புத்தகங்களை அப்படியே சாப்பிடுவேன்—மோனோலித்தின்

Posted: பிப்ரவரி 2, 2021 in வகைப்படுத்தப்படாதது

ஏதேன் தோட்டம் மத்திய கிழக்கில் இருந்ததாக சமய நூல்கள் சொல்வதைக் கணக்கிலெடுத்துக் கொண்டால் ஆதாம் ஆப்பிளைச் சாப்பிட்டிருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை. ஏனெனில் ஆப்பிள் மத்திய ஆசியாவில் விளைந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றிருக்க அக்காலகட்டத்தில் நூறு சதவீதம் சான்ஸே இல்லை. வேண்டு மானால் பேரிக்காய் அல்லது மாதுளம் பழம் சாப்பிட்டிருக்கலாம் என்கிறார்கள்.எப்படியோ நன்மையோ மையோ தான் விரும்பியதை சாப்பிட மனித மனம் விரும்புவதை ஆரம்பித்து வைத்தவர் ஆதாம்.சுவை நுட்பம் உள்ளவர்கள் ருசித்து சாப்பிடும் சிலராகவும் பசிக்காக நுகர்வோர் பலராகவும் பயிற்சியும் திறனும் இருப்பவர்கள் சுவையாக சமைக்க வல்லவர்களாவும் சமையல்கலை ஆதிகாலந்தொட்டே சுற்றிச் சுழல்கிறது. விருப்பமான உணவுகளுக்காக உயிரை இழந்த மன்னர்களும் வரலாற்றில் இருக்கிறார்கள்.

மன்னன் 16ஆம் லூயி 1792இல் பிரஞ்சு புரட்சியாளர்களால் Varennes என்ற இடத்தில் சிறைபிடிக்கப்பட்டார். பன்றிக்கால் சூப் சாப்பிடுவதற்கு SAINTE MENEHOULD என்ற உணவகத் திற்குச் செல்லும் உணவுப் பழக்கத்தை மோப்பம் பிடித்து அவரைக் கைது செய்தார்கள் .சோவியத் ரஷ்யாவின் முன்னாள் அதிபரான ஸ்டாலினுக்கு வாழைப்பழம் என்றால் உயிராம். அவருடைய சுயசரிதையை எழுதியவர், ‘ஸ்டாலின் கோபத்தின் உச்சிக்கு செல்வது பெரும்பாலும் தரமில்லாத வாழைப்பழம் சாப்பிடும்போதுதான்’ என்கிறார்.ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்தபோது, பிடில் வாசித்ததாகச் சொல்லப்படும் மன்னர் நீரோ உண்மையில் வாசித்தாரோ இல்லையோ காளான் உணவுகளின் பிரியராக இருந்திருக்கிறார். ஆட்சியைப் பிடிக்கவும் காளான் உணவு அவருக்கு உதவியது. தன் வளர்ப்புத்தந்தை Claudius -ஐ அதே காளான் உணவில் அவருடைய நாலாவது மனைவி மூலமாக விஷம் வைத்துக் கொன்று நீரோ அரியணை ஏறினார் என்பது வரலாற்றுக் குறிப்பு.

