விருதுகள் பலபெற்ற எழுத்தாளர் ஷாநவாஸ் – மா.அன்பழகன்

Posted: ஜூன் 18, 2021 in வகைப்படுத்தப்படாதது

ஒருவரை அல்லது ஒரு குடும்பத்தாரை நம் இல்லத்திற்கு அழைத்தோமெனில் பகல் உணவுநேரத்தில் அழைப்பதா? இரவு விருந்துக்கு அழைப்பதா? என்றுதான் யோசிக்கிறோம். ஆனால்முன்பெல்லாம் அப்படியேதும் பெரிதாகத் திட்டமிடல் இல்லை. எதிர்பாராதவிதமாக வீட்டுக்குயாரேனும் வந்துவிட்டால் இருப்பதைக் கொடுத்து உண்ணச் செய்யாமல் அவர்களைஅனுப்பமாட்டார்கள். அந்த அளவுக்குப் பிறருக்குக் கொடுக்கக்கூடிய நிலை ஏற்படலாம்என்றெண்ணிச் சற்றுக் கூடுதலாகவே சமைப்பார்களாம். ஆனால் இப்போது தலைகளை எண்ணி, அளந்து, நிறுத்துச் சமைக்கிறோம்.

சிங்கப்பூரில் ‘உணவு’ – தயாரிப்பு முறை, அதன் சிறப்பு என்று இன்று சொன்னால் அது சிராங்கூன்டைம்ஸ் இதழின் இன்றைய முதன்மை ஆசிரியர் திரு. ஷாநவாஸ் அவர்களின் நினைவுதான் நமக்குஉடனே வரும். தமிழகத்தில் இருந்தபோது பணியில் இருந்தோம்; பொருளீட்டினோம்; தகப்பனார்வசித்து வந்த சிங்கப்பூருக்கு வந்துவிட்டோம்; பிள்ளைகள் எல்லோரும் வளர்ந்துவிட்டார்கள். அவர்களுக்குக் கல்வியைக் கொடுத்து, பொருளீட்டும் வழியைக் காட்டிவிடவேண்டும்; திருமணத்தைச் செய்து வைக்கவேண்டும் போன்ற பொறுப்புகள் இருக்கின்றன. தொழில் செய்யும்நமக்கு ‘இலக்கியம்’ ‘எழுத்து’ – இவையெல்லாம் தேவையா அதெல்லாம் நமக்கு ஒத்து வராது; அத்துடன் அதில் வெற்றி பெறவும் முடியாது என்றெல்லாம் தயக்கம் காட்டாமல்; குடும்பச் சூழல்கருதி யோசிக்காமல் எழுதத் தொடங்கினாரே – அதுதான் இதைப் படிப்பவர்களாகிய நமக்குஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கிறது. எழுதுவதற்கு எதுவும் தடையாய் இருந்ததில்லைஎன்பதை நினைவூட்டி நமக்கு ஓர் முன்னுதாரண மனிதராக விளங்குகிறார் ஷாநவாஸ்.

தமிழ்நாடு முகவை மாவட்டம் நத்தம் அபிராமம் எனும் கிராமத்தில் 1961ஆம் ஆண்டு பிறந்தார். மலாயா என்று இந்த நாடு ஒன்றாக இருந்தபோது 1940களில் அதாவது இரண்டாம் உலகப்போரின்போது இவரது தந்தை பினாங்குக்கு அழைத்து வரப்பட்டவர். பின்னர் சிங்கப்பூருக்குக்குடிபெயர்ந்தது வணிகம் செய்து வாழ்ந்து வந்தவர்

ஆனால் ஷாநவாஸ் தாயாருடன் தமிழகத்திலேயே  ஊரில் படிப்பைத் தொடங்கி திருச்சி ஜமால்முகமது கல்லூரியில் இளங்கலை பட்டத்தையும், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில்முதுகலைப் பட்டத்தையும் படித்து முடித்தார்.

படிக்கும்போதே கவிதை எழுதும் ஆர்வம் கொண்டவராய்த் திகழ்ந்தார். அத்துடன் ஜமால் முகமதுகல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் புலவர் நைனா முகமது அவர்கள்தான் ஷாநவாஸுக்குத் தமிழ்இலக்கிய ஆர்வத்தைத் தூண்ட முதற்காரணமாய்த் திகழ்ந்தவர். அதனால் அவரையே தம் இலக்கியப்பயணத்தின் முதல் குருவாக  ஏற்றுக்கொண்டுள்ளார்.

