பிப்ரவரி, 2011 க்கான தொகுப்பு

கிச்சன் நாரதர்

Posted: பிப்ரவரி 26, 2011 in பத்தி, uyirmmai.com

இமெயில் பார்க்காமல் இருப்பதற்கு ஒரு தைரியம் வேண்டும். புத்தகக் கண்காட்சியில் வாங்கி வந்த புத்தகங்களைக் கிடைத்த நேரத்தில் படித்துவிட்டுத்தான் மெயில் பார்ப்பது என்று கஷ்டப்பட்டு ஒரு நாளைக் கடத்திவிட்டேன். ஒன்றும் மெயிலில் விஷயமிருக்காது என்று திடமாக நினைத்துக் கொண்டிருக்கும்போதே அப்படி மெயில் வந்திருக்குமோ என்று வேறு ஆவலாக இருந்தது. கம்ப்யூட்டர் இருக்கும் அறையில் திரும்பத் திரும்ப யாரையாவது அழைத்துப் பேசிக் கொண்டிருந்தேன். புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டேன். எனக்கு ஏதோ கற்பனை ஓடிக் கொண்டிருப்பதாகவும் நினைத்துக் கொண்டேன். எனது கவனத்தை எதுவும் திசை திருப்பவில்லை. மெயில் திறப்பதா வேண்டாமா என்ற நினைப்பு மட்டுந்தான் கவனத்தில் நிரம்பியிருந்தது.

ப்ரீடம் என்று ஒரு சாஃப்ட்வேர் இருப்பதாக என் நண்பர் ஒருவர் சொன்னார். அது மெயில் பார்க்க அனுமதிக்குமாம். ஆனால் இன்டெர்நெட் இல்லாமல் போய்விடும். மறுபடியும் இன்டெர்நெட் பார்க்க நினைத்தால் அது கொஞ்ச நேரம் தயங்கிவிட்டுத்தான் அனுமதிக்குமாம். போகட்டும், ஒரு கிளிக் தானே என்று திறந்தேன். சென்னை வந்து திரும்பும் வரை மெயில் திறந்து பார்க்காமல் இருந்ததில் அவ்வளவு விஷேசமான செய்திகள் எதுவுமில்லை.

 

Inaugural Hawker Master Award முடிவுகள் வந்திருந்தன.

உணவுக் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் மனதை அறியும் மந்திரக் கோல்கள் வைத்திருந்த காலம் மலையேறிவிட்டது. உலகில் எந்த மூலைக்குச் சென்றாலும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களும், தேவைகளும் புரியாத மொழி பேசி நிற்கிறது. புதிய புதிய ஆயுதங்கள் உணவுத் தொழிலைத் தாக்குகின்றன. அத்துடன் உணவு சமைப்பதில் சுவையும், ஆரோக்கியமும் ஒரே நேர்க்கோட்டில் அமைவது பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் போட்டிக்கு சிங்கப்பூர் கிளாசிக்கல் உணவுகள் சிக்கன் ரைஸ், ரொட்டி பரோட்டா, பக்சார்மீ நாஸிலெமாக், லக்ஷா, சாக்வேதியோ தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன.

இதில் பேராசிரியர் டாமிகோ (Tammy Koa)உட்பட மலாய் சீனப் பத்திரிகைகளின் உணவுப்பகுதி ஆசிரியர்கள் நடுவர்களாக இருந்தார்கள்.

பொதுமக்கள் மொத்தம் 14,000 நாமினேஷன்கள் அனுப்பியிருந்தனர்.

அவற்றுள் 3 கடைகள் ரொட்டி பரோட்டா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. மூன்று கடைகளிலும் பரோட்டாவை ருசிபார்த்த நடுவர்கள் எதிர்பார்த்த சுவை அளவை அந்தக் கடைகள் பிரதிபலிக்கவில்லை என்று முடிவு செய்து மற்ற 5 பிரிவுக்கும் பதிவுகளை அறிவித்தார்கள். பரோட்டாவின் தரம் குறைந்து வருவதும் அதை இன்னும் மேம்படுத்த முயற்சிகள் தேவை என்பதும் இந்தப் போட்டி முடிவுகளின் கருத்தாக்கமாக அமைந்தது.

