்.

பணமாற்று வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, மிஸ்டர் வாங் ஜப்பானிய யென் மாற்றுவதற்கு வருவார். ஒரு தடவை வந்தால் அவருக்கு சுமார் 1000 வெள்ளி லாபம் கிடைப்பது மாதிரி யென் கொண்டு வருவார். நோட்டை எண்ணி முடித்தவுடன் கமிஷன் வெள்ளியை பர்ஸில் வைக்கும் முன்பு தன் கழுத்தில் போட்டிருக்கும் சங்கிலியின் டாலரில் வைத்து ஒரு நிமிடம் ஒற்றி எடுப்பார். நான் பல தடவை இதைப் பார்த்த நான், ‘மிஸ்டர் வாங், நீங்கள் ரொம்ப கடவுள் நம்பிக்கை உடையவரா..’ என்றேன். ‘இல்லை, அம்மா நம்பிக்கை உடையவன். I belive, I worship my mother’ என்றார். ‘ஆனால், டாலரில் உங்க அம்மா போட்டோ எதுவுமில்லை. டாலர் உங்க அம்மா கொடுத்ததா..’ என்றேன். ‘இல்லை.இந்த டாலரில் என் அம்மா இருக்கிறார். அவருடைய சாம்பலில் வைரம் செய்து போட்டிருக்கிறேன்.’ என்றார்.

நான் நம்பவில்லை. மிஸ்டர் வாங் சென்றவுடன் ‘மோடா பியா ஓராங் (முட்டாள்தனமாகச் சொல்கிறார்)’ என்று வேலையாட்களிடம் சொன்னேன். சில நாட்கள் கழித்து மிஸ்டர் வாங் சொல்வது உண்மைதான் என்று தெரிந்து எனக்கு தூக்கிவாரிப் போட்டது. சுவிட்சர்லாந்தில் உள்ள AL GOODANZO INTERNATIONAL என்ற நிறுவனம் 0.4 காரட் எடையுள்ள வைரக் கற்களை, இறந்தவர்களின் அரைக்கிலோ சாம்பலில் இருந்து செய்து கொடுக்கிறது. ஆர்டர் கொடுத்த 52 வாரங்களில் சாம்பலில் செய்யப்பட்ட செயற்கை வைரத்தை டெலிவரி செய்வார்கள். 0.25 வைரம் 6399….0.4 வைரம் 9399. 2004-ல் இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிறுவனத்திற்கு சுமார் 3000 வாடிக்கையாளர்கள் 24 நாடுகளில் இருக்கிறார்கள்.

மிஸ்டர் வாங்கின் அம்மா பாசத்தைப் நினைத்து ஆச்சரியப்பட்டேன். அவர் மீதான மதிப்பு கூடியது. இப்போதும், ‘அம்மா என்றழைக்காத உயிரில்லையே…அம்மாவை வணங்காமல் உயர்வில்லையே’ என்ற பாட்டைக் கேட்கும் போதெல்லாம் மிஸ்டர் ‘வாங்’கின் ஞாபகம்தான் வரும். இன, மொழி, மதங்களைத் தாண்டி மனிதர்களை இணைக்கும் மந்திர சக்தி தாய்ப்பாசம்தானே! (தொடரும்)

படங்கள் : கெப்புராஜ்

thanks: http://thangameen.com