படிக்கும்போதே இடதுசாரி சிந்தனையுள்ள பொதுவுடமை இயக்கத்தின் துணை அமைப்பாகியதமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் சேர்ந்து மானாமதுரை கிளையின் செயலாளர்பொறுப்பேற்றுச் சொற்பொழிவு, நாடகம், பட்டிமன்றம் போன்றவற்றிற்கு மேடைகளை உருவாக்கிக்கொடுத்ததோடு தானும் அவற்றில்  பங்கேற்றவர். ஒருமுறை குன்றக்குடி அடிகளார் தலைமை வகித்தபட்டிமன்றத்தில் பங்கேற்றதைப் பெருமையுடன் நினைவுகூர்கிறார்.

தமிழகத்தின் புகழ்பெற்றக் கவிஞர் மீரா அவர்களின் இதழில் ‘அன்னம் விடு தூது’ என்ற கவிதையைஅன்றே எழுதித்தம்  இலக்கியப் பயணத்தைத் தொடங்கியவர். நாடகம் எழுதி இயக்கி நடித்தும்இருக்கிறார்.

சிறுகதை மன்னன் ஜெயகாந்தன், பொதுவுடமை இயக்க ஊடவியலாளர் அறந்தை நாராயணன், திரைப்படப் பாடலாசிரியர் கவி கா. மு. ஷெரிப் போன்ற பெரிய  சாதனையாளர்களுடன் பழக்கமும்அறிமுகமும் கிடைத்தை எண்ணிப் பெருமைப்படுகிறார். குறிப்பாகக் கவியரசு கண்ணதாசன்அவர்களைச் சந்திக்க வேண்டும் என்ற அவாவில் மூன்று நாள்கள் கவிதா விடுதியில் தங்கி இருந்துசந்தித்துப் பழகியதை ஒரு பேறாகவே கருதுகிறார்.

கலை இலக்கியப் பெருமன்றத்திற்காகக் ‘கிருதயுகம்’ எனும் திங்கள் இதழை நண்பர்களுடன்இணைந்து கையெழுத்துப் பிரதியாக நடத்தியவர்.

தமிழகத்தில் மத்திய அரசுத்துறையில் உத்தியோகத்தில் இருந்தவர், தமது தந்தையுடன் சேர்ந்துபொருளீட்டலாம் என்ற எண்ணத்தில்,  தமது 34ஆம் அகவையில் அதாவது 1995ஆம் ஆண்டுசிங்கப்பூருக்கு வந்தார். தொடக்கத்தில் நாணய மாற்று வணிகத்தில் ஐந்து ஆண்டுகள் பணிசெய்தார்.  ஈராயிரமாம் ஆண்டுகளுக்குப் பின் உணவகத் துறையில் நுழைந்தவர் இன்னும்அதிலிருந்து மீளவில்லை.

வகிதாபானுவை மணந்து , பிள்ளைகளுக்கு மணமுடித்து இன்று தனித்தனி சுதந்திரவாழ்க்கையை வாழ அவர்களுக்கு வழிவகுத்துக் கொடுத்துள்ளார்.

கல்லூரியில் படிக்கும் காலத்திலிருந்து, அவரிடம் இருந்துவந்த வாசிப்புப் பழக்கம்தான்பிற்காலத்தில் இவருடைய படைப்புகளைப் பிறர் படிக்கும் நிலைக்கு உயர்த்தியது எனலாம்.

இடைக்காலத்தில் தமிழர்களிடையே வாசிக்கும் பழக்கம் குறைந்திருந்தது என்பதை நாம்அறிவோம். ஆனால் கடந்த முப்பது நாற்பது ஆண்டுகளாய்ச் சென்னையில் புத்தகக் கண்காட்சிதொடங்கப்பட்டு மக்களிடையே வாசிக்கும் பழக்கத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். சிங்கப்பூரிலிருக்கும் நூலகத்திற்காகச் சில அதிகாரிகள் அக்கண்காட்சிக்குச் சென்று தமிழ்நூல்களைத் தேர்வுசெய்து வாங்கி வருகின்றனர்.