அதோடு ஒரு அங்காடி உணவகத்தில் சமைக்கும் சமையல்காரர் ஓய்வு பெறும்போது இன்னொரு திறமையுள்ள நபர் அந்த இடத்தை நிரப்புவதில்லை என்ற செய்தியும் பரவலாகப் பேசப்பட்டன.

மிகச்சிறந்த சமையல் வல்லுநர்கள் உலக அளவில் புகழ் பெற்றவர்கள். உணவுகளை மட்டும் உண்பதற்கு சுற்றுப் பயணிகள் சிங்கப்பூர் வருவதில்லை. இங்குள்ள தனித்தன்மை உணவுகளைத் தேடி ருசிக்கும் பலர் வருகிறார்கள்.

இந்த மெயிலை எனக்கு அனுப்பியிருந்த (Mr.Ng) இங் உங்கள் கடைக்கு எத்தனை நாமினேஷன்கள் வந்தன என்று கேட்டிருந்தார். அவர் உணவு விளம்பரத் துறையில் தனி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். புத்தக வாசிப்பு பழக்கமுள்ளவர். சீனப் பெருநாளுக்கு அவருடைய அலுவலக ஊழியர்கள் மற்றும் நண்பர்களுடன் என்னையும் அழைத்திருந்தார். இந்தியாவில் விளம்பர நிறுவனம் அமைக்கும் முயற்சியில் இருக்கிறார். சென்னை புத்தகக் கண்காட்சியில் அவருக்குச் சில புத்தகங்கள் வாங்கி வந்திருந்தேன். அவருக்கான சில தகவல்களையும் குறித்து வைத்திருந்தேன். டின்னர் முடிந்தவுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். சமையலில் இந்தியாவில் பலவிதமான எண்ணெய் உபயோகம் பற்றிக் கேட்டார்.

தென்னிந்திய, வட இந்திய சமையலில் கடலை எண்ணெயும், கிழக்கில் கடுகு எண்ணெயும், மேற்குக் கடற்கரை, தெற்குக் கடற்கரை மாநிலங்களில் தேங்காய் எண்ணெயும் தற்போது பரவலாக சூரியகாந்தி, சோயா, பாமாயில் என்று சமையலில் புகுந்துவிட்டன. அந்தப் பகுதியில் அபரிதமாகக் கிடைக்கக் கூடிய எண்ணெய் வித்துக்கள் சார்ந்து அதன் உபயோகங்கள் இருக்கின்றன என்றேன். அவர் வட இந்திய சுற்றுப்பயணம் செய்தபோது பொதுவாக டெல்லி, உத்தரப் பிரதேசம், ஓரிஸ்ஸா மற்றும் தமிழ்நாட்டில் கூட வட இந்திய உணவுகளை ‘‘பஞ்சாபி’’ திஷீஷீபீs என்று சொல்வதாகச் சொன்னார். பஞ்சாப் அடுப்பின் (தந்தூர்) பெயரில்தான் ‘தந்தூரி’ சிக்கன் வகைகள் பெயர் பெற்றதைச் சொன்னேன்.

இந்தியாவில் இரவில் பால் பொருட்கள் சாப்பிடுவது தென்கிழக்கு ஆசியாவின் உணவுப் பழக்கங்களில் மாறுபட்ட விஷயமாக அவர் குறிப்பிட்டார்.

ஒரு பெரிய பெட்டியில் அலுவலக ஊழியர்களுக்கு ‘‘அங்பாவ்’ ((Hangbao) அவர் போட்டு வைத்து எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். பொதுவாகத் திருமணம் ஆகாதவர்கள் 40 வயதைக் கடந்துவிட்டவர்களாக இருந்தபோதும் அங்பாவ் கொடுக்கும் பழக்கம் உள்ளது. புதிய திருமணத் தம்பதிகளுக்கும் கொடுக்கிறார்கள். உண்மையில் சீனக் கலாச்சாரப்படி அவர்களுக்கு இரண்டு சிவப்பு மெழுகுவர்த்திகளைக் கொடுத்து வாழ்வில் வெளிச்சத்தை துவக்கி வைத்து வாழ்த்துவதுதான் சரியான முறை என்று சொன்னார். ‘அங்பாவ்’ கொடுப்பதில் முக்கியமாக சென்ற வருடத்தில் கொடுத்த அங்பாவ்’ இந்த வருடம் குறையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இவர்களுடைய கலாச்சாரத்திலும் அங்பாவ்’ தொகையை ‘மாமிகளே’ நிர்ணயம் செய்கிறார்கள் என்பதை மாமாக்களிடம் ‘அங்பாவ்’ வாங்கும் குழந்தைகள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

