Posts Tagged ‘ஒப்பிலான் A.முஹம்மது சித்தீக்’

அஞ்சலி – ஒப்பிலான் A.முஹம்மது சித்தீக்

Posted: ஏப்ரல் 3, 2010 in வகைப்படுத்தப்படாதது
குறிச்சொற்கள்:,

 அன்புள்ள மைத்துனரே…

 

தங்களுக்கு ஞாபகமிருக்கிறதா நத்தம் அபிராமம் காக்காத் தோப்புத் தெரு… எங்கள் வீட்டில் தங்கி உயர்நிலை 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தீர்கள். நான் தொடக்க நிலை 4 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். சிங்கப்பூரிலிருந்து தங்களுக்கு வரும் கலர் பென்சில் பெட்டி நடுவில் நீள் சதுர வடிவில் ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டிருக்கும் அதனூடே “VIBGIYAR” என்ற மின்னும் எழுத்துக்களுடன் பென்சில்கள் செருகப்பட்டிருக்கும் தாங்கள் உபயோகித்து கரைய கரைய எனக்கு ஒவ்வொன்றாக அவற்றை எடுத்து தருவீர்கள். என்னால் மறக்க முடியுமா?

 

காக்காத் தோப்புத் தெருக் கடைக்கோடியில் ”ஸஹராணி” மாவு அரைக்கும் ரைஸ்மில் ஞாபகமிருக்கிறதா? அவர் தங்களின் உற்ற நண்பர் நடு மெஷினிலிருந்து கன்வேயர் பெல்ட்டை = வடிவத்திருந்து  X வடிவத்தில் அடிக்கடி மாற்றிப்போட்டு ”ஸஹராணி” தந்தையாரிடம் திட்டு வாங்குவீர்கள் அதை மறக்க முடியுமா…

 அதிராம்பட்டிணம் காதர்முகைதீன் கல்லூரியில் புதுமுகு வகுப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டு நீங்கள் அரசியலில் நுழைந்தது தங்கள் தலைவர் MGR, தேர்தலில் வேலை பார்த்தவர்களை கையை மடித்துவிட்டுக் கொண்டு நைய புடைத்தது தங்களைப் பாராட்டியது…

தாங்கள் இறப்பு வரை ஒரே கட்சியில் கட்சிமாறாமலிருந்ததை மறக்க முடியுமா மைத்துனரே…

ஒரு நாள் அப்போதுதான் டூவீலர் ஓட்டக் கற்றுக் கொண்ட நான் அதிவேகத்தில் பைக்கில் சென்று சாயல்குடி போலிஸ் ஸ்டேஷன் சுவற்றில் மோதிவிட்டேன், என்ன நடக்கப் போகிறதோ என்று பயந்த என்னை போலிஸார் தூக்கிவிட்டு போலிஸ் ஸ்டேஸன் சுவற்றைப் பற்றி கவலைப்படாமல் ”ஒப்பிலான் சித்தீக்” மச்சினன் என்று உதவிகள் செய்து அனுப்பி வைத்தததை மறக்க முடியுமா!

ஆனாலும் நீங்கள் தேர்ந்தெடுத்த அரசியல் வாழ்வு ஒரு விந்தையான விஷயம் அதில் தாங்கள் அடைந்த வெற்றி தோல்விகளிலிருந்து வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் எப்படி தீர்மானிக்க வேண்டும் என்ற பாடத்தையும் படிக்க முடியும். எப்படி வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கக் கூடாது என்ற பாடத்தையும் படிக்க முடியும்.

ஒரு காலத்தில் முரண்பாடாகத் தோன்றிய உங்கள் தேர்வு சில காலம் கழித்து ஒரு கருத்தின் இரு கூறுகளாகத் தென்படும் அதிசயம் அரசியல் என்ற நித்திய நாடகத்திற்கே சொந்தம்…

“ நானிலமென்னும்

         நாடக மேடையில்

நானும் ஆயிரம் நாடகங்கள்- இந்த

        மானிடர் யாவரும்

மரண நாள் வரை மயங்கியாடும் பாத்திரங்கள் “

ஆசியான் கவிஞர் க.து.மு.இக்பால்