சென்னைக் கண்காட்சியில் ஒரு நூல் விற்பனையாளரை அணுகி ‘உங்களிடம் எந்த வகையானநூல்கள் அதிகம் விற்பனையாகின்றன?’ என்று கேட்டால், ஆரூடம், திரைப்படம், மற்றும்சமையற்குறிப்பு நூல்கள்தாம் நிறைய விற்பனையாகின்றன என்கிறார். ஆனால் நமது சிங்கப்பூர்ப்படைப்பாளர்கள், ‘என் நூல்களை வாங்கி நூலகங்களில் வாசிப்புக்கு வையுங்கள்’ என்று நூலகவாரியத்திடம் கேட்டால், அவர்கள் பிரச்சினையில்லா அனைத்துச் சிங்கப்பூர்படைப்பிலக்கியங்களையும் வாங்கிக்கொள்கிறார்கள். புனைவு நூல்களாகிய சிறுகதைகளுக்குமுன்னுரிமை கொடுத்து, அதிகப் படிகளை வாங்குகிறார்கள். அதையடுத்துத்தான் சிறுவர்களுக்கானநூல்கள், கட்டுரை, கவிதை நூல்களை இந்த வரிசையில் வாங்குகின்றனர்.

இந்த வரிசை நூலகத்தாரால் உருவாக்கப்பட்டது எனக் கொள்ளல் தவறு. சிங்கப்பூரில் தேசியநூலகம் உள்பட சுமார் முப்பது வட்டார நூல்கங்களிலும் பொதுமக்கள் நூல்களை இரவல் வாங்கிப்படிக்க வசதி செய்து அரசு கொடுத்திருக்கிறது. மக்கள் அதிகமாக இரவல் எடுக்கும் நூல்களின்புள்ளிவிவரப்படித்தான் அவர்கள் தர வரிசையைக் கணக்கிடுகிறார்கள் என்ற உண்மையை நாம்புரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான் பல அமைப்பின் தலைவர்கள் அதிகமான நூல்களைநூலகங்களில் இரவல் எடுத்துப் படியுங்கள் என்று நமக்கு அறிவுறுத்தி வருகிறார்கள். இல்லையெனில் அரசின் பொதுப்பார்வையில் நமது தமிழ் நூல்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம்குறைந்துவிடுமோ என்ற அச்சம் நம்மிடையே நிலவுகிறது.

சட்டமேதை அண்ணல் அம்பேத்கார் லண்டனுக்குச் சென்றபோது ‘எங்கு உங்களுக்கு அறை எடுக்கவேண்டும்’ எனக் கேட்டபோது, ‘எந்த விடுதிக்கு அருகில் நூலகம் உள்ளதோ அந்த விடுதியில்அறையை எனக்கு உறுதி செய்துத் தாருங்கள்’ என்று சொன்னாராம்.

ஒரு படைப்பாளன் எந்த அளவுக்கு மதிக்கப்படுகிறான் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டைச்சொல்லப்போனால், ஜப்பான் நாட்டின் கரன்ஸி நோட்டில் அந்த நாட்டின் புகழ்பெற்ற ‘சொசுகிநாட்சு’ எனும் நாவலாசிரியரின் படம் இடம்பெற்றிருக்கிறது.

மாவீரன் அலெக்ஸாந்தர், ‘தீபே’ என்கிற பகுதியின் மீது படையெடுத்துப் போகுமுன் அந்தபிரதேசத்தின் சிறந்த கவிஞரான ‘பிண்டார்’ என்பவருக்கும், அவரது வாரிசுகளுக்கும் எந்தவிதபாதிப்பும் நேர்ந்திடக்கூடாதென்று தன் படையினருக்கு ஆணையிட்டானாம்.

ஷாநவாஸ் ஒரு படைப்பாளர் என்பதோடு சமையற்கலை தெரிந்தவராகவும் விளங்கி வருவதால்அவருடைய படைப்புகள் சற்று வித்தியாசமாகவும், படிப்பதற்குச் சுவையானதாகவும் அமைந்துள்ளன. அமெரிக்க நாடு விடுதலை பெற்றபின், அந்த நாட்டின் இலக்கியம், வர்த்தகம், அரசியல், மற்றும்அறிவியலில் சிறந்து விளங்கிய பெஞ்சமின் பிராங்க்ளின் அவருக்குத்தான் முதன் முதலில்தபால்தலை வெளியிடப்பட்டது.  அவ்வளவு சிறப்புடைய பெஞ்சமின், “இறந்த பிறகும் நீங்கள்மறக்கப்படாதிருக்க வேண்டுமானால், சிறந்த படைப்புகளை எழுதுங்கள்”  என்று சொல்லியுள்ளார்.

