Posts Tagged ‘பைத்’

சிறுவயதில் நமக்குப் பிடித்த இடங்களைப்பற்றி நினைக்கத் துவங்கினால் நம் ஊர், நாம் வாழ்ந்த வீடு, படித்த பள்ளி என்று தொடரும் நினைவில் ஒரு இடத்தை மட்டும் நம்மால் மறக்க முடியாது அது தொழுகை பள்ளி அதிலும் நோன்பு காலத்தில் சங்கத்து பிள்ளைகளின் “பைத்”.

நோன்பு வந்துவிட்டால் மூன்று மணிக்கு “தப்ஸா” பக்கிரிஷா தூங்கிக் கொண்டிருக்கும் அனைவரையும் எழுப்ப ஆரம்பித்து விடுவார். பள்ளிவாசலில் தரவிஹ் தொழுகைக்குப் பின்பு மதரஸாவில் நண்பர்களுடன் படுத்துத் தூங்க விருப்பமாக இருந்தாலும் வீட்டில் வீட்டில் அனுமதிக்க மாட்டார்கள். சில தடவைகள் நண்பன் செய்தாமுது கூட இருந்தால் அனுமதிப்பார்கள். முதலில் செய்தாமுது பற்றி சொல்ல வேண்டும். நான் உயரம், அவன் ரொம்ப கம்மி. இருவரும் 8ஆம் வகுப்பு படிக்கும்போது சென்னை சென்றோம், புகை வண்டியை வாழ்வில் முதலில் அப்போதுதான் பார்க்கிறேன். இருவரையும் TTR விழுப்புரத்தில் இறக்கி சோதனை செய்ய வேண்டுமென்றார். காரணம் பள்ளி கட்டன சலுகையில் பயணம் செய்ததால் சோதனை, ஒரே வயது இவ்வளவு உயர வித்தியாசம், அவருக்கு வித்தியாசமாக தெரிந்து விட்டது. பிறகு எப்படி எங்களை பயணம் செய்ய அனுமதித்தார் என்பது புகை மாதிரி தெரிகிறது. சரியாக சொல்ல ஞாபகமில்லை.
இறை நம்பிக்கையில் அவன் கெட்டி நோன்பு 30/30 பிடித்துவிடுவான். நான் 3/30தான். ஆனால் நான்தான் அவனுடைய ஒரே நண்பன். என்னுடைய பள்ளி Indoor & outdoor  விளையாட்டுகள் அனைத்திலும் நான்தான் சாம்பியன், பரிசுப் பொருட்களை வாங்க மேடையேறும்போது செய்தாமுது கைகள்தான் ஓங்கி ஓங்கித் தட்டிக்கொண்டிருக்கும்.
“பைத்” ஓதும்போது கமால், குத்புதீன், நஸீர், முஸ்தபா என்னையும் 3-வது அணியில் போட்டுவிடுவார்கள். SSLC படித்துக்கொண்டிருக்கும் எனது சீனியர்கள்தான் முதல் வரிசை. அவர்கள் பைத் ஓதும்போது பல்லவியை மட்டும் நாங்கள் ஓத வேண்டும். பைத் பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டு தெற்குத் தெருவில் நுழைந்து துபாஷ் தெரு வரும்போது இரண்டாவது அணி ஓத ஆரம்பிக்கும். சந்துகளுக்குள் சீனியர்கள் வர மாட்டார்கள் அவர்கள் திருப்பத்தில் நின்று கொண்டு எங்களை சந்துக்குள் அனுப்புவார்கள், பல்லவியை சரியாக பாடிக் கொண்டு வட்டமடித்து வரவேண்டும். அப்போதுதான் எங்கள் சேட்டைகளை ஆரம்பிப்போம், கமால் எப்போதுமே அண்ணா வாத்தியார் மகன் சாதிக் தொப்பியை தட்டிவிடுவான், நான் ஊனாநாகூர் கனி தொப்பியை கீழே தள்ளிவிடுவேன். அவரகள் தேடிக் கொண்டிருக்கும்போது மெயின் பைத்-ல் நாங்கள் சேர்ந்துகொள்வோம்.  சாதிக், ஊனாநாகூர் கனி லேட்டாக வந்ததால் சீனியர்களிடம் அடி கிடைக்கும்.
எங்கள் மூன்றாவது அணி ஒரு சந்தர்ப்பத்தில் இரண்டாக பிரிந்து கமால் ஒரு அணியின் தலைவன், நான் எதிர் அணியில்! பைத் காக்காத் தோப்பு தெரு வந்தவுடன் நானும் செய்தாமுதும் மெதுவாக வீட்டுக்குள் நழுவிவிடுவோம். கமால் அப்துல்காதரைக் காணோம் என்று காட்டிக் கொடுத்துவிடுவான்.
அந்த அனுபவங்களின் சுவைகள் எல்லையற்றவை. வாழ்க்கை மாறுந்தோறும் வண்ணங்கள் மாறுகின்றன. பால்ய பருவத்து நினைவுகள் நம் கண்முன் வந்து நிற்கும்போது அந்த அனுபவத்தின் விசித்திரம்தான் எண்ண மாயம் செய்கிறது.
தம்பி சாகுல்கமீது கமால் இறந்து செய்தி சொன்னபோது என்னுள் பதிந்திருக்கும் தடையங்கள் மெல்ல மெல்ல ஒரு சித்திரத்தை உருவாக்கி திரும்ப திரும்ப பைத்தின் நினைவுகளை கொண்டு வந்து சேர்க்கிறது.
 
Advertisements