பிலிப்பைன்ஸ் அதிபராக இருந்த மார்க்கோஸ் வெறுமனே சார்டின், காய்கறிகள் சாப்பிடும் பழக்கம் உள்ளவர். அதிலும் முருங்கைக்கீரை வகைகளுக்கு அடிமை. அது வயதாவதைத் தடுக்கக்கூடியது என்று யாரோ ஆருடம் சொல்ல, கடைசி வரை இதை அவர் விடவில்லையாம்.மா சே துங் உணவின் தரத்தில் கவனமாக இருந்திருக்கிறார். நாட்டின் சுத்தமான நீர் நிலைகளின் நீரில் விளைந்த நெல்லிலிருந்து கிடைக்கும் கைகுத்தல் அரிசி (அதுவும்முனை முறியாமல்)தான் அவர் விருப்பம். மாவோவுக்காவே அரிதான மீன் வகைகள் மற்றும் சீனாவின் தெற்கு நகரமான Hubei -லிருந்து சுமார் 600 கிலோமீட்டர் தூரத்திலிருந்து ஆக்ஸிஜன் ஏற்றப்பட்ட தண்ணீர் பைகள் மூலம் உயிரோடு கொண்டு வரப்படுமாம்.
ரோமாபுரி மன்னன் Vitellius சரியான சாப்பாட்டு இராமன் என்று சரித்திரம் படித்தவர்களுக்குத் தெரியும். அதிலும் மயில் மூளை, பிளமிங்கோவின் நாக்கு போன்றவை இடம்பெறும் விருந்துகளில் கலந்துகொள்ள எப்போதும் தயாராக இருப்பார். அந்த விருந்துகளுக்குத் தன்னை அழைக்கும் குடும்பங்களுக்குப் பரிசு, பட்டங்கள் கொடுத்து ஊக்குப்படுத்துவாராம்.மிக விநோதமான உணவுப் பழக்கங்களையும் சரித்திரத்தில் பார்க்க முடிகிறது. எத்தியோப்பிய அரசர் இரண்டாம் மேனோலித் நீண்ட காலம் வாழும் ஆசையில் பைபிள் புத்தகத்தை கிழித்துத் தின்னும் பழக்கம் கொண்டிருந்தாராம். அது உண்மையோ பொய்யோ 2002இல் உருளைக்கிழங்கு ஸ்டார்ச்சில் தயாரித்த Eat the Book என்ற புத்தகத்தைப் பதிப்பிக்க பதிப்பாளருக்கு மேனோலித்தின் பழக்கம் தூண்டுகோலாக அமைந்தது.


அதிகாரத்தில் இருப்பவர்கள் ஒரு பக்கம் எதிரிகளோடு மல்லுக் கட்டுவதில் மும்முரமாக இருந்தாலும், இன்னொருபக்கம் பிரியமான உணவுகளை ருசிப்பதிலும் விடாப்பிடியான ஆர்வத்துடன் இருந்திருக்கிறார்கள். அதைச் சமைப்பதில் தேர்ந்தவர்களைத் தங்களுடனேயே வைத்துக்கொள்வதற்குப் பலவிதமான வழிமுறைகளைக் கையாண்டிருக் கிறார்கள்.அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் Samuel Fraunces என்பவரை நீண்ட நாட்களாகத் தன் சமையல்காரராக வைத்திருந்திருக்கிறார். அவர் ஓய்வு பெற்ற பிறகு அடிமைத் தொழிலாளி ஹெர்க்குலஸ் என்பவரின் சமையலில் மயங்கி அவரை சமையல்காரராக வைத்திருந்திருக்கிறார். ஆனால் பென்சில்வேனியா வின் சட்டப்படி ஒரு அடிமைத் தொழிலாளி தொடர்ந்து ஆறு மாதங்கள் ஒரு இடத்தில் வேலை பார்க்க முடியாது. எனவே அவரை ஆறு மாதங்களுக்குள் வெர்ஜினியாவுக்கு மாற்றல் செய்து திரும்ப அழைத்துக் கொள்வாராம். இன்று அரசு அலுவலகங்களில் நாம் பார்க்கும் இடம் மாற்றும் தந்திரங்களுக்கு இப்படி பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன.