2008 வாக்கில் கவிமாலை நடத்திய கவிஞர்களின் ஒன்றுகூடல் மாதாந்திர நிகழ்வுக்குக்  கவிதையுடன் வருகை புரிந்தார்; பரிசையும் பெற்றார். அந்த நிகழ்வுதான் சிங்கப்பூர்  இலக்கியஉலகில் ஷாநவாஸ் முதன் முதலில் தடம் பதித்தது எனலாம். அதன்பின் சில ஆண்டுகள் கழித்துபடைப்புலகில் நுழைகிறார். உணவகத்தொழில் என்பது பொருளாதார வருவாய்க்குத்தான். ஆனால்இதயத்திற்குள் எழுதவேண்டும் என்ற துடிப்பிலேயே இருந்து வந்தார்.  மனநிறைவும் மகிழ்ச்சியும்பெருமையும் நூல் படைப்பதானால் கிடைக்கிறது என்றும்,  வாழ்வதன் அர்த்தம் அதிலேதான்பூர்த்தியாகிறதென்றும் ஆய்ந்து நம்பினார். அதனால்தான் இதுவரை பத்து நூல்களை நமக்குப்படைத்தளிக்க அவரால் முடிந்திருக்கிறது.

ஷாநவாஸ் தமிழகத்தைவிட்டு இங்கு வந்தபோது, மன அளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டார்எனலாம். காரணம் ஊரோடும் உறவோடும், நட்போடும் பெரிய அளவில் நெருக்கமாகப் பழகிவந்தவர். திடீரென்று அத்தனை அன்பிற்குரிய உறவுகளைப் பிரிந்து சிங்கப்பூர் வந்தபோது பைத்தியம்பிடித்தவர்போல் உளைச்சலில் இருந்த தம்மை மாற்றியது இலக்கிய ஈடுபாடுதான் என்கிறார்.

பொதுவாகப் பேச்சாற்றல் மிக்கவர்கள் நிகழ்காலத்தை வென்றவர்களாக இருப்பார்கள்.  ஆனால்சிறந்த படைப்பாளர்கள் எதிர்காலத்தை வென்றவர்களாக இருக்கிறார்கள். நமது எழுத்தாளர்ஷாநவாஸ் படைப்புலகில் நுழைந்து  குறுகிய காலத்திலேயே தம் கண்முன்னே பல பரிசுகளையும், விருதுகளையும் பெற்றவராய்த் திகழ்கிறார்.

நூல் உருவாக்கம் என்பது ஒரு சாதாரண செயலன்று. ஒரு நூலை எழுதித் தயாரித்துவிட்டால்  அவர்ஒரு படைப்பாளி எனும் பதவி உயர்வு பெற்றுவிடுகிறார். அவருக்குச் சென்ற இடங்களிலெல்லாம்பெருமை கிடைக்கிறது. படைப்பாளிக்கு ஒருநேரத்தில் மரணம் நிச்சயம்; ஆனால் அவருடையபடைப்புக்கு மரணமே இல்லை. பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இன்றும் நாம் தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம், கம்பராமாயணம் போன்ற வரலாறு படைத்த பல இலக்கியங்களைப்படித்தும்,  பின்பற்றியும், அதன் பெருமைகளைப் புகழ்பாடியும் வருகிறோம்.

பாரதியாருக்குப் பிடித்தமான இத்தாலியப் போர்வீரன் மாஜினி. “எனக்குத் தண்டனைகொடுப்பதற்காக ஆளில்லாத்  தனித்தீவில் கொண்டுபோய்விட எண்ணினால், அப்படியேசெய்யுங்கள். ஆனால் எனக்குக் கைநிறைய புத்தகங்களை மட்டும் கொடுத்துவிடுங்கள்” என்றானாம்.

கொடுங்கோலன் முசோலினிக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள்  முற்பட்டபோது மயக்கமருந்து கிடைக்கவில்லை. இதை அறிந்த முசோலினி புத்தகம் ஒன்றை வரவழைத்து ‘நான்படித்துக்கொண்டே இருக்கிறேன். அந்தநேரத்தில் உங்கள் அறுவையை முடித்துவிடுங்கள்’ என்றானாம்.   ஒருவன் ஒரு புத்தகத்தைப் படிக்கத் தொடங்கிவிட்டால் ஆழ்கடலில்முத்தெடுப்பதுபோல் வெளிச்சூழலை மறந்துவிடுகிறான். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றுதெரியாமலே புத்தகத்திற்குள் ஆழ்ந்து விடுவான். இதுதான் ஒரு நல்ல வாசகனின் அடையாளமும்நல்ல நூலின் அடையாளமும்.  இதிலிருந்து நூல்களின் அவசியத்தையும் அருமையையும் நம்மால்உணரமுடிகிறது.

கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்காதே என்பதைப் போல், தன் ஆசையை நிறைவேற்றஇயற்கையாகத் தன்னுள் எழுந்த சிந்தனையை அவ்வப்போது நூல்களாக வெளிப்படுத்திக்கொண்டே வந்தார் ஷானவாஸ். அதற்கு ஊடகத்துறை அவருக்கு ஏதுவாகவும், உதவியாகவும்இருந்தன.

குட்டித் தீவை எட்டிப்பார்த்தேன்” எனும் கட்டுரை நூலை முதலில் எழுதினார். கிராமத்தில் ஒருகருத்தியலைச் சொல்வார்கள். ‘முதல் கொலை ஒன்று செய்வதுதான் ஒருவனுக்குக் கடினம். ஒருமுறை செய்துவிட்டால், பிறகு அடுத்தடுத்துக் கொலைகளைச் செய்வது என்பது அவனுக்குச்சர்வ சாதாரணமாகப் போய்விடுமாம்.  அதைப்போல் எந்த எழுத்தாளனுக்கும் முதல் நூல் ஒன்றைஉருவாக்கும்போது அவன் படும் சிரமங்கள் ஏராளம். பின்னர் தொடர்ந்து வெளியிடுவதுஎளிதாகிவிடுகிறது.

கைவலிக்க எழுதி முடிக்க வேண்டும்; சிந்தனையைச் சீர் செய்து கருத்துகளைக் கோர்வையாகமாலைபோல் தொடுக்க வேண்டும். நூலுக்கான செலவினத்தை எதிர்கொள்ளத் தேவையானபொருளாதாரத்தை முதலில்  உருவாக்க வேண்டும். ஏனெனில் நாமெல்லாரும் தொழில்முறைஎழுத்தாளர்கள் அல்லர். யார் குறைந்த செலவில் அச்சாக்கித் தருபவர்கள் என்று தேடவேண்டும்; பிறகு மெய்ப்பு பார்க்கவேண்டும்; நாம் முற்றிலும் இலக்கணம் அறிந்தவர்கள் அல்லர். அதனால் ஒருமொழியியல் வல்லுநரிடம் கொடுத்துப் பிழை திருத்தம் செய்துகொள்ளவேண்டும்; பின்னர்புத்தகத்தின் அட்டைப்படம் உள்ளே பக்க வடிவமைப்புகளில் நம் எதிர்பார்ப்புகளைச் சொல்லிநனவாக்க வேண்டும்;  தாய் ஒரு கருவைச் சுமந்து பல இன்னல்களைச் சந்தித்துஈன்றெடுப்பதைப்போல் ஒரு நூலை வெளியாக்கவேண்டும். இதை நாம் ஒரு ‘ஆண் பிரசவம்’ என்போம்.

ஷாநவாஸ் முதல் நூலை உருவாக்கும்போது மேற்கண்ட சவால்களை எதிர்நோக்கியிருப்பார். ஆனால் அடுத்தடுத்து நூல் உருவாக்கங்களில் சிரமங்கள் குறைந்துகொண்டே வந்திருக்கும். அந்தஅடிப்படையில்தான் இதுவரை பத்து நூல்களை நமக்குத் தந்திருக்கிறார்.

சிங்கப்பூர் சிறைச்சாலையில் கைதிகளின் சினங்களையும், வன்முறை போக்குகளையும் தணிக்கும்சிந்தனையை வெளிப்படுத்தும்  “துண்டு மீனும் வன்முறை கலாசாரமும்” எனும் ஒரு நூலைஇரண்டாவதாக வெளிக்கொணர்ந்தார்.

புலம் பெயர்ந்தவர்களுக்ககான சத்து கோஸம் சத்து துளோர் என்பதன் பொருள்கொண்ட    “முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும்” எனும் இன்னொரு நூலைப் படைத்தார்.

அவர் படைத்த இன்னொரு சிறந்த நூல், மனித வாழ்வின் அடியாதாரமான உணவு எனும் மாபெரும்சக்தியின் சித்திரங்களையும், விசித்திரங்களையும் பற்றிய “அயல் பசி ” எனும் நூல்.

தம் 25 ஆண்டுகால சிங்கப்பூர் அனுபவங்களைப் பிரதிபலிக்கும் “நனவு தேசம்” எனும் கட்டுரை நூல்அடுத்து வெளிவந்தது.