15 நாள் கொண்டாட்டங்களில் ஒரு நாள் எங்கு பார்த்தாலும் ‘கரும்பை’ வாங்கி வீட்டுக்குக் கொண்டு செல்கிறார்கள் ஏன் என்று கேட்டேன். கரும்புத் தோகையிலிருந்து ஆரம்பித்து முழுக் கரும்பையும் தீ சட்டியில் போட்டு எரித்து விடுவோம் என்றார். சீனக் கொண்டாட்டங்களில் ‘கிச்சன் நாரதர்- Zao Jun’s என்று ஒருவர் இருக்கிறார். அவர் 23 வது நாள் அனைத்து வீடுகளுக்கும் விஜயம் செய்து அவர்களுடைய அடுப்படியைப் பார்வையிட்டு, உணவுப் பொருட்களை எப்படி உபயோகப் படுத்தியிருக்கிறார்கள். அடுப்படியைச் சுத்தமாக வைத்திருக்கிறார்களா போன்ற விபரங்களைச் சேகரித்து சொர்க்கத்திலுள்ள The Jude emperor இடம் சென்று பட்டியல் வாசிப்பாராம். அதன் அடிப்படையில் Jude emperor அந்தக் குடும்பத்தை தண்டிப்பதா அல்லது வெகுமதி கொடுப்பதா என்பதைத் தீர்மானிப்பாராம். அதனால் இந்த கிச்சன் நாரதர் Zao Jun’s ன் காகித உருவப் படங்களைத் தேன் தடவி அல்லது கரும்பைக் கூட வைத்து எரித்து Jude emperor இடம் இனிப்பான செய்திகளை சொல்வதற்கும் பசையாக ஒட்டும் அரிசி கேக்கைத் தடவி அவரிடம் குடும்பத்தைப் பற்றித் தவறாகச் சொல்லாமல் வாயை ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளச் செய்வதற்கும் சடங்குகள் செய்வார்களாம்.

மிஸ்டர் இங் ‘‘அங்பாவ்’’ கொடுத்து முடித்த பிறகும் அதிகமான கவர்கள் மிஞ்சியிருந்தன. சீனப் பெருநாள் முடிந்து முதல்நாள் வேலைக்கு வரும் ஊழியர்களுக்கு மறுபடியும் கொடுப்பார்களாம்.

கவரைக் கொடுத்துவிட்டு அந்த வருடத்தை துவக்கி வைப்பது ஒரு நல்ல முதலாளியின் கடமை என்றார்.

இன்னொரு மெயில் வந்திருந்தது.

அங்மோ கியோவில் ஒரு உணவுக்கடை இருக்கிறது. அங்கு சாப்பிட்டுவிட்டு பில் கட்ட மறந்து போனவர்களையும் தப்பித்துப் போனவர்களையும் CCTV கேமராவில் பதிவு செய்து அவர்களுடைய முகத்தை பிரிண்ட் போட்டு ‘EAT and run – Dinner’s’என்ற தலைப்பிட்டு ஒட்டி வைத்திருக்கிறார்களாம். அட, இதுவரை நம் கண்ணுக்குப் படவில்லையே என்று நேரே போய்ப் பார்த்தேன். அந்தக் கடை கிளேபாட் நண்டுக்குப் புகழ் பெற்றது. ஒவ்வொரு டேபிளுக்கும் நேராக கேமரா தொங்குகிறது.

போட்டோவில் உள்ளவர்களைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். வேண்டுமென்றே ஏமாற்றிவிட்டுச் சென்ற முகங்களாகத் தெரியவில்லை.

சப்ளையர் ‘இதில் யாராவது உங்கள் கண்ணில் பட்டால் போன் அடிங்க’ என்று சொல்லிவிட்டு போட்டோவில் உள்ளவர்களை ‘‘சீ பா வாங்கேன்’’ என்றார்.

thanks: உயிரோசை (http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=3982)