பிரபலங்களின் வாழ்க்கையை விரிவான வரலாறாக எழுதினால், அவர்களின் சமையல்காரர்களுக்குக் கண்டிப்பாக இடம் ஒதுக்கியே ஆக வேண்டும். நம்பிக்கைக்குரியவர்கள், நம்பிக்கைத் துரோகிகள் என இரண்டுவிதமான பார்வைக்கும் சமையல்காரர்கள் உட்படுத்தப் பட்டிருக்கிறார்கள். ரஷ்ய அதிபர் ஸ்டாலின் விரும்பும் உணவைப் பல சமையல்காரர்கள் தனித்தனியாகச் செய்து முடித்துக் காத்திருப் பார்கள். பிறகு அவரே ஒரு சமையல்காரரைத் தேர்ந்தெடுத்து அவர் செய்த உணவைச் சாப்பிடுவார். மாசேதுங் இவ்விஷயத்தில் நேரெதிர். தன் மெய்க்காப்பாளர்கள் உணவைப் பரிசோதித்து தனக்குத் தருவதை எப்போதும் அனுமதி வழங்கியதில்லை .1967லிருந்து 1989 வரை ரோமானியாவை ஆண்ட Nicolae Ceausesue தனக்காக உணவு வண்டி ஒன்றை வைத்திருப்பாராம். அவரது நேரடிக் கண்காணிப்பில் உணவு தயாராகும். அந்த உணவை வண்டியில் வைத்து பூட்டி சாவியைத் தன்னிடமே வைத்துக்கொள்வா ராம். யாருக்குமே அந்தப் பூட்டின் சங்கேத எண் தெரியாதாம்.சர்வாதிகார அரசியலில் உச்சத்தைத் தொட்ட ஹிட்லரை எவ்வளவு சந்தேகங்கள் ஆட்டிப்படைத்திருக்கும்? ஹிட்லர் 1923இல் தன்னுடைய பிறந்த நாளை ஒரு வீட்டில் நண்பர்களுடன் கொண்டாடினார். ஆனால் பிறந்த நாள் கேக்கில் ஒரு துண்டுகூட ஹிட்லர் சாப்பிட வில்லை. ஹிட்லரின் மெய்க்காப்பாளர் Ernst Hanfstaengl இதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, “நீயெல்லாம் ஒரு மெய்க்காப்பாளரா? இந்த வீட்டின் உரிமையாளன் ஒரு யூதன் என்பது உனக்கு தெரியாதா” என்றாராம். இந்த மெய்க்காப்பாளரும் கடைசியில் ஹிட்லரின் சந்தேகத்துக்குள்ளாகி, விலக்கி வைக்கப்பட்டார்.
உலகையே அச்சுறுத்திய செங்கிஸ்கானையும் ஒரு அச்சம் ஆட்டிப் படைத்தது. தன்னுடைய பன்னிரெண்டாவது வயதில் தன் தந்தையை ஒரு சமையல்காரர் விஷம் வைத்துக் கொன்றதை மறக்கவே முடிய வில்லை. அதனால் தன் சமையல்காரர்களை எப்போதும் தீவிரக் கண்காணிப்பில் வைத்திருப்பாராம்.


உகாண்டாவின் சர்வாதிகாரி இடிஅமீன் மனித மாமிசம் சாப்பிடுபவர் (cannibal)) என்று நேரில் பார்த்ததுபோல எல்லோரும் பேசுகிறோம். ஆனால் அவர் நர மாமிசம் சாப்பிட்டதை தான் பார்த்ததில்லை என்கிறார் அவருடைய சமையல்காரர் Otonde Odera. இடிஅமீனின் பேச்சுதான் நரமாமிசக் கதைகளைக் கிளப்பியிருக்கவேண்டும். ‘உன்னை மாற்றிவிடுவேன். டிஸ்மிஸ் செய்து விடுவேன்’ என்ற ரீதியில் இடி அமீன் யாரிடமாவது கோபப்படும்போதெல்லாம் “உன் இதயத்தை தின்று விடுவேன். உன் குழந்தைகளைக் கொன்று தின்ன ஆசையாக இருக்கிறது” போன்ற வார்த்தைகளும் தவறாமல் வெளிப்படும் என்கிறார் அவரிடம் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த Henri Kyemba..இந்த வார்த்தைகளை பரப்பி நரமாமிசம் அளவுக்கு கொண்டு சென்றது மீடியாக்கள் வடகொரியாவின் ராணுவ ஆட்சியாளராக இருந்த இரண்டாம் கிம் ஜோங் தான் நீண்ட நாட்கள் வாழ தன் தந்தையர் பெயரில் ஒரு ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கினார். அங்கு பணிபுரிந்த டயட்டீசியன்ஸ்களிடம் ரிசல்ட் கேட்டு நச்சரிப்பாராம். அதில் யாரோ ஒரு ஆராய்ச்சியாளர் நாயின் உறுப்பைத் தொடர்ந்து சாப்பிடும்படி கிம்முக்கு சிபாரிசு செய்திருக்கிறார். குறைந்தபட்சம் 7 சென்டி மீட்டருக்குக் குறையாமல் இருக்க வேண்டும் என்று நிபந்தனையும் விதித்தாராம். இரண்டாம் கிம் ஜோங் உடல் நலத்தைப் பராமரிப்பதில் அதே கவனம் எடுத்துக்கொண்டாலும் அது காலங்கடந்த முயற்சியாகவே இருந்தது. நாற்பது வயதுகளில் கிம் நீரிழிவு நோயால் மிகவும் கஷ்டப்பட்டார் ,நாயால் வந்த வினைப் பயன் .

பின்னூட்டங்கள்
  1. Jaikumar Priya சொல்கிறார்:

    சுவாரசியமான செய்திகள் 👏👏👏

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s