அடுத்து ஒரு கவிதைத் தொகுப்பு “சுவை பொருட்டன்று ” எனும் நூல்,

ஆங்கில மொழி மாற்றத்துடன்கூடிய    சிறுகதைத் தொகுப்பான  ” மூன்றாவது கை ” எனும் நூல்என்பது அவருடைய நூல்களில் குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்ந்து அவர் வெளியிட்ட நூல்களாவன “ஒலி மூங்கில்”  “இடமும் இருப்பும்” (சிறுகதைகள்)  மற்றும் ஒரு நூல் “காலச்சிறகு”  எனும் கட்டுரை நூல்.

ஆக ஷாநவாஸ் கவிதை, கட்டுரை, கதை எனும் படைப்புகளின் எல்லா ஆளுமைகளிலும் பயணித்துவருகிறார்.

இவற்றில் ‘அயல்பசி’ – நூலில் அடங்கிய கட்டுரைகள்  2012ஆம் ஆண்டின் சிறந்த பண்பாட்டுக்கட்டுரைகள் அடங்கிய நூல்  என பிரபல எழுத்தாளர் எஸ்ரா அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதுஎன்பது ஒரு சிறப்புக்குரிய செய்தி.

2014ஆம் ஆண்டில்  சிங். புனைவு இலக்கியப் பரிசைப்  பெற்றிருக்கிறது. ‘மூன்றாவது கை’  எனும்சிறுகதைத் தொகுப்பு நூலானது,  சிங். தமிழ் எழுத்தாளர் கழகமும் ஆனந்தபவன் உணவகமும்இணைந்து நடத்தும்  மு.கு. இராமச்சந்திரா புத்தகப் பரிசையும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சிங்கப்பூர் தொழிலதிபரும், சிராங்கூன் டைம்ஸ் இதழின்உரிமையாளருமான  திரு எம் ஏ முஸ்தபா அவர்கள் ஆண்டுதோறும் ஒரு சிறந்த படைப்புக்குத் தரும்  ‘கரிகாற்சோழன் விருதினை’ 2015ஆம் ஆண்டு  அதே அயல்பசி நூல் பெற்றது.

2016ஆம் ஆண்டு ‘நனவு தேசம்’ எனும் நூல்,  புத்தக மேம்பாட்டு வாரியத்தின் சிறந்த சிங்கப்பூர்புனைவு அல்லாத (அபுனைவு) இலக்கியத்திற்கான சிறப்பு பரிசினைப்  பெற்றது.

தற்போது “ருசி பேதம்” எனும் நூலை எழுதிக்கொண்டிருக்கிறார்.

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக உணவகத் தொழிலில் இருப்பதால் தொழில் நடத்துவது  பழகிவிட்டது.  எழுத நேரம் ஒதுக்குவதற்குச் சற்றுச் சிரமாக இருந்தாலும், தேர்ந்த சமையல்தொழிலாளர்களும் மற்ற உதவியாளர்களும், அவருடைய இல்லத்தரசியும் கைகொடுத்துஉதவுவதால், அவ்வப்போது  தம் சிந்தனையில் தோன்றுவதை ஊறப்போட்டு, உறங்கும் நேரத்தைக்கொஞ்சம் திருடி எழுதுவேன் என்கிறார். என் படைப்புகள் சற்று வித்தியாசமாக இருந்ததால்பல்வேறு நாடுகளின் வாசிப்பாளர்கள் படித்துவிட்டு இன்றும் பாராட்டி வருகின்றனர் என்றுபெருமையோடு சொல்கிறார்.

சிங்கப்பூரில் ‘வாசகர் வட்டம்’ எனும் அமைப்பில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு அதன் வளர்ச்சியில்தோழமைகளுடன் இணைந்து பாடுபட்டு வருகிறார். சிராங்கூன் டைம்ஸ் இதழ் வாயிலாகப் பல புதுஎழுத்தாளர்களுக்கு எழுத வாய்ப்புகளைக் கொடுத்து ஊக்கப்படுத்துகிறார்.

அவருடைய எண்ணங்கள் ஈடேற நாம் வாழ்த்துவோமாக!

மா. அன்பழகன்

கதை, கவிதை, கட்டுரை என பல தளங்களிலும் 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். திரைப்படத் தயாரிப்பாளர், கே.பாலச்சந்தரின் உதவி இயக்குநர் போன்ற மற்ற திறன்களும்இவருக்கு உண்டு. சிங்கப்பூரின் முக்கியத் தமிழ் அமைப்பான கவிமாலையின் காப்பாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s